கவனித்துக்கொள்ளுதல்

வாழ்வின் கடைசிக்கட்டத்தில் உள்ளோரைக் கவனித்துக்கொள்ளுதல்

வாழ்வின் கடைசிக்கட்டத்தில் உள்ளவர்களைக் கவனித்துக்கொள்ளும்போது, அவர்களுடைய கண்ணியத்தைப் பாதுகாத்து அவர்கள் தங்கள் வாழ்வின் கடைசி நாள்களை அமைதியாக வாழ்வதற்கு உதவவேண்டும்

வொய்ட் ஸ்வான் ஃபவுண்டேஷன்

மகேஷின் தந்தைக்குப் புற்று நோய், கடந்த பல ஆண்டுகளாகவே அவரை மகேஷ் தான் கவனித்துக்கொண்டிருந்தார். ஒரு நாள் ‘உங்கள் தந்தையின் புற்றுநோய் இறுதிக்கட்டத்தை எட்டிவிட்டது’ என்றார் மருத்துவர். மகேஷ் அதிர்ந்து போனார். இப்படி ஒரு நிலை என்றைக்காவது வரும் என்பது மகேஷுக்குத் தெரியும் அதே சமயம் அதைக் கண்ணெதிரே பார்க்கும்போது அவரால் உண்மையை தாங்கிக்கொள்ளவே இயலவில்லை. என்ன செய்வது என்று புரியாமல் தவித்தார்.

இது ஒரு கற்பனைக் கதை, நிஜ வாழ்க்கையில் இந்தப் பிரச்னை எப்படி இருக்கும் என்பதைப் புரிய வைப்பதற்காக உருவாக்கப்பட்டது.

ஏதேனும் உடல் அல்லது மன நோயால் பாதிக்கப்பட்டவர்களைக் கவனித்துக்கொள்வதே மிகப்பெரிய பொறுப்பு. ஆனால் அப்படிக் கவனித்துக்கொள்ளப்படுகிறவருடைய பிரச்னை மிகத் தீவிரமாகிவிட்டது, அவர் விரைவில் மரணமடைந்துவிடக்கூடும் என்று தெரிய வரும்போது அது இன்னும் பெரிய சுமையாகி விடுகிறது. உதாரணமாக புற்றுநோய், AIDS, அல்ஸைமர்ஸ், வயது சார்ந்த சிக்கல்கள் போன்றவற்றால் அவதிப்படுகிறவர்கள் தங்கள் வாழ்வில் இறுதிக்கட்டத்தில் இருப்பார்கள். அவர்களைக் கவனித்துக்கொள்கிறவர்களுக்கு இது மிகப் பெரிய மன அழுத்தத்தை உண்டாகும். ஒருவருடைய உயிருக்கு அபாயத்தை உண்டு பண்ணக்கூடிய பிரச்னை அவருக்கு வந்திருக்கிறது என்பதைத் தெரிந்து கொள்ளும் அவரது குடும்ப உறுப்பினர்கள் மிகப்பெரிய வலியை அனுபவிக்கிறார்கள். மருத்துவர்கள் இந்த விஷயத்தைத் தெரிவித்த உடன் அவர்கள் பலவிதமான உணர்வுகளுக்கு ஆட்படுகிறார்கள், ஒவ்வொருவரும், இதனை வெவ்வேறு விதமாக அணுகுகிறார்கள். சிலர் ஆரம்பத்தில் உண்மையை மறுக்கிறார்கள், வெவ்வேறு மருத்துவ முறைகளை நாடி எப்படியாவது அவரைக் குணமாக்கிவிடமுடியுமா என்று துடிக்கிறார்கள், ஒரு கட்டத்தில் இதுதான் யதார்த்தம் என்று புரிந்து கொண்டு அமைதி அடைகிறார்கள். நடக்கப்போவதைப் புரிந்து கொண்டு ஏற்றுக்கொள்கிறார்கள்.

இந்த நிலையில் பாதிக்கப்பட்டவருக்கு என்னென்ன மருந்துகளைத் தருவது, என்ன மாதிரியான சிகிச்சையைத் தருவது அவர்கள் வாழ்க்கையின் இறுதிக்கட்டத்தில் இருக்கிறார்கள் என்பதை ஏற்றுக்கொண்டு எந்தமாதிரியான கவணிப்பை அவர்களுக்கு வழங்குவது, அவர்கள் எவ்வளவு நாள் உயிரோடு இருப்பார்கள், இந்த விவரத்தை அவர்களிடம் எப்படிச் சொல்வது இப்படிப் பல கேள்விகள் பாதிக்கப்பட்டவர்களைப் பார்த்துக்கொள்கிறவர்களுக்கு எழக்கூடும். கொஞ்சம் கொஞ்சமாக பாதிக்கப்பட்டவருடைய உடல்நிலை மோசமாகிக்கொண்டே போகும். அந்தக் கட்டத்தில் அவர்கள் முற்றிலும் தங்க்களைக் கவனித்துக்கொண்டிருப்பவர்களைச் சார்ந்து வாழத்தொடங்கி விடுவார்கள். இது அவர்களைக் கவனித்துக்கொண்டிருப்பவர்களுக்கு மிகுந்த மன அழுத்தத்தை உண்டாக்கக்கூடும். காரணம் அவர்கள் தங்கள் தினசரி வேலைகளைக் செய்து கொண்டேதான், இவர்களையும் கவனிக்கவேண்டியிருக்கும். கொஞ்சம்கொஞ்சமாக அவர்கள் இவர்களைச் சார்ந்திருக்கும் தன்மை அதிகமாக அதிகமாக, அது இவர்களுக்கு அழுத்தம் தரும். ஆகவே இந்தக் கட்டத்தில் பாதிக்கப்பட்டவரைக் கவனித்துக்கொள்கிறவர்களுக்கு குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நண்பர்களுடைய உதவி அதிகம் தேவை.

பாதிக்கப்பட்டவர்களைக் கவனித்துக்கொள்ளுதல்

வாழ்வின் கடைசிக்கட்டத்தில் உள்ளவர்களைக் கவனித்துக்கொள்ளுதல் மிகவும் சிரமமான ஒரு பொறுப்புதான். அதே சமயம் சில குறிப்பிட்ட உத்திகளைப் பயன்படுத்தினால், நிலைமையை ஓரளவு சமாளிக்கலாம்.

 • நிலைமை கட்டுக்குள் உள்ள உணர்வை உருவாக்குதல்: தாங்கள் வாழ்வின் இறுதிக்கட்டத்தில் இருக்கிறோம் என்கிற உண்மை தெரியவரும்போது, வெவ்வேறு நபர்கள் வெவ்வேறு விதமாக நடந்து கொள்வார்கள். அவர்கள் சோகமாக உணர்வது இயல்புதான். அது போன்ற நேரங்களில் அவர்களைக் கவனித்துக்கொள்கிறவர்கள் நிலைமை கட்டுக்குள் உள்ளது என்பது போன்ற ஓர் எண்ணத்தை உருவாக்கவேண்டும். அவர்களுக்கு உணர்வு நிலையிலான ஆதரவை அளிக்கவேண்டும். பாதிக்கப்பட்டுள்ளவருடைய குடும்ப உறுப்பினர்கள் அவருடன் அதிக நேரத்தைச் செலவிடவேண்டும்.

 • முன்கூட்டியே திட்டமிடுதல்: வாழ்வின் கடைசிக்கட்டத்தில் உள்ளவர்களைப்பற்றிய தீர்மானங்களை எவ்வளவு சீக்கிரம் எடுக்கவேண்டுமோ அவ்வளவு சீக்கிரம் எடுக்கவேண்டும் என நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள், அதாவது பாதிக்கப்பட்டுள்ளவர் தானே தீர்மானங்களை எடுக்கின்ற நிலையில் உள்ளபோதே இவற்றைப்பற்றி விவாதித்துவிடவேண்டும். இதன்மூலம் அவர்கள் குடும்பத்தினர் இந்தச் சூழ்நிலையை ஓரளவு கையாள இயலும். இது பற்றி திட்டமிடாமலே இருந்தவிட்டால், நிஜமாகவே அவர் வாழ்வின் கடைசிக்கட்டத்திற்கு வந்துவிட்ட பிறகு, அவரைக் கவனித்துக்கொண்டிருப்பவர் நிலைமையை எப்படிச் சமாளிப்பது என்று தெரியாமல் திணறக்கூடும்.

 • தொடர்ந்து அவர்களுடன் பேசி வருதல்: வாழ்வின் இறுதிக்கட்டத்தில் உள்ளவர்களைக் கவனித்துக்கொள்ளும்போது முக்கியமாகச் செய்யவேண்டிய ஒரு விஷயம் அவர்களோடு தொடர்ந்து வெளிப்படையாகவும் நேர்மையாகவும் பேசி வருதல், அவர்களுடைய வாழ்க்கையைப்பற்றியும் அவர்களுடைய குடும்பத்தைப்பற்றியும் அடிக்கடி பேசலாம். மற்ற குடும்ப உறுப்பினர்களுடன் இந்த விஷயத்தை விவாதிக்கும்போது, அதில் பாதிக்கப்பட்டவரையும் சேர்த்துக்கொள்ளலாம். தன்னுடைய ஆழமான உணர்வுகளையும் சிந்தனைகளையும் எண்ணங்களையும் உணர்வுகளையும் பகிர்ந்துகொள்ளுமாறு அவரிடம் கேட்கலாம், அவருக்கு ஏதாவது ஆசை இருக்கிறதா என்று கேட்டு அதை நிறைவேற்றலாம். ஒருவேளை பாதிக்கப்பட்டவருக்கு தீவிர ஞாபகமறதி இருந்தால் அவரைக் கவனித்துக்கொள்கிறவருக்கு இந்த அளவு அவருடன் உரையாட முடியாமல் போகலாம், ஆகவே அவர்கள் பேசும் நிலையில் உள்ளபோதே இந்த உரையாடல்களை நிகழ்த்திவிடுவது நல்லது.

 • வீட்டில் ஓர் ஒழுங்கு மற்றும் இயல்புத்தன்மையைக் கொண்டிருத்தல்: பாதிக்கப்பட்டவருடைய தினசரி நடவடிக்கையில் இயன்றவரை ஓர் ஒழுங்கைக் கொண்டு வரவேண்டும், இதன்மூலம் அவர்கள் தினமும் என்ன செய்யவேண்டும் என்ற ஓர் எதிர்பார்ப்புடன் இருப்பார்கள், அடுத்தடுத்து ஏதாவது செய்துகொண்டே இருப்பதன் மூலம் ஓரளவு இயல்பாக உணர்வார்கள். எங்காவது விழாக்கள் நடந்த்தால் அதற்கு அவர்களை அழைத்துச் செல்லவேண்டும், பிற சமூக உறுப்பினர்களை அவர்கள் சந்திக்கட்டும். அவர்களுடன் இருக்கும் ஒவ்வொரு கணத்தையும் கொண்டாடவேண்டும். வீட்டில் இயன்றவரை ஓர் இயல்பான சூழலைக் கொண்டுவரவேண்டும், இதன்மூலம் தாங்கள் கண்ணியமாக நடத்தப்படுகிறோம் என அவர்கள் உணர்வார்கள், அவர்களுடைய சுய மதிப்பு எண்ணம் பெருகும்.

 • சட்ட மற்றும் நிதி விவகாரங்களைக் கையாளுதல்: பாதிக்கப்பட்டவர் ஓரளவு சமநிலையில் இருக்கும்போதே சட்டபூர்வமான மற்றும் நிதி தொடர்பான எல்லா விவகாரங்களையும் தீர்மானித்து விடுமாறு அவர்களை ஊக்கப்படுத்தவேண்டும், உதாரணமாக உயில் எழுதுதல், சொத்துகள், பணம் மற்றும் தங்களுக்குப் பிறகு யாருக்குச் சேரவேண்டும் என்பதைத் தீர்மானித்தல் போன்றவை. இப்படிச் செய்வதன் மூலம் பாதிக்கப்பட்டவர் தங்கள் விருப்பப்படி எல்லாவற்றையும் தீர்மானித்துவிட்டோம் என்கிற திருப்தி அடைவார், பாதிக்கப்பட்டவரைக் கவனித்துக்கொள்கிறவருக்கும் பின்னால் எந்த சிக்கலும் வராது.

 • பிறருடைய உதவியை நாடுதல்: பாதிக்கப்பட்டவருடைய உடல்நிலை மோசமாக மோசமாக, அவர்கள் மேலும் மேலும் தங்களைக் கவனித்துக்கொள்கிறவர்களைச் சார்ந்திருக்கத் தொடங்குவார்கள். உதாரணமாக குளித்தால் உடை அணிந்து கொள்ளுதல், சாப்பிடுதல், கழிப்பறை செல்லுதல், தலைவாருதல் போன்றவை அனைத்தையும் அவரைக் கவனித்துக்கொண்டிருக்கிறவர்கள்தான் செய்யவேண்டியிருக்கும். இந்தச் சூழ்நிலைக்கு அவர்கள் தயாராகிக்கொள்ளவேண்டும். இதை அனைத்தையும் அவர்கள் சமாளிக்க முடியவில்லை என்று உணர்ந்தால் குடும்ப உறுப்பினர்களிடம் உதவி கேட்கவேண்டும், அல்லது முழு நேர நர்ஸ் அல்லது கவனித்துக்கொள்ளும் நபர் ஒருவரை வேலைக்குச் சேர்க்கலாம்.

 • அவருடைய ஆன்மிகத் தேவைகளை நிறைவேற்றுதல்: ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு விதமான நம்பிக்கை இருக்கும். சிலர் மதம் சார்ந்த விஷயங்களை மிகவும் முக்கியமானதாகக் கருதுவார்கள், தங்களுடைய வாழ்வு மற்றும் மரணம் இரண்டுக்கும் அதுவே அர்த்தம் தருவதாக நம்புவார்கள். அவர்களைக் கவனித்துக்கொள்கிறவர்கள் இதை உணர்ந்து அதற்கேற்ப நடந்து கொள்ளவேண்டும். உதாரணமாக, வாழ்வின் இறுதிக்கட்டத்தில் இருக்கிற ஒருவர் தங்களுக்காக ஓர் ஆன்மீகப் பெரியவர் பிரார்த்தனை செய்யவேண்டும் என்று விரும்பலாம். பக்திப் பாடல்கள் அல்லது ஸ்லோகங்களைக் கேட்க விரும்பலாம் அல்ல்து புனித நூல்களிலிருந்து சில பகுதிகள் தங்களுக்கு வாசித்துக் காட்டவேண்டும் என்று விரும்பலாம். இது போன்ற உதவிகளை பார்த்துக்கொள்கிறவர்கள் புரிந்து கொண்டு நிறைவேற்றுவது அவசியம்.

 • வலிநிவாரணி சிகிச்சையை தேர்ந்தெடுத்தல்: பாதிக்கப்பட்டவருக்கு வழங்கப்படும் வழக்கமான சிகிச்சையுடன் வலிநிவாரணி சிகிச்சை எனப்படும் விசேஷ மருத்துவ சிகிச்சையையும் வழங்குகிற நிபுணர்கள் இருக்கிறார்கள். இவர்கள் ஒரு குழுவாக செயல்பட்டு, வலி மற்றும் மன அழுத்த அறிகுறிகளை சரிசெய்வதில் கவனம் செலுத்துவார்கள், பாதிக்கப்பட்டவர், அவர் குடும்ப உறுப்பினர்களுக்கு ஏற்படக்கூடிய அழுத்தத்தை சரிசெய்வதில் கவனம் செலுத்துவார்கள். வலிநிவாரணி சிகிச்சை என்பது பாதிக்கப்பட்டவர்களைப் பார்த்துக்கொள்ளுதலின் உளவியல்- சமூகவியல் மற்றும் ஆன்மிக அம்சங்களை ஒருங்கிணைக்கிறது. இந்தச் சிகிச்சையின் நோக்கம் பாதிக்கப்பட்டவர், அவரது குடும்பத்தினரின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துதல் ஆகியவை ஆகும்.

ஒருவருடைய உயிருக்கு ஆபத்தாக அமையக்கூடிய மருத்துவ சூழ்நிலைகள் அல்லது நோய்கள்

ஒருவருடைய உயிருக்கு ஆபத்தாக அமையக்கூடிய மருத்துவ சூழ்நிலைகள் அல்லது நோய்கள் பின்வருமாறு:

 • தீவிர அறிவாற்றல் மற்றும் செயல்பாட்டு பாதிப்பு கொண்ட நாள்பட்ட நரம்பு சார்ந்த பிரச்னைகள், பாதிக்கப்பட்டவருடைய நிலை முன்னேற வாய்ப்பில்லாத பிரச்னைகள் (டிமென்சியா, அல்ஸைமர்ஸ்).
 • முதுமை அல்லது தீவிர பலவீனமாக்கும் நோய். இது கொஞ்சம் கொஞ்சமாக அவர்களுடைய உறுப்புகளைச் செயலிழக்கச் செய்கிறது.
 • முன்னேறி வரும் புற்றுநோய் அதற்கு சிகிச்சை பலனளிக்காத போது அல்லது பாதிக்கப்பட்டவர் சிகிச்சையை மறுத்துவிட்ட போது.
 • அறுவைச் சிகிச்சைக்கு பிந்தைய சிக்கல்கள், அவற்றைக் குணப்படுத்த இயலாத போது.
 • மருத்துவரீதியிலோ அறுவைச்சிகிச்சைமூலமாகவோ சிகிச்சை வழங்கப்பட்ட, நுரையீரல் சார்ந்த, இதயம் சார்ந்த, சிறுநீரகம் சார்ந்த, அல்லது கல்லீரல் சார்ந்த இறுதிநிலை நோய்கள்.
 • உறுப்புகளை செயலிழக்கச் செய்யும் தீவிர நோய்கள். (பக்கவாதம் போன்றவை) குறிப்பிடத்தக்க காலகட்டத்திற்கு சிகிச்சை தந்த பிறகும் பாதிக்கப்பட்டவர்களுடைய நிலையில் முன்னேற்றம் இல்லை என்றால்.
 • அதிர்ச்சி தரும் மூளைக் காயம், மூளைக்குள் ரத்தக் கசிவு போன்றவற்றால் ஏற்படும் கோமா நிலை (மூளை மரணம் ஏற்படாத போது).
 • பாதிக்கப்பட்டவர் உயிர்பிழைக்கும் வாய்ப்பு இல்லாத பிற மருத்துவ நிலைகள்.
வொய்ட் ஸ்வான் ஃபவுண்டேஷன்
tamil.whiteswanfoundation.org