கவனித்துக்கொள்ளுதல்

டிமென்ஷியாவால் பாதிக்கப்பட்டவர்களைக் கவனித்துக்கொள்கிறவர்கள்

டிமென்ஷியா, அதனோடு தொடர்புடைய நிலைகள் ஒரு குடும்பத்தை நேரடியாகவும் மறைமுகமாகவும் கடுமையாகப் பாதிக்கக்கூடும்

வொய்ட் ஸ்வான் ஃபவுண்டேஷன்

பலவிதமான நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளவர்களைக் கவனித்துக்கொள்கிறவர்கள் எல்லாரும் சந்திக்கும் பிரச்னைகளைப்பற்றி முந்தைய கட்டுரைகளில் எழுதியிருந்தேன். இந்தமுறை, ஒரு குறிப்பிட்ட பிரச்னையால் பாதிக்கப்பட்ட தங்கள் அன்புக்குரியவர்களைக் கவனித்துக்கொள்வோரைப்பற்றிப் பேசவுள்ளேன். அந்தப் பிரச்னைடிமென்ஷியா.

டிமென்ஷியா, அதனோடு தொடர்புடைய நிலைகள் ஒரு குடும்பத்தை நேரடியாகவும் மறைமுகமாகவும் கடுமையாகப் பாதிக்கக்கூடும். டிமென்ஷியா பிரச்னை உள்ளவர்மட்டும் அதனால் பாதிக்கப்படுவதில்லை, அந்தக் குடும்பம் மொத்தமும் பாதிக்கப்படுகிறது. குறிப்பாக, மனநலம் பாதிக்கப்பட்டவரைக் கவனித்துக்கொள்ளும் பொறுப்பு அவருடைய குடும்பத்தின் தோளில் இறங்கும்போது, இது மிகவும் வருந்தக்கூடிய நிலைமையாகிறது. இந்தியாவில் இதனை அதிகம் காணலாம். இந்தப் புதிய மாற்றங்களால் ஒரு குடும்பத்தின் நிதி விஷயங்களில், உணர்வு சார்ந்த விஷயங்களில் மற்றும் உடலளவிலும் பெரிய சுமை ஏற்படுகிறது.

WHO (உலக சுகாதார அமைப்பு) போன்ற சர்வதேச அமைப்புகள் வெளியிடும் அறிக்கைகள் 'டிமென்ஷியா பிரச்னையானது ஆசியாவில் வேகமாக அதிகரித்துவருகிறது, அதன்மூலம், இவர்களைக் கவனித்துக்கொள்வோரின் எண்ணிக்கை பெருகுகிறது, இவர்கள் பெரும்பாலும் குடும்ப உறுப்பினர்களாக உள்ளார்கள், இவர்களுக்கு இது பெரிய சுமையாகிறது' என்று சொல்லுகின்றன. இதைவைத்துப் பார்க்கும்போது, இந்தப் பிரச்னையின் அளவு குறையப்போவதில்லை, அதிகரிக்கப்போகிறது, ஆகவே, டிமென்ஷியா பிரச்னை கொண்டோரைக் கவனித்துக்கொள்வோரைக் கவனித்துக்கொள்வது மிக முக்கியமாகிறது.

இந்தியாவில் டிமென்ஷியாவால் பாதிக்கப்படுகிறவர்களின் எண்ணிக்கை மிக அதிகம். இப்போது இது 37 லட்சமாக உள்ளது. 2030க்குள் இது 70 லட்சமாக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், இதனைச் சூழ்ந்துள்ள பிரச்னைகள் பெரும்பாலும் வெளிப்படையாகப் பேசப்படுவதில்லை. இதனால் பாதிக்கப்பட்டுள்ள குடும்பங்களுக்கு எந்த நிதி ஆதரவும் கிடைப்பதில்லை. இவர்களுக்கு உணர்வுநிலையிலான ஆதரவும் மிகக்குறைவாகவே கிடைக்கிறது. பல நேரங்களில், பாதிக்கப்பட்டவர்களைக் கவனித்துக்கொள்கிறவர்கள் தனித்துவிடப்படுகிறார்கள், அவர்கள் வேலையை விட்டுவிட்டு இதைச் செய்யவேண்டிய சூழ்நிலையும் ஏற்படுகிறது.

இப்படிக் கவனித்துக்கொள்பவராக இருப்பதன் உணர்வுத் தாக்கங்களும் குறிப்பிடத்தக்கவை. தங்கள் அன்புக்குரியவரை டிமென்ஷியாவிடம் இழக்கிற வேதனை ஒருபக்கம், 'அதிகாரப்பூர்வமற்ற கவனிப்பை', நிதி மற்றும் உணர்வுநிலை ஆதரவை வழங்கும் சுமை இன்னொருபக்கம். இவை அனைத்தையும் அவர்கள் சமாளிக்கவேண்டியுள்ளது. இதனால், கவனித்துக்கொள்வோர் மத்தியில் மனச்சோர்வு, பதற்றம் மற்றும் பிற உளவியல் பிரச்னைகள் ஏற்படுகின்றன.

அதேசமயம், இந்தியக் கலாசாரத்தில் குடும்ப உறுப்பினர்கள், முதியவர்களைப் பார்த்துக்கொள்வது ஒரு மதிப்புக்குரிய, நேர்விதமான பொறுப்பாகப் பார்க்கப்படுகிறது. அதனால் பல எதிர்மறைத் தாக்கங்கள் இருந்தாலும், இவர்கள் தங்கள் அன்புக்குரியவர்களைக் கவனமாகப் பார்த்துக்கொள்கிறார்கள். ஆகவே, குடும்ப உறுப்பினர்களைக் கவனித்துக்கொள்கிறவர்களுக்கு நாம் ஆதரவளிப்பதும், அவர்களுடைய முக்கியமான பொறுப்பை முன்னெடுத்துச்செல்வதும் முக்கியம்.

இந்தக் கட்டுரையைப் படிக்கிறவர்களில் சிலருடைய அன்புக்குரியவர்கள் டிமென்ஷியாவால் பாதிக்கப்பட்டிருக்கக்கூடும். அவர்களை இவர்கள் கவனித்துக்கொண்டிருக்கக்கூடும். அப்படிப்பட்ட வாசகர்களுக்கு நான் சில ஆலோசனைகளை வழங்க விரும்புகிறேன். அவற்றைப் பின்பற்றி அவர்கள் தங்களுடைய பொறுப்பைச் சிறப்பாகச் செய்யலாம். இவர்கள் தங்களுடைய முக்கியக் கடமையாக நினைப்பது, தங்களுடைய அன்புக்குரியவர்களைக் கவனித்துக்கொள்வதைத்தான். அதேசமயம், அவர்கள் தங்களுடைய சொந்த ஆரோக்கியம், நலனைக் கவனித்துவருவது மிகவும் முக்கியம். டிமென்ஷியா பிரச்னை கொண்ட ஒருவரைக் கவனித்துக்கொள்கிறவருக்கு ஏற்படக்கூடிய உணர்வு மற்றும் உடல்சார்ந்த தாக்கங்களை ஆரம்பத்திலேயே கவனித்துச் சரிசெய்யாவிட்டால், அவை பெரிய சேதத்தைக் கொண்டுவரக்கூடும்.

மனநலம் பாதிக்கப்பட்டவர்களைக் கவனித்துக்கொள்கிறவர்கள் தங்களையும் கவனித்துக்கொள்வதை உறுதிசெய்யச் சில எதார்த்தமான அறிவுரைகள், வியூகங்கள் இங்கே உள்ளன.

தங்களைக் கவனித்துக்கொள்ளுதல்

இவர்கள் இயன்றவரை ஆரோக்கியமான, சமநிலையான ஓர் உணவை உண்ணவேண்டும், சுறுசுறுப்பாக இருக்கவேண்டும், போதுமான அளவு உறங்கவேண்டும். இவை சரியாகக் கிடைக்காவிட்டால், அவர்களுடைய உடல் விரைவில் களைத்துவிடும், இதனால், இவர்கள் தங்கள் அன்புக்குரியவர்களைக் கவனித்துக்கொள்வது மேலும் சிரமமாகிவிடும்.

தங்கள் உணர்வுகளைக் கவனித்துச் சரிசெய்தல்

உடல் ஆரோக்கியம்போலவே, உணர்வு நலனையும் கவனித்துக்கொள்வது முக்கியம். மனநலம் பாதிக்கப்பட்டவர்களைக் கவனித்துக்கொள்கிறவர்கள் சோகமாக, அழுத்தமாக, கோபமாக, விரக்தியாக, தனிமையாக, பதற்றமாக, குற்றவுணர்வாக உணர்வது சகஜம்தான். இதில் சில உணர்ச்சிகள் அவர்களைப் பாதிக்கக்கூடும். இந்த உணர்ச்சிகள் எதனால் தூண்டப்படுகின்றன என்பதை இவர்கள் அடையாளம் காணவேண்டும், தங்கள் குடும்ப உறுப்பினர்கள், பாதிக்கப்பட்டவரைக் கவனித்துக்கொள்கிற மற்றவர்கள், அல்லது தங்களுடைய மருத்துவரிடம் பேசவேண்டும், இந்த உணர்வுகளில் சிலவற்றை எப்படிக் குறைப்பது என்று அவர்களுடன் பேசி உதவி பெறவேண்டும்.

இடைவேளை விடுதல்

மனநலம் பாதிக்கப்பட்டவர்களைக் கவனித்துக்கொள்கிறவர்கள் தங்களுக்காக நேரம் ஒதுக்குவது முக்கியம், இந்தக் கவனித்துக்கொள்ளும் பணிக்கு அவ்வப்போது இடைவேளை விடுவது முக்கியம். டிமென்ஷியா பிரச்னை கொண்ட ஒருவரைக் கவனித்துக்கொள்ளுதல் மிகவும் களைப்பைத்தரும் ஒரு விஷயமாக இருக்கலாம். ஆகவே, இவர்கள் தங்களுக்காகச் சில மணி நேரங்களை ஒதுக்கி மனத்தைத் தளர்வாக்கவேண்டும், தங்களுடைய பிரச்னைகளிலிருந்து குணமடையவேண்டும், ஓய்வெடுக்கவேண்டும், இது இவர்களது ஆற்றலை மீட்டுத்தரும்.

நிதிச் சுமையைச் சமாளித்தல்

கவனித்துக்கொள்கிறவர்களுடைய மிகப்பெரிய கவலைகளில் ஒன்று, கவனித்துக்கொள்வதால் ஏற்படும் நிதிச்சுமை. இது குறிப்பிடத்தக்க அழுத்தத்தை உண்டாக்கக்கூடும். மனநலம் பாதிக்கப்பட்ட ஒருவரைக் கவனித்துக்கொள்கிறவர்களுக்குப் பணம் சார்ந்த கவலைகள் இருந்தால், அவர்கள் தங்களுடைய குடும்பத்தினர் மற்றும் நண்பர்களிடம் பேசத் தயங்கக்கூடாது.

நிறைவாக, தாங்கள் தங்களால் இயன்ற அளவு சிறப்பாகச் செயல்படுகிறோம் என்பதை அவர்கள் நினைவில் வைத்திருக்கவேண்டும்!

இந்த எதார்த்தமான அறிவுரையை நினைவில் வைத்துக்கொண்டால், மனநலம் பாதிக்கப்பட்டவர்களைக் கவனித்துக்கொள்கிறவர்கள் தங்களையும் கவனித்துக்கொள்வதன் முக்கியத்துவத்தை உணர்வார்கள், அந்தப் பணியை இன்னும் சிறப்பாகச் செய்வதற்கான உத்திகளைக் கண்டறிவார்கள்.

டாக்டர் அனில் படீல், 'கேரர்ஸ் வேர்ல்ட்வைட்' அமைப்பின் நிறுவனர், செயல் இயக்குநர். கேரர்ஸ் வேர்ல்ட்வைட் அமைப்பு, சம்பளம் பெறாத, குடும்பம் சார்ந்த கவனித்துக்கொள்வோரின் பிரச்னைகளைச் சுட்டிக்காட்டுகிறது, கையாள்கிறது. 2012ல் நிறுவப்பட்ட இந்த அமைப்பு UKல் பதிவுசெய்யப்பட்டது, வளரும் நாடுகளில் உள்ள கவனித்துக்கொள்வோருடன்மட்டும் பணியாற்றுகிறது. டாக்டர் படீல் இந்தப் பத்தியை ருத் படீலுடன் இணைந்து எழுதுகிறார். ருத் படீல் கேரர்ஸ் வேர்ல்ட்வைடுடன் தன்னார்வலராகப் பணியாற்றுகிறவர். மேலும் விவரங்களுக்கு நீங்கள் கேரர்ஸ் வேர்ல்ட்வைட் இணையத்தளத்துக்குச் செல்லலாம்.நீங்கள் ஆசிரியர்களுக்கு மின்னஞ்சல் எழுத விரும்பினால், இந்த முகவரியைப் பயன்படுத்தலாம்: columns@whiteswanfoundation.org

வொய்ட் ஸ்வான் ஃபவுண்டேஷன்
tamil.whiteswanfoundation.org