கவனித்துக்கொள்ளுதல்

கவனித்துக்கொள்வோருக்கான குறிப்புகள்

மனநலம் பாதிக்கப்பட்டவர்களைக் கவனித்துக்கொள்பவர்கள் இந்த ஆலோசனைகளைப் பின்பற்றலாம் என்று நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள்

வொய்ட் ஸ்வான் ஃபவுண்டேஷன்

பல நேரங்களில் மனநலம் பாதிக்கப்பட்டவர்களைக் கவனித்துக்கொள்கிறவர்கள் அந்தப் பொறுப்புகளை எதிர்பார்த்து ஏற்றுக்கொள்வதில்லை, அவர்கள் சற்றும் சிந்திக்காத நேரத்தில் அப்படி ஒரு வாய்ப்பு அவர்களுக்கு ஏற்பட்டுவிடுகிறது. பெரும்பாலானோர் கவனித்துக்கொள்ளும் பொறுப்புக்குத் தயாராகக்கூட இருக்கமாட்டார்கள், ஆனால் அவர்கள் அதைச் செய்தே தீரவேண்டிய கட்டாயம் ஏற்பட்டுவிடுகிறது. மனநலம் பாதிக்கப்பட்ட ஒருவரைக் கவனித்துக்கொள்கிறவருக்கு மிகுந்த உடல் மற்றும் மன வலிமை தேவை. குறிப்பாக ஒருவருக்கு வந்திருக்கிற மனநலப் பிரச்னை தீவிரமானதாக இருந்தால், அவரைக் கவனித்துக்கொள்கிறவர் வேறு எந்த வேலையையும் பார்க்காமல், எந்த நேரத்திலும் அவரையே கவனித்துக்கொண்டிருக்கிற சூழ்நிலைகூட ஏற்படலாம். மனநலப் பிரச்னைகொண்ட தன் அன்புக்குரியவரைக் கவனித்துக்கொள்கிறவர், என்னதான் அக்கறையுடன் கவனித்துக்கொண்டாலும், அவருக்குத் தேவையான அத்தனை விஷயங்களையும் கவனிக்க முடியுமா என்பது சிறிது சந்தேகம்தான். அதற்கு அவர்கள் நிபுணர்களின் ஆலோசனையைப் பெறுவது நல்லது. அப்போதுதான், தங்களுடைய கவனிப்பில் ஏதாவது பிரச்னை இருக்கிறதா என்பதைப் புரிந்துகொண்டு அதனை அவர்கள் சரிசெய்யலாம். மனநலம் பாதிக்கப்பட்டவர்களைக் கவனித்துக்கொள்கிறவர்கள் எந்தெந்த விஷயங்களைக் கவனித்துக்கொள்ளவேண்டும் என்று நிபுணர்களைக் கேட்டபோது, அவர்கள் குறிப்பிட்டவை:

தன் எல்லைகளை அறிந்திருத்தல்

எல்லாருக்கும் எல்லைகள் உண்டு-உடலியல் எல்லைகள், உணர்வு எல்லைகள். இந்த எல்லைகளை ஒவ்வொருவரும் அறிந்துவைத்திருக்கவேண்டும். ஒருவர் தன்னுடைய எல்லைகளை அறிந்தோ அறியாமலோ தன்னுடைய உடலையோ மனத்தையோ அவற்றைத் தாண்டி செலுத்த முயன்றால், அது மோசமான விளைவுகளைக் கொண்டு வரும். ஆகவே மனநலம் பாதிக்கப்பட்டவர்களைக் கவனித்துக்கொள்கிறவர்கள், தங்கள் எல்லைகளை உணர்ந்து, அவற்றை ஏற்றுக்கொண்டு, தங்களுடைய பணிகளை அமைத்துக்கொள்ளப் பழகவேண்டும்.

அனுபவித்துச் செய்தல்

இதைச் சொல்வது எளிது, செய்வது கடினம். அதேசமயம் இதைச் செய்யாமல் விட்டுவிடக்கூடாது. இதை மட்டும் சரியாகச் செய்துவிட்டால், மனநலம் பாதிக்கப்பட்டவர்களைக் கவனித்துகொள்பவரின் பணி மிகவும் எளிதாகிவிடும். மனநலம் பாதிக்கப்பட்டவரைக் கவனித்துக்கொள்கிறவருக்கு அந்தப் பணி சார்ந்த அழுத்தம் குறையவேண்டும் என்றால், அவர் அதை அனுபவித்துச் செய்யவேண்டும் என்று நிபுணர்கள் கூறுகிறார்கள்.

மனநலம் பாதிக்கப்பட்டவர்களைக் கவனித்துக்கொள்வதில் எதை அனுபவிப்பது? அந்த வேலையை எப்படி அனுபவித்துச் செய்ய இயலும்? இதுவும் நியாயமான கேள்விதான். மனநலம் பாதிக்கப்பட்டவர்களைக் கவனித்துக்கொள்வதில் ஏகப்பட்ட சவால்கள் இருக்கின்றன. கிட்டத்தட்ட ஒரே மாதிரியான வேலைகளை பலநாட்கள் வருடக்கணக்கில் செய்யவேண்டியிருக்கும். அதனால் அதை அனுபவித்துச்செய்வது சாத்தியமில்லை என்பதுதான் யதார்த்தம். அதேசமயம் அந்த வேலைகளுக்குள்ளாகவே மகிழ்ச்சியைக் கண்டறிவது சாத்தியம்தான். அந்தச் சவாலை மனநலம் பாதிக்கப்பட்ட ஒருவர் ஏற்றுக்கொள்ளவேண்டும். தன்னுடைய வேலைகளுக்கு நடுவே மகிழ்ச்சியைக் கண்டறிவதை அவர் பல வழிகளில் செய்யலாம். உதாரணமாக, வழக்கமாகச் செய்கிற வேலைகளையே வேறுவிதமாகச் செய்துபார்த்தல், தனக்குக் கிடைக்கிற ஓய்வு நேரத்தில் தனக்குப் பிடிக்கிற விஷயங்களைச் செய்தல், இப்படி இன்னும் பல வழிகளை அவர்கள் சிந்திக்கலாம்.

அறிந்து வைத்திருத்தல்

மனநலம் பாதிக்கப்பட்ட ஒருவரைக் கவனித்துக்கொள்ளுபவர், தன்னுடைய அன்புக்குரியவருக்கு வந்திருக்கும் மனநலப் பிரச்னையைப்பற்றி நன்றாகத் தெரிந்துவைத்திருக்கவேண்டும். இதன்மூலம் அவர்களுக்கு எப்பேற்பட்ட சவாலையும் சமாளிக்கும் தன்னம்பிக்கை கிடைக்கும். இதற்காக அவர்கள், உரிய மனநல நிபுணர்களை அணுகி அவர்களிடம் தங்களுடைய சந்தேகங்களை கேட்டுத் தெரிந்துகொள்ளவேண்டும். அவர்களைக் கவனித்துக்கொள்ளுதல் மற்றும் தங்களுடைய தினசரி நடவடிக்கைகளை எப்படி சமநிலைப் படுத்துவது என்பதையும் அவர்கள் நிபுணர்களிடம் கேட்டுத்தெரிந்து கொள்ளலாம். இயன்றவரை அவர்கள் புதிய திறன்களைக் கற்றுக்கொள்வதில் ஆர்வம் கொள்ளவேண்டும், அதற்கான வாய்ப்புகளை நன்கு பயன்படுத்திக்கொள்ளவேண்டும், சமீபத்திய விவரங்கள் அனைத்தையும் தெரிந்துகொள்ளவேண்டும். இந்த உலகை வெல்லவேண்டும் என்ற ஆசையை மீண்டும் தூண்டிவிட்டு அதைச் செயல்படுத்தவேண்டும்.

உதவி கேட்டல்

மனநலம் பாதிக்கப்பட்டவர்களைக் கவனித்துக்கொள்கிறவர்கள் பெரும்பாலும் பிறரிடம் உதவி கேட்கத்தயங்குவார்கள். காரணம், மற்றவர்களைத் தொந்தரவு செய்யக்கூடாது என்று அவர்கள் நினைப்பது, மனநல பாதிப்புக்கு உள்ளானவர்களை சமூகம் ஒதுக்கிவைத்தே பார்ப்பதால், இந்தப் பிரச்னையை தானேதான் சமாளிக்கவேண்டும் என்று அவர்கள் கருதுவது. ஆனால் அவர்கள் அப்படி எண்ண வேண்டியதில்லை, பல நேரங்களில் எனக்கு உதவிவேண்டும் என்று அவர்கள் தெரிவித்தாலே போதும், எங்கெங்கு இருந்தோ அவர்களுக்கு உதவி தேடிவரும். அதேசமயம் அவர்கள் உதவி கேட்காமல் இருந்துவிட்டால், அந்த உதவி கிடைக்காது. ஆகவே மனநலம் பாதிக்கப்பட்டவர்களைக் கவனித்துக்கொள்கிறவர்கள் அவ்வப்போது பிறரிடம் உதவி கேட்கலாம், அதன்மூலம் தங்களுடைய மற்ற வேலைகளில் கவனம் செலுத்துவதற்கான ஒரு வாய்ப்பை உண்டாக்கிக்கொள்ளலாம்.

முயற்சிகளைப் பகிர்ந்துகொள்ளுதல்

மனநலம் பாதிக்கப்பட்ட ஒருவரைக் கவனித்துக்கொள்ளுவதில், பல அம்சங்கள் இருக்கின்றன. அவருக்குக் கிடைக்கவேண்டிய கவனிப்பின் தன்மை, அதன் அளவு போன்றவை பல காரணிகளின் அடிப்படையில் அமைகின்றன. உதாரணமாக, மனநலம் பாதிக்கப்பட்ட ஒருவரை ஒரே ஒரு தனி நபர் கவனித்துக்கொள்கிறார் என்று வைத்துக்கொள்வோம். அவர் இவ்வாறு கவனித்துக்கொள்வதில் இருக்கும் அனைத்து அம்சங்களையும் சரிவரச் செய்வார் என்று எதிர்பார்ப்பதில் நியாயமில்லை, பணிச்சுமை அவரை நிச்சயமாக அழுத்தும். அதுபோன்ற சூழ்நிலைகளில் அவர்கள் இயன்றவரை தங்களுடைய முயற்சிகளை தங்களுடைய குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நண்பர்களுடன் கவனித்துக்கொள்ளவேண்டும். இவ்வாறு பகிர்ந்துகொள்வதின் மூலம் முதன்மையாக அவருக்கு இருக்கும் அழுத்தம் குறையும், மனநலப் பிரச்னையால் பாதிக்கப்பட்டவருக்கும் சிறப்பான கவனம் கிடைக்கும். இப்படிப்பகிர்ந்துகொள்ளப்படும் வேலைகள் மிகப் பெரியனவாகத்தான் இருக்கவேண்டும் என்று அவசியம் கிடையாது, சின்னச்சின்ன வேலைகளைக் கூட பகிர்ந்துகொள்ளலாம் அதன்மூலம், பாதிக்கப்பட்டவர்களுக்கும் அவர்களைக் கவனித்துக்கொள்கிறவருக்கும் உலகம் தங்களுக்கு உதவியாக இருக்கிறது என்ற எண்ணம் வரும்.

தங்களைக் கவனித்துக்கொள்ளுதல்

மனநலம் பாதிக்கப்பட்ட ஒருவரைக்கவனித்துக்கொள்கிறவரின் வாழ்க்கை மிகுந்த அழுத்தம் மிகுந்ததாக இருக்கும். அவர்களுடைய உடல்நலமும் சரி, உணர்வுகளும் சரி, இதனால் கடுமையாகப் பாதிக்கப்படும். தங்கள் அன்புக்குரியவரைக் கவனித்துக்கொள்கிறவருக்காக, தங்களுடைய சொந்த வாழ்க்கையையே இவர்கள் தியாகம் செய்யவேண்டியிருக்கும். தங்களுக்கு என்று எந்த முக்கியத்துவமும் வைத்துக்கொள்ள மாட்டார்கள், தன்னலமற்ற கவனிப்பை வழங்குவார்கள். அத்துடன் அவர்களைச் சுற்றியிருக்கிற சமூகமும் அவர்களுக்கு ஆதரவு அளிப்பதில்லை. இதனால், அவர்கள் சந்திக்கும் சவால்கள் அதிகமாகிவிடுகின்றன. பெரும்பாலான நேரங்களில், மனநலம் பாதிக்கப்பட்டவர்களைக் கவனித்துக்கொள்கிறவர்கள், தங்களைத் தாங்களே கவனிக்க மறந்துவிடுகிறார்கள், இது மிகப்பெரிய தவறு, இதன்மூலம், அவர்கள் தங்களையும் சிரமப்படுத்திக்கொள்கிறார்கள், அதோடு தங்கள் அன்புக்குரிய மனநலம் பாதிக்கப்பட்டவர்களையும் சிரமப்படுத்துகிறார்கள். ஆகவே மனநலம் பாதிக்கப்பட்டவர்களைக் கவனித்துக்கொள்கிறவர்கள் தங்களுடைய வேலைகளுக்கு நடுவே அவ்வப்போது ஓய்வு எடுத்துக்கொள்ளவேண்டும், அதன்மூலம், தங்களுடைய உடல்நலம் மற்றும் மனநலத்தைக் கவனித்துக்கொள்ளவேண்டும். உதாரணமாக அவர்கள் அடிக்கடி தங்கள் உடலைப் பரிசோதனை செய்துகொள்ளலாம். தங்கள் உடல் மற்றும் மனத்தை மகிழ்ச்சியாக வைத்துக்கொள்ளும் நடவடிக்கைகளில் ஈடுபடலாம். அவர்கள் ஆரோக்கியமாக இருந்தால்தான், அவர்கள் அன்புக்குரியவர்கள் ஆரோக்கியமாக இருப்பார்கள் என்பதை அவர்கள் எப்போதும் மறந்துவிடக்கூடாது.

அனுபவங்களைப் பகிர்ந்துகொள்ளுதல்

மனநலம் பாதிக்கப்பட்டவர்களைக் கவனித்துக்கொள்கிறவர்களுக்கு ஏராளமான அனுபவம் ஏற்படும். இந்தக் குறிப்புகள், கருத்துகள், பார்வைகள் மற்றும் அனுபவங்களை அவர்கள் பேச விரும்புவார்கள். ஆனால் அதற்கான களம் எங்கே? மனநலம் பாதிக்கப்பட்டவர்களைக் கவனித்துக்கொள்கிறவர்கள் தங்களுடைய மனத்தில் இருப்பவைகளைப் பகிர்ந்துகொண்டால் அவர்களுடைய மன அழுத்தம் வெகுவாகக் குறையும். இது ஒருவகையில் அவர்களுக்கு சிகிச்சையாகவே அமையும்.

ஆகவே, மனநலம் பாதிக்கப்பட்டவர்களைக் கவனித்துக்கொள்கிறவர்கள், அதனால் ஏற்பட்ட அழுத்தத்தைக் குறைப்பதற்காக, தங்களுடைய மனத்தில் உள்ள விஷயங்களைச் சொல்வதற்காக யாரிடம் பேசலாம், எந்தக் குழுக்களிடம் பேசலாம், எந்தத் தளங்களில் பங்கேற்கலாம் என்று தேடவேண்டும். அத்தகைய வாய்ப்புகள் கிடைக்கும்போது அவற்றைப் பயன்படுத்திக்கொள்ளவேண்டும். தங்களுடைய அனுபவங்களை புரிந்துகொள்ளக்கூடிய, எண்ணங்களை மதிக்கக்கூடிய, உணர்வுநிலையில் தங்களுக்கு ஆதரவளிக்கக்கூடிய நண்பர்களை அவர்கள் கண்டறிந்து, அவர்களுடன் நேரம் செலவிட்டு, தங்களை மகிழ்ச்சியாக வைத்துக்கொள்ளவேண்டும். இதுவே எல்லாருக்கும் நல்லது.

வொய்ட் ஸ்வான் ஃபவுண்டேஷன்
tamil.whiteswanfoundation.org