கவனித்துக்கொள்வோர் பிறரது உதவிகளை ஏற்கப் பழகவேண்டும்

மனநலம் பாதிக்கப்பட்டவர்களைக் கவனித்துக்கொள்கிறவர்களுக்கு அந்தப் பொறுப்புதரும் அழுத்தம் மிகுதியாக இருக்கும். அதைக் குறைக்கவேண்டும் என்றால், குடும்ப உறுப்பினர்களும் நண்பர்களும் செய்ய முன்வரும் உதவிகளை அவர்கள் ஏற்றுக்கொள்ளப் பழகவேண்டும்

மனநலம் பாதிக்கப்பட்டவர்களைக் கவனித்துக்கொள்ளுதல் என்பது ஒரு நீண்ட சிரமமான பயணமாகும். இங்கே கவனித்துக்கொள்ளும் பணியில் இருப்பவர் உடல் அளவிலும், உணர்வு அளவிலும் பலவீனமாகிப்போக வாய்ப்பு இருக்கிறது. அதற்காக அவர்கள் பிறரிடம் சென்று உதவி கேட்பதும் எளிதல்ல. காரணம், மனநலம் பாதிக்கப்பட்டவர்களைப்பற்றி சமூகத்தில் சரியான புரிந்துகொள்ளல் இல்லை, அவர்களை அருவருப்புடனே பார்க்கிறார்கள், பாரபட்சமாகவே நடத்துகிறார்கள். ஆகவே மனநலம் பாதிக்கப்பட்டவர்களைப் பார்த்துக்கொள்கிறவர்கள் மற்றவர்களுடைய உதவியை எப்படி ஏற்றுக்கொள்வது என்று எண்ணித்தயங்குகிறார்கள்.

ஆனால், மனநலம் பாதிக்கப்பட்ட ஒருவரைக் கவனித்துக்கொண்டிருக்கிற ஒருவர், தனக்கு உதவுவதற்கு யாராவது முன்வந்தால் அந்த உதவியை ஏற்றுக்கொள்ளலாம் என்று நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள், இதன்மூலம் அவருக்கு ஏற்படக்கூடிய மன அழுத்தம் மற்றும் களைப்புணர்வு ஆகியவை பெருமளவு குறையும், தொலைநோக்கில் பார்க்கும்போது, அவர்கள் கவனித்துக்கொள்ளும் பணியை மேலும் சிறப்பாகச் செய்ய இயலும் என்று நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள்.

இந்தியாவில் மனநலம் பாதிக்கப்பட்டவர்களைக் கவனித்துக்கொள்கிற அவர்களுடைய குடும்ப உறுப்பினர்கள் இந்தப் பணியினால் ஏற்படும் மிகப்பெரிய சுமையை நீண்ட நாள் தாங்க வேண்டியிருக்கிறது. இதனால் அவர்களுடைய செலவுகள் அதிகரிக்கின்றன. அவர்களுக்கென்று சொந்தமாக நேரமே கிடைப்பதில்லை, அவர்களுடைய சமூக உறவுகள் மாறிவிடுகின்றன, இத்துடன் அவர்கள் பல உணர்வு பிரச்னைகளையும் சந்திக்கவேண்டியிருக்கிறது.

“மனநலப் பிரச்னையால் பாதிக்கப்பட்டவருக்கு பெரிய குடும்பமே இருந்தாலும் கூட, பொதுவாக யாரேனும் ஒருவர்தான் அவரைக் கவனித்துக்கொள்ளும் பொறுப்பை ஏற்கவேண்டியிருக்கிறது” என்கிறார் டாக்டர் ஆர்த்தி ஜகன்னாதன், உதவிப் பேராசிரியர், உளவியல் சமூகப்பணித்துறை, NIMHANS. ஸ்கிஜோஃப்ரெனியா, அல்ஸைமர்ஸ் மற்றும் / அல்லது படிப்படியாக அதிகரிக்கக்கூடிய மனநலப் பிரச்னையைச் சந்திக்கக்கூடிய ஒருவரைக் கவனித்துக்கொள்கிறவர் பலவிதமான பணிகளைச் செய்யவேண்டியிருக்கும். உதாரணமாக, குளிக்கவைத்தல், சுத்தப்படுத்துதல், வேளைதவறாமல் மருந்து தருதல், பாதிக்கப்பட்டவர்களுடைய உடல்நலத்தைக் கண்காணித்தல், அவர்களை வழக்கமான உடல்நலப் பரிசோதனைக்கு அழைத்துச்செல்லுதல் போன்றவை. இந்தப் பணிகள் ஒருவாரம், இரண்டுவாரம் என்றில்லாமல் நீண்டநாள் தொடரும் என்பதால், பாதிக்கப்பட்டவரைக் கவனித்துக்கொள்கிறவர், அழுத்தத்திற்கு உள்ளாகக்கூடும் ஆகவே அவருக்கு பிறருடைய ஆதரவு தேவை.

பதில் மரியாதை

மனநலம் பாதிக்கப்பட்டவரைக் கவனித்துக்கொள்கிற ஒருவரிடம் இன்னொருவர் வந்து ‘நான் உங்களுக்கு இந்த விஷயத்தில் உதவலாமா?’ என்று கேட்டால், அவருடைய மனத்தில் தோன்றும் முதல் கேள்வி ‘பதிலுக்கு நான் என்ன செய்யவேண்டும்?’ என்பதுதான். இதை அவர் வெளிப்படையாகக் கேட்காமல் இருக்கலாம். ஆனால் அவர் மனத்தில் இந்தக் கேள்வி ஓடிக்கொண்டே இருக்கும்: இவர் என் வேலையில் பங்கேற்கிறார் என்றால் பதிலுக்கு நான் இவருக்கு என்ன செய்யவேண்டும். என்னால் அதைச் செய்ய முடியுமா? ஒருவேளை முடியாவிட்டால், அவருடைய உதவிக்கு நான் பதில் மரியாதை செய்யாமல் இருந்து விடுவேனே?

இப்படிப் பலவிதமாகச் சிந்தித்து அவர்கள் குற்றவுணர்ச்சி கொள்கிறார்கள். பிறருடைய உதவியை ஏற்றுக்கொள்ளத்தயங்குகிறார்கள்.

சில நண்பர்களும் உறவினர்களும் செய்கின்ற உதவிக்குப் பதில் உதவி எதிர்பார்ப்பார்கள் என்பது உண்மைதான். ஆனால் பலருக்கு, உதவவேண்டும் என்ற நோக்கம்மட்டும்தான் இருக்கிறது, பதிலுக்கு அவர்கள் எதையும் எதிர்பார்ப்பதில்லை.

ஆகவே, மனநலப் பிரச்னை கொண்ட ஒருவரைக் கவனித்துக்கொண்டிருக்கிற ஒருவருக்கு யாரேனும் உதவ முன்வந்தால், அவர்களுடைய உதவியை அவர் ஏற்றுக்கொள்ளவேண்டும், தயங்கக்கூடாது, மளிகை சாமான் வாங்கிவருவது, மற்ற வீட்டு வேலைகள், போன்றவற்றை அவர்களிடம் கொடுத்துவிட்டு, அதைப்பற்றிக் கவலைப்படாமல் மனநிலை பாதிக்கப்பட்டவர்களைக் கவனித்துக்கொள்ளலாம்.

இந்த விஷயத்தைப் பேசலாமா என்பதைப்பற்றிய பயம்

மனநலம் பாதிக்கப்பட்ட ஒருவரைக் கவனித்துக்கொள்கிறவர், தன்னுடைய பிரச்னைகளைப்பற்றி பிறரிடம் பேசத்தயங்குகிறார், காரணம் இந்தச் சமூகம் மனநிலை பாதிக்கப்பட்டவர்களை சரிவரப் புரிந்துகொள்வதில்லை. அவர்களை அருவருப்புடனே பார்க்கிறது, அவர்களிடம் பாரபட்சம் காட்டுகிறது. மேலும் அவர்களுடைய குடும்பத்தினர் மற்றும் நண்பர்களே அவர்களை :

  • களங்கப்படுத்தக் கூடும்
  • அவர்களுடைய செயல்பாடுகளை விமர்சிக்கக்கூடும்
  • அவர்களைத் தனிமைப்படுத்தக்கூடும்

ஆகவே யார் என்ன சொல்வார்களோ என்ற பயத்தில் மனநிலை பாதிக்கப்பட்டவர்களைப் பார்த்துக்கொள்கிறவர்கள் அவர்களுடைய பிரச்னைகளை பேசுவதில்லை. தன்னந்தனியாக எல்லாப் பிரச்னைகளையும் சமாளிக்கத்தொடங்குகிறார், அழுத்தத்தை அனுபவிக்கிறார். இப்படிச் செய்வதற்கு பதிலாக அவர் தன்னுடைய குடும்பத்தினர், நண்பர்கள், உறவினர்கள் எல்லாரிடமும் மனநலப் பிரச்னைகளை பற்றிப் பேசவேண்டும், தன்னால் கவனித்துக்கொள்கிறவருக்கு உண்மையில் என்ன பிரச்னை, அவருக்கு எப்படிப்பட்ட ஆதரவு தேவை என்பதை அவர்களுக்குப் புரிய வைக்கவேண்டும். இந்தப் பிரச்னையைப்பற்றி அவர்கள் புரிந்துகொண்ட பிறகு அவர்களே முன்வந்து உதவி செய்யத்தொடங்குவார்கள், அப்படியில்லாவிட்டாலும் மனநலம் பாதிக்கப்பட்டவர்களை பார்த்துக்கொள்கிறவர்கள் அவர்களை அணுகி உதவி கேட்பது எளிது.

“சமூகத்தில் உள்ளவர்கள் மனநிலை பாதிக்கப்பட்ட ஒருவரையும் அவரைக் கவனித்துக்கொள்கிறவரையும் தங்களில் ஒருவராகக் கருதும்போது, யாரும் இதுபோன்ற குழப்பத்திற்கு ஆளாகி அழுத்தத்தை அனுபவிக்க மாட்டார்கள்” என்கிறார் டாக்டர் ஜகன்னாதன். “இதன்மூலம் மனநலம் பாதிக்கப்பட்டவருடைய உணர்வுபூர்வமான அழுத்தம் பெருமளவு குறைகிறது.”

மனநலம் பாதிக்கப்பட்டவருக்கும் அவரைக் கவனித்துக்கொள்கிறவருக்கும் இடையே உள்ள உறவு எந்த அளவு நெருக்கமாக உள்ளதோ, அந்த அளவுக்கு, கவனித்துக்கொள்கிறவருடைய பொறுப்புச் சுமை அதிகமாகக்கூடும். அதுபோன்ற சூழ்நிலைகளில் அவர்கள் தங்களுடைய நட்பு வட்டங்களில் உள்ளவர்களுடைய உதவிகளைப் பெற்றுக்கொள்ளத்தொடங்கவேண்டும், அதன்மூலம் அவர்களுடைய வாழ்க்கை சமநிலையில் இருக்கும், அவர்களால் தங்களுடைய அன்புக்குரியவர்களை முன்பைவிடச் சிறப்பாகக் கவனித்துக்கொள்ளமுடியும்.

சான்று

ஜகன்னாதன் A. இந்தியாவில் குடும்பத்தினரின் கவனித்துக்கொள்ளுதல்: நாள்பட்ட ஆதரவுச் சூழல்களில் தேவை அடிப்படையான ஆதரவு மற்றும் தலையீட்டின் முக்கியத்துவம். J போஸ்ட்கிராட் மெட் [ஆன்லைன் தொடர்] 2014 [மேற்கோள் காண்பிக்கப்பட்டது 2015 ஜூலை 15] ];60:355-6.

Related Stories

No stories found.
logo
வொய்ட் ஸ்வான் ஃபவுண்டேஷன்
tamil.whiteswanfoundation.org