மனநல அறிவியல்

மனநலவியல் என்பது சான்று அடிப்படையிலான ஒரு சிறப்பு மருத்துவமாகும், இதற்கும் மற்ற மருத்துவத்துறைகளுக்கும் வித்தியாசம் ஏதுமில்லை

டாக்டர் பிரபா எஸ் சந்திரா

ஆஷா பதினொன்றாம் வகுப்பில் படிக்கிறார். கடந்த சில மாதங்களாக, அவர் அடிக்கடி மயங்கிவிழுந்துவிடுகிறார், அவ்வப்போது அசாதாரணமாக நடந்துகொள்கிறார். ஆஷாவின் குடும்பத்தினர் இதை எண்ணிக் கவலைகொள்கிறார்கள். அவரைப் பல கோயில்களுக்கு அழைத்துச்செல்கிறார்கள், பல வைத்தியர்களிடம் காட்டுகிறார்கள். அந்த வைத்தியர்கள், ஆஷாவை ஏதோ பேய் பிடித்திருக்கிறது என்கிறார்கள். ஆஷாவின் குடும்பத்தினர் ஏதேதோ பரிகாரங்களைச் செய்துபார்க்கிறார்கள், பணமும் உழைப்பும் வீணானதுதான் மிச்சம், ஆஷாவின் பிரச்னை குணமாகவில்லை. நிறைவாக, அவர்கள் ஆஷாவை ஒரு பொது மருத்துவரிடம் (GP) அழைத்துச்செல்கிறார்கள், அவர் ஆஷாவை ஒரு மனநல நிபுணரிடம் அனுப்புகிறார். இதைக்கேட்ட ஆஷாவின் பெற்றோர் தயங்குகிறார்கள். மனநல நிபுணர் ஆஷாவுக்கு மின்சார அதிர்ச்சி தருவாரோ? தூக்கமருந்துகளைத் தருவாரோ? அவர் ஆஷாவை ஹிப்னாடிசத்துக்கு ஆளாக்குவாரோ? ஆஷாவைப் பைத்தியம் என்று அவர் சொல்லிவிடுவாரோ?

ஆஷா என்னிடம் வந்தபோது, மிகவும் மன உளைச்சலோடு காணப்பட்டார். இந்த வைத்தியர், அந்த வைத்தியர் என்று அலைந்து அலைந்து, பரிகாரம், பூஜை என்று ஏதேதோ செய்து செய்து அவர் சலித்துப்போயிருந்தார். நான் அவரிடம் கொஞ்சம் நிதானமாகப் பேசினேன், விஷயம் மெதுவாக வெளியே வந்தது. ஆஷா இப்போது 11ம் வகுப்பில் படிப்பதால், அவர் நன்றாகப் படிக்கவேண்டும், நல்ல மதிப்பெண் வாங்கவேண்டும் என்று அவர்மீது ஏகப்பட்ட அழுத்தம், அவருடைய குடும்பத்தினரின் எதிர்பார்ப்புகளே அவருக்குச் சுமையாகிவிட்டன. ஒவ்வொரு தேர்வுக்குமுன்னாலும், அவர் பயந்து நடுங்குகிறார். இன்னும் சில நாள்களில் முழுஆண்டுத்தேர்வு வரப்போகிறது என்பதால், அவரது பதற்றம் மிகவும் அதிகமாகிவிட்டது. இதனால், அவர் அடிக்கடி மயங்கிவிழத்தொடங்கினார், விநோதமாக நடந்துகொள்ளத்தொடங்கினார், ஒழுங்காகச் சாப்பிடுவதில்லை, தூங்குவதில்லை.

ஆஷாவுக்கு மனச்சோர்வைப் போக்கும் சில மருந்துகளைக் கொடுத்தேன், பிரச்னைகளைச் சமாளிக்கும் திறன்களைக் கற்றுக்கொடுத்தேன், மனத்துக்கும் உடலுக்கும் இடையிலுள்ள உறவைப்பற்றி அவருடன் விவாதித்தேன், குடும்பத்தினரின் கவலைகளை அவருக்குப் புரியவைத்தேன், அவருடைய அழுத்தம் எப்படி இந்த அறிகுறிகளாக மாறியது என்று விளக்கினேன், இதன்மூலம் அவரிடம் அதிவேகமான மாற்றங்களைக் காண இயன்றது.

மனநலவியல் எனும் சிறப்பு மருத்துவம் கடந்த நாற்பதாண்டுகளில் குறிப்பிடத்தக்க அளவு மேம்பட்டுள்ளது. 1930களிலும் '40களிலும், பெரும்பாலான சிகிச்சைகள் உளவியல்சார்ந்தவையாக இருந்தன. அவை உளவியல் ஆய்வுகளின்மூலம் செய்யப்பட்டன. (உளவியல் ஆய்வுகள் என்றால், பாதிக்கப்பட்டவருடன் பல ஆண்டுகள், பல மணிநேரங்கள் பேசுதல், அவர்களுக்கு வந்துள்ள பிரச்னைகளை அவர்களுடைய சிறுவயதுப் பிரச்னைகள் மற்றும் அதிர்ச்சியின் அடிப்படையில் புரிந்துகொள்ளுதல் ஆகும்). அதேசமயம், இந்த ஆரம்ப ஆர்வம் பின்னர் சந்தேகமாக மாறிவிட்டது. காரணம், இந்தச் சிகிச்சை பல ஆண்டுகளுக்குத் தொடர், அதன்பிறகும் ஒருவர் குணமாவார் என்பதை நிச்சயமாகச் சொல்ல இயலவில்லை.

1950களில், மனநலப் பிரச்னைகளுக்கான முதல் மருந்துகள் கண்டறியப்பட்டன. இதனால், மருத்துவர்கள் மனநலப் பிரச்னைகளைக் கையாளும்விதமே மாறிவிட்டது. முன்பு காப்பகங்களில் சேர்ந்து சிகிச்சை பெற்றவர்கள், இப்போது தங்கள் வீடுகளிலேயே சிகிச்சை பெற்றார்கள், சமூகத்தில் ஓரளவு இயல்பான வாழ்க்கையை அவர்களால் வாழ இயன்றது.

அப்போது தொடங்கி, மனநலக் குறைபாடுகளைப் புரிந்துகொள்ளுதல், அவற்றுக்குச் சிகிச்சை வழங்குதல் என இரண்டிலுமே முக்கியமான முன்னேற்றங்கள் நிகழ்ந்துள்ளன. மூளையின் செயல்பாடுகளை ஆராய்வதற்கான புதிய, மேம்பட்ட முறைகள் கண்டறியப்பட்டன, இதனால், மனநலக் குறைபாடுகளை இன்னும் சிறப்பாகப் புரிந்துகொள்ள இயன்றது. இதுபற்றி நிகழ்த்தப்பட்ட தீவிர ஆய்வுகளால் புதிய மருந்துகளும் உளவியல் சிகிச்சைகளும் உருவாக்கப்பட்டுள்ளன. இவற்றைக் குறிப்பிட்ட குறைபாடுகளுக்கேற்ப மாற்றியமைக்க இயன்றது. இது ஒரு குறிப்பிடத்தக்க முன்னேற்றமாகும். தொற்றாத நோய்களின் (NCDகள்) நான்கு முக்கிய வகைகளில் ஒன்றாக மனநலக் குறைபாடுகள் இப்போது கருதப்படுகின்றன. நீரிழிவு, ரத்தஅழுத்தம் போன்றவற்றுக்கிணையாக இவையும் குறிப்பிடப்படுகின்றன.

ஒருவர் ஒரு மனநல நிபுணரைச் சந்திக்கச்செல்லும்போது, என்ன எதிர்பார்க்கலாம்?

மனநல நிபுணர் என்பவர் வழக்கமான மருத்துவரைப்போலதான், அவர் மனநலக் குறைபாடுகளைக் கண்டறிதல் மற்றும் சிகிச்சை வழங்குதலில் சிறப்புப்பயிற்சி பெற்றுள்ளார். இதற்காக மருந்துகள், உளவியல், சமூகவியல் சிகிச்சைமுறைகளை அவர் பயன்படுத்துகிறார். ஒருவர் முதன்முறையாக ஒரு மனநல மருத்துவரைச் சந்திக்கிறார் என்றால், அந்த மருத்துவர் அவருடைய பிரச்னைகளைப்பற்றி விரிவாகக் கேட்டுத் தெரிந்துகொள்வார், அவரது குழந்தைப்பருவம், குடும்பத்தினர், முந்தைய மருத்துவப் பிரச்னைகளைப்பற்றி விசாரிப்பார். அதன்பிறகு, அவருடைய உடல்நலம் பரிசோதிக்கப்படும். இதன்மூலம், அவருடைய உடல்சார்ந்த பிரச்னைகள் எவையும் மனநலப் பிரச்னைகளைப்போல் வெளிப்படவில்லை என்பது உறுதிசெய்யப்படும். அதன்பிறகு, மருத்துவர் ஒரு மனநிலைப் பரிசோதனையை நிகழ்த்துவார், இங்கே சிகிச்சைக்கு வந்திருப்பவருடைய மனோபாவம், சிந்தனை, புத்திசாலித்தனம், சிந்தனைத் திறன்கள் போன்றவை மதிப்பிடப்படும், மற்ற அனுபவங்கள் கண்டறியப்படும், தனது பிரச்னையை அவர் எந்த அளவு புரிந்துவைத்திருக்கிறார் என்பதும் மதிப்பிடப்படும்.

மனநல மருத்துவர் ஒருவரை முழுமையான மனிதராகக் காண்கிறார். அவரும், சூழலுடன் அவர் பழகுகிற விதமும் அவருக்குப் பிரச்னைகளை அல்லது அறிகுறிகளைக் கொண்டுவருகிறதா, அவற்றைத் தக்கவைக்கிறதா என்பதை ஆராய்கிறார். இதற்கான சிகிச்சை, பெரும்பாலும் மருந்துகள் மற்றும் உளவியல் சிகிச்சையாக அமையும். பாதிக்கப்பட்டவருடைய குடும்பத்தினர் இந்தச் சிகிச்சையில் ஒரு முக்கியப் பங்கை ஆற்றுகிறார்கள். இந்த முழுமையான அணுகுமுறையைக் கருத்தில்கொண்டு பார்க்கும்போது, மனநல மருத்துவர்கள் எப்போதும் தனியே பணியாற்றுவதில்லை; பொதுவாகச் சிகிச்சையில் பல மனநல நிபுணர்கள் பங்கேற்பார்கள். உதாரணமாக, ஓர் உளவியலாளர், சமூகப் பணியாளர், ஒரு செவிலியர் போன்றோர் இந்தக் குழுவில் இடம்பெறலாம், எல்லாரும் ஒன்றாகச் சேர்ந்து, பாதிக்கப்பட்டவருக்குப் பலவிதங்களில் உதவலாம். பல நேரங்களில், ஒரு GPயும் இதில் பங்கேற்கக்கூடும்.

இங்கே கவனிக்கவேண்டிய ஒரு விஷயம், அனைத்து மனநலப் பிரச்னைகளுக்கும் ஒரேமாதிரியான மருத்துவம் தேவைப்படாது. சில மிதமான பிரச்னைகளைத் தெரபிமூலமே குணப்படுத்திவிடலாம். வேறு சில மனநலப் பிரச்னைகளுக்கு மருந்துகளும் தெரபியும் தேவைப்படலாம். சில தீவிர மனநலப் பிரச்னைகளுக்கு மருந்துகள் அவசியம் தேவை.  

அதேபோல், எல்லா மனநலப் பிரச்னைகளுக்கும், குறிப்பாக, சிறிதுகாலம்மட்டுமே உள்ள பதற்றம் அல்லது, சுருக்கமான, மிதமான மனச்சோர்வு போன்ற சிறிய மனநலப் பிரச்னை கொண்டவர்கள் மனநல மருத்துவரின் ஆலோசனையைப் பெறவேண்டியிருக்காது அவர்கள் ஓர் ஆலோசகரை, ஒரு பொது மருத்துவரை அல்லது இன்னொரு மனநல நிபுணரைச் சந்திக்கலாம்.  தேவைப்பட்டால், இந்த நிபுணர்கள் அவர்களை ஒரு மனநல மருத்துவரிடம் அனுப்புவார்கள்.

மனநல மருத்துவத்தைப்பற்றிய தவறான நம்பிக்கைகள்

மனநல மருத்துவம் என்பது பலரால் அறியப்பட்ட, நன்கு வளர்ச்சியடைந்த ஒரு சிறப்பு மருத்துவம்தான். ஆனாலும், மக்கள் இதைப்பற்றித் தவறான நம்பிக்கைகளை வளர்த்துக்கொண்டுள்ளார்கள், அதனால், மக்கள் இவற்றுக்கு உதவி கோருவதில், சிகிச்சை பெறுவதில் தடைகள் ஏற்படுகின்றன.

மனநலப் பிரச்னை எதனால் வருகிறது, அதைச் சரிசெய்வது எப்படி, மனநல மருத்துவர்கள் என்ன செய்கிறார்கள் என்பதைப்பற்றிப் பலருக்குத் தெரிந்திருப்பதில்லை, மருந்துகளை எண்ணி, மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதை எண்ணிப் பயப்படுகிறார்கள், ஒருவர் மனநல மருத்துவரைச் சந்திக்கிறார் என்றாலே சமூகம் அவரைக் களங்கவுணர்வுடன் பார்க்கிறது, ஆகவே, மனநல மருத்துவரைச் சந்திக்கிற எல்லாரும் 'பைத்தியம்' எனக் கருதப்படுவார்கள் என்று மக்கள் எண்ணுகிறார்கள். இதனால்தான் இந்தத் தடைகள் ஏற்பட்டுள்ளன.

மனநலக் குறைபாடுகளின் அறிகுறிகள் பெரும்பாலும் மர்மமாகவே உள்ளன, பொதுமக்களால் அதைப் புரிந்துகொள்ள இயலுவதில்லை, இதனால், அவர்கள் கோயில்களுக்கும் தர்காக்களுக்கும் செல்கிறார்கள், நம்பிக்கை அடிப்படையிலான வைத்தியர்களிடம் செல்கிறார்கள்.

சிலருக்கு மனச்சோர்வு, பதற்றம் இருந்தபோதும், அதை வெளியே சொன்னால் அது ஒரு பலவீனமாகக் கருதப்படும் என்று எண்ணிவிடுகிறார்கள். ஆகவே, அவர்கள் அதற்குச் சிகிச்சை பெறுவதே இல்லை. ஒருவர் இதுபோன்ற தடைகளையெல்லாம் தாண்டிவரவேண்டும், ஒரு மனநல நிபுணரிடம் எவ்வளவு சீக்கிரம் இயலுமோ அவ்வளவு சீக்கிரம் பேசவேண்டும், ஆலோசனை பெறவேண்டும். பலநேரங்களில், பாதிக்கப்பட்டவருடைய குடும்பம் மிகத் தாமதமாகதான் மனநல மருத்துவரிடம் வருகிறது. அதற்குள் அவர்களிடம் உள்ள பணம், ஆற்றல் எல்லாமே தீர்ந்துபோயிருக்கிறது. சிகிச்சையைத் தாமதப்படுத்தினால், தொலைநோக்கில் பல தீவிரமான பின்விளைவுகள் ஏற்படக்கூடும். சில அறிகுறிகள், பிரச்னைகளைச் சிறிய சிகிச்சையினாலேயே தீர்த்துவிட இயலும். ஆனால், பாதிக்கப்பட்டவர்களுக்கும் அவர்களுடைய குடும்பத்தினருக்கும் இதைப்பற்றித் தெரிந்திருக்கவில்லையென்றால், அல்லது, அதற்கான சேவைகள் அவர்களுக்குக் கிடைக்கவில்லை என்றால், அது ஒரு பெரிய பிரச்னையாகிவிடக்கூடும்.

நல்லவேளையாக, ஆஷாவுக்கு அந்தப் பிரச்னை ஏற்படவில்லை. அவர் ஒரு GPயிடம் சென்றார், அந்த GP ஆஷாவை ஒரு மனநல நிபுணரிடம் அனுப்பினார். பிரச்னை தீவிரமாவதற்குள் அவர் சிகிச்சை பெறத்தொடங்கிவிட்டார். இப்போது, ஆஷா தனது பதற்றத்தை நன்கு கையாள்கிறார், அவருக்கு மருந்துகளும் தேவைப்படுவதில்லை.

டாக்டர் பிரபா எஸ் சந்திரா NIMHANSல் மனநலவியல் பேராசிரியர்.

Related Stories

No stories found.
logo
வொய்ட் ஸ்வான் ஃபவுண்டேஷன்
tamil.whiteswanfoundation.org