க்ளஸ்ட்ரோஃபோபியா என்றால் என்ன?

க்ளஸ்ட்ரோஃபோபியா என்றால் என்ன?

முகுல், ஒரு முன்னணி முதலீட்டு வங்கியில் உயர் நிலையிலிருக்கும் அலுவலர். 10வது மாடியிலிருக்கும் அவருடைய மூலை அலுவலகம், அவருடைய சாதனைகளுக்கான ஒரு பரிசு. அதேசமயம், அவருடைய சக ஊழியர்கள் அதைப்பற்றி அபூர்வமாகதான் பேசுவார்கள். அவர்கள் பேச விரும்புகிற பிரச்னை, “நம் அலுவலகத்தில் எட்டு லிஃப்ட்கள் உள்ளன; ஆனால், முகுல் மாடிப்படியில் ஏறிச் செல்கிறாரே, ஏன்?" அவருடைய சக ஊழியர்கள் இதற்குப் பலவிதமான காரணங்களைக் கண்டறிந்தார்கள்; அவற்றில் சில, நம்பக்கூடியவை, வேறு சில, நகைச்சுவையானவை: “அவர் தன்னுடைய உடலைக் கட்டுக்குள் வைத்துக்கொள்ள விரும்புகிறார்…”, “மேலே நடந்துசெல்லும்போது சிந்திப்பதற்கு அவருக்கு நேரம் கிடைக்கிறது…” மற்றும் “வெற்றி ஏணியில் மேல்நோக்கிய அவருடைய பயணத்தை அது அவருக்கு நினைவுபடுத்துகிறது…” இப்படிப் பேசுகிற யாருக்கும் முகுல் ஏன் இப்படிச் செய்கிறார் என்று அவரிடம் கேட்கும் அக்கறை இல்லை, சில நாட்களுக்குமுன்புவரை. ஓர் இரவில், ஒரு பரிமாற்றத்தை நிறைவுசெய்துவிட்டு முகேஷும் அவருடைய சக ஊழியர்களும் தாமதமாக வீட்டுக்குக் கிளம்பினார்கள்; அவர்கள் லிஃப்டை நெருங்கியபோது, முகுல் பேச்சைப் பாதியில் நிறுத்திவிட்டு அவர்களிடமிருந்து விலகிவிட்டார். ‘லிஃப்டில் வாருங்கள்’ என்று அவர்களில் ஒருவர் கேட்டபோது, முகுல் தோள்களைக் குலுக்கினார்; படிகளில் விரைவாக இறங்கத்தொடங்கினார். இந்த மாறுபட்ட நடவடிக்கையைப் பார்த்துக் குறுகுறுப்படைந்த அவருடைய சக ஊழியர்கள், அனைவரும் கீழே வந்ததும் அவரிடம் இந்தப் பிரச்னையைப்பற்றிப் பேசத் தீர்மானித்தார்கள். அப்போதுதான் முகுல் அவர்களிடம் உண்மையைச் சொன்னார், ‘எனக்கு மூடிய இடங்களைக் கண்டால் ஒரு தீவிரமான அச்சம் வரும்.'

க்ளஸ்ட்ரோஃபோபியா என்பது, மூடப்பட்ட இடங்களிலிருந்து தன்னால் தப்பவே இயலாது என்று ஒருவர் நம்புகிற, பகுத்தறிவுக்குப் பொருந்தாத அச்சமாகும். க்ளஸ்ட்ரோஃபோபியாவால் பாதிக்கப்பட்ட ஒருவர் இதுபோன்ற சூழல்களில் சிக்கிக்கொண்டால், மிதமான பதற்றத்தைச் சந்திக்கலாம், தீவிரமான அச்சத் தாக்குதல்களைக்கூடச் சந்திக்கலாம். அவர்கள் சந்திக்கக்கூடிய பிற அனுபவங்கள் சில:

 • நடுக்கம் அல்லது உடல் நடுங்குதல்; குளிர்தல்

 • மூச்சுத்திணறல் மற்றும் நெஞ்சைச் சுற்றிய பகுதி இறுகுதல்

 • இதயத்துடிப்பு விரைவாதல்

 • தொண்டை அடைப்பதுபோன்ற உணர்வுகள்

 • குமட்டல்

 • மயக்கவுணர்வு

சில நேரங்களில், இப்படிப்பட்ட ஒரு சூழலில் இருப்பதுபற்றி எண்ணுவதே அச்ச அறிகுறிகளைத் தூண்டலாம். க்ளஸ்ட்ரோஃபோபியா கொண்டவர்கள் தவிர்க்கிற சில பொதுவான சூழ்நிலைகள்:

 • லிஃப்ட்கள்/மின் ஏணிகள்

 • சிறு அறைகள்

 • பொதுக் கழிப்பறைகள்

 • சுரங்கப்பாதைகள்/தரையடிப்பாதைகள்

 • அதிகக் கூட்டமுள்ள ஒரு பகுதியில் சிக்கிக்கொள்ளுதல்

இந்தச் சூழல்களைத் தவிர்ப்பதற்காக, க்ளஸ்ட்ரோஃபோபியா கொண்டவர்கள் இந்தப் பழக்கவழக்கங்களைப் பின்பற்றுகிறார்கள்:

 • லிஃப்டுக்குப் பதிலாக அவர்கள் படிக்கட்டுகளைப் பயன்படுத்துகிறார்கள், பல மாடிகள் ஏறவேண்டியிருந்தாலும் சரி.

 • ஓர் அறைமுழுவதும் மனிதர்கள் இருக்கிற சூழலில், அவர்கள் வெளியேறும் இடத்துக்கு அருகில் நின்றுகொள்ள முயல்கிறார்கள்.

 • பரபரப்பான நேரத்தில் பயணம் செய்வதைத் தவிர்க்கிறார்கள்

 • அவர்கள் ஓர் அறையில் இருக்கும்போது, கதவை மூடவேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறார்கள்.

காரணங்கள்

பெரும்பாலான மற்ற ‘ஃபோபியா’க்களைப்போலவே, க்ளஸ்ட்ரோஃபோபியாவும் பொதுவாக ஒருவருடைய குழந்தைப்பருவத்தில் நிகழ்ந்த ஓர் அதிர்ச்சியான அனுபவத்தின் விளைவாகும். க்ளஸ்ட்ரோஃபோபியா கொண்டவர்கள் இதுபோன்ற அனுபவங்களைச் சந்தித்திருக்கலாம்:

 • ஒரு கூட்டத்தில் பெற்றோரிடமிருந்து நெடுநேரம் பிரிந்திருக்கலாம்.

 • நீரில் விழுந்து, நீந்தத் தெரியாமல் தடுமாறியிருக்கலாம்

 • சாக்கடை அல்லது ஆழமான வடிகாலொன்றில் விழுந்து, அங்கு சிறிது நேரம் சிக்கியிருந்திருக்கலாம்.

அதேசமயம், பிற உயிரியல் மற்றும் மரபியல் காரணங்களாலும் ஒருவருக்குக் க்ளஸ்ட்ரோஃபோபியா வரலாம்.

சிகிச்சை

க்ளஸ்ட்ரோஃபோபியாவுக்கான சிகிச்சை முதன்மையாகப் பேச்சுச்சிகிச்சை அடிப்படையிலானது, பதற்ற அறிகுறிகளைக் கையாள்வதற்கு மருந்துகள் பரிந்துரைக்கப்படலாம். பொதுவாக, க்ளஸ்ட்ரோஃபோபியாவுக்குச் சிகிச்சையளிக்க அறிவாற்றல் பழகுமுறைச் சிகிச்சை (CBT) பயன்படுத்தப்படுகிறது, இதன் ஒரு பகுதியாக, அவருக்கு அச்சத்தைத் தூண்டும் சூழ்நிலைகளை வேண்டுமென்றே சந்திக்கச்செய்வதும் நிகழலாம். 

எங்களுடைய தளத்தில் பதிவுசெய்யப்பட்டுள்ளவற்றைத்தவிர இன்னொரு ‘ஃபோபியா’வைச் சந்தித்துள்ளவர்கள் தங்களுடைய கதையைப் பகிர்ந்துகொள்ள விரும்புவோர், இங்கு க்ளிக் செய்யலாம்.

logo
வொய்ட் ஸ்வான் ஃபவுண்டேஷன்
tamil.whiteswanfoundation.org