குழந்தைகளில் மனச்சோர்வு

Q

குழந்தைகளில் மனச்சோர்வு என்றால் என்ன?

A

ஒரு குழந்தை வளரும்போது, அவ்வப்போது சோகமாக, காயப்பட்டதுபோல், வருத்தமாக... இப்படிப் பல உணர்வுகளைக் கொண்டிருப்பது இயல்புதான். ஆனால், சில குழந்தைகளுக்கு இந்த உணர்வுகள் நீண்ட நேரம் நீடிக்கலாம், இது அவர்களுடைய உணர்வு மற்றும் மனநலத்தில் தாக்கத்தை ஏற்படுத்தலாம்.

குழந்தைகளுக்கு வரும் மனச்சோர்வு மிகவும் கவலை தரும் விஷயம். ஒரு குழந்தை எப்படிச் சிந்திக்கிறது, எப்படி உணர்கிறது மற்றும் எப்படி நடந்து கொள்கிறது என்பதை இது பாதிக்கக்கூடும், அந்தக் குழந்தையின் வாழ்க்கைத் தரத்தையே பாதிக்கக்கூடும்.

Q

குழந்தைகளில் மனச்சோர்வுக்கான அடையாளங்கள் என்ன?

A

மனச்சோர்வு பொதுவாக பெரியவர்களுடைய நோய் என்று கருதப்படுகிறது. அது குழந்தைகள் மற்றும் வளர் இளம்பருவத்தினரைப் பாதிக்கும்போது அதனை அடையாளம் காண்பது குறைவு. பெரியவர்களுடன் ஒப்பிடும்போது இந்தப் பிரச்னைக்கான அறிகுறிகளும் குழந்தைகளில் கொஞ்சம் மாறியிருக்கின்றன. இந்த அறிகுறிகளை அடையாளம் காண்பதுதான் குணப்படுத்துதலின் முதல்படி.

மனச்சோர்வு கொண்ட ஒரு குழந்தை இவ்வாறெல்லாம் இருக்கக் கூடும்:

 • படிப்பில் அதன் ஆர்வம் குறையக்கூடும், பள்ளியில் அதன் செயல்திறன் திடீரென்று குறையக்கூடும்
 • பள்ளிக்குச் செல்ல மறுக்கக்கூடும்
 • அதன் கவனம் சிதறக்கூடும், படிப்பிலோ மற்ற வேலைகளிலோ கவனம் செலுத்த இயலாமல் இருக்கக் கூடும்
 • எளிதில் களைப்படைந்து சோம்பேறித்தனமாக உணரக்கூடும்
 • பசியெடுக்காமல், தூக்கம் இல்லாமல் இருக்கக்கூடும்
 • சிந்தித்தல் மற்றும் தீர்மானம் எடுத்தலில் தடுமாறக்கூடும்
 • சிறிய விஷயங்களுக்கும் எரிச்சல் அடையக்கூடும்
 • காரணமில்லாமல் அழக்கூடும்
 • தனக்குத் தலைவலி அல்லது வயிற்றுவலி என்று சொல்லக்கூடும், ஆனால் அந்த நோய்க்குச் சிகிச்சை எடுத்தால், அதற்கு எந்தப் பலனும் இருக்காது
 • நண்பர்களுடன் விளையாட மறுக்கக்கூடும்
 • அவர்கள் முன்பு மகிழ்ச்சியோடு செய்த செயல்களில் இப்போது ஆர்வம் இல்லாமல் இருக்கக்கூடும்

Q

குழந்தைகளில் மனச்சோர்வு எதனால் ஏற்படுகிறது?

A

இன்றைய போட்டி நிறைந்த உலகத்தில் குழந்தைகள் படிப்பிலும் மற்ற பொழுதுபோக்குகளிலும் சிறப்பாகத் திகழ வேண்டும் என்று தேவையில்லாத சுமைக்கு ஆளாகிறார்கள். ஒவ்வொரு குழந்தையும் தனித்துவமானது என்கிற உண்மையைப் பெற்றோரும் ஆசிரியர்களும் கவனிப்பதில்லை. குழந்தைகள் ஒரு கண்டிப்பான அமைப்பைப் பின்பற்றவேண்டும், விதிமுறைகளின்படி நடக்கவேண்டும் என்று வற்புறுத்தப்படுகிறார்கள், இது அவர்களுக்கு மிகுந்த மன அழுத்தத்தைத் தருகிறது, இதனை அவர்களால் கையாள இயலுவதில்லை.

குழந்தைகள் வீட்டிலிருந்தாலும் சரி, பள்ளியிலிருந்தாலும் சரி, அவர்களுடைய நேரத்தில் பெரும்பகுதி கல்வியிலேயே செல்கிறது என்பதால் குழந்தைகளில் மனச்சோர்வுக்கு இது ஒரு மிகப்பெரிய காரணமாக இருக்கலாம். அதேசமயம் குழந்தையின் மன ஆரோக்கியத்தைப் பாதிக்கக்கூடிய மற்ற உளவியல், சமூகக் காரணிகளும் உள்ளன. உணர்வு மற்றும் மன எழுச்சி நிலைகளைக் கையாள இயலாத குழந்தைகளுக்கு மனச்சோர்வு வரக்கூடும்.

குழந்தைகள் மற்றும் பதின்பருவத்தினரில் பின்வரும் காரணங்களால் மனச்சோர்வு ஏற்படக்கூடும் எனக் கண்டறியப்பட்டுள்ளது:

 • வீட்டிலுள்ள பிரச்னைகளால் ஏற்படும் தொடர்ச்சியான மன அழுத்தம், உதாரணமாக, குடிக்கின்ற அல்லது சண்டை போடுகின்ற பெற்றோர்
 • அதிர்ச்சிகரமான நிகழ்வுகள், உதாரணமாக வன்முறை, உடல் சார்ந்த அல்லது உள்ளம் சார்ந்த துன்புறுத்தல் அல்லது புறக்கணிக்கப்படுதல்
 • மற்ற குணப்படுத்தப் படாத மனநல நிலைகள், உதாரணமாக, பதற்றக் குறைபாடுகள்
 • குழந்தையின் தன்னம்பிக்கையையும் செயல்திறனையும் பாதிக்கக் கூடிய கற்கும் பிரச்னைகள்

குழந்தைகளில் மனச்சோர்வு மிகக் குறைவாகத் தொடங்கி நடுத்தர அளவுக்குச் சென்று தீவிரமாகவும் ஆகலாம்.

 • மிதமான மனச்சோர்வு என்பது, ஒரு குழந்தையைச் சோகமாக உணரச் செய்யும், ஆனால் அந்தக் குழந்தையால் சாதாரணமான வாழ்க்கையை வாழ இயலும். அந்தக் குழந்தை தினசரி வேலைகளைச் செய்யவோ அல்லது பள்ளி வேலைகளைச் செய்யவோ அதிக ஆர்வம் காட்டாமல் இருக்கலாம், ஆனால் பெற்றோர்களின் ஆதரவு, எளிய வாழ்க்கை முறை மாற்றங்களின் மூலம் அந்தக் குழந்தை மிதமான  மனச்சோர்விலிருந்து குணமாகிவிடலாம்.
 • நடுத்தர மனச்சோர்வு குழந்தையின் வாழ்க்கையை குறிப்பிடத்தக்க அளவு பாதிக்கலாம். அந்தக் குழந்தை எப்போதும் துயரத்துடனும் சுறுசுறுப்பில்லாமலும் உணரலாம். தன் குழந்தையிடம் மனச்சோர்வுக்கான இந்த அறிகுறிகள் காணப்படுவதாக ஒருவர் நினைத்தால், அவர் தன்னுடைய குடும்ப மருத்துவரைத் தொடர்பு கொள்ளவேண்டும், ஒரு மனநல நிபுணரின் உதவியை நாடவேண்டும்.
 • தீவிர மனச்சோர்வு ஒரு குழந்தையை மதிப்பற்றதாக உணரச்செய்யலாம். அந்தக் குழந்தைக்குத் தொடர்ச்சியாக எதிர்மறை எண்ணங்கள், சோக உணர்வுகள் ஏற்படலாம், அதனை அந்தக் குழந்தையால் சமாளிக்க இயலாமல் இருக்கலாம். தன் குழந்தையிடம் தீவிர மனச் சோர்வுக்கான அடையாளங்கள் தென்படுகின்றன என்று ஒருவர் நினைத்தால், எவ்வளவு சீக்கிரம் இயலுமோ அவ்வளவு சீக்கிரம் குழந்தையை ஒரு மருத்துவரிடம் அழைத்துச் சென்று சிகிச்சையைத் தொடங்குவது நல்லது.

Q

மனச்சோர்வுக்குச் சிகிச்சை பெறுதல்

A

மனச்சோர்வு ஒரு குழந்தையுடைய உடல் நலம், மன நலம், கல்விச் செயல் திறன் மற்றும் தினசரி வாழ்க்கையைப் பாதிக்கிறது. மேலே குறிப்பிடப்பட்டுள்ள அறிகுறிகளில் இரண்டு அல்லது அதற்கு மேல் ஒரு குழந்தையிடம் இருப்பதை நீங்கள் பார்த்தீர்களானால் முதலில் நீங்கள் ஒரு குழந்தை நல மருத்துவர் அல்லது மன நல நிபுணரைச் சந்தித்து ஆலோசனை பெறவேண்டும். பிரச்னை எவ்வளவு தீவிரமாக இருக்கிறது என்பதைப் பொறுத்து மருந்துகள் மற்றும் சிகிச்சை வழங்கப்படலாம். அறிவாற்றல் நடத்தைச் சிகிச்சை (CBT) மனச்சோர்வை நன்கு குணப்படுத்துவதாக நிரூபிக்கப்பட்டுள்ளது.

குறிப்பு: குழந்தைகளிடையே இருக்கக் கூடிய மன நலப் பிரச்னைகளைக் கையாள்வதற்காக ஆசிரியர்களுக்கு மனநலம் பற்றிய பயிற்சி வழங்கப்படவேண்டும்.

Q

மனச்சோர்வு உள்ள குழந்தையைக் கவனித்துக் கொள்ளுதல்

A

குழந்தையின் மனச்சோர்வைச் சமாளிக்கப் பெற்றோர் உதவலாம். அதற்கான சில வழிகள் இவை:

 • மனச்சோர்வைப் பற்றித் தெரிந்துகொள்ளலாம். இந்த நிலையைப் பற்றிப் புரிந்துகொள்வதன் மூலம் பெற்றோர் அவர்களை இன்னும் நன்றாகக் கவனித்துக் கொள்ளலாம், தங்கள் குழந்தைக்கு மிகவும் தேவையான ஆதரவை அளிக்கலாம்.   
 • சிபாரிசு செய்யப்படும் சிகிச்சையின்படி குழந்தை சிகிச்சை பெறுவதற்கு உதவலாம். மருத்துவர் ஏதேனும் மருந்துகளைச் சிபாரிசு செய்திருக்கிறார் என்றால் அந்த மருந்துகளைக் குழந்தை சரியான நேரத்தில் தொடர்ந்து எடுத்துக் கொள்வதை உறுதிசெய்யலாம்.
 • தங்கள் குழந்தையுடன் அனுதாப உணர்வோடு பேசி அவர்கள் சொல்வதைக் கேட்கலாம். அவர்கள் தங்கள் மனத்தில் உள்ளதை வெளிப்படுத்த அனுமதிக்கலாம், அவர்கள் இப்படித்தான் என்று எந்தத் தீர்ப்பையும் வழங்கவேண்டாம்.
 • மனச்சோர்வைத் தூண்டக்கூடிய எச்சரிக்கைச் சின்னங்கள் மற்றும் சூழ்நிலைகளைக் கவனிக்கலாம், அத்தகைய சூழ்நிலைகளைத் தவிர்க்க முயற்சி செய்யலாம்.   
 • தங்களுடைய குழந்தை இந்தப் பிரச்னையிலிருந்து குணமாவதற்குத் தாங்கள் எப்படி ஆதரவளிக்கலாம் என்பதைக் கண்டறிய, மருத்துவர்கள், ஆசிரியர்கள், மற்ற நிபுணர்களுடன் இணைந்து பணியாற்றலாம்.   
 • தங்கள் குழந்தையின் உடல்நலத்தைக் கவனித்துக் கொள்ளலாம்.   
 • உடற்பயிற்சி அல்லது உடல்சார்ந்த சுறுசுறுப்பான வேலைகள் குழந்தையின் மனநிலையை மேம்படுத்த உதவும். தங்களுடைய குழந்தை ஊட்டச்சத்தான உணவுகளை உண்ணுவதை இவர்கள் உறுதி செய்யலாம், அவர்களுடைய உடல் மற்றும் மன நலத்திற்கு அது முக்கியம்.

Related Stories

No stories found.
logo
வொய்ட் ஸ்வான் ஃபவுண்டேஷன்
tamil.whiteswanfoundation.org