போதைப்பொருளுக்கு அடிமையாதல்: இது ஒருவருடைய விருப்பத்தைப்பொறுத்த விஷயமா?

ஒருவர் போதைப்பொருள்களுக்கு அடிமையாவதென்பது ஒரு சிக்கலான விஷயம், அதில் உயிரியல், சமூகவியல் மற்றும் உளவியல் காரணிகள் உள்ளன .

ரோஹித் கல்லூரியில் சேர்ந்தபோது, புகைபிடிக்கத் தொடங்கினான். அவனுடைய நண்பர்களெல்லாம் பதின்பருவத்தைச்சேர்ந்தவர்கள்தாம், அவர்கள் எல்லாரும் புகைபிடித்தார்கள். ரோஹித் அவர்களைப்போலவே இருக்க விரும்பினான். ஆகவே, தயங்கித்தயங்கித் தினமும் ஒன்று அல்லது இரண்டு சிகரெட்களைப் புகைக்க ஆரம்பித்தான். ஆறு மாதங்கள் கழித்து, ரோஹித் தினமும் ஒரு பாக்கெட் சிகரெட் பிடித்துக்கொண்டிருந்தான். இப்போது அவனுக்கு வகுப்புகள், பாடங்கள், மதிப்பெண்கள், எதிலும் ஆர்வம் இல்லை. விடுமுறைக்கு அவன் வீட்டுக்குச் சென்றான், அங்கே அவனால் அதிகம் புகைபிடிக்க இயலவில்லை. ஆகவே, அவன் அடிக்கடி எரிச்சலடைந்தான், அவனுக்குக் குமட்டல் வந்தது, நிலைகொள்ளாமல் திரிந்தான். எப்போதும் அங்குமிங்கும் நடந்துகொண்டிருந்தான், அவனால் சிறிய வேலைகளில்கூடக் கவனம் செலுத்த இயலவில்லை. அடிக்கடி வீட்டிலிருந்து வெளியே சென்று புகைபிடித்தான். அப்போதுதான் அவனால் இயல்பாக உணர இயன்றது. அவனால் தன்னுடைய விடுமுறையை அனுபவிக்க இயலவில்லை, வீட்டிலுள்ளவர்களுடன் நேரம் செலவிட இயலவில்லை, எப்போது வீட்டிலிருந்து வெளியே சென்று புகைபிடிக்கலாம், வீட்டுக்குள்ளேயே யாருக்கும் தெரியாமல் புகைபிடிப்பது எப்படி, சீக்கிரம் கல்லூரிக்குத் திரும்பச்சென்றுவிட்டால், எந்தத் தடைகளும் இல்லாமல் இஷ்டம்போல் புகைபிடிக்கலாமே... இப்படிதான் அவனுடைய சிந்தனைகள் இருந்தன. ரோஹித் புகைப்பழக்கத்துக்கு அடிமையாகிவிட்டான் என்று அவனுடைய பெற்றோருக்குத் தெரிந்திருக்கவில்லை. அந்த ஆண்டின் நிறைவில், கல்லூரி நிர்வாகம் அவர்களை அழைத்து, 'உங்கள் மகன் வகுப்புக்கே வரவில்லை, ஆகவே, அவன் இன்னொருவருடம் இதே பாடங்களைப் படிக்கவேண்டும்' என்று சொன்னபோதுதான் அவர்களுக்கு விஷயம் தெரியவந்தது.

இது ஒரு கற்பனை விவரிப்பு. நிஜவாழ்க்கைச் சூழலில் இந்தப் பிரச்னை எப்படி அமையும் என்று புரியவைப்பதற்காக உருவாக்கப்பட்டுள்ளது.

போதைப்பழக்கத்துக்கு அடிமையாதல் என்றால் என்ன?

அடிமையாதல் என்பது, ஒருவர் தனக்கு இன்பம் தரும் ஒரு பொருளைச் (மது, சிகரெட்கள், போதைமருந்துகள் போன்றவை) சார்ந்து வாழத்தொடங்கும் நிலையாகும். ஒருவர் ஒரு குறிப்பிட்ட பொருளைச் சார்ந்து வாழத்தொடங்கும்போது, அவரால் தன்னுடைய வாழ்க்கையின் பிற விஷயங்களில் கவனம் செலுத்த இயலுவதில்லை, குடும்பத்தினர், நண்பர்களைக் கவனிக்க இயலாமல் தடுமாறுகிறார், வேலையில் தனக்கு வழங்கப்படும் கடமைகளைச் சரிவர நிறைவேற்ற இயலாமல் திணறுகிறார். இதனால், அவருக்கும் பிரச்னை, சுற்றியிருக்கிற மற்றவர்களுக்கும் பிரச்னை.

ஒருவர் ஒரு பழக்கத்துக்கு அடிமையாகிறார் என்றால், அது வலுவான உயிரியல் அடிப்படையைக்கொண்ட ஒரு மூளை நோய் ஆகும், இது சமூக மற்றும் உளவியல் காரணிகளால் பாதிக்கப்படுகிறது.

குறிப்பு: போதைப்பழக்கத்துக்கு அரிமையானவர்களைப்பற்றிப் பல தவறான நம்பிக்கைகள் உள்ளன. உதாரணமாக, அவர்கள் மனத்தளவில் பலவீனமானவர்கள், ஒழுக்கமற்றவர்கள்... இப்படி. இங்கே அனைவரும் புரிந்துகொள்ளவேண்டிய ஒரு விஷயம், ஒருவர் ஒரு விஷயத்துக்கு அடிமையாகிறார் என்றால், அவரே விரும்பி அப்படி நடந்துகொள்வதில்லை, அதற்குப் பல மரபியல் மற்றும் சுற்றுச்சூழல் காரணிகள் உள்ளன.

ஒருவர் ஒரு பொருளுக்கு எப்படி அடிமையாகிறார்?

அடிமைப்படுத்தக்கூடிய எல்லாப் பொருள்களிலும் (மது, நிக்கோடின் அடிப்படையிலான சிகரெட்கள், போதைமருந்துகள்) உள்ள வேதிப்பொருள்கள், அவற்றைப் பயன்படுத்துவோரின் உடலில் உயிரியல் மாற்றங்களை உண்டாக்கக்கூடியவை. ஒருவர் இந்தப் பொருள்களில் எதைப் பயன்படுத்தினாலும் சரி, அவருடைய மூளையில் டோபமைன் வெளிவிடப்படுகிறது, இது மகிழ்ச்சியுணர்வைத் தூண்டுகிறது. இதனால், அவர் அந்தப் பொருளை மீண்டும் தேடுகிறார். அதைப் பயன்படுத்தினால் தனக்கு உடனே மகிழ்ச்சி கிடைக்கும் என்று எண்ணுகிறார். அவர் அந்தப் பொருளைப் பயன்படுத்தாமல் நிறுத்திவிட்டால், அவர் அதற்காக ஏங்குகிறார், மீண்டும் அதே பழைய இன்பத்தை உருவாக்கவேண்டும் என்று துடிக்கிறார்.

அவர் அந்தப் பொருளைப் பயன்படுத்தப் பயன்படுத்த, அவரது உடலில் அந்தப் பொருளுக்கான சகிப்புத்தன்மை அதிகரிக்கிறது, இதனால், அவர்கள் அதைப் பயன்படுத்தாமல் நிறுத்தினால், பல விலகல் அறிகுறிகள் வருகின்றன, அவர்கள் அந்தப் பொருளைத் தேடி ஓடுகிறார்கள். அந்தப் பொருள் இல்லாமல் தங்களால் வாழவே இயலாது என்று அவர்கள் எண்ணக்கூடும், உணவு, தண்ணீர், அல்லது ஆக்ஸிஜன்போல் இதுவும் தங்களுக்கு முக்கியம் என்று நினைக்கக்கூடும். இப்படி இவர்கள் இந்தப் பொருளிலேயே தொடர்ந்து கவனம் செலுத்துவதால், அவர்கள் தங்கள் வேலையை, கடமைகளை, குடும்பத்தினரை, நண்பர்களைக் கவனிப்பதில்லை.

WHO அறிகுறிகளின்படி, ஒருவர் ஒரு பொருளுக்கு அடிமையானார் என்றால், அவரிடம் இந்த அறிகுறிகள் காணப்படும்:

·         அந்தப் பொருளைப் பயன்படுத்தியே தீரவேண்டும் என்று எண்ணுவார்

·         அவர்களாக அதனை நிறுத்தவோ குறைக்கவோ இயலாது

·         அடுத்தமுறை எப்போது அந்தப் பொருளைப் பயன்படுத்தலாம் என்பதைப்பற்றியே சிந்தித்துக்கொண்டிருப்பார்கள்

அடிமையாதல் தொடர்பான குறைபாடுகளைப்பற்றிப் பேசும்போது WHO பயன்படுத்தும் கண்டறிதல் சொற்களின் பட்டியல் இதோ.

ஒருவர் ஒரு பொருளுக்கு அடிமையாகிறார் என்றால், அது பல நாள்களுக்கு நீடிக்கக்கூடிய, மீண்டும் வரக்கூடிய நிலையாகும், இந்தப் பிரச்னை, நீரிழிவு போன்ற பலநாள் நீடிக்கக்கூடிய நோய்களைப்போலவே அமையும். பாதிக்கப்பட்டவர்களுக்குச் சிகிச்சை தேவை, அந்தச் சிகிச்சை குறுக்கீடு, கட்டுப்பாடு ஆகிய வடிவங்களில் அமையவேண்டும். ஒருவர் சிகிச்சைக்குச் செல்கிறார் என்றால், அவர் மீண்டும் அந்த போதைப்பொருளுக்கு அடிமையாகமாட்டார் என்று எந்த உத்தரவாதமும் இல்லை; அவர் மறுபடி அந்தப் பொருளைத்தேடிச்செல்ல வாய்ப்புகள் உள்ளன. அப்படி அவர் அந்தப் பொருளைத் தேடிச்சென்றால், அவர் தோற்றுவிட்டார் என்று பொருளில்லை. அந்தப் பொருளுக்கு அடிமையாவதிலிருந்து அவர் முழுமையாக விடுபட அவருக்கு இன்னும் ஆதரவு தேவை என்றுதான் பொருள்.

பொதுவாக அடிமைப்படுத்தும் பொருள்கள்

இந்தியாவில் மக்கள் அடிமையாகக்கூடிய பொருள்களை மூன்று வகைகளாகப் பிரிக்கலாம்:

சட்டபூர்வமான போதைப்பொருள்கள், உதாரணமாக, மது, புகையிலை/சிகரெட்கள்

சட்டவிரோதமான போதைப்பொருள்கள், பொழுதுபோக்குப் போதைமருந்துகள்

மருந்தியல்துறையினால் உருவாக்கப்படும் மருந்துகள் அல்லது, மருத்துவர்களால் எழுதித்தரப்படும் மருந்துகள்

பழக்கம், அடிமைநிலை: என்ன வித்தியாசம்?

போதைப்பொருளுக்கு அடிமையான ஒருவர், முன்பு ஒருமடங்கு போதைப்பொருளால் பெற்ற அதே இன்பத்தைப் பெறுவதற்கு, இப்போது அவர் இரண்டு அல்லது மூன்றுமடங்கு போதைப்பொருளை உட்கொள்ளவேண்டியிருக்கும். இதனை மனவியல் நிபுணர்கள் 'சார்ந்திருத்தல்' என்கிறார்கள். உதாரணமாக, முன்பு ஒருவர் ஒரு கோப்பை மது அருந்தியவுடன் போதையை அடைந்திருப்பார், ஆனால், சில மாதங்கள் கழித்து, அதே போதையை அடைவதற்கு அவருக்குக் குறைந்தபட்சம் மூன்று கோப்பை மது தேவைப்படுகிறது. சார்ந்திருத்தல் அல்லது அதிகமான சகிப்புத்தன்மை என்பது, ஒருவருடைய பழக்கம் இப்போது அடிமைநிலையாக மாறிவிட்டது என்பதைக் காட்டும் எச்சரிக்கைச் சின்னங்களில் ஒன்றாகும்.

ஒருவர் ஒரு பொருளுக்கு அடிமையாகிவிட்டார் என்பதைக் காட்டும் வேறு சில அடையாளங்கள்:

·         அந்தப் பொருள் அவருடைய நேரத்தை, சிந்தனையைப் பெருமளவு ஆக்கிரமித்துக்கொள்ளும் (நான் அடுத்து எப்போது புகைப்பது/மது அருந்துவது? அதற்குப்பதிலாக நான் எதைப் புகைக்கலாம்/அருந்தலாம்? நான் மதுவை எங்கிருந்து பெறுவது? எப்படிப் பெறுவது?)

·         அவர் அந்தப் பொருளை ஒரு குறிப்பிட்ட காலகட்டத்துக்குப் பயன்படுத்தவில்லை என்றால், விலகல் அறிகுறிகள் தோன்றும்: நடுக்கம், எரிச்சல், தீவிர ஏக்கம் மற்றும் பிற உளவியல், உணர்வுத் தாக்கங்கள்

·         ஒருநாள்முழுக்க அந்தப் பொருள் இல்லாமல் வாழ முயன்றால், கட்டுப்பாடில்லாத உணர்வு ஏற்படும், ஆகவே, அவர் அப்படிச் செயவே விரும்பமாட்டார்

·         ஏக்கம்: ஒரு பொருளை உட்கொள்ளவேண்டும் என்று ஏற்படுகிற வலுவான துடிப்பு

·         ஒரு பொருள் தனக்கு உடல்ரீதியிலும் உணர்வுரீதியிலும் துன்பம் தருகிறது, தன்னைச் சுற்றியுள்ளவர்களுக்குக் கஷ்டம் விளைவிக்கிறது என்று தெரிந்தும் அதனைத் தொடர்ந்து பயன்படுத்துதல்

ஒரு பொருளை மிகையாகப் பயன்படுத்துவதற்கும் அடிமையாதலுக்கும் என்ன வித்தியாசம்?

தினசரிப் பயன்பாட்டில், 'ஒரு பொருளை மிகையாகப் பயன்படுத்துதல்' என்றால், ஒருவர் ஒரு பொருளைத் தொடர்ந்து நிறைய  பயன்படுத்திவருகிற பாணி ஆகும். அவர் அந்தப் பொருளை அளவுக்கதிகமாகப் பயன்படுத்தக்கூடும், அல்லது, பொருந்தாத நேரங்களில், இடங்களில் பயன்படுத்தக்கூடும். ஒரு பொருளை மிகையாகப் பயன்படுத்துகிற ஒருவர், அதற்கு அடிமையாக இருக்கலாம், இல்லாமலும் போகலாம். அந்தப் பொருளை எவ்வளவு பயன்படுத்துவது, எப்போது நிறுத்துவது என்பதை இவர்களால் தீர்மானிக்க இயலும், அந்தப் பொருள் இல்லாமல்கூட நெடுங்காலம் இயல்பாக வாழ்வார்கள். அதேசமயம், இந்தப் பொருளை இவர்கள் பயன்படுத்துவதால் இவர்களுடைய உடலில், உறவுகளில், சமூகத்தில் பிரச்னைகள் ஏற்படவில்லை என்று அர்த்தமாகாது.

மருத்துவரீதியில் சொல்வதென்றால், ஒருவர் ஒரு பொருளுக்கு அடிமையாகிவிட்டார் என்றால், அவர் அதைச் சார்ந்து வாழ்கிறார் என்றூ பொருள். அடிமையாதல் என்பது நீண்டநாள் நீடிக்கக்கூடிய, திரும்ப வரக்கூடிய ஒரு குறைபாடு. அந்தப் பொருளைப் பயன்படுத்துவதால் அவர்களுடைய மூளையில் மாற்றங்கள் ஏற்படுகின்றன, அதனால், அவர்களால் அந்தப் பொருளை விட இயலுவதில்லை.

மிகையாகப் பயன்படுத்துதல், அடிமையாதல் என்ற இரண்டுமே ஒருவருக்குத் துன்பத்தைத் தரக்கூடும்.

அடிமையாதல் என்பது ஒரு மனநோயாகக் கருதப்படுவது ஏன்?

ஒருவர் ஒரு பொருளுக்கு அடிமையாகும்போது, அவர் அதைத் திரும்பத்திரும்பப் பயன்படுத்துகிறார், அதனால் அவருடைய மூளை இயங்கும்விதத்தில் மாற்றங்கள் ஏற்பட்டுவிடுகின்றன. ஒருவர் ஒரு பொருளுக்கு அடிமையாக இருக்கிறார் என்றால், இந்த விஷயத்தில் தான் மாறவேண்டும் என்பதுகூட அவர்களுக்குத் தெரிந்திருக்காது; அந்தப் பொருள்தான் மிக முக்கியம் என்று அவர்கள் எண்ணுவார்கள். அவர்களால் தங்களுடைய அனிச்சைசெயல்களைக் கட்டுப்படுத்திக்கொள்ள இயலாது, சரியாகத் தீர்மானமெடுக்க இயலாது, ஆகவே, அவர்கள் தொடர்ந்து அந்தப் பொருளை விரும்புவார்கள், அவர்களே விரும்பினாலும் அதைவிட்டு அவர்களால் விலகியிருக்க இயலாது. எப்படியாவது போதைமருந்தை வாங்கிவிடவேண்டும், மது அருந்திவிடவேண்டும், சிகரெட் புகைத்துவிடவேண்டும் என்பதுபோல்தான் அவர்களுடைய சிந்தனைகள் இருக்கும், அதையே முக்கியமாகக் கருதுவார்கள், வேலை, குடும்பம், நண்பர்கள் அல்லது பிற கடமைகளில் அவர்களால் கவனம் செலுத்த இயலாது. இதனால், அவர்களது தினசரிச் செயல்பாடுகள், உறவுகள் பாதிக்கப்படுகின்றன.

ஒரு குறிப்பிட்ட பொருளுக்கு அடிமையாகியுள்ள ஒருவருடைய மூளையில் எப்படிப்பட்ட மாற்றங்கள் ஏற்படுகின்றன என்று பார்த்தால், மனச்சோர்வு, தீவிர பதற்றம் மற்றும் ஸ்கிஜோஃப்ரெனியா ஆகிய மனநலக் குறைபாடுகளுடன் தொடர்புடைய மூளைப்பகுதிகள்தான் பாதிக்கப்படுகின்றன. இதனால், ஒரு குறிப்பிட்ட பொருளுக்கு அடிமையாகியுள்ள ஒருவருக்கு இந்தத் தீவிர மனநலக் குறைபாடுகள் வருகிற வாய்ப்பு அதிகம்.

ஒருவர் தானே விரும்பி ஒரு பொருளுக்கு அடிமையாகிறாரா?

ஒருவர் ஒரு பொருளுக்கு அடிமையாகிறார் என்றால், அவர் முதன்முறையாக எதற்காக அந்தப் பொருளைப் பயன்படுத்தினார் என்று யோசிக்கவேண்டும், இதற்குப் பல காரணங்கள் இருக்கலாம்: குறுகுறுப்பு, சக நண்பர்களின் அழுத்தம், எல்லாரோடும் பொருந்திப்போகவேண்டும் என்ற எண்ணம், வீட்டில் நடப்பவற்றைக் கவனித்து, அதை அப்படியே திரும்பச்செய்தல், பிறருக்கு எதிராகப் புரட்சிசெய்யும் ஆர்வம் போன்றவை. ஆனால், இப்படி ஒரு பொருளைப் பயன்படுத்தத் தொடங்குகிறவர்களில் எல்லாரும் அதற்கு அடிமையாவதில்லை, சிலர்தான் அடிமையாகிறார்கள், மற்ற பலர் எப்போதாவது ஒரு சிகரெட், ஒன்றிரண்டு கோப்பை மது என்று இயல்பாக இருந்துவிடுகிறார்கள். இது ஏன்?

இதுபற்றி மருத்துவர்களிடம் கேட்டால், 'போதைப்பொருள்களுக்கு அடிமையாகும் அபாயம் சிலருக்கு அதிகமாக உள்ளது' என்கிறார்கள். 'மிகவும் அனிச்சையாகச் செயல்படுகிறவர்கள், எளிதில் கோபப்படுகிறவர்கள், பிறரை எதிர்த்து அல்லது புரட்சிகரமாகச் செயல்படுகிறவர்கள், அல்லது, இதற்கு நேரெதிராக, மிகவும் பதற்றத்தோடு, குறைந்த சுய மதிப்போடு உள்ளவர்களெல்லாம் போதைப்பொருள்களுக்கு அடிமையாக வாய்ப்புகள் அதிகம்' என்கிறார் NIMHANS அடிமையாதல் மருத்துவ மையத்தில் மனநல நிபுணராகப் பணியாற்றும் டாக்டர் பிரதிமா மூர்த்தி. இன்னும் சிலருக்கு, மரபுக்காரணங்களும் இருக்கலாம். அதாவது, இவர்களுடைய நெருங்கிய உறவினர் ஒருவர் போதைப்பொருள்களுக்கு அடிமையாகியிருப்பார், அப்போது இவர்களும் அவ்வாறு அடிமையாகக்கூடிய அபாயம் அதிகம்.

இந்த விஷயத்தில் சுற்றுச்சூழலும் ஒரு முக்கியமான பங்கை ஆற்றுகிறது. அதை வைத்து ஒருவர் போதைப்பொருளுக்கு அடிமையாவாரா மாட்டாரா என்று சொல்லலாம். ஒருவருக்குப் போதைப்பொருள்கள் எளிதில் கிடைக்கின்றனவா, அவற்றை அவரால் எளிதில் அணுக இயலுகிறதா, அவற்றை வாங்கும் அளவுக்கு அவரிடம் பணம் இருக்கிறதா, அவர் வாழும் சமூகம் அந்தப் போதைப்பொருளைப்பற்றி என்ன பேசுகிறது... இவற்றைப் பொறுத்துதான் ஒருவர் அந்தப் பொருளுக்கு அடிமையாவாரா மாட்டாரா என்பது தீர்மானிக்கப்படுகிறது.

ஒருவர் குறுகுறுப்பினால், சக நண்பர்களின் அழுத்தத்தால், சுற்றுச்சூழல் தாக்கங்களால் ஒரு குறிப்பிட்ட பொருளைப் பயன்படுத்தத் தொடங்கலாம், தான் அதற்கு அடிமையாகும் ஆபத்து அதிகம் என்பதுகூட அவருக்கு அப்போது தெரிந்திருக்காது. இந்த ஆபத்தில் உள்ளவர்களுக்கு, 'பாதுகாப்பான' எல்லை எது என்பதும் தெரியாது. குடித்தது போதும் என்று சொல்கிற வலுவான பாதுகாப்பு அமைப்புகள் அவர்களுக்கு இருக்காது, அதிகம் குடித்துவிட்டாய் என்று அவர்களை எச்சரிக்கை செய்கிற உளறுதல், தள்ளாடுதல் போன்ற அறிகுறிகளும் இருக்காது. இதனால், அவர்கள் அந்தப் பொருளை மேலும் மேலும் பயன்படுத்துவார்கள், தங்களுக்குத் தாங்களே தீங்கு விளைவித்துக்கொள்வார்கள்.

Related Stories

No stories found.
வொய்ட் ஸ்வான் ஃபவுண்டேஷன்
tamil.whiteswanfoundation.org