வளர்இளம்பருவத்தினரின் தற்கொலையைத் தடுத்தல்

வாழ்க்கைத் திறன்கள் பயிற்சியின்மூலம், வளர் இளம் பருவத்தினர் மத்தியில் தற்கொலைகளைத் தடுக்கலாம்

எழுதியவர்: டாக்டர் விருந்தா M N

அநேகமாக ஒவ்வொரு நாளும், பதின்பருவத்தினர் தற்கொலை செய்துகொண்ட சோகச் செய்திகளை நாம் செய்தித்தாள்களில் வாசிக்கிறோம், தொலைக்காட்சிகளில் கேட்கிறோம். உளவியல் நிபுணர்களும் இதுபோன்ற பிரச்னைகளைத் தொடர்ந்து கேட்டுக்கொண்டுதான் இருக்கிறார்கள்:

மகேஷுக்கு வயது 16. பத்தாம் வகுப்பில் படிக்கிறான். அவன் ஒரு பெண்ணைக் காதலித்தான், அவள் அவனை நிராகரித்துவிட்டு, இன்னொருவனுடன் நட்பாகிவிட்டாள். இதனால் உணர்ச்சிவயப்பட்ட மகேஷ், தன் பெற்றோருக்கு ஒரு கடிதம் எழுதிவைத்துவிட்டுத் தற்கொலைமூலம் தன் வாழ்க்கையை முடித்துக்கொண்டுவிட்டான்.

இன்னொரு நகரத்தில், கண்மணி என்ற 15 வயதுப் பெண். 10ம் வகுப்புத் தேர்வு எழுதியிருக்கிறாள். தேர்வு முடிவுகள் வந்தன. கண்மணி அதனைத் தன்னுடைய மொபைல் ஃபோனில் பரிசோதித்தாள், தான் ஆங்கிலத்தில் தேர்ச்சியடையவில்லை என்று தெரிந்து அதிர்ச்சியடைந்தாள். அந்தத் தேர்வு முடிவு சரிதானா என்று பள்ளியில் பரிசோதிக்கவேண்டும் என்றுகூட கண்மணிக்குத் தோன்றவில்லை, தன் பெற்றோரிடம்கூட எதுவும் சொல்லாமல் தற்கொலைமூலம் தன் வாழ்க்கையை முடித்துக்கொண்டுவிட்டாள்.

இன்னொரு நகரத்தில், ரோஜா என்ற 18 வயதுப் பெண். அவளுக்குச் சில குடும்பப் பிரச்னைகள். ரோஜாவின் பெற்றோர் அடிக்கடி சண்டை போடுவார்கள், அவளுடைய தந்தை குடித்துவிட்டு வந்து அவளுடைய தாயை அடிப்பார். பெற்றோரின் திருமணப் பிரச்னை, ரோஜாவின் உணர்வு நலனைப் பாதித்தது. அவளால் தன்னுடைய கல்வியில் கவனம் செலுத்த இயலவில்லை, பிற நடவடிக்கைகளிலும் ஈடுபட இயலவில்லை. ஒருவேளை அப்படிச் செய்திருந்தால், அவள் இந்த விஷயங்களை எண்ணி அழுத்தமடையாமலிருந்திருக்கக்கூடும். ரோஜா தன்னுடைய பிரச்னைகளை யாரிடமும் விவாதிக்கவில்லை, உதவியை நாடவில்லை, தற்கொலைமூலம் தன் வாழ்க்கையை முடித்துக்கொண்டுவிட்டாள்.

வளர் இளம் பருவத்தினரும் அவர்களது உணர்வு நிலையும்

வளர் இளம்பருவத்தினருக்குச் சுறுசுறுப்பு அதிகம், அவர்களுடைய உணர்வுகள் தீவிரமானவையாக இருக்கும், வளர்ந்தவர்களுடன் ஒப்பிடும்போது, இவர்கள் சில குறிப்பிட்ட வகைகளில்தான் (சில நேரம் முரணானமுறையில்) சிந்திப்பார்கள், பிரச்னைகளைக் கையாள்வார்கள். இதனால், தோல்வி, ஏமாற்றம், அழுத்தம், அல்லது பிற பிரச்னைகள் வரும்போது, அவர்களால் அதைச் சமாளிக்கவோ கையாளவோ இயலுவதில்லை. அதுபோன்ற நேரங்களில், பிறரிடம் உதவி கோராமல், இந்தச் சிரமங்களிலிருந்து தப்பிப்பதற்காக இவர்கள் வேறு தவறான நடவடிக்கைகளில் இறங்கிவிடக்கூடும். உதாரணமாக, போதைப்பொருள் பழக்கம், தற்கொலை போன்றவை.

வளர் இளம் பருவத்தினர் தற்கொலைக்கு முயற்சி செய்யும்போது, அது ஓர் அனிச்சைசெயலாகவே அமைகிறது, தங்கள் செயலின் பின்விளைவுகளைப்பற்றி அவர்கள் சிந்திப்பதில்லை. சிரமமான நேரங்களில் பிறருடைய உதவியை நாடுவது பலவீனத்தின் அடையாளம் என்றும் இவர்கள் தவறாக எண்ணிவிடுகிறார்கள். வளர் இளம் பருவத்தினர் புரிந்துகொள்ளவேண்டிய விஷயம், நெருக்கடியான நேரத்தில் குடும்ப உறுப்பினர்கள் அல்லது நண்பர்களுடைய சரியான உதவி மற்றும் ஆலோசனை, போதுமான உணர்வுநிலை ஆதரவின்மூலம் அவர்கள் தங்களுடைய பிரச்னைகளைச் சமாளிக்கலாம்.

உண்மைகளும் புள்ளிவிவரங்களும்

இன்றைக்கு, உலக அளவில் மரணமடையும் வளர் இளம் பருவத்தினரைக் கவனித்தால், இதற்குத் தற்கொலை ஒரு முக்கியக் காரணமாக இருக்கிறது. ஒவ்வோர் ஆண்டும், தற்கொலைமூலம் தங்கள் வாழ்வை முடித்துக்கொள்ளும் வளர் இளம் பருவத்தினரின் எண்ணிக்கை பெருமளவு அதிகரித்துவருகிறது. இந்தத் தற்கொலைகளைத் தூண்டுபவை, பல காரணிகள். உதாரணமாக, தனிநபர் காரணிகள், குடும்பக் காரணிகள், பள்ளிக் காரணிகள், உளவியல்-சமூகக் காரணிகள். சர்வதேச அளவில், ஆண்டுதோறும் சுமார் 71,000 வளர் இளம் பருவத்தினர் தற்கொலை செய்துகொள்கிறார்கள்.

தேசியக் குற்றவியல் ஆவணங்கள் வாரியம் (NCRB) தரவுகளை வைத்துப் பார்த்தால், இந்தியாவில் தங்கள் வாழ்வைத் தாங்களே முடித்துக்கொண்ட 100 பேரில் 34 பேர் 15 வயதுமுதல் 29 வயதுக்குள்ளானவர்கள். 2001ல் 15-29 வயதுக்குட்பட்டவர்களின் தற்கொலை எண்ணிக்கை 38,910ஆக இருந்தது, 2012ல் இது 46,635ஆக உயர்ந்துள்ளது. இது ஒரு மிகப்பெரிய அதிகரிப்பு (19.9%) ஆகும்.

வாழ்க்கைத் திறன்கள் பயிற்சி

வளர் இளம் பருவத்தினர் மத்தியிலான பெரும்பாலான தற்கொலைகளைத் தடுத்து நிறுத்தலாம். இதற்கு, வளர் இளம் பருவத்தினருக்குச் சமாளிக்கும் திறன்களைக் கற்றுத்தரவேண்டும். இதன்மூலம் அவர்கள் தங்கள் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்தப் பழகுவார்கள், விரக்திச்சூழலைக் கையாளத் தெரிந்துகொள்வார்கள், வாழ்க்கைச்சூழல்களைத் தெளிவாகச் சிந்தித்து எதிர்கொள்ளப் பழகுவார்கள். வளர் இளம் பருவத்தினருக்கு வாழ்க்கைத் திறன்கள் பயிற்சி தரப்பட்டால், அவர்கள் பலவிதமான திறமைகளைப் பெறுகிறார்கள்: நேர மேலாண்மை, சிறந்த தகவல்தொடர்பு, மற்றவர்களுடன் பழகுதல், சமாளித்தல், அழுத்தத்தைக் கையாளுதல், பிரச்னைகளைத் தீர்த்தல், தீர்மானமெடுத்தல் போன்றவை. இந்தப் பயிற்சியால், வளர் இளம் பருவத்தினர் மத்தியில் தற்கொலைகள் குறையும், அவர்களுடைய தாங்கும்திறன் மேம்படும், மனநலம் சிறப்பாகும்.

டாக்டர் விருந்தா M N, NIMHANS உளவியல் சமூகப் பணிப்பிரிவில் உதவிப் பேராசிரியர்.

Related Stories

No stories found.
logo
வொய்ட் ஸ்வான் ஃபவுண்டேஷன்
tamil.whiteswanfoundation.org