கவனித்துக்கொள்வோருக்கு யோகாசனம் தேவையா?

மனநலம் பாதிக்கப்பட்டோரைக் கவனித்துக்கொள்கிறவர்கள் யோகாசனம் போன்றவற்றைப் பின்பற்றினால், ஆரோக்கியமாக இருக்கலாம், இன்னும் நன்கு சேவைபுரியலாம் என்கின்றன ஆய்வுகள்.

மகேந்திரன் தினமும் காலை 5.30 மணிக்கு எழுந்துவிடுகிறார், சட்டென்று ஒரு புரோட்டீன் பானத்தைக் குடிக்கிறார், தனது வீட்டிற்கு அருகிலுள்ள உடற்பயிற்சிச் சாலை ஒன்றிற்குச் சென்றுவிடுகிறார். அடுத்த ஒரு மணி நேரம் அவர் பல விதமான உடற்பயிற்சிகளில் ஈடுபடுகிறார்; சிறிது நேரம் எடைதூக்குகிறார், சிறிது நேரம் குச்சியை வைத்து பலவிதமான உடற்பயிற்சிகளை செய்கிறார், சிறிது நேரம் யோகாசனம் செய்கிறார். “இப்படி பலவிதமான உடற்பயிற்சிகளை மாற்றி மாற்றி செய்வதன் மூலம், என்னுடைய உடல் முழுமைக்கும் பயிற்சி கிடைக்கிறது” என்கிறார் மகேந்திரன். இவர் இந்திய ரயில்வே துறையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர், அதன் பிறகு ஒரு தனியார் நிறுவனத்தின் விநியோகஸ்தராக இயங்கி வருகிறார்.

மகேந்திரனுக்கு ஒரு மகன். அவர் பெயர் நவ்தீப். 45 வயதாகும் நவ்தீப் பல ஆண்டுகளாக ஸ்கிஜோஃப்ரெனியாவால் அவதிப்பட்டு வருகிறார். அவரைக் கவனித்துக்கொள்வது மகேந்திரன்தான். “திடீரென்று ஒரு நாள் நவதீப் தனது அறைக்குள் நுழைந்தான், தன் அறைக்கதவைச் சாத்திக்கொண்டு விட்டான்” என்கிறார் மகேந்திரன். “அதன் பிறகு பல நாட்களுக்கு அவன் அறையை விட்டு வெளியே வரவே இல்லை. நாங்கள் மிகவும் வற்புறுத்தி விசாரித்த பிறகு தனக்குள் ஏதோ குரல்கள் கேட்பதாக அவன் சொன்னான், அப்போதுதான் அவனுக்கு ஏதோ பிரச்னை வந்திருக்கிறது என்று நாங்கள் புரிந்து கொண்டோம்”. அன்று தொடங்கி நவ்தீப்பை மகேந்திரனும் அவர் மனைவியும்தான் கவனித்துக்கொண்டிருந்தார்கள். சென்ற ஆண்டு மகேந்திரனின் மனைவி இறந்துவிட்டார், இப்போது நவ்தீப்பைக்கவனித்துக்கொள்ளும் பொறுப்பு முழுவதும் மகேந்திரனுடையதுதான். மகேந்திரன் ஓர் உளவியல் ஆலோசனைக்காக பெங்களூருவில் உள்ள NIMHANS வந்திருந்தபோது, நாங்கள் அவருடன் பேசினோம்.

இந்த முதிய வயதிலும் எப்படி அவரால் தான் மகனை கவனித்துக்கொள்ள முடிகிறது என்று விசாரித்தோம். “நான் மட்டும் இல்லை, மனநலம் பாதிக்கப்படவர்களைப் பார்த்துக்கொள்கிற எல்லாருமே நான்கு சாப்பிடவேண்டும், நன்றாகத் தூங்கவேண்டும், உடற்பயிற்சி செய்யவேண்டும், நேர்விதமான மனப்போக்குடனேயே இருக்கவேண்டும், எதுவும் நல்லபடியாக நடக்கும் என நம்பவேண்டும்.” என்கிறார் மகேந்திரன், “குறிப்பாக என்னுடைய யோகாசனப் பயிற்சி என்னுடைய மனநிலையை மேம்படுத்தியுள்ளது, என்னை நேர்விதமாக சிந்திக்கச் செய்கிறது. “

மகேந்திரன் சொல்கிற அதே விஷயத்தைத்தான் NIMHANS நடத்திய சில ஆய்வுகளும் குறிப்பிட்டுள்ளன. அதாவது, மனநலம் பாதிக்கப்பட்டவர்களைக் கவனித்துக்கொள்கிறவர்கள் யோகாசனம் செய்தால், அவர்களிடம் நேர்விதமான மாற்றங்கள் இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது.

இந்த ஆய்வு பல படிநிலைகளாக நடத்தப்பட்டது, முதல் படி நிலையில் மனநலம் பாதிக்கப்பட்டவர்களைக் கவனித்துக்கொள்கிற பலரைச் சந்தித்து, அவர்களுடைய தேவைகளைப்பற்றிய கேள்விகள் கேட்கப்பட்டன. இந்தக் கேள்விக்கு மனநலம் பாதிக்கப்பட்டவர்களைக் கவனித்துக்கொள்கிறவர்கள் சொன்ன பதில் சற்றே வித்தியாசமாக அமைந்தது : அவர்கள் முதன்முதலாக தங்களது அன்புக்குரியவர்களின் மனநலப் பிரச்னை சார்ந்த அறிகுறிகளை கையாள்வதைத்தான் முக்கியமான பணியாகக் கருதினார்கள், அதாவது அவர்களுக்கு ஏற்படுகிற மாயத்தோற்றங்கள், சார்ந்திருத்தல், பயம் போன்றவற்றை புரிந்துகொண்டு கையாள்வது. அடுத்தபடியாக மனநலம் பாதிக்கப்பட்டவர்களைக் கவனித்துக்கொள்கிறவர்கள் தங்களுடைய சமூகம் மற்றும் தொழில் சார்ந்த தேவைகளை தெரிவித்தார்கள். அதாவது, மனநலம் பாதிக்கப்பட்டவர்களைக் கவனித்துக்கொண்டே வேலைக்குச் சென்றுவருதல், தினசரி கடமைகளை நிறைவேற்றுதல் போன்றவை. மூன்றாவதாக அவர்கள் தங்கள் உடல் மற்றும் மன ஆரோக்கியத்தை ஒரு முக்கியமான காரணியாகக் குறிப்பிட்டார்கள், அதன் பிறகு தங்களுடைய திருமணம் தொடர்பான பாலுறவு தொடர்பான தேவைகளை குறிப்பிட்டார்கள்.

“ஆக மனநலம் பாதிக்கப்பட்டவர்களைக் கவனித்துக்கொள்கிறவர்கள் தங்களுடைய உடல் ஆரோக்கியத்தை மூன்றாவது நிலைக்குத் தள்ளிவிட்டு, தங்களுடைய அன்புக்குரியவர்களின் நலம்தான் முக்கியம் என்று இருந்துவிடுகிறார்கள். ஆனால் உண்மையில் உடல் ஆரோக்கியம் அவர்களுடைய முக்கியமான தேவையாக இருக்கவேண்டும். அப்போதுதான் அவர்களால் இன்னொருவரை நல்லமுறையில் கவனித்துக்கொள்ள இயலும். நாங்கள் கவனித்தவரை மனநலம் பாதிக்கப்பட்டவர்களைக் கவனித்துக்கொள்கிறவர்களில் பலருக்கு வாழ்க்கைமுறை சார்ந்த பிரச்னைகள் இருந்தன. உதாரணமாக நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம், போன்றவை. அநேகமாக அவர்களுக்கு ஏற்படுகிற அழுத்தம் தான் இதற்குக் காரணமாக இருக்கக்கூடும் என நாங்கள் ஊகித்தோம். ஆனால், இதுபோன்ற குறைபாடுகளையெல்லாம் மருந்துகளின்மூலம் குணப்படுத்திவிடமுடியும். ஆகவே, நாங்கள் அதில் கவனம் செலுத்தவில்லை, அவர்களுடைய சுமையை எப்படிச் சரி செய்வது, மனநலம் பாதிக்கப்பட்டவர்களைக் கவனித்துக்கொள்கிற அழுத்தத்தை அவர்கள் எப்படி தாங்கிக்கொள்ளலாம் என்பதில்தான் நாங்கள் கவனம் செலுத்தினோம்,” என்கிறார் டாக்டர் ஆர்த்தி ஜகந்நாதன், இவர் NIMHANS மருத்துவமனையில் உளவியல் சமூகத் துறையில் உதவிப் பேராசிரியராக பணிபுரிகிறார், NIMHANSம் பெங்களூரைச் சேர்ந்த சுவாமி விவேகானந்தா யோகா அனுசந்தான சமஸ்தானா (SVYASA) என்கிற அமைப்பும் சேர்ந்து நடத்திய ஓர் ஆய்வுக்கு இவர்தான் தலைமை தாங்கினார்.

இந்த ஆய்வைத் தொடர்ந்து யோகாசனம், பிராணாயாமம், சுற்றுத் தியானம் ஆகிவற்றை உள்ளடக்கிய ஒரு பயிற்சி உருவாக்கப்பட்டது, இது மனநலம் பாதிக்கப்பட்டவர்களைக் கவனித்துக்கொள்கிறவர்களுடைய குறிப்பிட்ட தேவைகளை மனத்தில் கொண்டு உருவாக்கப்பட்டது. உடல் ரீதியில் அல்லது மன ரீதியில் பாதிக்கப்பட்ட ஒருவரைக் கவனித்துக்கொள்கிறவருக்கு ஏற்படும் அழுத்தத்தை “கவனித்துக்கொள்வோருக்கு ஏற்படும் சுமை” என்று அழைக்கிறார்கள்.

சர்வதேச யோகா இதழில் இது பற்றி டாக்டர் ஜகந்நாதன் எழுதியிருப்பது, “யோகா திட்டத்தின் முக்கியமான நோக்கம், மனநலம் பாதிக்கப்பட்டவர்களைக் கவனித்துக்கொள்கிறவர்களுக்கு ஏற்படும் சுமையைக் குறைத்தல், இதற்கு அவர்களுடைய தேவைகளை நிறைவேற்றலாம், அல்லது, அவர்களுக்கென்றே பிரத்தியேகமான யோகாசனத் திட்டம் ஒன்றை உருவாக்கி, அதன்மூலம் தங்களுடைய சுமைகளைத் தாங்களே குறைத்துக்கொள்வதற்கான திறன்களை அவர்களுக்குக் கற்றுத்தரலாம். ஆக, அவர்களுடைய தேவைகள் நிறைவேறினாலும் நிறைவேறாவிட்டாலும் சுமை குறைகிற சூழ்நிலையை ஏற்படுத்தலாம். நாங்கள் இந்த அணுகுமுறையை மேற்கொண்டதின் முக்கியக் காரணம் மனநலம் பாதிக்கப்பட்டவருடைய எல்லாத் தேவைகளையும் யோகாசனத்தின் மூலம் நிறைவேற்றிவிட இயலாது, எனவே நாங்கள் அவர்களுடைய சுமையைக் குறைப்பதில் கவனம் செலுத்தினோம், அவர்கள் எந்தத் தேவைகளை வெளிப்படுத்தியிருந்தார்கள் என்பதில் அதிக கவனம் செலுத்தவில்லை.

இந்தச் சிறப்பு யோகாசனப் பயிற்சி NIMHANS இல் சிகிச்சை பெற்று வந்த ஒன்பது மனநலம் பாதிக்கப்பட்டவர்களைக் கவனித்துக்கொண்டவர்களுக்கு வழங்கப்பட்டது. அவர்கள் ஒரு மாதம் இந்த யோகாசனப்பயிற்சிகளைப் பின்பற்றினார்கள். அதன்பின் அவர்களது அனுபவங்கள் பதிவு செய்யப்பட்டன. இந்த ஆய்வில் பங்கேற்ற பெரும்பாலானவர்கள், தங்களுடைய மனநலம் மேம்பாட்டிருப்பதாகவும், சுமையைத் தாங்கள் இன்னும் சிறப்பாகத் தாங்கிக்கொள்ள இயலுகிறது என்றும் தெரிவித்தார்கள். இந்தப் பரிசோதனை முயற்சி ஸ்கிஜோஃப்ரெனியா நோய்களுக்கு ஆளானவர்களைக் கவனித்துக்கொள்கிறவர்களிடம் மட்டுமே நடத்தப்பட்டது. இதற்குக் காரணம் பரிசோதனையின் பங்கேற்பாளர்கள் ஒரே மாதிரியாக இருக்கவேண்டும் என்பதுதான். அதே சமயம் எந்தமாதிரியான மனநலப் பிரச்னைகொண்டவர்களுக்கும் யோகாசனத்தை பயன்படுத்த இயலும், அதன்மூலம் அவர்களுக்கு நல்ல பலன் கிடைக்கும் என்று ஆய்வாளர்கள் நம்புகிறார்கள்.

இந்த ஆய்வின் முடிவுகளை ஆராய்ந்து பார்த்தபோது இன்னொரு விஷயமும் தெரியவந்தது, மனநல பாதிப்பு கொண்ட ஒருவர் எந்த அளவு அதற்கான அறிகுறிகளை வெளிப்படுத்துகிறார் என்பதற்கும், அவரைக் கவனித்துக்கொள்கிறவருக்கு ஏற்படும் சுமைக்கும் தொடர்பு இருப்பது இதில் தெரியவந்தது. “இதற்காக நாங்கள் PANSS என்கிற அளவீட்டைப் பயன்படுத்தினோம். அதாவது, நேர்விதமான மற்றும் எதிர்விதமான அளவீடு. இந்த அளவீடு அதிகமாக இருந்தால், பாதிக்கப்பட்டவருக்கு அவரது மனநலப் பிரச்னை தொடர்பான அறிகுறிகள் அதிகமாகத் தோன்றும் என்று பொருள். எப்போதெல்லாம் PANSS அளவீடு அதிகமாக உள்ளதோ, அப்போதெல்லாம், பாதிக்கப்பட்டவரைக் கவனித்துக்கொள்கிற சுமை அதிகமாக இருப்பதை நாங்கள் கண்டறிந்தோம்” என்கிறார் டாக்டர் ஜகந்நாதன். “ஆகவே மனநலம் பாதிக்கப்பட்டவர்களைக் கவனித்துக்கொள்கிறவர்கள் தங்களுடைய சுமையைச் சரியானபடி கையாள்வது அவசியம்”.

ஆனால் மனநலம் பாதிக்கப்பட்டவர்களைக் கவனித்துக்கொள்கிறவர்களுக்கு யோகாசனத்தின் பயன்பாட்டை இந்த அளவு உறுதிசெய்த பிறகும், பெரும்பாலானோர் யோகாசன வகுப்புகளுக்குச் செல்ல விரும்பவில்லை. காரணம் யோகாசன வகுப்புகளுக்குச் செல்லும் நேரத்தில் அவர்கள் பாதிக்கப்பட்டவர்களைப் பிரிந்திருக்க நேரிடும், அதற்கான வாய்ப்புகள் எல்லாருக்கும் கிடைக்காது. இன்னொரு பிரச்னை, மனநலம் பாதிக்கப்பட்டவர்களைக் கவனித்துக்கொள்கிறவர்கள் எந்தப் பிரச்னை வந்தாலும் சட்டென்று ஒரு மாத்திரை மூலம் அதைக் குணப்படுத்திக்கொள்ள நினைத்தார்களே தவிர, யோகாசனம் போன்ற பழக்கங்களைக் கற்றுக்கொண்டு தங்களுடைய மனநிலையையும் உடல் நிலையையும் மேம்படுத்திக்கொள்ளவேண்டும் என்று அவர்கள் நினைக்கவில்லை.

இந்தப் பிரச்னையை சரிசெய்வதற்காக டாக்டர் ஜகந்நாதன் ஒரு நல்ல யோசனையைச் சொல்கிறார், “ஒருவேளை உங்களால் NIMHANS போன்ற ஒரு மனநல அமைப்பு நடத்துகின்ற ஒரு வகுப்பில் சேர்ந்து பயிற்சிபெற முடியவில்லையென்றால், உங்கள் வீட்டிற்கு அருகே உள்ள ஏதாவது ஒரு யோகாசனப் பயிற்சி வகுப்பில் சேர்ந்துகொள்ளலாம், அல்லது நம்பகமான யோகாசனப் பயிற்றுனர்களின் யோகாசனப் பயிற்சி வீடியோக்களைப் பார்த்து அதன் மூலம் பயிற்சி எடுக்கலாம்.” “இந்த விஷயத்தில் மனநலம் பாதிக்கப்பட்டவர்களைக் கவனித்துக்கொள்கிறவர்கள் அலட்சியம் காட்டக்கூடாது” என்கிறார் டாக்டர் ஜகந்நாதன். “வேறு எந்தவிதத்தில் இல்லாவிட்டாலும் யோகாசனத்தின்மூலம் கிடைக்கப்போகும் மனநலத்திற்காவது அவர்கள் இதனைப் பின்பற்றவேண்டும்.”

மனநலம் பாதிக்கப்பட்டவர்களைக் கவனித்துக்கொள்கிறவர்களுக்கான யோகா திட்டங்களைப்பற்றி மேலும் தெரிந்துகொள்ள விரும்புகிறவர்கள் NIMHANS ஒருங்கிணைந்த யோகா மையத்தை அணுகலாம். http://nimhans.ac.in/advanced-centre-yoga/contact-us

Related Stories

No stories found.
logo
வொய்ட் ஸ்வான் ஃபவுண்டேஷன்
tamil.whiteswanfoundation.org