பாதிக்கப்பட்டோரைக் கவனித்துக்கொள்ளும் குழந்தைகள்

இந்தியாவில் உடல்நலம் அல்லது மனநலம் பாதிக்கப்பட்டோரைப் பார்த்துக்கொள்கிற பலர், குழந்தைகள்.

இந்தியாவில் உடல்நலம் அல்லது மனநலம் பாதிக்கப்பட்டோரைப் பார்த்துக்கொள்கிற பலர், குழந்தைகள். மூடிய கதவுகளுக்குப்பின்னால் அவர்கள் ஏற்றுள்ள பொறுப்பை நம்மில் பலர் உணர்வதுகூட இல்லை. பெரும்பாலும் இந்தக் குழந்தைகளின் தந்தையோ தாயோ மனநலம் பாதிக்கப்பட்டிருப்பார்கள், அல்லது, அவர்களுக்கு உடல்நலம் சரியில்லாமல்போயிருக்கும், அவர்களைப் பார்த்துக்கொள்ள வேறு யாரும் இருக்கமாட்டார்கள், ஆகவே, இவர்கள் இந்த நிலைக்குத் தள்ளப்பட்டிருப்பார்கள். இந்தக் குழந்தைகளின் தோளில், நம்ப இயலாத அளவு சுமை வைக்கப்படுகிறது. இதனால், இவர்கள் ஒரே இரவில் பெரியவர்களாகிவிடுகிறார்கள். இவர்களுக்கு ஆதரவு தேவை, காரணம், இன்னொருவரைக் கவனித்துக்கொள்வது உணர்வுரீதியில் களைப்புத்தருவதுமட்டுமல்ல, அது ஒரு குழந்தையிடம் உடலளவில், சமூக அளவில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை உண்டாக்கலாம், அவர்களுடைய கல்வியையும் பாதிக்கலாம்.

பாதிக்கப்பட்டோரைக் கவனித்துக்கொள்ளும் குழந்தைகளின் சிரமமான வாழ்க்கை

ப்ரியா*வின் தந்தை ஒரு விபத்தில் சிக்கிக்கொண்டார், படுத்த படுக்கையாகிவிட்டார். அவளுடைய தாய், அதே இரவில் கிளம்பிச்சென்றுவிட்டார். ஆகவே, தன் தந்தையைப் பார்த்துக்கொள்ளவேண்டிய பொறுப்பு ப்ரியாவிடம் வந்தது. அவளே தன் தந்தையைக் கவனித்துக்கொண்டாள், அவருக்காகச் சமைத்தாள், அவரைச் சுத்தப்படுத்தினாள். அவர்கள் குடும்பத்துக்கு எந்த வருமானமும் இல்லை, ஆகவே, அவர்கள் விரைவில் ஆதரவற்றவர்களானார்கள். ப்ரியாவின் சமூக வாழ்க்கை பறிபோனது, அவள் தன்னுடைய படிப்பையும் நிறுத்தவேண்டியிருந்தது. அவள் மனத்தில் அழுத்தம் அதிகரித்தது, அடிக்கடி பிறர்மீது கோபப்பட்டாள், வருத்தத்தில் ஆழ்ந்தாள், எப்படியாவது இங்கிருந்து தப்பி ஓடிவிடலாமா என்று யோசித்தாள். நல்லவேளையாக, உள்ளூரிலிருந்த ஓர் அரசுச்சார்பற்ற நிறுவனம் இந்தச் சூழ்நிலையைப்பற்றிக் கேள்விப்பட்டது. அவர்களுடைய முயற்சியினால், ப்ரியாவுக்கும் அவளுடைய தந்தைக்கும் வேண்டிய ஆதரவு கிடைத்தது. இப்போது, அவள் மீண்டும் பள்ளிக்குச் செல்கிறாள், பள்ளி செல்வதற்கு முன்பும் பின்பும் தன் தந்தையைக் கவனித்துக்கொள்கிறாள். அவர்களுடைய வீட்டின் பின்பகுதியில் ஒரு கழிப்பறையைக் கட்டுவதற்கான பணம் திரட்டப்பட்டது. பெண் ஊழியர்கள் அடிக்கடி ப்ரியாவைச் சந்தித்து அவளுக்கு உணர்வுநிலை ஆதரவும் அறிவுரையும் வழங்கினார்கள். இப்போதும் ப்ரியாவின் வாழ்க்கை எளிதானதாக இல்லை, ஆனால், தனக்கு ஒரு சிறந்த எதிர்காலம் இருக்கும் என்று அவளுக்கு நம்பிக்கை வந்திருக்கிறது.

ப்ரியா போன்ற குழந்தைகளின்மீது சுமத்தப்படும் அழுத்தத்தை நம்மால் கற்பனைகூடச் செய்யமுடியாது. அவர்கள் வீட்டைச் சுத்தப்படுத்துவது, சமைப்பது போன்ற வேலைகளையெல்லாம் செய்யவேண்டும், பாதிக்கப்பட்ட தங்கள் அன்புக்குரியவர் எழுந்து உட்கார, நடக்க உதவவேண்டும், அவர்களுக்கு உடைமாற்றிவிடவேண்டும், அவர்கள்  கழிப்பறைக்குச் செல்ல உதவுவது, அவர்களைக் குளிப்பாட்டுவது போன்ற அந்தரங்க உதவிகளையும் செய்யவேண்டும். இவை அனைத்தையும் செய்வதற்கு அவர்களுக்கு உணர்வுரீதியிலான ஆதரவு தேவை, இன்னொருபக்கம், வீட்டை நடத்துவது, சகோதர, சகோதரியரைக் கவனித்துக்கொள்வதற்கான நிதிச்சுமை அவர்களை வருத்தும்.

கவனித்துக்கொள்ளும் குழந்தைகளைக் கவனித்துக்கொள்வதற்கான தேவை

UKயிலுள்ள குழந்தைகள் கழகம் நடத்திய ஆய்வில் தெரியவரும் ஒரு விஷயம்: இளம் கவனித்துக்கொள்வோர், அதாவது, 17 வயது அல்லது அதைவிடக் குறைவான வயதில் இன்னொருவரைக் கவனித்துக்கொள்கிறவர்களுக்கு ஒரு சிறப்புக் கல்வித்தேவை அல்லது நீண்டநாள் தொடரும் ஓர் ஊனம் அல்லது ஒரு நோய் இருப்பதற்கான வாய்ப்புகள் அதிகம், எந்த அளவு அதிகம் என்றால், அதே வயதில் இருக்கும் மற்றவர்களைவிட ஒன்றரை மடங்கு அதிகம். இந்தக் குழந்தைகள் தங்களுடைய குழந்தைப்பருவத்தை இழக்கிறார்கள், பிறருடன் முக்கியமான சமூக உரையாடல்களை அனுபவிப்பதில்லை, பிறரிடமிருந்து விலகி, தனிமையில், மனச்சோர்வுடன் வாழ்கிறார்கள். அவர்களுடைய தகவல் தொடர்புத்திறன்கள் குறைந்துபோகின்றன, இதனால், அவர்கள் பெரியவர்களாகும்போது சிரமப்படுகிறார்கள். பள்ளியிலும் அவர்கள் பின்தங்கியிருக்கிறார்கள். ஆதரவற்ற குடும்பங்களைச் சேர்ந்த பல குழந்தைகள் பள்ளியிலிருந்து நின்றுவிடுகிறார்கள். இப்படி இன்னொருவரைக் கவனித்துக்கொள்ளும் குழந்தை களைத்துப்போகக்கூடும், அதன் உடல்நிலை பாதிக்கப்படக்கூடும், குறிப்பாக, ப்ரியாபோல் சிரமமான சூழ்நிலைகளில் வாழ்கிற குழந்தைகள் இதனால் பெரிதும் பாதிக்கப்படுவார்கள்.

ஆகவே, இந்த இளம் கவனித்துக்கொள்வோருக்கு நாம் உதவவேண்டும். முதலில், ஒரு சமூகத்தில் இவர்களை அடையாளம் காணவேண்டும். ஏனெனில், பெரும்பாலான இளம் கவனித்துக்கொள்வோர் யார் கண்ணிலும் படமாட்டார்கள், தாங்களே நிலைமையைச் சமாளிக்க முனைவார்கள். ஒரு சூழ்நிலையை அடையாளம் கண்டபிறகு, குழந்தைக்கு உதவுவதற்குப் பல வழிகள் இருக்கின்றன. பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தோடு நாம் சேர்ந்து பணியாற்றலாம். அவர்கள் குடும்பத்தில் அல்லது அந்தச் சமூகத்தில் வேறு யாராவது அந்தக் குழந்தையின் சுமையைப் பகிர்ந்துகொள்ள இயலுமா என்று பார்க்கலாம். பாதிக்கப்பட்டவர்களைக் கவனித்துக்கொள்ளும் குழந்தைகளை ஆசிரியர்களும் பரிவோடு கவனிக்கவேண்டும். குழந்தையைப் பள்ளி அல்லது கல்லூரியில் திரும்ப எல்லாரோடும் பழகச்செய்ய, அதன் கல்வியை ஒழுங்குபடுத்த உதவவேண்டும். அந்தக் குழந்தையின் சமூக வாழ்க்கையையும் கவனிக்கவேண்டும். இதற்கு ஒரு வழி, கவனித்துக்கொள்ளும் பல குழந்தைகளை ஒன்றாகப் பழகச்செய்வது. இதன்மூலம், அவர்கள் மற்ற குழந்தைகளைச் சந்தித்து விளையாடுவார்கள். அதேசமயம், தங்களுடைய நிலைமையில் இருக்கும் மற்ற குழந்தைகளும் உள்ளார்கள் என்பதை உணர்வார்கள். அதே சூழலில் இருக்கும் பிற குழந்தைகளுடன் பிணைப்பை உண்டாக்கிக்கொள்வார்கள். இந்தக் குழந்தைகள் தங்களுடைய வாழ்க்கையை வாழ, இருட்டுப்பாதையின் முனையில் உள்ள வெளிச்சத்தைக் காண நாம் உதவலாம். இப்போது ப்ரியா சொல்கிறாள், "என் வாழ்க்கை இப்போதும் சிரமமாகதான் இருக்கிறது. ஆனால், நான் மீண்டும் பள்ளிக்குச் செல்கிறேன். என் எதிர்காலம் பிரகாசமாக இருக்கும் என்று நம்புகிறேன்."

* ரகசியம் கருதி, பெயர் மாற்றப்பட்டுள்ளது

டாக்டர் அனில் படீல், 'கேரர்ஸ் வேர்ல்ட்வைட்' அமைப்பின் நிறுவனர், செயல் இயக்குநர். கேரர்ஸ் வேர்ல்ட்வைட் அமைப்பு, சம்பளம் பெறாத, குடும்பம் சார்ந்த கவனித்துக்கொள்வோரின் பிரச்னைகளைச் சுட்டிக்காட்டுகிறது, கையாள்கிறது. 2012ல் நிறுவப்பட்ட இந்த அமைப்பு UKல் பதிவுசெய்யப்பட்டது, வளரும் நாடுகளில் உள்ள கவனித்துக்கொள்வோருடன்மட்டும் பணியாற்றுகிறது. டாக்டர் படீல் இந்தப் பத்தியை ருத் படீலுடன் இணைந்து எழுதுகிறார். ருத் படீல் கேரர்ஸ் வேர்ல்ட்வைடுடன் தன்னார்வலராகப் பணியாற்றுகிறவர். மேலும் விவரங்களுக்கு நீங்கள் கேரர்ஸ் வேர்ல்ட்வைட் இணையத்தளத்துக்குச் செல்லலாம்.நீங்கள் ஆசிரியர்களுக்கு மின்னஞ்சல் எழுத விரும்பினால், இந்த முகவரியைப் பயன்படுத்தலாம்: columns@whiteswanfoundation.org

Related Stories

No stories found.
logo
வொய்ட் ஸ்வான் ஃபவுண்டேஷன்
tamil.whiteswanfoundation.org