நம்பிக்கைகள் தீர்ந்த கணம்

மனச் சோர்வு என்பது ஒரு மன நிலைக் குறைபாடு, இதனைக் கையாண்டு, குணப்படுத்தலாம்

கிருத்தி மேத்தா அகமதாபாத்தை சேர்ந்த திறமையுள்ள, லட்சியத்தில் ஆர்வமுள்ள புத்திசாலிப் பெண். அவருடைய வயது 18. அவர் பள்ளிப்படிப்பைப் பூர்த்தி செய்துவிட்டு பெங்களூரில் உளவியல் மற்றும் இலக்கியம் படிப்பதற்காக ஒரு கல்லூரியில் சேர்ந்தார். கிருத்தி மேத்தாவின் தாய் இரண்டு ஆண்டுகளுக்கு முன் தன் கணவரிடமிருந்து சட்டப்படி விவாகரத்துப் பெற்றவர். இப்போது அவர் தனது மகளைத் தனியே வளர்த்து வருகிறார். கிருத்தி மேத்தா தனது தாயிடமிருந்து பிரிந்து தனியே வாழ்வது இதுதான் முதல் முறை.

கிருத்தி பள்ளியில் படித்தபோதிலிருந்தே அவருடைய தந்தையும் தாயும் அடிக்கடி சண்டை போட்டுக்கொள்வார்கள், அதைப் பார்த்தபடியே அவர் வளர்ந்தார். 'நான் என்னுடைய தந்தையை வெறுக்கிறேன். ஒரு தந்தை என்பவர் தன் குழந்தையை நேசிக்கவேண்டும், பாதுகாக்கவேண்டும். ஆனால் என் தந்தைக்கு என் மீது அக்கறையே கிடையாது, அவருக்கு இதயமே கிடையாது. அவரை நான் மறுபடி எப்போதும் பார்க்க விரும்பவில்லை'என்கிறார் கிருத்தி, அவருடைய மனத்தில் இருக்கும் வலி அந்தச் சொற்களில் வெளிப்படுகிறது.

கிருத்தி தன் குடும்பத்தில் பலவிதமான உணர்வு மாற்றங்களைச் சந்தித்திருக்கிறார். ஆனால், அவர் பெங்களூரில் ஒரு புதிய மற்றும் மகிழ்ச்சிகரமான வாழ்க்கையைத் தொடங்கியபோது இவை எதுவுமே ஒரு பெரிய விஷயமாகத் தோன்றவில்லை. 'ஆரம்பத்தில் என்னுடைய கனவு வாழ்க்கை கிடைத்துவிட்டது என்றுதான் நினைத்தேன்' என்கிறார் கிருத்தி, 'இதுவரை கஷ்டப்பட்டு வந்த நான், இப்போது வேறோர் இடத்தில் இருக்கிறேன், இனி நான் மகிழ்ச்சியாக வாழலாம். கல்லூரியில் சேர்ந்த முதல் வாரத்திலேயே எனக்குப் பல நண்பர்கள் கிடைத்தார்கள். ஆனால், இந்த மகிழ்ச்சி நீண்டநாள் நீடிக்கவில்லை.'

கிருத்தியின் அறைத் தோழிகளும் நண்பர்களும் தாங்கள் செல்லும் விருந்துகளுக்கெல்லாம் அவரும் வரவேண்டும் என்று வற்புறுத்துவார்கள். ஆனால் கிருத்திக்குத் தான் அழகாக தோற்றமளிக்கவில்லை என்ற எண்ணம். ஆகவே அவர் பிறருடன் கலந்து பழகத் தயங்கினார். தன்னைப்பற்றி ஒரு பாதுகாப்பற்ற உணர்வை அவர் கொண்டிருந்தார்.

இதுபற்றி கிருத்தியின் தாயிடம் கேட்டபோது 'சின்ன வயதிலிருந்தே கிருத்தியின் எடை கொஞ்சம் அதிகம்தான்' என்கிறார், 'ஆனால், அவள் கல்லூரிக்குச் செல்லும்வரை அதை ஒரு பெரிய பிரச்னையாகவே நினைக்கவில்லை.'

திடீரென்று கிருத்தி வழக்கமாகச் சாப்பிடுவதைவிட அதிகமாகச் சாப்பிட ஆரம்பித்தார், 'குறிப்பாக, அவள் இனிப்புகளை நிறையச் சாப்பிட்டாள்' என்கிறார் கிருத்தியின் அறைத் தோழி அனு. 'அவள் வகுப்புகளுக்கு செல்வதையும் தவிர்க்கத்தொடங்கினாள், தினமும் மதிய உணவு நேரம்வரை தூங்க ஆரம்பித்தாள்.'

கிருத்தியைப் பொறுத்தவரை, எடைப் பிரச்னையைவிடச் சிக்கலான பல பிரச்னைகளை அவர் கையாண்டிருக்கிறார், ஆனால் அவர் நாள்முழுக்கத் தன்னுடைய எடையைப்பற்றியே கவலைப்பட்டுக்கொண்டிருந்தார். 'நான் எப்படித் தோன்றுகிறேன், என்னுடைய எடை எந்த அளவு அதிகமாக இருக்கிறது என்பதுபற்றி நான் தீவிரமாகச் சிந்திக்க ஆரம்பித்தேன், நண்பர்களுடன் வெளியே செல்வது என்றால் எனக்கு மிகவும் பிடிக்கும், ஆனால் இப்போதெல்லாம் நான் அப்படிச் செல்வதே இல்லை, காரணம் நான் அசிங்கமாக இருக்கிறேன் என்று எனக்கு உறுதியாகத் தோன்றியது, பையன்கள் என்னைப் பார்க்கவே மாட்டார்கள் என்று நினைத்தேன், என்னை யாரும் காதலிக்க மாட்டார்கள் என்று நினைத்தேன். நான் காதலுக்குத் தகுதியானவள் இல்லை என்று நம்பினேன், யாருடைய காதலும் எனக்குக் கிடைக்காது என்று நினைத்தேன். இதனால் நான் எதற்கும், யாருக்கும் பயனில்லாமல் வாழ்வதாக உணரத்தொடங்கினேன். எதுவும் எனக்குச் சந்தோஷம் தரவில்லை, நான் எப்போதும் வருத்தத்திலேயே இருந்தேன். என்னால் இந்த உணர்விலிருந்து வெளியே வரவே இயலவில்லை, முடிவற்ற துயரக் குழியில் சிக்கிக் கிடப்பதைப்போல நான் உணர்ந்தேன். உளவியல்தான் என் கனவுத் துறை, அதில் சிறப்பாகப் பணியாற்றவேண்டும் என்று முன்பு நினைத்துக்கொண்டிருந்தேன். ஆனால் இப்போது, எனக்கு அதில் ஆர்வம் போய்விட்டது. செமஸ்டர் தேர்வுகளில் மிகவும் மோசமாக மதிப்பெண் வாங்கினேன். காரணம், என்னால் படிப்பில் கவனம் செலுத்தவே இயலவில்லை' என்கிறார் கிருத்தி. எந்தக் காரணமும் இல்லாமல் அடிக்கடி திடீரென்று தான் அழத்தொடங்கியதாகவும், தான் பலவீனமானவர், எல்லாமே தன் கட்டுப்பாட்டிலிருந்து விலகிச் சென்றுகொண்டிருக்கிறது என்று நினைப்பதாகவும் அவர் சொன்னார்.

'கிருத்தி ஒருநாள் விட்டு ஒருநாள் என்னை அழைப்பாள். அப்போதெல்லாம் அவள் மிகவும் சோர்வாகவும் களைப்பாகவும் பேசுவாள்' என்கிறார் கிருத்தியின் தாய், 'திடீரென்று அவள் அழ ஆரம்பித்துவிடுவாள், தலைவலியும் முதுகுவலியும் தாங்கமுடியவில்லை என்பாள்.'

ஒருமுறை கிருத்தி அனுவிடம் 'எனக்கு வாழ்க்கைமீது சலிப்பு வந்துவிட்டது, இந்த உயிரில்லாத, வெறுமையான, ஒரே மாதிரியான வாழ்க்கையை இனிமேலும் நான் வாழத்தான் வேண்டுமா?' என்று சொன்னார். அப்போதுதான் அனுவுக்கு இது பெரிய பிரச்னை என்று புரிந்தது, கிருத்தியின் தாயிடம் அவருடைய மன நிலையைப்பற்றித் தெரிவித்தார்.

'என் தாய் என்னை ஓர் உளவியல் நிபுணரிடம் அழைத்து சென்றார். அந்த நிபுணர் எனக்கு மனச் சோர்வுப் பிரச்னை இருப்பதைக் கண்டறிந்தார்' என்கிறார் கிருத்தி. அந்த உளவியல் நிபுணர் கிருத்தியிடம் 'இது ஒரு பொதுவான மன நலப் பிரச்னைதான், ஆனால் இதைச் சாதாரணமாக எடுத்துக்கொள்ளக்கூடாது, இது ஒரு தீவிரமான பிரச்னை, இதனைப் பலவீனமாக நினைக்கவேண்டியதில்லை' என்றார்.

மனச் சோர்வு என்பது ஒரு குணப்படுத்தக்கூடிய, கையாளக்கூடிய மன நிலைக் குறைபாடு. மனச் சோர்வின் ஆரம்ப நிலையில் உள்ளவர்களை உளவியல் சிகிச்சையின்மூலம் குணப்படுத்திவிடலாம். ஆனால், சில தீவிரப் பிரச்னைகளுக்கு மருந்துகளும் உளவியல் சிகிச்சைகளும் தேவைப்படும் உதாரணமாக பசியில்லை, தூக்கமில்லை என்று சொல்கிறவர்கள், மிகவும் எதிர்மறையான அல்லது தற்கொலை எண்ணங்களைக் கொண்டிருப்பவர்கள் போன்றோர்.

மனச் சோர்வின் சில பொதுவான அறிகுறிகள்: பெரும்பாலான நேரங்களில் சோகமாகவும் வெறுமையாகவும் உணர்தல், முன்பு அனுபவித்துச் செய்த வேலைகளில் இப்போது ஆர்வமில்லாமல் இருத்தல், தன்னை மதிப்பற்றவராக உணர்தல், குற்ற உணர்ச்சியோடு இருத்தல், அடிக்கடி அழுதல், தூக்கமில்லாமல் இருத்தல்/நிறைய தூங்குதல், நிறைய சாப்பிடுதல், பசியின்றி இருத்தல் மற்றும் தற்கொலையைப்பற்றி நினைத்தல்.

இந்தத் தீவிரச் சோக உணர்வு உங்களுடைய உறவுகளையும் பணிகளையும் பாதிக்கத் தொடங்கும்போது நீங்கள் ஒரு நிபுணரைச் சந்தித்து ஆலோசனை பெறுவது நல்லது. மிகவும் மன உறுதி கொண்டவர்களையும் மனச் சோர்வு பாதிக்கும். தன்னிடம் ஏதோ ஒரு பிரச்னை உள்ளதை ஏற்றுக்கொண்டு, அதைச் சரிசெய்ய நினைப்பதே நீங்கள் வலுவானவர் என்பதைக் காட்டுகிறது, நீங்கள் போராடி வெல்லத் தயாராக இருக்கிறீர்கள் என்பதைச் சொல்கிறது. உங்களுக்கு ஏதாவது ஒரு மன நலப் பிரச்னை இருப்பதாக நீங்கள் நினைத்தால், தயவுசெய்து அதை உங்களுடைய நெருங்கிய நண்பர் அல்லது குடும்ப உறுப்பினர் ஒருவருடன் விவாதியுங்கள், ஒரு மன நல நிபுணரைச் சந்தித்து ஆலோசனை பெறுங்கள்.

இந்தப் பிரச்னை கொண்ட பல நபர்களிடம் காணப்பட்ட அறிகுறிகள், அவர்களுடைய அனுபவங்களைக் கருத்தில் கொண்டு, மனநல நிபுணர்களின் உதவியுடன் இந்த விவரிப்பு உருவாக்கப்பட்டது. இது ஒரு குறிப்பிட்ட நபரின் உண்மை அனுபவம் அல்ல, இந்தப் பிரச்னை கொண்ட ஒருவருடைய நிலையைப் புரியவைக்கும் நோக்கத்துடன் இந்த விவரிப்பு உருவாக்கப்பட்டிருக்கிறது.

Related Stories

No stories found.
logo
வொய்ட் ஸ்வான் ஃபவுண்டேஷன்
tamil.whiteswanfoundation.org