கவனித்துக்கொள்ளுதல்

மனப்போக்குக் குறைபாடுள்ள ஒரு துணைவரை எப்படிக் கவனித்துக்கொள்வது

வொய்ட் ஸ்வான் ஃபவுண்டேஷன்

மனச்சோர்வுள்ள ஒரு துணைவருடன் வாழ்வது அழுத்தம்தரும் விஷயமாக இருக்கலாம். மனப்போக்குக் குறைபாடுகள் இன்று பரவலாகக் காணப்படுகின்றன, அதேசமயம், இந்தக் குறைபாடுகளால் நெருங்கிய உறவுகளில் ஏற்படும் தாக்கத்தை அதிகப்பேர் கவனிப்பதில்லை. விலகியிருத்தல், சமூக ஊடாடல்களைக் குறைத்துக்கொள்ளுதல், செயல்பாடுகளில் ஆர்வமில்லாமல் இருத்தல் போன்ற சில பொதுவான அறிகுறிகளால், இந்த உறவுகள் தடுமாற்றத்தைச் சந்திக்கக்கூடும்.

அத்துடன், ஒருவர் தான் நேசிக்கிற இன்னொருவரைக் கவனித்துக்கொள்ளும்போது, அவருடைய கவனமெல்லாம் தன்னுடைய அன்புக்குரியவருடைய மகிழ்ச்சியில்தான் இருக்கிறது, அதனால், அவர் தன்னையும் அறியாமல் தன்னுடைய சொந்தத் தேவைகள், விருப்பங்களைப் புறக்கணிக்கத்தொடங்கிவிடுகிறார், இதுவும் அவரைப் பாதிக்கக்கூடும். ஆகவே, மனநலப் பிரச்னை கொண்ட துணைவரைக் கவனித்துக்கொள்வது மிகவும் சிக்கலானதாகிவிடுகிறது. ஒருவருடைய துணைவருக்கு மனநலப் பிரச்னை இருக்கிறது என்றால், அவர் தன்னையும் கவனித்துக்கொள்ளவேண்டும், அப்போதுதான் அவரால் தன் துணைவரைக் கவனித்துக்கொள்ள இயலும்.

இதற்கான சில பயனுள்ள குறிப்புகள், இதோ. 

பிரச்னையே இல்லை என்பதுபோல் நடந்துகொள்ளவேண்டாம். 

மனநலப் பிரச்னை கொண்ட ஒருவருடைய துணைவர், முதலில் அதை அலட்சியப்படுத்துவார், தன் துணைவருக்குப் பிரச்னை ஏதும் இல்லை என்பார். ஆரம்பத்தில் அது கடினமாக இருக்கலாம். ஆனால், அவர் எவ்வளவு சீக்கிரத்தில் அதை ஏற்றுக்கொள்கிறாரோ அவ்வளவு நல்லது, அப்போதுதான் அவரால் தன்னுடைய துணைவருக்கு வேண்டிய உதவிகளைப் பெற்றுத்தர இயலும், மனநலச் சிகிச்சையும் நல்ல பலன்களைத் தரும்.

ஏதும் நடக்கவில்லை என்று மறுப்பதைவிட, சவால்களைச் சந்திப்பது நல்லது, தன் துணைவருடன் ஆரோக்கியமாக, திறந்த மனத்துடன் உரையாடுவது நல்லது: இது நம்பிக்கை, நெருக்கவுணர்வைப் பாதுகாக்கிறது. இதுபோன்ற திறந்த கேள்விகளைக் கேட்கலாம்: "உங்கள் மனநிலை, நடவடிக்கைகளில் சில மாற்றங்களை நான் கவனிக்கிறேன். உங்களை ஏதாவது தொந்தரவு செய்கிறதா? நீங்கள் அதைப்பற்றிப் பேச விரும்புகிறீர்களா?" இதுபோன்ற கேள்விகளால், அந்தத் துணைவர் மனம்திறந்து பேசுவார், தன்மீது இன்னொருவர் அக்கறைகாட்டுவதை உணர்வார்.

பங்குபெறலாம்.

ஒருவர் தன்னுடைய துணைவருக்கு இருக்கும் பிரச்னையைப்பற்றி அதிக விஷயங்களைப் படித்து, கேட்டுத் தெரிந்துகொள்வது நல்லது. அந்தப் பிரச்னை எப்படித் தோன்றும், அதற்கு எப்படிச் சிகிச்சை அளிக்கலாம் என்பவற்றைத் தெரிந்துகொண்டால், அதனை இன்னும் நன்றாகக் கையாளலாம். இந்தப் பிரச்னையால் உறவில் ஏற்படக்கூடிய பாதிப்பை எப்படிக் குறைப்பது என்பதையும் தெரிந்துகொள்ளலாம். பெரும்பாலான பிரச்னைகளுக்குப் பொதுவான அறிகுறிகள் இருப்பினும், அவை வெவ்வேறு நபர்களிடம் வெவ்வேறுவிதமாக வெளிப்படலாம். ஆகவே, தன்னுடைய துணைவர் வெளிப்படுத்தும் குறிப்பிட்ட அறிகுறிகளை அவர் அறிந்திருப்பது நல்லது. இதை எப்படித் தெரிந்துகொள்வது? துணைவர் சிகிச்சையாளரிடம் அல்லது மருத்துவரிடம் செல்லும்போது, இவரும் உடன் செல்லலாம்.

தன்னுடைய மகிழ்ச்சியைக் கவனித்துக்கொள்ளலாம். 

தனக்கு மகிழ்ச்சியளிக்கும் விஷயங்களைச் செய்யலாம். ஒருநாள் விடுமுறை எடுத்துக்கொள்ளலாம், நண்பர்களுடன் வெளியே செல்லலாம், ஒரு படம் பார்க்கலாம். இதனால், அவருடைய துணைவருக்கும் கொஞ்சம் இடமும் நேரமும் கிடைக்கும். 

பிறரை இதில் பங்குபெறச்செய்யலாம். 

தன் துணைவரைக் கவனித்துக்கொள்ளும் பொறுப்பைப் பிறருடன் பகிர்ந்துகொள்ளலாம்: இதன்மூலம் அவருக்குத் தன்னுடைய பணிகளைச் செய்ய அதிக நேரம் கிடைக்கும், அவருடைய தோள்களில் இருக்கும் பொறுப்பு குறையும். இதன்மூலம், அந்தத் துணைவரும் நன்கு உணர்வார், தன்மீது பலர் அக்கறை காட்டுகிறார்கள் என்று எண்ணுவார்.

துணைவருடைய மகிழ்ச்சிக்குத் தன்னைப் பொறுப்பாக்கிக்கொள்ளவேண்டாம். 

நினைவிருக்கட்டும்: அவர் ஒரு மனநலப் பிரச்னையைச் சந்தித்துக்கொண்டிருக்கிறார். அதிலிருந்து குணமாவதற்கு அவர்களுக்கு நேரமெடுக்கும். துணைவர் சோகமாக இருந்தால், அதற்கு இவர் தன்னைக் குற்றம்சாட்டிக்கொள்ளவேண்டாம். அவர் சிகிச்சையாளரிடம் செல்லும்போது, இவரும் உடன் செல்லலாம், அவருக்குப் பிடித்த விஷயங்களைச் செய்யும்படி ஊக்கப்படுத்தலாம், இப்படிப் பலவிதங்களில் அவரை ஆதரிக்கலாம், ஆனால், அவருக்கு மகிழ்ச்சியை உண்டாக்குகிற சுமையைத் தாங்கிக்கொள்ளவேண்டாம்.

எதையும் தனிப்பட்டமுறையில் எடுத்துக்கொள்ளாமலிருக்கலாம். 

மனச்சோர்வால் உணர்ச்சிகள் மாறக்கூடும். ஆகவே, துணைவர் சோர்வாக இருந்தால், அது தன்னால்தான் ஏற்பட்டது என்று எண்ணவேண்டியதில்லை, அவருடைய மனநலப் பிரச்னையால்தான் அவர் சோர்வாக இருக்கிறார் என்று புரிந்துகொள்ளவேண்டும். இந்தச் சூழ்நிலையில் துணைவருக்கும் இவருக்கும் உதவக்கூடிய ஒரு விஷயம், அவர் சோர்ந்திருக்கும்போது அவரிடம் எதிர்பார்க்கும் விஷயங்களைக் குறைத்துக்கொள்ளலாம். வழக்கமாக ஒரு விஷயத்துக்கு அவர் ஆற்றக்கூடிய எதிர்வினையும், இப்போது அவர் ஆற்றுகின்ற எதிர்வினையும் மாறுபட்டிருக்கும், இது இயல்புதான்.

தனக்குத் தேவைப்படும் நிபுணர் உதவியைப் பெறலாம். 

துணைவரைக் கவனித்துக்கொள்வதால், இவருடைய நெகிழ்திறன் குறையலாம். சில நேரங்களில், துணைவரைக் கவனித்துக்கொள்ளும் சுமையை இவரால் தாங்க இயலாமலிருக்கலாம், தான் உடைந்துவிடுவோமோ என்று இவர் கவலைகொள்ளலாம், அதுபோன்ற சூழ்நிலைகளில் அச்சமின்றி அவர் ஒரு நிபுணரைச் சந்தித்து உதவி பெறவேண்டும்.

மருத்துவ உளவியலாளர் டாக்டர் ரத்னா ஐசக் வழங்கிய குறிப்புகளுடன் எழுதப்பட்டது.

வொய்ட் ஸ்வான் ஃபவுண்டேஷன்
tamil.whiteswanfoundation.org