உடல் டிஸ்மார்பிக் குறைபாடு

Q

உடல் டிஸ்மார்பிக் குறைபாடு (BDD) என்றால் என்ன?

A

ராஜேஷ்க்கு வயது 28. அவர் ஒரு பெரிய நிறுவனத்தில் நல்ல வேலையில் இருக்கிறவர். இன்னும் திருமணமாகவில்லை, அவருடன் பிறந்தவர் ஓர் அக்கா. ராஜேஷ்-ன் பெற்றோர் இருவரும் வேலைக்குச் சென்றவர்கள், தங்களுடைய பிள்ளைகள் எல்லா விதத்திலும் சிறப்பாக இருக்கவேண்டும் என்று வலியுறுத்தியவர்கள். அவர்களுடைய எண்ணத்திற்கேற்பப் பள்ளியிலும் கல்லூரியிலும் இப்போது வேலை செய்கிற இடத்திலும் மிகவும் நன்கு செயல்படுகிறவர், எந்த வேலையையும் முழுமையாகச் செய்கிறவர் என்று பெயர் வாங்கினார். ஒரே நேரத்தில் பல வேலைகளைக் கையாள்வது ராஜேஷ்க்கு மிகவும் பிடிக்கும். பள்ளியில் படித்த போதிலிருந்தே ராஜேஷ்க்குக் கல்வியில் தான் அதிகக் கவனம் இருந்தது, விளையாட்டில் அவர் அவ்வளவாக அக்கறை காட்டியதில்லை. இதனால் நண்பர்கள் அவரை 'புத்தகப் புழு' என்றும் 'ஆசிரியர் செல்லம்' என்றும் கேலி செய்வது வழக்கம். அப்போதெல்லாம் ராஜேஷ் அதைப்பற்றிக் கவலைப்பட்டது கிடையாது. இப்போது, சமீப காலமாகத் தான் அவர் தன்னுடைய நெற்றியும் காதுகளும் சரியான வடிவத்தில் இல்லை என்று  நினைக்கத் தொடங்கியிருக்கிறார். நெடுநேரம் கண்ணாடி முன்பு நின்றபடி அங்கே தோன்றுகிற தன்னுடைய உருவத்தையே உற்றுப் பார்த்துக் கொண்டிருக்கிறார், அலுவலகத்தில் அடிக்கடி கழிப்பறைக்குச் சென்று தன்னுடைய நெற்றியும் காதுகளும் தலைமுடியால் நன்றாக மறைக்கப்பட்டிருக்கின்றனவா என்று பரிசோதிக்கிறார். தனக்கு ஏதோ பிரச்னை இருப்பது ராஜேஷ்க்குப் புரிந்தது. ஆனால் அவர் சொல்வதை மற்ற யாரும் நம்ப மறுத்தார்கள். குடும்பத்தினர் தன்னை நம்பவில்லையே என்று ராஜேஷ் வருந்தினார். நிறைவாக அவர்களை எப்படியோ சமாதானப்படுத்தி ஒரு மருத்துவ நிபுணரிடம் அழைத்துச் சென்றார் ராஜேஷ். அந்த மருத்துவ நிபுணர் ராஜேஷ் ஒரு மன நல நிபுணரைச் சந்திக்கவேண்டும் என்று ஆலோசனை சொன்னார்.

இது உண்மைக் கதை அல்ல, இந்தக் குறைபாடு நிஜ வாழ்வில் எப்படித் தோன்றும் என்பதை நீங்கள் புரிந்து கொள்ளவேண்டும் என்பதற்காக உருவாக்கப்பட்ட கற்பனை.

நம்மில் பலருக்கு நம்முடைய உடல் பற்றிய பெரிய கவலையோ வருத்தங்களோ இருப்பதில்லை. நம் உடல் எப்படி இருக்கிறதோ அதை அப்படியே ஏற்றுக் கொள்கிறோம்.

அதேசமயம், சில நேரங்களில் நமக்கு நம்முடைய உடலைப்பற்றிய கவலைகள் வரக்கூடும். சில பேர் இன்னும் உயரமாக இருக்கவேண்டும் என்று நினைப்பார்கள், முடி அதிகமாக இருக்கவேண்டும் என்று நினைப்பார்கள், தசைகள் நன்கு மெருகேறவேண்டும் என்று நினைப்பார்கள், இப்படிப்பட்ட நினைவுகள் சகஜம் தான். ஆனால் சிலருக்குத் தங்களுடைய உடல் பற்றிய கவலை மிகவும் அதிகமாகிவிடுகிறது, தங்களுடைய உடலில் ஏதோ சரியில்லை என்று இவர்கள் தொடர்ந்து நினைக்கிறார்கள், அதனால் பள்ளி, கல்லூரி, வேலைக்குச் செல்லாமல் முடங்கிக் கிடக்க எண்ணுகிறார்கள்.

உடல் டிஸ்மார்பிக் குறைபாடு (BDD) என்பது மனம் சார்ந்த ஒரு பிரச்னை. இந்தப் பிரச்னை கொண்டவர்கள் தங்களுடைய உடலில் எதுவோ சரியில்லை என்று தொடர்ந்து எண்ணிக்கொண்டே இருப்பார்கள். அது அவர்களுடைய மூக்காக இருக்கலாம், உதடுகளாக இருக்கலாம், நிறமாக இருக்கலாம், உயரமாக இருக்கலாம், உண்மையில் அதில் எந்தப் பிரச்னையும் இல்லாவிட்டாலும் இவர்கள் பிரச்னை இருக்கிறது என்று எண்ணிக்கொள்வார்கள், அதைப் பற்றியே எப்போதும் யோசிப்பார்கள், கண்ணாடியைப் பார்த்துக் கவலைப்பட்டுக் கொண்டே இருப்பார்கள், பிறரிடம் இது சரியாக இருக்கிறதா என்று திரும்பத்திரும்பக் கேட்பார்கள், அவர்கள் எல்லாம் சரியாகத்தான் இருக்கிறது என்று சொன்னாலும் இவர்களுக்குத் திருப்தி உண்டாகாது. தங்களுடைய உடல் சரியாக இல்லை என்கிற எண்ணம் இவர்களைத் தொடர்ந்து வருத்துவதால் இவர்கள் சமூகத்தில் வெளியே வருவதையே தவிர்க்கத் தொடங்கிவிடுவார்கள்.

சிலர் தங்களுடைய உடலைச் சரிசெய்து கொள்ளவேண்டும் என்பதற்காக அறுவை சிகிச்சை அளவிற்குக் கூடச் செல்வார்கள். உண்மையில் அந்த அறுவைச் சிகிச்சையின் மூலமாக இவர்களுடைய உடல் முன்பை விடச் சிறப்பாகிவிடப் போவதில்லை, அறுவைச் சிகிச்சைக்குப் பிறகும் இவர்கள் அப்படியேதான் எண்ணிக் கொண்டிருப்பார்கள்.

சிலருக்கு உண்மையிலேயே உடலில் சில பகுதிகள் சிறப்பாக இல்லாமல் காணப்படலாம், ஆனால் இந்தக் குறைபாடு உள்ளவர்களுடைய நிலைமை அதுவல்ல. அவர்களுடைய உடல் நன்றாகத்தான் இருக்கிறது, ஆனால் ஏனோ அது நன்றாக இல்லை என்று இவர்கள் எண்ணுகிறார்கள், குறிப்பாகத் தங்களுடைய உடலின் ஒரு குறிப்பிட்ட பகுதி சிறப்பாக இல்லை என்பது இவர்களுடைய தொடர்ச்சியான வருத்தமாக இருக்கிறது.

Q

BDDக்கான அடையாளங்கள், அறிகுறிகள் என்ன?

A

 • தங்களுடைய உடலில் நன்றாக இல்லாத அம்சம் என்று தாங்கள் நினைப்பதைப் பற்றித் தொடர்ந்து எண்ணிக் கொண்டே இருத்தல்
 • தங்கள் உடலில் குறை உள்ளது என்பதைப் பற்றிய சிந்தனையிலேயே எப்போதும் இருத்தல்
 • கண்ணாடியை அடிக்கடி பார்த்துத் தங்களுடைய உடல் சரியாக இருக்கிறதா என்று பரிசோதித்துக் கொண்டே இருத்தல்
 • தங்களுடைய அன்புக்குரியவர்களிடம் என்னுடைய மூக்கு சரியாக இருக்கிறதா, காது சரியாக இருக்கிறதா என்பதைப் பற்றி அடிக்கடி கேட்டுக்கொண்டே இருப்பார்கள், எல்லாம் சரியாகத் தான் இருக்கிறது என்று அவர்கள் சொன்னால்தான் நிம்மதி அடைவார்கள்.
 • தன்னைப் பற்றிய சிந்தனையால் ஏற்படும் மனச்சோர்வு
 • அசாதாரணமான முறையில் அடிக்கடி தன்னை அழகாக்கிக் கொள்ளுதல்
 • அடிக்கடி கோபப்படுதல், எரிச்சல் அடைதல்
 • எதிர்மறையான உடல் ஆளுமைப் பிரச்னைகள்
 • இவர்களால் வேறு எதிலும் கவனம் செலுத்த இயலாததால் பள்ளி, கல்லூரி, வேலை செய்யும் இடத்தில் பிரச்னைகள்
 • தங்கள் உடலில் ஒரு பகுதி அழகாக இல்லை என்று இவர்கள் நினைப்பதால் பொது இடங்களுக்குச் செல்லக் கூச்சப்படுதல் அல்லது பயப்படுதல்
 • பல சூழ்நிலைகளில் தங்களுடைய உடலில் இப்படி ஒரு குறையை வைத்துக் கொண்டு உலகத்தைச் சந்திக்க இயலாது என்று எண்ணும் இவர்கள் தற்கொலையைப் பற்றிக்கூட நினைக்கக்கூடும்

Q

உடல் டிஸ்மார்பிக் குறைபாடு எதனால் உண்டாகிறது?

A

மற்ற பல மனநலப் பிரச்னைகளைப் போலவே BDDக்கும் ஒரே ஒரு காரணத்தைச் சுட்டிக்காட்ட இயலாது. அதே சமயம் ஒருவருக்கு BDD வருவதற்கு இந்தக் காரணங்கள் இருக்கலாம் என நம்பப்படுகிறது:

 • கேலி அனுபவங்கள்: நம்முடைய சமூகத்தில் நண்பர்கள் மற்றும் உறவினர்களை அவர்களுடைய உடல் அம்சங்களை அடிப்படையாக வைத்துக் கேலி செய்வது ஓர் இயல்பான விஷயமாகக் கருதப்படுகிறது, உதாரணமாக உயரமாக இருக்கும் ஒருவரை 'நெட்டைக் கொக்கு' என்று கேலி செய்வார்கள், குண்டாக இருக்கும் ஒருவரை 'குண்டுக் கத்தரிக்காய்' என்று கேலி செய்வார்கள். இவையெல்லாம் வெறும் விளையாட்டுகள் என்றுதான் நாம் நினைக்கிறோம், ஆனால் சம்பந்தப்பட்ட நபரின் மனத்தில் இவை ஆழமாகப் பதிந்து பின்னால் பிரச்னைகளை உண்டாக்கக்கூடும்.
 • தன்னைப் பற்றிய எதிர்மறையான எண்ணங்கள் மற்றும் குறைந்த சுயமதிப்பு: இதனால் ஒருவர் அடிக்கடி தன்னை அழகுபடுத்திக் கொள்ள முனையக்கூடும், நெடுநேரம் உடற்பயிற்சி செய்யக்கூடும், மிக அதிகமாகச் சாப்பிடக்கூடும் அல்லது மிகக் குறைவாகச் சாப்பிடக்கூடும்.
 • எதையும் மிகக் கச்சிதமாகச் செய்யவேண்டும் என்று எண்ணுகிற ஆளுமையைக் கொண்டவர்களுக்கு BDD வரக்கூடும், இது மற்ற பதற்றக் குறைபாடுகளுடன் தொடர்புள்ளதாக அமைகிறது. ஆராய்ச்சியாளர்கள் தற்போது BDDக்கும் தீவிர செயல்பாட்டுக் குறைபாட்டிற்கும் (OCD) இடையே உள்ள தொடர்பைக் கண்டறிந்துள்ளார்கள். அதாவது BDD என்பது OCD வகையின் கீழ் வருகிறது, இதனால் மரபு சார்ந்த அல்லது உயிரியல் சார்ந்த பல காரணிகள் ஒருவருக்கு OCD வரும் வாய்ப்பை அதிகரிக்கும்போது, அந்த நபருக்கு BDDயும் வரக்கூடும். நமது கலாச்சாரமும் ஊடகங்களும் கூட அளவுக்கதிகமாக உடலுக்கு முக்கியத்துவம் தருகின்றன, உடல் மிகச் சிறப்பாக இருக்கவேண்டும், கச்சிதமாக இருக்கவேண்டும் என்ற பிம்பத்தை உண்டாக்கி பலருக்கு BDD வருவதற்கு வழிவகுக்கின்றன.

Q

உடல் டிஸ்மார்பிக் குறைபாட்டுக்கான சிகிச்சை

A

BDD பிரச்னை கொண்ட ஒருவருக்குப் பலவிதங்களில் சிகிச்சை அளிக்கலாம். பாதிக்கப்பட்டவர் தீவிர அறிகுறிகளைக் கொண்டிருந்தால், உதாரணமாக அவர் மனச்சோர்வுடன் காணப்பட்டால் அல்லது தற்கொலை செய்து கொள்வதைப் பற்றி எண்ணினால் அவருக்கு முதலில் மருந்துகள் தரப்படலாம். இவர்களுக்குப் பலனளிக்கக் கூடிய இன்னொரு முக்கியமான சிகிச்சை அறிவாற்றல் செயல்பாட்டுச் சிகிச்சை (CBT). இந்தச் சிகிச்சையில் ஒருவர் தன்னுடைய உடலைப் பற்றியும் தன்னுடைய சுயபிம்பத்தைப் பற்றியும் தவறாக எண்ணுவது படிப்படியாக மாற்றப்படுகிறது, அதன்மூலம் அவர்களுடைய உணர்வுகள் மற்றும் நடந்துகொள்ளும் விதம் ஆகியவை மாற்றப்படுகின்றன. இந்த இரு சிகிச்சைகளுமே சம்பந்தப்பட்ட நபர் சமூக ரீதியிலும் மற்ற விஷயங்களிலும் சிறப்பாகச் செயல்பட உதவுகின்றன.

Q

BDDயால் பாதிக்கப்பட்டவரைக் கவனித்துக் கொள்ளுதல்

A

BDDயால் பாதிக்கப்பட்டவர்கள் தங்களுடைய உடல் மிகச் சிறப்பாக, மிகக் கச்சிதமாக இருக்கவேண்டும் என்ற எண்ணத்துடன் இருப்பார்கள். தங்களிடம் எந்தக் குறையும் இல்லை என்று மற்றவர்கள் சொல்லிக்கொண்டே இருக்கவேண்டும் என்று எதிர்பார்ப்பார்கள். இதுபோன்ற நேரங்களில் குடும்ப உறுப்பினர்களின் உதவி அவர்களுக்கு மிகவும் முக்கியம். குடும்ப உறுப்பினர்கள் சரியான நேரத்தில் அவரை மனநல நிபுணரிடம் அழைத்துச் செல்லவேண்டும், அவர் மருந்துகளை உட்கொள்வது, சிகிச்சைகளைப் பெற்றுக் கொள்வது போன்றவற்றைக் கவனித்து அவரிடம் அன்பாகவும் ஆதரவாகவும் நடந்து கொள்ளவேண்டும்.

Q

BDDஐச் சமாளித்தல்

A

BDDக்கான சிகிச்சை நெடுநாள்கள் நடைபெறலாம், BDD பிரச்னை உள்ள ஒருவர் தொடர்ந்து குறைவான சுயமதிப்பையும் தன்னுடைய உடல் பற்றிய எதிர்மறையான சிந்தனைகளையும் கொண்டிருப்பதால் அவர் மன நல நிபுணருடன் ஒத்துழைத்து இந்தப் பிரச்னைகளைப் போக்கிக் கொள்வது அவசியம். இதன் மூலம் அவர்களுக்குத் தங்களுடைய உடல் சரியாகத் தான் இருக்கிறது என்கிற எண்ணமும் அதைப்பற்றிய ஒரு நல்ல மதிப்பும் ஏற்படும், அவர்கள் BDD பிரச்னையிலிருந்து விடுபடுவார்கள்.

Related Stories

No stories found.
logo
வொய்ட் ஸ்வான் ஃபவுண்டேஷன்
tamil.whiteswanfoundation.org