ஜெரியாட்ரிக் (வயதானோர்) மனச்சோர்வு

Q

ஜெரியாட்ரிக் மனச் சோர்வு என்றால் என்ன?

A

சுந்தர் அறுபது வயதான முதியவர். அவர் திடீரென்று அடிக்கடி உடல் வலிப்பதாகப் புகார் சொல்ல ஆரம்பித்தார். ஆனால் அவர் ஆரோக்கியமாகவே காணப்பட்டார். சில நாள்களில் அவர் காரணமில்லாமல் எரிச்சல் அடைவார், பிடிவாதம் பிடிப்பார், குடும்ப உறுப்பினர்களிடம் கோபப்படுவார். அவருடைய பழக்கவழக்கம் இப்படி திடீரென்று  மாறியது அவருடைய மகனுக்குக் கவலை அளித்தது. அவர் மருத்துவரைச் சென்று சந்தித்தார், அந்த மருத்துவர் சுந்தருக்கு மனச் சோர்வு இருப்பதை உறுதி செய்தார்.

இந்தக் கற்பனை விவரிப்பு இந்தக் குறைபாட்டை ஒரு நிஜ வாழ்க்கைச் சூழலில் அமைத்து அதைப் புரிந்து கொள்ள உதவுவதற்காக உருவாக்கப்பட்டுள்ளது.

முதியவர்களிடம் வரும் மனச் சோர்வு ஜெரியாட்ரிக் மனச் சோர்வு என அழைக்கப்படுகிறது. இது அபூர்வமாகவே கண்டறியப்படுகிறது அல்லது அபூர்வமாகவே இதற்குச் சிகிச்சை அளிக்கப்படுகிறது. வயதானவர்கள் பொதுவாகவே சோகமாக உணர்வார்கள் என்றும், இதற்குக் காரணம் அவர்களுடைய ஆரோக்கியப் பிரச்னைகள் தான் அல்லது அவர்கள் தங்களுடைய அன்புக்குரியவர்களை இழந்திருப்பதுதான் என்றும் தவறாக எண்ணிப் பலர் மனச் சோர்வை வயதாவதன் ஓர் இயல்பான பகுதி என நினைத்துவிடுகிறார்கள். அதோடு பல வயதானவர்களும் தங்களுடைய பிரச்னைகளைப் பகிர்ந்து கொள்ளத் தயங்குகிறார்கள், ஒருவேளை மற்றவர்கள் தங்களைக் கேலி செய்வார்களோ அல்லது புறக்கணித்துவிடுவார்களோ என்று பயப்படுகிறார்கள், அது அவர்களுக்கு மிகுந்த மனவலியை உண்டாக்கக் கூடும்.

Q

ஜெரியாட்ரிக் மனச் சோர்வின் அறிகுறிகள் என்ன?

A

முதியவர்களிடையே வரும் மனச் சோர்வு பொதுவாகக் கண்டுகொள்ளப்படுவதில்லை அல்லது அதைக் கண்டுபிடிப்பது சிரமமாக உள்ளது. காரணம் இதன் பொதுவான அறிகுறிகளான பசியின்மை அல்லது தூக்கமின்மை, களைப்பு, எரிச்சல் அடைதல் போன்றவை வயதாவது அல்லது முதிய வயதுடன் தொடர்புடைய ஏதேனும் ஓர் உடல் நோயின் பகுதியாக இருக்கலாம்.  சில சமயங்களில், அல்சைமர்ஸ், பார்க்கின்சன்ஸ் மற்றும் கண்பார்வை அல்லது காது கேட்டல் இழப்பு போன்ற குறைபாடுகளின் ஆரம்பக்கட்ட அறிகுறிகளும் மனச் சோர்வின் அறிகுறிகளைப் போலவே இருக்கலாம்.

மனச் சோர்வின் பொதுவான அறிகுறிகளுடன் ஜெரியாட்ரிக் மனச் சோர்வுக்குச் சில குறிப்பிடத்தக்க தன்மைகள்  உண்டு:

 • நிகழ்வுகளை நினைவு வைத்துக் கொள்ள இயலாமல் இருத்தல்
 • பிறருடன் பழக விருப்பமின்றி இருத்தல்
 • பசியின்மை மற்றும் எடை இழப்பு
 • அடிக்கடி உடல் வலிக்கிறது என்று புகார் சொல்லுதல்
 • பொறுமையின்மை, அடிக்கடி குடும்ப உறுப்பினர்களிடம் எரிச்சல் படுதல்
 • தூக்கமின்மை மற்றும் அமைதியின்மை
 • மனச் சோர்வானது பிற தீவிர நோய்களான நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம், பக்கவாதம், மூட்டுவலி, புற்றுநோய் போன்றவற்றுடன் கூட இருக்கலாம்.

Q

ஜெரியாட்ரிக் மனச் சோர்விற்குச் சிகிச்சை பெறுதல்

A

ஜெரியாட்ரிக் மனச் சோர்வைக் கண்டறியவில்லை அல்லது அதற்குச் சிகிச்சை அளிக்கவில்லை என்றால் அது குடும்பத்துக்குத் தேவையில்லாத துன்பத்தை உண்டாக்கக் கூடும், நல்ல பயனுள்ள வாழ்க்கையை வாழவேண்டிய அந்தத் தனி நபருக்கும் துன்பம் தரும். ஆகவே முதியவர்களுக்கு மனச் சோர்வின் ஆரம்ப நிலையிலேயே சிகிச்சை வழங்குவது முக்கியம்.

மருத்துவர்கள் சிபாரிசு செய்வது சிகிச்சை அல்லது ஆலோசனையோடு ஆதரவளிக்கும் ஒரு குடும்பச் சூழல், அன்பு மற்றும் பராமரிப்பு, தொடர்ச்சியான உடற்பயிற்சிகள் ஒழுங்கான தினசரி நடைமுறைகள் ஆகியவை முதியவர்கள் குணமாவதிலும் ஒரு மகிழ்ச்சியான மற்றும் முழுமையான வாழ்க்கையை வாழ்வதிலும் முக்கிய பங்காற்றுகின்றன.

Q

ஜெரியாட்ரிக் மனச் சோர்வு கொண்ட ஒருவரைக் கவனித்துக் கொள்ளுதல்

A

உங்கள் வீட்டில் ஒரு முதியவர் மனச் சோர்வினால் சிரமப்படுகிறார் என்றால் நீங்கள் அவர்களுக்கு உணர்வு நிலை ஆதரவை அளிக்கலாம். அவர்களுடைய உணர்வுகள் மற்றும் உணர்ச்சிகளைப் பொறுமையாகவும் அனுதாபத்துடனும் கேட்டால் அந்த முதியவர்களால் தங்களுடைய நிலையைப் பெருமளவு சமாளிக்க இயலும். நீங்கள் இந்தப் பிரச்னையைக் கண்டறிவதற்காக அவர்களை மருத்துவரிடம் அழைத்துச் செல்லலாம், தேவையான சிகிச்சையைப் பெறுமாறு அவர்களுக்கு ஊக்கமளிக்கலாம்.

நீங்கள் செய்யக்கூடிய மற்ற விஷயங்கள்:

 • அந்த நபருக்கு எதைச் செய்வதில் ஆர்வம் இருக்கிறதோ அந்தச் செயலைச் செய்யுமாறு ஊக்கம் தாருங்கள். இந்தச் செயல் அவர்களைச் சுறுசுறுப்பாகவும் கவனத்துடனும் வைத்திருக்கும்.
 • அவர்கள் தினசரி நடக்கச் செல்லும்போது உடன் செல்லுங்கள்.
 • அவர்கள் தங்களுடைய நண்பர்கள் மற்றும் பிற குடும்ப உறுப்பினர்கள் அல்லது உறவினர்களைச் சந்திக்கவேண்டும் என்று மெதுவாக வலியுறுத்துங்கள், அதன்மூலம் அவர்களால் பிறருடன் சமூகரீதியில் ஊடாட இயலும்.
 • அவர்களுடைய தினசரி நடவடிக்கைகளைக் கால அட்டவணைப்படுத்தி அவர்கள் ஓர் ஒழுங்கைப் பின்பற்றுமாறு செய்யலாம்.
 • அவர்கள் ஊட்டச்சத்துள்ள உணவு வகைகளை உண்பதை உறுதி செய்யலாம்.
 • சிகிச்சைத் திட்டத்தை அவர் பின்பற்றுமாறு ஊக்கம் தரலாம்.

Related Stories

No stories found.
வொய்ட் ஸ்வான் ஃபவுண்டேஷன்
tamil.whiteswanfoundation.org