பேட்டி: அவருடைய துணைவருக்கு மனநலப் பிரச்னை இருக்கிறதோ?

பேட்டி: அவருடைய துணைவருக்கு மனநலப் பிரச்னை இருக்கிறதோ?

மனநலப் பிரச்னையானது தம்பதியருக்குப் பெரிய சவாலாக இருக்கலாம். மனநலப் பிரச்னை கொண்ட ஒருவருடன் உறவில் இருக்கும் ஒருவர் தன்னுடைய அன்றாட வேலைகளைக் கையாண்டபடி அவர்களைக் கவனித்துக்கொள்ளவேண்டியிருக்கலாம்; இந்தச் செயல்முறையில் அவர்கள் களைத்துப்போய்ச் சோந்துவிடாமல் பார்த்துக்கொள்வதும் முக்கியம். ஓர் உறவில் இருக்கும் இருவரில் ஒருவருக்கு மனநலப் பிரச்னை வரும்போது அந்த உறவை எப்படிக் கையாள்வது என்பதைப் புரிந்துகொள்வதற்காக, மருத்துவ உளவியலாளர் பல்லவி டோமாரிடம் பேசுகிறார் ரித்திகா தலிவால். அந்தப் பேட்டியிலிருந்து சில சுருக்கக் குறிப்புகள்:

தன்னுடைய துணைவர் மனச்சோர்வு/பதற்றத்தை அனுபவிக்கிறார் என்பதை ஒருவர் எப்படித் தெரிந்துகொள்வது?

மருத்துவ மனச்சோர்வைப் பொறுத்தவரை, பொதுவாக அவர்களுடைய மனநிலையில் கீழ்நோக்கிய ஒரு போக்கைக் காணலாம். முன்பைவிட அடிக்கடி அவர்கள் சோகமாக உணர்வார்கள், அந்தச் சோக உணர்வு நெடுநேரத்துக்குத் தொடரும். மற்ற நேரங்களில் அவர்கள் மகிழ்ந்து அனுபவித்துச் செய்த விஷயங்களில் அவர்கள் ஆர்வமிழப்பதையும் காணலாம். அவர்கள் மிக விரைவில் களைப்படையக்கூடும், அவர்களுடைய ஒட்டுமொத்த உளவியல் சமூகவியல் செயல்பாடுகள் பாதிக்கப்படலாம்; எடுத்துக்காட்டாக, பணியில் அவர்கள் செயல்படும் நிலை, மக்களுடன் உண்மையில் சமூகரீதியில் கலந்து பழக விரும்பாமலிருத்தல்போன்ற அவர்களுடைய வாழ்க்கை அம்சங்கள் அனைத்திலும் குறைபாடு அல்லது சிரமம் இருக்கலாம். ஒருவேளை அவர்கள் செயல்பட்டாலும், அதில் அதிகச் சிரமங்களை அனுபவிக்கலாம், அதற்கு அதிக முனைப்பு தேவைப்படலாம். இத்துடன், மனச்சோர்வினால் அவர்களுடைய தூக்கம் மற்றும் பசியிலும் குறிப்பிடத்தக்க மாற்றங்களைக் காணலாம். அவர்கள் அதிக மந்தமாக, நம்பிக்கையில்லாமல் உணரலாம், ஒருவிதமான மதிப்பின்மையுணர்வை அனுபவிக்கலாம். இதுபோன்ற விஷயங்கள் உரையாடல்களிலும் வரலாம். சில குறிப்பிட்ட சூழ்நிலைகளில், பாதிக்கப்பட்டவர் தன்னைத்தானே காயப்படுத்திக்கொள்வதுபற்றியும் பேசலாம், தான் இனி வாழ விரும்பவில்லை என்றும் சொல்லலாம்.

பதற்றக் குறைபாடுகள் பல வேறுபட்ட வழிகளில் வெளிப்படலாம். ஒன்று, பொதுவான பதற்றக் குறைபாடு, இந்தப் பிரச்னை கொண்டோருக்குப் பொதுவாக எல்லாவற்றிலும் பதற்றம் ஏற்படலாம்; அதாவது, எதுவும் எல்லாமும் அவருக்குப் பதற்றம் தரலாம். இத்துடன் சில குறிப்பிட்ட உடல்சார்ந்த அறிகுறிகளும் வரலாம்: படபடப்பு, வியர்வை மற்றும் நடுக்கங்கள். அச்சக் குறைபாட்டின் வேறு வெளிப்பாடுகளில், தீவிரமான பதற்ற அனுபவங்கள் நிகழ்கின்றன; இவை குறுகிய காலகட்டத்துக்கே நீடித்தாலும், பாதிக்கப்பட்டவரை மிகவும் சோர்வாக்கிவிடுகின்றன. உண்மையில், அச்சக் குறைபாட்டில் உடல்சார்ந்த வெளிப்பாடானது அதிகம் தெரிகிறது, பீதியுணர்வுகளுக்கு வழிவகுக்கிறது.

துணைவர் இதற்காக உதவியை நாட விரும்பாவிட்டால் என்ன செய்வது?

பிறர் புரிந்துகொள்ளவேண்டிய ஒரு விஷயம், உதவியை நாடுவதே அவர்களுக்கு மிகவும் சோர்வைத்தரலாம், அதாவது, தங்களுக்கு ஒரு பிரச்னை இருக்கிறது, அதற்கு ஒரு குறிப்பிட்ட வகைச் சிகிச்சை தேவை என்பதை ஏற்றுக்கொள்வது. ஆகவே, ஒருவர் முதலில் தன்னுடைய துணைவருடைய பீதிகளைப் புரிந்துகொள்ள முயலவேண்டும். அதாவது, அவர்கள் எந்தமாதிரியான உணர்வுகளை அனுபவிக்கிறார்கள், எதைப்பற்றிக் கவலைப்படுகிறார்கள் என்று தெரிந்துகொள்ளவேண்டும். அவர்கள் உதவியை நாடவேண்டும்,  யாரிடமாவது பேச முயலவேண்டும் என்று இவர்கள் நிச்சயம் ஊக்கப்படுத்தவேண்டும். ஒருவர் இதைப்பற்றிக் கவலைகொண்டால், முதல்முறை ஓர் இணை நிகழ்வை அமைப்பது உண்மையில் உதவலாம்; இதன்மூலம் அவருக்குப்பதில் அவருடைய துணைவர் மருத்துவரிடம் அதிகம் பேசலாம். அவர்கள் நேரில் செல்ல விரும்பாவிட்டால், உதவித் தொலைபேசி எண்களை அல்லது இணையம் சார்ந்த ஆலோசனை நிகழ்வுகளைப் பயன்படுத்தும்படி இவர்கள் ஊக்குவிக்கலாம். இவற்றில் எதுவும் சரிப்படாவிட்டால், அவர்களுடைய துணைவர்கள்மட்டும் சென்று மருத்துவரைச் சந்திக்கலாம், சூழ்நிலையை விவரிக்கலாம்; அதன்பிறகு, அவர்களுடைய தனித்துவமான சூழ்நிலை அல்லது அவர்கள் சந்திக்கும் பிரச்னைகளைப் பொறுத்து, மருத்துவர் அவர்களுடைய துணைவர்களுக்கு இன்னும் சிறப்பாக வழிகாட்டலாம்; அவர்களுக்கு எதைத் தெரிவிப்பது, அவர்கள் வெளியில் வந்து உதவியை நாடுவதற்கு அவர்களை எப்படி ஊக்குவிப்பது என்பதுபோன்றவற்றை விவரிக்கலாம்.

நான் மிக முக்கியமாகக் கருதும் இன்னொரு விஷயம், அன்பையும் ஆதரவையும் வழங்க இயலுவது. மன நலப் பிரச்னை கொண்ட ஒருவருக்குத் தன்னுடைய நெருங்கியவர்கள், அன்பானவர்களிடமிருந்து வரும் ஏற்றுக்கொள்ளல் மிக மிக முக்கியமானது. ஆகவே, சில நேரங்களில், அவர்களுக்காக அருகில் இருப்பதுதான் மிக முக்கியமான விஷயம்.

ஒருவர் பாதுகாப்பாகவும், தான் நேசிக்கப்படுகிறோம் என்றும் உணர்வதற்கு அவருடைய துணைவர் என்ன செய்யலாம்?

தன்னுடைய துணைவருக்கு ஒரு மன நலப் பிரச்னை வந்திருக்கிறது என்பதைத் தெரிந்துகொள்கிறவர்கள், அதைப்பற்றித் தங்களுக்குத் தாங்களே அறிவூட்டிக்கொள்வது மிகவும் முக்கியம். அதாவது, அவருக்கு வந்திருக்கும் பிரச்னை என்ன, அது எப்படிப்பட்டது, அதனால் என்னென்ன நடக்கும் என்பதெல்லாம் தெரியாமல் இவரால் எதையும் செய்ய இயலாது. ஆகவே, அறிகுறிகளைப் புரிந்துகொள்ள முயலலாம்; காரணங்களை, இதற்குக் கிடைக்கும் சிகிச்சைகளைப் புரிந்துகொள்ள முயலலாம். மருத்துவர்களைச் சந்திக்கலாம்; தன்னுடைய துணைவருக்குச் சிகிச்சை வழங்கும் குழுவைச் சந்திக்கலாம் - இது மிக அவசியமான ஒன்று. இத்துடன், அந்தப் பிரச்னையைத் தன்னுடைய துணைவர் எப்படி அனுபவிக்கிறார் என்பதைப் புரிந்துகொள்வதும் மிக முக்கியம். ஏனெனில், அறிகுறிகள் ஒரேமாதிரி இருந்தாலும், எது அவர்களை மிகவும் அச்சுறுத்துகிறது, எது அவர்களுக்கு மிகவும் சிரமமாக இருக்கிறது என்பதை இவர் புரிந்துகொள்ள முயல்வது மிகவும் முக்கியம்.

துணைவரைக் கவனித்துக்கொள்வதிலேயே ஒருவருடைய பெரும்பகுதி நேரம் சென்றுவிட்டால், அவர் தன்னைக் கவனித்துக்கொள்வது எப்படி?

நோயாளி இன்னும் நன்றாக உணர்வதற்கு உதவவேண்டும் என்பதில்தான் எல்லாரும் கவனம்செலுத்துவார்கள்; இதனால், அவர்களை முதன்மையாகக் கவனித்துக்கொள்கிறவர்கள், இந்தச் சூழ்நிலையில் அவர்களுடைய துணைவர்கள், பல சவால்களைச் சந்திக்கவேண்டியிருக்கிறது. இவற்றையெல்லாம் கையாள்வதற்குத் தாங்கள் தயாராக இல்லை என்று அவர்கள் உணரலாம். பாதிக்கப்பட்டவருடைய துணைவர் புரிந்துகொள்ளவேண்டிய முதல் விஷயமாக நான் நினைப்பது, இந்தப் பிரச்னையின் தீர்வு வெறுமனே அவர்கள் கையில் இல்லை; தன்னந்தனியாக அவர்களால் தங்களுடைய துணைவரைக் குணப்படுத்திவிட இயலாது. தன்னைக் கவனித்துக்கொள்வதற்காக அவர்கள் சில குறிப்பிட்ட இடங்களை உருவாக்கவேண்டும். தாங்கள் உண்மையில் உரையாடக்கூடிய நண்பர்கள், குடும்பத்தினரிடம் அவர்கள் இதுபற்றிப் பேசலாம். ஏனெனில், அன்றாடச் செயல்பாடுகளைச் செய்யச் சிரமப்படக்கூடிய, சமூகரீதியில் பிறருடன் கலந்து பழக விரும்பாமலிருக்கக்கூடிய, அல்லது, வேலை இல்லாமலிருக்கக்கூடிய ஒரு துணைவருடன் வாழ்வது மிகுந்த அழுத்தத்தை உருவாக்கலாம்; இது அவர்களுக்கிடையிலான உறவிலும் வெளிப்படலாம். ஆகவே, தாங்கள் அணுகிப் பேசக்கூடிய நண்பர்கள், குடும்பத்தினர் இருப்பதை அவர்கள் உறுதிசெய்துகொள்ளவேண்டும். தாங்கள் விரும்பும் விஷயங்களைச் செய்வதற்கு நேரம் எடுத்துக்கொள்ளவேண்டும். பிரச்னை தங்களால் கையாள இயலாத அளவுக்குப் பெரிதாகிறது என்று அவர்கள் நினைத்தால், தயங்காமல் நிபுணர் உதவியை நாடவேண்டும்.

Related Stories

No stories found.
வொய்ட் ஸ்வான் ஃபவுண்டேஷன்
tamil.whiteswanfoundation.org