புலிமியா நெர்வோசா

Q

புலிமியா நெர்வோசா என்றால் என்ன?

A

புலிமியா நெர்வோசா என்பது உண்ணுதல் பழக்கம் தொடர்பான ஒரு குறைபாடு ஆகும். இந்தக் குறைபாடு கொண்டவர்கள் அதிக உணவு வகைகளை அள்ளி அள்ளி உண்பார்கள், அதன் பிறகு அதை எண்ணிக் குற்ற உணர்ச்சி கொண்டு அந்த உணவைத் தங்கள் உடலிலிருந்து வெளியேற்றி விடவேண்டும் என்று துடிப்பார்கள். உதாரணமாக இவர்கள் வாந்தியெடுத்தலின் மூலம் தாங்கள் சாப்பிட்ட உணவை வெளியேகொண்டு வர முயற்சி செய்யலாம், அதீதமாக உடற்பயிற்சி செய்யலாம், மலமிளக்கிகள் போன்றவற்றைப் பயன்படுத்தி உணவை வெளிக்கொண்டு விடவேண்டும் என்று முயற்சி செய்யலாம்.

இந்த வகைக் குறைபாடு கொண்டவர்கள் அவ்வப்போது நிறையச் சாப்பிடுவார்கள், அதே சமயம் அப்படி நிறையச் சாப்பிடுவதை எண்ணி வருத்தமும் கொள்வார்கள். பெரும்பாலான நேரங்களில் இவர்கள் ரகசியமாகதான் சாப்பிடுவார்கள், காரணம் பிறருக்கு தாங்கள் நிறையச் சாப்பிடுவது தெரிந்துவிடுமோ என்று இவர்கள் எண்ணுவார்கள். அதிகமாகச் சாப்பிடும் தங்களுடைய பழக்கத்தை எண்ணி இவர்கள் குற்ற உணர்ச்சியும் வெட்க உணர்ச்சியும் கொள்வார்கள். ஆகவே Purge எனப்படும் சுத்திகரிப்புமுறையில் தாங்கள் சாப்பிட்ட உணவை வெளியேகொண்டு வந்துவிடவேண்டும் என்று முயற்சி செய்வார்கள். இதற்குக் காரணம் இவர்கள் அனுபவிக்கும் குற்ற உணர்ச்சியும், தங்களுடைய உடல் கச்சிதமாக இல்லை என்பதுபற்றி இவர்கள் கொண்டிருக்கிற வருத்தமும், எப்படியாவது ஒல்லியாகிவிடவேண்டும் என்கிற துடிப்பும்தான்.

இதுபோல் தங்களுடைய உடல் கச்சிதமாக இல்லை என்று இவர்கள் நினைக்கும்போது இவர்களுடைய சுய ஆளுமை அடிபடுகிறது, அதனால் சுய மதிப்பு குறைந்து போகிறது. உண்ணும் உணவை எப்படியாவது வெளியேகொண்டு வந்துவிட்டால் மீண்டும் தங்களுடைய வாழ்க்கை தங்களுடைய கட்டுப்பாட்டுக்குள் வந்துவிடும் என்று இவர்கள் எண்ணுகிறார்கள்.

அதாவது தன்னைச் சுற்றியிருக்கும் எல்லா விஷயங்களும் தன்னுடைய கட்டுப்பாட்டைவிட்டுச் சென்று கொண்டிருப்பதாக இவர்கள் உணரும்போது குறைந்தபட்சம் தங்களுடைய உடலையும், தாங்கள் எப்படித் தோன்றுகிறோம் என்பதையுமாவது தாங்களே கட்டுப்படுத்தவேண்டும் என்கிற துடிப்பு இவர்களுக்கு ஏற்படுகிறது. அதனால் இவர்கள் இந்தக் குறைபாட்டுக்கு ஆளாகிறார்கள்.

புலிமியா நெர்வோசாவின் தாக்கங்கள் மிகவும் தீவிரமானவையாக இருக்கக்கூடும். அதே சமயம் சரியான நேரத்தில் சிகிச்சை கொடுத்தால் இவர்கள் கண்டிப்பாகக் குணமாக இயலும். அதன்பிறகு இவர்கள் தங்களைப்பற்றி இயல்பாக உணரத் தொடங்குவார்கள், ஆரோக்கியமான உண்ணும் பழக்கத்தை உண்டாக்கிக் கொள்வார்கள். தங்களுடைய பதற்றம் மற்றும் மன அழுத்தம் ஆகியவற்றை ஆரோக்கியமான வழிகளில் கட்டுப்படுத்தத் தெரிந்து கொள்வார்கள்.

குறிப்பு: சிலர் உணவைச் சௌகரியம் தரும் ஒரு விஷயமாகப் பயன்படுத்துவார்கள். அவர்களுக்கு எப்போதெல்லாம் உள்ளக் கொந்தளிப்பு ஏற்படுகிறதோ அப்போதெல்லாம் அவர்கள் நிறையச் சாப்பிடுவார்கள். அதே சமயம் அவர்கள் இப்படி நிறையச் சாப்பிடுவதால் உடல் எடை கூடிவிடுமோ என்று பயந்து அந்த உணவை வெளியேகொண்டு வர முயற்சிசெய்யமாட்டார்கள். அப்படிப்பட்டவர்களுடைய முக்கிய பிரச்னை அவர்கள் மன அழுத்தத்தில் இருக்கும்போது தாங்கள் எவ்வளவு சாப்பிடுகிறோம் என்பதை அவர்களாலேயே கட்டுப்படுத்திக்கொள்ள இயலாது. இதனை மிகுதியாக உண்ணும் குறைபாடு என்பார்கள். இது புலிமியா நெர்வோசாவிலிருந்து மாறுபட்டது.

Q

புலிமியா நெர்வோசாவின் அறிகுறிகள் என்ன?

A

புலிமியா நெர்வோசாவின் அறிகுறிகள் இருவகைப்படும். பழக்கவழக்கங்களில் தென்படும் அறிகுறிகள் மற்றும் உடலில் தென்படும் அறிகுறிகள்.

பழக்கவழக்கங்களில் தென்படும் புலிமியா நெர்வோசா அறிகுறிகள்:

 • இந்த வகைப் பிரச்னை கொண்டவர்கள் எப்போதும் தங்களுடைய தோற்றம், உருவம் போன்றவற்றைப்பற்றியே எண்ணிக் கொண்டிருப்பார்கள், தங்களுடைய எடை கூடிவிடுமோ என்கிற பயத்திலேயே வாழ்வார்கள்.
 • இவர்கள் வருத்தமாக இருக்கும் போது நிறைய உணவைச் சாப்பிடுவார்கள் (மிகுதியாக உண்ணுதல்)
 • தாங்கள் சாப்பிடுவதைத் தங்களுடைய நண்பர்களோ குடும்ப உறுப்பினர்களோ கவனித்துவிடுவார்களோ என்கிற பயத்தில் இவர்கள் தனியாக, ரகசியமாகதான் சாப்பிடுவார்கள். இந்தப் பிரச்னை கொண்டவர்களில் பெரும்பாலானோர் சாப்பிட்டு முடித்தவுடன் கழிப்பறைக்குச் செல்வார்கள், தாங்கள் சாப்பிட்டதை வெளியேகொண்டு வர முயற்சி செய்வார்கள். இதற்காக அவர்கள் சிரமப்பட்டு வாந்தியெடுக்கக் கூடும் அல்லது மலமிளக்கிகள், சிறுநீர் இறக்கிகள் போன்றவற்றைப் பயன்படுத்தக்கூடும். சிலர் மூலிகை சார்ந்த மருந்துகளைத் தவறாகப் பயன்படுத்தி உடல் எடையைக் குறைக்கவும் முயற்சி செய்யலாம்.
 • இவர்களில் பெரும்பாலானோர் அதீதமாக உடற்பயிற்சி செய்வார்கள், அல்லது எப்போதும் உடற்பயிற்சி செய்யவேண்டும் என்கிற எண்ணத்துடனே இருப்பார்கள். உதாரணமாக வெளியே நன்றாக மழை பெய்தால்கூட இவர்கள் சாலையில் ஓடியாகவேண்டும் என்று பிடிவாதம் பிடிப்பார்கள்.

புலிமியா நெர்வோசாவின் உடல் சார்ந்த அறிகுறிகள்:

 • இவர்களுடைய விரல்களிலும் விரல் இணைப்புகளிலும் வடுக்கள் காணப்படலாம், இந்த வடுக்கள் அடிக்கடி வாய்க்குள் கையைவிட்டு வாந்தி வரவழைக்க முயற்சி செய்வதால் ஏற்படுகின்றன.
 • அடிக்கடி வாந்தி எடுப்பதால் வயிற்றில் இருக்கும் அமிலங்கள் பல்லின்மீது படும், ஆகவே பல்லின் நிறம் கெட்டுப்போகும்.
 • அடிக்கடி வாந்தி எடுப்பதால் தாடையும் கண்ணங்களும் வீங்கிப்போகும்.
 • இவர்கள் அடிக்கடி நிறையச் சாப்பிட்டு, அவற்றை வெளியேற்றிக் கொண்டே இருப்பதால் இவர்களுடைய எடை அடிக்கடி மாறிக்கொண்டே இருக்கும்.

Q

புலிமியா நெர்வோசா எதனால் உண்டாகிறது?

A

புலிமியா இந்தக் காரணத்தால்தான் உண்டாகிறது என்று எதையும் குறிப்பிட்டுச் சொல்ல இயலாது. பொதுவாகப் பல காரணிகள் ஒன்றாகச் சேர்ந்து புலிமியா நெர்வோசாவை உருவாக்குகின்றன. மற்ற பல உண்ணுதல் குறைபாடுகளைப் போலவே புலிமியா நெர்வோசா பிரச்னை கொண்டவர்களும் தங்களுடைய ஆழமான உணர்வுப் பிரச்னைகளைச் சமாளிப்பதற்கு இதுபோன்ற உண்ணும் பழக்கத்தை உண்டாக்கிக் கொள்கிறார்கள்.

புலிமியா நெர்வோசாவிற்கு வழி வகுக்கக்கூடிய சில காரணிகள்:

 • வாழ்க்கையில் அழுத்தம் மிகுந்த நிகழ்வுகள்: இந்தப் பிரச்னை கொண்டவர்களுடைய அன்புக்குரியவர் யாராவது இறந்திருக்கலாம், அவர் வேலையை இழந்திருக்கலாம் அல்லது விவாகரத்துப் பெற்றிருக்கலாம், இதுபோன்ற நேரங்களில் இவர்கள் மனத்தில் ஏற்படும் அழுத்தத்தைச் சமாளிப்பதற்காக நிறையச் சாப்பிடுகிறார்கள், பிறகு தங்களைத் தாங்களே தண்டித்துக்கொண்டு, அந்தச் சாப்பாட்டையெல்லாம் வெளியேகொண்டு வர முயற்சி செய்கிறார்கள்.
 • இவர்களுக்கு ஏற்கனவே அதிர்ச்சி, பாலியல் அல்லது உடல் சார்ந்த வன்முறைச் சம்பவங்கள் ஏற்பட்டிருந்தால் அதனாலும் புலிமியா நெர்வோசா வரக்கூடும்.
 • ஊடகங்களும், அக்கம்பக்கத்தில் உள்ளவர்களும், நண்பர்களும் ஒரு கச்சிதமான உடல் இப்படிதான் இருக்கவேண்டும் என்று தொடர்ந்து சில விஷயங்களை வலியுறுத்திக் கொண்டே இருப்பதால், அப்படிப்பட்ட உடல் இல்லாதவர்களுக்குத் தங்களுடைய உடல் மோசமானது என்கிற எண்ணம் உண்டாகி அது புலிமியா நெர்வோசாவுக்கு வழி வகுக்கலாம்.
 • சில நேரங்களில், சில குறிப்பிட்ட தொழில்களில் உள்ளவர்கள் தங்களுடைய எடை அதிகரித்துவிடுமோ என்கிற பயத்தில் புலிமியா நெர்வோசாவால் பாதிக்கப்படலாம். உதாரணமாக விளம்பர மாடல்கள், நடிகர்கள், விளையாட்டு வீரர்கள் போன்றோர்.
 • சில நேரங்களில் மனச்சோர்வு, பதற்றம் அல்லது பிற உணர்வுப் பிரச்னைகளும் புலிமியாவிற்கு வழிவகுக்கக்கூடும். இதுபோன்ற பிரச்னைகளால் சிலர் மிகுந்த உணர்வு அழுத்தத்திற்கு ஆளாகிறார்கள், தங்களுடைய வாழ்க்கை தங்களுடைய கட்டுப்பாட்டை விட்டு நழுவிக் கொண்டிருக்கிறது என்று உணர்கிறார்கள், ஆகவே நிறையச் சாப்பிட்டுவிடுகிறார்கள். அதன்பிறகு தாங்கள் நிறையச் சாப்பிட்டுவிட்டோமே என்கிற வெட்க உணர்ச்சி இவர்களுக்கு உண்டாகிறது, ஆகவே தங்களுடைய உடலைப் பழையபடி கச்சிதமாக்குவதாக எண்ணிக்கொண்டு அந்த உணவையெல்லாம் வெளியேகொண்டு வர முயற்சி செய்கிறார்கள்.

Q

புலிமியாவிற்குச் சிகிச்சை பெறுதல்

A

புலிமியா ஒரு தீவிரமான பிரச்னைதான். அதே சமயம் சரியான நேரத்தில் நிபுணரின் உதவி பெற்றால் இதனை முமுமையாகக் குணப்படுத்த இயலும்.

புலிமியா பிரச்னை கொண்டவர்களுக்குப் பொதுவாக ஆலோசனைகளும் சிகிச்சைகளும் வழங்கப்படுகின்றன. அவர்கள் தங்களுடைய மன அழுத்தத்தையும் பதற்றத்தையும் எப்படிச் சிறப்பாகக் கட்டுப்படுத்துவது என்று நிபுணர்கள் இவர்களுக்குச் சொல்லித் தருவார்கள். சில நேரங்களில் ஆன்ட்டி டிப்ரசன்ட்ஸ் போன்ற மனச் சோர்வைப் போக்கும் மருந்துகளும் இவர்களுக்கு வழங்கப்படலாம்.

புலிமியா நெர்வோசாவால் ஒருவருடைய உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்தால் அவரைச் சில நாள்கள் மருத்துவமனையில் சேர்க்கவேண்டியிருக்கலாம், நிலைமை ஓரளவு கட்டுக்கு வந்தபிறகு அவர் தன்னுடைய வீட்டிற்குத் திரும்பலாம்.

புலிமியா நெர்வோசா குறைபாடு கொண்ட ஒருவருடைய எடை மிகவும் குறைந்து காணப்பட்டால் அவருக்கு ஆரோக்கியமான உணவுப் பழக்கம், சரியான உடல் எடையைப் பெறுதல் போன்றவற்றைப்பற்றிச் சொல்லித் தருவதற்கு நிபுணர்களின் உதவி தேவை.

சிகிச்சை எந்தவிதமானதாக இருந்தாலும், சிகிச்சை பெறுகிறவர் அதனை மிகவும் கவனமாகப் பின்பற்றுவது அவசியம். எப்போதாவது அவர்களுக்குப் பழையபடி நிறையச் சாப்பிடவேண்டும் என்றோ சாப்பிட்டதை வெளியேற்றவேண்டும் என்றோ தோன்றினால் உடனடியாக அவர்கள் தங்களுடைய மருத்துவரையோ தங்களைக் கவனித்து கொள்கிறவரையோ அணுகி இதுபற்றிப் பேசவேண்டும்.

Q

புலிமியா பிரச்னை கொண்ட ஒருவரைக் கவனித்துக் கொள்ளுதல்

A

புலிமியா நெர்வோசா பிரச்னை கொண்ட ஒருவர் தன்னைப்பற்றி மிகுந்த வெட்க உணர்வு கொண்டிருப்பார். ஆகவே நீங்கள் அவர்களிடம் இதைப்பற்றிப் பேச முயன்றால் அவர்கள் ஒதுங்கிச் செல்லக்கூடும், இதைப்பற்றிப் பேச விரும்பாமல் இருக்கக்கூடும்.

அதற்காக நீங்களும் தயக்கப்பட்டுப் பேசாமல் இருந்துவிடாதீர்கள். புலிமியா நெர்வோசா ஒருவருக்கு உடல் ரீதியிலும் உணர்வு ரீதியிலும் மிகுந்த சேதத்தை உண்டாக்குகிறது. ஆகவே உங்கள் அன்புக்குரியவருக்கு இந்தப் பிரச்னை இருக்கிறது என்று தெரிந்தால் நீங்கள் அவரை அரவணைத்துச் செல்லவேண்டும், இதுபற்றிப் பேசுவதுதான் நல்லது, நிபுணரின் உதவியைப் பெறுவதுதான் நல்லது, சிகிச்சை பெறுவதுதான் நல்லது என்று அவருக்கு எடுத்துச் சொல்லவேண்டும். அவர்கள் ஆரம்பத்தில் கொஞ்சம் தயங்கலாம், ஆனால் நீங்கள் பொறுமையோடு செயல்பட்டால் கண்டிப்பாக அவர்கள் சிகிச்சைக்கு ஒப்புக் கொள்வார்கள், முழுமையாகக் குணமாவார்கள்.

அதே சமயம் புலிமியா பிரச்னை கொண்ட ஒருவரை மிகவும் வற்புறுத்தாதீர்கள், அவர்களைப் பயமுறுத்த முயற்சி செய்யாதீர்கள். உதாரணமாக இந்தக் குறைபாட்டினால் ஏற்படக்கூடிய மோசமான விளைவுகளைப்பற்றி அவர்களிடம் சொல்லி மிரட்டினால் அது நேர்விதமான பலன்களைத் தராது. முறையான சிகிச்சைக்காக அவரை நிபுணரிடம் அழைத்துச் செல்வதே நல்லது.

அவர் சிகிச்சை பெறும்போது அவரைச் சுற்றியுள்ள அனைவரும் ஆரோக்கியமான உணவுப் பழக்கத்தைப் பின்பற்றவேண்டும், எடை, உடல் தோற்றம் போன்றவற்றைப்பற்றிப் பேசாமல் இருக்கவேண்டும். அப்போதுதான் அவர்கள் விரைவில் குணமாவார்கள்.

உங்களுடைய அன்புக்குரியவருக்கு இந்தப் பிரச்னை இருக்கிறது என்றால் அவர்கள் தங்களுடைய சிகிச்சைத் திட்டத்தைப் பின்பற்றுவதற்கு உங்களாலான உதவியைச் செய்யுங்கள், அவர்கள் பலவீனமாகத் தளர்ந்து காணப்படும் இந்த நேரத்தில் நீங்கள்தான் அவர்களுக்கு முழு ஆதரவு தரவேண்டும்.

Q

புலிமியாவைச் சமாளித்தல்

A

புலிமியா நெர்வோசா என்பது ஒருவருக்கு மிகுந்த மன அழுத்தம் தரக்கூடிய அனுபவம். இதனால் பாதிக்கப்பட்டவர்கள் சந்திக்கிற உணர்வு நிலை அழுத்தம், அவர்கள் தங்களுடைய உடலைத் தாங்களே தண்டித்துக் கொள்ளுதல் போன்றவற்றால் அவர்களுடைய ஒட்டுமொத்த வாழ்க்கையும் கலங்கிக் காணப்படலாம்.

அதே சமயம் அவர்கள் இதை எண்ணி மிகவும் வருந்தவேண்டியதில்லை, காரணம் இந்தக் குறைபாட்டை முழுமையாகக் குணப்படுத்திவிடலாம்.

புலிமியா நெர்வோசாவிலிருந்து குணமாவதற்கு முதல்படி, தனக்குப் பிரச்னை உள்ளது என்பதை ஒருவர் ஒப்புக்கொள்வது, அதனைச் சரிசெய்வதற்காக நிபுணர்களின் உதவியை நாடுவது.

இந்தப் பிரச்னைக்கான சிகிச்சை நீண்ட நாள் தொடரலாம், அப்போது பாதிக்கப்பட்டவருக்குப் பொறுமையும் விடாமுயற்சியும் அவசியம். நிபுணர் தருகிற சிகிச்சைத் திட்டம் மற்றும் ஆரோக்கியமான உணவுத் திட்டம் ஆகியவற்றை அவர் கவனமாகப் பின்பற்றவேண்டும், எப்போதாவது நிறையச் சாப்பிடவேண்டும் என்று தோன்றினாலோ, சாப்பிட்டதை வெளியேற்றவேண்டும் என்று தோன்றினாலோ உடனடியாகத் தங்கள் அன்புக்குரிய யாரிடமாவது சென்று பேசவேண்டும். அல்லது இதுபோன்ற உணர்வு அழுத்தங்களைச் சமாளிப்பதற்கு வேறு வழிமுறைகளைக் கண்டறியவேண்டும். உதாரணமாக சிறிது தூரம் ஓடித் திரும்புவது, நண்பர்களுடன் பேசுவது, குடும்ப உறுப்பினர்களுடன் நேரம் செலவிடுவது போன்றவை.

Related Stories

No stories found.
வொய்ட் ஸ்வான் ஃபவுண்டேஷன்
tamil.whiteswanfoundation.org