கவனித்துக்கொள்ளுதல்

கவனித்துக்கொள்பவருக்கு ஏற்படும் அழுத்தம்

தீவிர மனநலப் பிரச்னை உள்ளவர்களைக் கவனித்துக்கொள்கிறவர்கள், உடல்ரீதியிலும் மனரீதியிலும் தங்களையும் கவனித்துக்கொள்வது முக்கியம்

வொய்ட் ஸ்வான் ஃபவுண்டேஷன்

கவனித்துக்கொள்பவருக்கு ஏற்படும் அழுத்தம் என்றால் என்ன?

தீவிர மனநலப் பிரச்னை அல்லது உளவியல் கொண்ட ஒருவரைக் கவனித்துக்கொள்வது சவாலான விஷயம்தான், இதற்குப் பல காரணங்கள் உண்டு. தங்களுடைய அன்புக்குரியவர்களுக்கு மனநலப் பிரச்னை ஏற்பட்டிருக்கிறது. ஒரு குறிப்பிட்ட காலகட்டத்திற்கு அவர்களால் இயல்பாக செயல்பட முடியாது என்ற உண்மையை ஏற்றுக்கொள்ளுதல் ; தங்களுடைய அன்புக்குரியவர்களைக் கவனித்துக்கொள்ளும்போது ஏற்படும் தீவிர உணர்வுகள், வீட்டில் உள்ள மற்ற வேலைகளையோ அல்லது அலுவலகத்திற்குச் சென்று திரும்புகிற பொறுப்பையோ கவனித்துக்கொண்ட படி இவர்களையும் கவனித்துக்கொள்வதால் ஏற்படும் யதார்த்தமான பிரச்னைகள். இத்துடன் சமூகமும் மனநலம் பாதிக்கப்பட்டவர்களை களங்க உணர்வோடு பார்க்கிறது அதனால் பல நேரங்களில் மனநலம்பாதிக்கப்பட்டவரைக் கவனித்துக்கொள்வது சிரமமான வேலையாகிவிடுகிறது.

“கவனித்துக்கொள்பவருக்கு ஏற்படும் அழுத்தம்” என்றால் தங்களுடைய அன்புக்குரிய ஒருவருக்கு ஏற்பட்டிருக்கும் பிரச்னை காரணமாக அவரைக் கவனித்துக்கொள்பவருக்கு ஏற்படும் மனத்துயரைக் குறிக்கிறது, அல்லது பாதிக்கப்பட்டவரை கவனித்துக்கொள்வதன்மூலம் அவருக்கு ஏற்படும் அழுத்தத்தைக் குறிக்கிறது.

கவனித்துக்கொள்பவரின் சுமை

தங்களுடைய அன்புக்குரிய ஒருவருக்கு ஏதாவது ஒரு மனநலப் பிரச்னை ஏற்பட்டால், அவரை கவனித்துக்கொள்கிறவருக்கு மனத் துயர் ஏற்படுவதும் அவர் தன் வாழ்க்கைமுறையில் சில மாற்றங்களைச் செய்துகொள்வதும் இயல்புதான். இதனை நிபுணர்கள் ‘கவனித்துக்கொள்பவரின் சுமை’ என அழைக்கிறார்கள். உதாரணமாக மனநலம் பாதிக்கப்பட்டவரைக் கவனித்துக்கொள்கிறவர் செய்யவேண்டிய மாற்றங்கள் : கவனித்துக்கொள்கிறவர்கள் என்ற பொறுப்பை அவர்கள் ஏற்றுக்கொண்டது முதல் அவர்கள் செய்யவேண்டிய வேலையின் அளவு அதிகமாகிவிடுகிறது; அவர்கள் தங்களுடைய அலுவலகத்தில் பல மாற்றங்களைச் செய்துகொள்ளவேண்டியிருக்கிறது அல்லது பாதிக்கப்பட்டவரை முழுநேரம் கவனித்துக்கொண்டால் அவர்கள் தங்கள் வேலையையே விட வேண்டி இருக்கிறது, பொருளாதார மாற்றங்கள் பல நிகழ்கின்றன. உதாரணமாக இந்தப் பிரச்னைகள் காரணமாக அவர்கள் செலவினங்கள் அதிகரிக்கக்கூடும், வருவாய் குறையைக்கூடும், இவற்றை எல்லாம் கையாளுதல் பல பெரிய மாற்றங்களை உண்டாக்கும். இத்துடன் சமூகம் சார்ந்த மாற்றங்களும் நிறைய நிகழ்கின்றன, அவர்களால் தங்கள் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் இயல்பாகக் கலந்து பழக முடியாது, மனநலம் பாதிக்கப்பட்டவர்களை சமூகம் களங்க உணர்வுடன் பார்ப்பதால் இவர்கள் தயக்கத்துடனே பிறருடன் பழக நேரிடும்.

மனத்துயரைத் தரக்கூடிய அறிகுறிகளைக் கொண்ட பிரச்னைகள்

சைக்கோஸில் அல்லது ஸ்கிஜோஃப்ரெனியா போன்ற தீவிர மனநலப் பிரச்னைகள் கொண்ட பெரும்பாலானோர், இரு விதமான அறிகுறிகளை வெளிப்படுத்துவார்கள் : நேர்விதமான அறிகுறிகள், எதிர்மறை அறிகுறிகள்.

 • நேர்விதமான அறிகுறிகள் என்பவை, மாயத்தோற்றங்களைக் காணுதல், பிரமைத்தோற்றங்களைக் காணுதல், ஒழுங்கற்ற பேச்சு, தனித்த விதமாக நடந்துகொள்ளுதல் போன்றவை
 • எதிர்மறை அறிகுறிகள் என்பவை, பெரும்பாலானோரிடம் காணப்படுகிற குணங்கள் அல்லது தன்மைகள்தான், ஆனால் ஒரு குறிப்பிட்ட மனநிலைக் குறைபாடுகள் உள்ளோரிடம் இவை காண்பப்டுவதில்லை: உதாரணமாக தங்களைத் தாங்களே கவனித்துக்கொள்ளுதல், சுற்றியிருக்கிற பிறருடன் பழகுதல், முகக்குறிப்புகள் அல்லது குரல் ஏற்ற இறக்கங்களின் மூலம் ஒரு குறிப்பிட்ட சூழ்நிலையில் தாங்கள் எப்படி உணர்கிறோம் என்பதை வெளிப்படுத்துதல் போன்றவை. மனநலம் பாதிக்கப்பட்ட சிலருக்கு அந்தப் பிரச்னை காரணமாக இந்தக் குறிப்பிட்ட செயல்களை செய்ய இயலுவதில்லை அல்லது ஓரளவே செய்ய இயலுகிறது. உதாரணமாக ஸ்கிஜோஃப்ரெனியா கொண்ட ஒருவர் தன்னைச் சுத்தமாக வைத்துக்கொள்ளாமல் இருக்கலாம். அவர் பிறருடன் பழக மறுக்கலாம், அவர்கள் தங்களுக்கு மிகவும் பிடித்த ஒரு விஷயத்தைப் பேசும்போது கூட அவர்களுடைய முகத்தோற்றம் ஆர்வமில்லாத்துபோல் இருக்கலாம் அல்லது வெறுமையாக இருக்கலாம். 

மனநலம் பாதிக்கப்பட்டவர்களைக் கவனித்துக்கொள்கிறவர்களுக்கு நேர்விதமான அறிகுறிகளை விட இந்த எதிர்விதமான அறிகுறிகள்தான் மிகுந்த மனச்சோர்வை உண்டாக்குகின்றன என்று நிபுணர்கள் கூறுகிறார்கள். இதற்கு இரண்டு முக்கியக் காரணங்கள் உண்டு, முதலாவதாக பாதிக்கப்பட்டவர்களுக்கு ஏற்படுகிற நேர்விதமான அறிகுறிகளை மருந்துகள் கட்டுப்படுத்திவிடும் என்று எதிர்பார்க்கலாம், ஆனால் இந்த எதிர்மறை அறிகுறிகளை மருந்துகள் கட்டுப்படுத்தாமல் போகலாம், இரண்டாவது முக்கியமான காரணம், இந்த அறிகுறிகள் காரணமாக பாதிக்கப்பட்டவரை மற்றவர்கள் ‘அசாதாரணமானவர்கள்’ என்று நினைக்கலாம். அல்லது மனநிலை சரியில்லாதவர்கள் என்று கருதலாம். இந்தக் கவலை மனநலம் பாதிக்கப்பட்டவர்களை வாட்டுகிறது.

எதிர்மறையான அறிகுறிகள் மிகவும் தீவிரமானவையாகக் கருத்தப்படுவதற்கான காரணம் அவை ஒருவருடைய சாதாரணமான செயல்பாட்டை பாதிக்கின்றன, சுற்றியுள்ளவர்கள் இந்த எதிர்மறை அறிகுறிகளை எளிதில் கவனித்துவிடுகிறார்கள், இவர்களுடைய செயல்பாடுகள் அசாதாரணமாக இருப்பதால், இவர்களையும் அசாதாரணமானவர்கள் என்று முத்திரை குத்தி விடுகிறார்கள்.

மனநல ஆரோக்கியம் பாதிக்கபட்டவர்களில் சிலர் தங்கள் குடும்பத்தினர் மீதும் தங்களைக் கவனித்துக்கொள்கிறவர் மீதும் சந்தேகப்படலாம்; இதுவும் அவரைக் கவனித்துக்கொள்கிறவருக்கு அழுத்தத்தைத் தரும். குறிப்பாக, அவர்கள் தங்களுடைய அன்புக்குரியவரின் மனநலப் பிரச்னையைப்பற்றி எல்லாரிடமும் வெளிப்படையாக பேச விரும்பாத சூழ்நிலையில் அவர்கள் இப்படி நடந்துகொள்வது பெரிய அழுத்தத்தைக் கொண்டுவரும். தங்களுடைய அன்புக்குரியவருக்கு வந்திருக்கும் பிரச்னையை மற்றவர்கள் கண்டுபிடித்துவிடுவார்களோ என்று இவர்கள் அஞ்சுகிறார்கள். இதன் காரணமாக, இவர்கள் நண்பர்கள், அக்கம் பக்கத்தினர், குடும்பத்தினர், மற்றும் சமூகத்தினர் உடனான இவர்களின் நல்லுறவு பாதிக்கப்படலாம். இதனால் மனநலம் பாதிக்கப்பட்டவரைக் கவனித்துக்கொள்கிறவர் தன்னைத்தானே ஒரு தனிமையில் தள்ளிக்கொள்ளக்கூடும், இதனால், அவர்களால் தங்கள் உணர்வுகளை, சவால்களை தங்களைச் சுற்றி உள்ளவர்களோடு பகிர்ந்துகொள்ள முடியாமல் போகும்.

ஸ்கிஜோஃப்ரெனியா அல்லது ஸைகோட்டிக் குறைபாடு போன்ற குறிப்பிட்ட பிரச்னைகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, பிரமைகள் அல்லது மாயத்தோற்றங்கள் தெரியக்கூடும். அப்படிப்பட்ட ஒருவர் தன்னைக் கவனித்துக்கொள்கிறவரே தனக்கு எதிராக சதி செய்கிறார் என்று நினைக்கக்கூடும். அவர்கள் திடீர் திடீரென்று கோபப்படக்கூடும் அல்லது மாயத்தோற்றங்களை எண்ணி சத்தமாகச் சிரிக்கக்கூடும். இதனால் பாதிக்கப்பட்டவருக்கும் அவரைக் கவனித்துக்கொள்கிறவருக்கும் இடையே தவறான புரிதல் ஏற்படும் அல்லது இருவருக்கும் இடையே நம்பிக்கை குறையும்.

சிலருக்கு தலைக்குள் குரல்கள் கேட்கக்கூடும், அவர்கள் எதிலும் கவனமில்லாதவர்களைப் போல் தோன்றலாம், தங்கள் உலகத்திலேயே வாழலாம், தங்களுத்தாங்களே பேசிக்கொள்ளலாம், அல்லது தாங்களாக எதையாவது செய்யத்தொடங்கலாம். இதையெல்லாம் அவரைக் கவனித்துக்கொள்கிறவர் புரிந்துகொள்வது சிரமம். அதைக் கையாள்வது அதைவிடச் சிரமம். குறிப்பாக அவர்கள் எங்காவது சமூக நிகழ்வில் கலந்துகொள்கிற நேரத்தில், அவர்கள் இப்படி நடந்துகொள்ளத் தொடங்கிவிட்டால், அவர்களைக் கவனித்துக்கொள்கிறவர்களுக்கு மிகுந்த அழுத்தம் உண்டாகும். சில நேரங்களில் ஒருவருக்கு பிரமை அல்லது மாயத்தோற்றங்கள் ஏற்பட்டு அவர்கள் கோபப்படக்கூடும், தங்களைச் சுற்றியுள்ளவர்களை அவமானப்படுத்தக்கூடும், அல்லது காரணமேயில்லாமல் வன்முறையில் இறங்கக்கூடும்.

அவர்கள் இப்படி நடந்துகொள்வது, அந்தந்தச் சூழலுக்குப் பொருத்தமான அல்லது சமூகத்தால் ஏற்கப்படுகிற பழகுமுறையிலிருந்து சிறிது மாறுபட்டே இருக்கும். ஆனால் மக்களுக்கு மனநலப் பிரச்னைகள் பற்றி அதிகமாகத் தெரிவதில்லை, ஆகவே மனநலம் பாதிக்கப்பட்டவர்களைக் கவனித்துக்கொள்கிறவர்கள் பெரும்பாலும் இதுபோன்ற நடவடிக்கைகளைக் கவனிக்காமல் விட்டுவிடுகிறார்கள், அவை மிகவும் தீவிரமாகி யாராலும் புரிந்துகொள்ளாத நிலை வரும்போதுதான் அவர்கள் மனநல நிபுணரைத் தொடர்பு கொள்கிறார்கள். அதாவது, வழக்கமான நடவடிக்கைகளில் வரும் சின்னச்சின்ன பிரச்னைகளை மனநலப் பிரச்னைகளாக கவனிக்காமல் விட்டுவிடுவதால், பிரச்னை பெரிதான பிறகுதான் சிகிச்சை தொடங்குகிறது. இதுபற்றி உளவியலாளர்களிடம் கேட்டால், மனநலப் பிரச்னை கொண்டவர்களை எவ்வளவு சீக்கிரமாக சிகிச்சைக்கு அழைத்துவருகிறோமோ அவ்வளவு சீக்கிரம் அவர்கள் குணமடைவதற்கு வாய்ப்புகள் அதிகம். அவர்கள் சிகிச்சைக்குப் பிறகு சுதந்தரமான, செயலுள்ள ஒரு வாழ்க்கையை வாழ்வதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கின்றன என்கின்றனர் அவர்கள். அப்படி இல்லாமல் மனநலப் பிரச்னையைத் தாமதமாகக் கண்டறிந்தால், பாதிக்கப்பட்டவர்களிடம் சில குறிப்பிட அறிகுறிகள் தோன்றிவிடும், அது அவர்களைக் கவனித்துக்கொள்கிறவர்களிடம் அழுத்தத்தை உண்டாக்கும், கவனித்துக்கொள்கிறவர்களிடம் அது எரிச்சலை ஏற்படுத்தி மனதளவில் தளர்ந்து போகச்செய்யும்.

களங்க உணர்வால் ஏற்படுகிற அழுத்தம்

பல நேரங்களில் மனநலம் பாதிக்கப்பட்ட ஒருவருடைய அறிகுறிகள் அல்லது நடத்தையின் காரணமாக, மனநலப் பிரச்னைகளைச் சூழ்ந்து இருக்கிற களங்க உணர்வு காரணமாக சிரமமானதாகி விடுகிறது. அதைக் கையாள்வது எளிதாக இருப்பதில்லை. உதாரணமாக, ராஜேஷுக்கு சந்தேக மனப்பான்மையுடன் கூடிய ஸ்கிஜோஃப்ரெனியா பிரச்னை.

அவர் எந்நேரமும் பெற்றோர் மீது சந்தேகப்படத் தொடங்கினார். ஆகவே அவர்களால் தங்கள் மகனைக் கவனித்துக்கொள்ள இயலவில்லை. அதே சமயம் இந்த விஷயத்தை குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நண்பர்களிடம் சொன்னால் அவர்கள் என்ன நினைப்பார்களோ என்ற எண்ணத்தில், அதாவது களங்க உணர்வுக்குப் பயந்து அவர்கள் யாரிடமும் சொல்லவில்லை. ராஜேஷுக்கு வந்திருக்கிற பிரச்னைகளைப்பற்றி மற்றவர்களுக்குத் தெரிந்துவிட்டால் என்னாகுமோ என்று அவர்கள் பயப்பட்டதால், பக்கத்து வீட்டிற்குச் செல்வதைக்கூட நிறுத்திவிட்டார்கள், மற்ற உறவினர்களின் இல்லங்களுக்கும் செல்வதில்லை. குறிப்பாக, ராஜேஷுக்கு ஏதாவது உளவியல் பிரச்னை வரும்போது அவர்கள் எங்கும் செல்லாமல் வீட்டிற்குள்ளேயே இருந்தார்கள். ஒருவேளை எங்கேயாவது வெளியே சென்று யாராவது ராஜேஷின் ஆரோக்கியத்தைப் பற்றியோ, அவருடைய நடவடிக்கைகள் ஏன் இப்படி மாறியிருக்கின்றன என்பது பற்றியோ கேட்டுவிடுவார்கள் என்ற பயத்தில் அவர்கள் எங்கேயும் செல்லவில்லை. இதனால் ராஜேஷின் பெற்றோருக்கு மிகுந்த மன அழுத்தம் உருவானது. கொஞ்சம் கொஞ்சமாக ராஜேஷின் மனநலப் பிரச்னை காரணமாக அவரிடம் பல மாற்றங்கள் உண்டாகத் தொடங்கின. அவற்றையெல்லாம் எந்தச் சமூக ஆதரவும் இல்லாமல் அவருடைய பெற்றோரே கவனித்துக்கொள்ள வேண்டியிருந்தது.

இந்த விவரிப்பு ஒரு தனிப்பட்ட வாழ்க்கையில் நிகழ்ந்த உண்மை நிகழ்வு அல்ல, பல நோயாளிகளுக்கு ஏற்பட்ட அறிகுறிகளைக் கருத்தில் கொண்டு, மனநல நிபுணர்களின் உதவியால் உருவாக்கப்பட்ட ஒரு நிகழ்வு ஆகும்.

கவனித்துக்கொள்ளுதலை அழுத்தம் மிகுந்த செயலாக்கும் மற்ற காரணிகள்

சில நேரங்களில் மனநலம் பாதிக்கப்பட்டவர்களைக் கவனித்துக்கொள்கிற ஒருவர் அதற்காக தன்னுடைய வாழ்க்கையில் மிகப்பெரிய மாற்றங்களைச் செய்து கொள்ள வேண்டியிருக்கலாம். உதாரணமாக அவர் தன் வேலையை விட வேண்டியிருக்கலாம், தங்களுடைய வாழ்க்கை முறையில் சில மாற்றங்களை செய்துகொள்ளவேண்டியிருக்கலாம். “முன்பெல்லாம் மனநலம் பாதிக்கப்பட்டவர்களைக் கவனித்துக்கொள்கிறவர்களுக்கு ஆதரவு அளிக்க நிறைய பேர் இருந்தார்கள், குடும்பங்கள் கூட்டுக்குடும்பங்களாக இருந்தன, இப்போது குடும்பங்கள் சிறியதாகிவிட்டன, எல்லாரும் வேலைக்குப் போகிறார்கள், ஆகவே யாருக்காவது பாதிப்பு வந்துவிட்டால் அவரைக்கவனித்துக்கொள்வதற்கு குறைந்த அளவு ஆதரவே இருக்கிறது” என்கிறார் டாக்டர் சந்தோஷ் கே சதுர்வேதி, இவர் NIMHANS இல் உளவியல் பேராசிரியராகப் பணியாற்றுகிறார்.

மனநலம் பாதிக்கப்பட்டவரைக் கவனித்துக்கொள்கிறவருக்கு ஏற்படும் இதுபோன்ற அழுத்தங்கள் அவருக்கு வாழ்க்கை சார்ந்த குறைபாடுகளை உண்டாக்கூடும். உதாரணமாக நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம் அல்லது நீரிழிவு போன்ற தொடர்புடைய பிரச்னைகள் இவர்களுக்கு வரலாம்.

மனத்துயரை உணர்வுகளின் வாயிலாக வெளிப்படுத்துதல்

மனநல பாதிப்பு கொண்ட ஒருவர் குணமாகிக்கொண்டிருக்கும்போது, அவரைச் சுற்றியிருப்பவர்கள் வெளிப்படும் உணர்வுகள் அவரைப் பாதிக்கக்கூடும். குறிப்பாக, அவரைக் கவனித்துக்கொள்கிறவர்களுடைய மனத்துயரம் உணர்வுகளாக வெளிப்படும்போது, அது அவரைப் பாதிக்கலாம். மனநலம் பாதிக்கப்பட்டவர்களைக் கவனித்துக்கொள்கிறவர்கள் தெரிந்தோ தெரியாமலோ தங்களுடைய அன்புக்குரியவரைப்பற்றி எதிர்மறையான உணர்வுகளை, விமர்சனங்களை பகைமை உணர்வை வெளிப்படுத்தக்கூடும். கவனித்துக்கொள்கிறவருடைய இந்த மனப்போக்கு பாதிக்கப்பட்டவருடைய சிகிச்சையின் தாக்கத்தையும், பலன்களையும் பாதிக்கிறது. மிகுந்த உணர்வு வெளிப்படும் சூழ்நிலைகள் பாதிக்கப்பட்டவரைக் கவனித்துக்கொள்கிறவருடைய அழுத்தத்தை அதிகரிக்கக்கூடும்.

வெளிப்படுத்தக்கூடிய உணர்வுகள் மனநலம் பாதிக்கப்பட்ட ஒருவர் குணமாவதற்கு முக்கியப்பங்கு வகிக்கிறது. ஸ்கிஜோஃப்ரெனியா போன்ற மனநலக்குறைபாடு கொண்டவர்களை ஆராய்ந்த நிபுணர்கள், அவர்களைக் கவனித்துக்கொள்கிறவர்களுடைய எதிர்மறையான உணர்வுகளுக்கும் இந்தப் பிரச்னை மீண்டும் ஒருவருக்கு திரும்ப வருவதற்கும் நேரடித்தொடர்பு இருக்கிறது என்கிறார்கள். ஸ்கிஜோஃப்ரெனியா பிரச்னை கொண்ட ஒருவர் வெறுப்பான ஒரு சூழலில் வாழ்கிறார் என்றால் அவர்களுடைய பிரச்னை மேலும் தீவிரமடைகிறது. அவர்களை இயல்பு நிலைக்குக் கொண்டுவருவதற்கு அதிக மருந்துகள் தேவைப்படுகின்றன.

கவனித்துக்கொள்கிறவருக்கு ஏற்படும் அழுத்தத்திற்கு உதவியை நாடுதல்

ஒருவர் மனநலம் பாதிக்கப்பட்ட தன்னுடைய அன்புக்குரியவர் ஒருவரைப் பலகாலமாகக் கவனித்துக்கொண்டிருக்கிறார் என்றால், ஏதாவது ஒரு கட்டத்தில், கவனித்துக்கொள்கிறவருக்கு ஏற்படும் மனப்பளுப் பிரச்னையை அவர் உணர்வார், இந்தப் பிரச்னையின் பல நிலைகளில் ஏதாவது ஒன்றையாவது அவர் அனுபவிப்பார். கவனித்துக்கொள்கிறவருக்கு ஏற்படும் அழுத்தம் என்பது வெறும் கற்பனை அல்ல. அது ஓர் உண்மையான மனநலப் பிரச்னை. அவர்களுக்கு ஏற்படுகிற சலிப்பானது ஒரு நீண்டகால சீரமைப்புக் குறைபாடாகக் கருதப்படுகிறது.

கவனித்துக்கொள்கிறவருக்கு ஏற்படும் அழுத்தத்திற்கான சில அடையாளங்கள் இவை:

 • தான் கடைசியாக எப்போது ஒரு திரைப்படத்தைப் பார்த்தோம், நண்பர்களோடு சென்று சாப்பிட்டோம், அவ்வளவு ஏன் கடைசியாக தான் மகிழ்ச்சியாக எப்போது ஒரு நடவடிக்கையை மேற்கொண்டோம் என்பதே அவர்களுக்கு மறந்துபோயிருக்கும்.
 • தான் செய்கிற வேலைகளில் கவனம் செலுத்துகிற திறமை அவர்களிடம் குறைந்து காணப்படும்
 • இவர்கள் எப்போதும் எரிச்சலில் இருப்பார்கள், சின்னச்சின்ன நடவடிக்கைகள் கூட இவர்களுக்குக் கோபத்தைக் கொண்டுவரும்.
 • இவர்கள் எப்போதும் களைப்பாக உணர்வார்கள்- நன்றாகத்தூங்கி எழுந்தாலும் கூட அந்தக் களைப்புக் குறையாது
 • இவர்களுடைய உடல்நலம் அடிக்கடி சரியில்லாமல் போகும்
 • முன்பு இவர்கள் ரசித்துச் செய்த சில நடவடிக்கைகளில் இப்போது இவர்களுக்கு ஆர்வமே இருக்காது. உதாரணமாக, படித்தல், திரைப்படம் பார்த்தல் அல்லது நண்பர்களுடன் உணவு அருந்துதல்
 • இவர்களால் சரியாக உறங்க இயலாது
 • இவர்களுக்கு புகைபிடிக்கும் அல்லது குடிக்கும் பழக்கம் இருந்தால், முன்பை விட அதிகமாகக் புகைபிடிப்பார்கள் அல்லது முன்பை விட அதிகமாகக் குடிப்பார்கள்
 • இவர்கள் யாரைக் கவனித்துக்கொள்கிறார்களோ அவர்கள் மேலேயே அற்பக்காரணங்களுக்குக்கூட கோபப்படுவார்கள்,
 • தங்கள் அன்புக்குரியவரைக் கவனிப்பதில் எந்த அர்த்தமும் இல்லை என்று இவர்களுக்குத் தோன்றும்
 • சில நேரங்களில் இந்த அழுத்தம் மேலும் தீவிரமாகும்போது, இவர்கள் தங்களுடைய அன்புக்குரியவர்களைக் கொன்றுவிடலாமா என்று கூட நினைப்பார்கள். மறுகணம் இப்படி நினைத்துவிட்டோமே என்று மிகுந்த குற்ற உணர்ச்சிக்கு ஆளாவார்கள்.

கவனித்துக்கொள்கிறவருக்கு ஏற்படும் அழுத்தத்தின் இந்த அடையாளங்கள் யாரிடமாவது தென்பட்டால், அவர்கள் உடனே நடவடிக்கை எடுக்கவேண்டும். அதன்மூலம் அவர்கள் இந்தச் சலிப்பு நிலைக்குத் தள்ளப்படாமல் தவிர்க்கலாம். மனநலம் பாதிக்கப்பட்டவரைக் கவனித்துக்கொள்கிறவருக்கு இத்தகைய அடையாளங்கள் இருந்தால் அவர்கள் ஓர் உளவியலாளர் அல்லது ஆலோசகரை அணுகி பேசவேண்டும், தங்கள் நிலையைக் கூறி உதவி கேட்கவேண்டும். இந்த உளவியலாளர் அல்லது ஆலோசகர் அவர்களுடைய பிரச்னையைக் கேட்டு அதனை எப்படி சமாளிக்கலாம் என்பதற்கான ஆலோசனைகளைச் சொல்வார்கள். அல்லது வேறு நடவடிக்கைகளை சிபாரிசு செய்வார்கள்.

கவனித்துக்கொள்கிறவர்களுக்கு வரும் அழுத்தத்தின் நிலைகள்

மனநலம் பாதிக்கப்பட்டவர்களைக் கவனித்துக்கொள்பவர்கள் பின்வரும் நிலைகளில் அழுத்தத்தை அனுபவிக்கிறார்கள்:

ஆரம்ப நிலை அல்லது தேன்நிலவு நிலை: இங்கே மனநலம் பாதிக்கப்பட்டவர்களைக் கவனித்துக்கொள்பவர் மிகவும் நம்பிக்கையோடு இருப்பார். தன்னுடைய அன்புக்குரியவரைக் கவனித்துக்கொள்வது தன்னுடைய கடமை என்று நினைப்பார். இந்த நிலையின் தங்களுடைய கடமைகள் அனைத்தையும் நேர்விதமாக எடுத்துக்கொள்வார்கள். “என்னுடைய அன்புக்குரியவரை நான் கவனித்துக்கொள்வேன், எல்லாம் சரியாகிவிடும்” என்று நினைப்பார்கள்.

எல்லாம் ஒரே மாதிரியாக தோன்றுகிற நிலை: இங்கே மனநலம் பாதிக்கப்பட்டவர்களைக் கவனித்துக்கொள்பவர்கள், தங்களுடைய கவனித்துக்கொள்ளும் பயணத்தில் ஏற்றத்தாழ்வுகள் இருப்பதை உணர்கிறார்.

மனப்பளு நிலை: இங்கே மனநலம் பாதிக்கப்பட்டவர்களைக் கவனித்துக்கொள்பவர்கள் மிகவும் களைத்துப்போயிருப்பார்கள். களைப்போடும் சிந்தனை ஒழுங்கில்லாதவராகவும் காணப்படுவார்கள். மனநலம் பாதிக்கப்பட்டவரை கவனித்துக்கொள்வதை ஒரு வேலை அல்லது ஒரு சுமையாக எண்ணத்தொடங்குவார்கள்.

சலிப்பு நிலை: இங்கே மனநலம் பாதிக்கப்பட்டவர்களைக் கவனித்துக்கொள்பவர்கள் தான் யாரைக் கவனித்துக்கொள்கிறோமோ அவர்களிடமிருந்து விலகி நிற்கிறார்கள், காரணம் இந்தக் கவனித்துக்கொள்ளும் கடமை அவரது உணர்வுகளைப் பாதிக்கிறது, அவர்கள் உணர்வு ரீதியில் களைப்படைகிறார்கள். அவர்கள் தங்களுடைய அன்புக்குரியவர்களைத் தொடர்ந்து கவனித்துக்கொண்டுதான் இருப்பார்கள். அதேசமயம், அவர்கள் செய்யும் எல்லா வேலைகளும் வெறும் இயந்திரத்தனமாக மாறிவிடும். அவர்களுக்கு மனச்சோர்வு ஏற்படலாம். விரக்தி ஏற்படலாம், அல்லது எந்த உணர்வையும் காட்டாதபடி அவர் தன்னுடைய வேலையைச் செய்யலாம்.

கவனித்துக்கொள்பவருக்கு ஏற்படும் சலிப்பைத் தடுத்தல்

மனநலம் பாதிக்கப்பட்ட ஒருவரைக் கவனித்துக்கொள்கிறவரிடம் அழுத்தத்திற்கான அடையாளங்கள் தென்படுகின்றன என்று நினைத்தால், சரியான நேரத்தில் உரிய நிபுணரிடம் உதவி கோரவேண்டும். அப்போதுதான் அவர்கள் சலிப்பு நிலைக்குச் சென்றுவிடாதவண்ணம் தடுக்கலாம். இந்த நிலையில் உள்ளவர்கள் தங்களைச் சரிசெய்து கொண்டு மீண்டும் தன் அன்புக்குரியவர்களைக் கவனிக்க வரும்வரை, மனநலம் பாதிக்கப்பட்டவர்களை யார் கவனித்துக்கொள்வார்கள். இது பற்றி அவர்கள் சிந்தித்து பின்வரும் வழிகளில் ஏதேனும் ஒன்றைத் தேர்ந்தெடுக்கவேண்டும்:

 • பகல்நேரச் சேவை: இங்கே மனநலம் பாதிக்கப்பட்டவர் காலைமுதல் மாலைவரை கவனித்துக்கொள்ளப்படுவார், அவருடைய திறன்களைக் கவனித்து அவர்களுக்குப் புதியவேலைகளைக் கற்றுக்கொடுத்து நாள் முழுவதும் அவர் ஏதோ ஒரு வேலையைச் செய்துகொண்டிருக்கும் படி பார்த்துக்கொள்வார்கள். இதன்மூலம் அவரைக் கவனித்துக்கொண்டிருப்பவர்கள், தங்களுடைய தினசரி வேலைகளைக் கவனித்துக்கொள்ளலாம், பணிக்குச் செல்லலாம், வீட்டு வேலைகளைச் செய்யலாம் அல்லது ஓய்வெடுக்கலாம்.
 • இடைஓய்வுப் பராமரிப்பு சேவை: சில நேரங்கள் மனநலம் பாதிக்கப்பட்டவரைக் கவனித்துக்கொள்கிறவர்களுக்கு ஓரிரு வாரங்கள் ஏதாவது வேலை இருக்கும், அந்த நேரத்தில் தன்னுடைய அன்புக்குரியவரை யாரவது கவனித்துக்கொள்ளவேண்டும் என்று நினைப்பார். அதுபோன்ற நேரங்களில் தன்னுடைய அன்புக்குரியவரை இடைஓய்வுப் பராமரிப்பு சேவை அமைப்புகளில் விடலாம், இவர்கள் மனநலம் பாதிக்கப்பட்டவரை அங்கேயே தங்க வைத்துக்கொண்டு சிறப்பு கவனம் செலுத்தி, அவர்களைப் பார்த்துக்கொள்வார்கள். மனநலம் பாதிக்கப்பட்டவர்களைக் கவனித்துக்கொள்பவர்கள் எங்கேயாவது பயணம் செய்யும்போது தங்களுக்கு உடல்நிலை சரியில்லாதபோது, பிறரைக் கவனிக்க இயலாதபோது அல்லது தாங்கள் செய்யவேண்டிய மற்ற வேலைகள் குறுக்கிடும்போது இந்த இடைஓய்வுப் பராமரிப்பு சேவைகளைப் பயன்படுத்திக்கொள்கிறார்கள். இடைஓய்வுப் பராமரிப்பு சேவைகளைத் தேவையுள்ளபோதுமட்டும் பயன்படுத்துவது நல்லது, அதாவது அதைத்தவிர எந்த வாய்ப்பும் இல்லை. அது கட்டாயம் தேவை என்ற சூழ்நிலையில் மட்டும்.
 • மனநலம் பாதிக்கப்பட்டவர்களைக் கவனித்துக்கொள்பவர்கள் தங்களுடைய குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நண்பர்களிடமும் இதற்கான உதவி கேட்கலாம். இதன்மூலமாக அவர்களுடைய கவனித்துக்கொள்ளும் பணிகளிலிருந்து அவர்களுக்கு சிறு இடைவெளி கிடைக்கும், அவர்கள் தங்களைக் கவனித்துக்கொள்வதில் கவனம் செலுத்தலாம்.
 • மனநலம் பாதிக்கப்பட்டவர்களைக் கவனித்துக்கொள்பவர்கள் ஒரு மனநல நிபுணரை அணுகி, தன்னுடைய சமாளிக்கும் திறன்களை மேம்படுத்தலாம். ஒரு புதிய பொழுதுபோக்கைக் கற்றுக்கொள்ளலாம், விடுமுறைக்கு எங்காவது சென்று திரும்பலாம், ஒரு செல்லப்பிராணியை வளர்க்கலாம், ஒவ்வொரு நாளும் அல்லது ஒவ்வொரு வாரமும் ஒரு குறிப்பிட்ட நேரத்தை தங்களுக்காக ஒதுக்கிக்கொண்டு தங்களுடைய தேவைகளைப் பூர்த்தி செய்யலாம்.

மனநலம் பாதிக்கப்பட்ட ஒருவரைக் கவனித்துக்கொள்வது ஒரு முக்கியமான பொறுப்பு. இது மிகுந்த நேரத்தையும் சக்தியையும் கோரக்கூடியது. அதே சமயம், தங்களையும் கவனித்துக்கொண்டால்தான் தங்களுடைய அன்புக்குரியவர்களை முறையாகப் பார்த்துக்கொள்ள இயலும். ஆகவே மனநலம் பாதிக்கப்பட்டவர்களைக் கவனித்துக்கொள்கிறவர்களிடம் ஏற்படும் எச்சரிக்கை அறிகுறிகள் ஏதேனும் தங்களிடம் ஏற்படுகிறது என்பதை அவர்கள் உணர்ந்தால், உரிய நிபுணரிடம் உதவி கோரவேண்டும். தங்களுடைய அன்புக்குரியவரின் நலனைக் கவனித்துக்கொள்ளும் அதேவேளையில் தங்களுடைய நலனுக்குப் பிரச்னை வந்துவிடாதவண்ணம் அவர்கள் பார்த்துக்கொள்ளவேண்டும். அப்போதுதான் அவர்களும் நலமாக இருப்பார்கள், அவர்களால் கவனித்துக்கொள்ளப்படுகிற மனநலம் பாதிக்கப்படுபவர்களும் நலமாக இருப்பார். விரைவில் குணமடைவார்.

வொய்ட் ஸ்வான் ஃபவுண்டேஷன்
tamil.whiteswanfoundation.org