மிகுதியாக உண்ணும் குறைபாடு

Q

மிகுதியாக உண்ணும் குறைபாடு என்றால் என்ன?

A

உணவு என்பது மனித வாழ்க்கைக்கு மிகவும் முக்கியமான ஒன்று. நல்ல உணவைச் சாப்பிடும்போது நாம் மகிழ்ச்சியாக உணர்கிறோம்.

அதனால் நமக்குப் பிடித்த உணவு வகைகளைக் காணும்போது அதை அள்ளி அள்ளிச் சாப்பிடுவது சகஜம் தான். ஏதாவது ஒரு விழாவிற்குச் செல்கிறோம், அங்கே நமக்குப் பிடித்த உணவு பரிமாறப்படுகிறது என்றால் இரண்டு முறை, மூன்று முறை போட்டுச் சாப்பிடுகிறோம். அநேகமாக நம்மில் எல்லாருமே இப்படி ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில் அளவுக்கு அதிகமாகச் சாப்பிட்டிருப்போம்.

ஆனால் சில பேருக்கு இப்படி அளவுக்கு அதிகமாகச் சாப்பிடுவது ஒரு பெரிய பிரச்னையாகவே ஆகிவிடுகிறது. இவர்கள் காரணமே இல்லாமல் நிறையச் சாப்பிடுவார்கள், எவ்வளவு முயன்றாலும் இவர்களால் சாப்பிடுவதை நிறுத்தவே இயலாது.

ஒரு கட்டத்தில் அளவுக்கு அதிகமாகச் சாப்பிடுவதால் இவர்களுடைய உடலும் அசௌகரியத்திற்குள்ளாகும், மனத்தளவிலும் மிகுந்த அழுத்தத்திற்கு ஆளாவார்கள். இப்படிப்பட்டவர்கள் மிகுதியாக உண்ணும் குறைபாட்டிற்கு ஆளாகியிருக்கிறார்கள் என்று பொருள்.

இந்தப் பிரச்னையால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் உணவை ஒரு சாக்காகதான் பயன்படுத்துகிறார்கள். இவர்களுடைய மனத்தில் ஏராளமான அழுத்தமும் பதற்றமும் பிற உணர்ச்சி சார்ந்த பிரச்னைகளும் இருக்கக்கூடும். அவற்றை எல்லாம் மறைப்பதற்கு உணவை இவர்கள் பயன்படுத்திக் கொள்கிறார்கள். நிறையச் சாப்பிட்டால் அந்தப் பிரச்னைகளை மறந்துவிடலாம் என்று எண்ணுகிறார்கள்.

இந்தக் குறைபாடு முற்றிலும் குணப்படுத்த்க் கூடியது, சரியான நேரத்தில் இதனைக் கண்டறிந்து சிகிச்சை கொடுத்தால் இவர்கள் இந்தப் பிரச்னையிலிருந்து முழுமையாகக் குணமாகிவிடலாம்.

குறிப்பு: புலிமியா என்கிற குறைபாட்டால் பாதிக்கப்பட்டவர்களும் இப்படி மிகுதியாகச் சாப்பிடுவது உண்டு. ஆனால் புலிமியாவும் மிகுதியாக உண்ணும் குறைபாடும் ஒன்றல்ல. புலிமியா பிரச்னை கொண்டவர்கள் தங்களுடைய உடல் மிகவும் குண்டாக இருக்கிறது என்கிற எண்ணத்தால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள், ஆகவே என்றைக்காவது அவர்கள் அதிகமாகச் சாப்பிட்டாலும் உடனடியாக வாந்தியெடுத்து அல்லது நிறைய உடற்பயிற்சி செய்து பழையபடி ஒல்லியாகிவிடவேண்டும் என்று அவர்கள் நினைப்பார்கள். மிகுதியாக உண்ணும் குறைபாடு கொண்டவர்களுக்குத் தங்களுடைய உடலைப்பற்றி அப்படி எந்த எண்ணமும் கிடையாது, அவர்கள் தங்கள் மனத்திற்குள் இருக்கும் கவலைகளை மறப்பதற்காக உணவைப் பயன்படுத்திக் கொள்கிறார்கள், அவ்வளவுதான்.

Q

மிகுதியாக உண்ணும் குறைபாட்டின் அறிகுறிகள் என்ன?

A

மிகுதியாக உண்ணும் குறைபாட்டின் பொதுவான அறிகுறிகள் இவை:

  • நிறைய உணவைக் குறைந்த நேரத்தில் மிக வேகமாகச் சாப்பிடுதல், சாப்பிடுவதை நிறுத்தவே இயலவில்லை, தங்களைத் தாங்களே கட்டுப்படுத்திக்கொள்ளவே இயலுவதில்லை என்று உணர்தல்.
  • இவர்கள் மற்றவர்களுடன் சேர்ந்து சாப்பிடுவதைத் தவிர்ப்பார்கள், காரணம் தாங்கள் அளவுக்கு அதிகமாகச் சாப்பிடுகிறோம் என்பது அவர்களுக்கே தெரியும், அதை மற்றவர்கள் பார்த்துவிட்டால் தங்களைப்பற்றி என்ன நினைப்பார்களோ என்று இவர்களுக்குக் கூச்சமாக இருக்கும். சில நேரங்களில் இவர்கள் தனியாக இருக்கும்போது சாப்பிடுவதற்கென்று நிறைய உணவை ஒளித்துவைப்பதுகூட உண்டு.
  • இவர்களுடைய மனத்தில் அழுத்தமும் பதற்றமும் அதிகரிக்கும்போது இவர்கள் நிறையச் சாப்பிடுவார்கள், அப்போது நிறையச் சாப்பிடுவதன் மூலம் தங்களுடைய மனம் இயல்பாவதாக உணர்வார்கள், ஆனால் உண்மையில் அப்படி நிறையச் சாப்பிட்ட பிறகு அதை எண்ணி அவர்கள் வெட்கம் கொள்வார்கள்.
  • இவர்களுக்குத் தங்களுடைய வயிறு நிரம்பிவிட்டது என்று தெரிந்தாலும் சாப்பிடுவதை நிறுத்தமாட்டார்கள், அதன்மூலம் மிகுந்த அசௌகரியத்திற்கு ஆளாவார்கள்.
  • ஒரு நாளைக்கு மூன்று வேளை சாப்பிடவேண்டும் என்றெல்லாம் எந்தக் கணக்கும் வைத்துக் கொள்ளாமல் நாள் முழுக்க இவர்கள் சாப்பிட்டுக் கொண்டே இருப்பார்கள்.

Q

மிகுதியாக உண்ணும் குறைபாடு எதனால் ஏற்படுகிறது?

A

மிகுதியாக உண்ணும் குறைபாடு இதனால்தான் ஏற்படுகிறது என்று ஒரே ஒரு காரணத்தைச் சுட்டிக் காட்ட இயலாது. பல உணர்வு சார்ந்த, உள்ளம் சார்ந்த மற்றும் சுற்றுச்சூழல் சார்ந்த காரணிகளின் தொகுப்பால் இது உண்டாகக்கூடும். மனச் சோர்வு மற்றும் பதற்றம் போன்ற பிற மனநலப் பிரச்னைகளால் பாதிக்கப்பட்டுள்ள ஒருவருக்கு மிகுதியாக உண்ணும் குறைபாடு வருவதற்கு வாய்ப்புகள் உண்டு.

சிலர் எதிர்மறையான எண்ணங்கள் அதிகம் வரும்போது அல்லது மனம் தளர்ந்து இருக்கும்போது நன்றாகச் சாப்பிடும் பழக்கத்தை உண்டாக்கிக் கொள்வார்கள். இது கொஞ்சங்கொஞ்சமாக மிகுதியாக உண்ணும் குறைபாடாக மாறிவிடக்கூடும்.

ஒருவருடைய குழந்தைப் பருவத்தில் நடந்த சில நிகழ்ச்சிகள்கூட மிகுதியாக உண்ணும் குறைபாட்டுக்கு வழிவகுக்கக்கூடும். உதாரணமாக ஒரு குழந்தை எதையாவது சிறப்பாகச் செய்யும்போது அதற்குப் பரிசு தருகிறேன் என்று நல்ல உணவையோ சாக்லேட் போன்றவற்றையோ வாங்கிக் கொடுத்து பெற்றோர் ஊக்குவித்திருப்பார்கள். அல்லது அந்தக் குழந்தை மனம் தளர்ந்து இருக்கும்போது இனிப்புப் பொருள்களைக் கொடுத்து அதனைப் பழையபடி மகிழ்ச்சியாக்க முயன்றிருப்பார்கள். இது போன்ற பழக்கங்கள் சின்ன வயதில் ஏற்படும்போது பின்னாளில் அவர்கள் உணவை மகிழ்ச்சி தரும் ஒரு பொருளாகக் கருதத் தொடங்கலாம், மனம் தளர்ந்திருக்கும் நேரங்களிலெல்லாம் சாப்பிட ஆரம்பித்து நிறைவாக அது மிகுதியாக உண்ணும் குறைபாட்டில் வந்து நிற்கலாம்.

சில குழந்தைகள் சிறிய வயதில் பிறரால் துன்புறுத்தப்பட்டு அல்லது கேலி செய்யப்பட்டு வருந்துகிறார்கள். இவர்களும் பின்னாள்களில் மிகுதியாக உண்ணும் குறைபாட்டுக்கு ஆளாகலாம்.

Q

மிகுதியாக உண்ணும் குறைபாட்டிற்குச் சிகிச்சை பெறுதல்

A

மிகுதியாக உண்ணும் குறைபாடு கொண்டவர்களுக்கு உளவியல் சிகிச்சைதான் நல்ல பலன் தருகிறது. இந்தச் சிகிச்சைமூலம் அவர்கள் உணவை உணவாகப் பார்க்கத் தொடங்குவார்கள், உணர்வு மற்றும் உள்ளம் சார்ந்த அழுத்தங்களைச் சமாளிப்பதற்கான ஒரு கருவியாக உணவைப் பயன்படுத்திக்கொள்ளமாட்டார்கள். இத்துறை சார்ந்த நிபுணர்கள் அறிவாற்றல் செயல்பாட்டுச் சிகிச்சையை (CBT), நபர்களுக்கிடையிலான பழக்கம்சார்ந்த உளவியல் சிகிச்சை மற்றும் உரையாடல் செயல்பாட்டுச் சிகிச்சை ஆகியவற்றைப் பயன்படுத்தி மிகுதியாக உண்ணும் குறைபாட்டைக் குணப்படுத்துகிறார்கள். இந்தச் சிகிச்சைகளின் நோக்கம் ஒருவர் எதற்கெல்லாம் உணவைச் சார்ந்திருக்கிறாரோ அந்தச் சார்பு நிலையைக் குணப்படுத்துதல், உணவைப்பற்றியும் எடையைப்பற்றியும் அவர்களுக்கு இருக்கக்கூடிய எண்ணங்களை ஆரோக்கியமான முறையில் மாற்றுதல், அவர்களுக்கு அழுத்தத்தை உண்டாக்கக்கூடிய சூழ்நிலைகளை உணவு அல்லாத வேறு விஷயங்களைப் பயன்படுத்திச் சமாளிக்கக் கற்றுத் தருதல் ஆகியவை.

மிகுதியாக உண்ணும் குறைபாட்டிற்கு ஆளானவர்கள் அதன்மூலம் மிகவும் பருத்துக் காணப்பட்டால், அவர்களுடைய உடல் எடையைக் குறைப்பதற்கான ஒரு திட்டமும் அவர்களுக்குச் சிபாரிசு செய்யப்படும். அவர்களிடம் மிகுதியாக உண்ணும் குறைபாட்டைத் தூண்டியவை வேறு மனக் குறைபாடுகள்தான் என்று கண்டறியப்பட்டால் அந்த மனக் குறைபாடுகளைக் குணப்படுத்துவதற்கான சிகிச்சையும் அவர்களுக்கு வழங்கப்படும்.

Q

மிகுதியாக உண்ணும் குறைபாடு கொண்ட ஒருவரைக் கவனித்துக் கொள்ளுதல்

A

உங்களுடைய நண்பர்கள், உறவினர்கள் அல்லது அன்புக்குரியவர்கள் யாரிடமாவது மிகுதியாக உண்ணும் குறைபாட்டின் அறிகுறிகளை நீங்கள் கவனித்தால் நீங்கள் அவர்களிடம் பேசுவது அவசியம். அப்படிப் பேசுவது அவர்களுடைய தனிப்பட்ட விஷயத்தில் தலையிடுவது ஆகிவிடுமோ என்று நினைத்து அல்லது அப்படிப் பேசினால் அவர்கள் கோபப்படுவார்களோ என்று நினைத்துத் தயங்காதீர்கள். அதே சமயம் அவர்களிடம் பேசும்போது ஆவேசம் காட்டவேண்டாம், அவர்களைக் கண்டித்து, குறை சொல்லிப் பேசவேண்டாம். அக்கறையோடு பேசுங்கள், அவர்களுக்கு உதவ நீங்கள் இருக்கிறீர்கள் என்பதைப் புரிய வையுங்கள். இந்தப் பிரச்னையைத் தீர்ப்பதற்கு அவர்கள் ஒரு மனநல நிபுணரைச் சந்திக்கவேண்டுமென்று சொல்லி ஊக்கப்படுத்துங்கள், ஒரு வேளை அவர்களுக்கு அதில்  தயக்கம் இருந்தால் நீங்களும் அவர்களுடன் வருவதாகச் சொல்லுங்கள். ஒரு வேளை அவர்கள் தங்களுடைய பிரச்னைகளைப்பற்றி உங்களிடம் வெளிப்படையாகப் பேசத் தொடங்கினால் அவற்றை காது கொடுத்துக் கேளுங்கள், நீங்களே அவர்களுக்கு அறிவுரை சொல்லத் தொடங்காதீர்கள், அவர்கள் குற்ற உணர்ச்சியாக உணரும்படி எதையும் பேசிவிடாதீர்கள்.

அவர்கள் சிகிச்சையில் இருக்கும்போது நீங்களும் ஆரோக்கியமான முறையில் உண்ணுவதும், தினசரிப் பழக்க வழக்கங்களை முறையாக அமைத்துக் கொள்வதும், உடற்பயிற்சி செய்வதும் அவசியம். சொல்லப்போனால் அவர்கள் அருகே இருக்கும் எல்லாரும் இப்படி முறையாகச் சாப்பிட்டு சரியாக உடற்பயிற்சி செய்து வந்தால் அவர்கள் விரைவில் குணமாவார்கள்.

அவர்கள் சிகிச்சையில் இருக்கும்போது உணவு, உணவுக் கட்டுப்பாடு, எடை இழப்பு போன்ற விஷயங்களைப்பற்றி எதுவும் பேசவேண்டாம். கொஞ்சங்கொஞ்சமாக அந்த எண்ணங்கள் விலகி அவர்கள் முற்றிலும் குணமாகும் வரையில் சுற்றி இருக்கிற எல்லாரும் அவர்களுக்கு ஒரு நல்ல உதாரணமாக அமைந்து வழிகாட்டினால் பாதிக்கப்பட்டவர் விரைவில் இயல்பாகிவிடுவார்.

Q

மிகுதியாக உண்ணும் குறைபாட்டைச் சமாளித்தல்

A

மிகுதியாக உண்ணும் குறைபாடு கொண்டவர்கள் அதுபோன்ற நேரங்களில் தங்களைத் தாங்களே கட்டுப்படுத்திக்கொள்ள இயலாமல் மிகவும் வருந்துவார்கள், குற்ற உணர்ச்சியில் தவிப்பார்கள். இதன்மூலம் அவர்கள் மிகுந்த மன அழுத்தத்திற்கு ஆளாவது சகஜம். அதே சமயம் இது குணப்படுத்தக்கூடிய ஒரு பிரச்னைதான் என்பதை அவர்கள் உணரவேண்டும், சரியான நிபுணரின் ஆலோசனையைப் பெற்றால் அவர்கள் விரைவில் இயல்பாகிவிட இயலும்.

ஒருவர் தன்னுடைய பிரச்னையைப் புரிந்துகொண்டு அதற்குச் சிகிச்சை பெறுவதற்காக ஒரு நிபுணரைச் சந்தித்தால் மட்டும் போதாது, அவர் கொடுக்கும் சிகிச்சைத் திட்டத்தை முறையாகப் பின்பற்றவேண்டும், அதன்மூலம் அவர்களிடம் ஏற்படக்கூடிய மாற்றங்களைப்பற்றியும் தங்களுடைய நிலையைப்பற்றியும் அவ்வப்போது அந்த நிபுணருக்குத் தெரிவித்து வரவேண்டும்.

சிகிச்சையில் இருக்கும்போது எப்போதெல்லாம் அவர்களுக்கு நிறையச் சாப்பிடவேண்டும் என்கிற எண்ணம் வருகிறதோ அப்போதெல்லாம் அவர்கள் தங்களுடைய நண்பர் அல்லது உறவினர் ஒருவரிடம் மனம் விட்டுப் பேசலாம், வேறு ஏதாவது ஒரு வேலையில் ஈடுபட்டு அந்தச் சாப்பிடும் துடிப்பை மறக்க முயற்சி செய்யலாம். உதாரணமாக நீண்ட தூரம் நடத்தல் அல்லது ஒரு புத்தகம் படித்தல் போன்றவை.

மன ஒருமைப்பாடு, தியானம் போன்றவையும் அவர்களுடைய மன நிலையை இயல்பாக்குவதற்கு உதவக்கூடும்.

இந்தப் பிரச்னை கொண்டவர்களைச் சிகிச்சையும், சரியான மனக்கட்டுப்பாடும் முழுமையாகக் குணப்படுத்திவிடும், அவர்கள் எல்லாரையும்போல் இயல்பான உணவுப் பழக்கத்துக்குத் திரும்பிவிடுவார்கள்.

Related Stories

No stories found.
வொய்ட் ஸ்வான் ஃபவுண்டேஷன்
tamil.whiteswanfoundation.org