கவனித்துக்கொள்ளுதல்

அனுதாபம் எனும் இணைப்பு

பாதிக்கப்பட்டிருக்கிற ஒருவருடைய அனுபவங்களை நன்கு புரிந்துகொள்வதன் மூலம் மற்றவர்கள் அவரை நன்கு கவனிக்க இயலும்

வொய்ட் ஸ்வான் ஃபவுண்டேஷன்

மனநலம் பாதிக்கப்பட்டவரை கவனித்துக்கொள்ளும் ஒருவருடைய வாழ்க்கை, பலவிதங்களில் மாற்றத்திற்குள்ளாகிறது. ஆரம்பத்தில் தங்களுடைய அன்புக்குரியவருக்கு இப்படி ஒரு பிரச்னை நேர்ந்துவிட்டது என்பதை அவர்கள் ஏற்றுக்கொள்ள இயலாமல் சிரமப்படுவார்கள், திடீரென்று அவர்கள் தங்களைச் சார்ந்து வாழ்கிறவர்கள் என்பதை சமாளிக்க இயலாமல் தடுமாறுவார்கள், இதற்காக அவர்கள் தங்கள் பொறுப்புகளை மாற்றியமைக்கவேண்டியிருக்கும். அவர்களுடைய தேவைக்கேற்ப இவர்களுடைய பொறுப்புகள் மாறத்தொடங்கும். படிப்படியாக, அவர்கள் எதார்த்தமான சில சவால்களைச் சந்திக்கத் தொடருவார்கள், வீட்டில் வழக்கமாகச் செய்துகொண்டிருக்கும் வேலைகளை விட இப்போது அதிகமான வேலைகளைச் செய்யவேண்டியிருக்கும், இதற்குக் காரணம் அவர்களுடைய குடும்ப உறுப்பினருக்கு வந்திருக்கிற மனநலப் பிரச்னை. சில நேரங்களில் அவர்கள் தங்கள் அன்புக்குரியவர்களைக் கவனித்துக்கொண்டு அவர்களுடைய ஆரோக்கியத்தைக் கண்காணிக்க வேண்டியிருக்கலாம். இப்படி மனநலம் பாதிக்கப்பட்டவருடைய ஆரோக்கியத்திலும் அவரைக் கவனிக்க வேண்டியிருக்கிறவருடைய வாழ்க்கை முறையிலும் ஏற்படும் மாற்றங்களால், அவர்கள் தங்கள் நிதி சார்ந்த திட்டங்களையும் மாற்றியமைக்க வேண்டியிருக்கலாம். இந்த மாற்றங்கள் எல்லாம் நிகழ்ந்து கொண்டிருக்கிற அதே நேரத்தில் பாதிக்கப்பட்டிருக்கிறவரின் மனநலப் பிரச்னையானது ஒட்டுமொத்தக் குடும்பத்தின் மீதும் தாக்கம் செலுத்தத் தொடங்கும்.

நிலைமையை ஜீரணித்துக்கொள்ளுதல்

மனநலம் பாதிக்கப்பட்டவர் சில வாரங்களுக்கு முன் வரை நன்கு செயலில் இருந்திருப்பார். வீட்டில் வேலைகளைச் செய்துகொண்டிருந்திருப்பார். வேலைக்குச் சென்று வந்துகொண்டிருந்திருப்பார், அல்லது படித்துக்கொண்டிருந்திருப்பார். திடீரென்று அவர்களால் இவற்றைச் செய்ய இயலாது என்பதை மற்றவர்கள் ஜீரணித்துக்கொள்வது சிரமம்தான். மனநலம் பாதிக்கப்பட்டவர் கொஞ்சம் கொஞ்சமாக தனது தினசரி நடவடிக்கைகளில் அலட்சியம் காட்டத்தொடங்குகிறார், சாப்பிடுதல், குளித்தல், தூங்குதல் அல்லது அவர்களுடைய உடலைச் சுத்தமாக வைத்துக்கொள்ளுதல் போன்றவற்றில் அவர்களுடைய ஆர்வம் குறைகிறது. ஆக, இதற்கு முன்னால் வீட்டு வேலைகளைக் கவனித்துக்கொண்டிருந்த ஒருவர் அல்லது வேலைக்குச் சென்று சம்பாதித்துக்கொண்டு அதன்மூலம் பங்களித்துக்கொண்டிருந்த ஒருவர் இப்போது மனநலப் பிரச்னைகள் காரணமாக அந்த வேலைகள் எதையும் செய்ய இயலுவதில்லை. இத்துடன் மனநலம் பாதிக்கப்பட்டவர்களுடைய மனநிலை அடிக்கடி மாறக்கூடும், அவர்கள் திடீரென்று எதையாவது செய்யக்கூடும்,

இவை அனைத்தும் மனநலம் பாதிக்கப்பட்டவரைக் கவனித்துக்கொண்டிருப்பவருக்கு துயரத்தைத் தரலாம். பொருளாதாரரீதியில் வழங்கிக்கொண்டிருந்த பங்களிப்பு நின்றுபோகும்போது, யதார்த்தமாக அவர் செய்துகொண்டிருந்த உதவிகள் நின்றுபோகும்போது அது மிகுந்த மனத்துயர் தருகிற ஒன்றாகிவிடுகிறது. உதாரணமாக வீட்டு வேலைகள் செய்துகொண்டிருந்த ஒருவர் திடீரென்று அவற்றை நிறுத்திவிட்டால் அதன்மூலம் அவரைக் கவனித்துக்கொள்கிறவருக்கு இரட்டைப் பிரச்னைகள், ஒருபக்கம் பாதிக்கப்பட்டவரைக் அவரைக் கவனித்துக்கொள்கிற பொறுப்பு , இன்னொருபக்கம் அவர் செய்துகொண்டிருந்த வேலைகளையும் இப்போது இவரே தனியாக சமாளிக்க வேண்டிய நிலைமை. மனநலம் பாதிக்கப்பட்டவர் சமூக சூழ்நிலைகளில் செயல்படாத ஒருவராக மாறிவிடலாம். அதாவது யாரிடமும் அவர் பேசாமலிருக்கலாம், சில குறிப்பிட்ட நடவடிக்கைகளில் ஈடுபட்டு பிறருக்குச் சங்கடத்தை உண்டாக்கலாம், உதாரணமாக ஒருவரை வெறித்துப் பார்ப்பது, தங்களுக்குத் தங்களே பேசிக்கொள்வது, அல்லது மற்றவர்களுக்கு பதில் சொல்லாமல் இருப்பது போன்றவை. இவை அனைத்தும் சமூகத்தால் ஏற்கப்படாத நடவடிக்கைகள் என்பதால் அவர்கள் இவரை வித்தியாசமாகப் பார்க்கத்தொடங்குவார்கள். இவையும் அவரைக் கவனித்துக்கொள்கிறவருக்கு மனத்துயரை உண்டாக்கக்கூடும்.

அடிநாதமாக உள்ள செய்தியைப் புரிந்துகொள்ளுதல்

மனநலம் பாதிக்கப்பட்ட ஒருவர் அடிக்கடி கோபப்படுகிறார், எரிச்சலடைகிறார், மற்றவர்கள் மீது சிடுசிடுப்பாக இருக்கிறார் என்றால் அவரைக் கவனித்துக்கொள்கிறவர் இதைக்கண்டு விரக்தி அடைவது சகஜம்தான். அதுபோன்ற நேரங்களில் சட்டென்று அவர்கள் மீது கோபப்படாமல் ஒருகணம் யோசிக்கவேண்டும். அவர் ஏன் இப்படி நடந்துகொள்கிறார்? அவர் என்ன சொல்ல முயற்சி செய்கிறார்? இது போன்ற கேள்விகளைக் கேட்பது, மிக முக்கியமான, மிகப் பயனுள்ள பழக்கம் என்கிறார்கள் நிபுணர்கள்.

பெரும்பாலான நேரங்களில் பாதிக்கப்பட்டவர் தன்னுடைய திருப்தி அடையாத ஒரு தேவையைதான் வெளிப்படுத்துகிறார், அதைக் கையாள்வதுதான் கவனித்துக்கொள்கிறவருக்குப் பெரும் சவாலாக இருக்கிறது. பாதிக்கப்பட்டவர் எதைத் தெரிவிக்க விரும்புகிறார், அவருடைய உண்மையான தேவை என்ன என்பதைக் கவனித்துக்கொள்கிறவர் புரிந்துகொண்டால் அவரால் தன்னுடைய அன்புக்குரியவருடன் ஒரே புள்ளியில் இணைய இயலும், அந்தப் பிரச்னையை எப்படிச் சரிசெய்வது என்று சிந்திக்க இயலும்.

உதாரணமாக பசியாக இருக்கும் ஒருவர் கோபப்படக்கூடும், அல்லது யாராவது ஒருவர் தொந்தரவு செய்தால் கோபப்படக்கூடும். இப்போது அவர்கள் வெளிப்படுத்துவது கோபத்தைத்தான், ஆனால் அவர்களுடைய உண்மையான தேவை பசியை யாராவது போக்கவேண்டும் என்பது. அந்த உண்மையான தேவையை அவர்களால் பிறருக்கு எடுத்துச்சொல்ல முடியவில்லை என்பதால்தான் கோபப்படுகிறார்கள். ஆகவே அவர்களைக் கவனித்துக்கொள்கிறவர்கள் கோபத்தைத் தீர்த்தல் என்பதைத் தாண்டி அதன் அடிப்படைக்காரணமாக விளங்குகின்ற பசியைத் தீர்த்தல் என்ற தேவையைப் புரிந்துகொண்டால் அதனைச் சரிசெய்ய இயலும்.

மனநலம் பாதிக்கப்பட்டவர்களைப் பொறுத்தவரை சில குறிப்பிட்ட தேவைகள் காரணமாக அவர்கள் எரிச்சலடையக்கூடும், விரக்தியடையக் கூடும்:

  • தங்களுக்கு வந்திருக்கிற பிரச்னை காரணமாக அவர்கள் ஒரு குறிப்பிட்ட வகையில் நடந்துகொள்ளலாம் அல்லது அந்தப் பிரச்னையைத் தீர்க்க வழங்கப்பட்டிருக்கும் மருந்துகளால் அவர்கள் ஒரு குறிப்பிட்ட வகையில் நடந்துகொள்ளலாம், அந்த நடவடிக்கைகளை சமூகம் ஏற்காமல் போகலாம்.

  • மனநலம் பாதிக்கப்பட்டவர்களைக் கவனித்துக்கொள்கிறவர்களின் எதிர்பார்ப்புகள், அவற்றை அவர்கள் வெளிப்படையாகச் சொன்னாலும் சரி சொல்லாவிட்டாலும் சரி, பாதிக்கப்பட்டவர்களுக்கு சில குறிப்பிட்ட உணர்வுகளைத் தூண்டலாம். அதேபோல் அவர்களைச் சுற்றியிருக்கிற மற்றவர்களோடு ஒப்பிட்டால் அல்லது குழந்தைகளோடு ஒப்பிட்டால், அது அவர்களுக்கு எரிச்சலைத் தூண்டலாம் (உதாரணமாக “நீங்கள் குழந்தை மாதிரி நடந்துகொள்கிறீர்கள்” அல்லது “அதோ அவரைப் பாருங்கள், அவர் இப்படி நடந்துகொள்வதில்லையே”) : இங்கே மனநலம் பாதிக்கப்பட்டவரைக் கவனித்துக்கொள்கிறவர் நல்ல எண்ணத்தில்தான் இப்படி ஒப்பிடுகிறார், ஆனால் அவர் கவனிக்க மறந்துவிடுகிற விஷயம் அவர் யாரோடெல்லாம் பாதிக்கப்பட்டவரை ஒப்பிடுகிறாரோ, அவர்களுக்கெல்லாம் எந்தத் தீவிரமான மனநலப் பிரச்னையும் இல்லை, ஆகவே அவர்களோடு ஒப்பிட்டு அதுபோல் நடந்துகொள்ளவேண்டும் என்று எதிர்பார்ப்பது நியாயமானதல்ல. இது பாதிக்கப்பட்டவருக்கு எரிச்சலைத் தரலாம், அவர்கள் பிறர் எதிர்பார்ப்பதுபோல் தன்னால் நடந்துகொள்ள முடியவில்லையே தனக்குத் திறன் போதவில்லையே என்று எண்ணி வருந்தலாம்.

  • அதீதமாகக் கவனித்துக்கொள்ளுதல் : சில நேரங்களில் மனநலம் பாதிக்கப்பட்டவர்களைக் கவனித்துக்கொள்கிறவர்கள் அவர்களை மிகவும் தாங்கத்தொடங்கிவிடுகிறார்கள், தேவைக்கு மேல் அவர்களைக் கவனித்துக்கொள்கிறார்கள், அவர்கள் தினசரி வேலைகள், வீட்டு வேலைகள் அல்லது மற்ற வேலைகளில் ஈடுபடாவண்ணம் தடுத்து விடுகிறார்கள்.

  • தூண்டுதல் இன்மை, அல்லது அதீத தூண்டுதல்; பாதிக்கப்பட்டவர் யாரோடும் பேச இயலாமல் போய்விடுதல்.

சவாலான சூழ்நிலைகளைக் கையாளுதல்

மனநலப் பிரச்னைகள் என்பவை மற்ற எல்லாப் பிரச்னைகள் போலத்தான், அவற்றையும் குணப்படுத்த இயலும். மனநலம் பாதிக்கப்பட்ட ஒருவர் ஒரு குறிப்பிட்ட வகையில் நடந்துகொள்கிறார் என்றால், அதற்கு அவருடைய மனநலப் பிரச்னையே காரணமாக இருக்கலாம், அதைக் கவனித்துக்கொள்கிறவர் எபோதும் மறந்துவிடக்கூடாது. அவர்கள் நடந்துகொள்ளும் விதத்திற்குக் காரணம் அவர்களின் பலவீனமல்ல, அவர்களாக விரும்பி இப்படி நடந்துகொள்ளவில்லை, ஆகவே அவர்களுடய நடவடிக்கைகளை சமாளிக்க இயலாத போது, அதற்காக அவர்கள் மீது கோபப்படுவது சரியல்ல. அதேசமயம் அவர்கள் செய்கிற எல்லாவற்றிற்கும் காரணம் அவர்களுடைய மனநலப் பிரச்னைதான் என்று நினைத்துக்கொள்வதும் தவறு. அவர் எல்லாரையும் போல சாதாரண மனிதர்தான், அவரும் தன்னுடைய மகிழ்ச்சியை, எரிச்சலை, கோபத்தை அல்லது விரக்தியை எல்லாரையும் போல் வெளிப்படுத்தலாம், இவையெல்லாம் அவருடைய மனநலப் பிரச்னையாலேயோ அல்லது அதன் அறிகுறிகளாலேயோ ஏற்பட்டவை என்று நினைத்துவிடக்கூடாது.

ஒருவர் மனநலப் பிரச்னையிலிருந்து குணமாகிக்கொண்டிருக்கும்போது அவரைச் சுற்றியிருக்கிறவர்கள் எப்படிப்பட்ட உணர்ச்சிகளை வெளிப்படுத்துகிறார்கள் என்பது மிகவும் முக்கியம். அதைப் பொறுத்துதான், அவர்கள் விரைவாகக் குணமாவது சாத்தியமாகிறது. ஒருவேளை மனநலம் பாதிக்கப்பட்டவர்களைச் சுற்றியிருக்கிறவர்கள் எதிர்மறையான எண்ணங்களைக் கொண்டிருந்தால், அவர்களால் அதை உணரமுடியும். இது அவர்கள் மனநிலையைப் பாதிக்கலாம். ஆகவே மனநலம் பாதிக்கப்பட்டவர்களைப்பற்றி தீவிரமான கருத்துக்களையோ, எதிர்மறை விமர்சனங்களையோ சொல்லவேண்டாம். அதற்குப் பதிலாக அவர்களுடன் பேசும்போது, அவர்களுடன் இதமாக, அன்பாக நடந்துகொள்ளவேண்டும், அவர்களை அரவணைத்துச் செல்லவேண்டும்.

சிலநேரங்களில் மனநலம் பாதிக்கப்பட்டவர்களைக் கவனித்துக்கொள்கிறவர்கள் அவர்கள் மீது வைத்திருக்கும் எதிர்பார்ப்பை அவர்களால் பூர்த்தி செய்ய இயலுவது இல்லை. பல நேரங்களில் மனநலம் பாதிக்கப்பட்டவர்களைக் கவனித்துக்கொள்கிறவர்கள், தங்களுடைய அன்புக்குரியவர்களை பாதுகாக்க விரும்புகிறார்கள் ஆகவே அவர்கள் எந்நேரமும் படுக்கையிலேயே இருக்க விரும்புகிறார்கள், அல்லது அவர்களை வீட்டு வேலைகளைச் செய்ய அனுமதிப்பதில்லை. ஒருவேளை அவர்களாகவே முன்வந்து நான் இதைச் செய்யட்டுமா என்று கேட்டால் கூட வேண்டாம் என்று கூறி உட்கார வைத்துவிடுகிறார்கள். மனநலப் பிரச்னையிலிருந்து புனர்வாழ்வு என்பது ஓர் உடல்நலப் பிரச்னையில் இருந்து புனர்வாழ்வு பெறுவதிலிருந்து மாறுபட்டது. சில குறிப்பிட்ட குறைபாடுகளைக் கொண்டவர்கள், சிகிச்சையை எடுத்துக்கொண்டபடி வேலைக்கும் செல்ல இயலலாம், அல்லது வீட்டு வேலைகளிலும் உதவ இயலலாம். இப்படிப்பட்ட வேலைகளை அவர்கள் செய்யத்தொடங்கும்போது அவர்களுக்கு சிறிது அளவு ஆதரவு தேவைப்படும். மனநலம் பாதிக்கப்பட்ட ஒருவர் சில குறிப்பிட்ட வேலைகளைச் செய்ய விரும்புகிறார், அவர்களைக் கவனித்துக்கொள்கிறவருக்கு அதில் ஒப்புதல் இல்லை, தங்களுடைய அன்புக்குரியவர்களால் இந்த வேலையை செய்ய இயலுமா இயலாதா என்று அவர்களுக்குச் சந்தேகம் ஏற்படுகிறது. அந்தச் சூழ்நிலையில் அவர்களுக்குச் சிகிச்சை அளிக்கும் உளவியல் நிபுணர் அல்லது ஆலோசகருடன் பேசவேண்டும். அதன் அடிப்படையில் அவர்களுக்கு அந்த வேலையைத் தரலாமா வேண்டாமா என்று தீர்மானிக்கவேண்டும்.

மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் வருத்தத்தோடு இருக்கும்போது அவர்களைக் கவனித்துக்கொள்கிறவர்கள் அவர்களை அனுதாபத்தோடு அணுகவேண்டும். மற்ற சாதாரண மனிதர்களை எப்படிப் பார்ப்பார்களோ அதே போலவே, இவர்களையும் பார்க்கவேண்டும், அவர்கள் பேசுவதைக் கேட்கவேண்டும். மனநலம் பாதிக்கப்பட்ட ஒருவருக்கு உணர்ச்சிகளே கிடையாது என்று எண்ணிவிடக்கூடாது. மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கும் நிறைய உணர்ச்சிகள் இருக்கும். அதைக் காதுகொடுத்துக் கேட்பதற்குத்தான் யாரும் இருக்கமாட்டார்கள். ஆகவே அவர்களுடன் பேசும்போது, நீங்கள் எப்படி உணர்கிறீர்கள் என்று கேட்கலாம், நீங்கள் என்னென்ன வேலையைச் செய்ய விரும்புகிறீர்கள் என்று கேட்கலாம், வீட்டு வேலைகள் மற்றும் விவாதங்கள் போன்றவற்றில் அவர்களை இணைத்துக்கொள்ளலாம், இதன்மூலம் அவர்கள் தனிமையாக உணரமாட்டார்கள், எல்லாருக்கும் தங்களைப் பிடித்திருக்கிறது, தாங்கள் வரவேற்கப்படுகிறோம், ஏற்றுக்கொள்ளப்படுகிறோம், தாங்கள் குடும்பத்தின் ஓர் அங்கம் என அவர்கள் எண்ணுவார்கள்.

ABC முறை

மனநலம் பாதிக்கப்பட்டவர்களைக் கவனித்துக்கொள்கிறவர் அதற்கு சிறந்த ஆதரவை அளிக்கவேண்டும் என்றால் மனநலம் பாதிக்கப்பட்டவர்களின் நடவடிக்கைகளை ஒரு குறிப்பிட்ட வகையில் பதிவு செய்யவேண்டும் என்று நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள். இந்த வடிவத்தை ABC வடிவம் என்று அழைக்கிறார்கள். ABC என்பதன் விளக்கம்:

Antecedent: ஒருவர் ஒரு குறிப்பிட்ட விதமாக நடந்துகொள்வதற்கு முன்னால் என்ன நடந்தது?

அவர்கள் நடந்து கொண்ட விதம் (Behavior) எப்படி இருந்தது? (கோபம், ஒதுங்கியிருத்தல், போன்றவை)? எவ்வளவு நேரம் அவர்கள் அப்படி நடந்துகொண்டார்கள்?

அதன் விளைவுகள் (Consequences) எப்படி இருந்தன? அவர்கள் இப்படி நடந்துகொண்ட போது அவர்களைக் கவனித்துக்கொள்கிறவர்கள் , மற்ற குடும்ப உறுப்பினர்கள் என்ன செய்தார்கள், அவர்கள் இப்படி நடந்து கொண்டதற்கு எப்படி எதிர்வினையாற்றினார்கள்?

ஒரு குறிப்பிட்ட நடவடிக்கை மீண்டும் நிகழ்வதற்கான துப்புகள் என்னென்ன என்பதையும் கவனிக்கலாம். உதாரணமாக கோபப்படுகிற ஒருவர் தன்னுடைய கைகளை இறுக்கமாக வைத்துக்கொள்ளக்கூடும், குரலை உயர்த்தக்கூடும் அல்லது நிலைகொள்ளாமல் தவிக்கக்கூடும். இந்தத் துப்புகள் நபருக்கு நபர் மாறுபடும், இவர்களைக் கவனித்துக்கொள்கிறவர்கள் அந்தத் துப்புகளை அடையாளம் கண்டு கொண்டால், அடுத்த முறை இது போல் நிகழும்போது முன்கூட்டியே அடையாளம் கண்டுகொண்டு, அதற்குத் தயாராக இருக்கலாம்.

மனநலம் பாதிக்கப்பட்டவர்களைக் கவனித்துக்கொள்கிறவர்கள், தங்களுடைய அன்புக்குரியவர்கள் இப்படியெல்லாம் நடந்துகொண்டர்கள் என்பதை இந்த வடிவத்தில் பதிவு செய்து உளவியலாளருக்கோ ஆலோசகருக்கோ அதைத் தெரிவிக்கலாம். இப்போது இந்த நிபுணர்கள் இவற்றை ஆராய்ச்சி செய்து எதனால் அவர்கள் இப்படி நடந்துகொண்டிருக்கக்கூடும் என்பதைப் புரிந்துகொள்வார்கள். அதற்கேற்ப என்ன மாற்றங்களைச் செய்து அவர்களை இயல்பாக்கலாம் என்பதைத் தெரிவிப்பார்கள். ஒருவேளை அவர்கள் திரும்பத் திரும்ப இப்படி நடந்துகொள்கிறார்கள் என்றால் அவர்களைக் கவனித்துக்கொள்கிறவர்கள் நிபுணர்களின் உதவியை நாடலாம், இந்தச் சூழ்நிலையை எப்படி சமாளிப்பது என்று ஆலோசனை கோரலாம்.

வொய்ட் ஸ்வான் ஃபவுண்டேஷன்
tamil.whiteswanfoundation.org