கவனித்துக்கொள்வோருக்கு நாம் எப்படி உதவலாம்?

மனநலம் பாதிக்கப்பட்டவரைக் கவனித்துக்கொள்கிறவரிடம் “உங்களுக்கு ஏதேனும் உதவி தேவையா” என்று கேட்டாலே போதும், அவருடைய சுமையைக் குறைப்பதற்கு நீங்கள் பெருமளவு உதவலாம்

பரினிதாவுக்கு மருந்து பயன்தராத ஸ்கிஜோஃப்ரெனியா உள்ளது. இதை மறைத்துவைத்து அவளுடைய பெற்றோர் திருமணம் செய்து வைத்தார்கள். உண்மை தெரிந்தவுடன் பரினிதாவின் கணவர் அவரை விட்டுச்சென்றுவிட்டார். இப்போது பரினிதாவின் தாய்தான் அவரைக் கவனித்துக்கொள்கிறார். அவர் அருகிலுள்ள ஆடை தயாரிப்புத் தொழிற்சாலை ஒன்றில் வேலை பார்க்கிறார், அங்கே வேலை பார்த்தபடி ஓய்வு நேரத்தில் தன்னுடைய மகளைக் கவனித்துக்கொள்கிறார். அதே சமயம் என்றைக்காவது பரினிதாவை மருத்துவரிடம் அழைத்துச் செல்லவேண்டியிருந்தால், பரினிதாவின் தாய் தன்னுடைய வேலைக்கு விடுமுறை எடுக்கவேண்டும், அதனால் அவருக்கு அன்றைய கூலி கிடைக்காது. இது அவருடைய குடும்பத்தில் பொருளாதாரப் பிரச்னையைக் கொண்டு வரும். பரினிதாவின் பக்கத்துவீட்டில் சியாமளா என்பவர் இருக்கிறார். பரினிதாவின் தாய் வேலைக்கு விடுமுறை எடுத்தால் அவருக்கு கூலி வராது என்பதைத் தெரிந்து கொண்ட சியாமளா ‘நான் உங்கள் மகளை மருத்துவமனைக்கு அழைத்துச்செல்கிறேன்’ என்று தெரிவித்தார், பரினிதாவின் தாயும் அதனை ஏற்றுக்கொண்டார்.

பரினிதாவுக்குக் குறைபாடுள்ளோர் சான்றிதழ் கிடைக்கவும் சியாமளா உதவி செய்தார், பரினிதாவின் விவாகரத்து தொடர்பான சட்டப்பூர்வமான சிக்கல்களையும் அவர்தான் கவனித்துக்கொள்கிறார். சியாமளாவின் உதவி பரினிதாவின் குடும்பத்திற்கு மிகப்பெரிய பலமாக இருக்கிறது.

(இது கற்பனைக்கதை அல்ல. ஒரு மனநல நிபுணரால் தெரிவிக்கப்பட்ட நிஜச் சம்பவம். சம்பந்தப்பட்டவர்களுடைய தனியுரிமையைப் பாதுகாப்பதற்காக பெயர்கள் மட்டும் மாற்றப்பட்டுள்ளன)

சியாமளாவின் கதையைப் படிக்கும்போது மனநலம் பாதிக்கப்பட்ட ஒருவரைக் கவனித்துக்கொள்ளும்போது நீங்கள், எப்படி உதவலாம் என்பது உங்களுக்குப் புரிந்திருக்கும். மனநலம் பாதிக்கப்பட்ட ஒருவரைக் கவனித்துக்கொள்கிறவர்கள் அதனால் மிகுந்த சுமையைத் தாங்கவேண்டியுள்ளது. அந்தச் சுமையின் சிறிதளவை நீங்கள் பகிர்ந்துகொண்டால், அவர்களுக்கு அது பெரிய உதவியாக இருக்கும். பரினிதாவின் தாய் அதிர்ஷ்டசாலி. அவருக்கு சியாமளா போன்ற ஓர் உதவி கிடைத்தது. ஆனால் இது போன்று இந்தியா முழுவதும் மனநலம் பாதித்தவர்களைக் கவனித்துக்கொண்டிருக்கிற எல்லோருக்கும் இப்படிப்பட்ட உதவிகள் கிடைப்பதில்லை. மனநலம் பாதிக்கப்பட்டவர்களைக் கவனித்துக்கொள்கிறவர்கள் பலவிதமான வேலைகளை மாற்றி மாற்றி செய்யவேண்டியுள்ளது. மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்குத் தேவையான உதவிகளை அவர்கள் செய்யவேண்டும், மீதியுள்ள நேரத்தில்தான் அவர்கள் வேலைக்குச் செல்லமுடியும், படிக்கமுடியும், இதுதவிர அவர்களுக்கு வீட்டு வேலைகள், குடும்பத்தினரைக் கவனித்துக்கொள்ளுதல், போன்ற மற்ற வேலைகளும் இருக்கக்கூடும். இத்தனை கடமைகளைக் கவனிப்பது சிரமம் என்பதால், அவர்களுக்கு தங்களைக் கவனித்துக்கொள்ளவே நேரம் இருப்பதில்லை. இதன்மூலம் கொஞ்சம் கொஞ்சமாக அவர்கள் மிகுந்த அழுத்தத்திற்கு ஆளாகிறார்கள். இதுபோன்ற சூழ்நிலைகளில், மனநலம் பாதிக்கப்பட்டவர்களைக் கவனித்துக்கொள்கிறவர்கள், தங்கள் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களின் உதவியைக் கேட்டுப் பெறலாம். அது அவர்களுடைய சுமையைப் பெருமளவு குறைக்கும்.

குடும்ப உறுப்பினர்களின் உதவி

பொதுவாக கூட்டுக்குடும்பங்களில் இருக்கிற ஒருவர் இன்னொருவரைக் கவனித்துக்கொள்கிறார் என்றால், அவருக்குப் பிறருடைய உதவி தானே கிடைத்து விடும். குறிப்பாக, மனநலம் பாதிக்கப்பட்டவரை ஒரே ஒருவர்மட்டுமே கவனித்துக்கொள்ளும் சூழ்நிலையே ஏற்படாது, பலரும் அந்தச் சுமையைப் பகிர்ந்துகொள்வார்கள்.

நகரமயமாதல் காரணமாக, குடும்பங்களின் அளவுகள் குறைந்துகொண்டே செல்கின்றன, தற்போது தனிக்குடும்பத்தில் வாழ்கிறவர்கள் கிட்டத்தட்ட தனிமையில்தான் வாழ்கிறார்கள். இதனால் குடும்பத்தில் யாரேனும் ஒருவருக்கு மனநலம் பாதிக்கப்பட்டிருந்தால், அவரைப் பார்த்துக்கொள்கிறவருக்கு அதிக உதவி கிடைப்பதில்லை, அவர்கள் மிகுந்த அழுத்தத்திற்கு ஆளாகிறார்கள்.

அதுபோன்ற சூழ்நிலைகளில், தனிக்குடும்பங்களில் உள்ளவர்கள்கூட தங்களுடன் இருக்கும் பிறரிடம் உதவி பெறலாம். இதன்மூலம், மனநலம் பாதிக்கப்பட்டவரை முதன்மையாகப் பார்த்துக்கொள்கிறவர்களுக்கு அவ்வப்போது ஆசுவாசம் கிடைக்கும்.

உதாரணமாக ஒரு குடும்பத்தில், தந்தை, தாய், ஒரு மகன் மற்றும் மகள் உள்ளார்கள். இதில் அந்த மகனுக்கு மனநிலை சரியில்லை. அவனைப் பார்த்துக்கொள்ளும் பணியை முதன்மையாக அவனுடைய தாய் ஏற்றுக்கொள்கிறார்.

இந்தச்சூழ்நிலையில் வீட்டிலிருக்கும் மற்ற இருவர், அதாவது மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞனின் தந்தை மற்றும் சகோதரி ஆகியோர் தாயின் பொறுப்புகளைப் பகிர்ந்துகொண்டு அவருக்கு உதவலாம். இல்லாவிட்டால், தானே எல்லா வேலையையும் செய்கிறோம் என்ற உணர்வினாலும், மனப்பளுவாலும் காலப்போக்கில் அந்தத் தாயும் பெரும் அழுத்தத்திற்கு ஆளாகக்கூடும்.

ஆகவே குடும்பத்தில் உள்ள மற்றவர்கள் முதலில் அவரைப் புரிந்துகொள்ளவேண்டும்,நாங்களும் சில வேலைகளைச் செய்கிறோம் என்று முன்வரவேண்டும். உதாரணமாக ‘காலை நேரத்தில் நீ அவனைக்கவனித்துக்கொள், மதிய நேரத்தில் நான் அவனைக் கவனித்துக்கொள்கிறேன்’ என்று சொல்லலாம் அல்லது ‘நீ அவனைக் கவனித்துக்கொள்ளும்போது நான் சமையல் செய்கிறேன்’ என்று சொல்லலாம்.

தூரத்து உறவினர் அல்லது நண்பரின் உதவி

உங்கள் உறவினர் அல்லது நண்பர் ஒருவர் மனநலம் பாதிக்கப்பட்ட ஒருவரைக் கவனித்துக்கொள்கிறார் என்றால், நீங்கள் அவருக்குப் பலவிதங்களில் உதவலாம்.

  • அவர்கள் தாற்காலிக வேலைகளைப் பெற உதவலாம்: இரு துருவக் குறைபாடு போன்ற தீவிர மனநலக் குறைபாடு உள்ளவர்களுக்கு தொடர்ந்து வேலை கிடைக்காது ஆகவே அவர்கள் பணி வாழ்க்கையில் ஆங்காங்கே இடைவெளி காணப்படும். இதுபோன்ற நேரங்களில் அவர்கள் குடும்ப உறுப்பினர்கள் அவர்களுக்கு உதவலாம், அவர்களுக்கு வேலை வாய்ப்புகளைப் பெற்றுத்தரலாம், அதன்மூலம் அவர்களைக் கவனித்துக்கொள்கிறவர்களுக்கு மறைமுகமாக உதவலாம்.

  • மனநலக்குறைபாடு பற்றி அனுதாபத்துடன் இருத்தல்: பொதுவாக மனநலம் பாதிக்கப்பட்டவர்களையும் அவர்கள் குடும்பத்தாரையும் சமூகம் சற்றே விலகிநின்று பார்க்கிறது, இதனால் அவர்கள் மிகவும் தனிமையில் உணர்வார்கள். இது போன்ற நேரங்களில் நீங்கள் அனுதாபத்துடன் அவர்களுடன் பழகுகிறீர்கள் என்றால், அவர்கள் தனிமையாக உணரமாட்டார்கள் மனநலக்குறைபாடுகளை சமூகம் வெறுப்புடன் பார்க்கிறதே என்ற அழுத்தத்திலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக மீள்வார்கள், அதை எதிர்த்து முன்னேறிச் செல்வார்கள். “இப்போது ஒருவருக்கு கண்பார்வை இல்லை என்றால் மற்றவர்கள் அவரை அனுதாபத்துடன் பார்க்கிறார்கள், காரணம் அவருக்குக் கண்பார்வை இல்லை என்ற குறைபாடு நேரடியாகத் தெரிகிறது. மனநலக் குறைபாடு கொண்டவர்களுடைய சூழ்நிலை அவ்வாறு இல்லை. அவர்களுடைய குறைபாடு நேரடியாகத்தெரிவதில்லை, அவர்களுடைய பழக்க வழக்கங்கள்தான் மாறி இருக்கின்றன என்பதால் அவர்களுக்கு எந்தப் பிரச்னையும் இல்லை, அவர்கள் நினைத்தால் இந்தப் பழக்க வழக்கங்களை மாற்றிக்கொள்ளலாம் என்றுதான் பிறர் நினைக்கிறார்கள். ஆனால் இது உண்மையல்ல: மனநலப் பிரச்னைகள் தீவிரமான குறைபாடுகளாக இருக்கலாம். அதேசமயம் அவற்றைக்குணப்படுத்துவதும் சாத்தியம். இதை பொதுமக்கள் புரிந்துகொள்ளவேண்டும், இந்தப் பிரச்னைகளைச் சந்திப்பவரிடம் அனுதாபத்துடன் நடந்துகொள்ளவேண்டும்; “ என்கிறார் டாக்டர் கிருஷ்ண பிரசாத், உதவிப் பேராசிரியர் NIMHANS.

  • அவர்கள் மருத்துவமனைக்குச் செல்லும்போது உடன் செல்லலாம்: மனநலம் பாதிக்கப்பட்டவர்களைக் கவனித்துக்கொள்கிறவர்கள் அவர்களை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும்போது உங்களுக்கு நேரம் இருந்தால் நீங்களும் உடன் செல்லலாம். இதன்மூலம் அவர்களுடைய சுமை ஓரளவு குறையும்.

  • அவர்கள் பேசுவதைக் கேட்கலாம்: மனநலம் பாதிக்கப்பட்டவர்களைக் கவனித்துக்கொள்கிறவர்களுக்கு பேசுவதற்கு நிறைய விஷயம் இருக்கலாம், எந்தவிதமான தீர்மானங்களும் எடுக்காமல், எந்தத் தீர்ப்புகளையும் வழங்காமல் அவர்கள் சொல்வதைக் கவனித்துக் கேளுங்கள் அவர்கள் மனத்தில் உள்ளதைக்கொட்டி விடுவார்கள். அதுவே அவர்களுடைய அழுத்தத்தைக் குறைக்கும் ஒரு சிகிச்சையாக அமையலாம்.

  • மனநலப் பிரச்னைகளை மட்டும் பேசாமல் மற்ற பிரச்னைகளையும் பேசலாம்: மனநலப் பிரச்னை என்பது அதனால் பாதிக்கப்பட்டவருக்கும் அவரைக் கவனித்துக்கொள்கிறவருக்கும் மிகுந்த அழுத்தத்தை உண்டாக்கும் ஒரு விஷயம்தான், அதேசமயம் பாதிக்கப்பட்டவரிடம் அதைப்பற்றியே பேசிக்கொண்டிருக்கவேண்டும் என்று அவசியம் இல்லை. மற்றவரிடம் எப்படி பேசுவீர்களோ அதேபோல் அவர்களிடமும் பேசுங்கள். “மனநலம் பாதிக்கப்பட்ட ஒருவரையும் அவரைக் கவனித்துக்கொள்கிறவரையும் நான் யாரோ என்று நினைக்க மாட்டேன், அவர்களுடன் கலகலப்பாகப் பேசுவேன், கிசுகிசுக்களைச் சொல்வேன், அவர்களை என்னுடைய குழந்தையின் பிறந்தநாள் விழாவிற்கு அழைப்பேன், அவர்களுடன் ஷாப்பிங்கிற்குச் செல்வேன் …இதுபோன்ற நடவடிக்கைகளால் மனநலம் பாதிக்கப்பட்டவரும் அவர்களைக் கவனித்துக்கொள்கிறவரும் தனிமையாக உணராமல் அவர்களும் சமூகத்தின் ஒரு பகுதி என எண்ணுவார்கள், அவர்களுடைய சுமை சற்றே குறையும்,“ என்கிறார் டாக்டர் ஆர்த்தி ஜகன்னாதன், உதவிப் பேராசிரியர், NIMHANS.

நாம் ஒவ்வொருவருக்கும் ஏதேதோ வேலைகள் இருக்கும், பரபரப்பாக இயங்கிகொண்டிருப்போம் அதனிடைய மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்காகவும் அவர்களைக் கவனித்துக்கொள்கிறவர்களுக்காகவும் சிறிது நேரம் ஒதுக்கி, சிறிய உதவிகளைச் செய்தால் அவர்களுடைய பளு வெகுவாகக் குறையும்.

Related Stories

No stories found.
logo
வொய்ட் ஸ்வான் ஃபவுண்டேஷன்
tamil.whiteswanfoundation.org