தீய பழக்கங்களுக்கு அடிமையாதல்: நாம் சிகிச்சைக்கான அணுகலை மேம்படுத்த வேண்டும்

போதைப்பொருள் பயன்பாடு இந்தியாவில் பெரும் பிரச்னையாக மாறிக்கொண்டுள்ளது, அதேநேரம், அதில் நாம் போதிய கவனம் செலுத்துவதில்லை. சமீபத்திய NIMHANSன் மன நலக் கணக்கெடுப்பு, குறைந்தது ஐந்தில் ஒரு நபர் போதைப்பொருள் பயன்பாட்டுப் பிரச்னை கொண்டுள்ளனர், மேலும், மது அல்லது போதைப்பொருள் பயன்பாட்டுப் பிரச்னை உடைய 100 நபர்களில், மூன்று பேர் மட்டுமே உதவியை நாடுகின்றனர் என்று தெரிவிக்கிறது. வைட் ஸ்வான் அறக்கட்டளையின் ஸ்ரீரஞ்சிதா ஜெரூக்கார், NIMHANS போதையடிமைத்தன நீக்க மையத் தலைவர் Dr பிரதீமா மூர்த்தி அவர்களிடம் இந்த எண்ணிக்கை குறித்தும், உதவி அனைவராலும் அணுகப்படக்கூடியதாக இருப்பதை உறுதிப்படுத்த என்ன செய்ய வேண்டும் என்றும் பேசினார்.

இந்தக் கணக்கெடுப்பு போதைப்பொருள் பயன்பாட்டுக் குறைபாட்டினைக் குறிப்பிடுகிறது. அந்தத் தொடரின் பொருள் என்ன? அது போதைப்பொருளைப் பயன்படுத்துதல் அல்லது அதற்கு அடிமையாவதிலிருந்து எப்படி வேறுபட்டது?
நாம் இதனைப் போதைப் பொருள் பயன்பாட்டுக் குறைபாடு என அழைக்கக் காரணம், நாம் கவலைப்படுவது அடிமைத்தனத்தைப்பற்றிமட்டுமில்லை, இதில் மிகப்பெரிய பிரச்னையாக நான் நினைப்பது, பலவிதமான வேதிப்பொருட்களின் பயன்பாட்டைத்தான்: அனுமதிக்கப்பட்ட பொருட்களான புகையிலை, மதுமட்டுமில்லாமல், அனுமதிக்கப்படாத பொருட்களான ப்ரௌன் சுகர், கொக்கைன், தூண்டிகள் அல்லது பரிந்துரைக்கப்படும் மருந்துகள் எனப் பலவற்றைப்பற்றியும் நாம் பேசுகிறோம். இந்தியாவில் இப்போதெல்லாம் பலர் (பெரியவர்கள், இளைஞர்கள், முதியவர்கள், பெண்கள்) எல்லா வகையான போதைப் பொருட்களையும் பயன்படுத்துகிறார்கள் என்று நம் அனைவருக்கும் தெரியும். எனவே, அனைவரும் கவலைப்பட வேண்டும் என்று நான் நினைக்கிறேன், ஏனெனில் இந்தப் பொருட்களின் பயன்பாடு எப்போது பிரச்னைக்குரியதாகும் என்று கூறுவது மிகவும் கடினமானது.

மனநல ஆய்வு, போதைப்பொருள் பயன்பாட்டுக் குறைபாடு உடைய நபர்களில் குறைந்தது 85 சதவீத நபர்கள் மருத்துவ உதவியைப் பெறுவதில்லை என்று கூறுகிறது. அப்படி நிகழ்வது ஏன் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்?
மக்கள் உதவியைப் பெறாததற்கு ஒரு காரணம், அது மிகவும் தீவிரம் அடையும் வரையில் அதனை அவர்கள் பிரச்னையாக நினைப்பதில்லை. இரண்டாவதாக, போதைப்பொருள் பயன்பாட்டின் சில சமூக விளைவுகள் போதுமான அளவில் கருதப்படவில்லை. எடுத்துக்காட்டாக, குடும்பங்களில் வன்முறை, விபத்துகள், அவசரகால அறையில் சேர்த்தல் (காயங்கள் மற்றும் உடல் சிக்கல்கள்), குடும்ப உறுப்பினர்களுடைய பிற வகை உணர்ச்சிப் பிரச்னைகள், பணியிடப் பிரச்னைகள் – இவை பெரும்பாலும் போதிய அளவில் கருதப்படுவதில்லை, மேலும் இது உதவியை நாடுவதைத் தாமதப்படுத்துகிறது. மூன்றாவதாக, மக்கள் எங்கு செல்ல வேண்டும் என்று அறிந்திருக்கவில்லை. ஏனெனில் மருத்துவ வசதிகளுக்குப் போதிய அளவில் முக்கியத்துவம் அளிக்கப்படவில்லை. நிபுணர்களுக்குப் போதைப்பொருள் பயன்பாட்டுக் குறைபாட்டைக் கண்டறிந்து சிகிச்சை அளிக்கப் போதிய அளவில் பயிற்சி அளிக்கப்படவில்லை. நான்காவது, போதைப்பொருள் பயன்பாட்டுடன் இணைந்த சமூகக் களங்கம். மக்கள் இன்னமும் தாங்கள் போதைப் பொருள் பயன்படுத்துகிறோம் என்பதை ஏற்றுக் கொள்ளத் தயக்கமாக உணர்கிறார்கள். மேலும் அவர்களால் இதைக் கைவிட இயலவில்லை. எனவே, இந்தப் பல பிரச்னைகளைச் சரிசெய்ய வேண்டும் என்று நான் நினைக்கிறேன்.

மக்களை உதவியை நாடுவதற்கு ஊக்கப்படுத்த இந்தப் பிரச்னைகளைச் சரிசெய்வது எப்படி?
போதைப்பொருள் பயன்பாட்டுக் குறைபாடு என்பது முக்கியமான பொதுச் சுகாதாரப் பிரச்னை என மக்களைப் புரிந்துகொள்ளச் செய்ய வேண்டும். மேலும், ஆரம்பத்திலேயே சிகிச்சை எடுக்கும்போது, பலன் சிறப்பாக இருக்கும் என்பதைப் புரிந்துகொள்வதும் முக்கியமாகும். மூன்றாவதாக, போதைப் பொருள் பயன்பாட்டுக் குறைபாடுகளுக்குச் சேவைகள் வழங்க, ஆதரிக்க மருத்துவ நிபுணர்களுக்குப் பயிற்சி அளிப்பதாகும். மக்களைப் போல் பல மருத்துவ நிபுணர்களும் இந்த விஷயத்தில் தவறான நம்பிக்கையோடு இருக்கிறார்கள்: எப்போதும் போதைப் பொருள் பயன்படுத்துபவர்கள் தங்களுடைய பழக்கத்திற்குத் தாங்களே பொறுப்பாளிகள், அவர்கள் தங்களுக்குத் தாங்களே அடிமைத்தனத்தைக் கொண்டுவருகிறார்கள் என்று எண்ணுகிறார்கள். ஆனால் அது உண்மையில்லை என்று நமக்குத் தெரியும். மக்கள் போதைப்பொருளைப் பயன்படுத்தத் தொடங்கப் பல காரணங்கள் உள்ளன. ஆனால் முக்கியமானது, காரணம் எதுவானாலும் மக்கள் போதைப்பொருள் பயன்பாட்டை அதிகரிப்பதற்குக் காரணம் அடிமைத்தன உயிரியல் இயல்பு ஆகும். மேலும் அது வளர்ச்சியடைந்ததும், அவர்கள் தங்களுக்குத் தாங்களே உதவுவது மிகவும் கடினமாகும், எனவேதான் அவர்களுடைய பிரச்னைகளைச் சரிசெய்யக்கூடிய சிகிச்சைச் சேவைகள் நமக்குத் தேவை.

போதைப்பொருள் பயன்பாட்டுக் குறைபாடு உடைய ஒருவருக்கு என்ன வகையான சிகிச்சை தேவைப்படுகிறது?
அடிமைத்தனம் மூளையின் குறைபாடு என்று கூறப் போதிய நூல்கள் உள்ளன. அடிமையானவர்களுக்கு உண்மையில் கவனிப்பும் ஆதரவுமே தேவை, குற்றம்சாட்டுதலும் அவமானப்படுத்தலும் இல்லை. ஆனால், நாம் நினைவில் கொள்ளவேண்டிய விஷயம், அடிமைத்தனம் வளரும் முன் தோன்றும் பல பிரச்னைகள் உள்ளன. அங்குதான் நாம் நம்முடைய சமூகத்தில் மது மற்றும் பிற போதைப்பொருள் பழக்கம் தொடர்பான ஒரு நல்ல கொள்கையைக் கொண்டு வர வேண்டியுள்ளது, போதைப் பொருள் பயன்பாட்டை ஒழுங்குபடுத்தும் கடுமையான சட்டங்கள் நமக்குத் தேவை, மேலும் மிக முக்கியமாக, போதைப்பொருட்களிலிருந்து தீங்கு ஏற்படுவதைத் தடுக்க, இவற்றின் பயன்பாடு குறித்துப் பொது விழிப்புணர்வு தேவை.

தற்போது என்னமாதிரியான நிபுணத்துவ உதவி கிடைக்கிறது?
இப்போது அடிமைத்தனம் கொண்டவர்கள் பெறக்கூடிய ஒரே உண்மையான உதவி, சிறப்பு அடிமைத்தன நீக்க மையத்தில் உள்ளது. ஆனால், நான் முன்பு குறிப்பிட்ட படி, மக்கள் இந்த பிரச்னைகளைக் கொண்டிருப்பதற்கும் இந்த மையங்களில் சேர்வதற்கும் இடையில் நீண்ட இடைவெளி உள்ளது. எனவே முதலாவதாக ஆரம்பச் சுகாதார மையத்திலிருந்து மருத்துவக் கல்லூரிகள், மருத்துவமனைகள் வரை எல்லா மருத்துவ நிபுணர்களும் போதைப் பொருள் பயன்பாட்டுக் குறைபாட்டைக் கண்டறியக்கூடியவர்களாக இருக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன். இரண்டாவதாக, போதைப்பொருள் பயன்பாட்டுக் குறைபாடுகள், பரவாத நோய்களின் தடுக்கக்கூடிய இடர் காரணிகள் என்று நம் அனைவருக்கும் தெரியும். நம்முடைய நாட்டில், பரவாத நோய்களான இதய நோய், நீரிழிவு நோய், புற்றுநோய், சுவாசக் குறைபாடுகள் மற்றும் மனநலப் பிரச்னைகள் புதிய தொற்றுநோய்கள் போல் மாறிவிட்டன. மேலும் புகையிலை, மது, போதைப்பொருள் போன்றவை இவற்றின் தவிர்க்கக்கூடிய இடர்காரணிகளாகக் கருதப்படுகின்றன. எனவே நாம் செய்ய வேண்டிய முதலாவது விஷயம், ஒவ்வொரு மருத்துவ ஆலோசனையிலும், மருத்துவர் போதைப்பொருள் பயன்பாடு, நம்முடைய வாழ்க்கை முறைப் பிரச்னைகளான உணவு, உடற்பயிற்சி போன்றவை பற்றிக் கேட்பதாகும். பின்னர் ஆரம்பத்திலே மருத்துவ உதவியை வழங்குவதாகும். எடுத்துக்காட்டாக, வாழ்க்கை முறையை மாற்றுவது, இந்த நபர் ஏன் போதைப்பொருள் பயன்படுத்துகிறார் என்று கண்டறிவது மற்றும் அவற்றை ஆரோக்கியமான மாற்றுகளால் மாற்ற முயற்சிசெய்வது. அடுத்த விஷயம் அவற்றின் தீங்கான விளைவுகள் மற்றும் சார்ந்திருக்கும்தன்மையைப் புரிந்துகொள்வதாகும். மருத்துவ ஆலோசனையானது, மருத்துவ நிபுணர்களாலோ அவர்களுடைய நடத்தையை மாற்ற இயலும் பயிற்சி பெற்ற ஆலோசகர்களாலோ வழங்கப்பட முடியும்.

மருத்துவர் ஒருநபரின் நடத்தையை மாற்ற எப்படி உதவ முடியும்?
தங்களுடைய தற்போதைய நடத்தை விரும்பத்தகாதது என்று அறியும்போதும், மாறுவதன் நன்மைகளை அறியும்போதும் மக்கள் மாறத் தொடங்குகிறார்கள். எனவே ஒரு நபருடன் மாற்றத்தின் நன்மைகளை ஆலோசிக்கவும், அவர்கள் போதைப்பொருளை ஏன் பயன்படுத்துகிறார்கள் என்று கண்டறியவும் வேண்டும். அது விலகிநிற்பதன் காரணமாக இருந்தால், அதற்கான சிகிச்சை முக்கியமானதாகும். அது ஆசையினால் இருந்தால், ஆசையை அடக்குவதற்கு உதவுவது முக்கியமானதாகும். அது பிற உணர்வுக்காரணங்களாக இருந்தால், சமூக ஆதரவைப் பெற அந்த நபருக்கு உதவுவது முக்கியமாகும். நவீன சிகிச்சைகள் நிறைய ஆசையை நீக்கும் மருந்துகளை வழங்குகின்றன, அவற்றை ஆலோசனையுடன் பயன்படுத்தினால், மக்கள் தங்களுடைய போதைப் பொருள் பயன்பாட்டுக் குறைபாட்டைச் சிறப்பாக எதிர்கொள்ளலாம்.

நிறைவாக, மிக முக்கியமான செய்தி, ஒருவர் போதைப் பொருள் பயன்பாட்டுக் குறைபாட்டை உண்மையில், அவர் பயன்பாட்டின் இடரில் உள்ளாரா எனப் புரிந்துகொள்வதன்மூலம், போதைப்பொருள் பயன்பாட்டைக் குறைப்பதன்மூலம், அவர்களுடைய போதைப்பொருள் பயன்பாடு எப்போது எல்லைமீறக்கூடும் என்று புரிந்துகொள்வதன்மூலம், உடனடிச் சிகிச்சை பெறுவதன்மூலம் மட்டுமே தடுக்க முடியும். அதற்கு நன்கு சிகிச்சையளிக்கலாம். அதாவது நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம் போன்றவற்றைப் போல். ஒருவர் பொருத்தமான சிகிச்சை எடுத்துக்கொண்டு, தன்னுடைய வாழ்க்கை முறையை மாற்றி, தினசரி அழுத்தங்களைக் குறைத்து, அவற்றை எப்படி எதிர்கொள்வது என்று கற்றுக் கொண்டால், பலவற்றைத் தடுக்க முடியும்.

logo
வொய்ட் ஸ்வான் ஃபவுண்டேஷன்
tamil.whiteswanfoundation.org