கவனித்துக்கொள்ளுதலின் 10 தன்மைகள்

மனநலப் பிரச்னை கொண்டோரைக் கவனித்துக்கொள்கிறவர்கள் தன்னைத்தானே கவனித்துக்கொள்ளவேண்டும்
கவனித்துக்கொள்ளுதலின் 10 தன்மைகள்

மனநலப்பிரச்னை கொண்டோரைக் கவனித்துக்கொள்கிறவர்களில் பெரும்பாலானோர், அதற்கென முறையாகப் பயிற்சி பெற்றவர்கள் அல்லர், சூழல் காரணமாகத் திடீரென்று அப்பொறுப்பை ஏற்றவர்கள். இந்தப் பொறுப்பின் இயல்பே என்னவென்றால், கவனித்துக்கொள்கிறவர்களின் மனத்தில், தாங்கள் யாரைக் கவனித்துக்கொள்கிறோமோ அவர்களுடைய நலன்தான் முதன்மையாக இருக்கும். தன்னைக் கவனித்துக்கொள்ளவேண்டும் என்ற எண்ணங்களுக்கே இடமிருக்காது. சொல்லப்போனால், ஒருவரைக் கவனித்துக்கொள்கிறவர் தன்னைத்தானே கவனித்துக்கொள்வதற்கு நேரம் ஒதுக்கினால், அதை எண்ணி அவர் குற்றவுணர்ச்சி கொள்ளவும் கூடும்.

இதுபற்றி நாங்கள் நிகழ்த்தியுள்ள ஆய்வுகளில், கவனித்துக்கொள்ளும் பொறுப்புடன் தொடர்புடைய அழுத்தங்கள், அவ்வாறு முழுநேரமும் ஒருவரைக் கவனித்துக்கொள்கிறவர்களுக்கு எந்தக் கூடுதல் ஆதரவும் கிடைப்பதில்லை என்பதால், அவர்களுக்கு ஓய்வே இல்லாமலிருத்தல் ஆகியவை ஏற்கெனவே வெளிச்சத்துக்கு வந்துள்ளன.  அதேசமயம், இவ்வாறு ஆதரவு ஏதும் இல்லாத சூழ்நிலை காரணமாகவே, மனநலப் பிரச்னை கொண்டோரைக் கவனித்துக்கொள்கிறவர்கள் தங்களுடைய பணியைத் தொடர்ந்து செய்ய இயலுவதை உறுதிப்படுத்தவேண்டும், இதற்கு அவர்கள் தன்மீதே பரிவு காட்டவேண்டும், தன்னைத்தானே கவனித்துக்கொள்ளவேண்டும்.

தன்னைத்தானே கவனித்துக்கொள்ளுதலின் 10 தன்மைகள்:

  1     ஒரு தினசரி, தனிப்பட்ட சுகாதார ஒழுங்கு – உடலுக்கும் மனத்துக்கும் 'உங்களையும் கவனித்துக்கொள்கிறோம்' என அறிவித்தல்

  2     நேராநேரத்துக்குச் சாப்பிடுதல், ஆரோக்கியமான உணவைச் சாப்பிடுதல் – இதன்மூலம் தீவிர களைப்பு, ஊட்டச்சத்தின்மை ஆகியவற்றைத் தடுக்கலாம்

  3     போதுமான அளவு நீர் அருந்துதல் – இந்தத் தேவையில் கவனம் செலுத்தினால், உடலுக்கு ஓர் அன்பான செய்தி செல்லும், நீரின்மையால் ஏற்படும் பிரச்னைகள் தவிர்க்கப்படும்

  4     உடற்பயிற்சி – மனநலப் பிரச்னை கொண்ட ஒருவரைக் கவனித்துக்கொள்கிறவர் தினமும் வெறுமனே 10 நிமிடங்கள் அப்பொறுப்புக்கு இடைவெளி விட்டால் போதும், அந்த நேரம்மட்டும் இன்னொருவருடைய உதவியைக் கோரினால் போதும், அமைதியாக, அதேசமயம் விறுவிறுவென்று நடந்து திரும்பிவிடலாம், அது அவருக்கு ஊக்கம் தரும். அருகில் யோகாசனம் கற்றுத்தருகிறவர் யாரேனும் இருந்தால், அவர்களிடம் பேசலாம், அது நல்ல பலன்களைத் தருகிறது.  ஒருவேளை, அவர் யாரைக் கவனித்துக்கொள்கிறாரோ அவரைவிட்டு விலகுவது சாத்தியமே இல்லை என்றால், வீட்டிலேயே மூச்சுப்பயிற்சி, தியானம் போன்றவற்றைச் செய்யலாம். இதனால், கவனித்துக்கொள்ளுதலின் அழுத்தம் குறையும்.

  5     தினசரி சமூக வட்டங்களுடன் தொடர்பு – சிறிது நேரம் பழகினாலும் போதும், இயன்றபோதெல்லாம் அதைத் தொடர்ந்து செய்யவேண்டும். வெளியே என்ன நடக்கிறது என்பதை அறிந்துவைத்திருந்தால், இல்லம், சமூக வாழ்க்கையைச் சமநிலைப்படுத்தலாம்.

  6     உரையாடல் – மனநலப் பிரச்னை கொண்டோரைக் கவனித்துக்கொள்கிறவர்களின் பிரச்னைகள் பிறருக்குப் புரியாவிட்டால், அவர்கள் உதவ முன்வரமாட்டார்கள். ஆனால், அவர்கள் அதைப் புரிந்துகொள்ளும்போது, உதவ முன்வரக்கூடும்.

  7     கவனித்துக்கொள்ளும் பிறரைத் தொடர்புகொள்ளுதல் – அடக்கிவைக்கப்பட்ட உணர்வுகள், கவலைகளை வெளிப்படுத்துவதற்கு ஓர் ஆதரவு வட்டத்தை உருவாக்குவது நல்ல பயன் தரும்.

  8     உணர்வுநிலை ஆதரவு – கவனித்துக்கொள்கிறவர்களுக்கு மனச்சோர்வு அல்லது விரக்தி உணர்வு ஏற்பட்டால், அவர்கள் அதைப்பற்றி ஒரு மருத்துவரிடம் அல்லது வேறு நிபுணரிடம் பேசலாம், உதவி கேட்பது என்பது பலவீனத்தின் அறிகுறி அல்ல என்று அவர்களுக்குத் தெரியவேண்டும்

  9     சுற்றுச்சூழல் மாற்றம் – இயன்றபோதெல்லாம், மனநலப் பிரச்னை கொண்டவரும் அவரைக் கவனித்துக்கொள்கிறவரும் சிறிதுநேரம் எங்கேனும் சென்று திரும்பலாம், அது அவர்களுக்குப் பலன் தரும்.  இயலுகிறபோது, ஒரு மணி நேரம் இடைவெளி விட்டால் போதும், கவனித்துக்கொள்கிறவர் ஒரு நண்பரைச் சந்திக்கலாம், சிறிதுதூரம் நடந்து திரும்பலாம், அல்லது, இன்னொரு சூழலில் வெறுமனே அமர்ந்து மனத்தைத் தளர்வாக்கிக்கொள்ளலாம்

  10   நிறைய தூக்கம் – நாள்முழுக்கச் செய்யமுடியாத வேலைகளை மாலை நேரங்களில் செய்யலாம், ஆனால், அப்படி ஒவ்வொரு மாலையும், இரவும் நெடுநேரம் விழித்திருந்தால், தீவிரமான களைப்பு ஏற்படக்கூடும்.

குறிப்பாக, மனநலப் பிரச்னை கொண்டோரைக் கவனித்துக்கொள்கிறவர்களுக்குக் குற்றவுணர்ச்சி ஏதேனும் இருந்தால், அவர்கள் தன்னைத்தானே கவனித்துக்கொள்வது ஒன்றும் தனிப்பட்ட சுகத்துக்காக அல்ல என்பதைப் புரிந்துகொள்வது முக்கியம், உண்மையில், அவர்கள் ஏற்றுக்கொண்டிருக்கும் பொறுப்புக்கு இது மிகவும் அவசியமானது – அவர்கள் தங்களுக்கு உதவிக்கொள்வதன்மூலம், பிறருக்கு உதவுகிறார்கள். மனநலப் பிரச்னை கொண்டோரைக் கவனித்துக்கொள்கிறவர்கள் நடுத்தரக் காலகட்டம் தொடங்கி நீண்ட காலகட்டம்வரையில் தங்களுடைய கவனித்துக்கொள்ளும் பணியைத் தொடர்ந்து செய்யவேண்டுமென்றால், ' கவனித்துக்கொள்கிறவரின் எரிச்சல்’ஐத் தடுக்கவேண்டுமென்றால், அவர்கள் தங்களைத் தாங்களே கவனித்துக்கொள்ளவேண்டும்.

டாக்டர் அனில் படீல், 'கேரர்ஸ் வேர்ல்ட்வைட்' அமைப்பின் நிறுவனர், செயல் இயக்குநர். கேரர்ஸ் வேர்ல்ட்வைட் அமைப்பு, சம்பளம் பெறாத, குடும்பம் சார்ந்த கவனித்துக்கொள்வோரின் பிரச்னைகளைச் சுட்டிக்காட்டுகிறது, கையாள்கிறது. 2012ல் நிறுவப்பட்ட இந்த அமைப்பு UKல் பதிவுசெய்யப்பட்டது, வளரும் நாடுகளில் உள்ள கவனித்துக்கொள்வோருடன்மட்டும் பணியாற்றுகிறது. டாக்டர் படீல் இந்தப் பத்தியை ருத் படீலுடன் இணைந்து எழுதுகிறார். ருத் படீல் கேரர்ஸ் வேர்ல்ட்வைடுடன் தன்னார்வலராகப் பணியாற்றுகிறவர். மேலும் விவரங்களுக்கு நீங்கள் கேரர்ஸ் வேர்ல்ட்வைட் இணையத்தளத்துக்குச் செல்லலாம்.நீங்கள் ஆசிரியர்களுக்கு மின்னஞ்சல் எழுத விரும்பினால், இந்த முகவரியைப் பயன்படுத்தலாம்: columns@whiteswanfoundation.org

Related Stories

No stories found.
logo
வொய்ட் ஸ்வான் ஃபவுண்டேஷன்
tamil.whiteswanfoundation.org