யோகாசனம் Vs உடற்பயிற்சி

யோகாசனம் என்பது வெறும் உடற்பயிற்சி அல்ல, அது உடற்பயிற்சியைவிடச் சிறந்தது, அமைதியை, திருப்தியுணர்வை, மகிழ்ச்சியைத் தூண்டுகிறது.

இப்போதெல்லாம் எல்லாரும் உடல்தகுதியின் முக்கியத்துவத்தை உணர்ந்துள்ளார்கள். ஆங்காங்கே உடற்பயிற்சி நிலையங்கள் உள்ளன, ஓட்டப்பயிற்சி எடுப்பவர்கள் அதற்கெனக் குழுக்களை அமைக்கிறார்கள், சிலர் குழுவாகச் சைக்கிளில் செல்கிறார்கள். அதுபோல, யோகாசனமும் பிரபலமாகிவருகிறது. அதேசமயம், அதைப் பெரும்பாலானோர் ஓர் உடற்பயிற்சி வடிவமாகவே எண்ணுகிறார்கள். அதுவொரு தவறான புரிந்துகொள்ளல் ஆகும். உண்மையில் யோகாவின் உடல்சார்ந்த அம்சங்களான ஆசனங்கள் என்பவை, இந்தப் பயிற்சியின் ஒரு துணைப்பகுதிகள்தான். இந்த ஆசனங்கள் வழக்கமான உடற்பயிற்சியிலிருந்து பெருமளவு மாறுபடுகின்றன. இவற்றைச் செய்யும் முறையும் வேறு, இதனால் கிடைக்கும் பலன்களும் வேறு.

யோகாசனம் நிலையான அமைப்புகளிலும் தசைகளைத் தளரவிடுவதிலும் அதிகக் கவனம் செலுத்துகிறது. பதஞ்சலி ஆசனங்களை இவ்வாறு வர்ணிக்கிறார்: "ஒரு திடமான மற்றும் சவுகர்யமான நிலை. அசைவுகள் மெதுவாகவும் கட்டுப்படுத்தப்பட்டவையாகவும் இருக்கவேண்டும்; மூச்சு அதனுடன் ஒத்திசையவேண்டும். வழக்கமான உடற்பயிற்சியில், அசைவுக்கு அதிக முக்கியத்துவம் தரப்படுகிறது, தசைகளில் அழுத்தம் தரப்படுகிறது. உடற்பயிற்சியில் சில குறிப்பிட்ட அசைவுகளைத் திரும்பத்திரும்பச் செய்யவேண்டியிருக்கும், அங்கே சுவாசம் அவற்றுடன் ஒருங்கிணைவதில்லை, உடற்பயிற்சி செய்பவர் அதனை ஒழுங்குபடுத்த முயன்றால்தான் உண்டு. இதனால், யோகாசனம் மற்றும் உடற்பயிற்சியின் தாக்கங்கள் மாறுபடுகின்றன.

தசை அமைப்பு

யோகாசனம்: எலும்புப்பரப்பில் தசைகள் ஒரேமாதிரியாக உருவாக இது உதவுகிறது, இதனால் நெகிழ்வுத்தன்மை அதிகரிக்கிறது. யோகாசனமானது ஆற்றலைச் சிறப்பாகப் பயன்படுத்துகிற ஒரு செயலாகும்.

உடற்பயிற்சி: உடற்பயிற்சியானது, பொதுவாகத் தசையின் அளவை அதிகரிப்பதில் கவனம் செலுத்துகிறது. இதனால் தசையின் நீளம் குறைகிறது, நெகிழ்வுத்தன்மை குறைகிறது. உடற்பயிற்சி செய்கிற ஒருவர், நிறைய ஆற்றலைப் பயன்படுத்துகிறார்.

 

இதயம்

யோகாசனம்: யோகாசனத்தில், ஓர் ஆசனத்தை எட்டியவுடன், உடல் தளர்வடைகிறது, ரத்தத்தின் தேவை குறைகிறது. இதனால், இதயத்தில் அழுத்தம் குறைகிறது.

உடற்பயிற்சி: உடற்பயிற்சியில், இந்தத் தாக்கம் எதிர்மறையாக நிகழ்கிறது. சாதாரண உடற்பயிற்சி தசைகளில் அழுத்தத்தை அதிகரிக்கிறது. இதனால், ரத்த ஓட்ட வேகம் கூடுகிறது, ரத்த அழுத்தம் அதிகரிக்கிறது, இதனால் இதயம் ரத்தத்தை வேகமாக அனுப்பவேண்டும், ஆகவே, அதன் வேலைப்பளு அதிகரிக்கிறது.

 

சுவாச அமைப்பு

யோகாசனம்: யோகாசனத்தில், உடல் ஒரு தளர்ந்த நிலையில் உள்ளது, ஆகவே சுவாச அமைப்பில் வேலைப்பளு குறைகிறது.

உடற்பயிற்சி: வழக்கமான உடற்பயிற்சியில் தொடர்ச்சியான அசைவுகள் இருப்பதால், தசைகளுக்கு ஆக்ஸிஜன் தேவை அதிகரிக்கிறது. இதனால் சுவாசிக்கும் வேகம் அதிகரிக்கிறது, நுரையீரல்கள் அதற்கேற்ப அதிகம் உழைக்கவேண்டும்.

 

நோய் எதிர்ப்பு அமைப்பு

யோகாசனம்: யோகாசனம் நோய் எதிர்ப்பு செல்களின் எண்ணிக்கை, செயல்திறனை அதிகரிக்கிறது, அதன்மூலம் நோய் எதிர்ப்பு அமைப்பை மேம்படுத்துகிறது.

உடற்பயிற்சி: உடற்பயிற்சியும் இதையேதான் செய்கிறது, ஆனால், அது உடற்பயிற்சியின் தன்மை, தீவிரம், நேரத்தைப் பொறுத்தது.

 

அழுத்த அளவுகள்

யோகாசனம்: யோகாசனம் உடலில் கார்டிசால் அளவைக் குறைக்கிறது. கார்டிசால் என்பது, கொலஸ்ட்ராலிலிருந்து உண்டாகும் ஒரு ஹார்மோன், இது உணரப்படும் அழுத்தத்துடன் தொடர்புடையது.

உடற்பயிற்சி: உடற்பயிற்சியானது உடலில் கார்டிசால் அளவை அதிகரிக்கக்கூடும். காரணம், உடற்பயிற்சியை உடல் ஓர் அழுத்தமாக உணர்கிறது.

 

யோகாசனத்தின்போது, ஒரு குறிப்பிட்ட நாசித்துவாரத்தின்வழியே சுவாசம் நிகழும்போது, அறிவாற்றல் தூண்டப்படுகிறது; வழக்கமான உடற்பயிற்சியில் இது சாத்தியமில்லை. யோகாசனத்துக்குப்பிறகு, உடல் தளர்ந்த நிலையில் உள்ளது. இதற்குக் காரணம், நரம்பு அமைப்புக்குக் கிடைக்கும் இதமான தாக்கம்தான். உடற்பயிற்சியின்போது, லாக்டிக் அமிலம் உண்டாகிறது. இது களைப்பு மற்றும் சோர்வை உண்டாக்கலாம். யோகாசனத்தின் வேறு சில நன்மைகளும் உடற்பயிற்சியில் இல்லை: வலியைத் தாங்கும்திறன் அதிகரித்தல், அனிச்சை செயல்களைக் கட்டுப்படுத்துதல், உயிரியல் ஒழுங்கை மீண்டும் ஒழுங்கமைத்தல். சுருக்கமாகச் சொல்வதென்றால், உடற்பயிற்சியின் பெரும்பாலான பலன்களை யோகாசனம் வழங்குகிறது, அதோடு, மன அமைதி, திருப்தி மற்றும் மகிழ்ச்சி போன்ற அம்சங்களையும் மேம்படுத்துகிறது.


பெங்களூரு தேசிய மனநல மற்றும் நரம்பு அறிவியல் கல்விக்கழகத்தில் (NIMHANS) யோகா மற்றும் மனநலவியல் PhD ஆய்வறிஞர் டாக்டர் ராமஜெயம் G அவர்களின் கருத்துகளைக்கொண்டு எழுதப்பட்டது.