எங்களுக்குப்பின்…?

மனநலம் பாதிக்கப்பட்டோரைக் கவனித்துக்கொள்கிறவர்கள், தங்களுக்குப்பிறகு தங்கள் அன்புக்குரியவர்களை யார் கவனித்துக்கொள்வார்கள் என்பதைச் சிந்திக்கவேண்டும், அதற்கான ஏற்பாடுகளைச் செய்யவேண்டும்

மனநலம் பாதிக்கப்பட்ட குழந்தைகளைப் பெற்றவர்கள் பலவித சிரமங்களை அனுபவிக்கிறார்கள். குறிப்பாக அவர்கள் முதிய வயதை நெருங்கும்போது அவர்களுக்கு ஒரு புதிய கவலை தோன்றுகிறது. எங்களுக்குப் பிறகு எங்கள் குழந்தையை யார் கவனித்துக்கொள்வார்கள். அவர்கள் வாழ்நாள் முழுவதும் அந்தக் குழந்தையை அன்பாகக் கவனித்துக்கொண்டு அதன் தேவைகளை நிறைவேற்றியிருப்பார்கள். தாங்கள் இறந்தபிறகும் தங்களுடைய குழந்தையை அப்படி யாராவது கவனித்துக்கொள்ளவேண்டும், அதன்மீது அன்பு செலுத்த வேண்டும், அதனுடைய அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்ய வேண்டும் என்று அவர்கள் எண்ணுவார்கள்.

உதாரணமாக மனநலம் பாதிக்கப்பட்ட ஒருவருக்கு உணவு, உறைவிடம், உடை போன்ற அடிப்படைத் தேவைகள் இருக்கும். அவர்களை மனநல மருத்துவர் அல்லது உடற்கூறு மருத்துவரிடம் அழைத்துச் செல்வது, அவர்களுடைய பிரச்சனைகளுக்குத் தேவையான மருந்துகளை வாங்கித்தருவது போன்ற மருத்துவத் தேவைகள் இருக்கும். இவற்றையெல்லாம் பெற்றோருக்குப் பிறகு யார் கவனித்துக்கொள்வார்கள்.

இது போன்ற பிரச்சனைகளைச் சந்திக்கும் பெற்றோர் தங்களுடய நிதி ஆதாரங்களைச் சரியாகத் திட்டமிட வேண்டும். தங்களுடைய சொத்துகளை சரியான முறையில் மாற்றி எழுத வேண்டும். அவர்களுக்குப்பிறகு அவர்களுடைய குழந்தையை ஒரு தனிநபரோ சில பேர் சேர்ந்தோ கவனித்துக்கொள்வதற்கான ஏற்பாடுகளைச் செய்யவேண்டும்.

மனநலம் பாதிக்கப்பட்ட ஒரு குழந்தையின் பெற்றோர் தங்களுக்குப் பிறகு தங்களுடைய குழந்தையை பிறர் கவனித்துக்கொள்வதற்கு இருவிதமான ஏற்பாடுகளைச் செய்யவேண்டும்:

  • அவர்கள் ஓர் உயில் எழுதி அவர்களுடைய சொத்துகள் அனைத்தையும் அவர்களுடைய வாரிசின் பெயருக்கு மாற்ற வேண்டும்.
  • அவர்கள் தங்களுடைய வாரிசின் பெயரில் ஓர் அறக்கட்டளை உருவாக்கி அதன்மூலம் பலன் பெறுபவராக அவர்கள் வாரிசையே அறிவிக்க வேண்டும், இதன்மூலம் பெற்றோர் இறந்தபிறகும் அவர்களுடைய வாரிசுக்குக் கிடைக்கவேண்டிய பராமரிப்பு தொடர்ந்து கிடைக்கும்.

உயில் எழுதுதல்

யார் உயில் எழுதலாம்?

வயதுவந்த எவரும், அதாவது 18 வயதுக்கு மேற்பட்ட எவரும் தெளிவான மனத்துடன் இருந்தால், தங்கள் பெயரில் ஓர் உயில் எழுதலாம். மனநலம் பாதிக்கப்பட்ட ஒருவர் கூட உயில் எழுதலாம், ஆனால் அந்த உயிலை எழுதிய போது அவர் தெளிவான மனத்துடன் இருந்திருக்கவேண்டும். இதை உறுதி செய்வதற்காக அந்த உயிலை அவர் எழுதும் போது ஒரு மனநல நிபுணர் அருகே இருக்க வேண்டும். அவர் தெளிவான மனத்துடன் தான் இந்த உயிலை எழுதினார் என்பதற்கு அவர் சான்றளிக்க வேண்டும்.

தனிநபர்கள் எழுதும் உயில் தவிர, கணவம், மனைவி இணைந்தும் உயில் எழுதலாம்.

உயில் எழுதுவது எப்படி?

ஓர் உயிலை இப்படித்தான் எழுதவேண்டும், இந்த வகைத்தாளில்தான் எழுதவேண்டும் என்றெல்லாம் எந்தக்கட்டாயமும் இல்லை. ஒரு சாதாரணக்காகிதத்தில் கூட உயில் எழுதலாம். ஆனால் உயில் எழுதும் போது அருகில் இரண்டு சாட்சிகள் இருக்க வேண்டும். ஆனால் அந்த இரண்டு சாட்சிகளும் அந்த உயிலின் மூலம் பலன் பெறுகிறவர்களாக இருக்கக்கூடாது.

பொதுவாக உயில் எழுதுவதற்கு முன்னால் ஒரு வழக்கறிஞரைச் சந்தித்து ஆலோசனை பெறுவது நல்லது.

உயிலைப் பதிவு செய்தல்

உங்களுடைய உயிலை முறைப்படி பதிவு செய்யவேண்டும் என்று எந்தக்கட்டாயமும் இல்லை. அதேசமயம் பதிவுசெய்யப்பட்ட ஓர் உயில் நீதிமன்றத்தில் அதிக மதிப்பைப் பெறும். உயிலைப் பதிவுசெய்வதற்கு அதிகம் செலவாகாது, இதற்காக நீங்கள் எந்தப் பதிவுக்கட்டணமும் செலுத்தவேண்டியதில்லை. நீங்கள் அதை ஓர் வழக்கறிஞர் அல்லது சார்பதிவாளரிடம் கொடுத்து வைக்கலாம். உங்களுடைய உயிலைப் பதிவு செய்வதற்கு நீங்கள் உறுதிப்படுத்தல்களின் பதிவாளர் அல்லது சார்பதிவாளரிடம் செல்லவேண்டும். இவ்வாறு உயிலைப் பதிவுசெய்தபிறகு அதனை பதிவாளர் / சார்பதிவாளரிடம் கொடுத்துவைக்கலாம். தேவை ஏற்படும் போது அவர்கள் இந்த உயிலை வெளியே எடுத்து அதனை முறைப்படி நிறைவேற்றுவார்கள்.

பாதுகாவலர்கள், செயல்படுத்துநர்கள், நிர்வாகிகள்

ஓர் உயிலை எழுதியவர் இறந்த பிறகு, அந்த உயிலில் அவர் சொல்லியுள்ள விஷயங்களை முறைப்படி நிறைவேற்றுபவரை செயல்படுத்துநர் என்று அழைப்பார்கள்.   பாதுகாவலர் என்பவர், இறந்தவரின் சொத்துகளைப் பராமரிப்பவர் ஆவார். உயிலின் மூலம் பலன்பெறுபவருக்கு ஏதாவது மனநலப் பிரச்னை இருந்தால், அவரால் இந்தச் சொத்துகளை முறைப்படி பராமரிக்க இயலாது என்று உயிலை எழுதியவர் கருதினால், அவருடைய சார்பாக இந்தச் சொத்துகளை பராமரிப்பதற்காக ஒரு பாதுகாவலரை அவர் நியமிக்கலாம்.  பாதுகாவலர் என்பவர் உயிலை எழுதியவர் அல்லது உயில் மூலம் பலன் பெறுபவருடைய நண்பராக இருக்கலாம், ஓர் உறவினாராக இருக்கலாம், ஒரு NGO அல்லது அறக்கட்டளை போன்ற அமைப்பாகக்கூட இருக்கலாம்.

ஒருவேளை உயிலை எழுதியவரால் ஒரு பொறுத்தமான பாதுகாவலரைக் கண்டறிய இயலவில்லை என்றால், அவர்கள் இதற்காக நீதிமன்றத்தை அணுகலாம். நீதிமன்றம் ஒரு பொருத்தமான பாதுகாவலர் அல்லது நிர்வாகியை நியமிக்கும்.

தான் எழுதிய உயில் முறைப்படி நிறைவேற்றப்பட்டது என்பதை ஒருவர் எப்படி உறுதி செய்துகொள்ளலாம்?

ஓர் உயிலில் குறிப்பிடப்பட்டுள்ள விஷயங்கள் அனைத்தும் சரியாக நிறைவேற்றப்பட்டதை, அந்த உயிலின் செயல்படுத்துநர் உறுதி செய்யவேண்டும். ஒருவேளை இந்தச் செயல்படுத்துநர், தன்னுடைய பணியை ஒழுங்காகச் செய்யவில்லை என்றால், அந்த உயிலின் பாதுகாவலர், நிர்வாகி, அல்லது வேறு யார் வேண்டுமானாலும் நீதிமன்றத்திற்குச் சென்று இதைப்பற்றிப் புகார் செய்யலாம். இது போன்ற சூழ்நிலைகளில் நீதிமன்றம் செயல்படுத்துநரின் பணிகளை ஆராயும், ஒருவேளை அவர் தன்னுடைய கடமைகளை ஒழுங்காகச்செய்யவில்லை என்று நீதிமன்றம் கருதினால், அந்தப் பணிகளைச்செய்வதற்காக ஒரு நிர்வாகியை நீதிமன்றம் நியமிப்பார்கள்.

ஓர் உயிலின் படி  ஒருவருக்கு சில சொத்துகள் எழுதி  வைக்கப்பட்டிருக்கின்றன. ஆனால் அவருக்கு மனநலப்பிரச்சனை இருக்கிறது. அந்தச் சூழ்நிலையில் அவருக்கு அந்தச் சொத்துகளில் உரிமைகள் உண்டா?

ஆம்.

மனநலப்பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டவருக்கும் சொத்துரிமை உண்டு. அதேசமயம், உயிலின்மூலம் பலன் பெறுபவரால் அந்தச் சொத்துகளை சரியாகப் பராமரிக்க இயலாது என்று உயிலை எழுதியவர் கருதினால், அவருக்கு உதவுவதற்காக ஒரு பாதுகாவலரை நியமிக்கவேண்டும்.

நான் ஒருவேளை உயில் எழுதாவிட்டால், எனக்குப்பிறகு என்னுடைய சொத்து என்ன ஆகும்? மனநோயால் பாதிக்கப்பட்டுள்ள என்னுடைய உறவினருக்கு அது சென்று சேருமா?

ஒருவர் உயில் எழுதி வைக்காமல் மரணமடைந்துவிட்டால், அவர்களுடைய சொத்துகள் பின்வரும் வரிசையில் அவர்களுடைய வாரிசுகளுக்குச் செல்லும்:

  • இறந்தவருடைய துணைவர் உயிருடன் இருந்தால், சொத்துகள் அவருக்குச் செல்லும்.
  • இறந்தவருடைய துணைவர் உயிருடன் இல்லாவிட்டால், சொத்துகள் இறந்தவருடைய குழந்தைக்குச் செல்லும்.
  • இறந்தவருக்கு குழந்தைகள் இல்லாவிட்டால் சொத்துகள் அவருடைய தாய்க்குச் செல்லும்.
  • மேலே கண்ட மூவரும் வகை 1 வாரிசுகள் எனப்படுவார்கள், அவர்களில் யாரும் உயிரோடு இல்லாவிட்டால் வகை 2 வாரிசுகளுக்கு, அதாவது இறந்தவருடைய உடன்பிறந்தவர்களுக்கு சொத்துகள் செல்லும்.

இந்த வரிசைப்படி சொத்துகளின் உரிமை பெறும், வகை 1 அல்லது வகை 2 வாரிசுதாரர்களுக்கு மனநலப்பிரச்னை இருந்தாலும்கூட, அவர்களுக்குச் சொத்து முறைப்படி சென்று சேரும்.

மனநலம் பாதிக்கப்பட்ட ஒருவருக்கு சொத்து சென்று சேர்ந்து அவரால் அதை முறைப்படி பராமரிக்க முடியாது என்று நீதிமன்றம் கருதினால், ஒரு பாதுகாவலர் நியமிக்கப்படலாம். ஆனால் இதுபோன்ற குழப்பங்களுக்கெல்லாம் இடமளிக்காமல், தங்களுக்குப் பிறகு, மனநலம் பாதிக்கப்பட்ட தங்கள் வாரிசுகளுக்கு சொத்துகள் சென்று சேர வேண்டும் என்று விரும்புகிறவர்கள் தங்களுடைய வழக்கறிஞரைத் தொடர்பு கொண்டு ஓர் உயில் எழுதிவிடுவது நல்லது.

ஓர் அறக்கட்டளையை உருவாக்குதல்

அறக்கட்டளை என்றால் என்ன?

ஓர் அறக்கட்டளை என்பது, ஒரு சொத்தின்மூலம் பலன் பெற வேண்டிய ஒருவருக்காக அந்தச் சொத்தைப் பெற்றுக்கொண்டு நிர்வகிக்கிற ஓர் உறவு அமைப்பு ஆகும்.

உதாரணமாக ஆனந்தனுக்குக் பரத் என்ற மகன் இருக்கிறார். பரத்துக்கு மனநலப்பிரச்சனைகள் உள்ளன. ஆனந்தன் தனக்குப் பிறகு தன்னுடைய மகன் சௌகரியமாக வாழவேண்டும் என்று விரும்புகிறார், அதற்காக X என்ற பெயரில் ஒரு அறக்கட்டளையை உருவாக்குகிறார். பிறகு, ஆனந்தன் தன் சொத்துகளை இந்த X அறக்கட்டளைக்கு மாற்றுகிறார், ஓர் அறக்கட்டளைப் பத்திரத்தை எழுதி அதன்மூலம் இந்த சொத்துகளை எப்படி நிர்வகிக்கவேண்டும், அதன்மூலம் தன்னுடய மகன் பரத்துக்கு எப்படிப் பலன்கள் கிடைக்கவேண்டும் என்று எழுதுகிறார். இனி பரத்துக்குப்பிறகு, அந்த அறக்கட்டளை ஆனந்தனின் சொத்துகளை முறைப்படி நிர்வகிக்கும், அதன்மூலம் கிடைக்கும் பலன்களை பரத்துக்கு வழங்கும்.

ஓர் அறக்கட்டளையை உருவாக்குவதற்கு என்னென்ன நிபந்தனைகள் உள்ளன?

ஒவ்வோர் அறக்கட்டளையிலும் ஒரு ஆசிரியர், இரண்டு அறங்காவலர்கள், ஓர் அறக்கட்டளைப் பத்திரம், ஒரு பலன் பெறுவோர் மற்றும் ஓர் அறக்கட்டளைச் சொத்து இருக்கவேண்டும். அறக்கட்டளைப் பத்திரத்தை எழுதுபவர்தான் அறக்கட்டளையை உருவாக்குகிறார், அவர் தன்னுடைய சொத்தையோ பணத்தையோ அறக்கட்டளைக்கு மாற்றுகிறார், அதன்மூலம் அறக்கட்டளைப் பத்திரத்தை உருவாக்குகிறார். அறங்காவலர்கள் என்பவர்கள் அறக்கட்டளையை நிர்வகிக்கும் பொறுப்பை வகிக்கிறார்கள். அறக்கட்டளை எந்த நோக்கத்தில் உருவாக்கப்பட்டதோ அவற்றை இவர்கள் முறைப்படி நிறைவேற்றுவார்கள்.

அறக்கட்டளை உருவாக்குவதற்கு குறைந்தபட்ச சொத்து ஏதும் இல்லை. அறங்காவலர்கள் எண்ணிக்கைக்கும் எந்தக்கட்டுப்பாடும் இல்லை. அதேசமயம் தனியார் அறக்கட்டளையைப் பொறுத்தவரை அறங்காவலர்களின் எண்ணிக்கையைக் குறைவாக அமைப்பது நல்லது. அப்போதுதான், அறக்கட்டளையை நிர்வகிப்பதில் சிரமம் இல்லாமல் எல்லாம் சுலபமாக முடியும்.

அறக்கட்டளைப் பத்திரம் என்றால் என்ன?

அறக்கட்டளைப் பத்திரம் என்பது ஓர் அறக்கட்டளையின் பின்வரும் அம்சங்களைக் கட்டுப்படுத்துகிற ஓர் ஆவணம்:

  • அது அறக்கட்டளையின் நோக்கங்களைப் பட்டியலிடுகிறது
  • அது பலன்பெறுவோரைப் பட்டியலிடுகிறது (அதாவது, மனநலம் பாதிக்கப்பட்ட ஒருவரின் நன்மைக்காக இந்த அறக்கட்டளை உருவாக்கப்படுகிறது என்றால், அவரே அதன்மூலம் பலன் பெறுபவர் ஆவார்)
  • அது அறங்காவலர்களின் விவரங்களைத் தருகிறது- அவர்கள் எப்படி நியமிக்கப்படுகிறார்கள், எவ்வளவு காலத்திற்குப் பதவியில் இருப்பார்கள், புதிய அறங்காவலர்களைக் கொண்டு வருவது எப்படி போன்றவற்றை விவரிக்கிறது.
  • அறக்கட்டளையின் சொத்துகளை எப்படிக் கையாளவேண்டும்,   எப்படிப் பயன்படுத்தவேண்டும் என்பதை விவரிக்கிறது.

அறக்கட்டளையின் சொத்துகள் தவறாகப் பயன்படுத்தாமல் இருப்பதை எப்படி உறுதி செய்வது?

ஓர் அறக்கட்டளையில் பல அறங்காவலர்கள் இருப்பார்கள் என்பதால், சொத்துகளைத் தவறாகப் பயன்படுத்தும் வாய்ப்புக் குறைவு. அதே சமயம், அறக்கட்டளையின் சொத்துகள் தவறாகப் பயன்படுத்தப்படுகின்றன என அதன் அறங்காவலர்கள் இடையே, கருத்து வேறுபாடு ஏற்பட்டால், யார் வேண்டுமானாலும் அதைப்பற்றிப் புகார் செய்யலாம். இதற்கு அவர்கள் காவல்துறை, வருமானவரித்துறை அல்லது நீதிமன்றம் ஆகியவற்றை அணுகலாம். அறக்கட்டளை தொடங்க விரும்புகிற ஒருவர் அதற்காக ஒரு வழக்கறிஞரை அணுகி ஆலோசனை பெறுவது நல்லது. வழக்கறிஞர் இதற்கான முழு விவரங்களை வழங்குவார், அவர்கள் அறக்கட்டளையை நிறுவுவதற்கு உதவுவார்.

Related Stories

No stories found.
logo
வொய்ட் ஸ்வான் ஃபவுண்டேஷன்
tamil.whiteswanfoundation.org