என் தாயின் பிரபஞ்சம்

காவ்யா மூர்த்தி

தன்னுடைய தாய்க்கு ஸ்கிஜோஃப்ரெனியா வந்திருப்பது கண்டறியப்பட்டபோது, மனநலப் பிரச்னைகளைப்பற்றி முதன்முறையாகத் தெரிந்துகொண்ட ஒரு மகள் இதனை எழுதுகிறார்.

என் தாயின் பழைய நாள்களைப்பற்றிச் சிந்திப்பது சிரமம், அது மிகவும் விநோதமான சிந்தனையாகத் தோன்றுகிறது! அதில் பெரும்பகுதியை நான் மறந்துவிடுவது நல்லது, ஆனால், அதை நினைவுவைத்துக்கொள்வதும் நல்லதுதான். காரணம், அதிலிருந்து நான் நிறைய கற்றுக்கொண்டேன். ஒவ்வொரு நாளும் நான் ஏற்றுக்கொள்ளும் ஒரு முக்கியமான விஷயம், நலனும் மனநலமும் பலரால் இன்னும் சரியாகப் புரிந்துகொள்ளப்படவில்லை, நானே அதைக் கொஞ்சம்தான் புரிந்துகொண்டிருக்கிறேன்.

2014ம் வருடத்தின் தொடக்கத்தில், நான் சில மாதங்கள் வெளியூரில் தங்கிவிட்டு வீடு திரும்பினேன், அப்போது என் தாய் எங்கோ தொலைதூரத்தைப் பார்த்துக்கொண்டு அமர்ந்திருந்தார், அவருக்கு எதார்த்த உலகமே புரியவில்லை என்று தோன்றியது. சில நாளாகவே அவர் அப்படிதான் நடந்துகொண்டிருந்தார், ஆனால் நான் அதைப் பெரிதாகப் பொருட்படுத்தவில்லை. காரணம், இதற்கு என்ன செய்வது என்று எனக்குத் தெரியவில்லை. இது ஒரு பெரிய பிரச்னையாக இருக்கக்கூடும் என்று நம்ப நான் தயாராக இல்லை. ஆனால் இந்தமுறை, அது மிகவும் தீவிரமான பிரச்னையாகத் தோன்றியது. அடுத்த சில நாள்களில், அவருக்கு ஸ்கிஜோஃப்ரெனியா வந்திருப்பது கண்டறியப்பட்டது.

இன்றைக்கு, அவர் அந்தப் பிரச்னையின் தாக்கத்திலிருந்து மீண்டுவிட்டார். ஆனால் அதற்குள், அது அவரை எங்கேயோ கொண்டுசென்றுவிட்டது. தனக்குத் தரப்பட்ட சிகிச்சையை அவர் நன்கு ஏற்றுக்கொண்டார், இப்போது சகஜமாகச் செயல்பட்டுவருகிறார். ஆனால், ஒரு வருடம்முன்பு இதை யாராவது எனக்குச் சொல்லியிருந்தால், நான் நம்பியிருக்கமாட்டேன். என் தாய் சகஜமாகிவிடுவார் என்று நானே அப்போது நம்பவில்லை, அந்த நாள் வரவே வராதோ என்று பயந்துகொண்டிருந்தேன். ஒரு மனிதர் இன்னொரு எதார்த்தத்தில், இன்னொரு பிரபஞ்சத்தில் வாழ்கிறார் என்றால், அவரோடு நாம் சேர்ந்து வாழ்வது எப்படி?

என்னுடைய இருபதுகள்முழுக்க (இப்போது என் வயது 29), என்னுடைய தாயை எண்ணும்போதெல்லாம் எனக்குள் ஒரு வலுவான உதவியிலாவுணர்வு தோன்றும். எனக்கு 24 வயதானபோதிலிருந்து என் தாய் என்னுடன் வாழ்ந்துகொண்டிருக்கிறார். அதற்குமுன்னால், அவருக்கு இருமுறை திருமணமாகியிருந்தது, இரண்டு திருமணங்களுமே அவரைத் துன்புறுத்தியிருந்தன. அப்போது, அவரது மனநிலை வெகுவாகப் பாதிக்கப்பட்டிருந்திருக்கிறது. நான் என் தாய்க்கு ஒரே குழந்தை, எங்களுக்குக் குடும்ப ஆதரவு வலைப்பின்னல் என்று எதுவும் இல்லை, ஆகவே, என் தாய் என்னுடனே இருக்கட்டும் என்று நான் தீர்மானித்தேன், அதன்மூலம் அவர் குணமாவார் என்று நம்பினேன். ஆனால், என்னுடன் வாழ்வதால் அவருடைய நிலைமை அவ்வளவாக மேம்படவில்லை.  

அவருக்கு என்ன நடந்துள்ளது, ஏன் அப்படி நடந்தது என்று எனக்குச் சரியாகப்புரியவேஇல்லை. எங்கள் குடும்பத்திலிருந்த வன்முறை அவரது பிரச்னைக்குக் கண்டிப்பாகப் பங்களித்துள்ளது. ஆனால், அவர் ஏன் அப்படி நடந்துகொண்டார் என்று என்னால் எப்போதும் திருப்திகரமாக விளக்க இயன்றதில்லை.

மிகவும் மென்மையான, அக்கறையான மனிதராக இருந்த என் தாய், ஒரு முரட்டுத்தனமான, கடுகடுப்பான, தன்னைச்சுற்றியுள்ள உலகைப்பற்றிச் சிறிதும் கவலைப்படாத ஒருவராக மாறியிருந்தார்.  அவர் எப்போதும் தனது சூழல்களுடன் பொருந்திப்போகவில்லை. எங்கள் இருவரையும் காப்பாற்றுவதற்காக, நான் வேலைக்குச் செல்லவேண்டியிருந்தது. ஆகவே, நான் கவலைப்படுவதற்கு வேறு பல எதார்த்தமான பிரச்னைகள் இருந்தன. அதனால், நான் என்னுடைய ஆழமான குழப்பத்தை ஒத்திவைத்தேன். அவர் வீட்டு வேலைகளைச் செய்யவில்லை என்றால் பரவாயில்லை, 'அவர்கள் எப்போதும் வீட்டு வேலைகளைச் செய்துகொண்டே இருக்கவேண்டுமா என்ன?' என நான் எண்ணிக்கொண்டேன். அவர் ஒரு பில்லுக்குப் பணத்தைச் செலுத்த மறந்துவிட்டால், அல்லது, நெடுநேரம் உணவை மறந்து வைத்துவிட்டால், நான் 'மனச்சோர்வு' என்று சொல்வேன், அவர் மறந்த பணத்தைச் செலுத்திவிடுவேன், உணவை எடுத்துவைத்துவிடுவேன், அவ்வளவுதான். ஆனால், இப்படி அவர் மறக்கிற விஷயங்கள் நாளுக்கு நாள் அதிகரித்தன. என் தாய் வெறுமனே அங்கே இருக்கிறாரேதவிர, வேறு எந்தவிதத்திலும் அவர் தனது சுற்றுச்சூழலுடன் கலந்து பழகவில்லை என்பதை நான் குழப்பத்துடனும் சங்கடத்துடனும் பார்த்தேன், அதை மாற்றிக்கொள்ளுமாறு என்னால் அவரிடம் சொல்ல இயலவில்லை. அவர் தானியங்கிமுறையில் இயங்கினார், என் கைப்பிடிக்குச் சிக்காமல் விலகிச்சென்றுகொண்டிருந்தார்.

வருடங்கள் செல்லச்செல்ல, எனக்குள் ஒருவிதமான தெளிவற்ற சோகம் சேர்ந்துகொண்டது. என் தாய் இனிமேலும் முன்புபோல் இருக்கப்போவதில்லை என்ற உண்மையை நான் ஜீரணித்துக்கொள்ள முயன்றேன். இதற்குள் நாங்கள் ஒருவரைவிட்டு ஒருவர் நிறைய விலகியிருந்தோம். இதுவே ஓர் அசாதாரணமான விஷயம்தான். காரணம், நானும் என் தாயும் அவ்வளவு நெருக்கமாக இருந்தவர்கள். நான் சிரமப்பட்டு வேலைபார்த்தேன், வீட்டைக் காப்பாற்றினேன், அதேசமயம், நான் மிகவும் களைத்துப்போனேன். நான் செய்வது எதுவும் போதாது என்று நான் உணரத்தொடங்கினேன், எப்போதும் முழுமையற்ற உணர்வுடன் வாழ்ந்தேன். சில நேரங்களில் சோகம் மாறிக் கோபம் வரும், ஆத்திரம் வரும், கசப்பு வரும், எனக்குள் எப்போதும் ஓர் ஆத்திரம் பொங்கிக்கொண்டிருந்தது, அது என்னைக் களைப்படையச்செய்தது. இதற்காக, நான் கவனச்சிதறல்களைத் தேடினேன். என்னுடைய சொந்த விருப்பங்கள், லட்சியங்களை இழக்கத்தொடங்கினேன். என் தாயை என்னுடன் அழைத்துச்செல்லும் ஒரு வாழ்க்கையை என்னால் கற்பனை செய்துபார்க்க இயலவில்லை, அதேசமயம், அவர் என்னுடன் இருக்கிறார், ஆனால் இல்லை என்கிற இந்த வாழ்க்கையையும் என்னால் தொடர்ந்து வாழ இயலவில்லை.

ஒருகட்டத்தில், நான் விரும்பிக் குடியேறிய நகரத்திலிருந்து நான் வெளியேறினேன், என் தாய்க்குத் தெரிந்த ஒரு நகரத்துக்கு, அதாவது, என் சொந்த ஊருக்கு அவரை அழைத்துச்சென்றேன், அந்தச் சூழ்நிலையில் அவர் குணமாவார் என்று நம்பினேன். இது அவருக்குத் தெரிந்த நகரம், இங்கே அவர் பழைய நினைவுகளை மீட்டுக்கொண்டு, பழையபடி வாழத் தொடங்கலாம் என்று எனக்குத் தோன்றியது.

ஆனால், இந்த மாற்றம் அவரைக் குணப்படுத்தவில்லை. அது நிலைமையை இன்னும் மோசமாக்கியது. நான் உடைந்துபோனேன், என்னசெய்வது என்றே எனக்குத் தெரியவில்லை. ஒருநாள், இதைப்பற்றி நன்கு யோசித்த நான், ஒரு தீர்மானத்துக்கு வந்தேன்: என்னால் இந்த நிலைமையைச் சமாளிக்க இயலவில்லை, ஆகவே, நான் இதிலிருந்து ஒரு சிறு ஓய்வு எடுத்துக்கொள்ளவேண்டும். நான் சம்பாதிக்கவேண்டும், இன்னும் பல விஷயங்களைச் செய்யவேண்டும், அதற்காக, நான் என் தாயைத் தனியே விட்டுவிட்டுச் சென்றேன், அவரைக் கவனித்துக்கொள்வதற்கான ஏற்பாடுகளைச் செய்துவிட்டு வெளியேறினேன். அடுத்த சில மாதங்கள், நான் அவரிடமிருந்து விலகி வாழ்ந்தேன், என்னுடைய ஒவ்வொரு நாளையும் அவர் தீர்மானிக்கவில்லை.

சில மாதங்கள் கழித்து, நான் வீட்டுக்குத் திரும்பியபோது, பெரும்பாலான விஷயங்கள் மிக மோசமானபடி கலைந்திருந்தன. வீடுமுழுக்கத் தூசுபடிந்தாற்போலிருந்தது. அந்தக் காலகட்டத்தில் நானும் என் தாயும் பேசிக்கொள்ளவே இல்லை. அப்போது அவர் என்ன செய்தார் என்று எனக்குத் தெரியாது, அதைப்பற்றி அவரும் எனக்குச் சொல்லவில்லை. நான் வீடு திரும்பியபோது, என் தாய் என்னைப் பார்த்தார், பிறகு, அந்தப் பார்வையைச் சற்றே தளர்வாக்கிக்கொண்டார், 'என் மகள் இங்கே இல்லை' என்றார்.

என் தாயே என்னை ஒரு மூன்றாம் மனிதராக எண்ணிப் பேசியபோது நான் அடைந்த உணர்ச்சிகளை வர்ணிப்பது சிரமம். இந்த விநோத உணர்வுகளைப்பற்றி நான் பல நண்பர்களிடம் பேசியிருக்கிறேன். 'அம்மா, நான்தான் உங்கள் மகள்' என்று நான் அவரிடம் சொல்வேன். ஆனால், அவர் என்னை அலட்சியமாகப் பார்ப்பார். அது ஏன் என்று யாரும் விளக்கவில்லை. அதை மேலும் ஆழமாக விசாரிக்க நான் விரும்பவில்லை, அது எனக்குச் சங்கடமாக இருந்தது, ஆகவே, அமைதியாகிவிட்டேன். அவர் ஏன் என்மீது சந்தேகப்படுகிறார் என்று எனக்குப் புரியவில்லை. நான் அவருடைய மகள் இல்லை என்று அவர் ஏன் நினைக்கிறார்? அதற்கு என்னால் எந்தக் காரணத்தையும் சிந்திக்க இயலவில்லை.

சில நாள் கழித்து, ஓர் இரவுநேரத்தில், என் தாய் உடல்ரீதியில் வன்முறையாக நடந்துகொண்டார். அவருக்குள் ஏதோ நடந்திருக்கவேண்டும், அதை அவரால் கட்டுப்படுத்திக்கொள்ள இயலவில்லை. இப்போது யோசித்தால் எனக்கு மிகவும் ஆச்சர்யமாக இருக்கிறது, அவருக்கு என்ன நடந்திருக்கவேண்டும் என்று எனக்கு அப்போது புரியவே இல்லை. நான் பலவிதமான காரணங்களைக் கற்பித்துக்கொண்டேன். நான் என்ன செய்வது? என் தாய்க்கு என்ன நடக்கிறது?

அவர் வன்முறையாக நடந்துகொண்டபிறகுதான், இதுபற்றி யாரிடமாவது உதவி கேட்கவேண்டும் என்று எனக்குப் புரிந்தது என்று நினைக்கிறேன். அவரது நடவடிக்கைகளை, அவர் சொல்லும் விஷயங்களை நான் எத்தனைமுறை அலட்சியப்படுத்தியிருக்கிறேன், கண்டுகொள்ளாமலிருந்திருக்கிறேன் என்று நான் எண்ணிப்பார்த்தேன். அவை அனைத்தும், அசௌகர்ய உணர்வால் செய்யப்பட்டவை! நிறைவாக, நான் அவருக்கு மருத்துவ உதவி பெறத் தீர்மானித்தேன். மிகவும் தாமதமான தீர்மானம்தான், ஆனாலும் அதைத் தொடங்குவதுதான் நல்லது!

Related Stories

No stories found.
logo
வொய்ட் ஸ்வான் ஃபவுண்டேஷன்
tamil.whiteswanfoundation.org