ஆட்டிச நிறமாலைக் குறைபாடு

ஆட்டிச நிறமாலைக் குறைபாடு
Q

ஆட்டிச நிறமாலைக் குறைபாடு (ASD) என்றால் என்ன?

A

ஆட்டிச நிறமாலைக் குறைபாடு (ASD) அல்லது ஆட்டிசம் என்பது, அடிப்படையில் நரம்பியல்தன்மையைக் கொண்ட, சமூக, தகவல்தொடர்பு மற்றும் பழகுமுறைச் சவால்களை உண்டாக்கக்கூடிய பல வளர்ச்சிக் குறைபாடுகளுக்கான ஒரு பொதுச் சொல்லாகும்.

ASD என்பது மூன்றாவது மிகப் பொதுவான வளர்ச்சிக் குறைபாடாகும். இந்தக் குறைபாட்டின் முதன்மையான அடையாளங்கள்: சமூக ஊடாடல் மற்றும் தகவல்தொடர்பில் பிரச்னைகள் மற்றும் ஒரேமாதிரியான பழகுமுறைகளை அல்லது கட்டுப்படுத்தப்பட்ட ஆர்வங்களைக் கொண்டிருத்தல் ஆகியவை. ASD பிரச்னை கொண்ட குழந்தைகளுடைய புலன் நுண்ணுணர்வும் பாதிக்கப்பட்டிருக்கலாம்; அதாவது, சில குறிப்பிட்ட புலன்களுக்கு (எடுத்துக்காட்டாக, உரத்த ஒலி, சில குறிப்பிட்ட ஆடைகள் போன்றவை) அவர்கள் குறைவான அல்லது அதிக நுண்ணுணர்வை வெளிப்படுத்தலாம்.

Q

ஆட்டிச நிறமாலையின்கீழ் வருகிற குறைபாடுகள் எவை?

A

ஆட்டிச நிறமாலையின்கீழ் வருகிற குறைபாடுகளின் ஒரு சுருக்கமான அறிமுகம், இதோ:

 

ஆட்டிசக் குறைபாடு: ஒரு குழந்தைக்கு ASDயின் அறிகுறிகள் அனைத்தும் உள்ளபோது, அதற்கு ஆட்டிசம் உள்ளதாகக் கண்டறியப்படுகிறது.

அஸ்பெர்கெர் நோய்க்குறி: அதிகச் செயல்திறனைக் கொண்ட ஆட்டிசம் என்று அழைக்கப்படும் இந்த நோய்க்குறியின் அடையாளங்கள், சமூக/உணர்வுத் திறன்களில் குறிப்பிடத்தக்க பிரச்னைகள் மற்றும் சில குறிப்பிட்ட தலைப்புகளில் மிகத்தீவிரமான ஆர்வம் ஆகியவை. இக்குழந்தைகளில் மொழி அல்லது அறிவாற்றல் வளர்ச்சித் தாமதம் ஏதும் காணப்படுவதில்லை. மேலும் விவரங்களுக்கு, இங்கு க்ளிக் செய்யுங்கள். 

பரவலான வளர்ச்சிக் குறைபாடுவேறு வழிகளில் குறிப்பிடப்படாதது (PDD NOS): PDD என்பது பல நேரங்களில் இயல்பற்ற ஆட்டிசம் என்று அழைக்கப்படுகிறது; காரணம், ஒரு குழந்தையிடம் ஆட்டிசத்தின் எல்லாப் பண்புகளும் காணப்படாமல் சில பண்புகள்மட்டும் காணப்படும்போது இது கண்டறியப்படுகிறது. எடுத்துக்காட்டாக, ஒரு குழந்தையிடம் பேச்சில் தாமதம் காணப்படுகிறது, சில குறிப்பிட்ட பழக்கங்களை அவர் திரும்பத்திரும்பச் செய்கிறார் என்றால், அவருக்கு PDD (NOS) வந்திருப்பதாகக் கண்டறியப்பட வாய்ப்புகள் உள்ளன

ரெட் நோய்க்குறி: ரெட் நோய்க்குறி என்பது, X க்ரோமோசோமிலுள்ள ஒரு குறைபாட்டுடன் தொடர்புடைய ஓர் அரிய மற்றும் தீவிரக் குறைபாடாகும்; ஆகவே, இது பெரும்பாலும் சிறுமிகளைப் பாதிக்கிறது. ரெட் நோய்க்குறியின் அடையாளங்கள், வழக்கமான காலகட்டத்தில் வளர்ச்சி, பின்னர் திறன்களில் மெதுவான பின்னடைவு, பல நேரங்களில் தகவல்தொடர்புத் திறன்கள் இழப்பு மற்றும் நோக்கத்துடன் செய்யப்படும் கை அசைவுகளின் இழப்பு.

குழந்தைப்பருவச் சீர்குலைவுக் குறைபாடு: இது ஒரு மிக அரிய குறைபாடாகும்; இந்தக் குறைபாடு கொண்ட குழந்தைகளிடம் எல்லாப் பகுதிகளிலும் இயல்பான வளர்ச்சி காணப்படுகிறது; இந்த நிறமாலையிலுள்ள மற்ற குறைபாடுகளையெல்லாம்விடப் பின்னதாகத் திறன்களின் பின்னடைவு தொடங்குகிறது. குழந்தைப்பருவச் சீர்குலைவுக் குறைபாடு கொண்ட குழந்தைகள் எல்லா (மொழி, சமூக, பழக்கவழக்க மற்றும் இயக்க) வளர்ச்சிப் பகுதிகளிலும் திறன் இழப்பை அனுபவிக்கிறார்கள்.  

முன்பு, ஒவ்வொரு பிரச்னையும் (ஆட்டிசக் குறைபாடு, வேறு வழிகளில் குறிப்பிடப்படாத, பரவலான வளர்ச்சிக் குறைபாடு (PDD-NOS) மற்றும் அஸ்பெர்கெர் நோய்க்குறி) தனித்தனியே கண்டறியப்பட்டுவந்தது. ஆனால் இப்போது, இந்தக் குறைபாடுகள் ஒன்றாகத் தொகுக்கப்பட்டு ஆட்டிச நிறமாலைக் குறைபாடு என்று அழைக்கப்படுகின்றன.

Q

ASDயின் அடையாளங்கள் எவை?

A

ஆட்டிச நிறமாலைக் குறைபாட்டைக் கொண்ட குழந்தைகளிடம் மூன்று முக்கியப் பகுதிகளில் சிரமங்கள் காணப்படும்:

 • சமூக ஊடாடல் (உறவுகளை அமைப்பதில் சிரமம் போன்றவை)
 • சமூகத் தகவல்தொடர்பு (சொல்சார்ந்த, உடல் மொழி, குறிப்பால் உணர்த்தும் சைகைகள் போன்ற சொல்சாராத தகவல்தொடர்பில் சிரமம்)
 • சமூகக் கற்பனை (எண்ண நெகிழ்வு, ஒழுங்குபடுத்துதல் ஆகியவற்றில் சிரமம்)

அவர்களுடைய இயக்கத் திறன்களின் வளர்ச்சியிலும் சிரமங்கள் இருக்கலாம்; கைகளைப் பறப்பதுபோல் அசைப்பது, நாற்காலியில் முன்னும் பின்னும் ஆடுவது போன்ற செயல்களை அவர்கள் வழக்கத்துக்கு மாறாகத் திரும்பத்திரும்பச் செய்யலாம்.

Q

ஒரு குழந்தைக்கு ASDக்கான வடிகட்டல் எவ்வாறு நிகழ்த்தப்படுகிறது?

A

வடிகட்டல் என்பது, குழந்தைக்கு வளர்ச்சித் தாமதம் ஏதும் இல்லை என்பதை உறுதிப்படுத்துவதற்குமட்டும்தான் செய்யப்படுகிறது; நிபுணர்கள் ASD ஆபத்துச் சாத்தியத்தை மதிப்பிடுவதற்கு M-CHAT-R/F போன்ற வடிகட்டல் கருவிகளைப் பயன்படுத்தலாம். பொதுவாக, வடிகட்டலுக்குப்பிறகு ஒரு விரிவான மதிப்பீடு மற்றும் மதிப்பாய்வு நிகழ்த்தப்படுகிறது. பிரச்னையை முன்கூட்டியே அடையாளம் கண்டால், முன்கூட்டியே தலையீட்டைத் தொடங்கலாம்; தொலைநோக்கில் குழந்தைக்கு மிகவும் நன்மைதரும் பலன்களைப் பெறலாம்.

ஒருவர் தன்னுடைய குழந்தைக்குத் தானே சுய-வடிகட்டலை நிகழ்த்த உதவும் வயதுக்கேற்ற சரிபார்ப்புப் பட்டியல் ஒன்று, இதோ (நன்றி: Com DEALL) ஒரு குழந்தை சரியான வளர்ச்சி மைல்கற்களை எட்டுகிறதா என்பதுபற்றிப் பெற்றோர் தெரிந்துகொள்ள இந்தச் சரிபார்ப்புப்பட்டியல் பயன்படும்; அதன்பிறகு, வளர்ச்சி நிபுணராகிய குழந்தை மருத்துவர், குழந்தை உளவியலாளர் அல்லது ஒரு மருத்துவ உளவியலாளருடன் அவர்கள் விவாதிக்கவும் இது பயன்படும். கவனத்தில் கொள்ளவேண்டிய உண்மை, இந்தச் சரிபார்ப்புப் பட்டியல் ஒரு நிபுணருடைய மதிப்பீட்டுக்குச் சமமாகாது.

Q

ASD எப்படி அடையாளம் காணப்படுகிறது?

A

ASDயை அடையாளம் காண்பதற்கு எந்தத் தனி மருத்துவ அல்லது மரபியல் பரிசோதனையும் இல்லை. அதேசமயம், நிபுணர்கள் ASDயை அடையாளம் காண்பதற்காக, ஆட்டிசக் கண்டறிதல் கவனிப்புக் கால அட்டவணை (ADOS) அல்லது ஆட்டிசக் கண்டறிதல் நேர்காணல் - மாற்றியமைக்கப்பட்டது (ADI-R) போன்ற கண்டறிதல் கருவிகளைப் பயன்படுத்தி ஒரு மதிப்பீடு அல்லது மதிப்பாய்வை நிகழ்த்தலாம். குழந்தையின் தகவல்தொடர்பு, சமூக, இயக்கவியல் மற்றும் அறிவாற்றல் வளர்ச்சி உள்ளிட்ட பல திறன் வளர்ச்சிகளையும் அவர்கள் மதிப்பிடலாம்

சில சூழ்நிலைகளில், ஆட்டிசத்துக்கான அடையாளங்கள் குழந்தைகளிடம் ஆரம்பத்திலேயே தென்படலாம். சில சூழ்நிலைகளில், 2 முதல் 2.5 ஆண்டுகள்வரை குழந்தையிடம் இயல்பான வளர்ச்சி இருக்கலாம்; அதன்பிறகு, குறிப்பிட்ட பகுதிகளில் பெறப்பட்ட திறன்கள் இழக்கப்படலாம். இதனை ‘ஆட்டிசப் பின்னடைவு’ என்கிறார்கள்.

ASD கொண்ட பல குழந்தைகளிடம் இன்னொரு மருத்துவ அல்லது உளவியல் பிரச்னையும் காணப்படலாம், இது ‘நோய்கள் உடன்வரும் நிலை’ எனப்படுகிறது. ஆட்டிசத்துடன் பொதுவாகக் காணப்படும் சில நிலைகள், ADHD, பதற்றம், மனச்சோர்வு, புலன் நுண்ணுணர்வுகள், அறிவாற்றல் குறைபாடு (ID), டூரெட்டெ’ஸ் நோய்க்குறி. இவை ஒரு குழந்தைக்கு இல்லை என்பதை உறுதிசெய்ய இன்னொரு கண்டறிதல் நிகழ்த்தப்படுகிறது.

Q

ASD உள்ள குழந்தைகளின் சில தனித்துவமான பலங்கள் எவை?

A

ஆட்டிசம் கொண்ட குழந்தைகள் தங்களைச் சுற்றியுள்ள உலகத்துடன் தங்களைத் தொடர்புபடுத்திக் காணவும் ஊடாடவும் சிரமப்படுகிறார்கள். அதேசமயம், அவர்களிடம் சில தனித்துவமான பலங்களும் உள்ளன; பின்னர் அவர்கள் தேர்ந்தெடுக்கும் தொழில்துறைகளில் நன்கு வெற்றிபெறுவதற்கு இவை அவர்களுக்கு உதவக்கூடும். ஆட்டிசம் கொண்ட குழந்தைகள் பொதுவாகச் சராசரி அல்லது சராசரிக்கு மேற்பட்ட திறன்களைக் கொண்டுள்ள சில பகுதிகள்:  

 • ஒரு குறிப்பிட்ட பகுதியில் நிபுணத்துவ அறிவு
 • சிறந்த பார்வை மற்றும் இடம்சார்ந்த நினைவுத்திறன்
 • எதையும் முறைப்படி ஒழுங்காகச் செய்தல் 
 • அருவக் கொள்கைகளைப் புரிந்துகொள்ளும் திறன்
 • பிரச்னைகளைத் தீர்த்தல்/தர்க்கரீதியிலான புரிந்துகொள்ளல்

Q

ASD எதனால் உண்டாகிறது?

A

ஆட்டிசத்தின் சரியான காரணத்தைக் கண்டறிய நிபுணர்கள் இன்னும் முயன்றுவருகிறார்கள்; ஆனால், இதுபற்றி நிகழ்த்தப்பட்டுள்ள ஆய்வுகள், மரபியல், உயிரியல் மற்றும் சூழலியல் காரணிகளின் தொகுப்பால் இது உண்டாகலாம் என்று சுட்டிக்காட்டுகின்றன.

Q

ASDக்குக் கிடைக்கும் தலையீடுகள் எவை?

A

ஆட்டிச நிறமாலைக் குறைபாடு வாழ்நாள்முழுவதும் தொடரும் ஒரு நிலையாகும்; இதற்குச் சிகிச்சை ஏதுமில்லை. ஆனால், சரியான சிகிச்சை மற்றும் தலையீடு ஆகியவை, குழந்தைகள் தங்களுடைய வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்திக்கொள்ளத் தேவையான திறன்களைக் கற்றுக்கொள்ள உதவலாம். குழந்தைக்கு 12-18 மாதமாகியிருக்கும்போதே ASDயைக் கண்டறிய இயலும் என்பதால், தலையீட்டை முன்பாகவே வழங்கலாம்; இன்னும் மேம்பட்ட பலன்களைப் பெறலாம்.

ASDக்கான மிகச் செயல்திறன் வாய்ந்த தலையீடு, பல துறைகளின் தொகுப்பாக அமைவது, கட்டமைப்பு கொண்டது, குழந்தை தன்னுடைய தகவல்தொடர்பு, சமூக மற்றும் பழக்கவழக்க மைல்கற்களை எட்ட உதவுவதற்காகச் சிறப்பாக அமைக்கப்பட்டது. ASD கொண்ட குழந்தைகளுக்குக் கட்டமைப்பு கொண்ட, தீவிரமான மற்றும் தொடர்ச்சியான தலையீடு கிடைத்தால், அவர்கள் குறிப்பிடத்தக்க அளவு முன்னேறலாம்.

பழக்கவழக்க அணுகுமுறைகள்

பயன்படுத்தப்பட்ட பழக்கவழக்க ஆராய்ச்சி (ABA): ABA சிகிச்சையானது முதன்மையாக, ஆட்டிசம் கொண்ட குழந்தைகளின் பிரச்னையான பழக்கவழக்கங்களைக் குறைப்பதில் கவனம் செலுத்துகிறது. இது பழக்கவழக்கத்தை மூன்று படிநிலைச் செயல்முறையாகக் காண்கிறது: கட்டளை, பழக்கவழக்கம் மற்றும் விளைவு. குழந்தை விரும்பப்படும் பழக்கவழக்கங்கள் மற்றும் திறன்களைக் கற்றுக்கொண்டு பராமரிப்பதற்குப் பரிசுகள் அல்லது உறுதிப்படுத்தல்களை இந்தச் செயல்முறை பயன்படுத்துகிறது. குழந்தையின் முன்னேற்றமானது பின்பற்றப்பட்டு அளவிடப்படுகிறது. ABA இதுபோன்ற நுட்பங்களைப் பயன்படுத்துகிறது:

 • தனித்தியங்கும் பரிசோதனைப் பயிற்சி (DTT): DTT முறையானது, குழந்தை சிக்கலான செயல்முறைகளை நன்கு கற்றுக்கொள்ள உதவுகிறது; இதற்காக அது அந்தச் செயலைச் சிறிய பகுதிகளாக்கி, ஒவ்வொரு துணைப்பகுதியையும் அந்தக் குழந்தை நன்கு கற்றுக்கொள்ளச்செய்கிறது. சரியான பதில்கள் மற்றும் பழக்கவழக்கங்களுக்குப் பரிசளிப்பதற்கு நேர்விதமான உறுதிப்படுத்தல் மற்றும் ஊக்கப்பரிசுகள் பயன்படுத்தப்படுகின்றன. விரும்பும் பழக்கவழக்கம் அல்லது திறனைக் குழந்தை கற்றுக்கொள்ளும்வரை அது கற்றுத்தரப்படுகிறது, திரும்பத்திரும்பச் செய்யப்படுகிறது.
 • தொடக்கநிலைத் தீவிரப் பழக்கவழக்கத் தலையீடு (EIBI): இது ABAயின் ஒரு வகையாகும்; ஐந்து வயதைவிடக் குறைவான, இன்னும் பொதுவாக மூன்று வயதைவிடக் குறைவான குழந்தைகளிடம் ஆட்டிசத்தின் இயல்பற்ற பழக்கவழக்கங்களைக் குறைக்கும் நோக்கத்தைக் கொண்டுள்ளது.
 • முதன்மை எதிர்வினைப் பயிற்சி (PRT): PRTயானது குழந்தையின் வளர்ச்சியில் நான்கு முதன்மைப் பகுதிகளில் கவனம் செலுத்துகிறது: ஊக்கம், சுய மேலாண்மை, சுய முயற்சி மற்றும் பல நினைவுத்தூண்டுதல்களுக்கு எதிர்வினையாற்றுதல். இது குழந்தையால் வழிநடத்தப்படும் தலையீடாகும்; காரணம், சிகிச்சையளிப்பவர் பல நேரங்களில், குழந்தைக்கு ஆர்வமுள்ள ஒரு செயல்பாடு அல்லது விஷயத்தைப் பயன்படுத்திக் குழந்தை ஓர் இலங்கை எட்டுவதற்குக் கற்றுத்தருகிறார் மற்றும் உதவுகிறார்.

 

ஒருங்கிணைந்த தலையீடு

ஆட்டிஸ்டிக் மற்றும் தொடர்புடைய தகவல்தொடர்பு ஊனத்தைக் கொண்ட குழந்தைகளுடைய சிகிச்சை மற்றும் கல்வி முறை (TEACCH): TEACCHஆனது கட்டமைப்புள்ள கற்றுத்தருதலின் அடிப்படையில் அமைந்துள்ளது. ஆட்டிசம் உள்ள குழந்தையிடம் ஏற்கெனவே இருக்கும் திறமைகளைக்கொண்டு இது கூடுதல் விஷயங்களைக் கட்டமைக்கிறது. TEACCHன் இலக்கு, ஆட்டிசம் கொண்ட குழந்தை இயன்றவரை சுதந்தரமாகச் செயல்பட உதவுதல்.

 

வளர்ச்சி அணுகுமுறைகள்

வளர்ச்சி, தனிப்பட்ட மாற்றங்கள், உறவு-அடிப்படையிலான அணுகுமுறை (DIR - இன்னொரு பெயர்களநேரம்”): இது உணர்வு மற்றும் உறவுசார்ந்த வளர்ச்சியில் (உணர்வுகள், கவனித்துக்கொள்வோருடன் உறவுகள்) கவனம் செலுத்துகிறது. குழந்தை காட்சிகள், ஒலிகள் மற்றும் மணங்களை எப்படிக் கையாள்கிறது என்பதிலும் இது கவனம் செலுத்துகிறது.

 

தரமான அணுகுமுறைகள்

 • தொழில்சார்ந்த சிகிச்சை: தொழில்சார்ந்த சிகிச்சையானது, ஆட்டிசம் கொண்ட குழந்தை அன்றாடச் செயல்பாடுகளில் இன்னும் அதிகச் செயல்திறனோடு பங்கேற்க உதவுவதற்காகப் பலவிதமான வியூகங்களைப் பயன்படுத்துகிறது. ஒட்டுமொத்த இயக்கவியல் திறன்கள் மற்றும் நுண் இயக்கவியல் திறன்கள் போன்ற சில குறிப்பிட்ட பகுதிகளை வலுப்படுத்த அது உதவுகிறது.
 • பேச்சுச் சிகிச்சை: பேச்சுச் சிகிச்சையாளர்கள் குழந்தையுடன் பணியாற்றி, குழந்தையின் தகவல்தொடர்பை மேம்படுத்த உதவுகிறார்கள். அவர்கள் சைகைகள், பட அட்டைகள் போன்ற மாற்று முறைகளைப் பயன்படுத்துகிறார்கள்; குழந்தைகள் தங்களுடைய எண்ணங்கள் மற்றும் சிந்தனைகளைப் பிறரிடம் வெளிப்படுத்துவது எப்படி என்று கற்றுக்கொள்ள இவை உதவுகின்றன. பல துறைகளின் தொகுப்பாக அமையும் தலையீட்டுத் திட்டமொன்றில் பேச்சுச் சிகிச்சையை இணைப்பது முக்கியம்; ஏனெனில், ஆட்டிசம் கொண்ட குழந்தைகளுக்குத் தகவல்தொடர்பில் அதிகப் பிரச்னைகள் உள்ளன.
 • புலன் ஒருங்கிணைப்புச் சிகிச்சை: காட்சிகள், ஒலிகள் மற்றும் மணங்கள் போன்ற புலன் தகவல்களைக் கையாளக் குழந்தைகளுக்கு உதவுகிறது. புலன் ஒருங்கிணைப்புச் சிகிச்சையானது, சில குறிப்பிட்ட ஒலிகளால் தொந்தரவுக்குள்ளாகிற, அல்லது, பிறர் தன்னைத் தொட்டால் பிடிக்காத குழந்தைகளுக்கு உதவலாம். குழந்தைகள் தங்களுடைய புலன்களை இன்னும் சிறப்பாகக் கட்டுப்படுத்தும்போது, தங்களுடைய நகர்வுகள், ஒலிகள் மற்றும் உணர்வுகளை இன்னும் நன்றாகக் கட்டுப்படுத்துகிறார்கள். இது விநோதத்தன்மையைக் குறைக்கிறது; சமூகத் திறன்களை மேம்படுத்துகிறது.

 

பிற அணுகுமுறைகள்

 • இசைச் சிகிச்சை: இசைச் சிகிச்சையானது ASD கொண்ட குழந்தைகளுக்குக் குறிப்பிட்ட இசைச் செயல்பாடுகளைப் பயன்படுத்துகிறது; அதன்மூலம், ஆட்டிசம் கொண்ட குழந்தைகளில் சமூக மற்றும் தகவல்தொடர்புத் திறன்களை மேம்படுத்துகிறது.
 • படப் பரிமாற்றத் தகவல்தொடர்பு அமைப்பு (PECS): மிகக்குறைந்த தகவல்தொடர்புத்திறன்களைக் கொண்ட, அல்லது, தகவல்தொடர்புத்திறன்களே இல்லாத குழந்தைகளிடம் இது பொதுவாகப் பயன்படுத்தப்படுகிறது. தகவல்தொடர்பை நிகழ்த்தப் படச் சின்னங்கள் அல்லது அட்டைகள் பயன்படுத்தப்படுகின்றன.
 • குறிப்பு: ஒரு குழந்தைக்குத் தலையீட்டுச் சிகிச்சையை முன்கூட்டியே தொடங்கும்போது, அந்தக் குழந்தையின் வளர்ச்சிக்கு அது மிகவும் ஆதரவாக உள்ளது என ஆய்வுகள் காட்டுகின்றன. ஆகவே, தங்கள் குழந்தைக்கு ஆட்டிசம் அல்லது வேறு வளர்ச்சிப் பிரச்னை உள்ளது என்று எண்ணும் பெற்றோர் தங்கள் குழந்தையிடம் இயன்றவரை விரைவாகப் பேசுவது முக்கியம். இத்துடன், பல தலையீட்டு மையங்கள் கலக்கத்திலுள்ள, ஆதரவு, ஆலோசனை தேவைப்படுகிற பெற்றோர் அல்லது குழந்தையைக் கவனித்துக்கொள்கிறவர்களுக்கு உதவும் நிகழ்ச்சிகளையும் வழங்குகின்றன. குழந்தைக்கு உதவுவதில் சிகிச்சையாளர்களுடன் இணைந்து பணியாற்றுவதற்கான பயிற்சிகள்பற்றியும், அவர்களுடன் நன்கு இணைந்து பணியாற்றுவது எப்படி என்று தெரிந்துகொள்வதற்காகவும் பெற்றோர் தயவுசெய்து தங்களுடைய சிகிச்சையாளரிடம் பேசவேண்டும்.

Q

ASD உள்ள ஒருவரைக் கவனித்துக்கொள்ளுதல்

A

தங்கள் குழந்தைக்கு ஆட்டிசம் உள்ளது என்று தெரிந்துகொள்ளும்போது, பெற்றோர் அல்லது குழந்தையைக் கவனித்துக்கொள்கிறவர்கள் பெரிய அழுத்தத்தைச் சந்திக்கலாம்; மிகவும் கலங்கிப்போகலாம். பல பெற்றோர்கள், குறிப்பாகத் தாய்மார்கள், தங்களுடைய வேலையை விட்டுவிட்டுத் தங்கள் குழந்தையை முழு நேரம் கவனித்துக்கொள்கிறவர்களாக ஆகிறார்கள். வீட்டில் பல மாற்றங்கள் நிகழ்கின்றன; தங்கள் சகோதரர் அல்லது சகோதரிக்கு ஆட்டிசம் இருப்பது கண்டறியப்படும் உடன்பிறந்தோர், அவர்களைச் சுற்றித் தங்களுடைய வாழ்க்கையை அமைத்துக்கொள்ளப் பழகுகிறார்கள்; குடும்ப உறுப்பினர்கள் அதிக ஆதரவுடன் உதவுகிறார்கள்; குழந்தையின் ஆர்வத்தை மனத்தில் கொண்டு செயல்பாடுகளும் திட்டங்களும் உருவாக்கப்படுகின்றன; இப்படி இன்னும் பல. சுருக்கமாகச் சொன்னால், ஆட்டிசம் உள்ள ஒரு குழந்தையை வளர்ப்பதில் தனித்துவமான சவால்கள் உள்ளன. அதேசமயம், சரியான அறிவு கைவசமிருந்தால், பெற்றோரும் குழந்தையைக் கவனித்துக்கொள்பவர்களும் அந்தக் குழந்தைக்கு இன்னும் மேம்பட்ட தெரிவுகளை எடுக்க இயலும்.

இந்தச் சூழலில் பெற்றோர் மற்றும் கவனித்துக்கொள்கிறவர்கள் செய்யக்கூடியவை:

 • ஆட்டிசத்தைப்பற்றி இயன்றவரை நிறைய விஷயங்களைத் தெரிந்துகொள்ளலாம். வெவ்வேறு தலையீடுகளை எப்படிப் பயன்படுத்துவது என்பதுபற்றிக் கற்றுத்தரும் பயிற்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்கலாம்.
 • அனைத்து அன்றாடச் செயல்பாடுகளுக்கும் ஒரு வழக்கமான ஒழுங்கைத் திட்டமிடலாம், செயல்படுத்தலாம்.
 • நிபுணரின் உதவியை நாடலாம். சூழ்நிலையைச் சமாளிப்பதற்குப் பெற்றோர் மற்றும் குழந்தையைக் கவனித்துக்கொள்பவர்களுக்கும் ஆலோசனை தேவைப்படலாம்.
 • சிறப்புத் தேவையுள்ள மற்ற குழந்தைகளின் பெற்றோர் படும் சிரமங்களை அதேபோன்ற சிறப்புத் தேவையுள்ள குழந்தைகளின் பெற்றோர்தான் முழுமையாகப் புரிந்துகொள்ள இயலும் என்பது இயல்புதான். இதற்கான ஆதரவுக் குழுக்களில் அவர்கள் இணையலாம்; ஆட்டிசம் உள்ள மற்ற குழந்தைகளின் பெற்றோருடன் இணைந்து செயல்படலாம்.
 • அவர்கள் தங்களுக்காக நேரம் செலவிடவேண்டும். அவர்கள் தங்களுடைய உடல் மற்றும் உள்ள நலனையும் கவனித்துக்கொள்ளவேண்டும்.

 

இந்தக் கட்டுரை, Com DEALL அறக்கட்டளை, பெங்களூரின் இணைப்புகள் ஒருங்கிணைப்பாளரான Ms தீபா பட் நாயர் வழங்கிய குறிப்புகளைக்கொண்டு எழுதப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
logo
வொய்ட் ஸ்வான் ஃபவுண்டேஷன்
tamil.whiteswanfoundation.org