புகைபிடிப்பதை நிறுத்துவது எப்படி?

புகைபிடிப்பதை நிறுத்துவது எப்படி?

சரியான நிபுணர் உதவியும் ஆதரவும் இருந்தால் போதும், புகையிலைப் பழக்கமுள்ளோர் அதிலிருந்து விடுபடுவது சாத்தியமே!

புகையிலைப் பழக்கத்துக்கு அடிமையாதல் என்றால் என்ன?

புகையிலை என்பது, பலவடிவங்களில் கிடைக்கிறது, அதன்மூலம் இந்தியாவில் பலரை அடிமையாக்கியுள்ளது. உலகம்முழுவதும் நிகோடின் புகையிலையின் மிகப் பிரபலமான வடிவம், சிகரெட்தான். ஆனால் இந்தியாவில் சிகரெட்கள், பீடிகள், மூக்குப்பொடி, ஹூக்கா, மெல்லும் புகையிலை என்று பலவடிவங்களில் இது பயன்படுத்தப்படுகிறது.

புகையிலை என்பது, ஒருவரை எளிதில் அடிமையாக்கிவிடக்கூடிய ஒரு பொருள், இதற்கு அடிமையான பலர், இதிலிருந்து விடுபட விரும்பினாலும், அவர்களால் அது இயலுவதில்லை. இதில் நச்சுத்தன்மையும் அதிகம், உலகம்முழுக்க ஒவ்வோர் ஆண்டும் சுமார் ஐம்பது லட்சம் பேர் புகையிலைப் பழக்கத்தால் இறக்கிறார்கள் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இந்தியாவில் ஒவ்வோர் ஆண்டும் சுமார் பத்து லட்சம் பேர் புகையிலைப் பழக்கத்தால் உயிரிழக்கிறார்கள்.

ஒவ்வொரு நாளும், சுமார் 2500 இந்தியர்கள் புகையிலை சார்ந்த நோய்களால் இறக்கிறார்கள். உலக அளவில், புகையிலைப் பழக்கத்தால் ஏற்படும் மரணங்கள் ஏராளம், கொக்கெய்ன் அல்லது ஹெராயின் பயன்பாடு, மதுப் பழக்கம், தீவிபத்து, மற்ற விபத்துகள், கொலை, தற்கொலை, AIDS என்று அனைத்தையும் சேர்த்தால்கூட இதற்கு இணையாகாது.

புகையிலை என்பது என்ன?

புகையிலை என்பது, நிகோடியானா டொபாக்கம் என்ற புகையிலைச் செடியிலிருந்து உருவாக்கப்படும் ஒரு பொருள். இந்தச் செடியின் இலைகளை உலர்த்தி, வேறு சில பொருள்களுடன் சேர்த்து பீடிகள், சிகரெட்கள், மூக்குப்பொடி, ஹூக்கா, கட்டுபீடி, ஜர்தா போன்ற பல பொருள்களைத் தயாரிக்கிறார்கள், பயன்படுத்துகிறார்கள். புகையிலை பலவிதங்களில் பயன்படுத்தப்படுகிறது: சுபாரி மெல்லுதல், மூக்குப்பொடியை உள்ளிழுத்தல், சிகரெட், பீடி புகைத்தல்.

புகையிலைச் செடியின் இலைகளில், நிகோடின் என்ற தூண்டும் ரசாயனம் உள்ளது. புகையிலையைப் புகைத்தால், அல்லது மென்றால் நிகோடின் வெளிப்படுகிறது, இன்னும் சுமார் 4000 மற்ற வேதிப்பொருள்கள் வெளிப்படுகின்றன, இதில் கார்பன் மோனாக்ஸைட், தார் போன்றவையும் உண்டு.

ஒருவர் எப்படிப் புகையிலைக்கு அடிமையாகிறார்?

ஒருவர் புகையிலையைப் பயன்படுத்தும்போது, மூளையில் டோபமின் வெளிவிடப்படுகிறது. டோபமின் என்பது, மகிழ்ச்சி உணர்வுகளுடன் தொடர்புடைய ஒரு நரம்புக்கடத்தி ஆகும். ஆகவே, மூளை இதனை ஒரு மகிழ்ச்சியான செயல்பாடாக எண்ணிக்கொள்கிறது, இதனால், அவர் மீண்டும் புகையிலையைப் பயன்படுத்த விரும்புகிறார். படிப்படியாக, அந்தக் கடத்திகளின் நுண்ணுணர்வுத்திறன் குறைகிறது, ஆகவே, ஒருவர் அதே மகிழ்ச்சியைப் பெறவேண்டுமென்றால் புகையிலையை அதிகம் பயன்படுத்தவேண்டியிருக்கும். அதாவது, முன்பு ஒரு குறிப்பிட்ட அளவு புகையிலையால் மகிழ்ந்த அவர், இப்போது அதைவிட இருமடங்கு, மும்மடங்கு பயன்படுத்தினால்தான் அதே மகிழ்ச்சியை அடைவார்.

ஒருவர் நிகோடினை உட்கொள்ளும்போது, வேதிப்பொருள்கள் தோல், வாய், மூக்கின் ம்யூகல் அகத்திரை, நுரையீரல் ஆகியவற்றின்மூலம் மூளையை எட்டுகின்றன. நிகோடினைப் புகைத்தால், ஒருவர் உடனடியாகச் சுறுசுறுப்பைப் பெறுவார், தன் ஆற்றல் பெருகிவிட்டதுபோல் உணர்வார். ஆனால், சில நிமிடங்களில் அந்தச் சுறுசுறுப்பு குறைந்துவிடும், அவர் மீண்டும் களைப்பாக, ஆற்றலின்றிக் காணப்படுவார். புகைப்பழக்கம் கொண்ட பலருக்கும் இந்தத் தாக்கம் இருக்கும், இதனால், அவர்கள் மீண்டும் புகைபிடிக்க விரும்புவார்கள்.

சிறுவர்களும் பதின்பருவத்தினரும் புகையிலைப் பொருள்களுக்கு அடிமையாகும் வாய்ப்பு அதிகம் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ஒருவர் எந்த அளவு சீக்கிரமாகப் புகையிலையைப் பயன்படுத்தத் தொடங்குகிறாரோ, அந்த அளவுக்கு அவர் அதற்கு அடிமையாகக்கூடிய வாய்ப்புகள் அதிகரிக்கும்.

ஒருவர் புகையிலைக்கு அடிமையாகும்போது, அதனால் அவருடைய மூளையில் ஏற்படக்கூடிய மாற்றங்கள், கொக்கெயின் அல்லது ஹெராயின் பழக்கத்தால் ஏற்படும் மாற்றங்களுக்கு இணையானவை. பல ஆண்டுகளாக ஒருவர் புகையிலையைப் பயன்படுத்திவந்தால், சில குறிப்பிட்ட சூழல்களில் புகைபிடித்தே தீரவேண்டும் (அல்லது, புகையிலைப் பொருள்களைப் பயன்படுத்தியே தீரவேண்டும்) என்று அவர் உணரக்கூடும். உதாரணமாக, தூங்கி எழுந்தவுடன், அல்லது, அலுவலகத்தில் காஃபி குடிக்கும்போது, மதிய உணவு இடைவேளையின்போது அவர்கள் புகைபிடித்தேஆகவேண்டும் என்று அவர்கள் எண்ணலாம். சிலர், வாகனம் ஓட்டும்போது, குடிக்கும்போது, அல்லது, அழுத்தம் அதிகமான ஒரு பணியைச் செய்யும்போது புகைபிடிக்கவேண்டும் என்று எண்ணுவார்கள்.

புகையிலைக்கு அடிமையாவதன் தாக்கம் என்ன?

புகையிலை அல்லது நிகோடினைப் பயன்படுத்துவதால், உடலின் ஒவ்வோர் உறுப்பும் பாதிக்கப்படுகிறது. புகையிலையைப் பயன்படுத்தும்போது, அட்ரீனலின் வெளிவிடப்படுகிறது, இதனால் உடலின் வெப்பநிலை, இதயத்துடிப்பு, ரத்த அழுத்தம் அதிகரிக்கிறது.

புகைபிடிக்கிறவர்களுக்கு நுரையீரல், வாய், மார்பகம், கர்ப்பப்பை, கணையம், நுரையீரல் அல்லது வயிற்றில் புற்றுநோய் வரும் ஆபத்து அதிகம். புகையில்லாத புகையிலையைப் பயன்படுத்துகிறவர்களுக்கு வாய், உணவுக்குழாய், குரல்வளை, வயிறு மற்றும் கணையத்தில் புற்றுநோய் வரலாம்.

புகையிலையை நெடுநாள் தொடர்ந்து பயன்படுத்தினால், வேறு பல ஆரோக்கியப் பிரச்னைகளும் வரலாம்: தோல், பற்கள் முன்கூட்டியே வயதான நிலைக்குச் செல்லுதல், கேடராக்ட், உயர் அல்லது தாழ் ரத்த அழுத்தம், கொலஸ்ட்ரால், சுவாசப் பிரச்னைகள், இதய நோய் மற்றும் பக்கவாதத்துக்கான ஆபத்து அதிகரித்தல், கருவுக்குச் சேதம் (கர்ப்பிணிப்பெண் புகைபிடித்தால்), மலட்டுத்தன்மை. புகையிலையைப் பயன்படுத்துவதால் டயாபடிஸ், முடக்குவாதம், ஆஸ்டியோபோரோசிஸ் போன்றவை வரும் ஆபத்தும் அதிகரிக்கிறது.

புகைபிடிக்கும் ஒருவருடைய வாழ்நாள், புகைபிடிக்காத ஒருவருடைய வாழ்நாளைவிட 15 ஆண்டுகள் குறைவு என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

இரண்டாம்நிலைப் புகைபிடித்தல், அதாவது புகைபிடிக்கிற இன்னொருவர் வெளிவிடும் புகையை உள்ளிழுத்தல்கூட தீவிரமான உடல்நலப்பிரச்னைகளைக் கொண்டுவருகிறது, இவற்றாலும் பல ஆபத்துகள் நேரலாம். ஒருவர் தொடர்ந்து இரண்டாம்நிலைப் புகைபிடித்தலை மேற்கொண்டுவந்தால், அவருக்கு நுரையீரல், மார்பகம் மற்றும் கல்லீரலில் புற்றுநோய் ஏற்படக்கூடும். இதனால் பக்கவாதம், இதய அதிர்ச்சிகூட ஏற்படலாம். இரண்டாம்நிலைப் புகைபிடித்தல் ஓரளவு இருந்தால் 'பாதுகாப்பு'தான் என்று பலர் நினைக்கிறார்கள். அது உண்மையல்ல, சிறிதளவு இரண்டாம்நிலைப் புகைபிடித்தல்கூட ஆபத்தானதுதான்.

பீடி, மூக்குப்பொடி மற்றும் சிகரெட் அல்லாத பிற புகையிலை வடிவங்கள் 'பாதுகாப்பானவை' என்று பலர் நினைக்கிறார்கள். இது உண்மையல்ல. இவையும் சிகரெட்களைப்போலவே தீங்கு விளைவிப்பவைதான், இவற்றைப் பயன்படுத்துகிறவர், அவரைச் சுற்றியிருப்பவர்கள் என எல்லாருக்கும் இவை தீவிர விளைவுகளைக் கொண்டுவரக்கூடும்.

யாரெல்லாம் புகையிலைக்கு அடிமையாகக்கூடும்?

நெடுநாளாகப் புகையிலைப் பொருள்களைப் பயன்படுத்துகிறவர்கள் அதற்கு அடிமையாகிற ஆபத்து உள்ளது. புகையிலைக்கு அடிமையானவர்களுடைய நெருங்கிய உறவினர்கள், சிறுவயதில் அல்லது வளர்இளம்பருவத்திலேயே புகையிலைப் பொருள்களைப் பயன்படுத்தத் தொடங்கியவர்கள், பிற பொருள்களுக்கு (மது மற்றும்/அல்லது போதைப்பொருள்கள்) ஏற்கெனவே அடிமையானவர்கள், முன்பு மனநலப் பிரச்னைகளைக் கொண்டிருந்தவர்கள்: இவர்களெல்லாம் புகையிலைக்கு அடிமையாகும் ஆபத்து அதிகம்.

ஒருவர் புகையிலைக்கு அடிமையாகியுள்ளார் என்பதை எப்படிக் கண்டறிவது?

ஒருவர் தினமும் சில சிகரெட்களைப் புகைக்கிறார், அல்லது புகையிலையை மெல்லுகிறார் என்றால், அந்தப் பழக்கத்துக்கு அவர் அடிமையாகும் வாய்ப்பு உள்ளது. சிகரெட் புகைக்கும் பழக்கமுள்ள ஒருவர் நிகோடினைச் சார்ந்துவாழ்கிறார்/ அதற்கு அடிமையாகியிருக்கிறார் என்பதைக் காட்டும் சில அறிகுறிகள்:

  • புகைபிடிப்பது தவறு என்று அவருக்குத் தெரியும், பலமுறை அதை விடுவதற்கு முயன்றிருக்கிறார், ஆனால், அவரால் அது இயலவில்லை.

  • ஆரம்பத்தில் அவர் தினமும் எத்தனை சிகரெட் பிடித்துக்கொண்டிருந்தாரோ, அதைவிட அதிக சிகரெட்களை இப்போது பிடிக்கிறார்.

  • சில மாதங்களுக்குமுன்னால் ஓரிரு சிகரெட்களில் அவருக்குக் கிடைத்த அந்த 'மகிழ்ச்சியுணர்வு', இப்போது உடனடியாகக் கிடைப்பதில்லை, அதற்குப் பல சிகரெட்கள் தேவைப்படுகின்றன.

  • ஒவ்வொரு நாளும், அவர் எத்தனை சிகரெட்கள் குடிக்கவேண்டும் என்று எண்ணுகிறாரோ, அதைவிட அதிக எண்ணிக்கையிலான சிகரெட்களைக் குடிக்கிறார்.

  • கைவசம் சிகரெட் இல்லையென்றால், அவர் அழுத்தமாக உணர்கிறார்.

  • அவர் புகை பிடிப்பதை நிறுத்த முயற்சி செய்யும்போது, அவருடைய உடல்நிலையும் மனநிலையும் பாதிக்கப்படுகிறது, இதனால் அவரால் தன்னுடைய தினசரி வேலைகளை ஒழுங்காகச் செய்ய இயலுவதில்லை.

  • ஒரு குறிப்பிட்ட நேரத்துக்கு அவர் சிகரெட் பிடிக்கவில்லையென்றால், அவரது எண்ணங்கள் பெரும்பாலும் 'அடுத்த சிகரெட் எங்கே? எப்போது?' என்பதில்தான் குவிந்திருக்கின்றன.

  • எங்கெல்லாம் தன்னுடைய புகைப்பழக்கத்துக்குத் தடை இருக்காதோ அங்கெல்லாம்தான் அவர் சென்றுவருகிறார், அவைசார்ந்த வேலைகளைதான் அதிகம் செய்கிறார், உதாரணமாக, புகைபிடிப்பதை அனுமதிக்கும் உணவகங்களுக்குமட்டுமே செல்லுதல், சிகரெட் வாங்கும் இடங்களுக்கு அடிக்கடி செல்லுதல் போன்றவை.

  • எங்கெல்லாம் புகைபிடிக்க அனுமதி இல்லையோ, அங்கெல்லாம் அவர் மிகவும் சிரமமாக உணர்கிறார்.

  • அவருக்கு உடல்நலம் சரியில்லை, அவரால் இயல்பாகப் பணியாற்ற இயலவில்லை என்றாலும், அவர் புகைபிடிக்கிறார்.

மேற்கண்ட அறிகுறிகளில் சில ஒருவரிடம் காணப்பட்டால், அவர் புகைபிடிக்கும் பழக்கத்துக்கு அடிமையாகியிருக்கக்கூடும், அவருக்கு உதவி தேவைப்படலாம்.

*மூக்குப்பொடி, மெல்லும் புகையிலை, மற்ற புகையிலைப் பொருள்களுக்கு அடிமையானவர்களைக் கண்டறிவதற்கும் இதேபோன்ற அறிகுறிகளைப் பரிசோதிக்கலாம். "புகைபிடித்தல்" அல்லது "சிகரெட்கள்" என்பதற்குப்பதிலாக, அவர்கள் பயன்படுத்துகிற பொருளின் பெயரைப் பொருத்திக்கொண்டால் போதும்.

புகையிலைப் பழக்கம் உள்ளவர்கள் அதை நிறுத்த நேர்ந்தால், அவர்களுக்கு நடுக்கம், பதற்றம், மனச்சோர்வான நிலை, தூக்கமின்மை, தலை கனமற்று இருப்பதுபோன்ற உணர்வு, இதயத்துடிப்பு குறைதல், பசி அதிகரித்தல், எரிச்சல் பெருகுதல் போன்ற அறிகுறிகள் ஏற்படலாம்.

கண்டறிதல் மற்றும் சிகிச்சை

அமர் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) தினமும் பல சிகரெட்களைப் புகைப்பவர். அவர் எப்போதும் சுறுசுறுப்பாக அங்குமிங்கும் சென்று வேலைசெய்துகொண்டிருப்பவர். ஆகவே, அவ்வப்போது சிகரெட் பிடிப்பார். அவர் சிகரெட்டுக்கு அடிமையாகத் தொடங்கியதும், அவரால் வேலையிலோ மற்ற நடவடிக்கைகளிலோ நெடுநேரம் கவனம் செலுத்த இயலவில்லை. அவர் தன்னுடைய பாக்கெட்களில் சிகரெட்களை ஒளித்துவைக்கத்தொடங்கினார், கூட்டங்களிலிருந்து விரைவில் வெளியேறி புகைபிடிக்க ஆரம்பித்தார், விமானங்களில் புகைபிடிக்க அனுமதி இல்லை என்பதால், விமானங்களில் செல்வதையே தவிர்க்கத்தொடங்கினார்.

இதற்காக, அமர் சில மனநல நிபுணர்களைச் சந்தித்தார், அவர்களுடைய ஆதரவுடன் இந்தப் பழக்கத்திலிருந்து விடுபட்டார். அவரது ஒட்டுமொத்தச் செயல்திறனும் வாழ்க்கைத்தரமும் மேம்பட்டது. 'இப்போதெல்லாம், அவ்வப்போது சிகரெட் பிடிக்கவேண்டும் என்ற உணர்வே எனக்கு ஏற்படுவதில்லை' என்கிறார் அமர், 'நான் அழுத்தமில்லாமல் மகிழ்ச்சியாக வாழத் தொடங்கிவிட்டேன்.'

இது ஒரு கற்பனைக்கதை, இந்தப் பிரச்னை நிஜவாழ்வில் எப்படி இருக்கும் என்பதைப் புரியவைப்பதற்காக உருவாக்கப்பட்டது.

புகைபிடிக்கும் பழக்கமுள்ள பலர், திடீரென்று அதை நிறுத்திவிடுகிறார்கள். இந்த முறையை மனநல நிபுணர்கள் சிபாரிசு செய்வதில்லை என்றாலும், சிலருக்கு இது வேலை செய்கிறது. அவர்கள் நிகோடின் அடிமைத்தனத்திலிருந்து விடுபட்டுவிடுகிறார்கள். ஆனால் மற்ற பலரால் இது இயலுவதில்லை, அவர்களுக்கு ஒரு மருத்துவ நிபுணரின் உதவி தேவைப்படுகிறது. புகைபிடிப்பதை நிறுத்த முயற்சி செய்து தோற்றவர்கள் வருந்தவேண்டியதில்லை. நிபுணர்களின் உதவியுடன் அவர்கள் இதிலிருந்து விடுபடலாம். இதற்காக, அவர்கள் ஒரு மனநல நிபுணரைச் சந்திக்கவேண்டும்.

புகைபிடிப்பவர்களில் 3% பேர்தான் தாங்களே அதிலிருந்து விடுபடுகிறார்கள் என்கின்றன புள்ளிவிவரங்கள். மற்ற 97% பேருக்கு, நிபுணர்களின் உதவி தேவை. புகையிலைக்கு அடிமையான ஒருவர் அந்தப் பழக்கத்திலிருந்து விடுபடுவது எளிதல்ல, ஆகவே, அதற்காக ஒரு நிபுணரிடம் உதவி கோருவதில் எந்தத் தவறும் இல்லை.

பல நேரங்களில், புகைபிடிக்கும் பழக்கத்துக்கு அடிமையானவர்களுடைய குடும்ப உறுப்பினர்களோ நண்பர்களோ அவர்களை ஒரு மருத்துவர் அல்லது மனநல நிபுணரிடம் அனுப்புகிறார்கள். அந்த மருத்துவர் அல்லது மனநல நிபுணர் அவரிடம் பேசி, அவரது பழக்கம் எந்த அளவு தீவிரமாக உள்ளது என்பதைத் தெரிந்துகொள்கிறார்கள். ஃபாகெர்ஸ்ட்ராம் பரிசோதனை போன்ற மதிப்பீடுகள், பாதிக்கப்பட்டவர், அவரது நண்பர்கள், குடும்ப உறுப்பினர்களுடன் நிகழ்த்தப்படும் நேர்காணல்களில் தெரியவரும் விவரங்கள் போன்றவற்றின் அடிப்படையில் அவருக்கு என்ன சிகிச்சை வழங்கலாம் என்பது தீர்மானிக்கப்படுகிறது.

போதைப்பொருள் மற்றும் மதுவுக்கு அடிமையானவர்களை மருத்துவமனையில் சேர்த்துச் சிகிச்சை வழங்கப்படும். ஆனால், புகைபிடிக்கும் பழக்கத்துக்கு அடிமையான ஒருவர் வெளிநோயாளியாக அவ்வப்போது வந்து சிகிச்சை பெற்றுத் திரும்பலாம். சிகிச்சையின் நோக்கம், இனி எப்போதும் புகைபிடிக்கக்கூடாது என்று அவரை எண்ணச்செய்வது. இதற்காக, புகைபிடிக்காதபோது அவர் எப்படி இருப்பார் என்கிற தோற்றம் அவர்களுக்குள் உருவாக்கப்படுகிறது, இதன்மூலம் அவர்கள் சந்திக்கக்கூடிய சவால்கள், சபலங்களை அவர்களால் சமாளிக்க இயலும்.

இதற்காக, பாதிக்கப்பட்டவர் ஒரு "விடும் நாளை"த் தீர்மானிக்கவேண்டியிருக்கும். அவர்கள் படிப்படியாகப் புகையிலையை விடுவதற்காக, அவர்களுக்கு நிகோடின் பட்டைகள் வழங்கப்படுகின்றன. புகைபிடிப்பதை நிறுத்தும்போது ஏற்படக்கூடிய உடல், மனப் பிரச்னைகளைச் சரிசெய்வதற்காக, அவர்களுக்குச் சில மருந்துகளும் வழங்கப்படலாம்.

புகைபிடிப்பதை நிறுத்தியவர்களுக்கு ஆதரவளிக்கும் குழுக்கள் நிறைய உண்டு. இவற்றில் அவர்கள் சேரவேண்டும் எனப் பரிந்துரைக்கப்படுகிறது. இதன்மூலம், தங்களுக்கு வரக்கூடிய பிரச்னைகளைச் சமாளிக்க அவர்களால் இயலும். இத்துடன், நிகோடின் பயன்பாடு, சமாளிக்கும் திறன்களைப்பற்றிய விவரங்களும் அவர்களுக்குத் தரப்படுகின்றன. ஒருவர் புகைபிடிக்கும் பழக்கத்திலிருந்து விடுபட்டு, புகையிலை இல்லாமல் வாழவேண்டுமென்றால், அவருடைய நணர்கள், குடும்பத்தினர், ஆதரவுக் குழு உறுப்பினர்கள் என எல்லாரும் அவர்களுக்கு உதவவேண்டும்.

Related Stories

No stories found.
logo
வொய்ட் ஸ்வான் ஃபவுண்டேஷன்
tamil.whiteswanfoundation.org