துணைவரிடம் மனச்சோர்வைப்பற்றிப் பேசுவது எப்படி?

துணைவரிடம் மனச்சோர்வைப்பற்றிப் பேசுவது எப்படி?

இந்தியாவில் 6 பேரில் ஒருவர் மனச்சோர்வுடன் வாழ்கிறார். மனச்சோர்வானது ஒருவருடைய உறவைப் பாதிக்கலாம்; அதன்மூலம், அவர் மனச்சோர்வை எப்படிக் கையாள்கிறார் என்பதையும் பாதிக்கலாம். வலுவான மற்றும் ஆரோக்கியமான உறவுகளுக்கு மனச்சோர்வின் அறிகுறிகளைச் சமாளிக்கும் சாத்தியம் உள்ளது. அதேசமயம், ஆதரவளிக்கிற, முழுமையைத்தருகிற உறவுகளைப் பராமரிப்பதை அது கடினமாக்கலாம். மனச்சோர்வு கொண்ட துணைவர் அல்லது வருங்காலத் துணைவரிடம் ஒருவர் கேட்கக்கூடிய சில கேள்விகள் இவை:

கேள்வி: தனக்கு மனச்சோர்வு இருப்பதை ஒருவர் தன்னுடைய துணைவரிடம் எப்படிச் சொல்வது?

பதில்: தனக்கு மனச்சோர்வு உள்ளது என்பதைத் தன்னுடைய துணைவரிடம் சொல்வது சிரமமான வேலையாகத் தோன்றலாம்; ஆனால், இந்த விஷயத்தில் ஒருவர் எந்த அளவு அதிக நேர்மையுடனும் நேரடித்தன்மையுடனும் இருக்கிறாரோ, அந்த அளவுக்கு அது நன்மை தரும். தனக்கு ஏதோ நடக்கிறது, அதைச் சமாளிக்கத் தன் துணைவருடைய உதவி தேவை என்று ஒருவர் உணரும் நிலையில், இதை அவர் தன் துணைவரிடம் பகிர்ந்துகொள்ளலாம், அல்லது, ஏதோ தவறாக நடக்கிறது என்பது உறுதியாகத் தெரியும்போது, அதைச் சரிசெய்வதற்குத் துணைவருடைய உதவி தேவைப்படும்போது அவர் இதைப்பற்றிப் பேசலாம். மனச்சோர்வைப் பொறுத்தவரை, மாற்றமானது மிகவும் குறிப்பிடத்தக்கவகையில் அமையலாம்; ஆகவே, அவரிடம் ஏதோ பிரச்னை இருக்கிறது என்பதை அவருடைய துணைவர் ஏற்கெனவே கவனித்திருக்கக்கூடும். அடுத்து என்ன நடக்கிறது என்பதைப்பற்றித் தெரிந்துவைத்திருப்பது அவர்களுக்கு நம்பிக்கையளிக்கலாம்ஆகவே, ஒருவர் தனக்குத் தேவைப்படும் உதவியை எப்படி நாடுவது, அதற்கு என்னவெல்லாம் செய்யவேண்டியிருக்கலாம் என்பதுபற்றித் தன் துணைவருடன் அமர்ந்து பேசவேண்டும். தங்களுடைய துணைவர் இந்தத் தகவல்களைப் புரிந்துகொள்வதற்காக ஒருவர் இவற்றைப் பலமுறை பகிர்ந்துகொள்ளவேண்டியிருக்கலாம் என்பதை நினைவில் கொள்வது உதவியாக இருக்கும்.  

கேள்வி: தீவிர மனச்சோர்வு கொண்ட ஒருவர் ஓர் உறவுக்குள் நுழைய அஞ்சுகிறார். இந்தச் சூழ்நிலையில் அவர் என்ன செய்யவேண்டும்?

பதில்: மனச்சோர்வு இல்லாதவர்களுக்குக்கூட, உறவுகள் அச்சமூட்டலாம். யார் வேண்டுமானாலும் ஓர் ஆரோக்கியமான உறவில் இருக்க இயலும் என்பதை உணர்ந்துகொள்வது முக்கியம். ஒருவர் தனக்குத் தேவையான வகைகளில் தனக்காக இருக்கக்கூடிய, அவருக்குத் தேவையான வகைகளில் அவருக்காகத் தான் இருக்கக்கூடிய ஒருவரைச் சந்திக்கிறார் என்றால், அவருடைய மனச்சோர்வால் அங்கு எந்த மாற்றமும் உண்டாகிவிடாது. அவர் தன்னுடைய மன நலப் பிரச்னைகளைக் கையாள்வது, சமாளிப்பது இப்போதும் சவாலாகதான் இருக்கும்; ஆனால் அதற்காக அவர் ஒரு நல்ல உறவுக்குத் தகுதிபெறமாட்டார் என்றாகிவிடாது. ஒருவருக்கொருவர் துணையாக இருப்பதற்கு உழைக்கவேண்டியிருக்கும்; மனச்சோர்வு இதனைக் கடினமாக்கலாம், ஆனால், சுய அறிதல், ஒருவரையொருவர் புரிந்துகொள்ளுதல் மற்றும் ஆதரவு ஆகியவற்றால், ஓர் ஆரோக்கியமான இடத்தைக் கட்டமைப்பது சாத்தியம்தான். 

கேள்வி: துணைவரைச் சிரமப்படுத்தாமல் ஓர் உறவைப் பராமரிப்பது எப்படி?

பதில்: மனச்சோர்வு கொண்ட ஒருவரால் எப்போதும் தன்னுடைய உணர்வுகளை முழுமையாகக் கட்டுப்படுத்த இயலாமலிருக்கலாம். ஆகவே, இதுபற்றி அவர் தன்னுடைய துணைவருடன் திறந்த மனத்துடன் பேசுவது, என்ன நடக்கிறது என்பதை அவருக்குத் தெரிவிப்பது உதவியாக இருக்கலாம். அவர்கள் இதுபோன்ற சொற்றொடர்களைப் பேசலாம் "நான் உங்கள்மீது கோபமாக இல்லை, இன்று நான் சோர்வாக உணர்கிறேன்", "தற்போது நான் ஒரு மோசமான மனநிலையில் இருக்கிறேன், எனக்குச் சிறிது நேரம் தேவை, பின்னர் நானே உங்களிடம் வந்து பேசுகிறேன்", "தற்போது நான் சோர்வாக உணர்கிறேன், ஆனால், நீங்கள் சொன்ன எதுவும் அதற்குக் காரணமில்லை." இதன்மூலம், அவர் எப்படி உணர்கிறார் என்பதற்கு அவருடைய துணைவர் தன்னைக் குற்றம் சொல்லிக்கொள்ளமாட்டார், அவருக்குத் தேவைப்படும் இடத்தைத் தருவார். ஒருவர் தன்னுடைய தேவைகளை எந்த அளவு தெளிவாகத் தன்னுடைய துணைவரிடம் தெரிவிக்கிறாரோ, அந்த அளவு நன்மை கிடைக்கும்; அதேசமயம், தான் அனுபவிக்கிற எல்லாவற்றையும் அவர் புரிந்துகொள்ளவேண்டும் என்று எதிர்பார்க்கவேண்டாம். இது அவருடைய துணைவருக்கும் கடினமான அனுபவம்தான்; அவ்வப்போது, இதே தலைப்பைப்பற்றி ஒன்றுக்கு மேற்பட்ட உரையாடல்களை நிகழ்த்துவது தேவைப்படலாம். ஒருவர் தன்னுடைய மனச்சோர்வைக் கையாள்வதற்கான நடவடிக்கைகளைத் தனக்கு ஏற்ற வேகத்தில் எடுப்பது முக்கியம்; அதேசமயம், இதைச் சரிசெய்வதற்கு அவர் எதையும் செய்வதில்லை என்று அவருடைய துணைவருக்குத் தோன்றினால், அது அந்தத் துணைவருக்கு எரிச்சலாக இருக்கலாம். அதுபோன்ற நேரங்களில், தன்னுடைய பயணத்தில் தான் எங்கு இருக்கிறோம் என்பதை அவர் தன்னுடைய துணைவருக்குத் தெரிவிப்பது முக்கியம்.

கேள்வி: ஒருவர் மனச்சோர்வினால் தன்னுடைய உறவை முடித்துக்கொள்ள விரும்புகிறார். இந்தச் சூழ்நிலையில் அவர் என்ன செய்யவேண்டும்?

பதில்: இதுபோன்ற ஒரு விஷயத்தை நன்கு பேசியபிறகுதான் தீர்மானிக்கவேண்டும்; அவரும் அவருடைய துணைவரும் சேர்ந்து எடுக்கும் தீர்மானமாக அது இருக்கவேண்டும். உறவைப்பற்றி, எதிர்காலத்தைப்பற்றி நம்பிக்கையற்று உணர்வது மனச்சோர்வின் ஒரு பகுதியாகும். இந்த நேரத்தில் அவர் உறவைப்பற்றிய ஓர் எதிர்மறையான பார்வையைக் கொண்டிருக்கும் வாய்ப்புகள் அதிகம். ஒரு மனச்சோர்வு நிகழ்வின் மத்தியில் நீடிக்கும் ஒரு தீர்மானத்தை எடுக்காமலிருப்பது நல்லது. பின்னர், அவர் ஒப்பீட்டளவில் சிறப்பாக உணரும்போது, அவரும் அவருடைய துணைவரும் இந்த உறவு சரிப்படாது என்று உணர்ந்தால், அப்போது இருவரும் சேர்ந்து ஒரு தீர்மானமெடுக்கலாம். இதில் அவருடைய துணைவருடைய கருத்தையும் கேட்கவேண்டும் - இந்தச் சூழலைப்பற்றி அவர் எப்படி உணர்கிறார்? இந்தச் சூழ்நிலையில் அவர் விரும்புவது என்ன? இப்போதைய சவால்கள் தாற்காலிகமானவை, சிறிதுகாலத்துக்குப்பிறகு நிலைமை இன்னும் சிறப்பாகும் என்பதை அவருடைய துணைவரால் காண இயலலாம்; ஏனெனில், நடப்பதைப்பற்றி ஒப்பீட்டளவில் அதிகப் புறநிலைப் பார்வையை அவர்கள் கொண்டிருக்கிறார்கள்.

டாக்டர் ரத்னா ஐசக் சொல்கிறார், "மனச்சோர்வோ மற்ற பிரச்னைகளோ ஒருவரை உறவுக்குத் தகுதியற்றவராக ஆக்காது. ஓர் ஆரோக்கியமான மற்றும் ஒரு வலுவான உறவினால் மனச்சோர்வின் பலன்கள் மேம்படலாம்." இந்தச் சொற்களை நினைவில் வைத்துக்கொண்டால், அவருடைய மனச்சோர்வு அவர்களுடைய உறவில் கொண்டுவரக்கூடிய சவால்களைச் சமாளிக்கும்போது அவரும் அவருடைய துணைவரும் ஒருவர்மீது ஒருவர் அதிகக் கருணை காட்டலாம்.

மருத்துவ உளவியலாளர் டாக்டர் ரத்னா ஐசக் வழங்கிய மதிப்புமிக்க குறிப்புகளுடன் எழுதப்பட்டது.

Related Stories

No stories found.
logo
வொய்ட் ஸ்வான் ஃபவுண்டேஷன்
tamil.whiteswanfoundation.org