மனச்சோர்வு: உண்மை அறிவோம்

தவறான நம்பிக்கை: மனச்சோர்வு என்பது ஒரு பலவீனம், அது ஒரு நோய் அல்ல.

உண்மை: மனச்சோர்வு என்பது ஒரு பலவீனமோ சோம்பேறித்தனமோ இல்லை. அது பல காரணங்களால் ஏற்படுகிற ஒரு தீவிரமான மனச்சூழல். மனச்சோர்வு யாரை வேண்டுமானாலும் பாதிக்கலாம், அவர்களுடைய வாழ்க்கையின் எந்த நிலையிலும் பாதிக்கலாம்.

தவறான நம்பிக்கை: போதுமான ஊட்டச்சத்து இல்லாமல் இருத்தல் மற்றும் ஏழைமை போன்றவற்றுக்கும் மனச்சோர்வுக்கும் சம்பந்தம் கிடையாது.

உண்மை: சரியான ஊட்டச்சத்து இல்லாமல் இருப்பதால் மனச்சோர்வு உண்டாகலாம். கார்போஹைட்ரேட் நிறைந்த உணவுகளை உட்கொள்ளும்போது, அவை செரட்டோனின் மற்றும் ட்ரைப்டோஃபன் போன்ற வேதிப்பொருள்கள் உருவாக உதவுகின்றன, இவை நலமாக வாழும் உணர்வை ஏற்படுத்துகின்றன.  

தவறான நம்பிக்கை: மனச்சோர்வு என்பது மரபு ரீதியில் வரக்கூடிய ஒரு பிரச்னை. மனச்சோர்வு உள்ளவர்கள் திருமணம் செய்துகொள்ளக்கூடாது.

உண்மை: இப்படிச் சொல்வதற்கு ஆராய்ச்சி சார்ந்த சான்றுகள் எவையும் இல்லை. ஆகவே இது உண்மையாக இருக்க வாய்ப்பில்லை. மனச்சோர்வு நிலையில் உள்ளவர்கள் திருமணம் செய்துகொள்ளலாம், ஆரோக்கியமான வாழ்க்கையை வாழலாம். அதேசமயம், அவர்கள் தங்களுடைய பிரச்னையைப்பற்றித் தங்களுடைய துணைவர்களிடம் சொல்லிவிடவேண்டும்.

தவறான நம்பிக்கை: மனச்சோர்வு எப்போதும் வாழ்க்கை நிகழ்வுகளுடன் தொடர்புடையது.

உண்மை: எல்லா வாழ்க்கை நிகழ்வுகளும் மனச்சோர்வை உண்டாக்குவதில்லை. வேறு பல காரணங்களும் மனச்சோர்வைத் தூண்டலாம். உதாரணமாக சமூக ஆதரவு இல்லாமலிருத்தல் அல்லது இதய நோய், புற்றுநோய், ஹெச்ஐவி, தைராய்டு போன்ற உடல்நலப் பிரச்னைகள்.

தவறான நம்பிக்கை: ஆன்ட்டிடிப்ரஸன்ட்ஸ் எனப்படும் மனச்சோர்வைப் போக்கும் மருந்துகளை உட்கொண்டு, அதன்மூலம் மனச்சோர்வைக் குணப்படுத்திவிடலாம்.

உண்மை: மிகவும் மனச்சோர்வு கொண்ட நிலையில் உள்ளவர்களைத்தவிர மற்றவர்களுக்கு மருந்துகள் அவசியமில்லை. இந்தப் பிரச்னையைக் குணப்படுத்துவதற்கு உளவியல் சிகிச்சையும் உண்டு. மிதமான அல்லது நடுத்தரஅளவிலான மனச்சோர்வில் உள்ளவர்களுக்கு ஆலோசனை வழங்குதல் மற்றும் பிற சிகிச்சைகளும் நல்ல பலன் அளிக்கின்றன.

தவறான நம்பிக்கை: மனச்சோர்வினால் யாரும் தற்கொலை செய்துகொள்ளமாட்டார்கள்.

உண்மை: இதைப் புரிந்துகொள்வதற்கு, தற்கொலைபற்றிய தவறான நம்பிக்கைகளையும் நாம் தெரிந்துகொள்ளவேண்டும். ஒருவருக்குத் தீவிரமான மனச்சோர்வு நிலை ஏற்படும்போதுதான் அவர் தற்கொலைபற்றிச் சிந்திக்கிறார். ஆகவே அவருடைய குடும்ப உறுப்பினர்களும் நண்பர்களும் அவருடைய நடத்தையை,  செயல்பாடுகளை நுணுக்கமாகக் கவனித்து வரவேண்டும், விஷயம் கைமீறிச்சென்றுவிடுவதற்குமுன் தடுப்பு நடவடிக்கைகளை எடுப்பது மிக முக்கியம்.

தவறான நம்பிக்கை: மனச்சோர்வு நிலை கொண்ட பெரும்பாலானோர் ஒருபோதும் ஒரு மனநல நிபுணரைச் சந்திப்பதில்லை.

உண்மை: மனச்சோர்வினால் அவதிப்படும் பெரும்பாலானோர், மிகத்தீவிரமான மனச்சோர்வு நிலை கொண்டவர்கள்கூட சிகிச்சையின்மூலம் குணமாகலாம்.  ஆனால், அவர்கள் உதவி பெறாமலே இருக்கிறார்கள். மனச்சோர்வு கொண்டவர்களில் மூன்றில் ஒரு பங்குப் பேர்தான் சிகிச்சை பெறுகிறார்கள். பெரும்பாலான நேரங்களில் மக்கள் சுமார் பத்து ஆண்டுகளுக்கு மனச்சோர்வுடன் வாழ்ந்துவிட்டு, அதன்பிறகுதான் உதவியை நாடுகிறார்கள். ஒருவர் எவ்வளவு சீக்கிரத்தில் சிகிச்சை பெறுகிறாரோ அந்த அளவுக்கு அந்தச் சிகிச்சை  சிறப்பாக இருக்கும். அது உளவியல் சிகிச்சையாக இருந்தாலும் சரி, மருந்துகளாக இருந்தாலும் சரி, அல்லது வேறுவகை உதவியாக இருந்தாலும் சரி.  இந்தச் சிகிச்சைகளைக் கலந்து பயன்படுத்துவதும் நன்கு பயன்படக்கூடும்.

Related Stories

No stories found.
வொய்ட் ஸ்வான் ஃபவுண்டேஷன்
tamil.whiteswanfoundation.org