தொலைபேசி, கணினிக்கு அடிமையாதல்

பல இளைஞர்கள் தொழில்நுட்பத்துக்கு அடிமையாகிக்கொண்டிருக்கிறார்கள், இது ஒரு பெரிய பிரச்னையாக வளர்ந்துகொண்டிருக்கிறது

நாம் தொழில்நுட்ப உலகில் வாழ்கிறோம், நமது வாழ்வின் பெரும்பகுதி, நமது திரைகளைச்சுற்றி நகர்கிறது. வேலைசெய்தல், படித்தல், நமது அன்புக்குரியவர்களுடன் தொடர்பில் இருத்தல், ஷாப்பிங், பில்களுக்குப் பணம் செலுத்துதல்... எல்லாவற்றையும் ஒரு மவுஸ் க்ளிக்கில் அல்லது ஃபோனைக்கொண்டு செய்துவிடலாம். நாம் இவ்வாறு தொழில்நுட்பத்தைச் சார்ந்திருப்பதால், நம் வாழ்க்கை மிகவும் எளிதாகிவிட்டது; அதேசமயம், நாம் எப்போது ஆரோக்கியமான, பயனுள்ள பாணிகளிலிருந்து (அதாவது, நாம் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவது எப்படி என்பதை நாமே கட்டுப்படுத்தும் நிலையிலிருந்து) ஆரோக்கியமற்ற, அடிமைத்தனமான பாணிகளுக்கு (அதாவது, நமது பயன்பாட்டின் கட்டுப்பாடு நம் கையில் இல்லாத நிலைக்கு) மாறுகிறோம் என்பதை நாமே அறிய இயலுவதில்லை. இங்கே முக்கியமான கேள்வி: எப்போது நமது பழக்கத்தை நாம் கட்டுப்படுத்தாமல், நம் பழக்கம் நம்மைக் கட்டுப்படுத்துகிற நிலை ஏற்படுகிறது? அதை எப்படி அறிவது?

ரோஹித்துக்கு வயது பத்தொன்பது. அவனுக்குத் தன்னுடைய ஸ்மார்ட்ஃபோன் என்றால் மிகவும் பிரியம். விழித்திருக்கும் நேரமெல்லாம் ஃபோனுடன்தான் இருப்பான். மற்ற பல பதின்பருவத்தினரைப்போலவே, அவனும் தன் மொபைல் ஃபோனைப் பயன்படுத்தி மின்னஞ்சல்கள், எஸ்.எம்.எஸ்.கள் அனுப்புவான், நண்பர்களுடன் அரட்டையடிப்பான், இணையத்தை மேய்வான், விளையாடுவான். ஆனால், மற்ற பதின்பருவத்தினரைப்போலில்லாமல், ரோஹித் தினமும் ஆறு மணிநேரமாவது தன்னுடைய ஸ்மார்ட்ஃபோன் திரையைப் பார்த்துக்கொண்டிருப்பான். அவனுக்குத் தினமும் குறைந்தது 400 எஸ்.எம்.எஸ்.கள் வரும், அவனும் 200 எஸ்.எம்.எஸ்.களையாவது அனுப்புவான். இப்படி எந்நேரமும் இந்தத் திரையையே பார்த்துக்கொண்டிருந்ததால், அவனுக்கு விரல்களில் வலியெடுத்தது, கண் வலித்தது, அவனால் சரியாகத் தூங்க இயலவில்லை, எப்போதும் ஃபோனை எடுத்து, அதில் என்ன செய்தி வந்திருக்கிறது என்று பார்த்துக்கொண்டே இருக்கவேண்டும் எனத் துடித்தான். இதனால், அவன் வகுப்பு நேரத்தில் தூங்கத் தொடங்கினான். விழித்திருக்கும்நேரத்திலும், அவன் எதிலும் கவனம் செலுத்துவதில்லை. எப்போதும் தனக்கு வரப்போகும் எஸ்.எம்.எஸ்.களையே யோசித்துக்கொண்டிருந்தான். அவனுடைய மதிப்பெண்கள் குறைந்தன. தங்கள் மகனிடம் ஏற்பட்டிருக்கும் மாற்றங்களைக் கவனித்த அவனுடைய பெற்றோர், மிகவும் கவலைப்பட்டார்கள். விரைவில், இந்தப் பிரச்னைக்கான காரணத்தை அவர்கள் கண்டறிந்தார்கள், ரோஹித் எஸ்.எம்.எஸ். பழக்கத்துக்கு அடிமையாகிவிட்டான்!

(இந்த விவரிப்பு, ஒரு நிஜக்கதையின் அடிப்படையில் எழுதப்பட்டது. பாதிக்கப்பட்டவரின் அடையாளத்தைப் பாதுகாப்பதற்காக, பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன.)

தொழில்நுட்பத்துக்கு அடிமையாதல்: இது ஒரு பெரிய பிரச்னையா?

தொழில்நுட்பம் எங்கும் நிறைந்திருக்கிறது. ஆகவே, ஆரோக்கியமான பயன்பாடு, ஆரோக்கியமற்ற பயன்பாடு இரண்டுக்கும் இடையிலுள்ள கோடு மிக மெல்லியதாகிவிட்டது. ஒருவர் எப்போது இந்தப் பக்கத்திலிருந்து அந்தப் பக்கத்துக்குச் சென்றார் என்பதைச் சொல்வது சுலபமில்லை. இந்த நடவடிக்கையை வெறும் எண்களால் வரையறுக்க இயலாது. இதனால் ஏற்படப்போகும் விளைவுகளும் உடனே தெரியாது, நாளாகும். இதனால்தான், மற்ற பழக்கங்களுக்கு அடிமையாகிறவர்களை உடனே அடையாளம் காண்கிற நாம், தொழில்நுட்பம் மற்றும் இணையத்துக்கு அடிமையாவதை ஒரு பெரிய பிரச்னையாக எண்ணுவதில்லை.

தொழில்நுட்பத்துக்கு அடிமையாவதன் இருட்டான பக்கத்தை நாம் வாசிக்கிறோம்: இணையத்தில் பொருள்களை வாங்கிக்குவித்துக் கடனில் மூழ்கியவர்கள், வீடியோ கேம்களிலிருந்து அந்தப்பக்கம் இந்தப்பக்கம் நகராமல் சொந்தக் குழந்தைகளையே பட்டினி போட்டவர்கள்... இப்படி இன்னும் நிறைய. இவற்றோடு ஒப்பிடும்போது, நாம் எவ்வளவோ பரவாயில்லை என்று தோன்றுகிறது. நாம் கணினி அல்லது தொலைபேசியில் மணிக்கணக்காக மூழ்கியிருப்பது ஒரு பெரிய பிரச்னையாகத் தெரிவதில்லை. ஆனால் உண்மையில், இதுவும் சில தீவிரப் பின்விளைவுகளை ஏற்படுத்தக்கூடும் என்பதை நாம் உணர்வதில்லை.

இன்றைக்கு, தொழில்நுட்பத்துக்கு அடிமையான பலரை மனநல நிபுணர்கள் குணப்படுத்திக்கொண்டிருக்கிறார்கள். மற்ற பழக்கங்களைப்போலவே இதுவும் ஒரு தீவிரப் பிரச்னையாகிவிட்டது. போதை மருந்துக்கு அடிமையானவர்களிடம் சில அறிகுறிகள் தென்படும், அதுபோல, தொழில்நுட்பத்துக்கு அடிமையானவர்களிடமும் சில குறிப்பிட்ட அறிகுறிகள் தெரிகின்றன, தொழில்நுட்ப வசதி இல்லாதபோது இவர்கள் தவிக்கிறார்கள், செயலற்று நிற்கிறார்கள். மற்ற பல பழக்கங்களைப்போலவே, ஒருவர் தொழில்நுட்பத்துக்கு அடிமையாவது வெறும் 'பழக்க'மாகதான் தொடங்குகிறது. அதைக் கட்டுப்படுத்தாவிட்டால், அது அவருடைய வாழ்க்கையின் பிற அம்சங்களைப் பாதிக்கக்கூடும்: பொதுவான ஆரோக்கியம், நலன், உறவுகள் மற்றும் தினசரிப் பணிகள்.

பெங்களூரில் தேசிய மனநலம் மற்றும் நரம்பு அறிவியல் அமைப்பு (NIMHANS) நடத்தும் SHUT (தொழில்நுட்பத்தை ஆரோக்கியமாகப் பயன்படுத்துவதற்கான சேவைகள்) மருத்துவமனைக்கு, ஒவ்வொரு மாதமும் சராசரியாக 15 பேர் வருகிறார்கள்.

தொழில்நுட்பத்துக்கு அடிமையாதல் என்றால் என்ன?

மருத்துவரீதியில், ஒருவர் ஒரு பொருளுக்கு அடிமையாகிறார் என்றால், அந்தப் பொருள் அவருக்கு மகிழ்ச்சி தருகிறது, அந்த மகிழ்ச்சிக்காக அவர் அந்தப் பொருளைச் சார்ந்து வாழத்தொடங்கிவிடுகிறார் என்று அர்த்தம். அப்படி ஒருவர் ஒரு பொருளைச் சார்ந்து வாழும்போது, அவர்களால் தங்கள் வாழ்க்கையின் பிற விஷயங்களில் கவனம் செலுத்த இயலுவதில்லை. உதாரணமாக, குடும்பம், நண்பர்கள், பணிப் பொறுப்புகள் போன்றவை. இதனால், பாதிக்கப்பட்டவருக்கும், அவரைச் சுற்றியிருக்கிறவர்களுக்கும் பிரச்னைகள் வருகின்றன.

ஒருவர் தொழில்நுட்பத்துக்கு அடிமையாகிறார் என்றால், அவர் ஒரு குறிப்பிட்ட தொழில்நுட்ப ஊடகத்துக்கு அடிமையாகிறார் என்று பொருள். இந்தியாவில் இந்தப் பிரச்னையோடு சிகிச்சைக்கு வருகிறவர்களில் பெரும்பாலானோர் இளைஞர்கள், இவர்களுடைய வயது 14லிருந்து 19க்குள். இவர்கள் தினமும் எஸ்.எம்.எஸ். அனுப்பவேண்டும், வீடியோக்களைப் பார்க்கவேண்டும், சமூக வலைத்தளங்களுக்குச் செல்லவேண்டும் என்று துடிக்கிறார்கள், அதற்காகத் தங்கள் மொபைல் ஃபோன்கள்/ கணினிகளை மிகையாகச் சார்ந்திருக்கிறார்கள்.

நமது வாழ்வின் எல்லா அம்சங்களிலும் தொழில்நுட்பத்தின் பயன்பாடு அதிகரித்துக்கொண்டிருக்கிறது. ஆகவே, தொழில்நுட்பத்துக்கு அடிமையாதல் மிகப்பெரிய சவாலாக உள்ளது, மிகச் சிக்கலான பிரச்னையாக உள்ளது. காரணம், தொழில்நுட்பத்தை நமது செயல்பாடுகளுக்கு உதவியாகப் பயன்படுத்திக்கொள்ளும் வரம்பு எது, அந்த நிலையைத் தாண்டி அது ஓர் ஆரோக்கியமற்ற பயன்பாட்டு பாணியாக மாறுவது எப்போது என்பதையெல்லாம் சொல்வது சிரமம்.

“ஒருவர் ஒரு குறிப்பிட்ட நோக்கத்துடன் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துகிறார் என்று வைத்துக்கொள்வோம், அது கல்வி நோக்கமாக இருக்கலாம், தொழில்சார்ந்த நோக்கமாக இருக்கலாம், வேறு பயன்பாடாக இருக்கலாம், அந்த நோக்கம் பூர்த்தியடைந்ததும் அவரால் மற்ற வேலைகளுக்குச் சென்றுவிட இயலுகிறது என்றால், அது இயல்பான பயன்பாடுதான்,” என்கிறார் டாக்டர் மனோஜ் ஷர்மா, NIMHANS மருத்துவ உளவியல் பிரிவின் இணைப் பேராசிரியர் இவர்.

NIMHANSல் உள்ள SHUT என்ற மருத்துவமனையை (தொழில்நுட்பத்தை ஆரோக்கியமாகப் பயன்படுத்துவதற்கான சேவைகள்) நடத்திவரும் டாக்டர் ஷர்மா, "ஒருவருடைய தொழில்நுட்பப் பயன்பாடு ஆரோக்கியமற்றதா என்பதைக் காணச் சில வழிகள் உள்ளன" என்கிறார், "இவர்கள் தொழில்நுட்பத்தை ஏன் பயன்படுத்துகிறார்கள் என்பதற்கு எந்த வரையறுக்கப்பட்ட நோக்கமும் இருக்காது, எந்தக் காரணமும் இல்லாமல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்திக்கொண்டே இருப்பார்கள், உள்ளே நுழைந்தபிறகு, இவர்களால் வெளியே செல்ல இயலாது." இவர்களுக்கு மற்ற வேலைகள் இருந்தாலும், அவ்வப்போது தொலைபேசியைப் பார்க்கவேண்டும், அல்லது மின்னஞ்சலைப் பார்க்கவேண்டும் என்று துடிப்பார்கள். இவர்களைச் சுற்றியுள்ள நண்பர்கள், குடும்ப உறுப்பினர்கள், சக ஊழியர்கள் எல்லாரும், "நீங்கள் முன்புபோல் எங்களுடன் அதிக நேரம் செலவிடுவதில்லை" என்பார்கள், அல்லது, "எங்களுடன் இருக்கும்போதும் நீங்கள் தொலைபேசியைதான் பார்த்துக்கொண்டிருக்கிறீர்கள்" என்பார்கள்.

மேலே விவரிக்கப்பட்டுள்ள ரோஹித்தைப்போல், பலரை SHUT மருத்துவமனை பார்த்திருக்கிறது. "பல பெற்றோர் தங்களுடைய பிள்ளைகளை எங்களிடம் அழைத்துவருகிறார்கள்" என்கிறார் டாக்டர் ஷர்மா, "இவர்களுக்கு எஸ்.எம்.எஸ். அனுப்புவது, வீடியோ கேம் விளையாடுவது, சமூக வலைப்பின்னல்களில் பங்கேற்பது, அல்லது, இணையத்தில் ஆபாசப்படங்களைப் பார்ப்பது ஆகியவற்றில் அதீத ஆர்வம், அதனால், பள்ளிப்பாடங்களைக் கவனிக்காமல், தினசரி வேலைகளைச் செய்யாமல், உடல்நலத்தைக்கூடக் கவனித்துக்கொள்ளாமலிருக்கிறார்கள்."

SHUT மருத்துவமனைக்கு வந்தவர்களிலேயே மிக இளையவர், ஆறு வயதிலிருந்து வீடியோ கேம்களை விளையாடிவரும் ஓர் இளைஞர், அவர் இங்கே வந்தபோது அவருக்கு வயது 14. அவர் தினமும் பள்ளியிலிருந்து வந்ததும் வீடியோகேம் விளையாட அமர்ந்துவிடுவார். சனி, ஞாயிறுகளில் எந்நேரமும் வீடியோகேம்தான். ஆரம்பத்தில் அவருடைய பெற்றோர் இதை ஒரு பெரிய பிரச்னையாகக் கருதவில்லை. ஆகவே, அந்த இளைஞர் எந்நேரமும் தன் அறையிலேயே இருந்தார், விளையாடிக்கொண்டிருந்தார், சாப்பாடு, தண்ணீர், எதற்காகவும் வெளியே வரமாட்டார். கொஞ்சம்கொஞ்சமாக, அவர் தன் பெற்றோர், பிற குடும்ப உறுப்பினர்களுடன் பேசுவதை நிறுத்திவிட்டார். அவருடைய பெற்றோர், "வயதுக்காலத்தில் இதெல்லாம் சகஜம், கொஞ்சநாளில் அவனே இதிலிருந்து வெளியே வந்துவிடுவான்" என்று நினைத்தார்கள். ஆனால், அது நடக்கவில்லை. ஒருநாள், பள்ளி நிர்வாகம் அவர்களை அழைத்து, "உங்கள் மகன் பாடங்களில் கவனம் செலுத்துவதில்லை, வகுப்பில் தூங்குகிறான், வீட்டுப்பாடங்களை ஒழுங்காகச் செய்வதில்லை" என்றது. அப்போதுதான் அவர்கள் பிரச்னையின் தீவிரத்தை உணர்ந்தார்கள். அவர்கள் உதவி நாடி SHUT மருத்துவமனைக்கு வந்தார்கள். அவர்கள் தங்கள் மகன்மீது வருத்தமாகவும் கோபமாகவும் இருந்தார்கள். இந்தப் பிரச்னையிலிருந்து வெளியே வருவதற்காக, அவர்கள் மகனுக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டது, அப்போது, அவர்களுக்கும் இதுபற்றிய ஆதரவு வழங்கப்பட்டது. இந்தப் பிரச்னையைப்பற்றித் தெரிந்துகொண்டபிறகு, நிபுணர்களின் ஆலோசனையைப் பெற்றபிறகு, அவர்கள் இந்தச் சூழ்நிலையைப் புறநிலைநோக்கோடு கண்டார்கள். தங்கள் மகனின் நிலைமையை அவர்களால் புரிந்துகொள்ள இயன்றது. அவன் இணையம் பயன்படுத்துவதை அவர்கள் கண்காணிக்கத் தொடங்கினார்கள், அவன் ஒழுங்காகப் படிப்பதையும், வெளி வேலைகளில் கவனம் செலுத்துவதையும் உறுதிசெய்தார்கள். சில மாதங்களுக்குள், அவர்களுடைய மகன் விட்ட பாடங்களையெல்லாம் படித்துவிட்டான்; அவனது செயலற்ற நடவடிக்கைகள் வெகுவாகக் குறைந்துவிட்டன.

ஒருவர் தொழில்நுட்பத்துக்கு அடிமையாகியிருக்கிறாரா என்று எப்போது பரிசோதிக்கவேண்டும்?

பின்வரும் மூன்று அடையாளங்களில் இரண்டாவது ஒருவரிடம் காணப்பட்டால், அவர் தொழில்நுட்பத்துக்கு அடிமையாகியிருக்கிறாரா என்று பரிசோதிக்கவேண்டும்:

  • ஏக்கம்: எந்நேரமும் இணையம்/ தொழில்நுட்பத்தில் மூழ்கியிருப்பது. பக்கத்தில் கணினி அல்லது தொலைபேசி இல்லாவிட்டால் நிலைகொள்ளாமல் தவிப்பது

  • கட்டுப்பாட்டை இழத்தல்: இணையத்தில் தான் எவ்வளவு நேரம் செலவிடுகிறோம் என்பதைத் தானே கட்டுப்படுத்திக்கொள்ள இயலாமலிருத்தல் (அதாவது, திட்டமிட்டதைவிட அதிக நேரம் இணையத்தில் இருத்தல்)

  • கட்டாயம்: விழித்திருக்கும் நேரத்தில் பெரும்பாலும் இணையத்திலேயே இருத்தல்

இத்துடன், பின்வரும் அடையாளங்களில் குறைந்தபட்சம் நான்காவது அவர்களிடம் காணப்படவேண்டும்:

  • மற்ற வேலைகளில் ஆர்வமின்மை
  • இணையத்தில் தான் எவ்வளவு நேரம் செலவழித்தோம் என்பதைப்பற்றிப் பொய் சொல்லுதல்
  • நடுராத்திரியில் எழுந்து இணையத்துக்குச் செல்லுதல், மின்னஞ்சல்களை வாசித்தல் அல்லது எஸ்.எம்.எஸ். ஏதேனும் வந்திருக்கிறதா என்று பரிசோதித்தல்.
  • அலுவலகம், பள்ளி அல்லது கல்லூரிக்கு ஒழுங்காகச் செல்லாதிருத்தல், அல்லது, அங்கே செயல்திறன் குறைதல்
  • குடும்பத்தினர், நண்பர்களைக் கண்டுகொள்ளாதிருத்தல்
  • தனிப்பட்ட சுத்தத்தையும் பராமரிப்பையும் கண்டுகொள்ளாதிருத்தல் (சரியான நேரத்தில் சாப்பிடாமலிருத்தல், தூங்காமலிருத்தல்)

தொழில்நுட்பத்துக்கு அடிமையாதலின் தாக்கங்கள்

ஒருவர் தொழில்நுட்பத்துக்கு அடிமையாதல் என்பது, ஒரு பொழுதுபோக்காகத் தொடங்குகிறது, அந்தப் பயன்பாட்டை அவரே கவனிக்காதபோது, அவர் அதற்கு அடிமையாகிவிடுகிறார். அவர் விழித்திருக்கும் நேரத்தில் பெரும்பகுதி இதற்கே செலவாகிறஹ்து. இதனால் இவற்றில் ஒன்றோ பலவோ பாதிக்கப்படுகின்றன:

  • தூங்கும் பாணிகள்: பாதிக்கப்பட்டவர் எந்நேரமும் இணையத்தில் இருப்பதால், தாமதமாகத் தூங்கக்கூடும்; அல்லது, அடிக்கடி தூக்கம் கெட்டு எழக்கூடும்.
  • செயல்திறன்: தூக்கம் போதவில்லை என்பதால், அவர்கள் வகுப்புகளுக்கு அல்லது அலுவலகத்துக்கு ஒழுங்காகச் செல்வதில்லை, வகுப்பில் பாடம் நடக்கும்போது தூங்குகிறார்கள், அல்லது, வேலை நேரத்தில் தூங்குகிறார்கள்; அவர்களுடைய மதிப்பெண்கள் குறைகின்றன
  • பொது ஆரோக்கியம்: இவர்கள் தங்களுக்கு மணிக்கட்டில், விரலில் வலி ஏற்படுவதாக, கண் வலிப்பதாக, முதுகு வலிப்பதாக, களைப்பாக இருப்பதாக, பசியில்லாததுபோல் உணர்வதாக, நாக்கு வறண்டிருப்பதாக, பொதுவான உடல் ஆரோக்கியம் பாதிக்கப்பட்டிருப்பதாகப் புகார் சொல்கிறார்கள்
  • தகவல் தொடர்பு: பாதிக்கப்பட்டவர்கள் தங்களுடைய நிஜவாழ்க்கைச் செயல்பாடுகளையெல்லாம், இணையச் செயல்பாடுகளைச்சுற்றி அமைக்க முயற்சி செய்கிறார்கள். அவர்கள் வெளியே எங்கும் செல்வதில்லை, அதாவது, அவர்களுடைய இணையச் செயல்பாடுகளை எதிர்மறையாகப் பாதிக்கிற எந்த இடத்துக்கும் செல்வதில்லை, எந்நேரமும் தங்கள் அறையில் இருக்கவே விரும்புகிறார்கள், அல்லது, சமூக நிகழ்வுகளுக்குச் சென்றிருக்கும்போதும், பிறருடன் உரையாடுவதில்லை, அதற்குப்பதிலாகத் தங்கள் தொலைபேசித் திரையையே பார்த்துக்கொண்டிருக்கிறார்கள்.

SHUT மருத்துவமனையில், பாதிக்கப்பட்டவர்கள் இரண்டு வகைகளில் அமைகிறார்கள்:

  • முதல் வகை, ஏற்கெனவே உளவியல் பிரச்னை கொண்ட பதின்பருவத்தினர், இவர்கள் மிகவும் வெட்கப்படுவார்கள், தங்களுடைய சவால்களைச் சமாளிக்க இயலாமல் சிரமப்படுவார்கள், அல்லது, பதற்றப் பிரச்னைகளைக் கொண்டிருப்பார்கள். இவர்கள் இணையத்தில் அதிக நேரம் செலவிடுவதற்குக் காரணம், அங்கே நிராகரிப்புக்கான வாய்ப்புகள் குறைவு.
  • இயல்பாகவே, புதிதாக எதையேனும் முயன்று பார்க்கவேண்டும் என்ற எண்ணம் கொண்ட பதின்பருவத்தினர், புதிதாக ஒன்றை முயன்று பார்க்கிற அனுபவம் இவர்களுக்குத் தேவைப்படுகிறது. இந்தப் பதின்பருவத்தினரில் பலர், சமூக வலைப்பின்னல் தளங்களைப் பயன்படுத்துகிறார்கள், அல்லது, வீடியோ கேம்ஸ் விளையாடுகிறார்கள். காரணம், அவற்றில் கிடைக்கும் உடனடி மனநிறைவுதான்.

“பொதுவாக, குழந்தைகளிடம் குறிப்பிடத்தக்க மனத்துயரம் அல்லது செயலின்மை தெரிந்தபிறகுதான், பெற்றோர் அவர்களை இங்கே அழைத்துவருகிறார்கள். அதுவரை, அவர்கள் தங்களுக்குத் தெரிந்த மற்ற வழிகளில் தொழில்நுட்பப் பயன்பாட்டைக் கட்டுப்படுத்த முயற்சிசெய்திருப்பார்கள், அது பலன் தந்திருக்காது. இந்தப் பெற்றோர், தொழில்நுட்பத்தின் எதிரிகள் இல்லை, அவர்களுடைய பிள்ளை தொழில்நுட்பத்துக்காக ஆரோக்கியத்தை, பிற செயல்பாடுகளைப் புறக்கணிக்கிறதே என்பதுதான் அவர்களுடைய கவலை. இவர்கள் எங்களிடம் வரும்போது, மிகவும் பயந்துபோயிருப்பார்கள், அல்லது, உடனே எதையாவது செய்யவேண்டும் என்று துடிப்பார்கள். ஆனால், அவர்களிடம் பேசியபிறகு எங்களுக்குப் புரிகிற விஷயம், தங்களுடைய குழந்தை தொழில்நுட்பத்தின் பயன்பாட்டையும் மற்ற தேவைகளையும் சமநிலைப்படுத்தவேண்டும் என்று அவர்கள் விரும்புகிறார்கள், அவ்வளவுதான்,” என்கிறார் டாக்டர் ஷர்மா.

SHUT மருத்துவமனைக்கு வரும் பெரும்பாலானோர், நடுத்தர மற்றும் உயர்-நடுத்தரச் சமூக-பொருளாதாரப் பின்னணியிலிருந்து வரும் இளைஞர்கள். இவர்களில் பெரும்பாலானோரின் வீட்டில் ஒரே ஒரு குழந்தைதான், இவர்களைப் பெரியவர்கள் யாரும் கண்காணிப்பதில்லை என்பதாலும், இவர்கள் வெளியே சென்று விளையாடும் வாய்ப்பு குறைவு என்பதாலும், இவர்களுக்குத் தொழில்நுட்பம் எளிதில் கிடைப்பதாலும், இவர்களுக்கு இந்தப் பழக்கம் வந்திருக்கக்கூடும்.

தொழில்நுட்பத்துக்கு அடிமையாதலும் போதைப்பொருள்களுக்கு அடிமையாதலும்

போதைப்பொருள்களுக்கு அடிமையாதலுடன் ஒப்பிட்டால், தொழில்நுட்பத்துக்கு அடிமையாதல் ஒரு பெரிய பிரச்னை அல்ல என்றுதான் நமக்குத் தோன்றும். ஆனால், மது அருந்துதல், புகை பிடித்தல், போதைமருந்துகளை உட்கொள்ளுதல் போன்ற பிரச்னைகளைப்போலதான் தொழில்நுட்பத்துக்கு அடிமையாதலும் என்று பல நிபுணர்கள் கருதத்தொடங்கியிருக்கிறார்கள். இந்தப் பழக்கமும் அந்தப் பழக்கங்களைப்போலவேதான் தொடங்குகிறது: ஒருவர் ஒரு பொருளை விரும்புகிறார், அதிகம் பயன்படுத்துகிறார், அவரே விரும்பினாலும் அதை விட இயலுவதில்லை. அதன்பிறகு, அந்தப் பொருளைப் பயன்படுத்துவதை நிறுத்தினால், அவர்கள் தவிக்கிறார்கள். போதைப்பழக்கத்தில் உள்ளவர்களிடையே இவை உடல் மற்றும் உணர்வு சார்ந்த அறிகுறிகளாக வெளிப்படுகின்றன, தொழில்நுட்பத்துக்கு அடிமையாதலில், இவை நடவடிக்கை சார்ந்த அறிகுறிகளாக உள்ளன. இதனால், உள்ளம்சார்ந்த மனத்துயர் ஏற்படுகிறது, ஆரோக்கியம் குன்றுகிறது, சமூகத்தில் கலந்து பழகுவது குறைகிறது, நடவடிக்கைகள், செயல்திறன் ஆகியவை பாதிக்கப்படுகின்றன.

தொழில்நுட்பத்துக்கு அடிமையாதலைக் கையாளுதல்

தொழில்நுட்பத்துக்கு அடிமையானவர்களுக்கு வழங்கப்படும் சிகிச்சையானது, ஓர் உளவியல் அணுகுமுறையைக் கொண்டுள்ளது. இது, போதைப்பழக்கத்துக்கு வழங்கப்படும் சிகிச்சையின் அடிப்படையில் அமைகிறது. இந்தச் சிகிச்சையின்மூலம், பாதிக்கப்பட்டவர் தங்களது ஊக்கத்தைத் திரும்பப்பெறுகிறார், தன் சுற்றுச்சூழலை மாற்றிக்கொள்கிறார், இணையம் அல்லது செல்ஃபோனை மிகவும் சார்ந்திராத ஒரு வாழ்க்கைமுறையை உருவாக்குகிறார்.

இந்தச் சிகிச்சையில் பொதுவாக மூன்று படிநிலைகள் இருக்கும்:

கேட்டல்: இந்த முதல் படிநிலையில், பாதிக்கப்பட்டவருடைய அன்புக்குரியவர்கள் அவரை ஓர் ஆலோசகர் அல்லது உளவியலாளரிடம் அழைத்துச்செல்கிறார்கள்.

அவரை அந்த நிபுணர் மதிப்பிடுகிறார், அதன்மூலம் பின்வருவனவற்றைப் புரிந்துகொள்கிறார்:

  • அவர் எந்த அளவு தொழில்நுட்பத்தைச்சார்ந்திருக்கிறார்?
  • எந்தெந்தச் சூழல்களில் அவர் தொழில்நுட்பத்தை அதிகம் பயன்படுத்துகிறார்?
  • அந்தப் பயன்பாட்டுடன் தொடர்புடைய உளவியல் காரணிகள் என்னென்ன?
  • அவருக்கு ஏதேனும் குடும்பப் பிரச்னைகள் உள்ளனவா? அதனால்தான் அவர் இப்படி நடந்துகொள்கிறாரா?

இவ்வாறு மதிப்பிட்டபிறகு, மருத்துவர் அவருடைய பயன்பாட்டை எண்ணளவில் குறிப்பிடுகிறார். இதையடுத்து உளவியல்-கல்வி தொடங்குகிறது. இங்கே பாதிக்கப்பட்டவருக்கும் அவருடைய குடும்பத்தினருக்கும் இணையப் பயன்பாட்டின் ஆபத்துகளைப்பற்றி, அதனால் ஏற்படும் செயலற்றதன்மையைப்பற்றி, வேறு சாத்தியமுள்ள பிரச்னைகளைப்பற்றிச் சொல்லித்தரப்படுகிறது. பாதிக்கப்பட்டவருக்கும் அவரைக் கவனித்துக்கொள்கிறவர்களுக்கும், செயலற்ற தன்மையை எப்படிக் குறைப்பது, எடையிழப்பு, தூக்கமின்மை, பசியின்மை போன்றவற்றை எப்படிச் சரிசெய்வது என்பனபற்றி ஆலோசனை வழங்கப்படுகிறது.

இந்த நிலையில், பாதிக்கப்பட்டவரும் அவரைக் கவனித்துக்கொள்கிறவர்களும் மருத்துவரிடம் நிறைய கேள்விகளைக் கேட்கவேண்டும், தொழில்நுட்பத்துக்கு அடிமையாதல்பற்றிப் புரிந்துகொள்ளவேண்டும், அதைச் சரிசெய்ய அந்த நிபுணரால் எப்படி உதவ இயலும் என்பதைத் தெரிந்துகொள்ளவேண்டும்.

உளவியல்-கல்விச் செயல்முறையில், ஊக்கத்தை மேம்படுத்துதலும் ஒரு முக்கியமான பகுதி ஆகும். பாதிக்கப்பட்டவர், தான் எந்தத் தொழில்நுட்பத்தைச் சார்ந்திருக்கிறோமோ அதைக் குறைவாகப் பயன்படுத்தவேண்டும் என ஊக்கம் பெறுகிறார். மற்ற பழக்கங்களைப்போல, தொழில்நுட்பத்துக்கு அடிமையானவர்களால் அந்தப் பழக்கத்தைச் சட்டென்று நிறுத்திவிட இயலாது; பெரும்பாலான நேரங்களில், தங்களுடைய தொழில்நுட்பப்பயன்பாட்டை இன்னொருவர் கட்டுப்படுத்துகிறார் என்ற உணர்வு, அவர்களுக்கு அசௌகர்யம் தரும், எரிச்சலைத் தரும். ஆகவே, அவர் மருத்துவருடன் ஓர் ஒப்பந்தம் செய்துகொள்கிறார். தினமும் ஒரு குறிப்பிட்ட நேரம்மட்டுமே தன்னுடைய மொபைலை அல்லது இணையத்தைப் பயன்படுத்துவதாக அவர் ஒப்புக்கொள்கிறார். இந்த ஒப்பந்தங்கள், குறுகியகால அடிப்படையிலானவை, உதாரணமாக, ஒரு நாள், இரண்டு நாள், ஒரு வாரம்... இப்படி. அந்தக் காலகட்டம் முடிந்தபிறகு, அவர் ஒப்பந்தத்தின்படி நடந்துகொண்டாரா என்பது ஆராயப்படுகிறது. இந்த ஒப்பந்தத்தில் என்னென்ன அம்சங்கள் இடம்பெறவேண்டும் என்பதைப் பிறர் தீர்மானிக்கக்கூடாது, பாதிக்கப்பட்டவரும் அதில் பங்கேற்கவேண்டும், அதற்குச் சம்மதிக்கவேண்டும்.

பிரச்னையை ஏற்றுக்கொள்ளுதல்:

தொழில்நுட்பத்துக்கு அடிமையான பலர், தங்களுடைய நிலையை ஏற்றுக்கொள்வதில்லை, 'நான் செய்வது தவறல்ல, இதனால் எந்தப் பிரச்னையும் இல்லை' என்கிறார்கள். ஆகவே, அவர்களை மிகவும் வற்புறுத்தாமல், பட்டினிபோடாமல், மனநல நிபுணர் பிரச்னையின் ஆபத்தைக் குறைப்பதில் கவனம் செலுத்துகிறார்: இந்தப் பழக்கத்தால் ஏற்பட்டிருக்கிற செயலற்றதன்மையை எப்படிக் குறைப்பது என்று சிந்திக்கிறார். சில நேரங்களில், பாதிக்கப்பட்டவர் 'இணைய விரதம்' இருக்கவேண்டும். ஆனால், பாதிக்கப்பட்டவர் இதற்குத் தயாராக இருந்து, தன்னுடைய வழக்கமான பயன்படுத்தும் பாணியை உடைத்து வெளியே வந்தால்தான் இந்தச் சிகிச்சை பலனளிக்கும். பாதிக்கப்பட்டவர் தன்னுடைய இந்தப் பழக்கம் ஆரோக்கியமற்றது என்பதை ஏற்றுக்கொள்ளவேண்டும், அதனால் தனக்குப் பிரச்னைகள் வருகின்றன என்பதை உணரவேண்டும், அதன்பிறகுதான், அந்தப் பழக்கத்தைச் சரிசெய்ய இயலும்.

பிற செயல்பாடுகள் வளர அனுமதித்தல்:

பாதிக்கப்பட்டவர் ஒரு புதிய வாழ்க்கைமுறையை உண்டாக்கிக்கொள்ள மனநல நிபுணர் வழிகாட்டுகிறார். இந்தப் புதிய வாழ்க்கைமுறையில், அவர் தன்னைப் பராமரித்துக்கொள்ளவும், அழகுபடுத்திக்கொள்ளவும், வெளியே சென்று சில வேலைகளில் ஈடுபடவும், படிக்கவும்/வேலைசெய்யவும், சமூகத்தில் பிறருடன் பழகவும் இடமிருக்கும். இந்த நிலையில் கையாளவேண்டிய மிகப் பொதுவான பிரச்னைகள்: தூக்கமின்மை, சமூகத்தில் பிறருடன் பழக இயலாமலிருத்த மற்றும் தன்னைக் கவனித்துக்கொள்ளாமலிருத்தல் (பாதிக்கப்பட்டவர் இந்தப் பழக்கம் காரணமாகத் தனது பொது ஆரோக்கியம், சுத்தம் மற்றும் ஊட்டச்சத்துத் தேவைகளைக் கவனிக்காமலிருந்திருக்கக்கூடும்).

பெரும்பாலான பெற்றோர், தங்கள் பிள்ளை தொழில்நுட்பத்துக்கு அடிமையாகிவிட்டதை எண்ணிப் பயப்படுவார்கள், அல்லது, மிகவும் பதற்றப்படுவார்கள். அவர்களுக்கும் ஆலோசகர் ஆதரவளிக்கிறார், அவர்கள் இந்த நிலைமையைச் சமாளிக்க உதவுகிறார்.

Related Stories

No stories found.
logo
வொய்ட் ஸ்வான் ஃபவுண்டேஷன்
tamil.whiteswanfoundation.org