குறைபாடுகள்

அல்சைமர்ஸைப் புரிந்துகொள்ளுதல்

வொய்ட் ஸ்வான் ஃபவுண்டேஷன்

Q

அல்சைமர்ஸ் குறைபாடு வந்தவர்களுடைய மூளை என்ன ஆகிறது?

A

அல்சைமர்ஸ் குறைபாடு எப்படித் தொடங்குகிறது என்பது நமக்கு இன்னும் தெரியவில்லை, ஆனால் அதற்கான அறிகுறிகள் தெரியத் தொடங்குவதற்குக் குறைந்தபட்சம் பத்து ஆண்டுகள் முன்பாகவே சேதம் தொடங்கிவிடுகிறது என நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள். அல்சைமர்ஸ் குறைபாடு வந்த ஒருவருக்கு ஆரம்பத்தில் எந்தவிதமான அறிகுறிகளும் இருக்காது, ஆனால் அவருடைய மூளையில் தீவிரமான மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டிருக்கும். காலப்போக்கில் நியூரான்கள் செய்திகளைப் பரிமாற்றும் திறனை இழக்கத் தொடங்கும், ஒரு கட்டத்தில் அவை முழுமையாக அழிக்கப்பட்டுவிடும்.

விரைவில் இந்தச் சேதம் மூளையின் ஹிப்போகேம்பஸ் என்ற பகுதிக்குப் பரவுகிறது, இந்தக் கட்டமைப்பு தான் நினைவுகளைக் கட்டுப்படுத்துகிறது. நியூரான்கள் மேலும் மேலும் சேதமடைய மூளையில் பாதிக்கப்பட்ட பகுதிகள் சுருங்கத் தொடங்குகின்றன. அல்சைமரின் நிறைவு நிலையில் மூளையின் வேறு பல பகுதிகளும் சேதமடைந்து காணப்படும், பாதிக்கப்பட்டவர் தனது நினைவுகளை முழுமையாக இழந்துவிடுவார், தன்னைக் கவனித்துக் கொள்பவரை முற்றிலும் சார்ந்து வாழ்வார்.

Q

அல்சைமர்ஸ் குறைபாடு கொண்ட ஒருவர் எவ்வளவு காலம் உயிர் வாழ இயலும்?

A

அல்சைமர்ஸ் மெதுவாகப் பரவும் ஒரு நோய், இது மூன்று நிலைகளாக முன்னேறுகிறது: தொடக்க நிலையில் அறிகுறிகள் எவையும் இருக்காது, நடு நிலையில் மிதமான அறிவாற்றல் பாதிப்புகள் காணப்படும், முதிர்ந்த நிலையில் ஞாபக சக்தி முற்றிலும் தொலைந்து விடும். ஒருவருக்கு அல்சைமர்ஸ் பிரச்னை உள்ளது கண்டறியப்பட்டதில் தொடங்கி அவர் எவ்வளவு காலம் உயிர் வாழ்வார் என்பது நபருக்கு நபர் மாறுபடும் -  80வயது அல்லது அதற்கு மேல் உள்ளவர்களுக்கு அல்சைமர்ஸ் இருப்பது கண்டறியப்பட்டால் அவர்கள் மூன்று முதல் நான்கு ஆண்டுகளே உயிர் வாழக்கூடும், மற்றவர்கள் பத்து ஆண்டுகள் வரை உயிர் வாழலாம்.

Q

டிமென்சியா என்றால் என்ன?

A

டிமென்சியா என்பது ஒருவருடைய அறிவாற்றல் செயல்பாட்டை (சிந்தித்தல், நினைவுக்குக் கொண்டு வருதல் மற்றும் புரிந்து கொள்ளுதல்), மற்றும் நடந்துகொள்ளும் விதத்தைப் பாதிக்கும் ஒரு பிரச்னை. இதனால் இந்தப் பிரச்னை ஒருவருடைய தினசரி வாழ்க்கையையும் நடவடிக்கைகளையும் பாதிக்கிறது. டிமென்சியா ஆரம்பத்தில்  மிதமான அளவில் இருக்கலாம், அப்போது இந்தப் பிரச்னை உள்ளவருடைய  தினசரி நடவடிக்கைகள் சற்றே பாதிக்கப்படும், பிறகு இந்தப் பிரச்னை தீவிரமாகி சம்பந்தப்பட்ட நபர் தனது தினசரி வாழ்க்கைச் செயல்பாடுகள் அனைத்துக்கும் பிறரைச் சார்ந்திருக்கும்படி முற்றிவிடும்.

பல நிலைகள், நோய்களால் டிமென்சியா வரலாம். வயதானோருக்கு வரும் டிமென்சியாவுக்கு மிகவும் பொதுவான காரணம் அல்சைமர்ஸ் குறைபாடு. மூளைக்கு ரத்தம் செல்லுதலில் ஏற்படும் தொடர்ச்சியான தடைகள் அல்லது மாற்றங்களால் வாஸ்குலார் டிமென்சியா ஏற்படுகிறது.

டிமென்சியாவை ஏற்படுத்தக்கூடிய மற்ற நிலைகள்:

  • மருந்துகளால் ஏற்படும் பக்கவிளைவுகள்
  • தீவிரக் குடிப்பழக்கம்
  • மூளையில் கட்டி அல்லது தொற்று
  • அதிர்ச்சி தரும் விதத்தில் மூளைக்கு ஏற்படும் காயம், அதனால் நியூரான்கள் அதீதமாகச் சேதமடைதல்
  • மூளையில் ரத்தக் கட்டிகள்
  • வைட்டமின் பி12 குறைபாடு
  • தைராய்டு, சிறுநீரகம் அல்லது கல்லீரல் பிரச்னைகள்

Q

டிமென்சியாவைத் தவறாக கணித்துவிட வேண்டாம்

A

அழுத்தம், பதற்றம் அல்லது மனச்சோர்வு போன்ற பிரச்னைகளால் ஒருவர் பல விசயங்களை மறக்கத் தொடங்கலாம், இந்த அறிகுறிகளைப் பார்த்து அவருக்கு டிமென்சியா வந்திருக்கிறது எனப் பிறர் நினைக்க வாய்ப்புண்டு. உதாரணமாக சமீபத்தில் பணி ஓய்வு பெற்ற ஒருவர் அல்லது தன்னுடைய துணையின் மரணத்தை ஏற்றுக்கொள்ள இயலாமல் சிரமப்படும் ஒருவர் எப்போதும் சோகமாக உணரலாம், தனிமையாக உணரலாம், வருத்தத்துடன் காணப்படலாம் அல்லது சலிப்புடன் தோன்றலாம். வாழ்க்கையில் ஏற்படும் இதுபோன்ற மாற்றங்களைச் சமாளிக்க இயலாமல் சிலர் குழப்பத்துடனோ ஞாபக மறதியிடனோ காணப்படலாம். குடும்பத்தினர் மற்றும் நண்பர்களின் ஆதரவு மூலம் அத்தகைய பிரச்னைகளைப் பெருமளவு குறைத்துவிடலாம்.

Q

நான் அடிக்கடி பெயர்களை மறந்து கொண்டே இருக்கிறேன், எனக்கு அல்சைமர்ஸ் குறைபாடு வந்திருக்குமோ?

A

எல்லாரும் அவ்வப்போது சில விசயங்களை மறப்பது சகஜம் தான். உங்களுடைய ஞாபக மறதி படிப்படியாக அதிகரித்து ஒரு கட்டத்தில் உங்களுடைய வாழ்க்கைச் செயல்பாடுகளையே பாதிக்கத் தொடங்கினால் தான் நீங்கள் இதைப்பற்றி கவலைப்பட வேண்டும். மற்றபடி ஞாபகமறதி என்றவுடன் அது டிமென்சியாவாக இருக்குமோ என எண்ண வேண்டியதில்லை.

Q

அல்சைமர்ஸ் குறைபாடு வருகிற ஆபத்து முதியவர்களுக்கு மட்டும் தான் உண்டா?

A

அல்சைமர்ஸ் குறைபாட்டால் பாதிக்கப்பட்டவர்களில் சுமார் 50 சதவிகிதப் பேர் 75 வயது அல்லது அதற்கு மேல் உள்ளவர்கள் எனப் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. ஆனால் சில சூழ்நிலைகளில் 40கள் அல்லது 50களில் இருப்பவர்களுக்கும் அல்சைமர்ஸ் பிரச்னை வரலாம்.