உண்ணுதல் குறைபாடுகள்

Q

உண்ணுதல் குறைபாடுகள் என்றால் என்ன?

A

மாலை நேரம். நீங்கள் அலுவலகத்திலிருந்து வீட்டை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறீர்கள். உங்கள் மனம் ஏதேதோ சிந்தனைகளில் மூழ்குகிறது. சிறிது நேரத்தில் நீங்கள் உணவைப் பற்றி நினைக்கத் தொடங்குகிறீர்கள்.

இப்போது நான் என்ன சாப்பிடவேண்டும்? இப்போது நான் சமையல் செய்யலாமா அல்லது வெளியிலிருந்து உணவை ஆர்டர் செய்து சாப்பிடலாமா? நான் இப்போது பின்பற்றுகிற உணவுக் கட்டுப்பாட்டுத் திட்டத்தில் சைனீஸ் உணவுகளைச் சேர்க்கலாமா கூடாதா?

உணவு என்பது நம்முடைய வாழ்க்கைக்கு மிகவும் அடிப்படையான ஒரு விஷயம். அதை மையமாகக் கொண்டுதான் பெரும்பாலானோருடைய வாழ்க்கைகள் இயங்குகின்றன.

நம்மில் ஓவ்வொருவருக்கும் வெவ்வேறு உணவுப் பழக்கங்கள் இருக்கின்றன, இந்த உணவுதான் நல்லது என்கிற சுவையும் ஆளுக்கு ஆள் மாறுபடுகிறது.

அதுமட்டுமில்லை ஒருவரே தன்னுடைய வாழ்வின் வெவ்வேறு காலகட்டங்களில் வெவ்வேறு விதமான உணவுகளை விரும்புகிறார்கள், சில நேரங்களில் நிறைய உண்ணுகிறார்கள், சில நேரங்களில் உணவுக் கட்டுப்பாட்டில் இறங்கி, குறைவாக உண்ணுகிறார்கள். உணவுக் கட்டுப்பாட்டில் இருக்கிறவர்கள் அதைத் தீவிரமாகப் பின்பற்ற இயலாமல் மயங்கிப்போய் நிறையச் சாப்பிடுவதும் உண்டு.

இதுவரை நாம் பார்த்த அனைத்தும் எல்லாருடைய வாழ்க்கையிலும் இடம்பெறுகிற சாதாரணமான விஷயங்கள்தான். ஆனால் சிலருடைய வாழ்க்கையில் உணவு பற்றிய சிந்தனை சற்றே எல்லை மீறிவிடுகிறது.

இவர்கள் உணவைப் பற்றியும், உடல் எடையைப் பற்றியும், தங்களுடைய உடல் தோற்றத்தைப் பற்றியும் அதீதமாகச் சிந்திக்கத் தொடங்குகிறார்கள், அதற்காகத் தங்களுடைய உண்ணும் பழக்கத்தைக் கண்டபடி மாற்றிக் கொள்கிறார்கள். சிலர் மிகக்குறைவாகச் சாப்பிடத் தொடங்குகிறார்கள் அல்லது மிக அதிகமாகச் சாப்பிடத் தொடங்குகிறார்கள், அதுவும் ஒரு வேளை இரண்டு வேளை அல்ல, எந்த நேரத்திலும் இவர்களுடைய உணவுப் பழக்கம் சாதாரண மனிதர்களைப் போல் இல்லாமல் வித்தியாசமாக மாறிவிடுகிறது.

சிலர் ஒரு குறிப்பிட்ட காலகட்டத்திற்கு உணவைச் சாப்பிடாமலேகூட இருந்துவிடுகிறார்கள் (பக்தி, ஆன்மீகக் காரணங்களுக்காக சிலர் விரதம் இருப்பார்கள், அது இந்த வகையில் வராது).

உண்ணுதல் குறைபாடுகள் என்பவை தீவிரமான மனம் சார்ந்த பிரச்னைகள். இவற்றால் பாதிக்கப்பட்ட ஒருவருடைய உடல் ஆரோக்கியம் மிகவும் நலிவடையக்கூடும்.

அதே சமயம் இவற்றை எண்ணிப் பயப்படவேண்டியதில்லை, சரியான நேரத்தில் உதவி பெற்றால் இதனை முழுமையாகக் குணப்படுத்த இயலும்.

Q

உண்ணுதல் குறைபாட்டின் அறிகுறிகள் என்ன?

A

உண்ணுதல் குறைபாட்டின் சில அறிகுறிகள்:

பழக்கவழக்க அறிகுறிகள்:

 • பாதிக்கப்பட்டவர் அடிக்கடி விரதம் இருப்பார், எதைச் சாப்பிட்டாலும் அதில் எத்தனை கலோரிகள் இருக்கின்றன என்று எண்ணிக்கொண்டே இருப்பார்.
 • அவர்கள் மற்றவர்களுடன் சாப்பிடுகிற வாய்ப்புகளைத் தவிர்ப்பார்கள், தாங்கள் ஏற்கனவே சாப்பிட்டுவிட்டோம் என்று பொய் சொல்லுவார்கள். சில நேரங்களில் அவர்கள் உணவை ரகசியமாக ஒளித்துவைத்துத் தனியே சாப்பிடுவதும் உண்டு.
 • அவர்கள் அடிக்கடி கழிப்பறைக்குச் செல்வார்கள், குறிப்பாகச் சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போது அல்லது சாப்பிட்டு முடித்த உடனே கழிப்பறைக்குச் செல்வது இவர்களுடைய வழக்கமாகிவிடும். உண்மையில் அவர்கள் கழிப்பறைக்குச் செல்வது தாங்கள் சாப்பிட்ட உணவை எப்படியாவது வெளியேற்றிவிடவேண்டும் என்கிற துடிப்பில்தான், அந்த உணவு தங்களுடைய உடலில் சேராமல் தடுத்துவிடவேண்டும் என்று இவர்கள் தவிப்பார்கள்.
 • இவர்கள் நாளில் பலமுறை எடை பார்ப்பார்கள், அடிக்கடி கண்ணாடி முன் நின்று தங்களுடைய உருவத்தைப் பார்த்துக் கொண்டே இருப்பார்கள்.
 • இவர்களுக்கு உடற்பயிற்சியின்மீது அதீத ஆர்வம் வரும், வெளியே மழை கொட்டிக் கொண்டிருந்தால்கூட நான் ஓட்டப் பயிற்சிக்குச் சென்றே தீர வேண்டும் என்று பிடிவாதம் பிடிப்பார்கள், உடல்நிலை சரியில்லையென்றாலும் உடற்பயிற்சி செய்தே ஆகவேண்டும் என்பார்கள்.

உடல் சார்ந்த அறிகுறிகள்:

 • இவர்களுடைய எடை திடீரென்று வெகுவாகக் குறையும் அல்லது அடிக்கடி ஏறி இறங்கும்.
 • பாதிக்கப்பட்டவர் நாள் முழுவதும் களைப்பாக உணர்வார், சரியாகத் தூங்கமாட்டார், சோம்பேறித்தனமாக உணர்வார், தினசரி வேலைகளை இவர்களால் ஒழுங்காகச் செய்ய இயலாது.
 • இவர்கள் எப்போதும் குளிர்ச்சியாக உணர்வார்கள், நல்ல வெதுவெதுப்பான சூழ்நிலைகளில்கூட தங்களுக்குக் குளிர்வதாகச் சொல்வார்கள்.
 • இவர்கள் அடிக்கடி மயங்கி விழக்கூடும் அல்லது தலை சுற்றுவதைப் போல் உணரக்கூடும்.
 • இந்தப் பிரச்னை கொண்ட பெண்களுக்கு மாத விலக்குச் சுழற்சியில் தொந்தரவுகள் ஏற்படலாம், சிலருக்கு மாத விலக்கு வருவது நின்றே போய்விடலாம்.

உளவியல் அறிகுறிகள்:

 • பாதிக்கப்பட்டவர் தன்னுடைய எடை அதிகரித்துவிடுமோ என்கிற பயத்திலேயே இருப்பார்.
 • உணவு பக்கத்தில் இருந்தால் இவர்கள் பதற்றமாகி விடுவார்கள்.
 • இவர்கள் தங்களைப்பற்றித் தங்கள் மனத்தில் உண்டாக்கிக் கொண்டிருக்கிற பிம்பம் மிகவும் சிதைந்து காணப்படும், தாங்கள் ஆரோக்கியமான எடையில்தான் இருக்கிறோம் என்பதை உணராமல் இருப்பார்கள்.
 • உண்ணுதல் குறைபாடு பிரச்னை கொண்டவர்களிடையே மனச்சோர்வும் பதற்றமும் பொதுவாகக் காணப்படுகிறது.

ஒரு விஷயம், இந்த அறிகுறிகளைப் படித்துவிட்டு உணவுக் கட்டுப்பாட்டில் இருப்பதும், என்ன சாப்பிடுகிறோம் என்பதைக் கவனித்துச் சாப்பிடுவதும் தவறு என்று எண்ணிவிட வேண்டாம். அவை மிகவும் இயல்பான பழக்கங்கள்தான். அது எல்லை மீறும்போதுதான் உண்ணுதல் குறைபாடு ஏற்படுகிறது.

ஆகவே ஒரு கண்டிப்பான உணவுப் பழக்கத்தைப் பின்பற்றுகிற ஒருவர் உண்ணுதல் குறைபாட்டைக் கொண்டிருக்கிறார் என்று சொல்லிவிட இயலாது. மாறாக உண்ணுதல் குறைபாட்டைக் கொண்ட ஒருவர் உணவுடன் கொண்டிருக்கிற உறவு வித்தியாசமாக அமைந்துவிடுகிறது, அவர்கள் தங்களுடைய உடலைப் பற்றிய தவறான கருத்துகளை வளர்த்துக் கொண்டு அதற்கேற்பத் தங்களுடைய உணவுப்பழக்கத்தையும் மாற்றிக்கொண்டு சிரமப்படுகிறார்கள்.

உதாரணமாக ஒருவர் ஏதோ ஒரு குறிப்பிட்ட காரணத்திற்காக உணவுக் கட்டுப்பாட்டில் இறங்குவார், ஆனால் ஒரு கட்டத்தில் அந்த உணவுக் கட்டுப்பாட்டின் மீது முழு கவனமும் சென்றுவிடும், எந்தக் காரணத்திற்காக உணவுக் கட்டுப்பாட்டைத் தொடங்கினோம் என்பதையே அவர் மறந்துவிடக்கூடும்.

இன்னோர் உதாரணம் ஒருவர் ஆரோக்கியமான உடல் எடையைவிடக் குறைவாகவே இருப்பார், ஆனால் அவர் மனத்துக்குள் தன்னுடைய எடை மிகவும் அதிகம் என்று தோன்றிக்கொண்டே இருக்கும். இதுபோன்ற சூழ்நிலைகளில்தான் உண்ணுதல் குறைபாடுகள் ஏற்படுகின்றன.

Q

உண்ணுதல் குறைபாடுகள் எதனால் ஏற்படுகின்றன?

A

உண்ணுதல் குறைபாட்டுக்கு இதுதான் காரணம் என ஒரே ஒரு விஷயத்தை மட்டும் சுட்டிக்காட்ட இயலாது. பொதுவாகப் பல சிக்கலான காரணங்கள் ஒன்று சேர்ந்து இந்தப் பிரச்னைக்கு வழிவகுக்கின்றன.

பொதுவாக உண்ணுதல் குறைபாட்டுக்குக் காரணமாக அமையும் அம்சங்கள் உளவியல், சமூக மற்றும்  பழக்கவழக்கங்களைச் சார்ந்து அமைகின்றன. அந்தக் காரணிகளில் சில:

 • உளவியல் காரணிகள்: ஒருவருக்குப் பதற்றம், மனச் சோர்வு அல்லது மன அழுத்தம் போன்ற பிரச்னைகள் இருந்தால் அவர் எல்லாமே தன்னுடைய கட்டுப்பாட்டைவிட்டு விலகிக் கொண்டிருக்கிறது என்று உணரலாம், அந்த உணர்வுகளைச் சமாளிக்க இயலாமல் நிறையச் சாப்பிடத் தொடங்கலாம் அல்லது நிறைய உடற்பயிற்சி செய்யத் தொடங்கலாம். இப்படிச் செய்தால் தங்களுடைய வாழ்க்கையைத் தங்களால் கட்டுப்படுத்த இயலும் என்று இவர்கள் தவறாக நம்பி உண்ணுதல் குறைபாட்டால் பாதிக்கப்படுகிறார்கள்.
 • சமூகக் காரணிகள்: ஊடகங்களும் சமூகமும் ஒருவருடைய உடல் சார்ந்த அம்சங்கள் மற்றும் தோற்றம் ஆகியவற்றுக்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுக்கின்றன. உதாரணமாக ஒல்லியாக இருப்பதுதான் அழகு என்கிற தோற்றத்தை ஊடகங்களும் சமூகமும் உருவாக்கி உள்ளன. இந்த விஷயம் தொடர்ந்து ஒருவருக்குச் சொல்லப்பட்டுவரும்போது அதனால் அவர் மனத்தில் அழுத்தம் உண்டாகலாம், அவர் தன்மீது வைத்திருக்கும் சுயமதிப்புக் குறைந்து போகலாம். எப்படியாவது இந்த உணர்விலிருந்து தப்பவேண்டும் என்பதற்காக அவர்கள் தங்களைத் தாங்களே பட்டிணி போட்டுக்கொள்ளத் தொடங்கலாம் அல்லது அதீதமாக உடற்பயிற்சி செய்ய ஆரம்பிக்கலாம்.
 • பழக்கவழக்கக் காரணிகள்: சில குறிப்பிட்ட ஆளுமைப் பண்புகளைக் கொண்டவர்களுக்கு உண்ணுதல் குறைபாடு வருவதற்கான வாய்ப்பு அதிகம். உதாரணமாக, எதிலும் தீவிரமாக ஈடுபடுகிறவர்கள், அல்லது, எதையும் கச்சிதமாகச் செய்யவேண்டும் என்று எதிர்பார்க்கிறவர்கள், அல்லது, தாங்கள் செய்ததை தாங்களே கடுமையாக விமர்சனம் செய்து கொள்கிறவர்கள் போன்றோருக்கு இந்தப் பிரச்னை வருவதற்கான வாய்ப்பு அதிகம் எனக் கண்டறியப்பட்டுள்ளது.
 • வாழ்க்கை நிகழ்வுகள்: குண்டாக இருக்கும் சிலரை அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் கேலி செய்து அல்லது சீண்டி விளையாடி இருக்கலாம், அல்லது அவர் உடல் ரீதியிலோ பாலியல் ரீதியிலோ துன்புறுத்தப்பட்டிருக்கலாம், இதுபோன்ற சூழ்நிலைகளில் அவர்கள் உண்ணுதல் குறைபாட்டால் பாதிக்கப்பட வாய்ப்புகள் அதிகரிக்கின்றன. இவர்கள் தங்கள் மனத்தில் ஏற்படும் அழுத்தத்தைச் சமாளிப்பதற்காக உணவுப் பழக்கத்தை வித்தியாசமாக மாற்றிக்கொண்டுவிடுகிறார்கள். இத்துடன் அன்புக்குரிய ஒருவரின் மரணம், பள்ளித் தேர்வுகளில் தோல்வியடைதல் அல்லது வேலை செய்கிற இடத்தில் நன்றாக வேலை செய்து பேர் வாங்க இயலாமல் இருத்தல் போன்ற காரணங்களாலும் உண்ணுதல் குறைபாடுகள் ஏற்படக்கூடும்.

Q

உண்ணுதல் குறைபாட்டின் வெவ்வேறு வகைகள் என்ன?

A

மிகவும் பொதுவான உண்ணுதல் குறைபாடுகள் இவை:

 • அனோரெக்ஸியா நெர்வோசா: அனோரெக்ஸியா பிரச்னை கொண்டவர்கள் வேண்டுமென்றே தங்களைப் பட்டிணி போட்டுக் கொள்வார்கள், தங்களுடைய உடல் எடை அதிகரித்துவிடுமோ என்கிற பயத்திலேயே இருப்பார்கள். இவர்களுடைய எடை சராசரியைவிடக் குறைவாக இருந்தாலும் தங்களுடைய எடை மிகவும் அதிகமாக இருக்கிறது என்றே இவர்கள் உணர்வார்கள். இவர்களைப் பொறுத்தவரை சுயமதிப்பு என்பது இவர்களது உடல் தோற்றத்துடன் இணைந்திருக்கிறது, இந்த எண்ணம் தான் இவர்களைப் பட்டிணி கிடக்கத் தூண்டுகிறது.
 • புலிமியா நெர்வோசா: புலிமியா பிரச்னை கொண்டவர்கள் திடீரென்று நிறையச் சாப்பிடுவார்கள், அதன்பிறகு தாங்கள் சாப்பிட்டதை வலுக்கட்டாயமாக வெளியேற்றுவார்கள் (வலுக்கட்டாயமாக வாந்தி எடுத்தல்) அல்லது அதீதமாக உடற்பயிற்சி செய்வார்கள் அல்லது மலமிளக்கிகள், சிறுநீர் இறக்கிகள் போன்றவற்றைப் பயன்படுத்துவார்கள் அல்லது பல நாள்கள் விரதம் இருந்து தாங்கள் சேர்த்த எடையைக் குறைக்க முயற்சி செய்வார்கள். இவர்கள் இப்படிச் செய்யக் காரணம் தாங்கள் எந்த அளவு உணவுப் பழக்கத்தைக் கட்டுப்படுத்திக் கொள்கிறோமோ அந்த அளவு தங்களுடைய சுயமதிப்பு அதிகரிக்கிறது என்று இவர்கள் எண்ணுவதுதான்.
 • மிகுதியாக உண்ணும் குறைபாடு: இந்தக் குறைபாடு கொண்டவர்கள் திடீரென்று நிறையச் சாப்பிடத் தொடங்குவார்கள், அவர்களால் சாப்பிடுவதை நிறுத்தவே இயலாது, தங்களைத் தாங்களே கட்டுப்படுத்திக் கொள்ள இயலாமல் தவிப்பார்கள். இவர்கள் சாப்பிட்ட உணவை வெளியே கொண்டு வரவோ உடல் எடையைக் குறைக்கவோ முயற்சி செய்வதில்லை, ஆனால் அதே சமயம் தங்களுடைய பழக்கத்தை எண்ணி மிகவும் வெட்கம் அடைகிறார்கள். இதனால் தங்களுடைய பிரச்னை மற்றவர்களுக்குத் தெரிந்துவிடுமோ என்று பயந்து இவர்கள் தனியே உண்ணத் தொடங்கலாம், பசியாக இல்லாதபோதும் நிறையச் சாப்பிட ஆரம்பிக்கலாம்.
 • மற்றபடி வரையறுக்கப்படாத உண்ணுதல் குறைபாடுகள் (EDNOS): EDNOS பிரச்னை கொண்டவர்களும் மேற்சொன்ன அதே அறிகுறிகளைதான் அனுபவிக்கிறார்கள், ஆனால் இவர்களுடைய பிரச்னையை அனோரெக்ஸியா, புலிமியா, மிகுதியாக உண்ணும் குறைபாடு என்கிற  வரையறைகளுக்குள் அமைத்துவிட இயலுவதில்லை. உதாரணமாக வழக்கத்திற்கு மாறான அனோரெக்ஸியா பிரச்னை கொண்ட ஒருவர் நீண்டகாலம் உண்ணுவதைத் தவிர்க்கலாம், ஆனால் அதே சமயம் அவர்கள் மிகவும் எடைக் குறைவாகவும் தோன்றாமல் இருக்கலாம். இன்னோர் உதாரணம் ஒருவர் குறைவாகவே சாப்பிடுவது, ஆனால் சாப்பிட்டு முடித்தவுடன் அதை  வெளியேகொண்டு வர முயற்சி செய்வது, இவர் ஆரோக்கியமான எடையில்தான் இருப்பார், ஆனால் இவருக்கும் உண்ணுதல் குறைபாடு உள்ளது என்பதே உண்மை.

Q

உண்ணுதல் குறைபாடுகளுக்குச் சிகிச்சை பெறுதல்

A

உண்ணுதல் குறைபாடுகள் மிகவும் சிக்கலானவை, இவை மனத்தையும் உடலையும் தீவிரமாகப் பாதிக்கின்றன.

அதே சமயம் சரியான சிகிச்சை எடுத்துக் கொண்டால் இந்தப் பிரச்னைகளிலிருந்து முற்றிலுமாக குணம் பெறலாம்.

இந்தப் பிரச்னை கொண்ட ஒருவர் எவ்வளவு சீக்கிரம் நிபுணர்களின் உதவியைப் பெறுகிறாரோ அவ்வளவு  சீக்கிரம் அவரால் முழுமையாகக் குணமாகிவிட இயலும்.

உண்ணுதல் குறைபாடுகளுக்கான சிகிச்சைகள் பொதுவாகப் பல நிபுணர்களால் வழங்கப்படுகின்றன: சிலர் பாதிக்கப்பட்டவருடைய உடல் நலத்தைக் கவனிப்பார்கள், சிலர் அவருடைய மனநலத்தைக் கவனிப்பார்கள், சிலர் அவருடைய ஊட்டச்சத்து தேவைகளைச் சரிசெய்வார்கள், சிலர் அவருடைய உணவுப் பழக்கத்தை மேம்படுத்துவதற்கு உதவுவார்கள்.

பிரச்னையின் தீவிரத்தைப் பொறுத்து ஒருவர் மருத்துவமனையில் சேர்க்கப்படவும்வேண்டியிருக்கலாம். நிலைமை கட்டுக்குள் வந்தவுடன் அவர் வீடு திரும்பிவிடலாம்.

உண்ணுதல் குறைபாட்டால் பாதிக்கப்பட்ட ஒருவர் அதற்காகச் சிகிச்சை பெறத் தொடங்கும்போது அதன் முதல்படி நிலை அவருடைய நிலையை இயல்பாக்கி அவரது உடல் ஆரோக்கியத்திற்கு எந்தத் தீவிர அச்சுறுத்தலும் இல்லாதபடிச் செய்வதுதான். அடுத்து அவர்கள் ஓர் ஆரோக்கியமான எடைக்கு வருவதற்கு என்ன செய்யவேண்டும் என்பதை நிபுணர்கள் சிந்தித்து அதற்கேற்ப திட்டங்களை வழங்குவார்கள்.

இந்தப் பிரச்னையால் பாதிக்கப்பட்ட ஒருவருக்கு ஊட்டச்சத்து மிக்க உணவுகள் தரப்படும், நல்ல உடல் ஆரோக்கியத்தைப் பராமரிப்பதற்கான உணவுப் பழக்கத்தை அவர் மேற்கொள்ளவேண்டும் என்று ஊக்கம் தரப்படும். அவர் குணமாவதற்கு இந்தச் சிகிச்சையும் ஆலோசனைகளும் மிக அவசியம், இதன்மூலம் அவர் உடல் எடையைப் பற்றிய பயத்தைப் போக்கிக்கொண்டு உணவு, எடை, உடல் தோற்றம் போன்றவற்றைப்பற்றிய ஆரோக்கியமான சிந்தனைகள், பழக்கங்களை வளர்த்துக்கொள்வார்.

Q

உண்ணுதல் குறைபாடு உள்ள ஒருவரைக் கவனித்துக் கொள்ளுதல்

A

உண்ணுதல் குறைபாடு கொண்ட ஒரு நண்பர் அல்லது குடும்ப உறுப்பினரைக் கவனித்துக் கொள்ளுதல் மிகவும் சிரமமான விஷயம்தான், அதே சமயம் நீங்கள் நம்பிக்கை இழந்துவிடக்கூடாது, உங்கள் அன்புக்குரியவர் மீது நீங்கள் செலுத்தும் அக்கறை அவர்களை முழுமையாகக் குணமாக்கும் என்பதை உணர்ந்து கொள்ளுங்கள்.

உண்ணுதல் குறைபாட்டினால் பாதிக்கப்பட்டவர்கள் தங்களுடைய பிரச்னையை எண்ணி மிகுந்த வெட்கம் கொண்டிருப்பார்கள். பலருக்குத் தாங்கள் இப்படி ஒரு பிரச்னையால் பாதிக்கப்பட்டிருக்கிறோம் என்பதே தெரிந்திருக்காது, அப்படியே தெரிந்திருந்தாலும் அதைக் கடுமையாக மறுப்பார்கள்.

ஆனால் அவர்கள் என்னதான் மறுத்தாலும் அவர்களுக்குச் சிகிச்சை அவசியம் என்பதை நீங்கள் புரியவைக்கவேண்டும், இதற்காக அவர்களுடன் நீங்கள் நிதானமாகப் பேசவேண்டும். எதையும் வற்புறுத்தாமல், அவர்கள் செய்தது தவறு என்று தீர்ப்புச் சொல்லாமல், அவர்களைப் பேசவிடுங்கள், அவர்கள் சொல்வதைக் கூர்ந்து கவனியுங்கள், அவர்களுடைய பயங்கள் என்னென்ன என்பதைப் புரிந்துகொள்ளுங்கள்.

நீங்கள் கவனத்தில் கொள்ளவேண்டிய ஒரு விஷயம் உங்களுடைய அன்புக்குரியவரின் பிரச்னை உணவோ எடையோ அல்ல. அவர்களுக்குள் ஆழமாக வேரூன்றியிருக்கும் உணர்வுப் பிரச்னைகளைச் சமாளிக்க இயலாமல்தான் அவர்கள் இப்படி நடந்துகொள்கிறார்கள். ஆகவே சிகிச்சையின்போது அவர்களுக்கு மிகுந்த ஆதரவு தேவை, அதை உங்களால்தான் வழங்க இயலும்.

உண்ணுதல் குறைபாட்டால் பாதிக்கப்பட்ட ஒருவர் சிகிச்சையிலிருக்கும்போது அவரைச் சுற்றியுள்ள அனைவரும் நல்ல உணவுப் பழக்கங்களை வளர்த்துக் கொள்வது அவசியம், உணவு, எடை, உடல் தோற்றம் போன்றவற்றைப்பற்றி அவர்கள் ஏதும் பேசாமல் இருப்பது நல்லது.

உண்ணுதல் குறைபாட்டுக்கான விரைவான தீர்வு என்று எதுவுமில்லை, பொறுமையோடு இருந்துதான் இந்தப் பிரச்னையைத் தீர்க்க இயலும்.

Q

உண்ணுதல் குறைபாட்டைச் சமாளித்தல்

A

உண்ணுதல் குறைபாட்டுக்கான சிகிச்சை நெடுநாள்கள் நடைபெறும், அது மிகுந்த அழுத்தம் தருகிற ஒன்றாக இருக்கலாம். அதே சமயத்தில் பாதிக்கப்பட்ட ஒருவர் தனக்கு வழங்கப்பட்டிருக்கிற சிகிச்சைத் திட்டத்தை மிகவும் அக்கறையோடு பின்பற்றினால்தான் அவரால் முழுமையாகக் குணமடைய இயலும்.

பொதுவாக உண்ணுதல் குறைபாடு என்பது ஒருவர் தன்னுடைய உணர்வுப் பிரச்னைகளைச் சமாளிக்க இயலாததால்தான் ஏற்படுகிறது. ஆகவே இந்த உணர்வுப் பிரச்னைகளைச் சமாளிப்பதற்கு அவர்கள் வேறு சிறந்த வழிமுறைகளைக் கண்டறியவேண்டும். விஷயங்கள் தன்னுடைய கட்டுப்பாட்டிலிருந்து விலகிக் கொண்டிருக்கின்றன என்று நினைக்கும்போதேல்லாம் உணவை ஒரு சாக்காகப் பயன்படுத்துவதை அவர்கள் நிறுத்தவேண்டும், சாப்பிடாமல் இருப்பதாலோ, நிறையச் சாப்பிடுவதாலோ அந்த உணர்வுப் பிரச்னைகள் தீர்ந்துவிடாது என்பதைப் புரிந்து கொள்ளவேண்டும்.

ஒருவர் சிகிச்சையிலிருக்கும்போது இப்படி நிறையச் சாப்பிடவேண்டும் அல்லது சாப்பிடாமல் இருக்கவேண்டும் என்கிற துடிப்புகள் அவருக்கு ஏற்படுவது சகஜம்தான், அதுபோன்ற நேரங்களில் அவர்கள் தங்களுடைய உணர்வுப் பிரச்னைகளைச் சமாளிக்க வேறு முறைகளைப் பின்பற்றுவது முக்கியம்.

இதனால் சிகிச்சையில் உள்ள ஒருவர் நெடுநேரம் தனியாக இருப்பதைத் தவிர்க்கவேண்டும், அப்படித் தனியாக இருக்கும்போது அவர்களால் தங்களுடைய உணர்வுப் பிரச்னைகளை அவ்வளவு எளிதில் சமாளிக்க இயலாது.

அதற்குப் பதிலாகத் தாங்கள் தளர்வாக உணரும்போதெல்லாம் அவர்கள் தங்களுடைய அன்புக்குரிய ஒருவரிடம் பேசலாம், அதன்மூலம் அவர்களுடைய அழுத்தம் பெருமளவு குறையும்.

Related Stories

No stories found.
logo
வொய்ட் ஸ்வான் ஃபவுண்டேஷன்
tamil.whiteswanfoundation.org