FAQs: ஸ்கிஜோஃப்ரெனியாவும் கவனிப்பும்

Q

ஸ்கிஜோஃப்ரெனியாவைக் குணப்படுத்த இயலுமா?

A

மற்ற பல மனக் குறைபாடுகளைப்போலவே, ஸ்கிஜோஃப்ரெனியாவையும் சிறப்பாகக் குணப்படுத்தலாம், பெரும்பாலான நேரங்களில், பாதிக்கப்பட்டவர் கிட்டத்தட்ட சுதந்தரமாகச் செயல்படும் நிலைக்குத் திரும்பிவிடுவார். நீரிழிவு, ஹைபர்டென்ஷன் போன்ற மற்ற பல நாள்பட்ட நோய்களைப்போலவே, இந்தக் குறைபாட்டையும் மருந்துகள், ஆதரவின்மூலம் கட்டுப்படுத்தலாம். பாதிக்கப்பட்டவருக்கு முறையான மருந்துகள் தேவை, குடும்பத்தினர், நண்பர்களின் ஆதரவு தேவை, ஒரு கட்டமைப்புடன்கூடிய ஒழுங்கு தேவை, பொருத்தமான உளவியல் விவரங்கள் தேவை, அவ்வளவுதான்.

”பொதுவாக ஸ்கிஜோஃப்ரெனியாவால் பாதிக்கப்பட்டவர்களில் மூன்றில் ஒருபங்குப்பேர் வழக்கமான செயல்பாட்டுக்குத் திரும்பிவிடுவார்கள், இன்னொரு பங்குப்பேர் வழக்கமான நிலையைவிடக் குறைவான ஒரு நிலைக்குத் திரும்புவார்கள். மீதமுள்ள ஒரு பங்குப்பேர் செயல்பாட்டுடன் வாழ்வதற்கு அவர்களுக்கு அதிக ஆதரவும் உதவியும் தேவைப்படும். இந்தப் பிரச்னையை எவ்வளவு சீக்கிரம் கண்டறிகிறோமோ, அவ்வளவுதூரம் நல்லது. பாதிக்கப்பட்டவர் குணமடைவதற்கான வாய்ப்புகளும் அதிகம்” என்கிறார் ரிச்மண்ட் ஃபெல்லோஷிப் கழகத்தின் பெங்களூரு கிளை MD, CEOவான உளவியல் நிபுணர் டாக்டர் எஸ் கல்யாணசுந்தரம்.

Q

பாதிக்கப்பட்டவரைப் பார்த்துக்கொள்கிற ஒருவர், இந்தப் பிரச்னையைக் கண்டறிவதிலும் சிகிச்சை வழங்குவதிலும் எப்படி உதவ இயலும்?

A

ஸ்கிஜோஃப்ரெனியா படிப்படியாக வளர்கிறது. அதற்குச் சிகிச்சை வழங்காவிட்டால், அதன் அறிகுறிகள் கொஞ்சம்கொஞ்சமாக அதிகரிக்கும்.  ஸ்கிஜோஃப்ரெனியா பிரச்னை கொண்ட ஒருவருக்கு, தான் விநோதமாக/ அசாதாரணமாக நடந்துகொள்கிறோம் என்பது தெரிவதில்லை. அவர்களுடைய குடும்பத்தினரும் நண்பர்களும்தான் அவர்களுக்குக் குறைபாடு வந்திருப்பதைப் புரிந்துகொள்வார்கள், அவர்கள் முறையான சிகிச்சை பெற உதவுவார்கள்.

ஸ்கிஜோஃப்ரெனியாவின் தொடக்க நிலைதான் அதனைக் கண்டறிந்து சிகிச்சை வழங்கச் சிறந்தது; எவ்வளவு சீக்கிரம் சிகிச்சை தொடங்குகிறதோ, அந்த அளவுக்கு மருந்துகள் பலன் தரும் வாய்ப்பு அதிகரிக்கும். ஸ்கிஜோஃப்ரெனியாவின் ஆரம்பகட்ட அறிகுறிகள்: எந்தத் தூண்டுதலும் இல்லாமல் எரிச்சலடைதல், தனித்திருத்தல், பசியின்மை, தூக்கமின்மை, காரணமில்லாமல் புன்னகை செய்தல் அல்லது சிரித்தல், இதுபோல் விநோதமாக நடந்துகொள்ளுதல், கவனமின்மை, சுத்தமாக இருத்தல், தன்னை அழகுபடுத்திக்கொள்ளுதலில் ஆர்வமின்மை. அதேசமயம், உங்களுடைய அன்புக்குரியவரிடம் இந்த அறிகுறிகளில் ஏதேனும் ஒன்றுமட்டும் காணப்பட்டால், அவருக்கு ஸ்கிஜோஃப்ரெனியா வந்திருப்பதாக அர்த்தமில்லை. ஸ்கிஜோஃப்ரெனியா பிரச்னைகொண்ட ஒருவரிடம் இந்த அறிகுறிகளில் பலவும் நெடுங்காலமாகக் காணப்படும், சில வாரங்களில், அல்லது சில மாதங்களில் இவை ஒவ்வொன்றாகத் தோன்றத்தொடங்கலாம். இதனால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இன்னொரு வகை மனக்குறைபாடும் இருக்கலாம். எது எப்படியிருப்பினும், பிரச்னையைக் கண்டறியவும் சிகிச்சையைத் தொடங்கவும் உரிய நிபுணரிடம் பேசுவது அவசியம்.

Q

மருத்துவர் பிரச்னையைக் கண்டறிய நான் எப்படி உதவலாம்? நான் எந்த அளவு விவரங்களைப் பகிர்ந்துகொள்ளவேண்டும்?

A

உடல்சார்ந்த நோய்களைக் கண்டறிவதைவிட, மனம்சார்ந்த குறைபாடுகளைக் கண்டறிவது சிரமம். மற்ற நோய்களைப்போல், எக்ஸ்-ரே, ஸ்கேன் அல்லது ஆய்வகப் பரிசோதனை அறிக்கைகளை வைத்து மருத்துவரால் எதையும் சொல்ல இயலாது, பாதிக்கப்பட்டவருடன், அவரைக் கவனித்துக்கொள்கிறவர்களுடன் பேசி, அவர்களிடம் என்னென்ன அறிகுறிகள் காணப்படுகின்றன என்பதைத் தெரிந்துகொண்டு, அதன் அடிப்படையில்தான் அவர் ஒரு தீர்மானத்துக்கு வருவார்.

ஸ்கிஜோஃப்ரெனியா பிரச்னை கொண்டவர்களுக்குத் தங்களுடைய பிரச்னையைப்பற்றித் தெரிந்திருப்பதில்லை. தாங்கள் விநோதமாக/ அசாதாரணமாக நடந்துகொள்கிறோம் என்பதை அவர்கள் உணர்வதில்லை. ஆகவே, அவருடைய குடும்பத்தினர் மருத்துவருக்கு உதவவேண்டும், பாதிக்கப்பட்டவருடைய நடவடிக்கைகளில் உள்ள மாற்றங்களைப்பற்றித் துல்லியமான விவரங்களை வழங்கவேண்டும்.

மருத்துவரிடம் எதையும் மறைக்காதீர்கள். அவர் ஒரு தொழில்முறை நிபுணர், நீங்கள் சொல்வதை ரகசியமாக வைத்திருப்பார். குடும்ப ரகசியங்கள் அல்லது, நீங்கள் முக்கியமில்லை என்று நினைக்கிற சில விஷயங்கள் உண்மையில் பெரிய பிரச்னைகளாக இருக்கலாம், அவையே பாதிக்கப்பட்டவருக்கு இந்தக் குறைபாட்டைக் கொண்டுவந்திருக்கலாம், இதனைக் கண்டறிய, மருத்துவருக்கு உங்கள் உதவி தேவை. இதனால், வழக்கத்துக்கு மாறாக என்ன நடந்தாலும் அதை மருத்துவரிடம் சொல்லிவிடுவது நல்லது. அது பொருந்தும் விவரமா தேவையற்ற விவரமா என்று அவரே தீர்மானிக்கட்டும். ஞாபகமிருக்கட்டும், இங்கே தேவையில்லாத விவரம் என்று எதுவுமே இல்லை. பாதிக்கப்பட்டவர் குணமடையவேண்டும் என்றுதான் மருத்துவரும் விரும்புவார், உங்களையோ, பாதிக்கப்பட்டவரையோ அவர் எடைபோடமாட்டார்.

Q

பிரச்னையைக் கண்டறியும் மருத்துவரிடம் நான் என்னென்ன கேட்கவேண்டும்?

A

இந்தப் பிரச்னையைப் புரிந்துகொள்ள, சிகிச்சையளிக்கும் மருத்துவரிடம் நீங்கள் இந்தக் கேள்விகளைக் கேட்கலாம்:

  • அறிகுறிகள் என்னென்ன?
  • இந்தப் பிரச்னையால் உங்களுடைய அன்புக்குரியவருக்கு என்ன ஆகும்?
  • அவர் குணமடைவதற்கு என்னென்ன ஆதரவு/ ஏற்பாடுகள் தேவைப்படும்?
  • அவருக்கு மருந்துகள் தேவைப்படுமா? ஆலோசனைகள் தேவைப்படுமா?
  • அவர்களைக் கவனித்துக்கொள்வதற்காக யாராவது ஒருவர் எப்போதும் அவர்களுடன் இருக்கவேண்டுமா?
  • சிகிச்சை எத்தனைநாள் நீடிக்கும்?
  • நீங்கள் கவனிக்கவேண்டிய எச்சரிக்கைச் சின்னங்கள் எவையேனும் உண்டா?
  • பாதிக்கப்பட்டவருக்கு என்னென்ன மருந்துகள் தரப்படுகின்றன? அவை எப்போது வேலை செய்யத்தொடங்கும்?
  • பாதிக்கப்பட்டவர் மருந்துகளைச் சாப்பிட மறுத்தால் என்ன செய்வது?
  • இதனால் என்னென்ன பக்க விளைவுகள் ஏற்படக்கூடும்? பாதிக்கப்பட்டவர் இவற்றைச் சமாளிக்க நீங்கள் எந்தவிதத்தில் உதவலாம்? நீங்கள் மருத்துவரிடம் உடனடியாகத் தெரிவிக்கவேண்டியய் பக்கவிளைவுகள் ஏதேனும் உண்டா?
  • பாதிக்கப்பட்டவர் மருந்து சாப்பிடுகிறாரா, இல்லையா, எப்படிச் சாப்பிடுகிறார் என்பதையெல்லாம் நீங்கள் கவனிக்கவேண்டுமா? பாதிக்கப்பட்டவர் அசௌகர்யமாக உணராதபடி இதனைச் செய்வது எப்படி?
  • பாதிக்கப்பட்டவர் குணமாவதற்கு உங்களுடைய குடும்பம்/ நண்பர்கள் எப்படி உதவலாம்?

Q

என்னுடைய அன்புக்குரியவரிடம் அவருடைய நடவடிக்கையைப்பற்றிப் பேசி, அவர் சிகிச்சை பெறவேண்டும் என்று சம்மதிக்கவைப்பது எப்படி? அவர்களுக்கு விருப்பம் இல்லாவிட்டாலும், அவர்களுக்குச் சிகிச்சை தர இயலுமா?

A

சில நேரங்களில் (அல்லது, பெரும்பாலான நேரங்களில்) ஸ்கிஜோஃப்ரெனியா பிரச்னைகொண்டவர்கள் எதார்த்தமாகச் சிந்திக்கமாட்டார்கள். இந்தப் பிரச்னைக்குச் சிகிச்சை அவசியம். பாதிக்கப்பட்டவர் தனக்கு உதவி தேவை என்று உணர்ந்தால், இந்தச் சிகிச்சை சிறப்பாக அமையும். அவர்களுடைய நடவடிக்கைகளில் ஏற்பட்டுள்ள மாற்றங்களைப்பற்றி அவர்களிடம் பேசுங்கள், அவர்களுக்கு ஆதரவு தரும்விதமாகப் பேசுங்கள். இந்த மாற்றங்களை எண்ணி உங்கள் குடும்பத்தினர் கவலைகொண்டிருப்பதாகச் சொல்லுங்கள் (ஆனால், அந்த நடவடிக்கைகளில் ஏற்பட்டிருக்கும் மாற்றங்களுக்கு அவர்கள்தான் காரணம் என்பதுபோல் குற்றம் சாட்டாதீர்கள்), அந்தக் கவலையினால்தான் நீங்கள் இப்படிச் செய்வதாகத் தெளிவுபடுத்துங்கள். பாதிக்கப்பட்டவரிடம் இதுபற்றிப் பேசுவது எப்படி என்று உங்களுக்குத் தெரியாவிட்டால், அதுபற்றி மருத்துவரைக் கேளுங்கள்.

தீவிர ஸ்கிஜோஃப்ரெனியா பிரச்னைகொண்ட ஒருவர் மாயத்தோற்றங்களைக்காணலாம், சந்தேக குணத்துடன் இருக்கலாம், சில நேரங்களில் தீவிரமாகக்கூட நடந்துகொள்ளலாம். பாதிக்கப்பட்டவர் அசௌகர்யமாக உணரலாம், அல்லது, சில குடும்ப உறுப்பினர்களின் பேச்சைக் கேட்டுக்கொண்டு, இந்தப் பிரச்னையைக் குணமாக்குவதற்கு உதவி பெற மறுக்கலாம். தங்களுக்கு எதிராகச் சதி நடக்கிறது என்று அவர்கள் மனத்தில் நினைத்தால், அதன் தொடர்ச்சியாகவே இந்தச் சிகிச்சையையும் அவர்கள் கருதலாம். அப்படிப்பட்ட சூழ்நிலைகளில், பாதிக்கப்பட்டவர் சிகிச்சை பெற மறுக்கலாம். அதுபோன்ற சூழ்நிலைகளில், பாதிக்கப்பட்டவர் மிகவும் நம்புகிற, அல்லது, அவருடன் ஒரு வலுவான பிணைப்பைக்கொண்ட ஒரு குடும்ப உறுப்பினர் அல்லது நண்பர் அவரிடம் இதைப்பற்றிப் பேசவேண்டும், அவர்களுடைய நடவடிக்கைகள் மாறியிருப்பதாகவும், அவர்களுக்குச் சிகிச்சை அவசியம் என்றும் புரியவைக்கவேண்டும்.

சில நேரங்களில், ஸ்கிஜோஃப்ரெனியா பிரச்னைகொண்ட ஒருவரால் பகுத்தறிந்து சிந்திக்க இயலாது, சிகிச்சைக்குச் சம்மதம் வழங்க இயலாது. பாதிக்கப்பட்டவரால் அவருக்கோ பிறருக்கோ பிரச்னைகள் ஏற்படக்கூடும் என்றால், அல்லது, அவர் ஓடிப்போய்விடக்கூடும் என்றால் அவரது அனுமதி இல்லாமல் அவரை மருத்துவமனையில் அனுமதிக்கலாம். பாதிக்கப்பட்டவர் தனக்கோ பிறருக்கோ வெளிப்படையானமுறையில் ஆபத்தை உண்டாக்குகிறார் என்று தெரிந்தால்மட்டுமே அவருடைய அனுமதியின்றி அவருக்குச் சிகிச்சை அளிக்கலாம், அதாவது, அவருடைய சம்மதம் இல்லாமல் அவரை ஓர் உளவியல் அமைப்பில் அனுமதிக்கலாம்.

Q

ஓர் உளப்பிணி நிகழ்வைக் கையாளுதல்: என்னுடைய அன்புக்குரியவரின் பிரமைகள் மற்றும் மாயத்தோற்றங்களைப்பற்றி நான் அவரிடம் எப்படிப் பேசுவது?

A

பாதிக்கப்பட்ட ஒருவர் தன்னுடைய பிரமைகள் மற்றும் மாயத்தோற்றங்களைப்பற்றிப் பேசும்போது, அவரைக் கவனித்துக்கொள்கிறவர்கள் பெரும்பாலும் அவரைத் ’திருத்த’ முயற்சிசெய்வார்கள். ‘நீங்கள் பார்ப்பவை உண்மையல்ல, நீங்கள் எதையோ கற்பனை செய்துகொள்கிறீர்கள்’ என்பார்கள். ஆனால், பாதிக்கப்பட்டவருக்கு, அந்த அனுபவம் உண்மையானது என்பதை நினைவில் கொள்வது முக்கியம்.  அவர்களைப்பொறுத்தவரை அந்தப் பிரமைகளும் மாயத்தோற்றங்களும் மிக உண்மையானவை.

உதாரணமாக, அவர்கள் சில குரல்களைக் கேட்கிறார்கள் என்றால், அந்தக் குரல்களைப்பற்றிச் சொல்லுமாறி அவர்களிடம் கேளுங்கள்: அவை மகிழ்ச்சியான குரல்களா, அல்லது, துக்கமான குரல்களா என்று விசாரியுங்கள். அந்தக் குரல்கள் என்ன சொல்கின்றன என்று கேளுங்கள். அவர்கள் உங்கள்மீது சந்தேகப்பட்டால், ஏன் அந்தச் சந்தேகம் அவர்களுக்கு வருகிறது என்று கேளுங்கள். அவர்கள் சிறப்பாக உணர்வதற்கு நீங்கள் என்ன செய்யலாம் என்று கேளுங்கள்.

ஒருவர் ஒரு பிரமை அல்லது மாயத்தோற்றத்தை நம்பும்போது, அதை மறுத்தால் பிரச்னை பெரிதாகதான் செய்யும். அவர்களுடைய பிரமையைப்பற்றி அவர்களிடம் பேசுங்கள், அந்த அனுபவம் அவர்களை மிகவும் தொந்தரவு செய்யக்கூடும் என்பதை ஏற்றுக்கொள்ளுங்கள். உதாரணமாக, நீங்கள் இப்படிப்பட்ட கேள்விகளைக் கேட்கலாம்: ”அந்தக் குரல் உங்களிடம் பேசும்போது நீங்கள் பயப்படுகிறீர்களா...?”  

வேறோர் இடத்துக்குச்சென்றால் அவர்கள் பாதுகாப்பாக உணர்வார்களா என்று கேளுங்கள். அவர்கள் நடந்துசெல்லும்போது அல்லது வேறு வேலைகளைச்செய்யும்போது நீங்கள் அவர்களோடு வந்தால் அவர்கள் நன்றாக உணர்வார்களா என்று கேளுங்கள். அவர்கள் சுறுசுறுப்பாக எதையும் செய்ய விரும்பவில்லை என்றால், அவர்களை ஓர் அமைதியான அறைக்கு அழைத்துச்செல்லுங்கள். அவர்களை மிகவும் தூண்டவேண்டாம்; அதனால் மாயத்தோற்றங்கள் அதிகரிக்கக்கூடும்.

ஏதாவது ஒரு குறிப்பிட்ட தூண்டுதலால் அந்தக் குரல்கள் கேட்கின்றனவா என்று விசாரியுங்கள். உதாரணமாக, அவர்கள் தனியாக இருக்கும்போது, எந்த வேலையும் செய்யாமலிருக்கும்போது, பரபரப்பாக இருக்கும்போது, பதற்றமாக இருக்கும்போது, புதியவர்களோடு இருக்கும்போது... எந்த நேரத்தில் அந்தக் குரல்கள் கேட்கின்றன? எந்தச் சூழ்நிலைகளில் அந்தக் குரல்களின் தாக்கம் குறைகிறது? அவர்கள் ஏதாவது ஒரு வேலையைச் செய்யும்போது அந்தக் குரல்கள் குறைந்துவிடுகின்றனவா?

அவர் எதையாவது செய்யவேண்டும் என்று அந்தக் குரல்கள் கட்டளையிடுகின்றனவா என்று கேளுங்கள், அந்தக் குரல்கள் சொல்வதைக் கேட்கவேண்டும் என்று அவர் தூண்டப்படுகிறாரா, வற்புறுத்தப்படுகிறாரா என்று கேளுங்கள். ஆம் எனில், இயன்றவரை அவரைத் தனியே விடக்கூடாது.

அவருக்குத் தற்கொலை எண்ணங்கள், அல்லது சாகவேண்டும் என்கிற விருப்பம் வருகிறதா என்று கேளுங்கள்: சில நேரங்களில், அந்தக் குரல்கள் தரும் அழுத்தம் தாங்க இயலாத அளவுக்கு அதிகமாகும்போது, பாதிக்கப்பட்டவர் இறந்துவிடுவது நல்லது என்று நினைக்கக்கூடும். தற்கொலை எண்ணங்களைப்பற்றிப்பேசினால், அவர்களுக்குப் புதிய எண்ணங்கள் தோன்றும் என்பது தவறான நம்பிக்கை. தற்கொலை சார்ந்த நடவடிக்கைகளில் அவர்கள் ஈடுபடுகிறார்களா என்று கவனியுங்கள், உதாரணமாக, வீட்டில் உள்ள நச்சுப்பொருள்களைப் பரிசோதிப்பது போன்றவற்றைச் செய்கிறார்களா என்று பாருங்கள், அல்லது, இதுபற்றி அவர்கள் பிறருடன் விவாதிக்கிறார்களா என்று கவனியுங்கள்.

அவர்களுக்கு உதவ நீங்கள் என்ன செய்யலாம் என்று கேளுங்கள்.

சிலர் இந்தப் பிரச்னையின் தீவிர நிலையை எட்டும்போது, நெருக்கடி நேரங்களில்மட்டும் பயன்படுத்துவதற்கான 'SOS மயக்கமருந்து'களை மருத்துவர் சிபாரிசு செய்யலாம். மயக்கமருந்துகளைத் தேவைப்பட்டால்மட்டுமே பயன்படுத்துங்கள்; பாதிக்கப்பட்டவரைத் தொடர்ந்து கவனியுங்கள், சந்தேகம் எழுந்தால், உதவியை நாடுங்கள்.

Q

அறிகுறிகள் மாறுகின்றன அல்லது மோசமாகின்றன என்றால் நான் என்ன செய்யவேண்டும்? அப்போது, மருந்துகளை மாற்றவேண்டுமா?

A

பாதிக்கப்பட்டவரைக் கவனித்துக்கொள்கிறவர் என்றமுறையில், சிகிச்சையளிக்கும் மருத்துவருடன் தொடர்ந்து தொடர்பில் இருங்கள், அறிகுறிகளில் ஏதேனும் மாற்றங்கள் ஏற்பட்டால், அவர்களுக்குத் தெரிவியுங்கள். ஸ்கிஜோஃப்ரெனியாவின் அறிகுறிகள் படிப்படியாக அதிகரிக்கக்கூடும். அறிகுறிகளில் மாற்றம் ஏற்பட்டால், அல்லது, அவை மோசமானால், பாதிக்கப்பட்டவர் தன்னுடைய மருந்துகளை உட்கொள்ளவில்லையா என்று கவனியுங்கள். ஒருவேளை அவர் தன் மருந்துகளை உட்கொள்ளவில்லை என்றால், அவரைத் தொடர்ந்து கவனித்து, சிபாரிசு செய்யப்பட்டுள்ள அனைத்து மருந்துகளையும் அவர்கள் சாப்பிடுவதை உறுதிசெய்யுங்கள்.

சில நேரங்களில், பாதிக்கப்பட்டவர் தான் மருந்து சாப்பிடுவது, சிகிச்சை எடுத்துக்கொள்வது ஆகியவற்றுக்குப் பொறுப்பேற்கத் தயாராக இருப்பதில்லை. அறிகுறிகள் தணியும்வரை, அவரைக் கவனித்துக்கொள்கிறவர் இந்தப் பொறுப்புகளை ஏற்றுக்கொள்ளவேண்டும்.

நினைவிருக்கட்டும், எந்த மருந்தும் பாதிக்கப்பட்டவரை ஒரே இரவில் குணப்படுத்திவிடாது. சில மருந்துகள் செயலுக்கு வருவதற்கு, அறிகுறிகளைக் கட்டுப்படுத்துவதற்குச் சில நாள்கள் ஆகலாம், சில வாரங்கள்கூட ஆகலாம். ஒரு குறிப்பிட்ட மருந்து செயல்பட எத்தனை நாள் ஆகலாம் என்று மருத்துவரைக் கேளுங்கள்.

Q

அறிகுறிகள் இப்போது கட்டுக்குள் வந்துவிட்டன. பாதிக்கப்பட்டவர் மருந்துகளைச் சாப்பிடாமல் நிறுத்திவிடலாமா?

A

அறிகுறிகள் நின்றவுடன் மருந்துகளைச் சாப்பிடுவதை நிறுத்திவிடலாம் என்று எண்ணவேண்டாம், அது ஒரு தவறான நம்பிக்கை. மருத்துவர் சொல்லும்வரை மருந்துகளைத் தொடரவேண்டும். மருந்துகள்தான் அறிகுறிகளைக் கட்டுக்குள் வைக்கின்றன; அவற்றை நிறுத்தினால், பாதிக்கப்பட்டவர் மீண்டும் அதே பிரச்னையைச் சந்திக்கக்கூடும். ஒவ்வொருமுறை பிரச்னை திரும்ப வரும்போதும், பாதிக்கப்பட்டவரின் செயல்திறன் குறைகிறது, இந்தக் குறைபாட்டைக் கையாள்வது சிரமமாகிறது.

பாதிக்கப்பட்டவர்களைப் பார்த்துக்கொள்கிற பலர், தங்களுடைய அன்புக்குரியவர் மருந்துகளுக்கு அடிமையாகிவிடுவாரோ என்று நம்புகிறார்கள், மருந்துகளால் தீவிரப் பின்விளைவுகள் உள்ளன என்று எண்ணுகிறார்கள். ஸ்கிஜோஃப்ரெனியாவைக் குணப்படுத்தப் பயன்படுத்தப்படும் மருந்துகளால் இதுபோன்ற விளைவுகள் ஏற்படாது. ஒருவருக்கு மருந்துகளைப் பரிந்துரைப்பதற்குமுன்னால், மருத்துவர் நன்கு சிந்திக்கிறார்: இந்த மருந்தைச் சாப்பிடுவதால் ஏற்படக்கூடிய பின்விளைவுகளோடு ஒப்பிடும்போது, இதனால் கிடைக்கப்போகும் பலன் அதிகமாக இருக்குமா? இப்படி நன்கு யோசித்துதான் அவர் ஒரு மருந்தைச் சிபாரிசு செய்வார். பாதிக்கப்பட்டவருக்குச் சிபாரிசு செய்யப்படும் மருந்துகளைப்பற்றி உங்களுக்கு ஏதேனும் கவலைகள் இருந்தால், உங்கள் மருத்துவரிடம் அதைப்பற்றிப் பேசுங்கள்.

Q

பிரச்னை திரும்ப வருகிறதா என்பதை நான் எப்படித் தெரிந்துகொள்வது?

A

ஒருவருக்குப் பிரச்னை திரும்ப வருகிறது என்றால், ஆரம்பத்தில் அவருக்கு என்ன அறிகுறிகள் இருந்தனவோ அவையே திரும்ப வரும்: எரிச்சல், தூக்கமின்மை, மனோநிலை மாற்றங்கள், சந்தேகம் அல்லது சித்தபிரமை, சமூகத்திலிருந்து விலகியிருத்தல், திடீர் கோபம், காரணமில்லாமல் சிரித்தல், சுத்தமாக இருத்தல், தன்னை அழகுபடுத்திக்கொள்ளுதலில் ஆர்வமின்மை. ஒருவருக்குப் பிரச்னை திரும்ப வந்திருப்பதை அடையாளம் கண்டு, விரைவில் சிகிச்சை வழங்குவது முக்கியம்.

Q

புனர்வாழ்வு என்றால் என்ன? அது அவசியமா?

A

ஸ்கிஜிஃப்ரெனியா பிரச்னை கொண்ட ஒருவருக்கு, புனர்வாழ்வு அடிக்கடி தேவைப்படும். இந்தக் குறைபாடு கண்ணுக்குத் தெரிவதில்லை, ஆனால், அது பாதிக்கப்பட்டவரின் சிந்தனைகள் மற்றும் நடவடிக்கைகளைப் பாதிக்கிறது. இந்தக் குறைபாட்டின் தாக்கத்தைப்பற்றித் தெரிந்துகொள்ளாத குடும்ப உறுப்பினர்களும் நண்பர்களும், பாதிக்கப்பட்டவரை மோசமான மனோநிலையில் இருக்கிறார், சோம்பேறி, பிறர் பேச்சைக் கேட்காதவர் என்றெல்லாம் எண்ணக்கூடும்.

இந்தப் பிரச்னைக்கு வழங்கப்படும் மருந்துகளால் சில தொந்தரவு தரும் தீவிர அறிகுறிகள் குறைக்கப்படும். ஆனால், பாதிக்கப்பட்டவர் இன்னும் எதிர்மறை அறிகுறிகளுடன் போராடிக்கொண்டுதான் இருப்பார். உதாரணமாக, அவர் யாருடனும் பேசாமலிருக்கலாம், தனியே இருக்கலாம், இதற்குக் காரணம், அவருக்குள் இன்னும் அதே பழைய பயங்கள், தடைகள் இருக்கின்றன. இவர்கள் தங்களுடைய வாழ்வைச் சுதந்தரமாக வாழவும், பிறருடன் பழகவும் உதவுவதற்காக, சில குறிப்பிட்ட திறன்களைக் கற்றுத்தரவேண்டும், இதுதான் புனர்வாழ்வு எனப்படுகிறது.

புனர்வாழ்வின்போது, பாதிக்கப்பட்டவர்கள் தங்களுடைய குடும்ப உறுப்பினர்கள் அல்லாத பிற வெளிநபர்களுடன் பேசுவார்கள் (பணியாளர்கள் மற்றும் பிற நோயாளிகள்), தங்களது பொழுதுபோக்குகளில்/ ஆர்வங்களில் கவனம் செலுத்துவார்கள், நாள்முழுவதும் பல்வேறு வேலைகளைச் செய்துகொண்டு, ஒரு கட்டமைப்பான கால அட்டவணையைப் பின்பற்றுவார்கள், அது தொடர்ந்து கண்காணிக்கப்படும்.

புனர்வாழ்வு என்பது, பாதிக்கப்பட்டவருக்கும் உண்டு, அவருடைய குடும்பத்தினருக்கும் உண்டு. பாதிக்கப்பட்டவர்களைக் கவனித்துக்கொள்கிறவர்களுக்கு இந்தக் குறைபாட்டின் தன்மையைப்பற்றிய முழு விவரங்களும் தரப்படுகின்றன, அவர்கள் பாதிக்கப்பட்டோருக்கு எப்படி ஆதரவளிக்கலாம், அவர்களுடன் எப்படிப் பேசலாம், பிற பழகுமுறைப் பிரச்னைகளை எப்படிக் கையாளலாம் என்றெல்லாம் சொல்லித்தரப்படுகிறது.

Q

எனக்குத் தெரிந்த யாருக்காவது ஸ்கிஜோஃப்ரெனியா பிரச்னை இருந்தால், அவர்கள் திருமணம் செய்துகொள்ளலாமா? ஒருவர் திருமணம் (திருமணம்பற்றிய சட்டம்சார்ந்த பதிவைக் காணவும்) செய்துகொள்வதால் ஸ்கிஜோஃப்ரெனியா குணமாகிவிடுமா?

A

மனக்குறைபாடு கொண்ட ஒருவருக்குத் திருமணம் செய்துவைத்தால் அவர்கள் குணமாகிவிடுவார்கள் என்ற வலுவான நம்பிக்கை நம் நாட்டில் உள்ளது. அது உண்மையல்ல.

அதற்காக, ஸ்கிஜோஃப்ரெனியா பிரச்னை கொண்ட ஒருவர் திருமணம் செய்துகொள்ளக்கூடாது என்று அர்த்தமில்லை, அவர்கள் கண்டிப்பாகத் திருமணம் செய்துகொண்டு மகிழ்ச்சியாக வாழலாம், ஆனால், அதற்கு அவர்களுடைய அறிகுறிகள் கட்டுக்குள் இருக்கவேண்டும், அவர் திருமணம் செய்துகொள்ளப்போகும் நபருக்கு இந்தப் பிரச்னையைப்பற்றி முழுமையாகச் சொல்லப்படவேண்டும், அவர்கள் இந்தப் பொறுப்பை ஏற்றுக்கொள்ள விரும்பவேண்டும். அப்படியில்லாமல், இந்தக் குறைபாட்டை ஏற்றுக்கொள்ளாத, அவர்களைக் கவனித்துக்கொள்ள விரும்பாத ஒருவரை அவர்கள் திருமணம் செய்துகொண்டால், பிரச்னைகள் திரும்ப வரும், நிலைமை இன்னும் மோசமாகும். பாதிக்கப்பட்டவரைத் திருமணம் செய்துகொள்ளப்போகிறவரிடமும் அவரது குடும்ப உறுப்பினர்களிடமும் இந்தப் பிரச்னையைப்பற்றியும், அதற்காக அவர் எடுத்துக்கொண்டிருக்கும் சிகிச்சையைப்பற்றியும் தெரிவித்துவிடுவது நல்லது.  

ஸ்கிஜோஃப்ரெனியா பிரச்னை கொண்ட ஒருவர் தாராளமாகத் திருமணம் செய்துகொள்ளலாம். ஆனால், அவரைத் திருமணம் செய்துகொள்ளப்போகிறவர் இந்தக் குறைபாட்டுடன் அவரை ஏற்றுக்கொள்ளவேண்டும், அதனால் தனக்கு வரப்போகிற புதிய பொறுப்புகளுக்கு அந்தத் துணைவர் தயாராக இருக்கவேண்டும். பாதிக்கப்பட்டவருக்கு இவற்றைத் தெரிவிக்கவேண்டும், அல்லது, அவர் இவற்றுக்குத் தயாராகவேண்டும்:

  • உடல்சார்ந்த மற்றும் உணர்வுசார்ந்த நெருக்கம்
  • நிதி மேலாண்மை, குடும்ப மேலாண்மை மற்றும் பிற பொறுப்புகள் (அவரது துணைவர் இந்தப் பணிகளை ஏற்றுக்கொள்ள விரும்பினாலன்றி)

Q

பாதிக்கப்பட்டவரைத் திருமணம் செய்துகொள்ளப்போகிறவர்/ அவர்களைக் கவனித்துக்கொள்கிறவர் சிந்திக்கவேண்டிய விஷயங்கள்:

A

  • பாதிக்கப்பட்டவர் தன் துணைவருடன் எந்த அளவு மனம் திறந்து பேசுகிறார், விவரங்களைப் பகிர்ந்துகொள்கிறார்?
  • பாதிக்கப்பட்டவரின் நிதி விஷயங்கள் அல்லது சொத்து விஷயங்கள் தொடர்பாக ஏதேனும் சட்டபூர்வமான சிக்கல்கள் உள்ளனவா, அவற்றைக் கவனிக்கவேண்டுமா?
  • பாதிக்கப்பட்டவருக்குக் குழந்தை பிறக்கும் வாய்ப்புகள் இந்தப் பிரச்னைக்காக அவர் உட்கொள்ளும் மருந்துகளால் குறையுமா? அவர் பாலியல்ரீதியில் செயல்படாத நிலை உண்டாகுமா? இது அவர்களுடைய உறவில் ஒரு பிரச்னையாகக்கூடுமா?
  • குழந்தைகளுக்கு இதே குறைபாடு வருவதற்கான வாய்ப்புகள் என்ன?
  • இவரது துணைவர், இவரைக் கவனித்துக்கொள்ளப்போகும் முதன்மையான நபர் என்ற பொறுப்பை ஏற்கத் தயாராக இருப்பாரா? இல்லை என்றால், வேறு என்ன மாற்று ஏற்பாடுகளைச் செய்யவேண்டும்?

இந்தப் பிரச்னையால் பாதிக்கப்பட்ட ஒருவரைத் திருமணம் செய்துகொள்ளப்போகிறவர், அல்லது, அவரைக் கவனித்துக்கொள்ளப்போகிறவர் இதுபற்றித் தெளிவுபெறுவதற்காக மனநல நிபுணரைச் சந்தித்துப் பேசுவது நல்லது.

Q

ஸ்கிஜோஃப்ரெனியா பிரச்னைகொண்ட ஒருவர் தன் குடும்பம் அல்லது நண்பர்களிடமிருந்து பிரிந்து தனிமையாக உணராதபடி நான் எப்படிப் பார்த்துக்கொள்வது? நாம் அவரை 'இயல்பாக' ஆக்க இயலுமா?

A

ஸ்கிஜோஃப்ரெனியாவை வெல்லும் போராட்டம் சவாலானதுதான், பாதிக்கப்பட்டவருக்குமட்டுமல்ல, அவரைக் கவனித்துக்கொள்கிறவருக்கும்! பாதிக்கப்பட்டவர் விநோதமானமுறையில் நடந்துகொள்ளும்போது, மருந்து சாப்பிட மறுக்கும்போது, அல்லது தன்னுடைய சொந்த நண்பர்கள், குடும்ப உறுப்பினர்கள் தனக்கு எதிராகச் சதித்திட்டம் தயாரிக்கிறார்கள் என்று சந்தேகப்படும்போது, இவற்றைப் பார்க்கிறவர்களுக்கு எரிச்சல் வருவது சகஜமே.

அதுபோன்ற நேரங்களில், கொஞ்சம் நிதானமாகச் சிந்தியுங்கள். அவரை வெறும் குறைபாடுகொண்ட நபராகக் குறுக்கிவிடாதீர்கள். ஸ்கிஜோஃப்ரெனியா பிரச்னைகொண்ட ஒருவருக்கு, இதுபோன்ற நோய்சார்ந்த அடையாளங்கள் பெரும் அழுத்தத்தைக் கொண்டுவரும். தன்னுடைய அடையாளத்தைப்பற்றிய கேள்விகளை அவர்கள் கேட்டுக்கொள்வார்கள், உதாரணமாக: "நான் யார்?" பாதிக்கப்பட்டவரைக் கவனித்துக்கொள்கிறவர், அவருடைய சுய மதிப்பையும் கண்ணியத்தையும் மீட்க முயற்சி செய்யலாம். அவர்கள் எல்லாராலும் மதிக்கப்படுகிறார்கள் என்பதை அவர்களுக்குப் புரியவைக்கலாம். இதற்குச் சில வழிகள்:

  • குடும்பத் தீர்மானங்களில் அவர்களைக் கலந்துகொள்ளச்செய்தல்: இதுபோன்ற விவாதங்களின்போது, பாதிக்கப்பட்டவர் அதிகம் பேசாமல் உட்கார்ந்திருக்கலாம். ஆனால், இந்த விவாதங்களில் தானும் பங்கேற்கிறோம் என்ற எண்ணம் அவர்களுக்கு மகிழ்ச்சி தரும், உங்களோடு கலந்திருக்கும் உணர்வைத் தரும்.

  • சின்னச்சின்ன வழிகளில் அவர்களைப் பிறருடன் பழகச்செய்தல்: இந்தியாவில் இதுபோன்ற பிரச்னைகளால் பாதிக்கப்பட்டவர்கள் தனியேதான் வைக்கப்படுகிறார்கள், அவர்கள் தங்களுடைய நண்பர்களை, பொதுமக்களைப் பார்க்க இயலுவதில்லை. காரணம், சமூகம் தங்களைப்பற்றித் தவறாக நினைத்துவிடுமோ என்கிற கூச்சமும், பாதிக்கப்பட்டவர் அவர்களைக் காயப்படுத்திவிடுவாரோ என்ற எண்ணமும்தான். பாதிக்கப்பட்டவர் தனியாக உள்ளபோது, அவரால் தன்னுடைய உணர்வுகளை வெளிப்படுத்த இயலாது. அவர்கள் அந்த உணர்வுகளைக் கோபமாக அல்லது காயமாக வெளிப்படுத்தக்கூடும், அப்போது, அவர்களைப் பார்த்துக்கொள்கிறவர்கள், 'நோயினால் இவர் இப்படிப் பேசுகிறார்' என்று எண்ணலாம். இதனால், பாதிக்கப்பட்டவர் மனத்தில் எதிர்மறையான தாக்கம் ஏற்படலாம்.  பாதிக்கப்பட்டவரைப் பார்த்துக்கொள்கிறவர்கள், 'நீங்கள் பிறருடன் கலந்து பழகலாமே' என்று சொல்லிச் சம்மதிக்கச்செய்ய முயலலாம். ஆனால், அதுபற்றிய தீர்மானத்தை பாதிக்கப்பட்டவரே எடுக்கட்டும்.

  • வெளிப்படையாகப் பேசுதல்: முக்கியமான விஷயங்களை அவர்களிடமிருந்து மறைக்காதீர்கள், குறிப்பாக, பிற குடும்ப உறுப்பினர்களைப்பற்றிய செய்திகளை அவர்களிடம் சொல்லாமல் மறைக்காதீர்கள், அதைச் சொன்னால் அவர்கள் வருந்துவார்களோ என்று எண்ணாதீர்கள். அப்படி வருத்தத்தை ஏற்படுத்தக்கூடிய ஒரு செய்தியை நீங்கள் மறைத்து, அதை அவர்கள் எதேச்சையாகவோ, இன்னொரு வெளிநபர்மூலமாகவோ தெரிந்துகொள்ளும்போது, அந்த வருத்தம் இன்னும் பெரியதாக இருக்கும். பாதிக்கப்பட்டவரிடம் குடும்பப் பிரச்னைகளைப்பற்றி எப்படிப் பேசுவது என்று உங்களுக்குத் தெரியாவிட்டால், உங்களுடைய மருத்துவரிடம் அல்லது உங்கள் ஆதரவுக்குழுவிடம் இதுபற்றிப் பேசுங்கள்.

Q

எனக்கு ஓர் ஆதரவுக்குழு ஏன் தேவை?

A

ஸ்கிஜோஃப்ரெனியாபோன்ற சில மனக் குறைபாடுகளை வாழ்நாள்முழுவதும் கையாளவேண்டும். மனநல மருத்துவர் மருந்துகளைச் சிபாரிசு செய்யலாம், ஆலோசனை வழங்கலாம், ஆனால், பாதிக்கப்பட்டவர் ஒரு சுதந்தரமான, செயலுள்ள வாழ்க்கையை வாழவேண்டுமென்றால், அதற்கு மிக முக்கியமான பொறுப்பை ஆற்றுகிறவர்கள் அவர்களுடைய குடும்பத்தினரும் நண்பர்களும்தான். பாதிக்கப்பட்டவரைக் கவனித்துக்கொள்கிறவர், 'இவரைப் பல ஆண்டுகள் இப்படிப் பார்த்துக்கொள்ளவேண்டுமே' என்று எண்ணி திகைக்கலாம். அதுபோன்ற நேரங்களில், ஓர் ஆதரவுக்குழு பாதிக்கப்பட்டவருக்கும் அவரைப் பார்த்துக்கொள்கிறவருக்கும் உதவலாம்:

  • இதேபோன்ற பிரச்னைகளைச் சமாளித்துவரும் மற்றவர்களை அவர்கள் சந்திக்கச்செய்யலாம். அவர்களுடைய கதைகளைக் கேட்பதன்மூலம், பாதிக்கப்பட்டவரும் அவரைப் பார்த்துக்கொள்கிறவர்களும் 'இதேபோன்ற பிரச்னை பலருக்கும் உள்ளதுபோல' என்று புரிந்துகொள்வார்கள்.
  • என்ன செய்யவேண்டும், என்ன செய்யக்கூடாது என்பதைப் பிறருடைய அனுபவங்களிலிருந்து அவர்கள் கற்றுக்கொள்ளலாம்
  • இந்தக் குறைபாட்டைப்பற்றி அவர்கள் மேலும் நன்றாகப் புரிந்துகொள்ளலாம், இதன் அறிகுறிகளை எப்படிச் சமாளிப்பது என்று தெரிந்துகொள்ளலாம்
  • பாதிக்கப்பட்டவரைச் சுதந்தரமாக வாழச்செய்ய என்ன வழி என்பதைத் தெரிந்துகொள்ளலாம்
  • குடும்பத்தினர் அற்பமாக நினைக்கிற, அல்லது மருத்துவரிடம் கேட்கத் தயங்குகிற/ சங்கடப்படுகிற விஷயங்களை அவர்கள் தங்களுக்குள் பேசிக்கொள்ளலாம்

Q

ஸ்கிஜோஃப்ரெனியாவைப்பற்றி என்னுடைய நண்பர்கள் மற்றும் உறவினர்களிடம் நான் எப்படிப் பேசுவது? நம்முடைய சமூகத்தில் மனநலப் பிரச்னைகளைப்பற்றி ஒரு களங்கவுணர்வு இருக்கிறது...

A

இந்தக் குறைபாட்டைப்பற்றிப் பிறரிடம் பேசுவதற்குமுன்னால், சம்பந்தப்பட்டவர்கள் ஒரு விஷயத்தைத் தாங்களே ஏற்றுக்கொள்ளவேண்டும்: பாதிக்கப்பட்டவரால் இந்தப் பிரச்னையைக் கட்டுப்படுத்த இயலாது, ஆகவே, அவர் அதற்குப் 'பொறுப்பாளி' அல்ல. இதை ஏற்றுக்கொண்டபிறகு, இதைப்பற்றி உறவினர்கள் மற்றும் நண்பர்களிடம் பேசுவது எளிதாகிவிடும்.

அப்படிப் பேசும்போது, யாராவது சட்டென்று ஏதேனும் பேசினாலோ, கேள்வி கேட்டாலோ, அதற்கு அதீதமாக உணர்ச்சிவயப்படக்கூடாது. காய்ச்சல் அல்லது மற்ற உடல் நோய்களைப்பற்றி யாராவது கேள்வி கேட்டால் அதற்குப் பதில் சொல்வதுபோல் இதற்கும் பதில் சொல்லவேண்டும். இது ஓர் உயிரியல் பிரச்னை என்பதை அவர்களுக்குப் புரியவைக்கவேண்டும், மூளையில் ஒரு குறிப்பிட்ட ரசாயனம் சமநிலையற்றுக் காணப்படுவதால்தான் அவர்களுடைய பழக்கவழக்கங்கள் மாறியுள்ளன என்பதையும், பாதிக்கப்பட்டவரால் அதைக் கட்டுப்படுத்த இயலாது என்பதையும், இது யாருக்குவேண்டுமானாலும் நிகழலாம் என்பதையும் தெரிக்கவேண்டும். இந்தச் செய்தியைச் சொல்வதன்மூலம், பாதிக்கப்பட்டவருக்கும் நல்லது, அவர்களைப் பார்த்துக்கொள்கிறவர்களுக்கும் நல்லது, பிறருக்கும் நல்லது.

Related Stories

No stories found.
logo
வொய்ட் ஸ்வான் ஃபவுண்டேஷன்
tamil.whiteswanfoundation.org