மதுப்பழக்கத்திலிருந்து விடுபடுதல்

ஒருவர் மதுவைச் சார்ந்து வாழத்தொடங்குவது ஏன்? அப்படி மதுவுக்கு அடிமையான ஒருவர், ஒரு புதிய, சுத்தமான வாழ்க்கைமுறையை உருவாக்கிக்கொள்ளவேண்டுமென்றால், அவர் என்ன செய்யவேண்டும்?

'மதுவால் தன்னைத்தானே துன்புறுத்திக்கொள்ளுதல்' என்றால் என்ன?

மதுப்பழக்கம் கொண்ட ஒருவர், அதனால் பல எதிர்மறையான விளைவுகளைச் சந்திக்கிறார். உதாரணமாக, உடல்சார்ந்த பிரச்னைகள், பிறருடன் பழகுவதில் பிரச்னைகள், சமூகப் பிரச்னைகள் போன்றவை. இப்படிப் பல பிரச்னைகள் வந்தபோதும், அவர் தொடர்ந்து மது அருந்திக்கொண்டிருக்கிறார் என்றால், அந்த நிலையை, 'மதுவால் தன்னைத்தானே துன்புறுத்திக்கொள்ளுதல்' என்கிறோம். தான் எவ்வளவு குடிக்கிறோம் என்பதை ஒருவரால் கட்டுப்படுத்த இயலவில்லை என்றால், அதாவது, குடிக்க ஆரம்பித்தபிறகு அவரால் நிறுத்த இயலவில்லை என்றால், அவர் மதுப்பழக்கத்துக்கு அடிமையாகியிருப்பதாகக் கூறுகிறார்கள்.

இந்தியாவில் குறைந்தபட்சம் 30% ஆண்கள், 5% பெண்கள் தொடர்ந்து மது அருந்துவதாகக் கணக்கிடப்பட்டுள்ளது. பெரும்பாலான இளைஞர்கள் ஆர்வத்தினால் அல்லது, சக நண்பர்களின் வற்புறுத்தலால்தான் மது அருந்தத் தொடங்குகிறார்கள், பிறகு அது ஒரு பழக்கமாகவே மாறிவிடுகிறது. 1980களில், இந்தியாவில் ஒருவர் முதன்முதலாக மது அருந்திய சராசரி வயது, 28. இப்போது, இந்த எண்ணிக்கை 17ஆகக் குறைந்துவிட்டது. அதாவது, சராசரியாகப் பதினேழு வயதிலேயே ஒருவர் முதன்முறையாக மது அருந்திவிடுகிறார்.1

பியர், ஒயின், மற்ற மது ரகங்கள் பெரும்பாலும் நகரங்களில் பிரபலமாக உள்ளன, கிராமப்புறங்களில் சாராயம் அதிகம் அருந்தப்படுகிறது. இந்த பானங்கள் அனைத்திலும் எத்தில் ஆல்கஹால் உள்ளது. இது ஒருவருடைய மனோநிலையை மாற்றும், அவரது உடலைப் பலவிதமாகப் பாதிக்கும். எல்லா மது வகைகளிலும் எத்தில் ஆல்கஹால் உண்டு, அதன் சதவிகிதம்தான் மாறும்.

ஒருவர் மது அருந்தும்போது, அது அவரது ரத்தத்தால் ஏற்றுக்கொள்ளப்படுகிறது, பின்னர் உடல்முழுவதும் பரவுகிறது. ஒருவர் ஒரே ஒருமுறை மது அருந்தினால் போதும், அவரது உடல் சில மணிநேரங்களுக்குப் பாதிக்கப்படுகிறது. அப்போது, மது அருந்தியவருடைய மனம் இறுக்கமின்றித் தளர்வடைகிறது, அவர் மகிழ்ச்சியாக உணர்கிறார். படிப்படியாக, மதுவின் தாக்கம் குறைகிறது. மது அருந்தியவர் குழப்பமாகவும் மயக்கமாகவும் உணர்கிறார். மது அருந்தியதும், ஒருவருடைய மனத்தடைகள் விலகுகின்றன, அவரது அசைவுகளில் ஒழுங்கு குறைகிறது, அவரது பாலியல் விருப்பம் அதிகரிக்கிறது, ஆனால், பாலியல் செயல்திறன் குறைந்துவிடுகிறது.

ஒருவர் மதுவுக்கு அடிமையாகிறார் என்றால், அவரது மூளை நீண்டநாள் பாதிப்புக்கு உள்ளாகிறது, அது திரும்பத்திரும்பப் பலமுறை ஏற்படக்கூடியது, இதனால் அவருக்கு உளவியல்ரீதியிலும் சமூகரீதியிலும் பல பாதிப்புகள் ஏற்படக்கூடும்.

'போதை ஏறுதல்' என்றால் என்ன?

மனித உடலால் ஒரு மணிநேரத்துக்கு ஒரு பானத்தை ஜீரணிக்க இயலும். ஒருவேளை, யாராவது ஒரு மணி நேரத்தில் ஒரு பானத்துக்குமேல் உட்கொண்டால், அவரது உடலால் அதனை ஜீரணிக்க இயலாது, அவர் உட்கொண்ட மது அவரது உடல்முழுவதும் சுற்றிவருகிறது. ஆகவே, அவர் சோம்பேறித்தனமாக உணர்கிறார், ஒழுங்கற்றமுறையில் நடந்துகொளிறார், அவரது உடலையே அவரால் கட்டுப்படுத்த இயலுவதில்லை.

மது எப்படி மனித மூளையைப் பாதிக்கிறது?

மனித மூளையில் பேச்சு, செயல்பாடுகள், தீர்மானமெடுத்தல் ஆகியவற்றை நிகழ்த்துகிற பகுதிகள் மதுவால் பாதிக்கப்படுவது கண்டறியப்பட்டுள்ளது. ஒருவர் எப்போதாவதுதான் குடிக்கிறார் என்றால், அவருடைய மூளை மதுவின் தாக்கத்திலிருந்து விடுபட்டு இயல்பாக இயங்கத்தொடங்குகிறது. ஆனால், அவர் மதுவைச்சார்ந்து வாழ்கிறார், அடிக்கடி குடித்துக்கொண்டே இருக்கிறார் என்றால், மூளையால் அந்தத் தாக்கத்திலிருந்து விடுபட இயலுவதில்லை. சிறிதுநேரத்தில் அவரது உடல் தெளிவாகிவிடலாம், ஆனால், மூளை இன்னும் பாதிப்பிலேயே இருக்கிறது.

மதுவின் நீண்டநாள் பாதிப்புகள் சில:

  • ஞாபகசக்தி இழப்பு

  • மனச்சோர்வு

  • எரிச்சல் அல்லது மனநிலை மாற்றங்கள்

  • உயர் ரத்த அழுத்தம்

  • கருவுக்குப் பாதிப்பு

  • புற்றுநோய் அபாயம் அதிகரித்தல்

  • டிமென்சியா அபாயம் அதிகரித்தல்

  • கல்லீரல் பாதிப்பு

  • மூளைத் திசு சுருங்குதல்

  • இதயத் தசைகள் பலவீனமடைதல், ஒழுங்கற்ற இதயத்துடிப்பு, பக்கவாதம்

  • செரிமானப் பிரச்னைகள்

  • பாலியல் செயலின்மை

  • இளம்வயதிலேயே முதியவர்போன்ற தோற்றம், செயல்பாடுகள்

  • புத்திசாலித்தனம் குறைதல்

உயிரியல் மாற்றங்கள் ஒருபுறமிருக்க, மது அருந்தும் ஒருவர் பிறருடன் பழகுவதும் மாறிவிடுகிறது, அவரது உறவுகள் பாதிக்கப்படுகின்றன. இந்தியாவில் பெரும்பாலான குடும்ப வன்முறை நிகழ்வுகளும் சாலை விபத்துகளும் மதுவுடன் தொடர்புடையவை.

மதுவுக்கு அடிமையாதல்: சில உண்மைகள்

  • இரண்டு பேர் மது அருந்துகிறார்கள் என்றால், அவர்களில் ஒருவர் தீவிர மதுப்பழக்கத்துக்கு ஆளாகும் வாய்ப்புகள் உள்ளன என்கிறது உலகச் சுகாதார அமைப்பு (WHO).

  • மது அருந்தாதவர்களுடன் ஒப்பிடும்போது, மது அருந்துகிறவர்களுக்குக் குறிப்பிடத்தக்க உடல்நலப் பிரச்னைகள் வருகிற வாய்ப்புகள் மூன்று மடங்கு அதிகம்.

  • இந்தியாவில் உடல்நலம் கெட்டுப்போய் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுகிறவர்களில் ஐந்தில் ஒருவர் மதுப்பழக்கத்தால்தான் அந்த நிலைக்கு ஆளாகியுள்ளார்.

  • காயம் காரணமாக மருத்துவமனைக்கு வருகிறவர்களைக் கவனித்தால், அவர்களில் மூன்றில் இரண்டு பேருக்குக் காயம் ஏற்பட்ட காரணம் மதுவாகவே உள்ளது, அதேபோல், மூளை அதிர்ச்சிக் காயத்தால் மருத்துவமனைக்கு வருகிறவர்களில் ஐந்தில் ஒருவர் மதுப் பிரச்னையாலேயே அந்த நிலைக்கு ஆளாகியுள்ளார்கள்.

  • மது அருந்துவோர் வன்முறையில் ஈடுபடும் வாய்ப்பு அதிகம், குறிப்பாக, அவர்கள் தங்களுடைய துணைவர்களிடம் வன்முறையாக நடந்துகொள்ளக்கூடும். இங்கே வன்முறை என்பது, உடல்சார்ந்த, பாலியல்சார்ந்த, உணர்வுசார்ந்த, பொருளாதாரம்சார்ந்த வன்முறையாக இருக்கலாம்.

  • மது அருந்துவோர் தற்கொலை செய்துகொள்கிற வாய்ப்பு அதிகம், அவர்கள் ஆபத்தான பாலியல் பழக்கங்களில் ஈடுபடுகிற வாய்ப்பு அதிகம், அவர்களுக்கு HIV நோய்த்தொற்று, TB, உணவுக்குழாய்ப் புற்றுநோய், கல்லீரல் நோய் மற்றும் சிறுகுடல் புண் ஆகியவை  வருகிற வாய்ப்பு அதிகம்.

கண்மண் தெரியாமல் குடித்தல் என்றால் என்ன?

தொடர்ந்து நீண்டநாள் மது அருந்தினால்தான் நலப்பிரச்னைகள் வரும் என்று பெரும்பாலானோர் நினைக்கிறார்கள். ஆனால், ஒருவர் ஒரே ஒருநாள் கண்மண் தெரியாமல் குடித்தால்கூட, அவருக்கு ஞாபகசக்தி இழப்பு ஏற்படக்கூடும், அவர் உடலில் நச்சு சேர்ந்து, மதுவே அவருக்கு விஷமாகிவிடலாம், மரணம்கூட ஏற்படலாம்.

ஆண்கள் ஒரே நேரத்தில் (இரண்டு மணி நேரத்துக்குள்) ஐந்துமுறை மது அருந்தினால் (அல்லது, ஐந்து சிறு கோப்பைகளில் ஒயின் அருந்தினால்) அதனைக் 'கண்மண் தெரியாமல் குடித்தல்' என்று அழைக்கலாம். பெண்களுக்கும் இதே வரையறைதான், ஆனால் மதுவின் அளவு ஐந்து அல்ல, நான்கு. கண்மண் தெரியாமல் குடிப்பவர்கள் பொதுவாக அதிவேகமாகக் குடிப்பார்கள், போதை விரைவாக ஏறவேண்டும் என்று எண்ணுவார்கள். அவர்கள் மதுவுக்கு அடிமையானவர்கள் இல்லை, மதுவைச் சார்ந்து வாழ்கிறவர்கள் இல்லை, அவர்களால் மது இல்லாமல் வாழ இயலும்.

ஒருவர் கண்மண் தெரியாமல் குடிக்கும்போது, அவர் அருந்துகிற ஒவ்வொரு குவளையும் ஆபத்தை அதிகரிக்கிறது. கண்மண் தெரியாமல் குடிக்கிற ஒருவருக்கு, தன்னால் எந்த அளவு மதுவைச் சமாளித்துக்கொள்ள இயலும் என்பதே தெரியாது. அவர் அதைத்தாண்டிக் குடிப்பார், அவரது வாந்தியே அவரை மூச்சுத்திணறவைத்துவிடும். அதேபோல், கண்மண் தெரியாமல் குடிக்கிற ஒருவருடைய மூளையால் சரியாகத் தீர்மானமெடுக்க இயலாது. ஆகவே, அவர் பாதுகாப்பற்ற பாலியல் செயல்பாடுகளில் ஈடுபடக்கூடும், ஆபத்தான செயல்களில் இறங்கக்கூடும்.

இப்படி ஒருவர் அடிக்கடி கண்மண் தெரியாமல் குடித்துக்கொண்டிருந்தால், அவருக்குப் புற்றுநோய், மனச்சோர்வு அல்லது பதற்றம் போன்ற மனநலக் குறைபாடுகள், நிரந்தர மூளைச் சேதம் ஏற்படும் ஆபத்து அதிகரிக்கலாம்.

மதுவுக்கு அடிமையாதலை அடையாளம் காணுதல்

பெரும்பாலானோர் சமூகச் சூழலுக்கேற்பக் கொஞ்சம் மது அருந்துவார்கள், அதைச் சார்ந்து வாழமாட்டார்கள். ஆனால், சிலர், மதுவுக்கு அடிமையாகிவிடுவார்கள், தாங்கள் அதைச் சார்ந்து வாழ்கிறோம் என்பதே அவர்களுக்குத் தெரியாது. அதுபோன்ற சூழ்நிலைகளில், ஒரு பழக்கம் எப்போது அடிமைத்தனமாக மாறுகிறது என்பதைக் கண்டறியச் சில அடையாளங்கள் உண்டு. அதை வைத்துச் சம்பந்தப்பட்டவரோ அவரது அன்புக்குரியவர்களோ இதனைத் தெரிந்துகொள்ளலாம்.

மதுவுக்கு அடிமையான ஒருவரிடம் மதுச் சகிப்புத்தன்மை காணப்படும். அதாவது, ஒருவர் முன்பு இரண்டு கோப்பை மது அருந்தியவுடன் அவருக்குப் போதை ஏறியது என்றால், இப்போது அவருக்கு ஐந்து அல்லது ஆறு கோப்பைகள் தேவைப்படும், இல்லாவிட்டால் போதை ஏறாது.

மது இல்லாவிட்டால் ஒருவரால் இயல்பாக இருக்க இயலவில்லை என்றால், அவர் மதுவுக்கு அடிமையாகியிருக்கிறார் என்று ஊகிக்கலாம். ஒருவர் குடிப்பதை நிறுத்தும்போது, அவருக்குத் தீவிர உணர்வு மற்றும் உடல் பிரச்னைகள் வரக்கூடும், உதாரணமாக, நடுக்கம், பதற்றம், வியர்வை, குமட்டல் அல்லது எரிச்சல் போன்றவை வரலாம். இந்த அறிகுறிகள் ஒருவரிடம் காணப்பட்டால், அவர் உடனே ஒரு மருத்துவரைச் சந்தித்து ஆலோசனை பெறவேண்டும்.

ஒருவர் மதுவுக்கு அடிமையாகியிருப்பதைக் கண்டறிதல்

ஒருவர் மதுவுக்கு அடிமையாகியிருக்கிறாரா, இல்லையா என்பதைக் கண்டறியப் பல பரிசோதனைகள் உள்ளன. இவற்றில் சில பரிசோதனைகளை ஒருவர் தனக்குத்தானே செய்துகொள்ளலாம், ஆனால் மற்ற சில பரிசோதனைகளைப் பயிற்சி பெற்ற ஒரு மனநல நிபுணர்தான் செய்யவேண்டும்.

ஒருவர் தனக்குத்தானே செய்துகொள்ளக்கூடிய பரிசோதனைகளில் மிக எளிமையானது, மது அடிமையாதலைக் கண்டறியும் CAGE பரிசோதனை. இதில் நான்கு கேள்விகள் உள்ளன:

நீங்கள் குடிக்கும் மது அளவைக் குறைக்கவேண்டும் என்று எப்போதாவது எண்ணியிருக்கிறீர்களா?

உங்களுடைய மதுப்பழக்கத்தை யாராவது விமர்சித்தால் உங்களுக்கு எரிச்சல் வருகிறதா?

குடிப்பதை எண்ணி எப்போதாவது மோசமாக உணர்ந்துள்ளீர்களா, அல்லது, குற்றவுணர்ச்சி அடைந்துள்ளீர்களா?

எப்போதாவது, காலை எழுந்தவுடன் மது அருந்தி, அதன்மூலம் உங்களுடைய நரம்புகளை நிலைப்படுத்திக்கொண்டுள்ளீர்களா? அல்லது, முந்தைய நாள் குடித்ததன் பின்விளைவைச் சரிசெய்வதற்காக மறுநாள் காலையில் குடித்துள்ளீர்களா?

இந்தக் கேள்விகளில் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட கேள்விகளுக்கு ஒருவர் “ஆம்” என்று பதில் சொல்லியிருந்தால், அநேகமாக அவர் மதுவுக்கு அடிமையாகியிருக்கிறார் என்று பொருள். அவருக்கு நிபுணரின் உதவி தேவைப்படலாம்.

மதுப் பிரச்னைகளைக் கண்டறிவதற்கு, 'மதுவுக்கு அடிமையாதலைக் கண்டறியும் தணிக்கைப் பரிசோதனை'யையும் பயன்படுத்தலாம்.

சிகிச்சை

ஒருவர் மதுவுக்கு அடிமையாகியிருக்கிறார் என்றால், அதிலிருந்து மீள்வதன் முதல் படி, தனக்குப் பிரச்னை உள்ளதை அவர் ஏற்றுக்கொள்ளவேண்டும், அதைச் சரிசெய்யப் பிறரிடம் உதவி பெறவேண்டும். இதற்காக, அவர் ஒரு மருத்துவரை அணுகலாம், அல்லது, மதுவின் தாக்கத்திலிருந்து விடுபடுவதற்குத் தனக்கு உதவக்கூடிய ஒரு குடும்ப உறுப்பினர் அல்லது நண்பரிடம் பேசலாம். மருத்துவர் முதலில் அவருடன் விரிவாகப் பேசுவார், அவரது நிலையைப்பற்றி நன்கு தெரிந்துகொள்வார், பிரச்னை எந்த அளவு தீவிரமாக உள்ளது என்று மதிப்பிடுவார். மருத்துவர் அவருடைய நண்பர்கள், குடும்பத்தினருடனும் பேசக்கூடும். இந்த விவரங்களைக்கொண்டு, அவர் ஒரு சரியான சிகிச்சைத் திட்டத்தை உருவாக்குவார்.

ஆல்கஹாலுக்கு அடிமையான ஒருவர் அதிலிருந்து மீள்வதற்கான சிகிச்சை இரண்டு இலக்குகளைக் கொண்டிருக்கிறது: ஒன்று, பாதிக்கப்பட்டவர் மீண்டும் மது அருந்தாதபடி செய்வது, இரண்டு, மது அருந்தாமல் வாழவேண்டும் என்கிற அவருடைய விருப்பத்துக்கேற்ற ஒரு வாழ்க்கைமுறையை உருவாக்கித்தருவது.

பொதுவாக, இந்தச் சிகிச்சை 'நச்சு நீக்கும் செயல்முறை'யில் தொடங்குகிறது. இதற்குச் சுமார் ஒரு வாரம் அல்லது அதற்குமேல் ஆகலாம். இந்தக் காலகட்டத்தில், பாதிக்கப்பட்டவர் குடிப்பதை நிறுத்திவிடுகிறார், அதனால் அவரிடம் ஏற்படக்கூடிய பாதிப்புகளைக் கையாள்வதற்கு அவருக்கு மருந்துகள் தரப்படுகின்றன. இப்படி அவர் மது அருந்தாமல் வாழ்வதால், முன்பு அவர் மதுவுக்கு அடிமையாகியிருந்த பாணியிலிருந்து அவரது உடல் மாறுகிறது.

அடுத்து, ஆலோசனை அல்லது தெரபி தொடங்குகிறது. மதுவுக்கு அடிமையாவது என்றால் என்ன, அதில் என்னென்ன ஆபத்துகள் உள்ளன என்று அவருக்குச் சொல்லித்தரப்படுகிறது, அதிலிருந்து அவர் எப்படி மீளலாம் என்பதும் பேசப்படுகிறது. இந்த நிலையில், பாதிக்கப்பட்டுள்ளவர் ஏன் மதுவைச் சார்ந்திருக்கிறார் என்று ஆலோசகர் அல்லது மனநல நிபுணர் ஆராய்வார். ஒருவேளை, ஏதேனும் உணர்வுப் பிரச்னைகளால் இது ஏற்பட்டிருக்கிறது என்றால், அவற்றைச் சரி செய்ய முனைவார். பாதிக்கப்பட்டவர் ஆதரவுக் குழுக் கூட்டங்களிலும் கலந்துகொள்வார். இதுபோன்ற பலருக்கு ஒரே நேரத்தில் குழுச் சிகிச்சையும் அளிக்கப்படலாம். இதன்மூலம் அவர்கள் தங்களுடைய மறுப்புநிலையிலிருந்து வெளியே வருவார்கள், தாங்கள் மதுவுக்கு அடிமையாக இருப்பதால் ஏற்பட்டிருக்கக்கூடிய மனநலப் பிரச்னைகளைப்பற்றிப் பேசுவார்கள், தங்களைப்போலவே மதுவின் தாக்கத்திலிருந்து விடுபட முயன்றுகொண்டிருக்கும் பிறரிடம் ஆதரவு பெறுவார்கள், இந்தப் பழக்கத்தை மாற்றிக்கொள்ளவேண்டும் என்று ஊக்கம் பெறுவார்கள். இந்த நிலையின் நிறைவில், எந்தெந்தச் சூழ்நிலைகளில் அவர் மீண்டும் பழையபடி மதுப் பழக்கத்துக்கு ஆளாகக்கூடும் என்று அடையாளம் காண்பதற்குச் சொல்லித்தருவார்கள், அந்தச் சூழ்நிலைகளை எப்படித் தவிர்ப்பது என்று கற்றுத்தருவார்கள்.

இந்த நிலையில், பாதிக்கப்பட்டவருடைய குடும்பத்தினர், நண்பர்களுக்கும் இந்தப் பிரச்னைபற்றிச் சொல்லித்தரப்படுகிறது, இதைச் சரிசெய்ய அவர்கள் எப்படி உதவலாம் என்று விளக்குவதற்காக, அவர்களுக்கும் உதவிக் குழுக் கூட்டங்கள் நடத்தப்படுகின்றன.

சிகிச்சையின் மூன்றாவது மற்றும் நிறைவு நிலையில், பாதிக்கப்பட்டவர் தன்னுடைய வழக்கமான வாழ்க்கைமுறைக்குத் திரும்புகிறார், அதில் அவர் மது இல்லாமல் வாழ்வதற்கான ஆதரவு அளிக்கப்படுகிறது. இந்த விஷயத்தில் கூடுதல் உதவி பெறுவதற்காக, அவர் 'ஆல்கஹாலிக்ஸ் அனானிமஸ்' போன்றவற்றால் நடத்தப்படும் வழக்கமான ஆதரவுக் குழுக் கூட்டங்களிலும் கலந்துகொள்ளலாம்.

1. அனைத்துப் புள்ளிவிவரங்களும் இங்கிருந்து எடுக்கப்பட்டவை: குருராஜ் G, ப்ரதிமா மூர்த்தி, கிரீஷ் N & பெனெகல் V. மது தொடர்பான தீங்கு: இந்தியாவில் பொது ஆரோக்கியம் மற்றும் கொள்கைக்கான தாக்கங்கள், பதிப்பு எண். 73, NIMHANS, பெங்களூர், இந்தியா 2011

Related Stories

No stories found.
logo
வொய்ட் ஸ்வான் ஃபவுண்டேஷன்
tamil.whiteswanfoundation.org