மனச்சோர்வு அல்லது பதற்றம் கொண்ட துணைவரைக் கையாளுதல்

மனச்சோர்வு அல்லது பதற்றம் கொண்ட துணைவரைக் கையாளுதல்

ஓர் உறவில் மனச்சோர்வை அல்லது பதற்றத்தைக் கையாளுதல் மிகவும் கடினமாக இருக்கலாம். இன்றைய வாழ்க்கையில் மனோநிலைக் குறைபாடுகள் மிகவும் பொதுவாகிவிட்டாலும், இந்தக் குறைபாடுகள் நெருங்கிய உறவுகளில் கொண்டிருக்கக்கூடிய தாக்கத்தைப்பற்றி அதிகக் கவனம் செலுத்தப்படுவதில்லை. ஒருவருடைய துணைவருக்கு ஒரு மனோநிலைக் குறைபாடு உள்ளது கண்டறியப்பட்டால், அவருக்கும் அவருடைய துணைவருக்கும் அது அழுத்தத்தை உண்டாக்கலாம். பொதுவாக அந்த நேரத்தில் கேட்கப்படும் சில கேள்விகள் இங்கு வழங்கப்பட்டுள்ளன.

தன்னுடைய துணைவருக்கு மனச்சோர்வு இருப்பதை ஒருவர் எவ்வாறு அறியலாம்?

ஒருவருடைய துணைவருடைய மனச்சோர்வு பல வழிகளில் வெளிப்படலாம். அவர் அடிக்கடி சோகமாக, எரிச்சலாக இருப்பதை இவர் கவனிக்கலாம், அவர் முன்பைவிட எளிதாக அழலாம், சோர்வாக அல்லது களைப்பாக இருப்பதாக அடிக்கடி புகார் சொல்லலாம். அவருடைய தூக்கச் சுழற்சியும் மாறலாம்; அதன்மூலம் அவர் குறைவாகத் தூங்கலாம், அல்லது காலையில் விரைவாக எழுந்துவிடலாம், அந்த நேரத்தில் அவர் மிகவும் சோகமாகத் தோன்றலாம். அவருக்குப் பசியெடுப்பதும் குறையலாம், அதனால் அவர் எதிர்பார்க்காமல் எடையிழக்கலாம். அவர் சமூகரீதியில் விலகியிருக்கலாம்; நண்பர்கள் அல்லது தன்னுடைய துணைவருடன் அடிக்கடி வெளியில் செல்ல விரும்பாமலிருக்கலாம். முன்பு அவர் மகிழ்ச்சியளிப்பதாகக் கருதிய விஷயங்களை இப்போது அவர் செய்ய விரும்பாமலிருக்கலாம். அவருடைய பாலியல் தூண்டுதல் குறிப்பிடத்தக்க அளவு குறையலாம்.

ஒருவரிடம் இந்தச் சின்னங்கள் ஒரு குறிப்பிட்ட காலகட்டத்துக்குத் தொடர்ந்தால், அவரைத் தொந்தரவு செய்வது என்ன என்பதைப்பற்றி அவர் பேச விரும்புகிறாரா என்று அவருடைய நண்பர்கள் அவரிடம் கேட்கலாம். அதே நேரம், ஒருவர் ஒரு வாரத்துக்குச் சோகமாக உணர்கிறார் என்றாலே அவருக்கு மனச்சோர்வு வந்துவிட்டது என்று பொருளில்லை. இந்த அறிகுறிகள் குறைந்தபட்சம் இரண்டு வாரங்களுக்குத் தொகுப்பாகத் தொடர்ந்தால்தான் அவருக்கு வந்திருப்பது மனச்சோர்வு என்று அடையாளம் காணலாம்.

தன்னுடைய துணைவருக்குப் பதற்றம் வந்திருக்கிறதா என்று ஒருவர் அடையாளம் காணது எப்படி?

துணைவருக்கு வந்திருக்கும் மனச்சோர்வை அடையாளம் காண்பதைவிட, பதற்றத்தை அடையாளம் காண்பது சிறிது அதிகக் கடினமாக இருக்கலாம். இந்தப் பிரச்னை கொண்டவர்கள், மனச்சோர்வு கொண்டவர்களைப்போல் சமூகரீதியில் விலகியிருக்காமலிருக்கலாம், அதேசமயம், இதற்குமுன் அவர்களைக் கவலைப்படுத்தாத விஷயங்களைப்பற்றி நிறையக் கவலை, அழுத்தத்தை வெளிப்படுத்தலாம். ஒரே விஷயத்தைப்பற்றி அவர்கள் திரும்பத்திரும்பக் கேட்கலாம், அதனால் நிறைவடையாமலிருக்கலாம். சில சூழ்நிலைகளில் அவர்கள் தவிர்க்கும் நடவடிக்கைகளைப் பின்பற்றலாம். உடல்ரீதியில், அவர்கள் அடிக்கடி தலை வலிப்பதாக, உடல் வலிப்பதாகக்கூட சொல்லலாம். அவர்கள் எப்போதும் திகைப்பில் மூழ்கியிருக்கலாம்; தங்களை அழுத்தத்துக்கு உண்டாக்கும் விஷயத்தைச் சமாளிப்பதற்கான வளங்கள் தங்களிடம் இல்லை என்று உணரலாம்.

துணைவரைக் காயப்படுத்தாத வழியில் அவருடன் உரையாடுவது எப்படி?

செயல்திறனோடு தகவல்தொடர்பை நிகழ்த்துவதற்கான முதல் படி, துணைவருடைய நடவடிக்கையில் தான் சில மாற்றங்களைக் கவனித்துவருவதை அவருடைய கவனத்துக்கு நுண்ணுணர்வுடன் கொண்டுவருதல். குற்றம்சாட்டாத ஒரு தொனியில் அவர்களிடம் பேசுவது சிறந்தது. திறந்த முனைகொண்ட வாசகங்களை, கேள்விகளைப் பயன்படுத்தலாம். எடுத்துக்காட்டாக, “சமீபகாலமாக நீங்கள் சற்று அதிகக் கவலையுடன் இருப்பதாகத் தோன்றுகிறது, நீங்கள் சரியாக உணர்கிறீர்களா? நீங்கள் பேச விரும்பினால், எனக்குச் சொல்லுங்கள்!”. அவர்களுடைய நலனைப்பற்றி நளினமாக விசாரிப்பது, ஒரு பாதுகாப்பான இடத்தை உருவாக்க உதவலாம்; அங்கு சிரமமான எண்ணங்கள், உணர்வுகளைப்பற்றி மனம் திறந்து பேச அவர்கள் முன்வரலாம்.

துணைவர் உதவியை நாட விரும்பாவிட்டால் என்ன செய்வது?

ஒருவர் தன்னுடைய துணைவரிடம் அவருடைய அனுபவத்தைப் பகிர்ந்துகொள்ளுமாறு கேட்டால், அந்தத் துணைவர் நிம்மதியாக உணரலாம், அவருடன் பேசலாம், அல்லது, தன்னைப் பாதுகாத்துக்கொள்ள முனையலாம். சூழ்நிலையைப் பொறுத்து, இந்த எதிர்வினைகள் இரண்டும் இயல்பானவை, ஏற்றுக்கொள்ளக்கூடியவை. மனச்சோர்வு கொண்ட ஒருவர், பெரும்பகுதி நேரம் தொந்தரவில்லாமல் பணியாற்ற இயலலாம்; அவருடைய பிரச்னையின் தீவிரத்தைப் பொறுத்து, அடிக்கடியோ, எப்போதாவதோ சோர்வைச் சந்திக்கலாம். அவர் ஒரு கடினமான நாள் அல்லது நிகழ்வைச் சந்திக்கும்போது, அவர் எப்படி உணர்கிறார் என்பது அவருடைய குற்றம் இல்லை என்று அவருக்கு நினைவுபடுத்துவது முக்கியம். அவர் ஒரு மன நல வல்லுனருடைய உதவியை நாடலாம் என்று அவருடைய துணைவர் அவரிடம் பேசலாம். அவர் இதற்குத் தயங்கினால், திகைப்பாக உணர்ந்தால், நல்ல மன நலனைப்பற்றி மேலும் தெரிந்துகொள்வதற்காக ஒரு சுய உதவிப் புத்தகத்தைப் படிக்கச்சொல்லலாம், தகவல்கள் உள்ள ஓர் இணையத்தளத்துக்குச் செல்லச்சொல்லலாம்.

மன நல வல்லுனருடைய உதவியை நாடும் தீர்மானம் மிக, மிகத் தனிப்பட்டது. சிகிச்சையாளர் மற்றும்/அல்லது மனநல மருத்துவர் ஒருவரிடம் தான் செல்ல விரும்புகிறாரா என்பதைப்பற்றிய முழுக் கட்டுப்பாடும் அவருடைய துணைவரிடம்தான் இருக்கவேண்டும். பாதிக்கப்பட்டிருப்பவருடைய துணைவர் மிகவும் நல்லதை நினைத்துப் பேசலாம், தன்னுடைய துணைவர் இன்னும் நன்றாக உணரவேண்டும் என்று அவர் மிகவும் விரும்பலாம், ஆனாலும், இந்த விஷயத்தை அவர் தீர்மானிக்க இயலாது.

ஒருவர் தன்னுடைய நேரத்தின் பெரும்பகுதியைத் தன் துணைவரைக் கவனித்துக்கொள்வதற்காகச் செலவிட்டால், அவர் தன்னைக் கவனித்துக்கொள்வது எப்படி?

மனச்சோர்வு அல்லது பதற்றம் கொண்ட துணைவரை முதன்மையாகக் கவனித்துக்கொள்கிறவருக்குத் தன்னுடைய பராமரிப்பு மிகவும் முக்கியமானது. இதில் மூன்று நிலைகள் உள்ளன:

அறிவுரீதியில், தன்னுடைய துணைவர் எப்படி உணர்கிறார் என்பதை எண்ணி இவர் குற்றவுணர்ச்சி கொள்ளக்கூடும். “ஏதோ ஒருவிதத்தில் நான்தான் அவருக்கு மனச்சோர்வை உண்டாக்கிவிட்டேனோ?”, “நான் செய்த ஏதோ அவருடைய மனச்சோர்வை இன்னும் மோசமாக்கிவிட்டதோ?” என்பதுபோன்ற கேள்விகள் அவருக்கு வரலாம். எவ்வளவு முயன்றாலும், அது போதுமானதாகத் தோன்றுவதில்லை என்று எண்ணி அவர் எரிச்சலடையலாம். தன்னுடைய துணைவருடைய மனச்சோர்வுக்கு இவர் காரணமில்லை என்பதை இவர் ஏற்றுக்கொள்வது முக்கியம். தன்னுடைய துணைவர் மனச்சோர்வாக உணர்வதற்குத் தன்னைப் பொறுப்பாகக் கருதுவது அநேகமாக ஒரு முடிவற்ற குற்றவுணர்ச்சிச் சுழலில் சென்று முடியலாம், இது உறவைச் சேதப்படுத்தக்கூடும்.

உணர்வுரீதியில், துணைவருடைய மனநிலை இவரைப் பாதிக்கும் நேரங்கள் இருக்கலாம். இதைச் சமாளிப்பது குறிப்பிட்ட சிரமத்தைக் கொண்டது, பச்சாத்தாபத்துடன் இருப்பது, விரைவில் மற்றவருடைய அதே உணர்வுகளைப் பகிர்ந்துகொள்வதாக மாறிவிடலாம். இவர் தன்னுடைய நலனை உறுதிப்படுத்த, எல்லைகளைப் பராமரிப்பது அவசியம். தனக்கு இருக்கக்கூடிய குற்றவுணர்ச்சிகளைப்பற்றி இவர் தன்னுடைய துணைவரிடம் பேசலாம். இவர் தன்னுடைய சொந்த உணர்வுகளைப்பற்றி அதிகக் கவனத்துடன் இருக்க இது இவருக்கு உதவும். ஒரு குறிப்பிட்ட நேரத்தில் தன்னுடைய துணைவர் உணர்வது என்ன என்பதால் பாதிக்கப்படாமல் தன்னுடைய உணர்வுகளை அனுபவிக்க இது இவருக்கு உதவும்.

எதார்த்தமாகப் பேசினால், இவர் தனக்கு நிறைய ஓய்வுநேரங்களை வழங்கிக்கொள்ளவேண்டும். தன்னைப்பற்றி நன்கு உணரச்செய்யும் விஷயங்களை இவர் செய்யவேண்டும். தனக்கு ஓர் இடைவெளி தேவைப்படும் நாட்களில், தன்னுடைய துணைவரைப் பார்த்துக்கொள்வதற்காக ஒரு நெருங்கிய நண்பர் அல்லது குடும்ப உறுப்பினரிடம் உதவி கேட்க இவர் தயங்கக்கூடாது. துணைவரைப் பார்த்துக்கொள்வது என்றால், அவருக்கு மருந்துகளை எடுத்துத்தருவது, வீட்டில் துணையாக இருப்பது, அவர் மருத்துவரைச் சந்திக்கச் செல்லும்போது உடன் செல்வது போன்றவையாக இருக்கலாம்.

சில நேரங்களில், இவருடைய துணைவர் இவரைப்பற்றியோ இவர்களுடைய உறவைப்பற்றியோ எதிர்மறையான விஷயங்களைச் சொல்லலாம். இது எப்போதும் தனிப்பட்ட தாக்குதல் இல்லை, பல நேரங்களில் இது மனச்சோர்வு அல்லது பதற்றத்தால் வருவது என்பதைப் புரிந்துகொள்வது, அதீதக் காயவுணர்வைத் தவிர்ப்பதற்காக இவர் சிறிது தொலைவைப் பராமரிக்க உதவும்.

ஒருவருடைய துணைவர் குணமாக எவ்வளவு நாள் ஆகலாம்? குணமானபின், அதே பிரச்னை மீண்டும் வராமல் தடுப்பதற்கு என்ன செய்யலாம்?

பொதுவாக ஒருவர் மனச்சோர்விலிருந்து மீள்வதற்கு 2 முதல் 8 மாதங்கள் ஆகலாம். சில நேரங்களில், இது ஒரு குறிப்பிட்ட சூழல் அல்லது வாழ்க்கை-அழுத்தமூட்டியால் உண்டாகிறது, அந்தச் சூழல் மாறியதும், அல்லது, வாழ்க்கை-அழுத்தமூட்டி சென்றதும் இதுவும் சென்றுவிடலாம். தீவிர மனச்சோர்வு குணமாவதற்கு இன்னும் அதிக நாட்களாகலாம்; அப்படிப்பட்ட பிரச்னையைச் சந்திக்கிறவர்களுடைய துணைவர்கள், தங்கள் துணைவரிடம் ஒரு மாற்றத்தைக் காணத் தொடங்குவதற்கு அதிகப் பொறுமையுடன் இருக்கவேண்டியிருக்கும்.

ஒருவர் குணமானபின், அவருடைய துணைவர் சில விஷயங்களைச் செய்யலாம். நிகழ்வைத் தூண்டிய சூழ்நிலை அடையாளம் காணப்பட்டிருந்தால், அதில் சிலவற்றை (இயன்றால்) மாற்ற முயலலாம். தூண்டிகளை அடையாளம் காணலாம், இயன்றால், அவற்றைத் தவிர்க்கும் எதார்த்த வழிகளை விவாதிக்கலாம், அவை நிகழ்ந்தால் அவற்றை எப்படிச் சமாளிப்பது என்பதற்கான ஒரு திட்டத்தைச் சிந்திக்கலாம். இதை ஒரு மன நல வல்லுனருடைய உதவியுடன் செய்யலாம்; அல்லது, இணையத்தில் கிடைக்கும் வளங்களைப் பயன்படுத்தித் தன்னுடைய முயற்சியிலேயே செய்யலாம். தனிப்பட்டமுறையில், தன்னுடைய துணைவர் ஆரோக்கியமான மற்றும் தொடர்ச்சியான தூக்க, பசி மற்றும் உணவுப்பழக்க உயிரியல் பாணிகளைப் பின்பற்றுவதை உறுதிசெய்வது முக்கியம். இவற்றில் ஏற்படும் மாற்றங்கள் இன்னொரு நிகழ்வை உண்டாக்கும் ஆபத்து உண்டு. சிகிச்சையாளர்/மனநல மருத்துவர்/GPயுடனான அடுத்தடுத்த சந்திப்புகளைத் தீவிரமாக எடுத்துக்கொள்ளவேண்டும், அவற்றை விட்டுவிடக்கூடாது. முன்பு மனச்சோர்வு அல்லது பதற்றத்துக்கு வழிநடத்திச்சென்ற எண்ணப் பாணிகளைச் சரிசெய்தல், அந்த இடத்தில் ஆரோக்கியமான சமாளிக்கும் அமைப்புகளைக் கொண்டுவருதல் ஆகியவை, தொலைநோக்கில் நல்ல மன நலனைப் பராமரிக்க முக்கியமானவை. உளவியலாளர் டாக்டர் ரத்னா ஐசக் வழங்கிய குறிப்புகளின் அடிப்படையில் எழுதப்பட்டது

Related Stories

No stories found.
logo
வொய்ட் ஸ்வான் ஃபவுண்டேஷன்
tamil.whiteswanfoundation.org