மதுவுக்கு அடிமையாதல்: உண்மை அறிவோம்

தவறான நம்பிக்கை: ஒருவர் மதுவுக்கு அடிமையாக இருக்கிறார் என்றால், அவர் விரும்பிதான் அவ்வாறு செய்கிறார்.

உண்மை: ஒருவர் மதுவுக்கு அடிமையாக இருக்கிறார் என்றால், அவராக விரும்பிதான் அவ்வாறு இருக்கிறார் என்று பொருளில்லை. அவர் தானே விரும்பிதான் மதுவைக் குடிக்கத் தொடங்குகிறார். ஆனால், அதன்பிறகு, பல சிக்கலான காரணிகள்தான் அவரை மதுவுக்கு அடிமையாக்குகின்றன. பல சுற்றுச்சூழல் மற்றும் மரபுசார்ந்த காரணிகளால்தான் ஒருவர் மதுவைச் சார்ந்து வாழத் தொடங்குகிறார், அல்லது, அதற்கு அடிமையாகிறார். இதில் அவரது விருப்பம் என்பது குறைவுதான்.

தவறான நம்பிக்கை: நான் விரும்பிய அளவு மதுவைக் குடிப்பேன், ஆனால், ஒருபோதும் கட்டுப்பாட்டை இழக்கமாட்டேன்.

உண்மை: மது என்பது, மூளை செயல்படுத்தும்விதத்தில் மாற்றங்களை உண்டாக்கி, மனித உடலைப் பாதிக்கிறது. ஒருவர் கட்டுப்பாட்டை இழக்காமல் எந்த அளவு மதுவை அருந்த இயலும் என்பது ஒவ்வொருவருக்கும் மாறுபடும். அவரது உயரம், எடை, பாலினம் மற்றும் மரபியல் அம்சங்களைப்பொறுத்து இது அமையும். அதேசமயம், ஒருவர் குறிப்பிட்ட அளவு மதுவை அருந்தியவுடன் போதை ஏறியதாக உணர்கிறார், அந்த அளவு படிப்படியாக அதிகரித்துக்கொண்டே இருக்கிறது என்றால், அதாவது, முன்பைவிட அதிக அளவு மது அருந்தினால்தான் அவருக்குப் போதை ஏறுகிறது என்றால், அவருக்கு மது சகிப்புத்தன்மை ஏற்பட்டிருக்கலாம். மது சகிப்புத்தன்மை என்பது, ஒருவர் மதுவுக்கு அடிமையாகியிருக்கிறார் என்பதைக் காட்டும் அடையாளங்களில் ஒன்று, அப்படிப்பட்டவர்களுக்கு உதவி தேவைப்படலாம்.

தவறான நம்பிக்கை: நான் எவ்வளவு குடித்தாலும் சரி, ஒரே ஒரு காஃபி குடித்தால் உடனே போதை தெளிந்துவிடும்.

உண்மை: சராசரியாக மனித உடல் ஒரு மணி நேரத்துக்கு ஒரு பானத்தைச் செயல்முறைப்படுத்தும். ஒருவர் ஒரு மணி நேரத்தில் ஒரே ஒருமுறைதான் மது அருந்தியிருக்கிறார் என்றால், அவருடைய கல்லீரல் அந்த மதுவைப் பகுத்து நச்சுப்பொருள்களை அகற்றிவிடுகிறது. ஆனால், அவர் மேலும் மேலும் குடித்துக்கொண்டே இருந்தால், அந்தக் கூடுதல் பளுவை அவருடைய கல்லீரலால் தாங்க இயலுவதில்லை, அதனால், மது அவருடைய உடலிலேயே தங்கிவிடுகிறது. அந்த நேரத்தில், அவர் ஒரு காஃபி குடித்தால், போதை தெளிந்துவிட்டதுபோன்ற உணர்வு ஏற்படலாம், ஆனால், மது இன்னும் அவரது உடலிலேயேதான் தங்கியிருக்கிறது, அது முழுவதுமாக வெளியேறுவதற்கு நேரமாகும்.

தவறான நம்பிக்கை: நான் விரும்பினால், இப்போதுகூடக் குடிப்பழக்கத்தை விட்டுவிடுவேன். அப்படி நிறுத்தவேண்டும் என்று எனக்குத் தோன்றவில்லை, என்றைக்குத் தோன்றுகிறதோ அன்றைக்குக் குடிப்பதை நிறுத்திவிடுவேன்.

உண்மை: ஒருவர் நெடுங்காலமாகக் குடித்துக்கொண்டிருக்கிறார், மதுவைச் சார்ந்து வாழ்கிறார் என்றால், அநேகமாக அவரால் தன்னுடைய அடிமைத்தனத்தைக் கட்டுப்படுத்திக்கொள்ள இயலாது. மதுவுக்கு அடிமையான ஒருவர், அதிலிருந்து வெளியேறவேண்டுமென்றால், "மது வேண்டாம்" என்று சொன்னால்மட்டும் போதாது. அதில் இன்னும் பல பிரச்னைகள் இருக்கின்றன. ஆகவே, மதுப்பழக்கம் தனக்குப் பிரச்னையைத் தருகிறது என்று ஒருவர் எண்ணினால், அவர் உரிய நிபுணரிடம் உதவி பெறவேண்டும்.

தவறான நம்பிக்கை: நான் புனர்வாழ்வு, சிகிச்சை பெற்றுவிட்டேன், மதுவை எப்படித் தவிர்ப்பது என்று தெரிந்துகொண்டுவிட்டேன். ஆகவே, இனிமேல் நான் அவ்வப்போது கொஞ்சம்போல் மது அருந்தலாம், அதனால் எந்தப் பிரச்னையும் வராது.

உண்மை: மதுவுக்கு அடிமையான ஒருவர் அதிலிருந்து மீளவேண்டுமென்றால், அது அவருடைய வாழ்நாள்முழுவதும் தொடருகிற ஒரு பயணமாகும். அவர் புனர்வாழ்வு, சிகிச்சை பெற்றபின்னர், மீண்டும் மதுவுக்கு அடிமையாகிவிடக்கூடிய சூழ்நிலைகளைக் கவனித்துத் தவிர்க்கவேண்டும். ஒருவர் மது அருந்தாமல் பல வாரங்கள், பல மாதங்கள் இருந்திருக்கலாம், ஆனால், அதன்பிறகு ஒரே ஒருமுறை மது அருந்தினால் போதும், அவர் பழையபடி அந்தப் பழக்கத்துக்குள் சென்றுவிடக்கூடிய அபாயம் உள்ளது. அப்படி ஒருவர் மதுவுக்கு மீண்டும் அடிமையாகக்கூடிய சூழ்நிலை வந்தால், அவர் உடனே தனது மருத்துவர் அல்லது சிகிச்சையாளரைச் சந்திக்கவேண்டும்.

Related Stories

No stories found.
வொய்ட் ஸ்வான் ஃபவுண்டேஷன்
tamil.whiteswanfoundation.org