விளிம்பு நிலை ஆளுமைக் குறைபாடு

Q

விளிம்பு நிலை ஆளுமைக் குறைபாடு என்றால் என்ன?

A

பெரும்பாலான மனிதர்களுக்குத் தாங்கள் யார் என்பதுபற்றி ஒரு தெளிவான எண்ணம் இருக்கிறது, எந்தப் பண்புகள் அவர்களை உருவாக்குகின்றன என்பதை அவர்களே ஓரளவு உணர்ந்திருக்கிறார்கள்.

“நான்" என்கிற இந்த உணர்வு அவர்களுடைய வாழ்க்கையின் முதல் இருபது ஆண்டுகளில் உருவாகிறது, இதற்குக் காரணமாக அவர்களுடைய தொடக்ககால அனுபவங்களும், சூழலில் அவர்கள் காண்கிற விஷயங்களும் அமைகின்றன. மனிதர்களுடைய இந்த "நான்" என்கிற புரிந்துகொள்ளுதல் அல்லது அடையாள உணர்வு பல விஷயங்களிலிருந்து வருகிறது: அவர்களுக்கு எது முக்கியம், அவர்களுக்கு எது பிடித்திருக்கிறது, எது பிடிக்கவில்லை, அவர்கள் எதை எட்ட விரும்புகிறார்கள், அவர்கள் எதோடு இணைந்திருப்பதாகத் தங்களை உணர்கிறார்கள் போன்றவை. இவை தனிப்பட்ட முறையில் அமையலாம் அல்லது சமூகம் சார்ந்ததாகவும் அமையலாம், உதாரணமாக நண்பர்கள், பணியிடத்தில் அவர்களோடு வேலை செய்கிறவர்கள், சுற்றுச்சூழல் போன்றவற்றைச் சமூகம் எனக் குறிப்பிடலாம், இவை சார்ந்தும் ஒருவருடைய "நான்" என்கிற உணர்வு உருவாகிறது.

விளிம்பு நிலை ஆளுமைக் குறைபாடு எனப்படும் (BPD) குறைபாட்டைக் கொண்ட சிலருக்கு இந்தக் கேள்விகளுக்கான பதில் தெளிவாகக் கிடைப்பதில்லை, இந்த பதில்கள் அவ்வப்போது மாறிக்கொண்டே இருக்கின்றன.

ஒவ்வொரு நாளும் அவர்கள் இந்தக் கேள்விகளைக் கேட்டு தங்களைத் தாங்களே மிகுந்த போராட்டத்திற்கு உட்படுத்திக் கொள்கிறார்கள். இதனால் அவர்கள் தங்களுடைய உணர்வுகளையும், தங்களையும் எப்படிக் கையாளுகிறார்கள் என்பதே பாதிக்கப்பட்டுவிடுகிறது.

இந்தக் குறைபாட்டின் மிக வெளிப்படையான பண்பு: நிலையற்றதன்மை. அதாவது, ஒருவர் பிறருடன் ஒரேமாதிரி பழகாமலிருக்கலாம், அல்லது, தன் உறவுகளை நிலையானமுறையில் கையாளாமலிருக்கலாம். வெவ்வேறு நேரங்களில் அவர்களுடைய அடையாளங்கள் வெவ்வேறுமாதிரியாக இருக்கலாம், அவர்கள் தங்களைப்பற்றி, பிறரைப்பற்றிக் கொண்டுள்ள பார்வைகள் அவ்வப்போது மாறுபடலாம், அவர்களுடைய மனோநிலையும் அடிக்கடி மாறிக்கொண்டே இருக்கலாம்.

விளிம்பு நிலை ஆளுமைக் குறைபாடு உள்ள ஒருவருக்குத் தன்னைப் பற்றிய ஒரு நிலையான அடையாளம் இல்லை, தன்னைச் சுற்றியுள்ள விஷயங்களின் அடிப்படையில் தன்னை அவர்கள் வரையறுத்துக் கொள்கிறார்கள், இதனால் அவ்வப்போது அவர்களுடைய சுயபிம்பம் மாறிக்கொண்டே இருக்கிறது.

இதனால் வெவ்வேறு சூழல்களில் இவர்கள் முற்றிலும் மாறுபட்ட முறையில் நடந்துகொள்ளலாம், இதனை எப்படிச் சரிசெய்வது என்று தெரியாமல் இவர்கள் போராடிக் கொண்டே இருப்பார்கள்.

இந்தக் குறைபாடு கொண்டவர்கள் தங்களைச் சுற்றி என்ன நிகழ்கிறது என்பதைக் கவனித்தவண்ணம் இருப்பார்கள், அவர்களுடைய உணர்வுகள் இந்த விஷயங்களைப் பொறுத்து மிகவும் நுட்பமாக மாறிக்கொண்டே இருக்கும், மிக எளிய, ஒவ்வொரு நாளும் நடைபெறுகிற நிகழ்வுகளுக்குக்கூட இவர்கள் அதீதமாக உணர்ச்சிகளை வெளிப்படுத்தலாம்.

இவர்களுடைய பழக்கவழக்கங்களைப் பார்க்கிற மற்றவர்கள் 'இவர்களுக்குக் கவனம் தேவைப்படுகிறது, அவ்வளவுதான்' என்று சொல்லக்கூடும். ஆனால் உண்மையில் இது மனம் சார்ந்த ஒரு பிரச்னை ஆகும்.

Q

'விளிம்பு நிலை' என்றால் என்ன?

A

விளிம்பு நிலை ஆளுமைக் குறைபாடு கொண்டவர்கள் தங்களுடைய தினசரி வாழ்க்கை அழுத்தத்தைத் தாங்க இயலாமல் உணர்ச்சிகளை மிகுதியாக வெளிப்படுத்துவார்கள், அதீதமாக நடந்துகொள்வார்கள். இதனால் அவர்களுடைய உள் மற்றும் வெளி உலகில் மிகுந்த அழுத்தமும் குழப்பமும் ஏற்படும்.

இந்த அழுத்தம் காரணமாக இவர்கள் மற்றவர்களைப்பற்றியும் சில சூழல்களைப்பற்றியும் வன்மையான கருத்துகளை உருவாக்கிக்கொள்ளலாம், ஆனால் அதற்கெல்லாம் மேலாக இவர்கள் தங்களைப்பற்றியே சில வன்மையான கருத்துகளை உண்டாக்கிக்கொண்டுவிடுகிறார்கள்.

இதன் காரணமாக இவர்களுக்கு ஏதேனும் ஒரு மிகப்பெரிய மனம் சார்ந்த பிரச்னை ஏற்படக்கூடிய வாய்ப்புகள் அதிகம், ஆகவே இந்தக் குறைபாடு 'விளிம்பு நிலை' என அழைக்கப்படுகிறது, அதாவது எந்த நேரத்திலும் ஒரு பெரிய பிரச்னை ஏற்பட்டுவிடக்கூடும் என்கிற நிலை.

Q

விளிம்பு நிலை ஆளுமைக் குறைபாடு எதனால் ஏற்படுகிறது?

A

விளிம்பு நிலை ஆளுமைக் குறைபாட்டின் சரியான காரணம் இதுவரை தெரியவில்லை. அதே சமயம் பல உயிரியல், உளவியல் மற்றும் சமூகக் காரணிகள் இதனைத் தீர்மானிக்கின்றன என நிபுணர்கள் கணித்துள்ளார்கள். இவற்றை அடிப்படையாகக்கொண்டு ஒருவருக்கு விளிம்பு நிலை ஆளுமைக் குறைபாடு வரக்கூடுமா, இல்லையா என்பதை ஓரளவு கணிக்கலாம்.

இந்தக் குறைபாட்டின் சில அறிகுறிகள் மூளையில் செரோட்டினின் சமநிலையின்மை காரணமாக உண்டாகின்றன என நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள்.

மற்ற ஆளுமைக் குறைபாடுகள் அல்லது மனோநிலைக் குறைபாடுகள் ஒருவருக்கு இருந்தால், அவருக்கு விளிம்பு நிலை ஆளுமைக் குறைபாடு ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகம். ஒருவர் தன்னுடைய குழந்தைப் பருவத்தில் துன்புறுத்தலைச் சந்தித்திருந்தால், அவர் வளர்ந்தபிறகு அவருக்கு ஆளுமைக் குறைபாடு வருவதற்கான வாய்ப்புகள் அதிகரிப்பதாக ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன.

குழந்தைகள் துன்புறுத்தப்படும்போது, தங்களுடைய உணர்ச்சிகளை எப்படிக் கையாள்வது என்பது அவர்களுக்குப் புரிவதில்லை, ஆகவே அவர்கள் வளர்ந்தபிறகும் தாங்கள் யார் என்பதையோ தங்களைச் சுற்றியுள்ள நிகழ்வுகளுக்கு எப்படி எதிர்வினையாற்றுவது என்பதையோ புரிந்துகொள்ளாமலே இருந்துவிடுகிறார்கள் எனச் சில நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள். அதே சமயம் சிறுவயதில் அதிர்ச்சியைச் சந்தித்த எல்லாக் குழந்தைகளுக்கும் விளிம்பு நிலை ஆளுமைக் குறைபாடு வரும் என்று சொல்லிவிட இயலாது.

விளிம்பு நிலை ஆளுமைக் குறைபாடு ஆண்களைவிடப் பெண்களிடம்தான் அதிகம் காணப்படுகிறது.

Q

ஒருவருக்கு விளிம்பு நிலை ஆளுமைக் குறைபாடு வந்திருக்கிறது என்று நான் எப்படித் தெரிந்துகொள்வது?

A

BPD பிரச்னை கொண்டவர்கள் தங்களுடைய உணர்ச்சிகளைக் கையாள இயலாமல், கட்டுப்படுத்த இயலாமல் சிரமப்படுவார்கள். மற்றவர்கள் சர்வசாதாரணமாக நடந்துகொள்கிற சூழல்களில்கூட இவர்கள் மிகுந்த கோபத்தையோ மிகுந்த மகிழ்ச்சியையோ வெளிப்படுத்தலாம். இவர்களுடைய மனோநிலை அடிக்கடி மாறிக்கொண்டே இருக்கும், அதிகம் யோசிக்காமல் சட்டென்று ஒரு தீர்மானத்தை எடுத்துவிடுவார்கள்.

இவர்கள் தங்களோடு பழகுகிறவர்களை மிகுதியாகப் புகழ்வதும் சட்டென்று மிகுதியாக விமர்சிப்பதும் சகஜம். இதனால் இவர்கள் நிலையான உறவுகளை ஏற்படுத்திக்கொள்ள இயலாமல் தவிப்பார்கள்.

மற்ற எல்லா ஆளுமைக் குறைபாடுகளையும் போலவே, BPDயும் ஒருவருடைய வயது வந்த பருவத்தில் தொடர்ந்து தனது அறிகுறிகளை வெளிக்காட்டியபடி இருக்கிறது. இந்த அறிகுறிகள் பலவிதமாக மாறுவதாலும், இவற்றின் தீவிரம் வேறுபடுவதாலும் ஒருவருக்கு BPD வந்திருக்கிறது என அடையாளம் காண்பது பெரிய சவால்தான். இதில் சிக்கல் ஏற்படுவதைத் தவிர்க்க ஒரு பயிற்சி பெற்ற மருத்துவ நிபுணர் மட்டுமே ஒருவருக்கு BPD வந்துள்ளதா இல்லையா எனத் தீர்மானிப்பது நல்லது.

Q

விளிம்பு நிலை ஆளுமைக் குறைபாட்டின் அறிகுறிகள் என்ன?

A

விளிம்பு நிலை ஆளுமைக் குறைபாடு கொண்டவர்களிடையே மிகவும் பொதுவாகக் காணப்படக்கூடிய ஓர் அறிகுறி அவர்களுடைய உணர்வு எழுச்சிதான்; இவர்கள் ஒரு குறிப்பிட்ட உணர்ச்சியை அதீதமாக வெளிப்படுத்துவார்கள், அடுத்த சில மணிநேரங்களுக்குள் அது முற்றிலும் வேறுவிதமான உணர்ச்சியாக மாறிவிடலாம். அவர்களுடைய மனோநிலையும், அவர்கள் நடந்துகொள்ளும்விதமும் யாராலும் கணிக்க இயலாததாக இருக்கும், அடிக்கடி மாறிக்கொண்டே இருக்கும்.

மற்றவர்களுடைய பேச்சு அல்லது செயல்பாடுகளை இவர்கள் தங்களுக்கு எதிரான விமர்சனம் அல்லது தீர்ப்பு எனக் கருதிக்கொள்ளக்கூடும், இதனால் இவர்கள் சோகமடையக்கூடும் அல்லது கோபமாகக்கூடும், தன்னை மற்றவர்கள் நிராகரிக்கிறார்களோ என்று பயப்படக்கூடும்.

வயது வந்த ஒருவருடைய வாழ்க்கையின் பல்வேறு சூழல்களில் வெளிப்படக்கூடிய மற்ற சில விளிம்பு நிலைக் குறைபாட்டு அறிகுறிகள்:

 • குழப்பமான அடையாள உணர்வு, இந்தப் பிரச்னையால் பாதிக்கப்பட்டவர்களுடைய மதிப்பீடுகள், நடந்துகொள்ளும்விதம், நட்புகள், பாலியல் அடையாளம் மற்றும் அவர்கள் தங்களுடைய பணிவாழ்க்கையைத் தேர்வு செய்து போன்றவற்றின் அடிப்படையில் இதைக் காணலாம். தாங்கள் யார், தங்களுக்கு எது பிடிக்கிறது, தாங்கள் எதை நம்புகிறோம் என்பது இவர்களுக்குத் தெளிவாகப் புரியாது, தாங்கள் யாருடன் பழகுகிறோமோ அவர்களை அடிப்படையாக வைத்துத் தங்களுடைய ஆளுமையை இவர்கள் மாற்றிக்கொள்ளக்கூடும்.
 • இவர்களால் எந்த உறவையும் தொடர்ந்து தக்கவைத்துக்கொள்ள இயலாது.
 • தன்னை யாரும் புரிந்து கொள்வதில்லை அல்லது எல்லாரும் தன்னை நிராகரிக்கிறார்கள் என்கிற உணர்வோ வெறுமை உணர்வோ இவர்களிடம் அடிக்கடி காணப்படும், தங்களுடைய அன்புக்குரியவர்கள் தங்களை விட்டுச் சென்றுவிடுவார்களோ என்கிற பயம் இவர்களிடம் மிகுதியாகக் காணப்படும், அதனால் ஓர் உறவைக் 'காப்பாற்றுவதற்காக' இவர்கள் எந்த எல்லைக்கும் செல்வார்கள்.
 • இவர்கள் எதிலும் சட்டென்று தீர்மானம் எடுக்கும் பழக்கத்தைக் கொண்டவர்களாக இருப்பார்கள், அனிச்சையாகச் செயல்படுவார்கள், அதனால் அதிக ஆபத்தான பழக்கவழக்கங்களில் இறங்கிவிடுவார்கள், உதாரணமாக, கன்னாபின்னாவென்று செலவழித்தல், சாகச வேலைகளில் ஈடுபடுதல், கடைகளில் திருடுதல் மற்றும் பாதுகாப்பற்ற முறையில் பாலுறவு கொள்ளுதல் போன்றவை.
 • தங்களுடைய வாழ்க்கையைத் தங்களாலேயே சமாளிக்க இயலாது என்று இவர்கள் உறுதியாக நம்புவார்கள், எப்போதும் தங்களைச் சுற்றி யாராவது இருந்துகொண்டேயிருக்கவேண்டும் என்று நினைப்பார்கள்.
 • இவர்கள் தங்களைச் சுற்றியுள்ள மக்களை நல்லவர்கள் அல்லது கெட்டவர்கள் என்று எளிதில் வகைப்படுத்திவிடுவார்கள், மனிதர்களிடம் நல்லவை, தீயவை இரண்டுமே இருக்கும் என்பதை இவர்களால் புரிந்துகொள்ள இயலாது, தங்களைத் தாங்களே நல்லவர்களாகவும் தீயவர்களாகவும் மாறிமாறி அடையாளம் கண்டுகொள்வார்கள், பிறரையும் அவ்வாறே நினைப்பார்கள்.
 • தங்களைத் தாங்களே காயப்படுத்திக் கொள்ளும் நடவடிக்கைகளில் ஈடுபடுவார்கள் அல்லது தற்கொலைக்கு முயற்சி செய்வார்கள் (விளிம்பு நிலை ஆளுமைக் குறைபாடு கொண்டவர்களில் 15 - 20% பேர் தற்கொலைக்கு முனைகிறார்கள்).
 • மிகவும் அழுத்தமான நேரங்களில் இவர்கள் யாருடனும் பழகாமல் தனிமையில் இருக்கக்கூடும்; தங்களுக்கு அழுத்தம் உண்டாக்கக்கூடிய நிகழ்வுகளிலிருந்து இவர்கள் விலகி இருக்கக்கூடும், ஆனால் பின்னர் அதைப்பற்றிக் கேட்டால் இவர்களுக்கு எதுவுமே தெரிந்திருக்காது.

குறிப்பு: ஒருவருக்கு விளிம்பு நிலை ஆளுமைக் குறைபாடு இருப்பதாகத் தீர்மானிப்பதற்கு, அவருடைய வயதுவந்த பருவம் முழுவதும் இந்த அறிகுறிகள் இருக்கவேண்டும்.

Q

விளிம்பு நிலை ஆளுமைக் குறைபாட்டைக் கண்டறிதல்

A

விளிம்பு நிலை ஆளுமைக் குறைபாட்டைக் கண்டறியக்கூடிய தனிப் பரிசோதனை என்று எதுவுமில்லை. ஒருவருக்கு இந்தப் பிரச்னை இருக்கிறது எனச் சந்தேகிக்கும் நிபுணர் முதலில் சில பரிசோதனைகள் மற்றும் மதிப்பீடுகளை நிகழ்த்துவார், அதன் அடிப்படையில் அவருக்கு ஸ்கிஜோஃப்ரெனியா, போதைப் பொருள்களைப் பயன்படுத்துதல், மனச்சோர்வு, உண்ணுதல் குறைபாடுகள், பதற்றக் குறைபாடுகள் மற்றும் பிற ஆளுமைக் குறைபாடுகள் இல்லை என்பதை உறுதி செய்வார். ஒருவேளை அவர்களுக்கு இந்தக் குறைபாடுகள் இருந்தால், அவர் நடந்துகொள்ளும்விதத்திற்கு இவையே காரணமாக அமையக்கூடும் என்பதால் இந்தக் குறைபாடுகள் அவருக்கு இல்லை என்பதை உறுதிசெய்துகொள்வது அவசியம், அதன்பிறகுதான் அவருக்கு விளிம்பு நிலை ஆளுமைக் குறைபாடு இருக்கிறதா இல்லையா என்பதைப்பற்றிச் சிந்திக்க இயலும்.

அதே சமயம் சில சூழ்நிலைகளில் இந்த மனம் சார்ந்த குறைபாடுகளும், விளிம்பு நிலை ஆளுமைக் குறைபாடும் ஒருவரிடம் இணைந்தே காணப்படலாம், ஆகவே ஒருவருடைய பழக்கவழக்கங்களுக்கு நிஜமான காரணம் என்ன என்று கண்டறிவதற்காக உளவியல் நிபுணர் இந்தப் பரிசோதனைகளை நிகழ்த்துவார்.

ஒருவருக்கு விளிம்பு நிலை ஆளுமைக் குறைபாடு வந்திருக்கிறதா இல்லையா என்று கண்டறிவதற்கு, சம்பந்தப்பட்ட நபருடன் உளவியலாளர் விரிவாகப்பேசுவார், விளிம்பு நிலை ஆளுமைக் குறைபாட்டின் அறிகுறிகளுடன் தொடர்புடைய கேள்விகளைக் கேட்பார், அந்தக் கேள்விகளுக்கு அவர் சொல்கிற பதில்களின் அடிப்படையில்தான் அவருக்கு என்ன பிரச்னை வந்திருக்கக்கூடும் என்பது தீர்மானிக்கப்படும்.

ஒருவருக்கு விளிம்பு நிலை ஆளுமைக் குறைபாடு வந்திருக்கிறது என்பதைத் தீர்மானிப்பதற்கு மேற்சொன்ன அறிகுறிகளில் குறைந்தபட்சம் ஐந்து அறிகுறிகளாவது அவரிடம் இருக்கவேண்டும்.

Q

விளிம்பு நிலை ஆளுமைக் குறைபாடு ஒருவருடைய வாழ்க்கையை எப்படிப் பாதிக்கிறது?

A

விளிம்பு நிலை ஆளுமைக் குறைபாடு கொண்ட ஒருவர் தன்னுடைய நண்பர்கள், குடும்பத்தினர் மற்றும் சக ஊழியர்களுடன் நல்ல, தொடர்ச்சியான உறவைப் பராமரிக்க இயலாமல் சிரமப்படக்கூடும். இதனால் அவர்களுடைய உறவுகள், பணி மற்றும் தினசரி வாழ்க்கை பாதிக்கப்படுகிறது.

இவர்களுடைய அதீதமான பதற்றம் மற்றும் தீவிரமான உணர்வு வெளிப்பாடுகள் காரணமாக, இவர்களால் ஒரு வேலையில் தொடர்ந்து இருக்க இயலாது அல்லது ஒருவருடன் தொடர்ந்து நல்லுறவில் இருக்க இயலாது.

இவர்கள் தங்களுடைய மணிக்கட்டைக் கிழித்துக்கொண்டு அல்லது போதை மருந்துகளை அளவுக்கதிகமாக உட்கொண்டு அல்லது அளவுக்கதிகமாக மது அருந்தி தங்களைத் தாங்களே துன்புறுத்திக்கொள்ளலாம், அல்லது தற்கொலைக்கு முயற்சி செய்யலாம்.

இவர்களுக்கு இருதுருவக் குறைபாடு, மனச்சோர்வு, அனோரெக்ஸியா அல்லது புலிமியா மற்றும் பதற்றம் போன்ற மற்ற மனநலப் பிரச்னைகளும் இருக்கலாம், அவற்றையும் இவர்கள் கையாளவேண்டியிருக்கும்.

Q

விளிம்பு நிலை ஆளுமைக் குறைபாட்டிற்குச் சிகிச்சை பெறுதல்

A

விளிம்பு நிலை ஆளுமைக் குறைபாட்டுக்குச் சிகிச்சை பெறுகிற ஒருவருக்கு மருந்துகள், ஆலோசனைகள் தரப்படும், இவற்றுடன் சுற்றியுள்ளவர்களின் ஆதரவும் இணைந்துதான் அவரைக் குணப்படுத்தும்.

இந்தப் பிரச்னை கொண்டவர்களுக்கு மருத்துவர்கள் இருவிதமான மருந்துகளைப் பரிந்துரைக்கக்கூடும்: மனநிலையை ஒழுங்குபடுத்தும் மருந்துகள் (மனநிலை மாற்றங்களைக் குறைப்பதற்கு) அல்லது ஆன்ட்டி-சைக்கோட்டிக் மருந்துகள் (பிரமைகள் மற்றும் மாயத்தோற்றங்களைக் குறைப்பதற்கு).

இத்துடன், இந்தப் பிரச்னை கொண்டவர்கள் தங்களுடைய உணர்வுகளை, உறவுகளைக் கையாள்வது சிரமமாக இருக்கும் என்பதால், அதுபோன்ற பிரச்னைகளை எப்படிச் சமாளிக்கலாம் என்பதற்கு அவர்களுக்கு ஆலோசனைகளும் வழங்கப்படும்.

விளிம்புநிலை ஆளுமைக் குறைபாடு கொண்டவர்களுக்கு மனச்சோர்வு, பதற்றக் குறைபாடுகள், PTSD, உண்ணுதல் குறைபாடுகள், இருதுருவக் குறைபாடு மற்றும் போதைப் பொருள்களை மிகையாகப் பயன்படுத்துதல் ஆகிய பிரச்னைகளும் வருகிற வாய்ப்பு அதிகம். அதுபோன்ற நேரங்களில் விளிம்பு நிலை ஆளுமைக் குறைபாட்டிற்கான சிகிச்சையுடன் பாதிக்கப்பட்ட நபருக்கு இருக்கக்கூடிய மற்ற மனம் சார்ந்த குறைபாடுகளுக்கும் சிகிச்சை அளிக்கப்படவேண்டும்.

விளிம்பு நிலை ஆளுமைக் குறைபாடு கொண்டவர்கள் தங்களுடைய குறைபாட்டைக் கையாள்வதற்கு உதவக்கூடிய சிகிச்சைகளின் வகைகள்:

 • அறிவாற்றல் செயல்பாட்டுச் சிகிச்சை: இந்தச் சிகிச்சை பாதிக்கப்பட்டவர் தன்னைப்பற்றிக் கொண்டிருக்கிற அடிப்படை நம்பிக்கைகளை மாற்றுவதற்குத் துணைபுரிகிறது. இந்த அடிப்படை நம்பிக்கைகளை மாற்றுவதன்மூலம் பாதிக்கப்பட்டவர் தன்னைப் பற்றிய பார்வையை ஒழுங்காக்கிக் கொள்கிறார், தன்னைப் பிறருடன் சரியாகத் தொடர்புபடுத்திப் பார்க்கத் தொடங்குகிறார்.

 • உரையாடல் செயல்பாட்டுச் சிகிச்சை: இந்தச் சிகிச்சை பாதிக்கப்பட்டவருக்குப் பிரச்னைகளை உண்டாக்கும் எண்ணங்கள் அல்லது நம்பிக்கைகளை அடையாளம் காண முயற்சி செய்கிறது. பாதிக்கப்பட்டவர் தன்னைப் புரிந்துகொள்ளவும், ஏற்றுக்கொள்ளவும் சிகிச்சை வழங்கும் நிபுணர் உதவுவார். அதன்பிறகு பாதிக்கப்பட்டவர் தன்னுடைய வாழ்க்கையில் எப்படிப்பட்ட மாற்றங்களை உண்டாக்கினால் தங்களுடைய நிலை மேம்படும் என்பதை அடையாளம் காண்பார். அதன்படி மாற்றங்களைச் செய்து இந்தப் பிரச்னையிலிருந்து படிப்படியாகக் குணமாவார்.

Q

விளிம்பு நிலை ஆளுமைக் குறைபாட்டுடன் வாழுதல்

A

ஒருவருக்கு விளிம்பு நிலை ஆளுமைக் குறைபாடு இருப்பது கண்டறியப்பட்டால் அவர் மனம் வருந்தவேண்டியதில்லை. மருத்துவப் பராமரிப்பு மற்றும் குடும்பத்தினர், நண்பர்களின் ஆதரவின் மூலம் அவர்கள் ஒரு சிறப்பான வாழ்க்கையை வாழ இயலும்.

அதுபோன்ற சந்தர்ப்பங்களில் விளிம்பு நிலை ஆளுமைக் குறைபாடு கொண்டவர்கள் பின்வரும் உத்திகளைப் பின்பற்றி விரைவில் நலம் பெறலாம்:

 • ஓர் ஆதரவு அமைப்பைக் கண்டறியவேண்டும், இந்தப் பிரச்னை கொண்டவர்கள் தங்களுடைய நண்பர்கள் அல்லது குடும்ப உறுப்பினர்களில் மிகவும் நம்பிக்கைக்குரிய ஒருவரைத் தேர்ந்தெடுத்து அவர்களிடம் தனக்கு இந்தப் பிரச்னை உள்ளதைச் சொல்லவேண்டும், அடுத்தமுறை அவர்கள் மருத்துவரிடம் செல்லும்போது உடன் வருமாறு அவர்களை அழைக்கவேண்டும், அதன்மூலம் கூட இருப்பவர்கள் இவருடைய பிரச்னையைத் தெளிவாகப் புரிந்துகொள்ளத் தொடங்குவார்கள், அது அவரது சிகிச்சையை விரைவாக்கும், எளிதாக்கும்.
 • இந்தப் பிரச்னையால் பாதிக்கப்பட்ட ஒருவர், அழுத்தம் தரும் நிகழ்வுகளுக்கு தான் எப்படி எதிர்வினையாற்றுகிறோம் என்பதே புரியாமல் குழம்ப வாய்ப்பு உண்டு. இவர்கள் தங்களுடைய கணவர்/மனைவி/நண்பர் போன்றோரை உலகத்திலேயே மிகவும் அன்பானவர்கள் என்று நினைக்கலாம், அல்லது மிகவும் மோசமானவர்கள் என்று நினைக்கலாம். சில நேரங்களில் வெறும் விரக்தி காரணமாகவே எதையாவது செய்யவேண்டும் என்று இவர்கள் தூண்டப்படலாம்.
 • அதுபோன்ற நேரங்களில் இவர்கள் தங்களது மருத்துவ நிபுணரிடம் பேசவேண்டும், அதன்மூலம் அவர்கள் அனிச்சையாக எதையாவது செய்து தங்களுக்கோ பிறருக்கோ துன்பத்தைக் கொண்டுவந்துவிடாமல் தடுக்கலாம்.
 • இந்தப் பிரச்னையால் பாதிக்கப்பட்ட ஒருவர் சோர்வாக உணர்ந்தால் அவர் தனக்கு ஆதரவளிக்கக் கூடிய ஒரு நண்பர் அல்லது உறவினரிடம் பேசலாம்.
 • இந்தப் பிரச்னையால் பாதிக்கப்பட்டவர்களுக்குத் தினசரி நடவடிக்கைகளுக்கான கால அட்டவணை அவசியம், இதற்காக அவர்கள் தங்களது மருத்துவரிடம் பேசலாம், நாள் முழுக்க ஏதாவது வேலையில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டு, தன் மனத்துக்குப் பிடித்தவற்றைத் தொடர்ந்து செய்து வந்தால் நிச்சயம் இதிலிருந்து விரைவில் குணமடையலாம்.
 • இந்தக் குறைபாட்டிலிருந்து முழுமையாகக் குணமடைவதற்குச் சிறந்த வழி நிபுணர் சிபாரிசு செய்யும் சிகிச்சையைத் தொடர்ந்து பின்பற்றுவதும், உரிய மருந்துகளை எடுத்துக்கொள்வதும்தான். பாதிக்கப்பட்டவர்கள் இதை எப்போதும் மறந்துவிடக்கூடாது.
 • பாதிக்கப்பட்டவர்கள் சிகிச்சையளிக்கும் நிபுணரைச் சந்திக்கும்போது அவர்களிடம் தங்களுடைய பிரச்னையைப்பற்றி முழுமையாகக் கூறவேண்டும், எதையும் மறைக்கக்கூடாது, சிகிச்சையளிக்கும் நிபுணர் தங்களைப்பற்றி ஏதாவது தவறாக நினைத்துவிடுவாரோ என்று எண்ணவேண்டியதில்லை. அவர்கள் ஒருபோதும் அவ்வாறு செய்யமாட்டார்கள், பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்யவே முயற்சி செய்வார்கள்.
 • விளிம்பு நிலை ஆளுமைக் குறைபாட்டால் பாதிக்கப்பட்ட ஒருவர் தன்னுடைய மனநிலை மாற்றங்கள், பிறருடன் தான் கொண்டிருக்கிற பிரச்னைகள் ஆகியவற்றை எண்ணித் தன்னைத்தானே ஒரு மோசமான மனிதராக நினைத்துக்கொள்ளலாம், அதுபோன்ற நேரங்களில் தாங்கள் இப்படி நடந்துகொள்வது தங்களுடைய பிழையால் அல்ல என்பதை அவர்கள் உணரவேண்டும்.

Q

விளிம்பு நிலை ஆளுமைக் குறைபாடு கொண்ட ஒருவரைக் கவனித்துக்கொள்ளுதல்

A

விளிம்பு நிலை ஆளுமைக் குறைபாடு கொண்ட பலர் சிகிச்சைக்கு ஒப்புக் கொள்வதில்லை, நிபுணரிடம் உதவி பெற மறுக்கிறார்கள். காரணம், தாங்கள் இப்படி நடந்துகொள்வதால் தங்களுக்கும் தங்களுடைய நண்பர்கள், குடும்பத்தினருக்கும் ஏற்படுகிற மன அழுத்தத்தை அவர்கள் உணர்வதே இல்லை.

ஆகவே விளிம்பு நிலை ஆளுமைக் குறைபாட்டால் பாதிக்கப்பட்டவர்களைக் கவனித்துக்கொள்கிறவர்களுக்கு ஒரு பக்கம் மன அழுத்தமும், இன்னொரு பக்கம் இவர் சிகிச்சைக்கு ஒத்துழைக்க மறுக்கிறாரே, தனக்கு உள்ள பிரச்னையை இவர் புரிந்துகொள்ளவில்லையே என்கிற எண்ணமும் மாறிமாறி வருவது இயல்பு. இதனால் விளிம்பு நிலை ஆளுமைக் குறைபாடு கொண்டவர்களைக் கவனித்துக்கொள்கிற பலர் தங்களுக்கு மன அழுத்தம், தங்களால் எதையும் செய்ய இயலவில்லையே என்கிற உணர்வு, எரிச்சல் போன்றவை வருவதாகக் குறிப்பிடுகிறார்கள். தங்களுடைய அன்புக்குரிய ஒருவர் தன்னைத் தானே காயப்படுத்திக்கொள்ள முயற்சி செய்வதையும் தற்கொலைக்கு முயல்வதையும் பார்த்துக்கொண்டு அவர்களால் சும்மாயிருக்க இயலுவதில்லை, அதே சமயம் இந்தப் பிரச்னை தீர்வதற்கு தன்னால் எதுவும் செய்யமுடியவில்லையே என்கிற அழுத்தமும் அவர்களை மிகவும் வருத்துகிறது.

பாதிக்கப்பட்டவர் நடந்துகொள்ளும்விதம் இந்த அழுத்தத்தை மேலும் அதிகமாக்கிவிடுகிறது. அவர்கள் ஒரு கணம் தங்கள் அன்புக்குரியவர்களை மிகவும் நேசிப்பார்கள், அடுத்த கணம் அவர்களைத் தீவிரமாக வெறுப்பார்கள். ஒரு குறிப்பிட்ட நேரத்தில் அவர்கள் எப்படி நடந்துகொள்வார்கள் என்று குடும்ப உறுப்பினர்களாலேயே கண்டறிய இயலாது, அதுபோன்ற நேரங்களில் பாதிக்கப்பட்டவருக்குத் தங்களுடைய ஆதரவும் அரவணைப்பும் எந்த அளவு முக்கியம் என்பதையும் அவர்களால் புரிந்துகொள்ள இயலாது.

விளிம்பு நிலை ஆளுமைக் குறைபாட்டால் பாதிக்கப்பட்டவர்களைக் கவனித்துக்கொள்கிறவர்களுக்கு, தங்களுடைய அன்புக்குரியவரின் குறைபாடுபற்றிய அழுத்தமான குற்ற உணர்ச்சி இருக்கலாம். அதற்கு அவசியமே இல்லை என்பதை அவர்கள் உணரவேண்டும்.

விளிம்பு நிலை ஆளுமைக் குறைபாடு என்பது ஒருவர் குழந்தைப் பருவத்தில் அனுபவித்த துன்புறுத்தல் அல்லது அதிர்ச்சியின் காரணமாக ஏற்படலாம், ஒரு வேளை அவர்களுடைய வம்சத்தில் வேறு யாருக்காவது இந்தக் குறைபாடு வந்திருந்தால், இவர்களும் அதனால் பாதிக்கப்படுகிற வாய்ப்பு அதிகரிக்கும்.

இதனால் பெற்றோர் தங்களுடைய குழந்தைக்கு வந்திருக்கிற பிரச்னைக்குத் தாங்கள்தான் 'பொறுப்பு' என்று நினைக்கலாம், எப்படியாவது இந்தப் பிரச்னையைச் 'சரி செய்துவிடவேண்டும்' என்று துடிக்கலாம்.

விளிம்பு நிலை ஆளுமைக் குறைபாடு கொண்டவர்களைக் கவனித்துக்கொள்கிறவர்கள் முதலில் இந்தப் பிரச்னையைப்பற்றி நன்றாகத் தெரிந்துகொள்ளவேண்டும். காரணம் சமூகத்தில் இந்தப் பிரச்னையைப்பற்றிப் பல தவறான நம்பிக்கைகள் இருக்கின்றன, அவை உண்மையல்ல என்பதை உணர்ந்தால்தான் பாதிக்கப்பட்டவரை இவர்களால் நன்றாகக் கவனித்துக்கொள்ள இயலும்.

உதாரணமாக விளிம்பு நிலை ஆளுமைக் குறைபாடு கொண்டவர்கள் பிறரைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்கிறார்கள்; மற்றவர்கள் தங்களைக் கவனிக்கவேண்டும் என்பதற்காகதான் அவர்கள் தங்களைத் தாங்களே துன்புறுத்திக் கொள்வதுபோல், தற்கொலைக்கு முயற்சி செய்வதுபோல் நடிக்கிறார்கள்; அவர்கள் மிகவும் பிடிவாதம் பிடிக்கிறவர்களாக இருக்கிறார்கள், தங்களுடைய பழக்கவழக்கத்தை மாற்றிக்கொள்கிற எண்ணமே இவர்களுக்கு இல்லை… இப்படிப் பலவிதமாகச் சமூகத்தில் நம்பிக்கைகள் இருக்கின்றன. இவை அனைத்தும் உண்மை என்று எண்ணிவிடக்கூடாது. உங்களுடைய அன்புக்குரியவருக்கு உண்மையில் என்ன பிரச்னை என்பதை நீங்கள் புரிந்துகொண்டால்தான் அதோடு உங்களைத் தொடர்புபடுத்திப் பார்க்க இயலும், அவர்களுக்கு நீங்கள் உதவ இயலும்.

விளிம்பு நிலை ஆளுமைக் குறைபாடு கொண்ட ஒருவரைக் கவனித்துக்கொள்கிறவர்கள், அவருடைய இந்த நிலைக்குத் தான் காரணமில்லை என்பதை முதலில் உணரவேண்டும். அதேபோல் அவர்களுடைய பிரச்னை முழுவதையும் தங்களால் மட்டுமே தீர்த்துவிடஇயலாது என்பதையும் அவர்கள் உணரவேண்டும்.

அதற்குப் பதிலாக, பாதிக்கப்பட்டவர் சிகிச்சை பெறுவதற்கு இவர்கள் உதவலாம், சிகிச்சைத் திட்டத்தை முறைப்படி பின்பற்றுவதற்கு இவர்கள் தங்களால் இயன்றதைச் செய்யலாம்.

விளிம்பு நிலை ஆளுமைக் குறைபாடு கொண்டவர்களைக் கவனித்துக்கொள்கிறவர்கள் புரிந்துகொள்ளவேண்டிய சில விஷயங்கள்: அவர்களுடைய அன்புக்குரியவர்கள் தாங்களாகவே இப்படி நடந்துகொள்ளவில்லை, அவர்களுடைய குறைபாடுதான் அவர்களை இப்படி நடந்துகொள்ளத் தூண்டுகிறது, அதனால்தான் அவர்கள் வினோதமான அல்லது அர்த்தமற்ற முறையில் நடந்துகொள்கிறார்கள்.

இந்தக் குறைபாடு கொண்டவர்கள் ஒரு கணம் உங்களை மிகவும் நேசிப்பார்கள், அடுத்த கணம் உங்களை வெறுப்பார்கள். இதற்குக் காரணம் விளிம்பு நிலை ஆளுமைக் குறைபாடு கொண்டவர்களின் மனத்தில் இந்த இருவிதமான பழக்கவழக்கங்கள் இயல்பாகவே நிகழ்கின்றன, அவற்றைத் தனிப்பட்ட முறையில் எடுத்துக் கொள்ளாதீர்கள், உங்களால் அவர்களைக் கவனித்துக்கொள்ள இயலவில்லையோ என்று எண்ணி வருந்தாதீர்கள்.

பல நேரங்களில், இந்தக் குறைபாட்டால் பாதிக்கப்பட்டவர்களுடன் பேசுவதே ஒரு பெரிய சவாலாக இருக்கக்கூடும். காரணம் அவர்களுடைய மனோநிலை மாறிக்கொண்டே இருக்கும்.

அதுபோன்ற நேரங்களில் எப்போதும் நேரடியாகப் பேசப்பழகுங்கள். தெளிவாக, சிறிய வாக்கியங்களில் பேசுங்கள். அவர்கள் அதைத் தவறாகப் புரிந்துகொண்டுவிட வாய்ப்பளிக்காதீர்கள்.

ஒரு வேளை நீங்கள் சொல்வதை அவர்கள் துல்லியமாகப் புரிந்துகொள்ளவில்லை என்று நீங்கள் நினைத்தால், அதையே மீண்டும் வேறு சொற்களில் தெரிவித்துத் தெளிவுபடுத்துங்கள்.

இந்தப் பிரச்னை கொண்டவர்களுடன் பேசும்போது எப்போதும் உண்மையை மட்டுமே பேசுங்கள், அவர்களைச் சந்தோஷப்படுத்துவதற்காகக் காரணமின்றிப் புகழாதீர்கள், அவர்களுடைய ஆளுமையில், அவர்கள் நடந்துகொள்ளும் விதத்தில் உங்களுக்கு நிஜமாகவே பிடிக்கிற, நீங்கள் பாராட்டுகிற ஒரு விஷயத்தைக் கண்டறிந்து அதைப்பற்றி நேர்மையாக அவர்களிடம் சொல்லிப் பாராட்டுங்கள். இதன் மூலம் அவர்களுடைய சுயமதிப்பு மேம்படும், நீங்கள் அவர்கள் மீது அக்கறை வைத்திருக்கிறீர்கள் என்பதையும் அவர்கள் புரிந்துகொள்வார்கள்.

பாதிக்கப்பட்டவருடைய தினசரி நடவடிக்கைகளில் திடீரென்று பெரிய மாற்றங்கள் எவற்றையும் செய்யவேண்டாம், இதுபோன்ற திடீர் மாற்றங்களுக்கு ஏற்பத் தங்களை மாற்றிக்கொள்ள இயலாமல் அவர்கள் சிரமப்படக்கூடும்.

இதனால் ஏதேனும் ஒரு மாற்றம் வரப்போகிறது என்று உங்களுக்குத் தெரிந்தால், பாதிக்கப்பட்டவர் அதற்குப் படிப்படியாகத் தயாராவதற்கு நீங்கள் உதவுங்கள்.

எல்லைகளை விதித்தல்: விளிம்பு நிலை ஆளுமைக் குறைபாட்டால் பாதிக்கப்பட்டவர்களைக் கவனித்துக்கொள்கிற பெரும்பாலானோர் தங்களுடைய அன்புக்குரியவருக்குத் தங்களால் இயன்றவரை ஆதரவளிக்கவேண்டும் என்று விரும்புகிறார்கள், அதே சமயம் இதற்கான எல்லைகளை வரையறுக்க அவர்களுக்குத் தெரிவதில்லை.

இதனால் சிலர் பாதிக்கப்பட்டவர்கள் சொல்கிற எல்லாவற்றுக்கும் ஒப்புக்கொண்டுவிடுகிறார்கள், ஒருவேளை தாங்கள் எதையாவது மறுத்தால் அவர்கள் தங்களைத் தாங்களே காயப்படுத்திக்கொள்ளத் தொடங்கிவிடுவார்களோ என்று பயப்படுகிறார்கள்.

விளிம்பு நிலை ஆளுமைக் குறைபாடு கொண்டவர்களைக் கவனித்துக்கொள்கிறவர்கள் பாதிக்கப்பட்டவர்களுடைய நடவடிக்கைகள் அனைத்தையும் ஏற்றுக்கொள்ளாமல் அவ்வப்போது 'கூடாது' எனச் சொல்லப் பழகவேண்டும். இதற்கான வரம்புகளைத் தெளிவாக வரையறுக்கவேண்டும்: எந்தெந்தச் செயல்பாடுகளையும் நடவடிக்கைகளையும் நீங்கள் ஏற்றுக்கொள்வீர்கள்? ஒருவேளை அவர்கள் ஆவேசமாகச் செயல்பட்டால் அல்லது வன்முறையில் இறங்கினால் அதை நீங்கள் ஏற்றுக்கொள்வீர்களா? … இதுபோன்ற கேள்விகளுக்கு நீங்கள் பதிலளிக்கவேண்டும்.

ஒரு வேளை, பாதிக்கப்பட்டவர் தீவிர வன்முறையில் ஈடுபட்டால் அந்தச் சூழ்நிலையை எப்படிக் கையாள்வது என உங்களுடைய மருத்துவரிடம் கேளுங்கள், அதுபோன்ற சூழ்நிலைகளைச் சமாளிக்கத் தயாராக இருங்கள்.

விளிம்பு நிலை ஆளுமைக் குறைபாடு கொண்ட ஒருவரை நீங்கள் கவனித்துக்கொள்கிறீர்கள் என்றால், அத்துடன் உங்களை நீங்களே கவனித்துக்கொள்ளவும் வேண்டும். உங்களுக்கென்று சிறிது நேரம் ஒதுக்குங்கள், அந்த நேரத்தில் உங்களுக்கு மிகவும் பிடித்த ஒரு வேலையைச் செய்யுங்கள், உங்களுடைய நண்பர்களுடன் தொடர்ந்து பேசிவாருங்கள், உங்களுக்கு ஏதாவது ஒரு பிரச்னை என்றால் அதை வெளிப்படையாகப் பேசுவதற்கு நம்பிக்கைக்குரிய ஒருவரைத் தேர்ந்தெடுத்து, அவருடன் தொடர்ந்து பேசிவாருங்கள்.

இதுபோன்ற பிரச்னைகளால் பாதிக்கப்பட்டவர்களைக் கவனித்துக்கொள்பவர்களுக்கான ஆதரவுக்குழு ஏதும் உங்கள் பகுதியில் இருந்தால் அதில் இணைந்துகொள்ளுங்கள், அதன்மூலம் நீங்கள் பல விஷயங்களைத் தெரிந்துகொள்ளலாம்.

மிக முக்கியமாக, பாதிக்கப்பட்டவரைக் கவனித்துக்கொள்ளும் இந்தப் பொறுப்பு உங்களுக்கு மிகவும் சுமையாக இருக்கிறது என்று தோன்றினால், அதை எண்ணிக் குற்றவுணர்ச்சி கொள்ளாதீர்கள், கவலைப்படாதீர்கள், அதுபற்றி உங்களுடைய மருத்துவர் அல்லது ஆலோசகரிடம் பேசுங்கள், இதை எப்படிச் சமாளிப்பது என்று சிந்தித்துத் தீர்மானியுங்கள்.

Related Stories

No stories found.
logo
வொய்ட் ஸ்வான் ஃபவுண்டேஷன்
tamil.whiteswanfoundation.org