அனோரெக்ஸியா நெர்வோசா என்றால் என்ன?
அனோரெக்ஸியா நெர்வோசா என்பது உணவு உண்ணுதலில் ஏற்படுகிற ஒரு மனம் சார்ந்த பிரச்னை. இந்தப் பிரச்னை கொண்டவர்களுடைய உடல் எடை மிகவும் குறைவாக இருக்கும், அவர்கள் தங்களுடைய எடை அதிகரித்துவிடுமோ என்று தொடர்ந்து பயந்துகொண்டே இருப்பார்கள், தங்களுடைய உடல் கச்சிதமாக இல்லை என்கிற கவலையுடனே காணப்படுவார்கள். பொதுவாக இந்தப் பிரச்னைக்கு அடிப்படைக் காரணம் பாதிக்கப்பட்டவருடைய மனத்தில் கிளம்பும் கட்டுப்படுத்த முடியாத உணர்வுகள்தான். இந்த உணர்வுகளை எப்படிச் சமாளிப்பது என்று தெரியாத நிலையில் அவர்கள் எடையைக் குறைப்பது தான் தங்களுடைய பிரச்னைக்கு ஒரே தீர்வு என்று நினைத்துவிடுகிறார்கள். தாங்கள் தங்களுடைய எடையைக் குறைத்தால் மகிழ்ச்சியாக உணரலாம் என்று எண்ணுகிறார்கள், ஆகவே தாங்கள் சாப்பிடும் அளவை மிகவும் குறைக்கத் தொடங்குகிறார்கள், இந்த நிலை படிப்படியாக மோசமாகி ஒரு கட்டத்தில் இவர்கள் பல வேளைகள் சாப்பிடாமல் இருந்துவிடுகிறார்கள், சில நேரங்களில் நாள் கணக்கில் சாப்பிடாமல் இருக்கிறவர்களும் உண்டு. எப்போதாவது அபூர்வமாக இவர்கள் சாப்பிட்டாலும் அதை எண்ணி குற்ற உணர்ச்சி கொள்வார்கள்.
இந்தப் பழக்கம் தொடரத் தொடர இவர்களுடைய எடை குறைந்துகொண்டே வரும், அது இவர்களுக்குப் பிடித்தமான ஒன்றாகிவிடும். சாதாரணமாக அவர்களுடைய வயதில், உயரத்தில் உள்ள ஒருவர் என்ன எடை இருக்கவேண்டுமோ அதை விட இவர்களுடைய எடை மிகவும் குறைவாகக் காணப்படும், ஆனால் இவர்கள் மனத்திலோ தங்களுடைய எடை அதிகமாக இருக்கிறது என்ற உணர்வுதான் இருக்கும்.
ஒருவர் இப்படிச் சரியாகச் சாப்பிடாமல், உடல் எடை மிகவும் குறைந்து காணப்படும்போது, அவர் தன்னுடைய வாழ்க்கை முறையை மாற்றிக்கொண்டுவிட்டால் போதும் என்றுதான் எல்லாரும் நினைப்பார்கள், ஆனால் உண்மை அதுவல்ல, இது ஒரு தீவிரமான மனப் பிரச்னை. அவருடைய மனத்தில் மிகுந்த அழுத்தம் இருக்கிறது, அவர்கள் தங்களைப்பற்றி மிகவும் சிதறலான, எதிர்மறையான ஓர் எண்ணத்தைக் கொண்டிருக்கிறார்கள். தங்களுடைய எடை அதிகரித்துவிடுமோ என்கிற பயம் அவர்களுக்குள் அதிகமாக இருக்கிறது. இது பலவிதமான உடல் சார்ந்த அறிகுறிகளைக் கொண்ட ஒரு தீவிரமான பிரச்னை. அதே சமயம் உரிய சிகிச்சையின் மூலம் இந்தப் பிரச்னையைத் தீர்க்கலாம், பாதிக்கப்பட்டவர்கள் பழைய வாழ்க்கை முறைக்குத் திரும்பலாம்.
அனோரெக்ஸியாவின் அறிகுறிகள் என்ன?
அனோரெக்ஸியா பிரச்னை கொண்டவர்கள் தங்களுடைய பழக்கவழக்கங்களையும், தாங்கள் நடந்துகொள்ளும் விதத்தையும் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நண்பர்களிடமிருந்து மறைக்க முயற்சி செய்வார்கள். அதே சமயம் பல்வேறு உடல் சார்ந்த மற்றூம் நடந்து கொள்ளும் விதம் சார்ந்த அறிகுறிகளை வைத்து ஒருவருக்கு அனோரெக்ஸியா வந்திருக்கிறது என்பதைக் கண்டறிந்துவிடலாம்.
அனோரெக்ஸியாவிற்கான உடல் சார்ந்த அறிகுறிகள் சில:
நடந்து கொள்ளும் முறையில் ஏற்படும் சில மாற்றங்கள்:
அனோரெக்ஸியா எதனால் ஏற்படுகிறது?
அனோரெக்ஸியாவிற்கான நிச்சயமான காரணம் என்ன என்று நிபுணர்கள் இதுவரை கண்டறியவில்லை. அதே சமயம் இது குறித்து நிகழ்ந்திருக்கிற ஆராய்ச்சிகளை வைத்துப் பார்க்கும்போது பல உள்ளம் சார்ந்த, உயிரியல் சார்ந்த மற்றும் சுற்றுச்சூழல் சார்ந்த காரணிகள் இதற்குக் காரணமாக அமையலாம் என்று தெரிகிறது. மனச்சோர்வு மற்றும் பதற்றக் குறைபாடு கொண்டவர்கள் அதனைச் சமாளிக்க இயலாமல் அனோரெக்ஸியா பிரச்னைக்கு ஆளாகலாம். OCD பிரச்னை கொண்ட ஒருவர் உணவு தொடர்பாகப் பல தீவிரமான பழக்கங்களை உண்டாக்கிக்கொள்ளலாம், உதாரணமாக அவர்கள் தங்களுடைய உணவைக் கச்சிதமாக எடை போட்டுத்தான் சாப்பிடவேண்டும் என்று நினைக்கலாம், அதனைச் சின்னச் சின்ன துண்டுகளாக வெட்டி அந்தத் துண்டுகள் அனைத்தும் ஒரே அளவில் இருக்கும்படிச் செய்துவிட்டுத்தான் சாப்பிடவேண்டும் என்று எண்ணத் தொடங்கலாம். இதன் மூலம் அவர்கள் சாப்பிடும் அளவு குறைந்து அனோரெக்ஸியா பிரச்னை வரலாம். சில நேரங்களில் எதையும் கச்சிதமாகச் செய்யவேண்டும் என்கிற உணர்வு, அதீதமான நுண்ணுணர்வு போன்றவையும் அனோரெக்ஸியா பிரச்னைக்கு வழிவகுக்கலாம். அனோரெக்ஸியா வருவதில் மரபணுக்களின் பங்கு என்ன என்பது இன்னும் சரியாகத் தெரியவில்லை, அதே சமயம் இதுபற்றி நிகழ்ந்துள்ள ஆராய்ச்சிகளின் படி மூளையில் உள்ள செரோட்டோனின் அளவு அனோரெக்ஸியாவிற்குக் காரணமாக அமையலாம் எனத் தெரிகிறது.
சில குழந்தைகள் குண்டாக இருக்கிறார்கள் என்று அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் அவர்களைத் தொடர்ந்து கேலி செய்துகொண்டே இருந்தால் அல்லது சீண்டிக் கொண்டே இருந்தால், அதன்மூலம் அவர்கள் எப்படியாவது உடல் இளைத்துவிடவேண்டும் என்று எண்ணி இந்தப் பிரச்னையால் பாதிக்கப்படலாம். இளம்பெண்கள் தங்கள் வயதிலுள்ள மற்ற பெண்களுடைய உடல் ஒல்லியாக இருப்பதைக் கவனித்து அதன் மூலம் தாங்களும் அப்படி ஆகலாம் என்று எண்ணத் தொடங்கலாம், அதனால் அனோரெக்ஸியா பிரச்னை அவர்களுக்கும் வரலாம். ஊடகங்களும் சமூகமும் கூட இந்தப் பிரச்னையைப் பரப்புவதில் ஒரு முக்கிய பங்கு வகிக்கின்றன. நம்முடைய சமூகம் ஒல்லியாக இருப்பதுதான் அழகு என்ற எண்ணத்தைக் கொண்டிருக்கிறது, அதை இளம் மனங்களில் தீவிரமாகப் பரப்புகிறது, அதன்மூலம் அவர்கள் ஒல்லியான தோற்றத்தை எப்படியாவது அடைந்துவிடவேண்டும் என்று எண்ணி அதற்காகப் பட்டிணி கிடக்கத் தொடங்குகிறார்கள்.
அனோரெக்ஸியாவிற்குச் சிகிச்சை பெறுதல்
அனோரெக்ஸியா மனம், உடல் என இரண்டையும் பாதிக்கிற ஒரு பிரச்னை. ஆகவே இதற்குப் பலவிதமான சிகிச்சைகள் தேவைப்படுகின்றன. அனோரெக்ஸியாவால் பாதிக்கப்பட்ட ஒருவருடைய எடை மிகவும் குறைந்து, அவரது உடலில் போதுமான ஊட்டச்சத்துக்களே இல்லை என்ற நிலை ஏற்பட்டால், அவரை உடனடியாக மருத்துவமனையில் சேர்க்கவேண்டியிருக்கலாம். ஒருவேளை அவர்களுடைய எடை அதீதமாகக் குறையவில்லை, மருத்துவரீதியில் அவர்களுக்கு எந்த ஆபத்தும் இல்லையென்றால், அவர்கள் வீட்டிலிருந்தபடியே சிகிச்சை பெறலாம். அனோரெக்ஸியாவிற்கான சிகிச்சை மூன்று பகுதிகளாக வழங்கப்படுகிறது:
இப்படிப் பலவிதமாக அமைகிற இந்தச் சிகிச்சை வெவ்வேறு நிபுணர்களால் ஒரே நேரத்தில் வழங்கப்படுகிறது, பெரும்பாலான சூழ்நிலைகளில் பாதிக்கப்பட்டவருடைய குடும்பத்தினரும் சிகிச்சையில் பங்கேற்க வேண்டியிருக்கும்.
அனோரெக்ஸியா பிரச்னை கொண்ட ஒருவரைக் கவனித்துக் கொள்ளுதல்
உங்களுக்குத் தெரிந்த யாரிடமாவது அனோரெக்ஸியா பிரச்னையின் அறிகுறிகள் தென்பட்டால், அவர்கள் சிகிச்சை பெறவேண்டும் என்று நீங்கள் மென்மையாகச் சொல்லவேண்டும். திடுதிப்பென்று அவர்களை நிறையச் சாப்பிடச்சொல்லி வற்புறுத்தக்கூடாது, மிகவும் மென்மையான முறையில், பொறுமையாக நிலைமையை அவர்களுக்கு விளக்கவேண்டும். இந்தப் பிரச்னை வந்த பெரும்பாலானோர் தங்களுக்கு எந்தக் குறைபாடும் இல்லை என்றுதான் எண்ணிக் கொண்டிருப்பார்கள், நீங்கள் அவர்களைச் சிகிச்சை எடுத்துக்கொள்ளச் சொன்னால் அவர்கள் கோபப்படுவார்கள், மறுப்பார்கள். ஆகவே, நீங்கள் சாப்பிட்டுத்தான் தீரவேண்டும் என்று அவர்களைக் கட்டாயப்படுத்தாமல் 'உங்களுக்கு ஆதரவாக நான் இருக்கிறேன்' என்பதை அவர்களுக்கு உணர்த்தும் வகையில் நீங்கள் நடந்துகொள்ளவேண்டும். குடும்பத்தில் ஒருவருக்கு அனோரெக்ஸியா பிரச்னை இருந்தால் கூட மற்ற அனைவரும் ஆரோக்கியமான முறையில் நேரத்துக்குச் சாப்பிடப் பழகவேண்டும், இதைப் பார்த்து, பாதிக்கப்பட்டவரும் கொஞ்சங்கொஞ்சமாக முறைப்படி உண்ணத் தொடங்குவார்.
அனோரெக்ஸியாவைச் சமாளித்தல்
அனோரெக்ஸியாவிற்கான சிகிச்சைகள் ஒரு வாரத்திலோ ஒரு மாதத்திலோ நிறைவடைந்துவிடாது. இந்தப் பிரச்னையால் பாதிக்கப்பட்ட ஒருவர் நீண்ட காலத்திற்குச் சிகிச்சை பெற வேண்டியிருக்கும், அந்தக் காலக்கட்டத்தில் அவர் சிகிச்சையை முறைப்படி பின்பற்றுவது அவசியம், நிபுணர்கள் அவருக்காக வகுத்துத் தந்திருக்கிற உணவு மற்றும் ஊட்டச்சத்துத் திட்டங்களை அவர் கவனமாகப் பின்பற்றவேண்டும். அவர்கள் தங்களுடைய குடும்பத்தினர் மற்றும் நண்பர்களிடமிருந்து விலகி இருக்கக் கூடாது, குறிப்பாகத் தனக்கு ஆதரவாகப் பேசுகிறவர்களுடன் அதிக நேரம் செலவிடுவதன்மூலம் அவர்கள் தங்களைப்பற்றியே சிறப்பாக உணரத் தொடங்குவார்கள், அது இந்தப் பிரச்னை குணமாவதற்கு வழிவகுக்கும்.
அனோரெக்ஸியாவைப்பற்றி அவர்கள் நிறையப் படித்துத் தெரிந்துகொள்ளவேண்டும், இதன்மூலம் தங்களுடைய எடை அதிகரித்துவிடுமோ என்று அவர்கள் அஞ்சுவது அவசியம் இல்லை என்றும், அது இந்தப் பிரச்னையின் அறிகுறிகளில் ஒன்றுதான் என்றும் அவர்கள் உணர்ந்து கொள்வார்கள். இந்தப் பிரச்னையால் பாதிக்கப்பட்டவர்களுக்கான ஆதரவுக் குழுக்கள் பல ஊர்களில் இருக்கின்றன, அதுபோன்ற ஆதரவுக் குழு ஒன்றில் பாதிக்கப்பட்டவர் இணைந்துகொண்டால் அவர் மற்றவர்களுடைய ஆலோசனையைப் பெற்று தன்னுடைய பிரச்னையைக் குணப்படுத்திக்கொள்ளலாம். அவர்களுக்குத் தங்களுடைய எடையை அடிக்கடி பார்க்கவேண்டும் என்கிற துடிப்பு ஏற்படுவது சகஜம், அதை முடிந்தவரை கட்டுப்படுத்திக்கொள்ளவேண்டும், தன்னைக் கவனித்துக் கொள்கிறவர்கள் தனக்கு நல்லது தான் சொல்வார்கள் என்று நம்பவேண்டும், இந்த நம்பிக்கை படிப்படியாக இந்தப் பிரச்னையிலிருந்து குணப்படுத்திவிடும்.
வழக்கத்திற்கு மாறான அனோரெக்ஸியா
இந்தப் பிரச்னை குறித்து நிகழ்த்தப்பட்டிருக்கிற ஆராய்ச்சிகளை வைத்துப் பார்க்கும்போது மேற்கத்திய கலாச்சாரங்களில்தான் இந்தக் குறைபாடு அதிகமாகக் காணப்படுகிறது. அதே சமயம் மற்ற நாடுகளிலும் இந்தக் குறைபாட்டை அங்கங்கே காண இயலுகிறது. ஒரே வித்தியாசம் இந்தக் குறைபாடு கொண்டவர்களுடைய அறிகுறிகள் மேற்கத்திய நாடுகளுக்கும் மற்ற நாடுகளுக்கும் வேறுபடுகின்றன. உதாரணமாக இந்தியாவிலும் மற்ற தெற்காசிய நாடுகளிலும் அனோரெக்ஸியா பிரச்னையால் பாதிக்கப்பட்டவர்களுக்குத் தங்களுடைய உடல் கச்சிதமாக இல்லையே என்கிற கவலையோ தங்களுடைய உடல் எடை கூடிவிடுமோ என்கிற பயமோ இல்லை. ஆனால் இவர்களுக்கு வேறு சில அறிகுறிகள் காணப்படும், உதாரணமாக இவர்கள் சாப்பிட மறுக்கலாம். இதற்கான காரணம் அவர்களுடைய உடல்பற்றிய கவலை அல்ல. வேறு விதமான கலாச்சார அம்சங்களால் இந்தப் பிரச்னைகள் ஏற்படலாம். உதாரணமாக, இந்தியாவில் ஒரு குழந்தை மீது பெற்றோர் மிகுந்த எதிர்பார்ப்பு வைப்பது சகஜம், அந்த எதிர்பார்ப்புகளை அந்தக் குழந்தையால் எட்ட இயலாதபோது அது தன்னைத் தானே தண்டித்துக் கொள்வதற்காகச் சாப்பிடுவதை நிறுத்தலாம். ஒரு கட்டத்தில் இந்தப் பழக்கம் ஒரு மனப் பிரச்னையாகவே மாறிவிடலாம். இதனை வழக்கத்திற்கு மாறான அனோரெக்ஸியா என்று அழைப்பார்கள்.