அல்சைமர்ஸ் குறைபாடு

Q

அல்சைமர்ஸ் குறைபாடு என்பது என்ன?

A

பிரேமாவிற்கு 59 வயது. கொஞ்ச நாளாகவே அவருடைய ஞாபக சக்தி குறைய ஆரம்பித்திருந்தது. அவரால் செயல்களை, தொலைபேசி எண்களை நினைவில் வைத்துக் கொள்ள இயலவில்லை. ஒவ்வொரு நாளும் செய்த வேலைகளையே மறந்துவிட்டு திரும்பச் செய்து கொண்டிருந்தார். சில நேரங்களில் அவர் தன்னுடைய கணவரிடம் ஒரே கேள்வியைத் திரும்பத் திரும்பக் கேட்டுக் கொண்டிருந்தார். பிரேமா எல்லாரிடமும் தன்மையாகப் பழகுகிறவர், இனிமையாகப் பேசுகிறவர். ஆனால் இப்போது அவர் பிறரிடம் மிகவும் முரட்டுத்தனமாகப் பேசத் தொடங்கியிருந்தார். பிரேமா இப்படி நடந்துகொள்வது அவருடைய கணவருக்கு மிகவும் கவலை அளித்தது, அவர் ஒரு மருத்துவரைச் சந்திக்கத் தீர்மானித்தார். அந்த மருத்துவர் பிரேமாவின் நிலையை நன்றாகக் கேட்டறிந்தார், சில குறிப்பிட்ட பரிசோதனைகளை நிகழ்த்திப் பார்த்தார், அதன்பிறகு அவருக்கு அல்சைமர்ஸ் குறைபாடு வந்திருப்பதைக் கண்டறிந்தார்.

இது ஒரு கற்பனைக் கதை, இந்தக் குறைபாடு நிஜ வாழ்க்கையில் எப்படி வெளிப்படக்கூடும் என்பதைப் புரிய வைப்பதற்காக எழுதப்பட்டது.

அல்சைமர்ஸ் குறைபாடு என்பது ஒரு நரம்புச் சிதைவுப் பிரச்னை ஆகும். இதனைச் சரிசெய்ய இயலாது. இந்தக் குறைபாடு வந்தவர்களுடைய ஞாபகசக்தி, சிந்திக்கும் திறன்கள் மற்றும் பிற முக்கியமான மனம் சார்ந்த செயல்பாடுகளில் படிப்படியாகச் சரிவு காணப்படும். அல்சைமர்ஸ் என்பது ஒரு வகையான டிமென்சியா ஆகும், இது படிப்படியாக வளரக்கூடியது, அதாவது  இந்தக் குறைபாட்டின் அறிகுறிகள் காலப்போக்கில் மோசமாகிக் கொண்டேதான் செல்லும், இந்தக் குறைபாட்டால் பாதிக்கப்பட்டவர் தன்னுடைய தினசரிப் பணிகளைச் சரியாகச் செய்ய இயலாத நிலைமை ஏற்படும்.

Q

அல்சைமர்ஸ் குறைபாட்டின் அறிகுறிகள் என்ன?

A

அல்சைமர்ஸ் குறைபாட்டின் ஆரம்பக்கட்டத்தில் உள்ள ஒருவருக்கு ஞாபக சக்தி பாதிக்கப்படும். இந்தக் குறைபாடு வளர வளர அதற்கான அறிகுறிகளும் தீவிரமாகும். இந்தக் குறைபாட்டுக்கான சில அறிகுறிகள் பொதுவாகக் காணப்பட்டாலும் இதன் தீவிரத்தன்மை நபருக்கு நபர் மாறுபடலாம்.

 • ஞாபக சக்தி: அல்சைமர்ஸ் குறைபாட்டால் பாதிக்கப்பட்டவர்களுடைய ஞாபக சக்தி கொஞ்சங்கொஞ்சமாகக் குறையத்தொடங்கும், அதனால் அவர்கள் நிகழ்வுகளை, பேச்சு வார்த்தைகளை, குடும்ப உறுப்பினர்கள், மற்றவர்களுடைய பெயர்களை மறக்கத் தொடங்குவார்கள். அவர்கள் பொருள்களை எங்கேயாவது வைத்துவிட்டுத் தேடலாம், ஒவ்வொரு நாளும் என்ன நடந்தது என்பதை அன்றைக்கே மறந்துவிடலாம்.
 • தன்னிலையிழத்தல் மற்றும் வெளி சார்ந்த உறவுகளைத் தவறாகப் புரிந்து கொள்ளுதல்: அல்சைமர்ஸ் குறைபாடு கொண்டவர்களால் அப்போதைய பருவ நிலைமை, கிழமை, நேரம் மற்றும் அவர்களுடைய வாழ்க்கைச் சூழல்கள் போன்றவற்றை உணர இயலாமல் போகலாம். அவர்களுடைய கண்கள் எதிரே உள்ள பொருள்களைப் பார்க்கும், ஆனால் அவர்களுடைய மூளையால் அந்தப் பொருள்களைப் புரிந்துகொள்ள இயலாமல் போகலாம், இதனால் அவர்கள் தங்களைச் சுற்றியிருக்கும் சூழலை உணரமுடியாமல் சிரமப்படக்கூடும். இந்த நிலைமை தொடர்ந்தால் அவர்கள் தங்களுக்கு நன்றாகத் தெரிந்த இடங்களிலேயே தாங்கள் எங்கே இருக்கிறோம் என்று புரியாமல் தடுமாறுகிற நிலைமையும் வரலாம்.
 • பேச்சு மற்றும் எழுத்து: அல்சைமர்ஸ் குறைபாடு கொண்டவர்கள் ஒரு பொருளை என்ன சொல்லி அழைப்பது என்று புரியாமல் திணறலாம், தங்களுடைய சிந்தனைகளைச் சொற்களால் வெளிப்படுத்த இயலாமல் சிரமப்படலாம், உரையாடல்களில் பங்குபெற இயலாமல் இருக்கலாம். காலப்போக்கில் இவர்களுடைய வாசிக்கும் திறன், எழுதும் திறன் குறைந்துகொண்டே போகும்.
 • சிந்தித்தல் மற்றும் புரிந்துகொள்ளுதல்: எண்கள் போன்ற அருவமான கருத்துகளைச் சிந்திப்பது, புரிந்து கொள்வது போன்றவற்றில் இவர்களுக்குச் சிரமம் ஏற்படலாம். இதனால் இவர்கள் வங்கிக் கணக்குகள், தனிப்பட்ட நிதி விவகாரங்கள் மற்றும் பணம் செலுத்துதல் போன்றவற்றைக் கையாள இயலாமல் சிரமப்படலாம்.
 • தீர்மானம் எடுத்தல்: தங்களைச் சுற்றி நடக்கும் விஷயங்கள் அல்லது செயல்பாடுகளைக் கவனித்துத் தீர்மானம் எடுப்பதில் இவர்களுக்குச் சிரமங்கள் ஏற்படலாம். உதாரணமாக விளக்குகளை அணைத்தல், தண்ணீர் நிரம்பி வழியும் போது குழாயை மூடுதல், போக்குவரத்து அதிகமாக இருக்கும்போது வண்டியை மெதுவாக ஓட்டுதல் போன்றவை.
 • தினசரிச் செயல்பாடுகளைக் கையாளுதல்: சாதாரணமாக எல்லாரும் செய்கிற செயல்களாகிய குளித்தல், உடை உடுத்திக்கொள்ளுதல், சமைத்தல் அல்லது தனக்குப் பிடித்த ஒரு விளையாட்டை விளையாடுதல் போன்றவையே அல்சைமர்ஸ் குறைபாடு கொண்டவர்களுக்குச் சிரமமாக ஆகலாம். இந்த வழக்கமான செயல்பாடுகளில் அவர்களுக்குப் படிப்படியாகச் சிரமம் அதிகரிக்கலாம். ஒரு கட்டத்தில் இவர்கள் இந்த அடிப்படைச் செயல்பாடுகளையே மறந்துவிடக்கூடும், இவற்றைச் செய்ய பிறர் அவர்களுக்கு உதவி செய்ய வேண்டியிருக்கும்.
 • ஆளுமை மற்றும் பழகும் தன்மை: அல்சைமர்ஸ் குறைபாடு கொண்டவர்களுடைய மூளையில் ஏற்படும் மாற்றங்கள் அவர்களுடைய பழகும் தன்மையைப் பாதிக்கக்கூடும். அவர்களுக்கு வேறுசில பிரச்னைகளும் வரலாம், உதாரணமாக: மனச்சோர்வு, பதற்றம், சமூகத்திலிருந்து விலகி இருத்தல், மனநிலை மாற்றங்கள், பிறர் மீது நம்பிக்கையின்மை, சரியாகத் தூங்க இயலாமல் இருத்தல், எரிச்சலுடன் இருத்தல் அல்லது அலைந்து திரிதல்.

Q

அல்சைமர்ஸ் குறைபாடு எதனால் உண்டாகிறது?

A

மருத்துவர்களும் அறிவியலாளர்களும் அல்சைமர்ஸ் குறைபாட்டுக்கு இதுதான் காரணம் என்று நிச்சயமாக எதையும் கண்டறியவில்லை. காரணம் பல காரணிகள் இந்தக் குறைபாட்டை ஏற்படுத்தக் கூடும், உதாரணமாக: வயது, மரபியல், சுற்றுச்சூழல், வாழ்க்கைமுறை மற்றும்  ஒட்டுமொத்த உடல் நலம் போன்றவை. அல்சைமர்ஸ் குறைபாட்டால் பாதிக்கப்பட்ட சிலரிடம் அதற்கான அறிகுறிகளே தோன்றாது, பல வருடங்கள் அவர்கள் இயல்பாக வாழ்ந்துவிட்டு திடீரென்று ஒருநாள் இந்த அறிகுறிகள் வெளிப்படக் காண்பார்கள்.

 • வயது: டிமென்சியாவிற்கான மிகப்பெரிய ஆபத்துக் காரணியாக ஒருவருடைய வயதுதான் குறிப்பிடப்படுகிறது. அறுபது வயதுக்கு மேல் உள்ளவர்கள் இந்தக் குறைபாட்டினால் பாதிக்கப்படுவதற்கான சாத்தியங்கள் அதிகம்.

 • மரபணு மூலம் பெறுதல்: அல்சைமர்ஸ் குறைபாடு மரபு வழியாக வரக்கூடும் என அறிவியலாளர்கள் கவனித்துள்ளார்கள், ஆனால் இந்தக் கோட்பாடு இன்னும் முழுமையாக நிரூபிக்கப்படவில்லை.

 • பிற காரணிகள்: டவுன்சின்ட்ரோம்-ஆல் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் மற்றும் 50 அல்லது 60 வயதுக்கு மேலானவர்களுக்கு அல்சைமர்ஸ் குறைபாடு வருவதற்கான சாத்தியங்கள் அதிகம்.

உலக அல்சைமர்ஸ் அறிக்கையின்படி வயதானவர்களுக்குப் பலவிதமான உடல் நலப்பிரச்னைகள் வரக்கூடும். அவர்களுக்குப் பொதுவாக உடல் நலம் மற்றும் மன நலம் சார்ந்த பிரச்னைகள் தீவிரமாக இணைந்து காணப்படும். இந்தப் பிரச்னைகள் அனைத்தும் சிக்கலான முறையில் ஒன்று சேர்ந்து சம்பந்தப்பட்ட நபருடைய தினசரி நடவடிக்கைகளைப் பாதிக்கக்கூடும், அவர்கள் தங்களுடைய எல்லாத் தேவைகளுக்காகவும் பிறரைச் சார்ந்திருக்கிற நிலையை உண்டாக்கும்.

Q

அல்சைமர்ஸ் குறைபாட்டுக்குப் பின் இருக்கும் அறிவியல்

A

அல்சைமர்ஸ் குறைபாடு எதனால் உண்டாகிறது என்பதைத் தெரிந்து கொள்வதற்கான ஆராய்ச்சிகள் இன்னும் நடந்து கொண்டிருக்கின்றன.

இந்த வகை அல்சைமர்ஸ் குறைபாட்டின் ஆபத்துக் காரணிகளில் ஒன்று அப்போலிபோபுரோட்டின் E (apoE) என்கிற புரதம்.

மனிதர்கள் எல்லாருக்கும் apoE இருக்கிறது, அது ரத்தத்தில் கொலஸ்ட்ராலைக் கொண்டு செல்ல உதவுகிறது. இந்த apoE ஜீன் மூன்று வடிவங்களில் உள்ளது. இவற்றில் ஒன்று மனிதர்களை அல்சைமர்ஸ் குறைபாட்டிலிருந்து காக்கிறது, இன்னொன்று அவர்களுக்கு அல்சைமர்ஸ் குறைபாடு வருகிற வாய்ப்பை அதிகரிக்கிறது. ஒருவருக்கு அல்சைமர்ஸ் குறைபாடு வருகிற ஆபத்தை அதிகரிக்கக்கூடிய மற்ற ஜீன்கள் அல்லது அல்சைமர்ஸ் குறைபாடு வராதபடி பாதுகாக்கக் கூடிய ஜீன்களைப் பற்றி அறிவியலாளர்கள் இன்னும் கண்டறியவில்லை.

Q

அல்சைமர்ஸ் குறைபாடு எப்படிக் கண்டறியப்படுகிறது?

A

ஒருவருக்கு அல்சைமர்ஸ் குறைபாடு இருக்கிறதா அல்லது வேறு உடல், மன நலப் பிரச்னைகளால் அவருக்கு இந்த அறிகுறிகள் வந்திருக்கின்றனவா என்று ஓரளவு துல்லியமாகக் கண்டறிய மருத்துவர்கள் பல முறைகளைப்  பயன்படுத்துகிறார்கள்.

இதனைக் கண்டறியும்போது மருத்துவர்கள் இவற்றைச் செய்யக்கூடும்:

 • சம்பந்தப்பட்ட நபரின் ஒட்டுமொத்த உடல்நிலை, முந்தைய மருத்துவப் பிரச்னைகள், தினசரிச் செயல்பாடுகள், பழகுமுறை மற்றும் மனநிலையில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் போன்றவற்றைக் குறிக்கலாம்.
 • அவர்களுடைய ஞாபகசக்தி, பிரச்னைகளைத் தீர்க்கும் திறன், கவனக் கூர்மை, எண்ணுதல் மற்றும் மொழித்திறன் போன்றவற்றைப் பரிசோதிப்பதற்கான தேர்வுகளை நடத்தலாம்.
 • ரத்தம் மற்றும் சிறுநீர் போன்றவற்றை வழக்கமான முறைகளில் பரிசோதிக்கலாம், இதன் மூலம் இந்த அறிகுறிகளை ஏற்படுத்தியிருக்கக் கூடிய மற்ற பிரச்னைகள் அவர்களுக்கு இல்லை என்பதை மருத்துவர்கள் உறுதி செய்யலாம். உதாரணமாக தைராய்டு பிரச்னை, மருந்துகளின் பக்கவிளைவுகள், மனச்சோர்வு, மூளையில் கட்டி மற்றும் மூளையில் உள்ள ரத்தக் குழாய் விரிசல்கள் போன்றவற்றின் அறிகுறிகள் அல்சைமர்ஸ் குறைபாட்டைப் போலவே இருக்கும். இந்தக் குறைபாடுகளில் சிலவற்றை குணப்படுத்த இயலும். ஆகவே ஒருவருக்கு வந்திருப்பது அல்சைமர்ஸ் தானா என உறுதிப்படுத்திக் கொள்வதற்கு மருத்துவர்கள் இந்தப் பரிசோதனைகளைச் செய்யலாம்.
 • கம்ப்யூட்டட் டோமோகிராபி (CT) அல்லது மேக்னடிக் ரெசோனென்ஸ் இமேஜிங் (MRI) போன்ற ஏதேனும் ஒரு முறையில் மூளையை ஸ்கேன் செய்யலாம், இதன் மூலம் அல்சைமர்ஸ் குறைபாட்டை மற்ற பிரச்னைகளில் இருந்து பிரித்துக் காண இயலும்.

குறிப்பு: ஒருவருடைய ஆரோக்கியம் மற்றும் ஞாபகசக்தி காலப்போக்கில் எப்படி மாறுகிறது என்பதைக் கவனித்துப் பரிசோதிப்பதற்காக இந்தப் பரிசோதனைகளை அவ்வப்போது திரும்பச் செய்யவேண்டியிருக்கலாம்.

Q

சீக்கிரமாகக் கண்டறிவது நல்லது

A

ஒருவருக்கு அல்சைமர்ஸ் குறைபாடு வந்திருப்பதை எவ்வளவு சீக்கிரம் கண்டறிகிறோமோ அவ்வளவு நல்லது. இதன் மூலம் பாதிக்கப்பட்டவர்களும் அவர்களூடைய குடும்பத்தினரும் வருங்காலத்திற்காகத் திட்டமிட இயலும். பாதிக்கப்பட்டவர் தீர்மானங்களை எடுக்கும் நிலையில் உள்ள்போதே அவரை யார் கவனித்துக் கொள்வது, எப்படிக் கவனித்துக் கொள்வது என்பது பற்றி அவர்கள் விவாதித்துத் தீர்மானிக்கலாம். அல்சைமர்ஸ் குறைபாட்டைச் சீக்கிரமாகக் கண்டறிவதன் மூலம் அதன் அறிகுறிகளையும் பெருமளவு குணப்படுத்தலாம்.

Q

அல்சைமர்ஸ் குறைபாட்டுக்குச் சிகிச்சை பெறுதல்

A

அல்சைமர்ஸ் குறைபாட்டைக் குணப்படுத்த இயலாது. இதனால் மூளையின் செல்கள் சிதைவடைவதை மெதுவாக்கவும் இயலாது. அல்சைமர்ஸ் குறைபாட்டின் ஆரம்பக் கட்டத்திலேயே ஒருவருக்குச் சிகிச்சை தரப்பட்டால் அவரால் நீண்ட நாள்களுக்கு சுதந்திரமாகத் தன்னுடைய தினசரி வேலைகளைத் தானே செய்ய இயலும்.

அல்சைமர்ஸ் குறைபாடு படிப்படியாக வளரக்கூடிய ஒன்று. ஆனால் இது 5 முதல் 20 ஆண்டுகள் வரை வளரக்கூடும். இந்தக் குறைபாடு வந்தவர்கள் மரணமடைவதற்கான மிகவும் பொதுவான காரணம் நோய்த்தொற்று, குறிப்பாக நிமோனியா.

Q

அல்சைமர்ஸ் கொண்ட ஒருவரைக் கவனித்துக் கொள்ளுதல்

A

அல்சைமர்ஸ் குறைபாட்டால் பாதிக்கப்பட்ட ஒருவர் பலவிதமான உணர்வுகளை அனுபவிக்கக் கூடும்: எரிச்சல், யாராலும் தனக்கு உதவ இயலாது என்கிற எண்ணம், குழப்பம், கோபம், பயம், நிச்சயமற்ற தன்மை, பதற்றம், சோகம், இன்னும் பல.

அல்சைமர்ஸ் குறைபாடு கொண்ட ஒருவரை நீங்கள் கவனித்துக் கொள்கிறீர்கள் என்றால், அவர்கள் இந்தக் குறைபாட்டைச் சமாளிப்பதற்கு நீங்கள் உதவலாம். அதற்கு நீங்கள் அவர்கள் அருகிலேயே இருந்து அவர்கள் பேசுவதைக் கேட்கலாம், அவர்கள் வாழ்க்கையை இன்னும் அனுபவிக்கலாம் என்று உறுதி சொல்லலாம், அவர்களைப் பராமரிக்கலாம், அவர்கள் கண்ணியத்துடனும் சுய மரியாதையுடனும் வாழ்வதற்கு உங்களால் இயன்ற உதவிகளைச் செய்யலாம்.

பழகும் தன்மை சார்ந்த பிரச்னைகளைக் குறைப்பதற்கு ஓர் அமைதியான மற்றும் நிலையான இல்லச் சூழல் உதவலாம். புதிய சூழ்நிலைகள், சத்தம், அதிக எண்ணிக்கையிலான மக்களைச் சந்தித்தல், சில செயல்களைச் செய்தே ஆகவேண்டும் என்கிற கட்டாயத்திற்குத் தள்ளப்படுதல் போன்றவற்றால் பதற்றமும் அழுத்தமும் உண்டாகக்கூடும், இதனால் அவர்கள் மனம் வருந்துவார்கள், அப்போது அவர்கள் தெளிவாகச் சிந்திக்கிற திறன் இன்னும் குறைந்துபோகும்.

உங்களுடைய அன்புக்குரியவர் அல்சைமர்ஸ் குறைபாட்டால் பாதிக்கப்பட்டிருந்தால், அவர் தெளிவாகச் சிந்தித்து முக்கியமான தீர்மானங்களை எடுக்கும் நிலையில் உள்ளபோதே நீங்கள் உங்களுடைய வழக்கறிஞரைத் தொடர்பு கொள்ளலாம், பாதிக்கப்பட்டவர் தன்னுடைய நிதி விவகாரங்கள், மருத்துவ சிகிச்சை மற்றும் பிற சட்டப்பூர்வமான விஷயங்களில் தீர்மானம் எடுக்க உதவலாம். பாதிக்கப்பட்டவர் தன்னுடைய சார்பாக நலப்  பராமரிப்புத் தீர்மானங்களை எடுக்கவும் நிதி விவகாரங்களைக் கையாளவும் ஒருவரை நியமிக்கலாம். இதன் மூலம் உங்களுடைய அன்புக்குரியவரால் தங்களுடைய விருப்பங்களைத் தெரிவிக்க இயலாத நிலை ஏற்படும் போது நீங்கள் ஓர் உறுதியான திட்டத்துடன் செயல்படலாம்.

Q

கவனித்துக் கொள்பவரைக் கவனித்துக் கொள்ளுதல்

A

அல்சைமர்ஸ் குறைபாடு கொண்ட ஒருவரைக் கவனித்துக் கொள்வது உடல் அளவிலும் மனத்தளவிலும் சோர்வை உண்டாக்குகிற ஒரு விஷயம் தான். இந்தச் சூழ்நிலையில் உள்ளவர்களுக்குக் கோபம், குற்ற உணர்ச்சி, மன அழுத்தம், ஊக்கமின்மை, மனக் கொந்தளிப்பு, சோகம் மற்றும் சமூகத்திலிருந்து விலகி இருத்தல் போன்ற உணர்வுகள் ஏற்படலாம். அல்சைமர்ஸ் குறைபாடு கொண்டவரைக் கவனித்துக் கொள்கிறவருக்கே இந்தச் சூழ்நிலையைச் சமாளிக்க இன்னொருவரின் உதவி தேவைப்படலாம். அல்சைமர்ஸ் குறைபாடு கொண்ட ஒருவரை நீங்கள் கவனித்துக் கொள்கிறீர்கள் என்றால், நீங்கள் உங்களையும் கவனித்துக் கொள்ளவேண்டும். அதற்கு இவை உதவும்:

 • இந்தப் பிரச்னை பற்றி உங்களால் இயன்றவரை நிறையத் தெரிந்து கொள்வது
 • மருத்துவர்கள், சமூக ஊழியர்கள் மற்றும் உங்களுடைய அன்புக்குரியவரைக் கவனித்துக் கொள்ளும் பிறரிடம் கேள்விகளைக் கேட்டுப் பதில் பெறுதல்
 • உங்களுக்குத் தேவைப்படும்போது நண்பர்கள் அல்லது பிற குடும்ப உறுப்பினர்களிடம் உதவியைக் கேட்டுப் பெறுதல்
 • உங்களுக்காகச் சிறிது நேரம் ஒதுக்குதல்
 • உங்களுடைய நண்பர்களுடன் நேரம் செலவிடுதல்
 • உங்களுடைய உடல் நலத்தைக் கவனித்துக் கொள்ளுதல், உதாரணமாக உங்களுடைய மருத்துவர்களை அவ்வப்போது சென்று பார்த்தல், ஆரோக்கியமான உணவை உண்ணுதல், போதுமான அளவு உடற்பயிற்சி செய்தல் போன்றவை
 • ஓர் ஆதரவுக் குழுவில் இணைதல்
 • இயன்றால் உள்ளூரில் உள்ள வயது வந்தோருக்கான  பராமரிப்பு மையம் ஒன்றிடம் உதவி பெறுதல்
 • அல்சைமர்ஸ் குறைபாடு கொண்டவர்கள், அவர்களுடைய குடும்பத்தினர் ஆலோசனை மற்றும் ஆதரவுக் குழுக்களின் மூலம் நல்ல பலன் பெற இயலும். உங்கள் ஊரிலுள்ள அல்சைமர்ஸ் அமைப்பு ஒன்றைத் தொடர்பு கொண்டு ஆதரவுக் குழுக்கள், மருத்துவர்கள், பிறரைச் சந்தித்து உதவி பெறுங்கள்.

Q

அல்சைமர்ஸ் குறைபாட்டை எப்படித் தடுக்கலாம்?

A

அல்சைமர்ஸ் குறைபாட்டை வாழ்க்கை முறை மாற்றங்களின் மூலம் தடுப்பது பற்றிப் பல ஆய்வுகள் நிகழ்த்தப்பட்டிருக்கின்றன. சரியான உணவு, உடற்பயிற்சி, ஆரோக்கியமான வாழ்க்கைமுறையின் மூலம் அல்சைமர்ஸ் குறைபாடு வருவதைத் தடுப்பது சாத்தியமே என நிபுணர்கள் குறிப்பிடுகிறார்கள். இந்த நல்ல பழக்கங்கள் ஒருவருடைய உடல் நலனை நன்கு பராமரிக்கக் கூடியவை, அவர்களுடைய அறிவாற்றலையும் ஆரோக்கியமாக வைக்கக்கூடியவை என்பதால் இந்த நலத் திட்டத்தைப் பின்பற்றுவது சிபாரிசு செய்யப்படுகிறது:

 • தொடர்ந்த உடற்பயிற்சியின் மூலம் ஒருவருடைய இதயம் ஆரோக்கியமாக இருக்கும், அவருடைய அறிவாற்றலும் நல்லபடியாகப் பராமரிக்கப்படும். உடற்பயிற்சியின் மூலம் ஒருவருடைய மனநிலையும் முன்னேறக்கூடும்.
 • நிறையப் பழங்கள், காய்கறிகள் மற்றும் புரோட்டீன்கள் நிறைந்த ஊட்டச்சத்து மிக்க உணவை  உட்கொள்வதன்மூலமும் ஆரோக்கியமான முறையில் அறிவாற்றலைப் பாதுகாக்கலாம்.
 • மீனில் காணப்படும் ஒமேகா-3 ஃபேட்டி அமிலங்கள் அறிவாற்றல் நலனுக்குச் சிறந்தவை என நிரூபிக்கப்பட்டுள்ளது.
 • அர்த்தமுள்ள செயல்பாடுகளூடன் கூடிய ஒரு சுறுசுறுப்பான வாழ்க்கை முறை பலவிதங்களில் நன்மை தரும்.

Related Stories

No stories found.
logo
வொய்ட் ஸ்வான் ஃபவுண்டேஷன்
tamil.whiteswanfoundation.org