டிமென்சியா

Q

டிமென்சியா என்றால் என்ன?

A

டிமென்சியா என்பது ஒரு தனிக்குறைபாடு அல்ல. மூளையின் திசுக்கள் மற்றும் செல்களில் ஏற்பட்டிருக்கிற சேதம் காரணமாக ஏற்படுகிற பல்வேறு அறிகுறிகளை இது உள்ளடக்கியிருக்கிறது. இந்தச் சேதத்தால் மக்கள் அல்சைமர்ஸ் அல்லது பார்க்கின்சன் போன்ற சிதைவுக் குறைபாடுகளால் பாதிக்கப்படுகிறார்கள். இதற்கான அறிகுறிகள்: ஞாபக மறதி, மனநிலை மாற்றங்கள், சிந்தித்தல் மற்றும் புரிந்துகொள்ளுதலில் சிரமங்கள், பிரச்னைகளைத் தீர்க்க இயலாமல் சிரமப்படுதல், மொழிக் குறைபாடுகள் போன்றவை. இந்தப் பிரச்னையால் பாதிக்கப்பட்டவர்கள் தங்களுடைய தினசரி நடவடிக்கைகளைச் செய்ய இயலாமல் சிரமப்படுகிறார்கள்.

டிமென்சியா படிப்படியாக வளரக்கூடிய ஒரு குறைபாடு. அதாவது இந்தக் குறைபாடு கண்டறியப்பட்டபின் ஒருவருடைய நிலை படிப்படியாக மோசமாகி விரைவில் அவர்கள் மரணத்தைச் சந்திக்க நேரிடும்.

குறிப்பு: "டிமென்சியா இந்தியா அறிக்கை"யின்படி நம் நாட்டில் 37 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் டிமென்சியாவால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். 2030 ஆண்டிற்குள் இந்த எண் இரு மடங்கு ஆகிவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Q

எது டிமென்சியா அல்ல?

A

  • வயதானவர்களுக்கு ஞாபகமறதிப் பிரச்னை வருவது சகஜம், அவர்களுடைய உடலில் ஏற்படும் நோய்கள் அல்லது மனச்சோர்வு போன்ற மனம் சார்ந்த பிரச்னைகளாலும் அவர்களுக்கு ஞாபகமறதி ஏற்படக்கூடும், இவை டிமென்சியா அல்ல.
  • டிமென்சியா பிரச்னை கொண்ட ஒருவருக்குக் குறைந்தபட்சம் இரண்டு மூளைச் செயல்பாடுகளில் சிரமங்கள் ஏற்படும் (ஞாபகமறதி மற்றும் தீர்மானம் எடுத்தலில் சிரமங்கள் அல்லது மொழிப் பிரச்னைகள்). இந்தக் குறைபாடு கொண்டவர்களால் தங்களுடைய தினசரிப் பணிகளைச் சுதந்திரமாகத் தாங்களே செய்துகொள்ள இயலாது.

Q

டிமென்சியாவின் வகைகள்

A

டிமென்சியாவில் பல வகைகள் உண்டு; இவை ஒவ்வொன்றுக்கும் அதனை உண்டாக்கும் நோய் அல்லது நிலையின் பெயர் சூட்டப்பட்டுள்ளது.

  1. அல்சைமர்ஸ் குறைபாடு: டிமென்சியாவின் மிகப்பொதுவான வகை இதுதான். அல்சைமர்ஸ் குறைபாடு பொதுவாக ஏழு முதல் பத்து ஆண்டுகளுக்கு மெதுவாக வளர்கிறது. மூளையின் அறிவாற்றல் செயல்பாடுகள் கொஞ்சங்கொஞ்சமாகக் குறைகின்றன, ஒரு கட்டத்தில் ஞாபக சக்தி, மொழி, தீர்மானம் எடுத்தல் மற்றும் வெளி சார்ந்த திறன்கள் ஆகியவற்றைக் கட்டுப்படுத்தும் மூளையின் பகுதிகள் செயல்படுவதை நிறுத்தி விடுகின்றன.
  2. லெவி பாடி டிமென்சியா: லெவி பாடீஸ் என்றால் மூளையில் காணப்படும் அசாதாரணமான புரதக் கட்டிகள் ஆகும். இந்த வகை டிமென்சியாவால் பாதிக்கப்பட்ட ஒருவருக்கு ரேபிட் ஐ மூவ்மெண்ட் (REM) எனப்படும் நிலையும் பொதுவாகக் காணப்படுகிறது, இவர்களுக்குத் தூக்கப் பழக்கக் குறைபாடும் இருக்கலாம், அதாவது இவர்கள் தங்களுடைய கனவை நிஜம் என நம்பி அதன்படி நடக்கலாம்.
  3. பிரண்ட்டோடெம்பரல் டிமென்சியா: மற்ற வகைகளோடு ஒப்பிடும்போது இந்த டிமென்சியா சற்றே இளைய வயதுடையவர்களைப் பாதிக்கிறது (40 முதல் 65 வயது). இந்தக் குறைபாடு கொண்டவர்களுடைய மூளையின் முன் மற்றும் டெம்போரல் லோப்களில் உள்ள நரம்பு செல்கள் சிதையத் தொடங்குகின்றன, இந்தப் பகுதிகள் அவர்களுடைய ஆளுமை, நடந்துகொள்ளும் விதம் மற்றும் மொழியைக் கட்டுப்படுத்துபவை. ஆகவே இவை சேதமடையும்போது அந்த நபர் பாதிப்புக்குள்ளாகிறார். இந்தப் பிரச்னைக்கான அறிகுறிகள் முறையற்ற வகையில் நடந்து கொள்ளுதல், சத்தமின்றிப் பேசுதல், சிந்தித்தல் மற்றும் கவனம் செலுத்துதலில் சிரமங்கள் மற்றும் அசைவுகளில் சிரமங்கள்.
  4. வாஸ்குலர் டிமென்சியா: மூளைக்குச் செல்லும் ரத்தக் குழாய்களில் ரத்த ஓட்டம் குறைந்தால் அல்லது தடுக்கப்பட்டால், அதன் மூலம் மூளை சேதமடைந்து இந்த வகை டிமென்சியா ஏற்படக்கூடும். பக்கவாதம், இதய வால்வ்(என்டோகார்டிட்டிஸ்)களில் நோய்த் தொற்று அல்லது பிற வாஸ்குலர் (ரத்தக் குழாய் சார்ந்த) பிரச்னைகளால் மூளை சேதமடையலாம்.

Q

டிமென்சியாவின் அறிகுறிகள் என்ன?

A

டிமென்சியாவின் அறிகுறிகள் ஒவ்வொரு நபருக்கும் மாறுபடும். அவர்களுடைய மூளையின் எந்தப்பகுதி எதனால் சேதமடைந்துள்ளது என்பதைப் பொறுத்து இந்த அறிகுறிகள் மாறும். டிமென்சியா பிரச்னை கொண்ட ஒவ்வொருவரும் வெவ்வேறு விதமான அறிகுறிகளை உணர்வார்கள், ஒவ்வொருவரும் சந்திக்கக்கூடிய சிரமங்கள் வெவ்வேறு விதமாக அமையும். டிமென்சியா பிரச்னை கொண்ட ஒருவர் பின்வரும் விஷயங்களில் சிரமத்தைச் சந்திக்கலாம்:

  • சமீபத்திய நிகழ்வுகள் அல்லது செயல்பாடுகளை நினைவில் வைத்திருத்தல்
  • விஷயங்களை விவரிப்பதற்குச் சரியான சொற்களைக் கண்டறிதல்
  • மக்கள் மற்றும் இடங்களை அடையாளம் காணுதல்
  • தினசரி வேலைகளான சமையல், சுத்தப்படுத்துதல் போன்றவற்றைச் செய்தல்
  • விஷயங்களைத் திட்டமிடுதல் மட்டும் ஏற்பாடு செய்தல் (நிதி விஷயங்களைக் கையாளுதல், வழக்கமான வேலைகள் போன்றவை)
  • தர்க்கரீதியில் சிந்தித்துப் பதிலளித்தல், குறிப்பாக நெருக்கடி நேரங்களில்
  • தனிப்பட்ட முறையில் தன்னைச் சரியாகப் பராமரித்துக் கொள்ளுதல் (குளித்தல், நேர்த்தியாக உடுத்துதல்)
  • மனநிலைகள் மற்றும் பழகுமுறைகளைக் கட்டுப்படுத்துதல், இதன் மூலம் ஏற்படக்கூடிய தீவிரத் தன்மை மற்றும் கிளர்ச்சியுணர்வு

சில குறிப்பிட்ட வகை டிமென்சியாக்களுக்கு குறிப்பிட்ட அறிகுறிகள் உண்டு:

  • லெவி பாடீஸ் கொண்ட டிமென்சியா: இதனால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மிக விரிவான மாயத் தோற்றங்கள் தெரியும், இவர்கள் அடிக்கடி கீழே விழக்கூடும்.
  • பிரண்ட்டோடெம்பரல் டிமென்சியா: ஆளுமை மாற்றங்கள் அல்லது அசாதாரணமாக நடந்து கொள்ளுதல். பாதிக்கப்பட்ட நபர் பிறர் மீது எந்த அக்கறையும் காட்டாமல் இருக்கலாம், பிறரிடம் முரட்டுத்தனமாகவோ கடுமையாகவோ பேசலாம்.
  • வாஸ்குலர் டிமென்சியா: இதனால் பாதிக்கப்பட்டவர்களுக்குச் சித்தபிரமை ஏற்படலாம் அல்லது ஒரு புதிய அல்லது மோசமாகும் நோயினால் இவர்களுக்குக் குழப்பம் ஏற்படலாம்.

Q

டிமென்சியா எப்படிக் கண்டறியப்படுகிறது?

A

டிமென்சியாவைக் கண்டறிவதற்குத் தனிப்பட்ட பரிசோதனை என்று எதுவுமில்லை. ஆகவே மருத்துவர்கள் சம்பந்தப்பட்ட நபரின் மருத்துவ வரலாறை ஆராய்கிறார்கள், அவருடைய பழக்கவழக்கங்களில் உள்ள மாற்றங்களைக் கவனிக்கிறார்கள், இவற்றோடு சில ஆய்வகப் பரிசோதனைகளையும் நிகழ்த்தி அதன்மூலம் அவருக்கு டிமென்சியா பிரச்னை இருப்பதைக் கண்டறிகிறார்கள்.

ஒருவருக்கு டிமென்சியா பிரச்னை இருப்பதை எவ்வளவு சீக்கிரம் கண்டறிகிறோமோ அவ்வளவு நல்லது. இதன் மூலம் அவர்கள் தங்களுக்கு என்ன பிரச்னை என்பதைப் புரிந்து கொள்ளலாம், வருங்காலத்திற்காகத் தயாராகலாம், திட்டமிடலாம், நிலைமையைச் சமாளிப்பதற்குக் குடும்ப உறுப்பினர்களின் உதவியைப் பெறலாம், தினசரிச் செயல்பாடுகளை இயன்றவரை சிறப்பாகக் கையாளலாம்.

டிமென்சியாவிற்காக நிகழ்த்தப்படும் சில பரிசோதனைகள்:

அறிவாற்றல் மற்றும் நரம்பு இயற்பியல் பரிசோதனைகள்: ஞாபகசக்தி, நோக்குநிலை, புரிந்து கொள்ளுதல், தீர்மானம் எடுத்தல் மற்றும் மொழி ஆகியவற்றில் பரிசோதனைகளை நடத்தி, அதன் அடிப்படையில் ஒருவருடைய அறிவாற்றல் திறன்கள் மதிப்பிடப்படுகின்றன.

நரம்புத் தர்க்கவியல் மதிப்பீடு: மருத்துவர்கள் பாதிக்கப்பட்டவரின் அசைவு, உணர்வு, நிலைத் தன்மை மற்றும் அனிச்சை எதிர்வினை ஆகியவற்றைப் பரிசோதிக்கிறார்கள்.

மூளை ஸ்கேன்: பாதிக்கப்பட்ட நபருக்கு ஒரு கணிணி மயமாக்கப்பட்ட டோமோகிராபி (CT) ஸ்கேன் அல்லது மேக்னடிக் ரெசோனென்ஸ் இமேஜிங் (MRI) செய்யப்படுகிறது. இதன் மூலம் அவருக்குப் பக்கவாதம்  வந்திருக்கிறதா அல்லது மூளையில் உள் ரத்தக் கசிவு ஏற்பட்டிருக்கிறதா என்பதை அவர்கள் ஆராய்கிறார்கள், அவருக்கு மூளையில் கட்டி ஏதும் இல்லை என்பதை உறுதிப்படுத்துகிறார்கள்.

உளவியல் மதிப்பீடு: ஒரு மனநல நிபுணர் பாதிக்கப்படவரிடம் பேசி அவருக்கு மனச் சோர்வு அல்லது வேறு உளவியல் பிரச்னைகள் உள்ளனவா, அதன் மூலம் இந்த அறிகுறிகள் ஏற்பட்டிருக்கின்றனவா என்று பரிசோதிக்கிறார்.

Q

டிமென்சியாவிற்குச் சிகிச்சை பெறுதல்

A

டிமென்சியாவிற்குச் சிகிச்சை அளிக்கவோ குணப்படுத்தவோ இயலாது. காரணம் டிமென்சியாவை ஏற்படுத்தும் நோய்கள் படிப்படியாக வளர்பவை, அதாவது பாதிக்கப்பட்டவருடைய நிலைமை படிப்படியாக மோசமாகிக் கொண்டே தான் செல்லும். அதே சமயம் பாதிக்க்ப்பட்டவர் தன்னுடைய அறிகுறிகளைக் கையாள்வதற்கு மருத்துவர்கள் உதவலாம். டிமென்சியாவுடன் இருக்கக்கூடிய மனச் சோர்வு அல்லது பதற்றம் போன்ற பிற பிரச்னைகளுக்குச் சிகிச்சை தேவைப்படலாம்.

மருத்துவர்களும் குடும்ப உறுப்பினர்களும், டிமென்சியாவால் பாதிக்கப்பட்ட ஒருவரால் என்னென்ன வேலைகளைச் செய்ய இயலுகிறது என்பதைக் கவனிக்க வேண்டும், அவற்றைத் தொடர்ந்து செய்யுமாறு அவரை ஊக்கப்படுத்தவேண்டும். இந்தப் பிரச்னை உள்ளவர்களுக்கு மிகவும் தேவைப்படுகிற சிகிச்சை குடும்ப உறுப்பினர்களின் அன்பு, ஆதரவு மற்றும் அக்கறைதான்.

Q

டிமென்சியாவைத் தடுக்க இயலுமா?

A

டிமென்சியாவைத் தடுக்க இயலாது என்று தான் நிபுணர்கள் குறிப்பிடுகிறார்கள். அதே சமயம் டிமென்சியா வருவதைத் தாமதப்படுத்துவதற்கு நாம் சில விஷயங்களைச் செய்யலாம். இது பற்றிய ஆராய்ச்சிகள் இன்னும் முழுமையடையவில்லை, மேலும் பல விஷயங்களை ஆராய வேண்டியுள்ளது.

பின்வரும் வழிகளைப் பயன்படுத்தி ஓர் ஆரோக்கியமான வாழ்க்கை முறையை அமைத்துக் கொள்ளலாம்:

  • மனத்தைச் சுறுசுறுப்பாக வைத்திருத்தல், இதற்கு மனத்தைத் தூண்டும் செயல்பாடுகள் பயன்படும். உதாரணமாக சொற்களைக் கொண்டு விளையாடும் விளையாட்டுகள், சுடோகு, புதிர்களுக்குத் தீர்வு காணுதல், ஞாபகசக்திப் பயிற்சி அல்லது ஒரு புதிய மொழியைக் கற்றுக் கொள்ளுதல்.
  • தொடர்ந்து உடற்பயிற்சி செய்தல், ஆரோக்கியமான உணவை உண்ணுதல், அதன் மூலம் உடலைச் சுறுசுறுப்பாக வைத்திருத்தல்.
  • மூகச் செயல்பாடுகளில் ஆர்வத்துடன் பங்குபெறுதல். உதாரணமாக ஒரு பொது நோக்கத்திற்காகத் தன்னார்வலராகப் பணியாற்றுதல், பொழுதுபோக்கு ஒன்றைக் கற்றுக் கொள்வதற்காக ஒரு வகுப்பில் இணைதல் அல்லது நண்பர்கள், ஒத்த சிந்தனை கொண்டவர்களுடன் நேரம் செலவிடுதல் போன்றவை.
  • தினசரி நடவடிக்கைகளுக்கு ஒரு குறிப்பிட்ட ஒழுங்கைப் பின்பற்றுதல்.
  • புகைப் பிடிப்பது, மது அருந்துவதை நிறுத்திவிடுதல்.

Q

டிமென்சியா பிரச்னை கொண்ட ஒருவரைக் கவனித்துக் கொள்ளுதல்

A

ஒருவருக்கு டிமென்சியா வந்திருப்பது கண்டறியப்படும்போது அவரும் அவருடைய குடும்ப உறுப்பினர்களும் மிகுந்த அதிர்ச்சி அடைவது சகஜம். டிமென்சியாவின் ஆரம்பக் கட்டத்தில் அதனால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மிகுந்த ஆதரவும் நம்பிக்கையும் தேவை, அப்போதுதான் அவர்களுடைய வாழ்க்கை இயன்றவரை எளிதாகவும் சமாளிக்கக்கூடியதாகவும் அமையும். ஒருவருடைய குடும்ப உறுப்பினர்கள் யாருக்கேனும் டிமென்சியா இருந்தால் அவர்களைக் கவனித்துக் கொள்வதற்கு இந்த ஆலோசனைகளில் சிலவற்றைப் பின்பற்றலாம். அதே சமயம் இந்த ஆலோசனைகளைச் சம்பந்தப்பட்ட நபரின் நிலை மற்றும் சூழலுக்கு ஏற்ப மாற்றிப் பயன்படுத்துவது நல்லது. இவர்கள் புரிந்து கொள்ளவேண்டிய இன்னொரு விஷயம் டிமென்சியா படிப்படியாக வளர்கின்ற தன்மையைக் கொண்டது, அதன் அறிகுறிகள் நாளுக்கு நாள் மோசமாகிக் கொண்டேதான் இருக்கும்.

  • தகவல் தொடர்பு: அன்புக்குரியவரிடம் பேசும்போது கண்ணுக்குக் கண் பார்த்துப் பேசவேண்டும். மெதுவாகவும் தெளிவாகவும் எளிய வாக்கியங்களில் பேசவேண்டும், ஒரு நேரத்தில் ஒரு விஷயத்தைப் பற்றிப் பேசவேண்டும்.
  • உடற்பயிற்சி: டிமென்சியாவால் பாதிக்கப்பட்டவர் சில எளிய உடற்பயிற்சிகளைச் செய்யவேண்டும் என்று ஊக்கப்படுத்தவேண்டும், அதன்மூலம் அவர்கள் தங்களுடைய உடல் நிலையைப் பராமரித்துக் கொள்ளலாம், மனச் சோர்வுக்கான அறிகுறிகளைக் குறைக்கலாம், இயக்கவியல் திறன்களைத் தக்கவைத்துக் கொள்ளலாம், மன அமைதியும் பெறலாம்.
  • விளையாட்டுகள் மற்றும் செயல்பாடுகள்: விளையாட்டுகள் மற்றும் சிந்திக்கும் செயல்பாடுகளில் பங்கேற்குமாறு அவரை ஊக்கப்படுத்தவேண்டும். அறிவாற்றல் திறன்களைப் பயன்படுத்துவதன் மூலம் மூளையின் செல்கள் சிதைவடைவதை மெதுவாக்கலாம்.
  • ஒழுங்கு: தினசரி நடவடிக்கைகளுக்கு ஒரு முறையான ஒழுங்கைக் கொண்டுவரவேண்டும், அதன் மூலம் பாதிக்கப்பட்டவருக்கு உணவு அல்லது தூக்கக் குறைபாடு ஏற்படாது. பாதிக்கப்பட்டவர் காலப்போக்கில் தன்னுடைய பழக்கங்களை மாற்றிக் கொள்ளக்கூடும், ஆகவே பழக்க மாற்றங்களுக்கு ஏற்ப இதனைச் சரிசெய்யவேண்டும்.
  • எதிர்காலம்: ஒருவர் டிமென்சியாவின் ஆரம்பக்கட்டத்தில் உள்ளபோது எதிர்காலத்திற்காகத் திட்டமிடுமாறு அவரை ஊக்கப்படுத்தவேண்டும். நிதி, சொத்து, நீண்டகாலப் பராமரிப்புத் திட்டம், பாதுகாப்பு மற்றும் தினசரி வாழ்க்கைப் பிரச்னைகளைப் பற்றிய தீர்மானங்களை எடுக்குமாறு அவரிடம் சொல்லவேண்டும்.

Q

கவனித்துக் கொள்பவரைக் கவனித்துக் கொள்ளுதல்

A

டிமென்சியா பிரச்னை வந்த தன்னுடைய அன்புக்குரிய ஒருவரைக் கவனித்துக் கொள்கிறவருக்கு மன அழுத்தம், எரிச்சல், உடல் மற்றும் உணர்வு நிலையில் களைப்பு ஏற்படுவது சாத்தியம். இவர்களுக்கு அடிக்கடி கோபம், குற்ற உணர்ச்சி, சோகம், சுய இரக்கம், பதற்றம் மற்றும் தனக்கு யாரும் உதவுவதில்லை என்கிற எண்ணம் போன்றவை கலந்து ஏற்படலாம். இந்தக் கடினமான நிலையைக் கடந்து முன்னேறுவதற்கு அவர்கள் தங்களுடைய உடல் நலம் மற்றும் மன நலத்தைக் கவனித்துக் கொள்ளவேண்டும்.

  • இந்தப் பிரச்னையைப்பற்றி எவ்வளவு விஷயங்களைக் கற்றுக்கொள்ள இயலுமோ அவ்வளவு விஷயங்களைக் கற்ருக்கொள்ளவேண்டும், அதன்மூலம் பாதிக்கப்பட்டவருடைய பிரச்னைகளை அவர்கள் இன்னும் சிறப்பாகப் புரிந்து கொள்ளலாம், அந்தச் சூழ்நிலையை இன்னும் சிறப்பாகக் கையாளலாம்.
  • மருத்துவர்கள் மற்றும் ஆலோசர்களிடம் பேசித் தங்களுடைய கவலைகளை விவாதிக்கவேண்டும்.
  • தேவைப்படும்போது நண்பர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களின் உதவியை நாடவேண்டும்.
  • தங்களுடைய உடல், உணர்வு மற்றும் ஆன்ம நலனைக் கவனித்துக் கொள்ளவேண்டும்.
  • தங்களுக்காகச் சிறிது நேரம் ஒதுக்கித் தங்களுக்கு ஆர்வம் உள்ள விஷயங்களைச் செய்யவேண்டும்.
  • ஓர் ஆதரவுக் குழுவில் இணைந்து தங்களுடைய அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளவேண்டும், இதே போன்ற சூழ்நிலையில் இருக்கும் மற்றவர்களிடம் உதவி பெறவேண்டும், அவர்களும் மற்றவர்களுக்கு இதே போன்ற ஆதரவை வழங்கலாம்.

Related Stories

No stories found.
logo
வொய்ட் ஸ்வான் ஃபவுண்டேஷன்
tamil.whiteswanfoundation.org