கவனித்துக்கொள்ளுதல்

மனநலப் பிரச்னையுள்ளோரைக் கவனித்துக்கொள்ளுதல்: ஓர் அறிமுகம்

பாதிக்கப்பட்டவர்களைப் பார்த்துக்கொள்கிறவர்கள், அவர்கள் தங்கள் இயல்பு வாழ்க்கையைப் பின்பற்ற உதவுவதில் முக்கியப் பங்காற்றுகிறார்கள்

வொய்ட் ஸ்வான் ஃபவுண்டேஷன்

ஆரோக்கியமாக வாழ்ந்துகொண்டிருப்பவர்களுக்கு திடீரென்று ஒரு விபத்து நிகழ்ந்து அவருடைய உடலில் ஏதோ பிரச்னை வந்துவிடுகிறது என்று வைத்துக்கொள்வோம். அப்போது அவர்கள் தங்களுடைய தினசரி நடவடிக்கைகளுக்காக இன்னொருவருடைய உதவியை எதிர்பார்க்கத்தொடங்கிவிடுவார்கள். அவர்களுக்கு மருத்துவமனைகள் சிகிச்சை வழங்கலாம், ஆனால் சிகிச்சைக்குப் பின் வீடு திரும்பிய பிறகு அவர்களுடைய அன்புக்குரியவர்கள்தான் அவர்களைக் கவனித்துக்கொள்ள வேண்டியிருக்கும்.

அதேபோன்று மனநலப் பிரச்னைகளிலும் பாதிக்கப்பட்டவர்களை அன்புக்குரியவர்கள் கவனித்துக்கொண்டு, அவர்கள் ஒரு சுதந்தரமான வாழ்க்கையை வாழ்வதற்கு உதவுவது வழக்கம். மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு எப்படிப்பட்ட குறைபாடு வந்திருக்கிறது என்பதைப் பொறுத்து அவர்களுடைய தினசரி நடவடிக்கைகளுக்கு பிறருடைய உதவி தேவைப்படலாம். பெரும்பாலான நேரங்களில் இந்த உதவி பாதிக்கப்பட்டோருடைய குடும்ப உறுப்பினர்களிடமிருந்துதான் கிடைக்கிறது.

மனநலம் பாதிக்கப்பட்டவர்களைக் கவனித்துக்கொள்கிறவர்கள் சம்பளம் பெறுவதில்லை. பாதிக்கப்பட்டவர்கள் ஓர் இயல்பான வாழ்க்கையை வாழ்வதற்கு தங்களால் இயன்ற உதவி அனைத்தையும் இவர்கள் செய்கிறார்கள். பொதுவாக பெற்றோர், உடன்பிறந்தோர், கணவன் / மனைவி, சில நேரங்களில் நண்பர்கள் போன்றோர்தான் இந்த உதவிகளைச் செய்து வருகிறார்கள். இந்தியாவில் தொழில்முறையில் மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கான சேவைகளை வழங்குகிறவர்கள் ஆங்காங்கே இயங்கத்தொடங்கி இருக்கிறார்கள், ஆனால், பெரும்பாலான நேரங்களில் மனநலம் பாதிக்கப்பட்டவரை அவருடைய குடும்ப உறுப்பினர் ஒருவர்தான் கவனித்துக்கொள்கிறார்.

மனநலம் பாதிக்கப்பட்ட ஒருவருக்கு எந்த அளவு உதவி தேவையாக இருக்கிறது என்பது அவருக்கு ஏற்பட்டிருக்கிற பிரச்னையின் தன்மையையும் தீவிரத்தையும் பொறுத்து அமையும். சிலருக்கு அவர்கள் சொல்வதை பக்கத்தில் உட்கார்ந்து கேட்டாலே போதும். சிலருக்கு உடல் ரீதியிலான உதவிகளைச் செய்யவேண்டியிருக்கும், சிலருக்கு உணர்வு ரீதியிலான ஆதரவை வழங்க வேண்டியிருக்கும், ஆகவே மனநலம் பாதிக்கப்பட்டவர்களைக் கவனித்துக்கொள்கிறவர்கள் பல தளங்களில் பணியாற்றவேண்டியுள்ளது.

மனநலம் பாதிக்கப்பட்ட ஒருவருடைய குடும்பத்தின் வெவ்வேறு உறுப்பினர்கள் வெவ்வேறு பணிகளை ஏற்றுக்கொண்டு அவர்களுக்கு ஆதரவளிக்கிறார்கள். சிலர் அவர்களின் உடல் சார்ந்த பணிகளில் உதவுகிறார்கள், உதாரணமாக பல்தேய்ப்பது, குளிப்பது, கழிப்பறைக்குச் செல்வது போன்றவற்றில் உதவுகிறார்கள், வேறு சிலர் அவர்களுக்குத் தேவையான பொருளாதார உதவிகளை     செய்கிறார்கள். இன்னொரு குடும்ப உறுப்பினர் அவர்களுக்கு வலுவான உணர்வு ஆதரவை வழங்கலாம். இப்படி ஒவ்வொருவரும் ஒவ்வொரு பணியைச் செய்து, மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் ஓர் இயல்பான வாழ்க்கையை வாழ உதவுகிறார்கள். சில நேரங்களில் மனநலம் பாதிக்கப்பட்டவர்களைக் கவனித்துக்கொள்கிறவர்கள் சில குறிப்பிட்ட திறன்களை வளர்த்துக்கொள்ள வேண்டியிருக்கும். அதன்மூலம் அவர்கள் தங்கள் அன்புக்குரியவர்களை நல்ல முறையில் கவனித்துக்கொள்ள இயலும்.

மனநலம் பாதிக்கப்படவர்களைக் கவனித்துக்கொள்கிறவர்களுடைய சேவை, அவர்களுடைய துன்பத்தை மட்டும் குறைப்பதில்லை, அவர்கள் தங்களால் இயன்ற மட்டில் ஓர் இயல்பான வாழ்க்கையை வாழவும் உதவுகிறது. அந்தவகையில், மனநலம் பாதிக்கப்பட்டவர்களைக் கவனித்துக்கொள்கிறவர்கள் நம்முடைய சமூகக் கட்டமைப்புக்குச் சமூக மற்றும் பொருளாதாரச் சமநிலை கிடைப்பதற்கு முக்கியப்பங்காற்றுகிறார்கள். பொருளாதாரத்திற்கு அவர்களுடைய ஒட்டுமொத்தப் பங்களிப்பு குறிப்பிடத்தக்கது.

அதேசமயம் மனநலம் பாதிக்கப்பட்டவர்களைக் கவனித்துக்கொள்கிறவர்களின் வாழ்க்கை சவால்களும் போராட்டங்களும் நிறைந்தாகத்தான் இருக்கிறது. பாதிக்கப்பட்ட ஒருவரைக் கவனித்துக்கொள்வதற்கு அவர்களுக்கு உடல் வலிமையும் உணர்வுத் திறனும் தேவை, சமூக சூழலில் அவ்வளவாக ஆதரவற்ற நிலையையும் அவர்கள் எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. பெரும்பாலான நேரங்களில் மனநலம் பாதிக்கப்பட்டவர்களைக் கவனித்துக்கொள்கிறவர்களுக்கு மிகுந்த ஆதரவு தேவைப்படும், அது மருத்துவ ஆதரவாக இருக்கலாம், உணர்வு நிலை ஆதரவாக இருக்கலாம், அல்லது அவர்களுடன் உட்கார்ந்து பேசுகிற எளிய ஆதரவாக இருக்கலாம். இதன்மூலம் அவர்களால் தங்கள் அன்புக்குரியவர்களை நன்றாகக் கவனித்துக்கொள்ள இயலும், அதனுடன் அவர்களுடய வாழ்க்கைத்தரத்தை நன்றாக மேம்படுத்திக்கொள்ள இயலும்.

அநேகமாக நாம் எல்லாருமே நம் வாழ்நாளில் ஒருமுறையேனும், மனநலப் பிரச்னையால் பாதிக்கப்பட்ட ஒருவரைக் கவனித்துக்கொள்ளவேண்டியிருக்கலாம்.

இந்த இணைய தளத்தின் இந்தப் பிரிவில் நாம் மனநலம் பாதிக்கப்பட்டவர்களை பார்த்துக்கொள்கிற உலகத்திற்குள் ஆழமாகச் செல்வோம். அவர்களுடைய அனுபவங்களிலிருந்து பல விஷயங்களைக் கற்றுக்கொள்வோம். இதன்மூலம் மனநலம் பாதிக்கப்பட்டவர்களைக் கவனித்துக்கொள்கிறவர்களைப்பற்றிய விவரங்கள் மற்றும் தகவல்களை நாம் அறியலாம். அத்துடன் அவர்கள் நம் சமுகத்திற்கு அளிக்கும் முக்கியமான பங்கைப் பிறர் உணரவும் இயலும்.

வொய்ட் ஸ்வான் ஃபவுண்டேஷன்
tamil.whiteswanfoundation.org