குறைபாடுகள்

சித்தப்பிரமை

வொய்ட் ஸ்வான் ஃபவுண்டேஷன்

Q

சித்தப்பிரமை என்றால் என்ன?

A

சித்தப்பிரமை என்பது ஒரு தாற்காலிகமான, ஆனால் உயிருக்கே ஆபத்து விளைவிக்கக் கூடிய தீவிரமான நிலை ஆகும். இந்த நிலையில் உள்ளவர்களுடைய மனத்தின் நிலைத்தன்மையில் மற்றும் தெளிவில் தீவிரமான மாறுபாடுகள் ஏற்படும், இதனால் அவர்கள் தங்களைச் சூழ்ந்து இருக்கிற விஷயங்கள் என்னவென்றே புரியாமல் தடுமாறுவார்கள், சிந்திக்க இயலாமல் குழப்பமடைவார்கள். சித்தப்பிரமை என்பது பொதுவாகத் திடீரென்று ஏற்படுகிறது, இதனால் பாதிக்கப்பட்டவர்களிடம் சில மணி நேரங்களுக்குள் அல்லது சில நாள்களுக்குள் குறிப்பிடத்தக்க வித்தியாசங்களைக் காணலாம்.

Q

டிமென்சியாவுக்கும் சித்தப்பிரமைக்கும் என்ன வித்தியாசம்?

A

சித்தப்பிரமைக்கும் டிமென்சியாவுக்கும் ஒரே மாதிரியான அறிகுறிகள் இருப்பதாலும், இந்த இரண்டு பிரச்னைகளும் ஒருவருக்கு ஒரே நேரத்தில் வரக்கூடும் என்பதாலும் இவற்றின் இடையேயுள்ள வித்தியாசத்தைத் தெரிந்து கொள்வது முக்கியம்.

சித்தப்பிரமை என்பது ஒரு தாற்காலிகமான நிலை, இது திடீரென்று தொடங்குகிறது, இதனால் பாதிக்கப்பட்டவருக்கு மாயத் தோற்றங்கள் உருவாகலாம், இதற்கான அறிகுறிகள் காலப்போக்கில் மேம்படலாம் அல்லது மோசமாகலாம், இந்த பிரச்னை சில மணிநேரங்கள் தொடங்கி சில வாரங்கள் வரை நீடிக்கலாம்.

டிமென்சியா என்பது படிப்படியாகப் பெரிதாகக் கூடிய நரம்புச் சிதைவுக் குறைபாடு. இது மெதுவாக வளர்கிறது, காலப்போக்கில் மூளையின் செல்கள் சிதைவடைகின்றன, ஒரு கட்டத்தில் பாதிக்கப்பட்டவர் மரணத்தைச் சந்திக்க வேண்டியுள்ளது. டிமென்சியாவால் மாயத் தோற்றங்கள் உருவாவதில்லை.

Q

சித்தப்பிரமைக்கான அறிகுறிகள் என்ன?

A

சித்தப்பிரமைக்கான அடையாளங்களும் அறிகுறிகளும் சில மணிநேரங்களில் அல்லது நாள்களில் தோன்றலாம். இந்த காலக் கட்டத்தில் பாதிக்கப்பட்ட நபருடைய மனத்தின் நிலைத் தன்மையில் ஒரு தடுமாற்றம் காணப்படும். சில நேரங்களில் அவர்களிடம் இதற்கான அறிகுறிகள் காணப்படலாம், மற்ற நேரங்களில் அவர்கள் சாதாரணமாக இருக்கலாம்.

இந்த பிரச்னைக்கான முக்கிய அடையாளங்கள் மற்றும் அறிகுறிகள்:

சூழலைப் பற்றிய விழிப்புணர்வு குறைதல்

 • முக்கியமல்லாத விஷயங்களால் எளிதில் கவனம் சிதறுதல்
 • ஒரு குறிப்பிட்ட தலைப்பில் கவனம் செலுத்த இயலாமல் இருத்தல்
 • எதிலும் ஆர்வமில்லாமல் இருத்தல் அல்லது தன்னைச் சுற்றி நிகழும் விஷயங்களுக்குப் போதுமான அளவில் எதிர்வினை ஆற்றாமல், எதையும் கண்டுகொள்ளாமல்  இருத்தல்
 • உரையாடலின் போது, அல்லது யாராவது இவர்களிடம் ஏதேனும் கேள்விகளைக் கேட்டால் பதில் பேச இயலாமல்  இருத்தல்

மோசமான சிந்தனைத் திறன்கள் (அறிவாற்றல் குறைபாடு)

 • மோசமான ஞாபக சக்தி, குறிப்பாகச் சமீபத்திய நிகழ்வுகளை விரைவில் மறந்துவிடுதல்
 • ஒழுங்கின்மை, தான் எங்கே இருக்கிறோம் என்பதையோ, தான் யார் என்பதையோ அறியாமல் இருத்தல்
 • இப்போது என்ன நேரம், இன்றைக்கு என்ன நாள் போன்றவற்றை உணரும் ஆற்றல் குறைதல்
 • பேசுதலில் அல்லது சொற்களை நினைவுக்குக் கொண்டுவருதலில் சிரமங்கள்
 • உளருதல் அல்லது அர்த்தமற்ற விதத்தில் பேசுதல்
 • வாசித்தல் அல்லது எழுதுதலில் சிரமங்கள்

பழக்கவழக்கங்களில் மாற்றங்கள்

 • நிஜத்தில் இல்லாத விஷயங்களைக் காணுதல் (மாயத் தோற்றங்கள்)
 • அமைதியின்றி இருத்தல், பரபரப்பாக இருத்தல், எரிச்சலுடன் அல்லது மோதல் மனப்பான்மையுடன் காணப்படுதல்
 • எப்போதும் தூக்கக் கலக்கமாக உணர்தல், தூக்கம் சரியாக இல்லாமல் இருத்தல்
 • மனநிலை மாற்றங்கள் அல்லது தீவிரமான உணர்வுகளுடன் இருத்தல், உதராணமாக பயம், பதற்றம் அல்லது கோபம் போன்றவை

இந்தக் குறைபாட்டால் பாதிக்கப்பட்டவர்களுடைய உடலில் இதயத்துடிப்பு மாறுதல், நடுக்கம், கிளர்ச்சி அல்லது தூக்கச் சுழற்சி மாறுதல் போன்ற உடல்நிலை சார்ந்த மாற்றங்களையும் பார்க்கலாம்.

Q

சித்தப்பிரமைக்கான காரணங்கள் என்ன?

A

சித்தப்பிரமைக்கான பொதுவான காரணங்கள்: தீவிரமான அல்லது, நாள்பட்ட ஒரு நோயால் பாதிக்கப்படுதல், மருந்தின் அளவை அதிகமாக எடுத்துக் கொள்ளுதல், நோய்த் தொற்று (உதாரணமாக சிறுநீர்க் குழாய் நோய்த் தொற்று அல்லது தோல் மற்றும் வயிற்று நோய்த் தொற்றுகள்), நிமோனியா காய்ச்சல், போதை மருந்துகள் அல்லது மதுவை அதிகமாக எடுத்துக் கொள்ளுதல்.

சித்தப்பிரமைக்கான ஆபத்தை அதிகரிக்கக்கூடிய மற்ற விஷயங்கள்:

 • காய்ச்சல் மற்றும் தீவிர நோய்த் தொற்று, குறிப்பாகக் குழந்தைகளில் இந்தப் பிரச்னை அதிகமாகக் காணப்படும்
 • ஒரு குறிப்பிட்ட நோய்க்கு பல மருந்துகளைக் கொண்டு சிகிச்சையளித்தல்
 • பல உடல் சார்ந்த நோய்கள் அல்லது அறுவை சிகிச்சைகளைச் சந்தித்தல்
 • மது, போதைப் பொருள்களை அதிகமாகப் பயன்படுத்துதல் அல்லது அவை கிடைக்காமல் சிரமப்படுதல்
 • பதற்றம், மனச்சோர்வு, பார்க்கின்சன்ஸ் நோய், ஆஸ்துமா போன்றவற்றைக் குணப்படுத்துவதற்குப் பயன்படும் சில மருந்துகள் அல்லது தூக்க மருந்துகள் போன்றவை சித்தப்பிரமையை உண்டாக்கலாம்

Q

சித்தப்பிரமையால் ஏற்படும் சிக்கல்கள்

A

சித்தப்பிரமை சில மணிநேரங்கள் மட்டுமே நீடிக்கலாம், அல்லது பல வாரங்கள், மாதங்களுக்குத் தொடரலாம். மற்ற நாள்பட்ட அல்லது உயிருக்கு ஆபத்தான நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள், சித்தப்பிரமை வருவதற்கு முன்னால் அவர்களுக்கு இருந்த சிந்திக்கிற மற்றும் புரிந்துகொள்கிற திறனை மீண்டும் பெறாமலே போகலாம். சித்தப்பிரமை குணப்படுத்தப்படவில்லை அல்லது சித்தப்பிரமையை உண்டாக்கிய காரணிகளைச் சரி செய்யவில்லையென்றால், பாதிக்கப்பட்ட நபர் பின்வருவனவற்றை அனுபவிக்கக்கூடும்:

 • உடல்நிலைச் சரிவு
 • அறுவை சிகிச்சைக்குப் பிறகு உடல் சரியாகக் குணமாகாமல் இருத்தல்
 • மரணம் அடையும் ஆபத்து அதிகரித்தல்

Q

சித்தப்பிரமை எப்படிக் கண்டறியப்படுகிறது?

A

சித்தப்பிரமையைக் கண்டறிவதற்குப் பின்வரும் வழிமுறைகள் பயன்படுத்தப்படுகின்றன: பாதிக்கப்பட்டவருடைய மருத்துவ வரலாற்றை ஆராய்வது, அவருடைய மனத்தின் நிலையை மதிப்பிடுவது, உடல் சார்ந்த மற்றும் நரம்பியல் சார்ந்த பரிசோதனைகள், பிற பரிசோதனைகள்.

Q

சித்தப்பிரமைக்குச் சிகிச்சை எடுத்துக் கொள்ளுதல்

A

உங்களுடைய குடும்ப உறுப்பினர் அல்லது நண்பர் ஒருவரிடம் சித்தப்பிரமைக்கான அறிகுறிகள் ஏதேனும் காணப்பட்டால் உடனடியாக ஒரு மருத்துவரைச் சந்தியுங்கள். ஒருவேளை அவருக்கு டிமென்சியா பிரச்னை இருந்தால் அவருடைய ஒட்டுமொத்த விழிப்புணர்வில், சிந்திக்கும் திறன்களில் ஒப்பீட்டளவில் திடீரென்று மாற்றங்கள் ஏற்படுவதைக் கவனியுங்கள், அதன்மூலம் சித்தப்பிரமை தூண்டப்படக் கூடும் என்பதை அறிந்திருங்கள். பாதிக்கப்பட்ட நபருடைய அறிகுறிகள், அவருடைய பொதுவான சிந்திக்கும் பாணி, தினசரிப் பழக்கவழக்கங்கள் மற்றும் செயல்பாடுகள் போன்றவற்றை நீங்கள் எந்த அளவு கவனிக்கிறீர்களோ அந்த அளவு இந்தப் பிரச்னையைக் கண்டறிவது எளிதாகும்.

வயதானவர்களுக்கு ஏதேனும் ஒரு நோய் வந்து அதற்காக அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுக்கொண்டிருந்தால் அல்லது நீண்டகாலப் பராமரிப்பு மையங்களில் அவர்கள் வாழ்ந்து வந்தால் அவர்களுக்குச் சித்தப்பிரமை ஏற்படுவதற்கான ஆபத்து மிகவும் அதிகம். சித்தப்பிரமைக்கான அறிகுறிகள் அடிக்கடி மாறக்கூடும் என்பதாலும், சில அறிகுறிகள் "அமைதியானவை" (உதாரணமாக சமூகத்தில் யாருடனும் பழகாமல் இருத்தல் அல்லது மிகவும் மெதுவாகப் பதிலளித்தல்) என்பதாலும், சித்தப்பிரமையைச் சிலர் கவனிக்காமலேயே விட்டுவிடலாம். ஒரு மருத்துவமனையில் அல்லது நர்சிங்ஹோமில் இருக்கும் ஒருவரிடம் சித்தப்பிரமைக்கான அடையாளங்கள் மற்றும் அறிகுறிகளை நீங்கள் கவனித்தால் உங்களுடைய கவலைகளைப் பற்றி அவருடைய மருத்துவருக்கு உடனே தெரிவியுங்கள்.

சித்தப்பிரமையைப் பொருத்தவரை மூலகாரணத்தைக் குணப்படுத்துவது அவசியம். உதாரணமாக ஒரு நோய்த் தொற்றை ஆன்டிபயாடிக்ஸ் கொடுத்துக் குணப்படுத்தலாம், அதன்மூலம் பாதிக்கப்பட்ட நபர் சித்தப்பிரமையிலிருந்து குணமடையலாம்.

Q

சமாளித்தல் மற்றும் கவனித்துக் கொள்ளுதல்

A

உங்களுடைய குடும்ப உறுப்பினர் அல்லது நண்பர் ஒருவர் சித்தப்பிரமையிலிருந்து குணமாகிக் கொண்டிருக்கும்போது அவருக்கு உணர்வு நிலையிலான ஆதரவை வழங்கி நீங்கள் உதவலாம். பாதிக்கப்பட்ட நபர் சித்தப்பிரமையிலிருந்து குணமாவதற்கு உதவும் சில குறிப்புகள் இவை:

 • சூழ்நிலையைக் கையாள்வதற்கு தினசரி நடவடிக்கைகளுக்கான ஒரு வழக்கமான ஒழுங்கை அமைக்கலாம்
 • பாதிக்கப்பட்ட நபர் உடற்பயிற்சி செய்யவேண்டும் அல்லது பகல் நேரத்தில் உடல் உழைப்புக் கொண்ட ஒரு வேலையைச் செய்யவேண்டும் என ஊக்கப்படுத்துங்கள்
 • அவருடைய தூங்கும் பாணியை ஒழுங்குபடுத்துவதற்காக, அவர் தூங்கச் செல்வதற்குமுன் வெதுவெதுப்பான, இதமான, காஃப்பைன் இல்லாத, மது இல்லாத பானங்கள் எதையேனும் கொடுங்கள்
 • அவர் எல்லா வேலைகளையும் செய்வதற்கு முன்னால் ஒரு கடிகாரத்தையோ நாள்காட்டியையோ பார்க்கவேண்டும் என ஊக்கப்படுத்துங்கள்
 • அவருக்கு நன்கு தெரிந்த அல்லது அவருக்குப் பிடித்த பொருள்களை, அவருக்கு எளிதில் கிடைக்கும்படிச் சுற்றி வையுங்கள், அதே சமயம் ஓர் அடைச்சலான சூழலை உருவாக்கிவிடாதீர்கள்
 • அவர் இருக்கும் இடத்தில் அதிகச் சத்தம் இல்லாதபடி, கவனச்சிதறல்கள் மிகவும் குறைவாக இருக்கும்படிப் பார்த்துக் கொள்ளுங்கள்
 • அவர் தன்னுடைய மருந்துகளைத் தொடர்ச்சியாக எடுத்துக் கொள்வதை உறுதி செய்யுங்கள்

Q

கவனித்துக் கொள்கிறவர்களைக் கவனித்துக் கொள்ளுதல்

A

சித்தப்பிரமை உள்ள ஒருவரை அல்லது சித்தப்பிரமை வரக்கூடிய ஆபத்திருக்கும் ஒருவரைக் கவனித்துக் கொள்வது மிகவும் திகைப்பூட்டக்கூடிய, அழுத்தம் தருகிற வேலை. அவர்களைக் கவனித்துக் கொள்கிற நீங்கள் உங்களுடைய உடல் மற்றும் மன நலத்தையும் கவனித்துக் கொள்ளவேண்டும். போதுமான அளவு தூங்குதல், ஊட்டச்சத்துள்ள உணவுகளை உட்கொள்ளுதல் மற்றும் உங்களுடைய சொந்த நலனுக்காகச் சிறிது நேரம் செலவிடுதல் போன்றவை நீங்கள் இந்த நிலையைச் சமாளிக்க உதவலாம். இதோடு இந்தக் குறைபாட்டைப் பற்றி நன்றாகத் தெரிந்து கொள்வதன் மூலம் சித்தப்பிரமையிலிருந்து குணமாகிக் கொண்டிருக்கும் ஒருவருக்கு எப்படி உதவலாம் என நீங்கள் சிறப்பான தீர்மானங்களை எடுத்துச் செயல்பட இயலும்.

வொய்ட் ஸ்வான் ஃபவுண்டேஷன்
tamil.whiteswanfoundation.org