மனநலப் பிரச்னை கொண்டோரின் குடும்பத்தினரும் களங்கத்தைச் சந்திக்கிறார்கள்

கவனித்துக்கொள்வோர் சந்திக்கும் களங்கமானது அவர்களுடைய சுமையை அதிகரிக்கிறது, அவர்களுடைய கவனித்துக்கொள்ளும் திறனைப் பாதிக்கிறது

கனடாவைச் சேர்ந்த சமூகவியலாளரான எர்விங் காஃப்மன் களங்கவுணர்வை இவ்வாறு வரையறுக்கிறார்: சமூகத்தில் ஒரு குறிப்பிட்டவகையில் மதிப்பிழந்துபோகும் ஒரு பண்பு, பழக்கவழக்கம் அல்லது தன்மை. காஃப்மனின் கோட்பாடு, களங்கமானது சமூகத்தில் உள்ளவர்கள் ஒருவரை ஏற்றுக்கொள்ளாமல், இயல்பாகக் கருதாமல், அவரை விரும்பத்தகாதவராக, நிராகரிக்கப்படவேண்டியவராகக் கருதும்படி செய்கிறது. மனநலப் பிரச்னைகளைச் சந்திப்போர் களங்கம் என்ற சொல்லை நன்கு அறிந்திருப்பார்கள். உண்மையில், மனநலப் பிரச்னை கொண்டோருக்கு வழங்கப்படும் சிகிச்சைக்கு மிகப்பெரிய தடையே களங்கம்தான் என்று சுட்டிக்காட்டுகிறார் உலகச் சுகாதார அமைப்பின் மனநலப் பிரிவு முன்னாள் இயக்குநர் டாக்டர் நார்மன் சார்டோரியஸ். ஆனால், மனநலப் பிரச்னையோடு தொடர்புடைய களங்கத்தைச் சந்திப்பது யார்? பாதிக்கப்பட்டவர்மட்டும்தானா? இதுபற்றிச் சில ஆய்வுகளே நிகழ்ந்துள்ளன. ஆனால், அந்த ஆய்வுகளின் அடிப்படையில் பார்க்கும்போது, மனநலப் பிரச்னை கொண்டோரின் குடும்பத்தினரும் களங்கத்தைச் சந்திப்பது தெரியவருகிறது.

மனநல மருத்துவத்துக்கான பிரிட்டிஷ் சஞ்சிகையில் வெளியான ஓர் ஆய்வறிக்கையில் மார்கரெடா ஓஸ்ட்மன் மற்றும் லார்ஸ் க்ஜெல்லின் இருவரும், மனநலப் பிரச்னை கொண்டோரைக் கவனித்துக்கொள்கிறவர்கள், அவர்களுடைய உறவினர்கள் சந்திக்கும் துணைக் களங்கத்தை ஆராய்கிறார்கள். துணைக் களங்கம் (இது உடனிருப்பதால் வரும் களங்கம் மற்றும் மரியாதையால் வரும் களங்கம் எனவும் அழைக்கப்படுகிறது) என்பது, களங்கப்படுத்தப்படும் ஒருவருடன் தொடர்புடைய இன்னொருவரும் களங்கப்படுத்தப்படுதலைக் குறிக்கிறது.

மனநலப் பிரச்னை கொண்ட சிலருடைய அறிகுறிகள் தெளிவாக வெளிப்படும், நெடுநாள்களுக்கு நீடிக்கும், இவர்களைக் கவனித்துக்கொள்கிறவர்களால் களங்கத்தைத் தவிர்க்கவே இயலுவதில்லை. "சில நேரங்களில், பிரச்னை குறுகியகாலத்துக்கே நீடிக்கிறது, இதுபோன்ற நேரங்களில் அவர்களைக் கவனித்துக்கொள்கிறவர்கள் தங்களுடைய பக்கத்துவீட்டுக்காரர்கள் மற்றும் உறவினர்களிடம் அதிக விவரங்களைப் பகிர்ந்துகொள்வதில்லை, தேவையானதைமட்டுமே சொல்கிறார்கள். இதைப்பற்றிப் பிறர் என்ன நினைப்பார்களோ என்ற எண்ணம்தான் இதற்குக் காரணம். அதேசமயம், பிரச்னை நீண்டநாளைக்கு நீடிக்கும்போது, இப்படி மறைத்துவைப்பது சிரமமாகிறது,” என்கிறார் NIMHANS மனநல மருத்துவப் புனர்வாழ்வு துணைப் பேராசிரியர் டாக்டர் டி சிவகுமார்.

"மனநலப் பிரச்னை கொண்டோர், அவர்களுடைய குடும்பத்தினர் என இருவரையுமே சமூகம் களங்கவுணர்வோடு பார்க்கிறது என்பது தெரிந்த விஷயம்தான், இதைக் கையாள்வது அவசியம். பல நேரங்களில், கவனித்துக்கொள்வோர் தாங்களே இந்தக் களங்கத்தைக் கற்பித்துக்கொள்கிறார்கள், பல காரணங்களால் தங்களைப் பிறர் மதிக்கவேண்டியதில்லை என்று நம்புகிறவர்களும் உண்டு. களங்கம் உண்மையாக இருந்தாலும் சரி, அது இவரே கற்பித்துக்கொண்ட ஒன்றாக இருந்தாலும் சரி, கவனித்துக்கொள்கிறவர் அதற்கு எப்படி எதிர்வினையாற்றுகிறார் என்பதைப்பொறுத்து அவருடைய வாழ்க்கைத்தரம் மாறுபடும், அவர் தன்னுடைய உறவினருக்கு எந்த அளவு நல்ல கவனிப்பை வழங்க இயலுகிறது என்பது மாறுபடும்,” என்கிறார் NIMHANS மனநல மருத்துவச் சமூகப் பணித்துறை துணைப் பேராசிரியர் டாக்டர் ஆர்த்தி ஜகந்நாதன்.

உடனிருப்பதால் வரும் களங்கம் என்றால் என்ன?

உடனிருப்பதால் வரும் களங்கம் என்பது, களங்கப்படுத்தப்பட்ட ஒருவருடன் இருப்பதால் அல்லது அவரைப்போலவே இருப்பதாலேயே இன்னொருவர் களங்கப்படுத்தப்படும் செயல்முறையாகும். உடனிருப்பதால் வரும் களங்கம் என்பது வெளியிலிருந்து வரலாம். அதாவது, மனநலப் பிரச்னை கொண்ட ஒருவருடைய குடும்பத்தைச் சமூகம் களங்கத்துடன் பார்க்கலாம். அது உள்ளிருந்தும் வரலாம், அதாவது, மனநலப் பிரச்னை கொண்டவருடைய குடும்பம் மனநலப் பிரச்னை குறித்த தவறான சமூகப் பார்வையை நம்பி, தங்கள்மீது களங்கம் சுமத்தப்படும் என்று கருதலாம். “சுய-களங்கம் என்பதன் மிக எளிய வரையறை, மனநலப் பிரச்னை குறித்த பொதுப் பார்வையை ஒருவர் தனக்குள் ஏற்றிக்கொள்வதுதான்,” என்கிறார் டாக்டர் டி சிவகுமார்.

சமூகப் பார்வையுடன், களங்கமானது வேறு சில குறிப்பிட்ட காரணங்களாலும் ஏற்படுவதைப் பார்க்கிறோம்.

இது பரம்பரைப் பிரச்னை என்கிற எண்ணம், தன்னால் ஏதும் செய்ய இயலவில்லையே என்கிற குற்றவுணர்ச்சி

  • மனநலப் பிரச்னை என்பது மரபியல்ரீதியிலானது, அல்லது, பரம்பரை பரம்பரையாக வருவது என்கிற பார்வை இருக்கிறது, மனநலப் பிரச்னை கொண்டோரின் குடும்பத்தினர் இந்தப் பார்வையை நம்பிக் களங்கவுணர்வு கொள்கிறார்கள். இதற்குக் காரணம், கவனித்துக்கொள்வோருக்கும் சரி, சமூகத்தினருக்கும் சரி, மனநலப் பிரச்னைகளைப்பற்றி அதிகம் தெரிவதில்லை. சில பிரச்னைகள் பரம்பரையாக வரக்கூடும், ஆனால், அவை உறவினர்களுக்கு வரும் என்பது நிச்சயமில்லை. வரலாம், வராமலும் போகலாம். மனநலப் பிரச்னை கொண்டவர்களின் 527 குடும்ப உறுப்பினர்கள்மத்தியில் நிகழ்த்தப்பட்ட ஓர் ஆய்வில், யாரெல்லாம் மனநலப் பிரச்னைகள் பரம்பரை பரம்பரையாக வரும் என்று நம்பினார்களோ அவர்களெல்லாம் உளவியல் துயரத்தை அனுபவித்தது தெரியவந்தது. "இதிலிருந்து நாம் புரிந்துகொள்ளக்கூடிய ஒரு விஷயம், மனநலப் பிரச்னையானது மரபுரீதியில் தீர்மானிக்கப்படுகிற ஒன்றாகக் கருதப்படும்போது, ஒருவருடைய ஆரோக்கியத்தைப்பற்றிய நிச்சயமற்ற தன்மை ஏற்படலாம், உள்ளிருக்கக்கூடிய மனநலப் பிரச்னையைப்பற்றிய கவலைகள் ஏற்படலாம். குடும்ப உறுப்பினர் ஒருவருக்கு மனநலப் பிரச்னை ஏற்படும்போது, அதனால் உண்டாகும் களங்கத்தைச் சந்திக்கவேண்டியிருக்கும்போது, மற்றவர்களுக்குப் பயமும் நிச்சயமற்ற தன்மையும் தூண்டப்படலாம் என்று நாங்கள் நம்புகிறோம்," என்கிறது இந்த ஆய்வு.

  • பல நேரங்களில் 'மன அழுத்தம்'தான் மனநலப் பிரச்னைக்குக் காரணம் என்று தவறாக நம்பப்படுகிறது. இதனால், மனநலப் பிரச்னை கொண்டோரைக் கவனித்துக்கொள்கிறவர்கள் தாங்கள்தான் மிகையாகச் செயல்பட்டு அவர்களுக்கு இந்தப் பிரச்னையைக் கொண்டுவந்துவிட்டோமோ என்று எண்ணுகிறார்கள். இந்தச் சுய-களங்கத்தை எளிதில் கையாளலாம். இதற்கு மனநலப் பிரச்னை கொண்டோரின் குடும்ப உறுப்பினர்களுக்கு ஆலோசனை வழங்கவேண்டும், அந்தப் பிரச்னையைப்பற்றி அவர்களுக்கு விளக்கவேண்டும்.  

  • ஒருவர் சிகிச்சையை ஏற்றுக்கொண்டு குணமடையும்போது, அவரைக் கவனித்துக்கொள்கிறவர்கள் 'நான் இவரை முன்பே ஒரு மனநல நிபுணரிடம் அழைத்துவந்திருக்கவேண்டும்' என்று தங்களைத் தாங்களே குற்றம்சாட்டிக்கொள்கிறார்கள். அவரிடம் காணப்பட்ட ஆரம்ப அறிகுறிகளைக் காணாதது தங்கள் தவறு என்று அவர்கள் எண்ணுகிறார்கள், அவருடைய சிரமங்களுக்குத் தாங்களே காரணம் என்று நினைக்கிறார்கள். “மனநலப் பிரச்னை கொண்ட சிலரிடம் ஆரம்பகால அடையாளங்கள், அறிகுறிகளே காணப்படுவதில்லை, ஒருவேளை அப்படிக் காணப்பட்டாலும், அவற்றை அடையாளம் காண்பது சிரமம்,” என்கிறார் டாக்டர் டி சிவகுமார்.

குற்றவுணர்ச்சி மற்றும் தவறான தகவல்களால் ஏற்படும் சுய களங்கத்தைத் துடைத்துவிடலாம், இதற்கு அவர்கள் தங்களுடைய பயங்கள் மற்றும் சந்தேகங்களைப்பற்றி ஒரு மனநல மருத்துவரிடம் வெளிப்படையாகப் பேசவேண்டும், எல்லா விஷயங்களையும் தெளிவுபடுத்திக்கொள்ளவேண்டும்

வாழ்க்கை இலக்குகளை எட்ட இயலவில்லையே என்றெண்ணிச் சங்கடப்படுதல்

களங்கத்துக்கான இந்தக் காரணம், இந்தியச் சூழலில் மிகவும் உண்மையாகவுள்ளது. ஒருவர் தன்னுடைய கல்வியைப் பூர்த்திசெய்தல், திருமணம் செய்துகொள்ளுதல், வேலைக்குச் செல்லுதல் போன்ற சமூக இலக்குகளைப் பூர்த்திசெய்யாதபோது, மனநலப் பிரச்னை கொண்டவரும் சரி, அவருடைய குடும்பத்தினரும் சரி, சமூகத்தில் உள்ள பிறருடன் பழகாமல் ஒதுங்கியிருக்க முனைகிறார்கள். பிள்ளைகளைக் கவனித்துக்கொள்ளும் பெற்றோர் இதனால் மிகவும் எரிச்சலடைகிறார்கள். பல நேரங்களில் இந்தச் சுமை அதிகரித்து அதிகரித்து அவர்கள் தங்கள் பிள்ளைகளைச் சரியாகக் கவனித்துக்கொள்ள இயலாதபடி செய்துவிடுகிறது.

உடனிருப்பதால் வரும் களங்கம் மனநலப் பிரச்னை கொண்டோரின் குடும்பங்களை எப்படிப் பாதிக்கிறது?

சிகிச்சை பெறுவதில் தாமதம்

களங்கத்தின் துணை விளைவுகளிலேயே மிகவும் தொந்தரவு தரும் ஒரு விஷயம், மனநலப் பிரச்னை கொண்டோரைக் கவனித்துக்கொள்கிறவர்கள் இதற்காக ஒரு மருத்துவ நிபுணரை அணுகினால் தங்கள் குடும்பத்தின்மீது 'மனநலப் பிரச்னையுள்ள குடும்பம்' என்கிற முத்திரை விழுந்துவிடுமோ என்று தயங்குகிறார்கள், அதைத் தள்ளிப்போடுகிறார்கள். “பல நேரங்களில், இது தானாகச் சரியாகிவிடும் என்று அவர்கள் நம்புகிறார்கள். அறிகுறிகள் கைமீறிப்போகும்போதுதான் பாதிக்கப்பட்டவரை அழைத்துக்கொண்டு ஒரு மனநல மருத்துவரிடம் வருகிறார்கள்,” என்கிறார் டாக்டர் டி சிவகுமார்.

உளவியல் துயரம்  

மனநலப் பிரச்னை கொண்டோர்மத்தியிலும் அவர்களைக் கவனித்துக்கொள்வோர்மத்தியிலும் களங்கத்தால் பெரும் உளவியல் துயரம் ஏற்படக்கூடும். சமூகத்தில் அல்லது பிற குடும்பத்தினர், நண்பர்கள் மத்தியில் தனது இடம் என்ன என்பதுபற்றி ஒருவருக்குக் கவலைகள் மற்றும் நிலைகொள்ளாத்தன்மை ஏற்படும்போது துயரம் ஏற்படலாம். அத்தகைய உளவியல் துயரத்தைக் கவனிக்காவிட்டால், கவனித்துக்கொள்பவரின் மனநலம் பாதிக்கப்படலாம். இதனால், மனநலம் பாதிக்கப்பட்டோரைக் கவனித்துக்கொள்கிறவர்கள் மன நல நிபுணர்களிடம் ஆலோசனை பெறவேண்டும், தங்களுடைய கவலைகளைப்பற்றிப் பேசி எந்தவொரு மனக்கசப்பையும் போக்கிக்கொள்ளவேண்டும் என நிபுணர்கள் சிபாரிசு செய்கிறார்கள்.

சமூக உள்ளடக்கம் மற்றும் தனிமை

சமூக உள்ளடக்கம் என்பது கவனித்துக்கொள்பவரிடமிருந்து தொடங்கலாம் அல்லது சமூகத்திலிருந்து தொடங்கலாம்.

பல நேரங்களில், மனநலப் பிரச்னை கொண்டோரின் குடும்பங்கள் தங்கள்மீது களங்கம் சுமத்தப்படுமோ என்று பயப்படுகின்றன, அதனால் தங்களுடைய சமூக வட்டங்களிலிருந்து தங்களைத் தனிமைப்படுத்திக்கொள்கிறார்கள். இவர்களில் சிலர் முற்றிலுமாக விலகிவிடுகிறார்கள், எப்போதும் வெளியே செல்வதே இல்லை. இன்னும் சிலர், மனநல பாதிப்பு கொண்டவரைத் திருமணங்கள், கொண்டாட்டங்கள் மற்றும் பூஜைகளுக்கு அழைத்துச்செல்வதில்லை, அவர்களைப்பற்றிப் பொதுவில் பேசுவதையே தவிர்த்துவிடுகிறார்கள். ஒருவர் மனநலப் பிரச்னையிலிருந்து குணமாகிறார் என்றால், அவருக்குக் குடும்பத்தினர், நண்பர்களின் ஆதரவு தேவை, பல நேரங்களில் அதுவே அவர் விரைவில் குணமாக உதவும். அவரைத் தனிமையில் இருக்கவைத்தால், இந்தத் தொடர்புகளால் அவருக்குக் கிடைக்கும் நன்மைகள் கிடைக்காது.

மனநலப் பிரச்னை கொண்ட ஒருவருடன் பிணைப்பை உண்டாக்கிக்கொள்ளுதல், அவரைக் கவனித்துக்கொள்ள இயலுதல்

களங்கத்தால் உண்டான மனத்துயர் காரணமாக, மனநலப் பிரச்னை கொண்டோரைக் கவனித்துக்கொள்கிறவர்கள் அவர்களிடமிருந்து விலகிநிற்கலாம், கொஞ்சம்கொஞ்சமாக அவர்களைக் கவனித்துக்கொள்வதைக் குறைத்துக்கொண்டுவிடலாம். மேலே குறிப்பிடப்பட்ட ஆய்வில் நிபுணர்கள் சொல்வது, "இந்த ஆய்வின் முடிவுகள் இன்னொரு விஷயத்தையும் காட்டுகின்றன: SBA (உடனிருப்பதால் வரும் களங்கம்) என்பது உளவியல் துயரத்துடன் நேர்விதமாகப் பொருந்துகிறது, நெருக்கப் பார்வையுடன் எதிர்மறையாகப் பொருந்துகிறது. பொதுவாக, உடனிருப்பதால் வரும் களங்கம் காரணமாக, மனநலப் பிரச்னை கொண்டோரின் உறவினர்கள் அவர்களிடமிருந்து உளவியல்ரீதியில் விலகிநிற்கத் தூண்டப்படக்கூடும் என்பார்கள், இந்தக் கருத்தை இது உறுதிப்படுத்துகிறது. இதற்குக் காரணம், தங்களுடைய குடும்ப உறுப்பினர் சுமந்திருக்கும் களங்கத்திலிருந்து தன்னை விலக்கிக்கொள்ளலாம் என்று அவர்கள் நினைப்பதாக இருக்கலாம்."

களங்கத்துக்கு எது காரணமாக இருந்தாலும் சரி, சரியான விவரத்தையும் கல்வியையும் அணுகுவதன்மூலம் அதைக் கையாளலாம். மனநலப் பிரச்னையோடு தொடர்புடைய களங்கத்தைத் துடைப்பது சமூகத்தின் பொறுப்புதான், மனநலப் பிரச்னை கொண்டோர் அல்லது அவர்களைக் கவனித்துக்கொள்கிறவர்களின் பொறுப்பல்ல என்று மனநல நிபுணர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள். “இப்போதைய கட்டமைப்பில், மனநலப் பிரச்னை கொண்டோரைக் கவனித்துக்கொள்கிறவர்கள் ஏற்கெனவே மிகுந்த நிதி மற்றும் உளவியல் சுமையால் சிரமப்படுகிறார்கள். சமூகத்தில் களங்கத்தைக் குறைத்தால், அவர்களால் சிறப்பாகச் சமாளிக்க இயலும்,” என்கிறார் டாக்டர் ஜகந்நாதன்.

Related Stories

No stories found.
logo
வொய்ட் ஸ்வான் ஃபவுண்டேஷன்
tamil.whiteswanfoundation.org