ஒலித்திறன் செயலாக்கக் குறைபாடு

Q

ஒலித்திறன் செயலாக்கக் குறைபாடு என்றால் என்ன?

A

கார்த்திக்கின் பெற்றோருக்கு, அவனுடைய கல்வித்திறன்பற்றிப் பெரிய கவலை. அவனுக்கு 12 வயதாகிறது, உடல்ரீதியில் ஆரோக்கியமாகதான் இருக்கிறான், ஆனால், ஐந்தாம் வகுப்புதான் படிக்கிறான், அதாவது, இந்த வயதுக்கு அவன் படிக்கவேண்டிய வகுப்பிலிருந்து இரண்டு வகுப்புகள் பின்தங்கியிருக்கிறான். அவன் எவ்வளவுதான் கஷ்டப்பட்டுப் படித்தாலும் சரி, அவனுடைய பெற்றோர் எத்தனைத் தனிப்பயிற்சி வகுப்புகளுக்கு ஏற்பாடு செய்தாலும் சரி, அவனால் 5ம் வகுப்புத் தேர்வுகளில் தேர்ச்சிபெற இயலவில்லை. அவனுடைய பெற்றோர் அவனை எண்ணி மிகவும் கவலை கொண்டார்கள்; தன் வயதுப் பிள்ளைகளுக்குச் சமமாகத் தான் இல்லையே என்கிற எண்ணத்தில் கார்த்திக்கின் சுய மதிப்பு, தன்னம்பிக்கை நாள்தோறும் குறைந்துகொண்டே சென்றது. அவனுடைய பெற்றோர் அவனைக் குழந்தைகளுக்கான உளவியலாளர் ஒருவரிடம் அழைத்துச்சென்றார்கள். உளவியலாளர் பல மதிப்பீடுகளை நிகழ்த்தினார், அவனிடம் எந்த அறிவுத்திறன், வளர்ச்சி அல்லது கற்றல் குறைபாடும் இல்லை என்று கண்டறிந்தார்.

பிறர் தன்னிடம் சொல்லும் விஷயங்கள் தனக்குப் புரிவதில்லை என்று கார்த்திக் எப்போதும் சொல்வான், அதனால்தான் அவனால் பிறர் சொல்வதன்படி நடக்க இயலுவதில்லை. ஆரம்பத்தில், அவன் முரண்டுபிடிக்கிறான் என்றுதான் அவனுடைய பெற்றோரும் ஆசிரியர்களும் நினைத்தார்கள், அவனுக்குத் தண்டனை கொடுத்தார்கள். அவன் 5ம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தபோதுதான், அவர்களுக்கு உண்மை தெரியவந்தது: கார்த்திக் பிறர் சொல்வதைக் கேட்காமலிருப்பது அவனுடைய பிடிவாதத்தால் இல்லை; அதற்கு வேறு காரணம் இருக்கிறதுஓர் ஆசிரியர் கார்த்திக்கின் பெற்றோரிடம், 'நீங்கள் ஓர் ஒலித்திறன் நிபுணரைச் சந்திக்கவேண்டும்' என்று பரிந்துரைத்தார்; அதன்படி அவர்கள் ஓர் ஒலித்திறன் நிபுணரிடம் சென்றார்கள்; கார்த்திக்குக்கு ஒலித்திறன் செயலாக்கக் குறைபாடு இருப்பதை அவர் கண்டறிந்தார்.

கார்த்திக்போன்ற சிறுவர்களைப் பெற்றோர்களும் ஆசிரியர்களும் அடிக்கடி சந்திக்கிறார்கள்.

ஒலித்திறன் செயலாக்கக் குறைபாடு (APD) அல்லது மைய ஒலித்திறன் செயலாக்கக் குறைபாடு என்பது, காதுக்குள் செல்லும் ஒலியை மூளை எப்படிச் செயலாக்குகிறது, புரிந்துகொள்கிறது என்பதைப் பாதிக்கிறது. இக்குறைபாடு, பள்ளி செல்லும் குழந்தைகளில் சுமார் ஐந்து சதவிகிதத்தினரைப் பாதிக்கிறது. இந்தப் பிரச்னை வந்தவர்களுடைய காதின் கட்டமைப்பில் அல்லது செயல்பாட்டில் எந்தக் கோளாறும் இல்லை. 

APD பிரச்னை கொண்ட குழந்தைகளால் சொற்களில் இருக்கும் ஒலிகளுக்கிடையிலான நுட்பமான வேறுபாடுகளை அடையாளம் காண இயலுவதில்லை; அந்த ஒலிகள் எவ்வளவு உரக்கக் கேட்டாலும் சரி, எத்தனைத் தெளிவாகக் கேட்டாலும் சரி. அவர்களுடைய காதுகள், மூளை ஒத்திசைந்து இயங்காததால், மற்றவர்கள் தங்களிடம் என்ன பேசுகிறார்கள் என்று அவர்களுக்குப் புரியாது. இவர்களுடைய மூளை ஒலியை, குறிப்பாகப் பேச்சை எப்படிப் புரிந்துகொள்கிறது என்பதில் ஏதோ குறுக்கிடுகிறது.  ஒலி எங்கிருந்து வருகிறது என்பதைக் கண்டறியவும், ஒலிக்குறிப்புகள் எந்த வரிசையில் வருகின்றன என்பதைப் புரிந்துகொள்ளவும், அத்துடன் குறுக்கிடும் பின்னணி ஒலிகளை மௌனமாக்கிவிட்டுப் பேச்சைமட்டும் புரிந்துகொள்ளவும் இவர்கள் சிரமப்படுகிறார்கள்.

சான்றுகள்:

https://www.understood.org/en/learning-attention-issues/child-learning-disabilities/auditory-processing-disorder/understanding-auditory-processing-disorder

http://kidshealth.org/en/parents/central-auditory.html

https://ldaamerica.org/types-of-learning-disabilities/auditory-processing-disorder/

Q

ஒலித்திறன் செயலாக்கக் குறைபாட்டின் அறிகுறிகள் என்ன?

A

ஒரு குழந்தைக்கு ஒலித்திறன் செயலாக்கக் குறைபாடு (APD) இருப்பதைக் கண்டறியும் சில அடையாளங்கள், அறிகுறிகள்:

 • மொழி தொடர்பான செயல்பாடுகளைப் புரிந்துகொள்வது, நினைவில் வைத்துக்கொள்வதில் சிரமம்
 • சொல் இல்லாத ஒலிகள், இசை போன்றவற்றைப் புரிந்துகொள்வது அல்லது நினைவுக்குக் கொண்டுவருவதில் எந்தச் சிரமங்களும் இல்லை
 • எண்ணங்கள், யோசனைகளை மெதுவாகச் செயலாக்குவது, அவற்றை விளக்குவதில் சிரமம்
 • ஒரேமாதிரி ஒலிக்கும் சொற்களில் உள்ள எழுத்துகளைத் தவறாகச் சொல்வது, அவற்றைத் தவறாக உச்சரிப்பது, அசைகளை விட்டுவிடுதல், ஒரேமாதிரி ஒலிக்கும் சொற்களிடையே குழப்பம் (எகா: த்ரீ/ஃப்ரீ, ஜேப்/ஜாப், பாஷ்/பேட்ச் போன்றவை.)
 • அடையாளரீதியிலான பேச்சைப் (உவமைகள் மற்றும் உருவகங்கள்) புரிந்துகொள்வதில் குழப்பம்
 • சொற்களை மிக நேரடியாகப் புரிந்துகொள்ளுதல்
 • அடிக்கடி பின்னணி ஒலிகளால் கவனம் சிதறுதல்
 • வாய்மொழிப் பேச்சுகளில் கவனம் செலுத்தச் சிரமப்படுதல் அல்லது, அவற்றை நினைவுக்குக் கொண்டுவரச் சிரமப்படுதல்
 • வாய்மொழிக் குறிப்புகளைத் தவறாகப் புரிந்துகொள்ளுதல் அல்லது அவை நினைவில் நிற்காமலிருத்தல்
 • வேறொன்றில் கவனமாக இருக்கும்போது மக்களை "அலட்சியப்படுத்துதல்"
 • சொல்லப்பட்டதைக் கேட்டபிறகும், "என்ன சொன்னீர்கள்?" என்று அடிக்கடி கேட்டல்

Q

ஒலித்திறன் செயலாக்கக் குறைபாடு எதனால் உருவாகிறது?

A

ஒலித்திறன் செயலாக்கக் குறைபாடு(APD)க்கான காரணங்கள் சில:

 • வெளியிலிருந்து பெற்ற APD: மைய ஒலித்திறன் நரம்பு அமைப்பில் ஏற்பட்ட சேதம் அல்லது செயல்படாமை காரணமாக இது உண்டாகலாம்.
 • பாரம்பரியம் மற்றும் மரபியல்: இது தலைமுறைவழியாக வரலாம், அல்லது, ஒரு சிரமமான பிரசவத்தினால் வரலாம்.
 • வளர்ச்சியின்போது வரும் APD: வளர்ச்சியின்போது வரும் APDக்கான சரியான காரணம் இன்னும் தெரியவில்லை, இத்துறையில் ஆராய்ச்சி நிகழ்ந்துவருகிறது. குழந்தையின் கேட்கும் திறன் தாயின் கருப்பையில் தொடங்குகிறது என்றாலும், அதன் முதல் பத்து வயதுவரை அது தொடர்ந்து வளர்கிறது. வளர்ச்சியில் ஏற்படும் தாமதம் அல்லது தாக்குதல்களால் APD ஏற்படலாம்.
 • பசைக் காதுகள்/ஒடிடிஸ் மீடியா: ஒரு குழந்தை சிசுவாக உள்ளபோது அல்லது குழந்தைப்பருவத்தின் தொடக்கநிலையில் அதற்குப் பசைக் காதுகள் பிரச்னை வந்தால், அக்குழந்தைக்கு AOPD உருவாகும் ஆபத்து அதிகம். "பசைக்காதுகள்" என்றால், காதின் நடுப்பகுதியில் பசைபோன்ற ஒரு பொருள் நிரம்பிவிடுகிறது. இந்தத் திரவம் ஒலியால் ஏற்படும் அதிர்வுகளை மழுப்பிவிடுகிறது.

Q

ஒலித்திறன் செயலாக்கக் குறைபாட்டைக் கண்டறிதல்

A

ஒலித்திறன் செயலாக்கக் குறைபாட்டை(APD)க் கண்டறிவது சிரமமானது. அதேசமயம், பெற்றோர், கவனித்துக்கொள்பவர் அல்லது ஆசிரியர் அடையாளங்கள் மற்றும் அறிகுறிகளைக் கவனிக்கலாம், பிரச்னை உள்ள குழந்தையை ஓர் ஒலித்திறன் நிபுணரிடம் அழைத்துச்செல்லலாம், அவர் சில சிறப்புப் பரிசோதனைகள் மற்றும் கருவிகளின்மூலம் குழந்தைக்கு APD உள்ளதா என்று கண்டறிவார்.

APD பிரச்னை கொண்ட பல மாணவர்கள், ஒலித்திறன் பற்றாக்குறையைக் கையாள இயலாமல் கல்வியில் சவால்களைச் சந்திக்கக்கூடும். இதனால்தான், APDயை இயன்றவரை முன்னதாகக் கண்டறிவது முக்கியம்.

Q

விரைவில் கண்டறிதலின் தேவை

A

ஒலிப் பற்றாக்குறைகள் கண்டறியப்படவில்லை, கையாளப்படவில்லையென்றால், APD பிரச்னை கொண்ட பல மாணவர்கள் கல்வியில் சவால்களைச் சந்திப்பார்கள்.

Q

ஒலித்திறன் செயலாக்கக் குறைபாட்டுக்கான(APD) சிகிச்சை

A

ஒலித்திறன் செயலாக்கக் குறைபாடு (APD) கொண்ட குழந்தைகள் சிறப்பாகக் கல்வி கற்பதற்கு ஆசிரியர்கள் பல சிறிய உத்திகள் அல்லது வியூகங்களைப் பயன்படுத்தி உதவலாம்:

 • விஷயங்களை விளக்குவதற்குப்பதிலாக, காண்பிக்கலாம் (பிற புலன் உணர்வுகளைப் பயன்படுத்தலாம்: கையேடுகள், விளக்கக்காட்சிகள்)
 • இயன்றபோது, பின்னணி ஒலியைக் குறைக்கலாம்
 • அவர்களை வகுப்பில் முன்வரிசையில், அல்லது ஆசிரியருக்கு அருகில் அமரச்செய்யலாம், இதன்மூலம் அவர்கள் நன்கு கேட்க இயலும்
 • அவர்கள் தேர்வு எழுதுவதற்கு, அல்லது வகுப்புப் பணிகளைச் செய்வதற்குக் கவனச்சிதறல்கள் இல்லாத இடமொன்றை ஏற்பாடுசெய்யலாம்
 • குரலின் சுருதி மற்றும் தொனியை மாற்றலாம், வேகத்தை மாற்றலாம், முக்கியச் சொற்களை அழுத்திச் சொல்லலாம்
 • அவர்கள் பதிலளிப்பதற்கு 5-6 விநாடிகள் தரலாம் ("சிந்திக்கும் நேரம்")
 • கருத்தாக்கங்கள், சொல்வளச் சொற்கள், விதிமுறைகள் போன்றவற்றை அவர்களைத் திரும்பத்திரும்பச் சொல்லச்செய்யலாம்

Related Stories

No stories found.
logo
வொய்ட் ஸ்வான் ஃபவுண்டேஷன்
tamil.whiteswanfoundation.org