PCOS வந்தாலே உணர்ச்சிக்கொந்தளிப்புதானா ?

பாலிசிஸ்டிக் ஓவரி சின்ட்ரோம் (PCOS) என்பது, பிள்ளை பெறும் வயதில் உள்ள பெண்களிடையே காணப்படும் மிகப் பொதுவான ஹார்மோன் குறைபாடுகளில் ஒன்று. PCOSஆனது ஒரு குறைபாடாக வகைப்படுத்தப்பட்டிருக்கக் காரணம், அது ஒரேமாதிரி வெளிப்படும் பிரச்னை இல்லை: PCOS கொண்ட பெண்கள் எல்லாருக்கும் இந்தக் குறைபாட்டுடன் தொடர்புடைய அறிகுறிகள் தோன்றுவதில்லை. 

PCOSபற்றிப் பலருக்கும் பரவலாகத் தெரிந்த, ஏற்றுக்கொள்ளப்பட்ட அறிகுறிகள் சில: உடல்சார்ந்த அறிகுறிகளான மாதவிடாய் ஒழுங்கின்மை, ஹிர்சுடிஸம் (அதீத முடி வளர்ச்சி), உடல்பருமன், முகப்பரு மற்றும் வழுக்கை. ஆனால், PCOS பிரச்னை கொண்ட பெண்களுக்கு மன நலப் பிரச்னைகள் வருகிற வாய்ப்பு அதிகம் என்பதைப் பலரும் கவனிப்பதில்லை, பேசுவதில்லை.

PCOSமற்றும் மனநிலைப் பிரச்னைகள்
PCOS உள்ள பெண்களுக்கு வரும் பதற்றம் மற்றும் மனச்சோர்வு போன்ற உளவியல் பிரச்னைகள் பெரும்பாலும் கண்டறியப்படுவதில்லை என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன1. இப்படி ஒரே நேரத்தில் பல பிரச்னைகள் வரும்போது, அவர்களுடைய வாழ்க்கைத்தரம் எதிர்மறையாகப் பாதிக்கப்படலாம். மனமும் உடலும் ஒன்றோடொன்றும் பிணைந்துள்ளவை என்பதால், ஒன்றில் நிகழும் மாற்றங்கள் இன்னொன்றைப் பாதிக்கின்றன. எடுத்துக்காட்டாக, PCOS உள்ள பெண்கள் அனுபவிக்கும் ஹார்மோன் ஏற்ற இறக்கங்களால் அவர்களுடைய மனோநிலைகள் அடிக்கடி மாறக்கூடும், அல்லது, அவர்கள் உணர்வுச் சமநிலையின்மையை அனுபவிக்கக்கூடும், இவை மனச்சோர்வின் அறிகுறிகளாகவும் இருக்கலாம்.

உடல்சார்ந்த விளைவுகள் ஒருபுறமிருக்க, PCOS உளவியல் மற்றும் சமூகத் தாக்கங்களையும் கொண்டுள்ளது, இவற்றைக் கையாள்வதன்மூலம் பெண்கள் இந்தப் பிரச்னையை முழுமையானமுறையில் சமாளிக்கலாம்.

PCOSக்கான சிகிச்சை பெண்ணுக்குப் பெண் மாறுபடுகிறது. சிகிச்சையின் நோக்கம், அவருடைய அறிகுறிகளைக் கையாள்வது அல்லது குறைப்பது. அறிகுறிகள் மற்றும் அவற்றின் தீவிரத்தன்மையைப் பொறுத்துப் பலவிதமான சிகிச்சைத் தெரிவுகள் பரிந்துரைக்கப்படலாம். கையாள்தலின் நோக்கம், பிரச்னையைச் சந்திப்பவருக்கு விஷயங்களைச் சொல்லித்தருவது, அவரை ஆதரிப்பது, ஓர் ஆரோக்கியமான வாழ்க்கைமுறையின் முக்கியத்துவத்தை வலியுறுத்துவது. மருந்துகளின்மூலம் வழங்கப்படும் சிகிச்சையுடன், வாழ்க்கைமுறை மாற்றங்களும் அவசியமாகலாம்: உடற்பயிற்சி ஒழுங்கு, சரியான உணவு போன்றவை PCOSன் பல அம்சங்களை வெகுவாக மேம்படுத்தலாம். வாழ்க்கைமுறை மாற்றமானது PCOS உள்ள பெண்களுக்கான முதன்மைச் சிகிச்சையாக உள்ளது, ஏனெனில், எடையைக் குறைத்தல், எடை அதிகரிப்பதைத் தடுத்தல் ஆகியவை PCOSன் அறிகுறிகளை மேம்படுத்த, சிறந்த வாழ்க்கைத் தரத்தை எட்ட அவசியமானவை.

வாழ்க்கைமுறை மாற்றங்கள்

PCOSஐக் கையாள்வதற்கு உடற்பயிற்சியும் நல்ல உணவும் சிறப்பாகப் பயன்படுவது தெரியவந்துள்ளது. எடையை 5-10% குறைத்தால்கூட, வளர்சிதைமாற்ற, உனப்பெருக்க, மற்றும் உளவியல் அறிகுறிகளில் நேர்விதமான மாற்றங்கள் ஏற்படலாம்.

உணவுக்கட்டுப்பாடுகளுடன், உடற்பயிற்சியும் முக்கியம். ஏனெனில், உடல் குளுக்கோசைச் செரிக்கும் செயல்திறனை இது மேம்படுத்துகிறது, செல்கள் இன்சுலீனுக்குக் கொண்டுள்ள நுண்ணுணர்வை அதிகரிக்கிறது, ஹைபர்ஆன்ட்ரோஜீனிஸத்தைக் குறைக்கிறது. உடற்பயிற்சியை நிறுத்தியபிறகும், உடற்பயிற்சியின் நன்மைகள் தொடர்கின்றன. தொடர்ந்து உடற்பயிற்சி செய்கிறவர்கள் அதில் ரெசிஸ்டென்ஸ் பயிற்சி, ஏரோபிக் பயிற்சி என்ற இருவகைகளையும் சேர்ப்பது நல்லது.

குடும்பத்தின் ஆதரவு முக்கியம்

மனச்சோர்வு அம்சங்கள், பதற்றம், மோசமான உடல் தோற்றப் பிரச்னைகள், மற்றும் எதிர்மறையான சுயமதிப்பு ஆகியவை PCOSஉடன் தொடர்புடைய இணை நிலைகளாகும், இதனால், இது வெறுமனே உடல்சார்ந்த பிரச்னை என்று எண்ணிவிடக்கூடாது. சொல்லப்போனால், மேலே பேசியதுபோல், PCOSக்கு மிகத் தெளிவான உயிரியல் உளவியல் சமூகவியல் அடிப்படை உள்ளது. ஆகவே, PCOS உள்ளவர்களைச் சுற்றியிருக்கிறவர்கள் உளவியல், சமூகம் சார்ந்த அறிகுறிகளைக் கையாள்வதற்கும் அவர்களுக்கு உதவுவது அவசியம்.

·       பல நேரங்களில் பிறர் தங்களுடைய PCOS அறிகுறிகளை மிகத் தீவிரமாக எடுத்துக்கொள்வதில்லை என்று பெரும்பாலான பெண்கள் தெரிவித்தார்கள். வேறு சில பெண்கள், அதன் அறிகுறிகளுடன் தொடர்புடைய களங்கவுணர்வுகளையும் அனுபவிக்கிறார்கள், இவை பெரும்பாலும் கர்ப்பம் தரிக்க இயலாமையுடன் தொடர்புடையவையாக உள்ளன. அதனால்தான், பெண்களும் அவர்களுடைய ஆதரவு அமைப்பில் உள்ளவர்களும் இந்த நிலையைப்பற்றி வாசித்துத் தெரிந்துகொள்ளவேண்டும், தாங்கள் அனுபவிக்கக்கூடிய துயரத்தைப்பற்றி ஒரு மருத்துவ நிபுணர் அல்லது ஆலோசகரிடம் பேசவேண்டும், PCOSபற்றிய தவறான நம்பிக்கைகளைத் தெளிவுபடுத்திக்கொள்ளவேண்டும், இவை மிகவும் முக்கியம்.

·       மற்ற பல பிரச்னைகளைப்போலவே, PCOSஐக் கையாள்வதற்கும் குடும்ப உறுப்பினர்கள், நண்பர்களுடைய ஆதரவு வலைப்பின்னல் முக்கியமாகிறது. குறிப்பாக, PCOS உள்ள பெண்கள் பெரும்பாலும் உளவியல்ரீதியில் துயரை அனுபவிப்பதால் இது இன்னும் முக்கியமாகிறது. PCOS பிரச்னை கொண்டோர், தாங்கள் எப்படி உணர்கிறோம் என்பதைப் பேசுவதற்கு (மனநிலை மாற்றங்கள் அல்லது சோர்வாக உணர்தல் போன்றவை இத்துடன் தொடர்புடைய அறிகுறிகளாக இருப்பதால்) ஒருவர் இருத்தல், அல்லது, PCOSன் சாத்தியமுள்ள வருங்கால விளைவுகளைப்பற்றித் (எடுத்துக்காட்டாக, பிள்ளை பெற்றுக்கொள்வது, கர்ப்பமாவது தொடர்பான பிரச்னைகள்) தங்களுக்கு இருக்கக்கூடிய கவலைகளைப் பேசுதல் ஆகியவற்றால் PCOSன் வெவ்வேறு நிலைகளின்போது தாங்கள் புரிந்துகொள்ளப்படுகிறோம் என்று உணர்வார்கள், இதனால் அவர்களால் தங்களுடைய சொந்தப்பிரச்னைகளை இன்னும் சிறப்பாகக் கையாள இயலும்.

·       PCOSஐக் கையாள்வதில் மருத்துவ நிபுணர்கள், மகப்பேற்று மருத்துவர்களின் பங்கு மிக முக்கியமானது. ஒருவருக்கு இந்தப் பிரச்னை வந்துள்ளது என்பதை அவர்கள் நுண்ணுணர்வானமுறையில் தெரிவிக்கவேண்டும், PCOS உள்ளவர்களுக்குமட்டுமின்றி, அவர்களுடைய குடும்பத்தினருக்கும் இதுபற்றிய விவரங்களைக் கவனமாகச் சொல்லித்தரவேண்டும், சிகிச்சையின் பல்வேறு நிலைகளில் அவர்களுக்கு உதவவேண்டும்.

·       PCOSஐக் கையாளும்போது அதில் ஆலோசகர்கள், உளவியலாளர்கள் போன்ற மன நல நிபுணர்களும் இடம்பெறவேண்டும் என்கிற உண்மையைச் சமீபத்திய ஆய்வுகள் வெளிப்படுத்தியுள்ளன.

·       PCOS அறிகுறிகளைக் கையாள்வதற்குச் செயல்திறன் மிகுந்த இன்னொரு வழி, தன்னைப் பராமரித்துக்கொள்ளுதல். ஒருவர் வாழ்க்கைமுறை மாற்றங்களைப் பின்பற்றுவதுடன், தன்னுடைய உடல் மற்றும் உளவியல் நலனையும் நன்கு கவனித்துக்கொள்வது நல்ல பலன் தரும். இப்போதைய ஆய்வின்படி, அநேகமாக எல்லா நாடுகளிலும் (இந்தியா உட்பட) PCOS உள்ள பெண்கள் தங்களுடைய பிரச்னைகளை விவாதிக்கிற, அவற்றைச் சிறப்பாகக் கையாள ஒருவரையொருவர் ஊக்குவித்துக்கொள்கிற இணைய ஆதரவுக் குழுக்கள் உள்ளது தெரியவந்துள்ளது.

குறிப்புகள்:

1. வில்லியம்ஸ், ஷெஃப்பெல்ட் மற்றும் நிப், 2015

2. https://www.ncbi.nlm.nih.gov/pmc/articles/PMC1069067/

3. https://www.womenshealth.gov/files/assets/docs/fact-sheets/polycystic-ovary-syndrome.pdf