தனக்குத் தெரிந்த ஒருவர் தீய பொருட்களை தவறாகப் பயன்படுத்திப் பிரச்னையில் சிக்கிக்கொண்டிருக்கிறார் என்றால், அதை பார்த்துக்கொண்டிருப்பது எவருக்கும் கடினமாக இருக்கலாம். அதேசமயம் அதைப்பற்றி அவர்களிடம் ஓர் உரையாடலைத் தொடங்குவதும் கடினமாக இருக்கலாம் – ஒருவேளை அவர்கள் இதனால் அவமதிக்கப்படுவதாக உணர்ந்தால்? அவர்கள் நான் பேசுவதைக் கேட்பார்களா? நான் இந்த விஷயத்தில் தலையிடுவது அவர்களுக்கு உதவுமா?
(படியுங்கள்: தீய பொருட்களுக்கு அடிமையாதல் என்பது எப்படி தோன்றுகிறது? )
தீய பழக்கங்களுக்கு அடிமையாகும் ஒருவர் அதை விட்டுவிடுவது என்று தீர்மானிப்பதற்குமுன்னால், மாறுவதற்கான ஊக்கம் அல்லது தயார் நிலையில் வெவ்வேறு நிலைகளை அனுபவிக்கலாம். அவர்கள் பிறருடைய ஆலோசனைகளை ஏற்றுக்கொண்டு செயல்படுவார்களா என்பது அவர்களுடைய தயார் நிலையில் அவர்கள் எங்கே இருக்கிறார்கள் என்பதைப்பொறுத்து அமையும். எல்லா மாற்றங்களையும்போல, மாற்றத்துக்கான ஊக்கம் உள்ளிருந்து வரும்போது அந்த மாற்றம் மிகவும் செயல்திறன் வாய்ந்ததாக இருக்கிறது.
அதேசமயம் தீய பழக்கங்களுக்கு அடிமையாகியிருக்கிற ஒருவர் தன்னுடைய பழக்கத்தின் தாக்கத்தை அறிந்திருக்கலாம், அந்தப் பொருளைப் பயன்படுத்துவதைத் தன்னால் நிறுத்த இயலாது என்று அவர் உணரலாம் (எடுத்துக்காட்டாக, மது அருந்துதல், புகையிலை, போதைப் பழக்கம்). ஒருவர் தன்னுடைய நண்பர் மற்றும் சக ஊழியரிடம் ஓரளவு தாக்கத்தைக் கொண்டிருக்கிறார் என்றால், அவர் இந்தப் பழக்கத்தை நிறுத்த முயற்சி செய்தால் அவருக்கு ஆதரவு கிடைக்கும் என்பதை அவருடைய உள்ளீடு தெரிவிக்கலாம், அவர்களை உதவி பெறக்கூடத் தூண்டலாம்.
(படியுங்கள்: தீய பழக்கங்களுக்கு அடிமையாவது விருப்பத்தின் அடிப்படையிலானதா? )
தீய பழக்கங்களுக்கு அடிமையாகி இருக்கிற ஒருவரிடம் எதைச் சொல்லக்கூடாது?
பல நேரங்களில், தீய பழக்கத்துக்கு அடிமையாகியிருக்கிற ஒருவரிடம் பேசும்போது அவர்களைக் குற்றம் சாட்டுவது போன்ற எதையாவது மக்கள் சொல்லிவிடக்கூடும், குறிப்பாக, அவர்கள் ஒரு தவறான தேர்வைச் செய்திருக்கிறார்கள் என்கிற கருத்தை இவர்களுடைய சொற்றொடர்கள் தெரிவிக்கும்போது அந்தப் பொருள் வந்துவிடக்கூடும். எடுத்துக்காட்டாக இந்தச் சொற்றொடர்களைக் கவனிக்கலாம்:
தான் விமர்சிக்கப்படுகிறோம் என்று ஒருவர் உணரும்படியான எந்தச் சொற்றொடரும் அவரை மாற்றிவிடாது, அப்படிப்பட்ட சொற்றொடர்கள் அவரைத் தற்காப்பாக உணரச்செய்யலாம், இதனால், சொல்லப்படுவதை அவர்கள் கருத்தில் கொள்ளுவதற்கான வாய்ப்பு மிகவும் குறைந்துவிடும்.
அதற்குப் பதிலாக என்ன சொல்லலாம்?
உரையாடலை இயல்பாகத் தொடங்கலாம். உரையாடலுக்கான நேரம் முக்கியமானதாக இருக்கலாம்: அவர்கள் ஒரு தீய பொருளை உட்கொண்டு மயக்க நிலையில் இருக்கும்போது அல்லது உடல்ரீதியில் நலமற்று உணரும்போது அவர்களிடம் எதையாவது பேசினால் அவர்கள் அதைக் கவனித்துக் கேட்பதற்கான மனநிலையில் இருக்க வாய்ப்புகள் குறைவு. ஆகவே, உரையாடலைத் தொடங்குவதற்குமுன்னால் அவர்கள் இதுபற்றிப் பேச விரும்புகிறார்களா என்பதைச் சரிபார்த்துக்கொள்வது நல்லது.
அவர்களிடம் தான் கவனித்திருக்கும் பழக்கத்தைப்பற்றிக் குறிப்பிட்டு உரையாடலைத் தொடங்கலாம். ”சமீபகாலமாக நீங்கள் அடிக்கடி அலுவலகத்துக்கு தாமதமாக வருகிறீர்கள் என்பதை நான் கவனித்திருக்கிறேன், உங்களை எண்ணி நான் கவலை கொள்கிறேன்.” ஒரு தீய பழக்கத்துக்கு அடிமையாகி இருக்கிறவர், அந்தப் பழக்கம் தன்னுடைய உறவுகளை மற்றும் தன்னைச் சுற்றியிருக்கிற மனிதர்களை எப்படிப் பாதிக்கிறது என்பதில் கவனம் செலுத்துவதில் சிரமம் கொள்ளலாம், இந்தத் தகவல் அவர்களுக்கு ஒரு புதிய பார்வைக் கோணத்தை வழங்கலாம். ஒருவர் தன்னுடைய கவலையைச் சொல்லிப் பேச்சைத் தொடங்கும்போது, அந்த உரையாடல் தொடர்வதற்கு அது உதவுகிறது.
தீய பழக்கத்தின் பாதகமான விளைவுகளைக் குறிப்பிடுவதற்குப் பதிலாக, அந்தப் பழக்கம் அவர்களுடைய ஆரோக்கியம் அல்லது பணியில் அல்லது அவர்களுக்கு முக்கியமான இன்னொன்றில் எப்படிப்பட்ட தாக்கத்தைக் கொண்டிருக்கிறது என்பதுபற்றிப் பேசலாம் ”கடந்த சில வாரங்களாகவே நீங்கள் தொடர்ந்து அலுவலகத்துக்குத் தாமதமாக வருகிறீர்கள் என்பதை நான் கவனித்திருக்கிறேன். ஏதாவது பிரச்னையா? உங்களுக்கு உதவி தேவையா?”
ஒருவேளை, அவர்கள் தங்களுடைய பழக்கத்தைப்பற்றிப் பேச விரும்பினால் அல்லது தாங்கள் ஏன் அந்தத் தீய பழக்கத்தில் ஈடுபட்டிருக்கிறோம் என்பதை விளக்க விரும்பினால், குறுக்கிடாமல் அவர்கள் சொல்வதைக் கேட்கவேண்டும் – அவர்கள் தங்களை வெளிப்படுத்துவதற்கான இடத்தை வழங்கவேண்டும், அவர்கள் சொல்லுவதை இவர் ஏற்காமல் இருக்கலாம், ஆனாலும் அவர்களுடைய பார்வைக் கோணத்தைக் கருத்தில் கொள்ளவேண்டும், அதற்கு அவர்களை முழுமையாகப் பேச அனுமதிக்கவேண்டும். ஒருவேளை, அவர்கள் அழுத்தம் அல்லது தனிமை உணர்வால் அந்தத் தீய பழக்கத்தில் ஈடுபடலாம், அல்லது, அந்தத் தீய பழக்கத்தை விட விரும்பியும் அதை எப்படி விடுவது என்று அவர்களுக்குத் தெரியாமல் இருக்கலாம், அதை எண்ணி அவர்கள் எரிச்சலாக உணரலாம்.
ஆகவே பேச்சைத் திறந்த நிலையில் வைப்பது நல்லது: ”இந்தப் பழக்கத்தை விடுவதற்கு யாரிடமாவது உதவியை நாடுவதுபற்றி நீங்கள் சிந்திப்பீர்களா?”
இந்தப் பழக்கத்தை விடுவதில் அவர்களுக்கு இவருடைய ஆதரவு இருக்கும் என்பதை உறுதியாகச் சொல்லவேண்டும், அவர்களுக்கு இருக்கும் தெரிவுகளைத் தெரிவிக்கவேண்டும், அதேசமயம் அந்தத் தெரிவுகளில் ஒன்றைத் தேர்ந்தெடுக்கத்தான் வேண்டும் என்று அவரைக் கட்டாயப்படுத்தக்கூடாது.
ஆனால், சிலநேரங்களில் இவருக்கு அவரைப்பற்றி மிகுந்த கவலை உண்டாகிறது, ஒரு சமநிலையான உரையாடலை நிகழ்த்த இயலுமா என்றே இவருக்கு தெரியவில்லை.
தீய பழக்கம் ஒன்றுக்கு அடிமையாகியிருக்கும் ஒரு நண்பர் அல்லது அன்புக்குரியவரிடம் பேசும்போது, அவரை எப்படியாவது அந்தப் பழக்கத்தை விடும்படி செய்துவிடவேண்டும் என்கிற விருப்பம் இல்லாமல் பேசுவது மிகவும் சவாலான விஷயமாக இருக்கலாம். அவர்களுடைய செயல்பாடுகளிலிருந்து விலகிச் சிந்திப்பதும், தன்னுடைய தாக்கத்தின் வரம்பு எங்கே முடிகிறது என்பதைப் புரிந்துகொள்வதும் எளிதில்லை, அதனால்தான் தன் பராமரிப்பு மிகவும் அவசியமாகிறது.
இந்த உரையாடலைத் தொடங்குவதற்குமுன்னால், தன்னுடைய அன்புக்குரியவரிடம் பேசுவதற்குத் தனக்கு என்ன ஆதரவு தேவை என்பதை அவர் தன்னைத்தானே கேட்டுக்கொள்ளவேண்டும். எடுத்துக்காட்டாக, தான் நம்பிக்கை வைத்திருக்கிற ஒருவரிடம் அவர் உரையாட விரும்பலாம் அல்லது ஓர் ஆலோசகருடன் உரையாட விரும்பலாம் அல்லது உதவித் தொலைபேசி எண்ணை அழைத்துப் பேசவிரும்பலாம், இதன்மூலம், தான் என்ன சொல்லலாம் என்பதில் அவர் இன்னும் அதிகத் தெளிவு பெற விரும்பலாம். உரையாடலின்போது அவரிடமிருந்து ஒரு தற்காப்பான எதிர்வினையைப் பெறுவதற்கு அவர் தயாராக இருக்கவேண்டும். ஒருவேளை அவர் உதவியை நாட விரும்பவில்லை என்றால் இவருக்கு வேறு வழியே இல்லை, காத்திருக்கவேண்டியதுதான். அதுபோன்ற சூழ்நிலைகளில் இவர் தன்னால் எதையும் செய்ய இயலவில்லையே என்று வருந்தக்கூடும், கோபப்படக்கூடும், எரிச்சலடையக்கூடும்; ஆனால் இதுபோன்ற உணர்வுகள் மற்றும் அழுத்தம் அவரைத் திகைப்புக்குள்ளாக்கினால் அவர் ஓர் ஆலோசகர் அல்லது சிகிச்சை நிபுணரை அணுகிச் சூழ்நிலையைச் சமாளிப்பதற்கான உதவியைப் பெறலாம்.
இந்தக் கட்டுரை, பெங்களூரில் உள்ள பீப்புள் ட்ரீ மார்காவில் மூத்த மனநல ஆலோசகராகப் பணியாற்றும் டாக்டர் திவ்யா நல்லூர் வழங்கிய கருத்துகளுடன் எழுதப்பட்டுள்ளது.