நலன்

என்றோ நடந்தது இன்றைய வாழ்க்கையைப் பாதிக்கலாமா?

அதிர்ச்சிக்குப் பிந்தைய அழுத்தக் குறைபாட்டுக்கு எவ்வளவு சீக்கிரம் இயலுமோ அவ்வளவு சீக்கிரம் சிகிச்சை பெறுவது நல்லது

வொய்ட் ஸ்வான் ஃபவுண்டேஷன்

அஞ்சனாவும் அவருடைய கணவர் தினேஷும் ஓர் உளவியல் நிபுணரைச் சந்தித்தார்கள். தினேஷ் அந்த நிபுணரிடம் ‘நாங்கள் ஓர் உளவியல் நிபுணரைச் சந்திக்க மிகவும் தயங்கினோம், காரணம், எங்களுடைய பிரச்னையை யாராலும் தீர்க்க இயலாதோ என்று எங்களுக்குத் தோன்றியது. ஆனால், ஒரு கட்டத்தில் எங்களால் நிலைமையைச் சமாளிக்கவே முடியவில்லை, ஆகவே, முறைப்படி ஒருவரிடம் ஆலோசனை பெறலாம் என்று இங்கே வந்திருக்கிறோம்’ என்றார்

அஞ்சனா பேசத்தொடங்கினார், ‘நான்கு மாதங்களுக்குமுன்னால் எங்கள் வீட்டுக்குள் சில திருடர்கள் புகுந்துவிட்டார்கள். அதைப் பார்த்ததிலிருந்து எனக்குச் சரியாகத் தூக்கம் வருவதில்லை, என்னுடைய குடும்பத்தினரிடமிருந்து நான் விலகிச்செல்லத் தொடங்கிவிட்டேன். நான் குடும்ப நிகழ்வுகளுக்குச் செல்வதையே நிறுத்திவிட்டேன், காரணம், யாராவது அந்தத் திருட்டைப்பற்றி என்னிடம் கேட்பார்களோ என்று எனக்குக் கவலையாக இருந்தது.’

ஆரம்பத்தில் அஞ்சனாவுக்குக் கெட்ட கனவுகள் வந்துகொண்டிருந்தன, அவரால் சரியாகத் தூங்க இயலவில்லை. அப்போது அவர் திருட்டு நடந்த சில நாள்களுக்கு இதுபோன்ற உணர்வுகள் வருவது சகஜம்தான் என்று எண்ணினார். விரைவில் அது சரியாகிவிடும் என்று நம்பினார்.

ஆனால் நாள் ஆக ஆக அவருடைய நிலைமை மோசமானது, சிறிதும் முன்னேற்றம் இல்லை.

திருடர்கள் தங்களுடைய வீட்டுக்குள் நுழைவதையும் தன்னை அடிப்பதையும் அவர் திரும்பத் திரும்பக் கற்பனையில் கண்டார், திருடர்கள் தோன்றுகிற படங்களைக்கூட அவரால் பார்க்க இயலுவதில்லை, சினிமாத் திருடர்களை பார்த்தால்கூட, தான் சந்தித்த நிஜத் திருடர்கள்தான் நினைவில் வந்தார்கள். அப்போது அவருக்கு வேர்க்கத் தொடங்கிவிடும், தொலைக்காட்சியில் அதுபோன்ற நிகழ்வுகள் வந்தால் உடனே தொலைக்காட்சியை அணைத்துவிடுவார்.

இன்னொரு பிரச்னை, இதற்குமுன் அவர் விரும்பிச் செய்த பல விஷயங்களில் இப்போது அவருக்குச் சுத்தமாக ஆர்வமே இல்லை. அஞ்சனா தனது குடும்ப உறுப்பினர்களிடமிருந்து தொலைவுக்குச் சென்றுகொண்டே இருப்பது அவருடைய கணவருக்குக் கவலையை உண்டாக்கியது.

அஞ்சனா மருத்துவரிடம் ‘எனக்குப் பைத்தியம் பிடித்துக்கொண்டிருக்கிறதோ என்று எனக்குக் கவலையாக இருக்கிறது’ என்றார். ’என்னால் பல விஷயங்களைச் சரியாக நினைவில் வைத்துக்கொள்ள இயலுவதில்லை; சுலபத்தில் கோபம் வந்துவிடுகிறது, சிறிய சத்தம் கேட்டாலும் பயந்து நடுங்கிறேன்’ என்றார். அவர் பல வாரங்கள் சரியாகத் தூங்கவில்லை, ஆகவே மிகவும் களைப்புடன் காணப்பட்டார், உலகம் ஓர் ஆபத்தான இடம் என்று அவருக்குத் தோன்றிக்கொண்டே இருந்தது.

அவர் சொன்னதை முழுக்கக் கேட்டபிறகு, மருத்துவர் அஞ்சனாவுக்குச் சில மருத்துவப் பரிசோதனைகளை செய்தார். அதன்பிறகு, அவருக்கு அதிர்ச்சிக்குப் பிந்தைய அழுத்தக் குறைபாடு (PTSD) வந்திருப்பதாகக் கண்டறிந்தார். PTSD குறைபாட்டைப்பற்றியும் அதற்கான சிகிச்சைகளையும் அவர் விளக்கினார். ‘நீங்கள் நினைக்கிற அளவுக்கு இது மோசமான பிரச்னை இல்லை, பலருக்கும் வருவதுதான், விரைவில் சிகிச்சை எடுத்துக்கொண்டால் இதனை முழுமையாகக் குணப்படுத்திவிடலாம்’ என்றார்.

அந்த மருத்துவர் அஞ்சனாவுக்கு உடனடியாகச் சில மருந்துகளைக் கொடுக்கத் தொடங்கினார், அவர் ஓர் ஆலோசகரைச் சந்தித்துப் பேசுமாறு அறிவுரை சொன்னார்.

அடுத்த ஓராண்டுக்கு மேலாக, அஞ்சனா தொடர்ந்து சிகிச்சை பெற்றார், கொஞ்சம் கொஞ்சமாக அவர் முன்பைவிடச் சிறப்பாக உணரத்தொடங்கினார். அவர் தன்னுடைய குடும்ப உறுப்பினர்களுடன் கலந்து பழக ஆரம்பித்தார், கொஞ்சம் கொஞ்சமாக அவருடைய தூக்கம் ஒழுங்கானது, இப்போதெல்லாம் அவர் எந்நேரமும் களைப்பாகவும் குழப்பத்துடனும் காணப்படுவதில்லை. தினேஷுக்கும் தன் மனைவி நன்கு குணமாகிவிட்டது மகிழ்ச்சி அளித்தது.

சில மாதங்களுக்குப்பிறகு, அஞ்சனாவுக்கு ஆலோசனைகள் தேவைப்படவில்லை, சிறிதுகாலம் அவர் மருந்துகளைத் தொடர்ந்து சாப்பிட்டார், ஒருகட்டத்தில் மருத்துவரின் ஆலோசனைப்படி அந்த மருத்துகளையும் அவர் நிறுத்திவிட்டார்.

இந்தப் பிரச்னை கொண்ட பல நபர்களிடம் காணப்பட்ட அறிகுறிகள், அவர்களுடைய அனுபவங்களைக் கருத்தில் கொண்டு, மனநல நிபுணர்களின் உதவியுடன் இந்த விவரிப்பு உருவாக்கப்பட்டது. இது ஒரு குறிப்பிட்ட நபரின் உண்மை அனுபவம் அல்ல, இந்தப் பிரச்னை கொண்ட ஒருவருடைய நிலையைப் புரியவைக்கும் நோக்கத்துடன் இந்த விவரிப்பு உருவாக்கப்பட்டிருக்கிறது.

வொய்ட் ஸ்வான் ஃபவுண்டேஷன்
tamil.whiteswanfoundation.org