கற்பனை: அதிகச் சுறுசுறுப்பாக உள்ள எல்லாக் குழந்தைகளுக்கும் ADHD உள்ளது.
உண்மை: ஒரு குழந்தை ADHDன் அறிகுறிகளைக் கொண்டுள்ளது என்று உணர்ந்தால், பெற்றோர் ஒரு நிபுணரின் கருத்தைக் கேட்பது முக்கியமாகும். இன்றைய நாட்களில் ADHD என்பது எளிமையாகக் கூறப்படுகிறது, ஆனால் உண்மையில், ஒரு குழந்தை ADHD கொண்டுள்ளதாகக் கண்டறிய, மருத்துவ நிபுணர் குறைந்தது மூன்று வெவ்வேறு அமைப்புகளில் (வீடு, பள்ளி மற்றும் சமூக அமைப்பு) மேற்கொள்ளப்பட்ட உற்றுநோக்கல்களைக் காரணியாகக் கொள்ள வேண்டும்.
கற்பனை: ADHD மருந்து ஒரு மந்திர மருந்து போன்றது.
உண்மை: ADHD மருந்தின் விளைவு வழக்கமாக ஆறு மணிநேரங்கள் நீடிக்கும், அந்த நேரத்தில் குழந்தை தன் கையிலுள்ள செயலில் அதிகக் கவனமாக இருக்கும். இருப்பினும் ADHDக்குச் சிறப்பாக சிகிச்சையளிக்க, மருந்து மற்றும் பிற பழக்கம் மற்றும் வாழ்க்கைமுறை இடையீடுகள் இருக்கவேண்டும்.
கற்பனை: மனிதர்கள் அனைவருக்கும் ADHD உண்டு.
உண்மை: மனிதர்கள் அனைவரும் கவனமில்லாமல் ஒழுங்கில்லாததுபோல் உணரும் நாட்கள் உள்ளன, ஆனால், அவை ADHDயின் அறிகுறிகள் அல்ல. ஒருவருக்கு ADHD கண்டறியப்பட, அவர் அதிகச் செயல்பாடு- திடீர் உணர்வெழுச்சி மற்றும் கவனமின்மை ஆகியவை ஒவ்வொன்றிலும் குறைந்தது ஒன்பதில் ஆறு அறிகுறிகளைக் கொண்டிருக்க வேண்டும். இந்த அறிகுறிகள் அந்த நபரின் தினசரி வழக்கத்தைக் குறிப்பிடத்தக்க அளவு பாதிக்கலாம் (எடுத்துக்காட்டாக, கெடுத்தேதிகளை மறப்பது, திடீர் உணர்வெழுச்சியாகச் செலவிடுதல் போன்றவை).
கற்பனை: குழந்தைகளுக்குமட்டுமே ADHD வரும்.
உண்மை: ADHD பொதுவாகக் குழந்தைப் பருவத்தில், வழக்கமாக ஏழு வயதுக்குமுன் கண்டறியப்படுகிறது. அந்தக் குழந்தைகள் வளரும்போது, அதிகச் செயல்படுதல் மற்றும் திடீர் உணர்ச்சி குறையலாம், ஆனால் கவனமின்மை தொடர்ந்து இருக்கும். பெரியவர்களுக்கும் ADHD வரலாம்.
கற்பனை: ADHD எந்த மன நல பிரச்னைகளுடனும் தொடர்புபடுத்தப்படவில்லை.
உண்மை: சிகிச்சையளிக்கப்படாத அல்லது போதிய சிகிச்சையளிக்கப்படாத ADHD உடைய குழந்தைகள் மனநலப் பிரச்னையின் பெரும் இடரில் உள்ளனர். இதனுடன் பெரும்பாலும் தொடர்புபடுத்தப்படும் பிரச்னைகள், நடத்தைக் குறைபாடு, உணர்வுக் குறைபாடு, பதற்றக் குறைபாடு மற்றும் கற்க இயலாமை ஆகியவையாகும்.
(இந்தக் கட்டுரை Dr T சிவகுமார், NIMHANS கூடுதல் மனநலவியல் பேராசிரியரால் மீள்பார்வை செய்யப்பட்டது)