பதற்றக் குறைபாடுகள்

Q

பதற்றக் குறைபாடு என்றால் என்ன?

A

நீங்கள் ஒரு பரீட்சைக்கோ நேர்முகத் தேர்வுக்கோ செல்வதற்கு முன்னால் உங்களுடைய கைகளெல்லாம் நடுங்கியிருக்கும், உங்களுடைய உள்ளங்கையில் வியர்த்திருக்கும், மிகவும் கவலையோடு தோன்றியிருப்பீர்கள். இதெல்லாம் ஏன் நடக்கிறது என்று எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா? இவை அனைத்தும் ஒரு முக்கியமான நிகழ்வுக்கு உங்களுடைய உடல் தன்னைத் தயார் செய்துகொள்வதற்கான அடையாளங்கள். நீங்கள் இன்னொரு விஷயமும் கவனித்திருக்கலாம். இத்தனை நடுக்கத்தோடு ஒரு வேலையைச் செய்யத் தொடங்கியபிறகு அந்த நடுக்கம் கொஞ்சங் கொஞ்சமாகக் குறையத் தொடங்கிவிடும். நீங்கள் அமைதியாவீர்கள், உங்களுடைய மூச்சு ஒழுங்காகும், உங்களுடைய இதயம் அளவுக்கு அதிகமாகத் துடிக்காது, எல்லாமே இயல்பாகிவிடும். இந்தப் பதற்றம் உண்மையில் ஒரு நல்ல விஷயம். காரணம் அது நம்மை எச்சரிக்கையோடு இருக்கச் செய்து இன்னும் சிறப்பாகப் பணியாற்றச் செய்கிறது.

அதே சமயம் சிலர் எந்தக் காரணமுமில்லாமல் பதற்றப்படுவார்கள். ஒருவேளை அவர்களால் தங்களுடைய கவலைகளைக் கட்டுப்படுத்திக் கொள்ளவே இயலவில்லையென்றால், எப்போதும் பதற்ற உணர்விலேயே இருப்பதால் அவர்களால் அவர்களுடைய தினசரி வேலைகளைச் சரியாகச் செய்யமுடியவில்லை என்றால் அவர்களுக்குப் பதற்றக் குறைபாடு இருக்கலாம்.

Q

வழக்கமான பதற்றத்திற்கும் அல்லது பதற்றக் குறைபாட்டிற்கும் உள்ள வேறுபாடுகள்

A

ஒருவர் தனக்கு இருக்கிற பதற்றம் இயல்பானதா அல்லது குறைபாடா என்று தெரிந்துகொள்வதற்கு இந்தப் பட்டியலைப் பார்க்கலாம்:

வழக்கமான பதற்றம் பதற்றக் குறைபாடு
பில்களுக்குப் பணம் செலுத்துவது, பணிக்கான நேர்முகத் தேர்வு, பரீட்சைகள் அல்லது மற்ற முக்கியமான நிகழ்வுகளைப் பற்றிக் கவலைப்படுதல். எப்போதும், எந்தக் காரணமுமில்லாமல் தொடர்ந்து கவலைப்பட்டுக் கொண்டே இருப்பது. அதன்மூலம் உங்களுடைய தினசரி வேலைகளையே செய்ய இயலாமல் போவது.
ஒரு பொதுக் கூட்டத்திலோ அல்லது ஒரு பெரிய கூட்டத்திலோ பேசுவதற்கு முன்னால் உங்களுடைய 'வயிற்றுக்குள் பட்டாம்பூச்சிகள் பறப்பதுபோன்ற ஓர் உணர்வு'. ஏதேனும் ஒரு சமூக நிகழ்வு அல்லது நீங்கள் பேசவேண்டியிருக்கும் ஒரு நிகழ்வில் பிறர் உங்களை எடை போடுவார்களோ என்று பயப்படுதல். உங்களை நீங்களே அவமானப்படுத்திக் கொள்ளும் விதமாக, சங்கடப் படுத்திக்கொள்ளும் விதமாக நீங்கள் நடந்துகொண்டுவிடுவீர்களோ என்று பயப்படுதல்.
ஓர் ஆபத்தான பொருளை, இடத்தை அல்லது சூழ்நிலையை நினைத்துப் பயப்படுதல். உதாரணமாக நீங்கள் தெருவில் நடந்துகொண்டிருக்கும்போது ஒரு நாய் உங்களைப் பார்த்துக் குரைத்தால்  அதற்காகப் பயப்படுதல். ஒரு பொருள் அல்லது இடத்தை நினைத்துக் காரணமில்லாமல் பயப்படுதல். உதாரணமாக ஒரு லிப்ட்டுக்குள் நுழைவதற்கு முன்னால் அந்த லிப்ட்டிருந்து தன்னால் வெளியே வரவே இயலாதோ என்று பயப்படுதல்.
ஒரு துயரச் சம்பவத்திற்குப் பிறகு வருத்தம் அல்லது கவலையோடு இருத்தல். உதாரணமாக அன்புக்குரிய ஒருவர் மரணமடைந்தபிறகு அவரை எண்ணி வருந்துதல். முன்பு எப்போதோ நடந்த ஒரு பெரிய துயரச் சம்பவத்தை அடிக்கடி நினைப்பது, அதைப் பற்றிக் கனவு காண்பது, கவலைப்படுவது.
தனிப்பட்ட முறையில் தன்னையும், சுற்றி இருக்கிற இடங்களையும் சுத்தமாக வைத்துக் கொள்ளுதல். அதீதமாகவும், அடிக்கடியும் சுத்தப்படுத்துதல், பொருள்களை அடுக்கி வைத்தல்.
ஒரு பெரிய பந்தயத்திற்கு முன்னால் உடல் வியர்த்துப் போதல். காரணமே இல்லாமல் அடிக்கடி பயப்படுதல்,  'நான் இறந்துவிடப்போகிறேன்' என்பதுபோல் சோகமாக உணர்தல், இந்த அதிர்ச்சி மீண்டும் ஏற்படுமோ என்று தொடர்ந்து நினைத்துக் கொண்டே இருத்தல்.

 

Q

பதற்றக் குறைபாட்டின் அறிகுறிகள் என்ன?

A

எல்லாருக்குமே பதற்றம் உண்டு. ஆகவே ஒருவருடைய பதற்றம் இயல்பானதா அல்லது பதற்றக் குறைபாடா என்று சொல்லுவது சிரமம். உங்களுடைய கவலை உணர்வுகள் நீண்ட நாளைக்கு உங்களுடைய பணிகளைப் பாதித்தால் நீங்கள் மனநல நிபுணர் ஒருவரிடம் ஆலோசனை பெற வேண்டும். பதற்றக் குறைபாட்டில் பல வகைகள் உண்டு. அவற்றின் பொதுவான அறிகுறிகள்:

  • இதயத்துடிப்பு அதிகரித்தல், வேகமாக மூச்சு விடுதல்
  • தசைகளின் இழுவிசை அதிகரித்தல்
  • மார்புப் பகுதியில் இறுக்கமாக உணர்தல்
  • காரணம் சொல்ல முடியாத கவலைகளும், சமநிலையற்ற உணர்வும் தொடர்ந்து வருதல்
  • தேவையில்லாத விஷயங்களை எண்ணித் தொடர்ந்து கவலைப்படுதல், அதன் மூலம் தீவிரமாகச் சில செயல்களில் ஈடுபடுதல்

உங்களுடைய நண்பர் அல்லது குடும்ப உறுப்பினர் ஒருவரிடம் இந்த அறிகுறிகளை நீங்கள் கண்டால் அவர்களிடம் பேசுங்கள், அவர்களுக்குப் பதற்றக் குறைபாடு இருக்கலாம் என்று சொல்லுங்கள், மனநல நிபுணர் ஒருவரைச் சந்திக்குமாறு ஆலோசனை சொல்லுங்கள்.

Q

பதற்றக் குறைபாட்டை உண்டாக்கும் காரணிகள் என்ன?

A

பதற்றக் குறைபாட்டை உண்டாக்கக்கூடிய மிகப் பொதுவான காரணிகள்:

  • குடும்ப வரலாறு: ஒருவருடைய குடும்பத்தில் யாருக்கேனும் மனநலப் பிரச்சனைகள் இருந்திருந்தால் அவர்களுக்குப் பதற்றப் பிரச்சனைகள் வரலாம். உதாரணமாக OCD குடும்பத்தில் ஒருவரிடமிருந்து இன்னொருவருக்கு வரும்.
  • அழுத்தம் தரும் நிகழ்வுகள்: பணியிடத்தில் அழுத்தம், அன்புக்குரிய ஒருவருடைய மரணம், அல்லது தொந்தரவில் உள்ள உறவுகள் கூட பதற்றத்தின் அறிகுறிகளை உண்டாக்கலாம்.
  • உடல் நலப் பிரச்சனைகள்: தைராய்டு பிரச்சனைகள், ஆஸ்துமா, நீரிழிவு அல்லது இதய நோய் போன்ற நோய்களும் பதற்றத்தை உண்டாக்கக் கூடும். மன அழுத்தத்தினால் அவதிப்படுகிறவர்களும் பதற்றக் குறைபாட்டு அறிகுறிகளைப் பெறக் கூடும். உதாரணமாக, நீண்ட நாளாக மன அழுத்தத்தால் அவதிப்படும் ஒருவருடைய பணிச் செயல் திறன் குறையத் தொடங்கலாம், இதனால் பணித் தொடர்பான  அழுத்தம் வந்து அதன் மூலம் பதற்றம் தூண்டப்படலாம்.
  • போதைப் பொருள்களைப் பயன்படுத்துதல்: போதைப் பொருள்கள், மது மற்றும் அது போன்ற பிற பொருள்களை அதிகம் பயன்படுத்துகிறவர்களுக்கு பதற்றம் தொடர்பான பிரச்சனைகள் வருகின்றன. இதற்குக் காரணம் அவர்கள் பயன்படுத்திய பொருள்களின் தாக்கம் குறையத் தொடங்குகிறது, அதனால் அவர்கள் பதற்றம் அடைகிறார்கள்.
  • ஆளுமைக் காரணிகள்: சில நேரங்களில் சில குறிப்பிட்ட ஆளுமைத் தன்மைகளைக் கொண்ட நபர்களுக்கு பதற்றம் தொடர்பான பிரச்சனைகள் வருகின்றன. உதாரணமாக எதிலும் கச்சிதமாக இருக்கவேண்டுமென்று நினைக்கிறவர்கள், எதையும் தாங்கள்தான் கட்டுப்படுத்தவேண்டும் என்று நினைக்கிறவர்கள்.

Q

பதற்றக் குறைபாட்டின் வகைகள்

A

பதற்றம் மக்களைப் பலவிதமாகப் பாதிக்கிறது, அதனால் பலவிதமான குறைபாடுகள் ஏற்படுகின்றன. மிகவும் பொதுவாகக் காணப்படும் பதற்றக் குறைபாடுகள்:

  • பொதுவான பதற்றக் குறைபாடு (GAD)
    GAD பிரச்சனை கொண்டவர்கள் அதீதமான பதற்றத்தை அனுபவிக்கிறார்கள், பல்வேறு நிகழ்வுகள் மற்றும் சூழ்நிலைகளைப் பற்றிக் கவலைப்படுகிறார்கள். அவர்களால் பதற்றத்தையும் கவலையையும் கட்டுப்படுத்த இயலுவதில்லை, அவர்கள் ஓரிடத்தில் நிற்க இயலாதது போல் உணர்கிறார்கள், எப்போதும் எதையாவது செய்துகொண்டே இருக்கவேண்டும் என்பது போல் உணர்கிறார்கள். இவர்கள் குறிப்பிட்ட எதைப் பற்றியும் கவலைப்படுவதில்லை, ஏதேனும் ஒரு நிகழ்வு இவர்களுக்குப் பதற்றத்தைத் தூண்டுவதில்லை.
  • தீவிர செயல்பாட்டுக் குறைபாடு (OCD)
    OCD பிரச்சனை கொண்டவர்களுக்குத் தொடர்ந்து ஏதேனும் சிந்தனைகள் மற்றும் பயங்கள் வந்துகொண்டே இருக்கின்றன, அதன்மூலம் அவர்களுக்குப் பதற்றம் ஏற்படுகிறது. அவர்கள் இந்தப் பதற்றத்தைத் தணித்துக் கொள்வதற்காகச் சில குறிப்பிட்ட செயல்களைத் திரும்பத் திரும்பச் செய்கிறார்கள். உதாரணமாக கிருமிகளால் தான் பாதிக்கப்பட்டுவிடுவோமோ என்று பயங்கொண்ட ஒருவர் திரும்பத் திரும்ப தன்னுடைய கைகளைக் கழுவுவார் அல்லது வீட்டில் உள்ள பாத்திரங்களைக் கழுவுவார்.
  • சமூக பயம் / சமூகப் பதற்றக் குறைபாடு (SAD)
    சமூகப் பதற்றக் குறைபாடு கொண்ட மக்கள் தங்களை மற்றவர்கள் கவனிக்கக் கூடிய சமூக மற்றும் பேச்சு தொடர்பான நிகழ்ச்சிகளை எண்ணிப் பயப்படுகிறார்கள். அவர்கள் செய்யப்போகிற அல்லது சொல்லப் போகிற ஏதோ ஒன்று அவர்களை அவமானப்படுத்திவிடும் அல்லது சங்கடப்படுத்திவிடும் என்று இவர்கள் மிகவும் பயப்படுகிறார்கள். இவர்களால் சாதாரணமான தினசரி நடவடிக்கைகளான ஒருவருடன் இயல்பாகப் பேசுதல், பொது இடங்களில் சாப்பிடுதல் போன்றவற்றைக் கூடச் செய்ய இயலாது.
  • குறிப்பிட்ட பயங்கள்
    போபியாக்கள் எனப்படும் இந்த அச்சக்கோளாறுகள் அடிப்படையற்ற பயங்களாகும். அச்சக்கோளாறுப் பிரச்சனை கொண்டவர்கள் தங்களுக்குப் பதற்றம் உண்டாக்கும் பொருள் அல்லது சூழ்நிலையைத் தவிர்ப்பதற்காக எந்த அளவிற்கும் செல்வார்கள். உதாரணமாக சிலருக்கு விமானத்தில் பறப்பதற்கு பயம் இருக்கலாம், கூட்டமான இடங்களில் இருப்பதற்குப் பயம் ஏற்படலாம், அல்லது சிலந்திகள், உயரமான கட்டிடங்கள் போன்ற எந்தத் தொந்தரவும் தராத பொருள்களை நினைத்துக் கூட அவர்கள் பயப்படலாம்.
  • அதிர்ச்சிக்குப் பிந்தைய அழுத்தக் குறைபாடு (PTSD)
    விபத்துகள் அல்லது தாக்குதல் போன்ற ஒரு தீவிரமான அதிர்ச்சியைச் சந்தித்தவர்கள் அல்லது பார்த்தவர்களுக்குப் பின்னர் PTSD பிரச்சனை வரக்கூடும். அவருக்கு அந்த நிகழ்வு மீண்டும் மீண்டும் நினைவில் வந்து கொண்டே இருப்பதால் அவர்களால் தூங்க இயலாது அல்லது இயல்பான மனத்துடன் இருக்கவே இயலாது.
  • பயக் குறைபாடு
    பயக் குறைபாட்டுப் பிரச்சினை கொண்டவர்கள் தங்களால் கட்டுப்படுத்த இயலாதபடி பயத்தினால் தாக்கப் படுகிறார்கள். இதற்குப் பல உடல் சார்ந்த அறிகுறிகள் உண்டு. உதாரணமாக மயக்கம், மூச்சுத் திணறல் மற்றும் அதிகம் வியர்த்தல். இந்த பயத் தாக்குதல்களின்போது அவர்களுக்கு உளம் சார்ந்த அறிகுறிகள் (சிந்தனைகள்) வருவதாகவும் அவர்கள் சொல்லியிருக்கிறார்கள். உதாரணமாக ஏதேனும் ஒன்று தவறாக நடக்கப் போகிறது என்று அவர்கள் நினைக்கலாம், 'நான் சாகப் போகிறேன்' அல்லது 'எனக்குப் பைத்தியம் பிடிக்கப்போகிறது' என்பது போன்ற உணர்வுகள் ஏற்படலாம். இந்தத் தாக்குதல்கள் இதற்காகத் தான் நடக்கின்றன என்று எந்தக் காரணமும் கிடையாது. இப்படி ஒரு தாக்குதல் மீண்டும் நிகழ்ந்துவிடுமோ என்கிற பயத்திலேயே அந்த நபர் வாழ்ந்து கொண்டிருப்பார். 

Q

பதற்றக் குறைபாடுகளுக்குச் சிகிச்சை பெறுதல்

A

பதற்றக் குறைபாடுகளைக் குணப்படுத்தலாம். அதே சமயம் பிரச்சனை எந்த அளவு தீவிரமானது என்பதைக் குறைத்து மதிப்பிட்டுவிடக்கூடாது. மேற்கண்ட அறிகுறிகளில் எவையேனும் உங்களுக்கு இருந்தால் நீங்கள் ஒரு நிபுணரைச் சந்தித்து ஆலோசனையும் சிகிச்சையும் பெறுவது நல்லது. பதற்றக் குறைபாடுகளை மருந்துகளாலோ ஆலோசனையாலோ இவை இரண்டையும் கொண்டோ குணப்படுத்தலாம்.

Q

பதற்றக் குறைபாடு கொண்ட ஒருவரைக் கவனித்துக்கொள்ளுதல்

A

உங்களுடைய குடும்ப உறுப்பினர் அல்லது நண்பர் ஒருவருக்குப் பதற்றக் குறைபாடுகள் இருந்தால் நீங்கள் அவருக்கு அளிக்கப் போகும் ஆதரவு அவர்களுடைய துயரத்தைக் குறைப்பதற்கு மிகவும் உதவும். மற்ற எல்லா நோய்களைப் போலவே இங்கேயும் நீங்கள் அவதிப் படுபவருடைய பிரச்சனையை முதலில் புரிந்துகொள்ள வேண்டும், அப்போது தான் அவர்களுடைய நிலை என்ன என்பதை நீங்கள் உணர இயலும். பதற்றக் குறைபாடு உள்ளவர்களுடன் பழகுவதற்கு நிறையப் பொறுமை தேவை, அதே சமயம் அவ்வப்போது அவர்களைத் தூண்டிவிட்டு அவர்கள் எதை எண்ணிப் பயப்படுகிறார்களோ, எதை எண்ணி அழுத்தத்தைச் சந்திக்கிறார்களோ அதை எதிர்கொள்ளச் செய்ய வேண்டும், அப்போது தான் அவர்களால் அந்த பயங்களை விரட்ட இயலும். இதற்கு நீங்கள் ஒரு சரியான சமநிலையைக் கண்டறிவது அவசியம்.

Q

பதற்றக் குறைபாடுகளுடன் வாழுதல்

A

நீங்கள் உங்களுடைய பதற்றக் குறைபாட்டைக் கையாளுவதற்குப் பல திறன்களைக் கற்றுக் கொள்ளலாம். நேர்விதமாகச் சிந்தித்தல், அழுத்தத்தைக் கையாளுதல், ஓர் ஆரோக்கியமான வாழ்க்கை முறையைப் பின்பற்றுதல், மனத்தைத் தளர்வாக வைத்துக் கொள்ளுதல் போன்றவை இதற்கான சில பொதுவான நுட்பங்கள். பதற்றத்தை நீங்களே கையாளுவது ஒரு சவாலான விஷயம் தான், குறிப்பாக உங்களுக்கு நிறைய அசௌகரியமும் சங்கட உணர்வும் ஏற்பட்டால் அது மிகவும் சிரமமாக இருக்கும். அதுபோன்ற சூழ்நிலைகளில் நிபுணர்களை அணுகி ஆலோசனை பெறுவது நல்லது.

Related Stories

No stories found.
logo
வொய்ட் ஸ்வான் ஃபவுண்டேஷன்
tamil.whiteswanfoundation.org